Wednesday, May 11, 2011

இன்றைய செய்திகள் மே, 11, 2011


முக்கியச் செய்தி :

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு: விழிப்புடன் உள்ளோம்-இந்திய ராணுவ அதிகாரி

புது தில்லி, மே 8: பாகிஸ்தானில் அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.
பாகிஸ்தான் எக்காரணத்தைக் கொண்டும் தனது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கக் கூடாது என இந்தியா பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகிறது.

இந்நிலையில் கடந்தவாரம் பாகிஸ்தானில் அல்-காய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் அங்கு அவர் பதுங்கி இருந்தது அம்பலமாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்த கருத்துக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி தெரிவிக்கையில், பின்லேடன் பிரச்னை மூலம் இந்தியா ஆதாயம் தேட முயல்கிறது. இதுபோன்ற செயல்களில் இந்தியா ஈடுபடும் பட்சத்தில் நாங்கள் கடும் எதிர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தியாவுக்கு எதிராகக் கருத்து வெளியிட்டன.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இந்திய எல்லைப் பகுதிகளில் தங்களது படைகளை குவித்து வருகிறது. இதன் காரணமாக எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


இதுபற்றி இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்,தேவைப்படும் பட்சத்தில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் விழிப்புடன் இருக்கிறது என்றார்.

இதனிடையே, பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியாக எல்லைப் பகுதியில் அந்நாடு படைகளை குவித்து வருவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகச் செய்தி மலர் :

* இந்திய பத்திரிகையாளர் இருவருக்கு அமெரிக்காவில் பாராட்டு

நியூஜெர்சி, மே 10: அமெரிக்காவில் 2 இந்தியப் பத்திரிகையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
 அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்த இந்தியப் பத்திரிகையாளர்கள் சுமன் குஹா மஸþம்தார், பிரகாஷ் எம்.சுவாமி. இந்த இருவர் உள்பட 7 பத்திரிகையாளர்களை நியூஜெர்சி சட்டசபை பாராட்டி கௌரவித்தது.
 பத்திரிகைத்துறையில் இவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
 இதற்கான தீர்மானத்தை சட்டசபை துணை சபாநாயகர் உபேந்திரசிவிகுலா கொண்டு வந்தார். சபாநாயகர் ஷீலா ஒய் ஆலிவர் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டிப் பேசினார்கள். பின்னர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

* ஜெர்மன் தூதரக அதிகாரி பாகிஸ்தானில் கைது

இஸ்லாமாபாத், மே.10: பாகிஸ்தானில் அந்நாட்டு நாடாளுமன்றம் மற்றும் அதிபரின் மாளிகைக்கு மேலாக, ஜெர்மன் தூதரகப் பெண் அதிகாரி ஒருவர் பாராகிளைடிங் விமானத்தில் பறந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
 பாகிஸ்தானின் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் உயர்நிலைப் பாதுகாப்புப் பிரிவுக்குட்பட்ட "சிவப்பு வளையத்துக்குள்' வருபவை. இப்பகுதியின் மீது விமானங்கள் பறப்பது தடை செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமையன்று இந்தப் பகுதியின் மீது பாகிஸ்தானுக்கான ஜெர்மன் தூதரகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் ஷாஷா உல்ஃப் பாராகிளைடிங்கில் பறந்துள்ளார். அவருடன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விமானப் பயிற்சியாளர்கள் ராவ் அக்தர் ஹுசைன் மற்றும் ஹசீப் ஹுசைன் ஆகியோர் பறந்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதியின் மீது பறப்பதைக் கண்ட விமானப்படையினர், இவர்களைக் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை மேற்ற்கொண்டபின் தலைமைச் செயலக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 அங்கு, தான் பறக்க முயற்சிக்கையில் தோல்வியடைந்து கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் காலில் அடிபட்டுள்ளதாகவும் போலீஸôரிடம் உல்ஃப் தெரிவித்துள்ளார். மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸôர், தூதரக அந்தஸ்தில் உள்ளதால் உல்ஃபை விடுதலை செய்தனர். மற்ற இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு இவர்களுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு அடியாலா சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
  இந்த விஷயம் குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீவிரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் விமானத்தைக் கொண்டு இஸ்லாமாபாதின் மீது தாக்குதல் நடத்தலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

*பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர்: ஒபாமா அடுத்த இலக்கு

வாஷிங்டன்: "ஒசாமா பின்லாடனுக்கு உதவி செய்தவர்கள் பாகிஸ்தான் அரசுக்குள் இருக்கின்றனரா என்பது பற்றி தெரியாவிட்டாலும், இதுகுறித்து அமெரிக்காவும், பாகிஸ்தானும் விசாரணை மேற்கொள்ளும். பாகிஸ்தானில் கொல்லப்பட வேண்டிய பயங்கரவாதிகள் மேலும் பலர் உள்ளனர்' என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவர் அபோதாபாத்தில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்தது பற்றி, அமெரிக்கா தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

இதுகுறித்து நேற்று பேட்டியளித்த அதிபர் ஒபாமா கூறியதாவது:ஒசாமா பாகிஸ்தானில் தங்கியிருக்க உதவியவர்கள், அந்நாட்டுக்குள் இருக்கின்றனரா அல்லது வெளியில் உள்ளனரா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.ஆனால், இதுகுறித்து இருதரப்பு அரசுகளும் விசாரிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானில் ஒசாமாவுக்கு சிலர் உதவி செய்துள்ளனர்.வர்கள் யார் என்று தெரியவில்லை.ஒசாமாவுக்கு உதவியது யார் என்பதை கண்டுபிடிப்பதிலும், விசாரிப்பதிலும் தாங்களும் ஆர்வமாக இருப்பதாக பாக்., அரசு கூறியுள்ளது. இதற்கு சிலகாலம் ஆகலாம். நான்கைந்து நாட்களுக்குள் விடை கிடைத்து விடாது.இரட்டை கோபுர தகர்ப்புக்குப் பின், பயங்கரவாத எதிர்ப்பில் எங்களுடன் இணைந்து பாக்., செயல்பட்டு வருகிறது. இடையில், இருதரப்புக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் வந்தன. அவையனைத்தும் உண்மை; இன்றும் தொடர்கின்றன.அதே நேரம், பாகிஸ்தான் மண்ணில் உள்ள சில பயங்கரவாதிகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இதற்கு பாக்., ஒத்துழைப்பும் வேண்டியுள்ளது.பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிரான ஆழமான மனநிலை இருக்கிறது. அதனால், அங்கு அமெரிக்கா தீவிரமாக செயல்படுவது சிறிது கடினம்தான். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.





தேசியச் செய்தி மலர் :

ஊட்டச் சத்து குறைபாட்டால் மரணம்: உச்ச நீதிமன்றம் வேதனை

புது தில்லி, மே 10: ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் மரணங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வேதனை தெரிவித்தது.

 பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதற்காக கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் தானியங்களில் பெருமளவு வீணாவதாக தகவல்கள் வந்தன.


 இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவ்வாறு தானியங்கள் வீணாகாமல் அவற்றை ஏழைகளுக்கு விநியோகிக்குமாறு அறிவுறுத்தியது. அத்துடன் மத்திய அரசுக்கு நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது.

 இது தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் ஏற்கெனவே தாங்கள் கூறிய கருத்தை மீண்டும் வலியுறுத்தினர்.

 அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் மரணங்கள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன. தானியங்களை விலை கொடுத்து கொள்முதல் செய்கிறீர்கள். ஆனால் அவற்றை சேமிக்க வழியின்றி வீணாக்குகிறீர்கள்.

 வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் அவற்றை ஏன் விநியோகிக்கக் கூடாது? தயவு செய்து அவற்றை வீணாக்காமல் விநியோகியுங்கள். தானிய உற்பத்தி அதிகரிப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஆனால் அது மக்களுக்கு பயன்படாமல் வீணாவதால் யாருக்கு என்ன பயன்?' என்றனர்.

 இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியன், "வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் 50 லட்சம் டன் உணவு தானியங்களை விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்றார்.

* என்.டி.திவாரிக்கு டி.என்.ஏ. சோதனை: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி,மே 10: உத்தரப்பிரதேசம் மற்றும் உத்ரகான்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் ஆளுனருமான என்.டி. திவாரியை தனது தந்தை என அறிவிக்கும்படி தில்லியைச் சேர்ந்த ரோகித் சேகர் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், என்.டி. திவாரிக்கு டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட்டது.

 தில்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து என்.டி. திவாரி தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் என்.டி. திவாரிக்கு ரூ. 25

 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. இந்நிலையில் டி.என்.ஏ., சோதனை செய்வது தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் ஜூன் 1ம் தேதியன்று மருத்துவ பரிசோதனைக்காக ( டி.என்.ஏ., சோதனை) ரத்த மாதிரியை மருத்துவமனையில் அளிக்குமாறு என்.டி.திவாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

* நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம்: அஜீத் சிங் கட்சியிடம் பிரதமர் உறுதி

புது தில்லி, மே 10: விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் போது அதனால் விவசாயிகள் பாதிக்காத வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று ராஷ்ட்ரீய லோக் தள கட்சித் தலைவர் அஜீத் சிங்கிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

 நாடு முழுவதும் தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்ற பேரில் விவசாய நிலங்களை அரசே கைப்பற்றி தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களை பறிப்பதும், அவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க மறுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

 உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நெடுஞ்சாலைக்காக அரசால் கைப்பற்றப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கவில்லை. நியாயம் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே மோதல் வெடித்தது. விவசாயிகள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

 இந்நிலையில் அஜீத் சிங் தலைமையில் ராஷ்ட்ரீய லோக் தள கட்சியினர் பிரதமர் மன்மோகன் சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்து அனைத்துக் கட்சியினரிடமும் ஆலோசனை பெற வேண்டும் என்று பிரதமரிடம் தான் கேட்டுக்கொண்டதாக அஜீத் சிங் கூறினார்.

 தமது இந்தக் கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டு, இதுகுறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சர் விலாஸ் ராவ் தேஸ்முக்கை கேட்டுக்கொள்வதாகவும் உறுதி அளித்தார் என்றார்.

 நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. விவசாய நிலத்தை பொது நலனுக்காக கையகப்படுத்துவதற்கான வரையறையில் தெளிவில்லை. இதனால் பொதுநலன் என்ற பேரில் முறைகேடாக நிலத்தை கையகப்படுத்த வாய்ப்புள்ளது. இதுகுறித்தும் பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவை விரைந்து நிறைவேற்றுவதாக கடந்த அக்டோபர் மாதமே பிரதமர் எனக்கு உறுதி அளித்திருந்தார். இதையும் அவரிடம் ஞாபகப்படுத்தினேன்.

 நொய்டாவில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து பிரதமரிடம் எடுத்துக்கூறினேன். இதற்கு அவர் மிகுந்த வருத்தம் தெரிவித்தார். நொய்டா சம்பவத்தை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமரை சந்தித்து நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விரைந்து திருத்தத்தை கொண்டுவருவதன் அவசியத்தை எடுத்துக்கூறியுள்ளார் என்றார் அவர்.

 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம் மட்டும் விவசாயிகளை பாதுகாத்திட முடியாது. மாயாவதி போன்றவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை பிரச்னையும் நீடிக்கவே செய்யும் என்றார் அஜீத் சிங்.

மாநிலச் செய்தி மலர் :

*ஆபத்தின் விளிம்பில் ஏர்வாடி மனநோயாளிகள்

ராமநாதபுரம்: அரசு காப்பகம் அமைப்பதில் தாமதம் ஆவதால், ஏர்வாடி தர்ஹா மனநோயாளிகள் மீண்டும் அடிமை நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 2002 ஆக.,6ல் நாட்டையே உலுக்கிய தீவிபத்து நடந்தது. 28 மனநோயாளிகள் தீயில் கருகினர். மனநோயாளிகளுக்கான காப்பகத்தை குடிசைத்தொழில் போல் பலரும் நடத்தியதே விபத்திற்கு காரணமானது. அங்கு மனநோயாளிகள் சங்கிலியால் கட்டப்பட்டதால் தப்பிக்க வழியின்றி, அத்தனை உயிர்களும் அநியாயமாக பலியாயின. வழக்கம் போல அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகே அரசு தரப்பு விழித்துக் கொண்டது. அவசரமாக அனைத்து மனநல காப்பகங்களையும் ஒழுங்குபடுத்த முன்வந்தது. அரசே மனநலகாப்பகம் அமைக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்தனர். காப்பகங்களை அமைக்க எந்த துறையின் கீழ் இப்பணியை மேற்கொள்வது என்ற சந்தேகம் அப்போது எழுந்தது. இதுவே அரசு காப்பக பணிகள் முடங்க முதல் காரணமானது. இப்பிரச்னையில் அமைக்கப்பட்ட ராமதாஸ் கமிஷனின் பரிந்துரையின் படி, மாவட்ட மருத்துவமனையில் மனநலபிரிவு தொடங்க, கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி மனநலபிரிவும் ஏற்படுத்தப்பட்டும், அரசு காப்பகம் இல்லாததால் அது பயனின்றி இன்றி உள்ளது.

 இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 10 ஆயிரம் மனநோயாளிகளுக்கு ஒருவர், என்ற விகிதத்தில்தான் மனநல மருத்துவர் எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது எட்டாக் கனியே. மனநோயாளிகளை காப்பகம் மூலம் பராமரிப்பதை தவிர, பெரிய அளவில் தீர்வு காணமுடியாது. தர்ஹா தலைவர் சார்பில் நிலம் அளித்து காப்பகம் நடத்த முன்வந்த நிலையில், இதுவரை அதற்கான எந்த பணியும் நடக்கவில்லை. உள்பிரச்னை காரணமாக தர்ஹா நிர்வாகம் கோர்ட் விசாரணையில் உள்ளது. இதனால் நிர்வாகிகள் இன்றி தர்ஹா செயல்படுகிறது. இந்நிலை ஆறு மாதமாக தொடர்வதால், மனநோயாளிகள் சிதறிப்போக காரணமானது. இதைப்பயன்படுத்தி மீண்டும் குடிசைத்தொழில் மனநலகாப்பகங்கள் முளைக்கத் துவங்கிவிட்டன. தர்ஹா உள்ளேயே மீண்டும் சங்கிலியால் மனநோயாளிகளை கட்டத்தொடங்கி உள்ளனர். மீண்டும் அடிமை நிலைக்கு திரும்பியுள்ள ஏர்வாடி தர்ஹா மனநோயாளிகளுக்கு, இதனால் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள்: முறையான கண்காணிப்பு இல்லாததால் மனநோயாளிகள் போர்வையில் நிறைய குற்றவாளிகள் தஞ்சம் அடைந்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஏர்வாடி தர்ஹா யாத்திரிகர் நலப்பேரவை தலைவர் அம்ஜத் உசேன் கூறியதாவது: கண்காணிப்பு இல்லாமல் மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள் அதிகம் தஞ்சம் அடைகின்றனர். கேரள போலீசார் பலமுறை வந்து இங்கு குற்றவாளிகளை கைது செய்து சென்றுள்ளனர். மனநோயாளிகளை மீண்டும் சங்கிலியால் கட்டி சித்திரவதை செய்யத்தொடங்கிவிட்டனர். காப்பாகம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. தர்ஹா நிர்வாகம் செயல்பட்டால் இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும், என்றார்.

விதிமுறையால் தாமதமாகும் காப்பகம் : அரசு தரப்பில் காப்பகம் அமைப்பதற்கான முறையான விதிமுறைகள் இல்லாததே தாமத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. தர்ஹா நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் முகமது அமீர் ஹம்சா கூறியதாவது: காப்பாகத்திற்கு நிலம் வழங்குவதாக ஏற்கனவே நாங்கள் கோர்ட்டில் அறிவித்துவிட்டோம். காப்பகம் அமைக்கும் விதிமுறைகள் கேட்டுள்ள நிலையில், இதுவரை கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுக்கு பின் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தர்ஹாவில் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை, என்றார்.

*முதல் மூன்று இடங்களையும் பிடித்து தனியார் பள்ளிகள் சாதனை

நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவிலான, முதல் மூன்று இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிடித்து சாதனை படைத்துள்ளன. அரசு பள்ளியோ, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் கூட, மாநில அளவிலான இடத்தை பிடிக்கவில்லை. இதன்மூலம், "தரமான கல்வியை வழங்குவது தனியார் பள்ளிகளே என்ற வாதம்' எடுபட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 50 ஆயிரம் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, ஒரு கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், 75 லட்சம் பேர், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். 25 லட்சம் பேர், தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.பெரும்பான்மை மாணவர்கள், அரசு பாடத்திட்டத்தின் கீழ், கல்வி பயின்றாலும், கல்வித் தரத்தில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகள், குறிப்பாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. இதனால், பொதுத்தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளிலும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே அதிகளவில் இடம் கிடைக்கின்றன. இவற்றின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் மட்டுமே தரமான கல்வியை வழங்கி வருகின்றன என்றும், தனியார் பள்ளிகளின் பாடத்திட்டம் தான் தரமான பாடத்திட்டம் என்றும், தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

இவர்களின் வாதத்திற்கு தகுந்தாற்போல், ஒவ்வொரு ஆண்டு பொதுத் தேர்விலும், தனியார் பள்ளி மாணவர்கள் சாதித்து வருகின்றனர். நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவிலான மூன்று இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே தட்டிச் சென்றுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மாநில அளவில் முதல் இடத்தையும், மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மீதமுள்ள நான்கு இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளே பிடித்துள்ளன. பெரும்பான்மை மாணவர்கள் பயிலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, ஒரு மாணவர் கூட, மாநில அளவில் மதிப்பெண் பெறவில்லை.

காரணம் என்ன?போதுமான உள் கட்டமைப்பு வசதிகள், தகுதியான ஆசிரியர்கள் மற்றும் கண்டிப்பான நிர்வாகம் ஆகிய மூன்றும், தனியார் பள்ளிகளில் தரமான கல்வியை அளிப்பதில், முக்கிய பங்கு வகிக்கின்றன. மற்றொரு காரணமும், முக்கியமானதாக இருக்கிறது.தனியார் பள்ளிகளில், அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்வதில்லை. பெற்றோரின் கல்வியைப் பார்த்தும், புத்திசாலித்தனமான குழந்தைகளாக இருக்கின்றனரா என்பதைப் பார்த்தும், தனியார் பள்ளிகள் சேர்க்கின்றன.படித்த பெற்றோர், வீட்டில் மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். மேலும், படித்த குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகள், பெரும்பாலும் நன்றாகவே படிப்பர். இப்படி, அடிப்படையிலேயே திறமையாக இருக்கும் மாணவர்களை மேலும் மெருகேற்றி, அதிக மதிப்பெண் வாங்கக் கூடிய வேலைகளை, தனியார் பள்ளிகள் செய்கின்றன.தனியார் பள்ளிகள் சாதிப்பதற்கு, இது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளால், இதுபோன்ற சாதனைகளை செய்ய முடியவில்லை.

இது குறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், எவ்வித அளவுகோலையும் பார்க்காமல், மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். 10ம் வகுப்பில் தோல்வியடைந்து, மூன்று, நான்கு முறை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இதுபோன்ற மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் இடம் கிடையாது.முதல் வகுப்பில் சேர்க்கும் போதும், தனியார் பள்ளிகளைப் போல் தேர்வு வைத்து எடுப்பது கிடையாது. இப்படி, ஒவ்வொரு நிலையிலும், திறன் அடிப்படையில் மாணவர்கள் பிரிக்கப்படுவதால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாநில அளவில் பெரும்பாலும் சாதிக்க முடிவதில்லை.எனினும், முன்பை விட, தற்போது தேர்ச்சியிலும், அதிக மதிப்பெண்கள் பெறுவதிலும், அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள், கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளன.இவ்வாறு கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

*சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கட்-ஆஃப் என்ன?

 பிளஸ் 2 தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய முக்கியப் பாடங்களில் 65 மாணவர்கள் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கியுள்ளனர். 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண்ணில் தொடங்கி, ஒவ்வொரு 0.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையே 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெற்றுள்ளதால் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதாவது, கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி 199.25-க்குள் 822 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 விளைவு என்ன? இதனால் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்க உள்ள பொதுப் பிரிவு மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில், அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்களுக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்கள் 512. கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 பெற்றுள்ள 371 மாணவர்களில், 61 பேருக்கு மட்டுமே முதல் கட்ட கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது; கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 பெற்றுள்ள 310 மாணவர்களுக்கு, அவர்களது வகுப்புவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 வாங்கியுள்ளோருக்கு சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

 சென்னை மருத்துவக் கல்லூரிகள் கிடைக்குமா? எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 200-க்கு 200, 200-க்கு 199.75, 200-க்கு 199.50, 200-க்கு 199.25 என அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் அனைவருமே சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சேரவே விரும்புகின்றனர். இந்த ஆண்டு கடும் கட்-ஆஃப் போட்டி காரணமாக கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 இருந்தாலும்கூட, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் பல மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களில் சுமார் 39 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த 18,131 மாணவர்களில், 7,088 பேர் (39 சதவீதம்) பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.50-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


* தாய்மொழியில் மட்டுமே கல்வி: சங்கரய்யா வலியுறுத்தல்

சென்னை, மே 10: தாய்மொழியையே பாடமொழியாகக் கொண்டு கல்வி வழங்க வேண்டும் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா வலியுறுத்தினார்.

 பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை கோரும் மக்கள் இயக்கத்தை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:

 அவரவர் தாய்மொழியைப் பாடமொழியாகக் கொண்டு கல்வி வழங்க வேண்டும். மருத்துவம் உள்பட அனைத்துப் படிப்புகளும் தமிழிலேயே வழங்கப்பட வேண்டும்.

 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

 சமச்சீர் கல்வி சரியில்லை என்று குறை சொல்லுகிறார்கள். அதை தவிர்த்து, அந்தக் கல்வி முறையை சீரமைக்க ஆலோசனைகளைத் தர வேண்டும். அதேபோல், அந்தக் கல்விமுறையை ஆண்டுக்கொரு முறை செழுமைப்படுத்த வேண்டும் என்றார் சங்கரய்யா.

 மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளையும் ஒரே இயக்ககத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு: டிஜிபி போலோநாத்

சென்னை, மே 10: தமிழகத்தில் மே 13-ம் தேதி வாக்கு எண்ணும் பணியின்போது, 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக டிஜிபி போலோநாத் தெரிவித்தார்.

 இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

 தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் 91 இடங்களில் உள்ளன.

 மே 13-ல் வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதை முன்னிட்டு போலீஸôர், துணை ராணுவப் படையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோரின் 3 அடுக்கு தீவிர பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும்.


 மாநிலத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் மட்டுமன்றி முக்கிய இடங்களிலும் 75,000 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதுதவிர துணை ராணுவ படையின் 18 அணியினர் (கம்பெனி) தமிழகத்துக்கு புதன்கிழமை வரவுள்ளனர். சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களுக்கு விமானம் மூலம் வரும் இவர்கள், இதர பகுதிகளுக்கு பாதுகாப்புப் பணிக்காக பிரித்து அனுப்பப்பட உள்ளனர்.

 வில்லூரில் இதுவரை 90 பேர் கைது: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட ஒழுங்கு நிலை கட்டுக்குள் வந்துள்ளது. எனினும், போலீஸôர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராமத்தில் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் வகையில், இருதரப்பினரும் பங்கேற்கும் வகையில் அமைதிக் குழுக்கள் அமைத்தல் உள்ளிட்ட சமரச நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றார் டிஜிபி போலாநாத். ஏடிஜிபி கே. ராதாகிருஷணன், தேர்தல் பிரிவு ஐ.ஜி. சுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

* பிச்சாவரத்துக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு

சிதம்பரம், மே 8: சுரபுன்னை காடுகள் அடங்கிய சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பகுதியில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியை காண சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.

 கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதிக்கு நாளுக்கு, நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

 வெளிநாட்டினரும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். கடலோரப் பகுதியில் உப்பனாற்றில் சுரபுன்னை (மாங்குரோவ்) செடிகள் அடங்கிய காடுகளை படகில் சென்று சுற்றிப்பார்த்து ரசிக்கின்றனர். படகு சவாரி செய்யும் பயணிகளுக்கு சுற்றுலாத் துறையினரால் சேப்டி ஜாக்கெட் வழங்கப்படுகின்றது.

 பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

 தங்கும் விடுதி, உணவகம்: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தங்கும் விடுதி, உணவகம் நடத்த பிரபல நிறுவனமான ஹோட்டல் சாரதாராம் நிறுவனத்திடம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை குத்தகைக்கு ஒப்படைத்துள்ளது. தற்போது அந்நிறுவனம் உணவகத்தை நடத்தி வருகிறது. விரைவில் அந்நிறுவனம் அங்கு பாருடன் கூடிய தங்கும் விடுதியை திறக்கவுள்ளது.

 மேலும் விழாக்கள், கருத்தரங்கம், பயிலரங்கு நடத்தும் வகையில் கூட்ட அறை ஒன்றும் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. விடுதி வளாகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு, பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

 இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிச்சாவரத்திலேயே தங்கியும் சுற்றி பார்க்கலாம் என அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.சுவேதகுமார் தெரிவித்தார். பிச்சாவரம் சுற்றுலா மைய ஹோட்டல் சாரதாராம் தொலைபேசி எண்: 04144 249399, 249400.


வர்த்தகச் செய்தி மலர் :

பங்குச் சந்தை நிலவரம் 'சென்செக்ஸ்' 16 புள்ளிகள் சரிவு

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்றும், மிகவும் மந்தமாகவே இருந்தது. பணவீக்கம் உயர்ந்து வருவது, பெட்ரோலிய பொருள்களின் விலையை மத்திய அரசு உயர்த்தும் என்ற அச்சப்பாடு மற்றும் வட்டி செலவினங்கள் அதிகரிப்பு போன்றவற்றால், பல முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளனர்.செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், பொறியியல், எண்ணெய், எரிவாயு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்பொருள்கள், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், மின்சாரம், உலோகம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு காணப்பட்டது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 16.19 புள்ளிகள் சரிவடைந்து, 18,512 .77 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,689.37 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,429.06 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென் செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 9.85 புள்ளிகள் குறைந்து, 5,541.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,592.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,514.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.

விளையாட்டுச் செய்தி மலர் :

பஞ்சாப் அணியிடம் பணிந்தது மும்பை! * 87 ரன்களுக்கு சுருண்டது

மொகாலி: ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப் பெரும் அதிர்ச்சி. நேற்றைய லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மும்பை சார்பில் 5 விக்கெட் வீழ்த்திய முனாப் படேலின் பந்துவீச்சு வீணானது.

இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த 54வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற மும்பை கேப்டன் சச்சின் "பீல்டிங்' தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணி துவக்கத்தில் திணறியது. ஹர்பஜன் சுழலில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்த வல்தாட்டி அதிக நேரம் நீடிக்கவில்லை. இவர் 14 ரன்களுக்கு முனாப் வேகத்தில் வீழ்ந்தார். பின் கேப்டன் கில்கிறிஸ்ட், ஷான் மார்ஷ் இணைந்து அசத்தினர். குல்கர்னி ஓவரில் மார்ஷ் 2 பவுண்டரி விளாசினார். ரோகித் சர்மா பந்தில் கில்கிறிஸ்ட் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். மலிங்கா பந்தில் கில்கிறிஸ்ட்(28) அவுட்டானார். இதற்கு பின் முனாப் படேல் வேகத்தில் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 39 ரன்களுக்கு இழந்தது. 16வது ஓவரை வீசிய முனாப் இரட்டை "அடி' கொடுத்தார். 2வது பந்தில் மார்ஷ்(43) அவுட்டானார். 6வது பந்தில் டேவிட் ஹசி(0) வெளியேறினார்.

குல்கர்னி வீசிய போட்டியின் 17வது ஓவரில் மன்தீப் சிங், தினேஷ் கார்த்திக் தலா ஒரு சிக்சர் விளாசி ஸ்கோரை உயர்த்தினர். மன்தீப் சிங்(8) ரன் அவுட்டானார். 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக்(31), ஹாரிசை(6) அவுட்டாக்கிய முனாப் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு பிலிசார்ட் அதிரடி துவக்கம் தந்தார். இவர், பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். தனது அடுத்த ஓவரில் சச்சினை(6) வெளியேற்றிய பிரவீண் திருப்புமுனை ஏற்படுத்தினார். இதற்கு பின் வந்தவர்கள் ஏனோதானோ என ஆடினர். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணிக்கு இம்முறை பஞ்சாப் பவுலர்கள் "செக்' வைத்தனர். பிலிசார்ட்(15), ரோகித்(5), சைமண்ட்ஸ்(8), ராயுடு(13), ஹர்பஜன்(12) ஏமாற்றினர். பார்கவ் பட் ஓவரில் போலார்டு(17), குல்கர்னி(2), முனாப்(0) வரிசையாக நடையை கட்டினர். மும்பை அணி 12.5 ஓவரில் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

ஆட்ட நாயகன் விருதை பார்கவ் பட் வென்றார்.

ஆன்மீக்ச் செய்தி மலர் :

* அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில்

மூலவர் - பஞ்சமுக அனுமன்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
ஊர் - கவுரிவாக்கம்
மாவட்டம் - சென்னை
மாநிலம் - தமிழ்நாடு.

தல சிறப்பு :

இங்குள்ள மூலவர் அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக அருள்பாலிப்பது கோயிலின் தனி சிறப்பு. ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் கூடிய அனுமன் சன்னதிக்கு அருகில் விஜய விநாயகர் வீற்றிருக்கின்றார்.

மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது.

தல பெருமை :

கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீவினைகளைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள். அனுமனின் ஒவ்வொரு முகத்திற்கும் உரிய தனிச்சிறப்பாக, வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி என தனித்தனியே எல்லா விசேஷங்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும். ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான் உங்களின் எல்லா கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய (பஞ்சமுக) அனுமன்.

தல வரலாறு :

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம் தோன்றியது. அப்போது இங்குள்ள பக்தர் ஒருவரின் கனவில் பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை செய் என்று அசரீரி ஒலித்தது. அதன்படி ஒரு சிலையைத் தேடிப் போன போது, வித்தியாசமாக ஒரே நேர்கோட்டில், ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைத்தது. இதனையடுத்து பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஞ்சமுக அனுமனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர்.

அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர் அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக அருள்பாலிப்பது கோயிலின் தனி சிறப்பு. ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் கூடிய அனுமன் சன்னதிக்கு அருகில் விஜய விநாயகர் வீற்றிருக்கின்றார்.

திருவிழா :

வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி.

திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


ஆன்மீகச் சிந்தனை மலர் :


* பாரதியார் -
உன்னை முதலில் திருத்து!

* தன்னை மற, தெய்வத்தை நம்பு, உண்மை பேசு, நியாயத்தை எப்போதும் செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.

* ஒரு பொருளுடன் உறவாடும் போது, உன்மனம் அப்பொருளின் வடிவமாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.

* அலையைக் கட்டலாம், காற்றை நிறுத்தலாம், மனவுறுதி கொண்ட வீரனுடைய குறிக்கோளை எவராலும் தடுக்க முடியாது.

வினாடி வினா :

வினா - ஐ.நா.சபையின் முதல் பெண் தலைவர் யார் ?

விடை - விஜயலஷ்மி பண்டிட் (1953)


இதையும் படிங்க :

"பொறுப்புகள் நிறைந்த வேலை!'

மாநில இணைத் தலைமைத் தேர்தல் அலுவலர் பூஜா குல்கர்னி ஐ.ஏ.எஸ்: நான், கடந்த 2003ல் ஐ.ஏ.எஸ்., ஆனேன். சப்- கலெக்டராக சிவகாசியில், போஸ்டிங். படிப்படியாக முன்னேறி, 2009 தேர்தல் கமிஷனில் போஸ்டிங் கிடைத்தது. என் கணவர் கிர்லோஷ்குமாரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தான். இந்த வேலையில் உள்ள பிரஷரும், பொறுப்பும் என்னை அதிக ஈடுபாடுடன் செயல்பட வைக்கிறது.தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 73 சதவீத மக்கள் ஓட்டளித்தனர். அதிகளவில், 78 சதவீதம் ஓட்டளித்தது இந்த சட்டசபை தேர்தலில் தான். தேர்தல் கமிஷனின் வேலை என்பது, தேர்தல் நேரத்து வேலை இல்லை. ஒரு வருட காலமாக அதை செய்து கொண்டு இருந்தோம். "லிஸ்ட்ல என் பெயர் இல்லை'ன்னு எந்த வாக்காளரும் புகார் செய்யக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினோம். 2010 மார்ச்சில் இருந்து, 2011 மார்ச் வரை, 80 லட்சம் வாக்காளர்களை புதிதாக சேர்த்திருக்கிறோம்.இந்த முறை, ஓட்டுப் போடுவது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நிறைய முயற்சிகளை எடுத்தோம். பதட்டமான ஊர்களில் முன்னேற்பாடா அங்குள்ள ஓட்டுச் சாவடிகளில் லேப்-டாப், வெப் கேமரா, இன்டர்நெட் வசதி ஏற்பாடுகள் செய்தோம். இப்படி, தமிழகம் முழுக்க, 15 ஆயிரம் லேப்-டாப் மூலம், தேர்தல் நாளன்று நிலவரத்தை நேரடியாக கவனித்தோம்.இதற்காக கம்ப்யூட்டர் இக்கத் தெரிந்த பத்தாயிரம் மாணவர்களைப் பயன்படுத்தினோம். மறு நாள் செய்தித்தாளில், "அமைதியா தேர்தல் நடந்தது' என்று மக்கள் பார்க்கும் வரை, டன் கணக்கில் டென்ஷன் எங்களுக்கு இருந்தது.





நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர்.





No comments:

Post a Comment