Thursday, May 5, 2011

இன்றைய செய்திகள் - மே, 05 , 2011


முக்கியச் செய்தி :

டெல்லி: இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதில் தப்பில்லை என்று தெரிவித்துள்ளதாக எம்டிவி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

04-bribe300.jpg

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழல் புகார்களில் சிக்கித் தவிக்கிறது. ஊழலை எதிர்த்து அமைக்கப்பட்டுள்ள லோக்பால் குழு இரண்டு முறை கூடிவிட்டது. இந்நிலையில் எம் டிவி இளைஞர்களிடம் ஊழல் பற்றிய கருத்துகளைக் கேட்டறிந்தது.

அன்மையில் ஊழலை எதிர்த்து ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அதில் பலர் சொல்வது வேறு செய்வது வேறாக உள்ளது. எம்டிவி 13 நகரங்களில் உள்ள 18 வயது முதல் 25 வயதுடைய 2 ஆயிரத்து 400 இளைஞர்களிடம் கணக்கெடுத்தது. இதில் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்கலாம் என்றும், 39 சதவீதத்தினர் லஞ்சம் வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

எம்டிவி சேனல் தலைவர் ஆதித்யா சாமி கூறுகையில்,இன்று அனைவரும் ஜெயிக்க விரும்புகிறார்கள். அவர்கள் வெற்றி பெறாவிட்டால் பலனில்லை. 90 சதவீதம் பேர் தங்கள் பெற்றோரை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால் அவர்கள் புது வழிகளைத் தேடுகின்றனர்.

பணம் ஏன் அவ்வளவு முக்கியம் என்பது தான் கேள்வி. 85 சதவீதம் பேர் பணம் அதிகாரத்தை தருவதாக நினைக்கின்றனர். 64 சதவீதத்தினர் கவர்ச்சியளிப்பதாகவும், 90 சதவீத இளைஞர்கள் பணம் தான் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் கருதுகின்றனர்.

அப்படி என்ன லஞ்சம் கொடுத்து பணம் சம்பாதிப்பது என்று கேட்டதற்கு வெற்றிக்கு குறுக்கு வழியைத் தேடுவதாக 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் கொடுக்க 53% இளைஞர்கள் தயார்: எம்டிவி கணக்கெடுப்பு

டெல்லி: இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதில் தப்பில்லை என்று தெரிவித்துள்ளதாக எம்டிவி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழல் புகார்களில் சிக்கித் தவிக்கிறது. ஊழலை எதிர்த்து அமைக்கப்பட்டுள்ள லோக்பால் குழு இரண்டு முறை கூடிவிட்டது. இந்நிலையில் எம் டிவி இளைஞர்களிடம் ஊழல் பற்றிய கருத்துகளைக் கேட்டறிந்தது.

உலகச் செய்தி மலர் :

* பின்லேடன் புகைப்படம் கோரமானது என்பதால் வெளியிட்டால் பிரச்சினை வரும்: அமெரிக்கா
வாஷிங்டன்: பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் பார்க்க மிகவும் கோரமாக இருப்பதால் அவற்றை வெளியிட்டால் பிரச்சினை வரும் என கருதுகிறோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

பாகிஸ்தானில் நடந்த தாக்குதலின்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். இதையடுத்து உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே பின்லேடன் உடலில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு உடலையும் கடலில் வீசி விட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. உண்மையிலேயே பின்லேடன் கொல்லப்பட்டு விட்டானா அல்லது ஒபாமாவின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக அவரது நிர்வாகம் டிராமா போடுகிறதா என்ற கேள்விகள் அமெரிக்காவிலேயே எழுந்துள்ளன.

இதையடுத்து புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசித்து வருவதாக அமெரிக்கா கூறியது. இந்த நிலையில் புகைப்படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்பதை அமெரிக்கா தற்போது மறைமுகமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தியபோது அவனிடம் கையில் ஆயுதம் எதுவம் இல்லை. ஆயுதம் இல்லாத நிலையிலும் அமெரிக்க வீரர்களை எதிர்த்து லேசான எதிர்ப்பைக் காட்டினான் பின்லேடன். அதேசமயம், அவன் அவனது மனைவியின் பின்னால் ஒளிந்து கொண்டதாக கூறப்படுவதில்லை உண்மை இல்லை. அப்படி அவன் செய்யவில்லை.

மேலும் அமெரிக்க வீரர்கள் தன்னை சுட முயன்றபோது அவர்களை நோக்கி ஓடி வந்தான் பின்லேடன். இதையடுத்து அவனது காலில் வீரர்கள் சுட்டனர். இதனால் அவனால் ஓட முடியவில்லை. இதையடுத்து அவனை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

அமெரிக்க வீரர்கள் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்தபோது எதிரில் தென்பட்டவர்களை துப்பாக்கி முனையில் பிடித்து கைவிலங்கிட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தங்களது குறி பின்லேடன் மட்டும்தான் என்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தனர். எதிர்ப்பட்டவர்களை எல்லாம் சுடும் நோக்கத்தில் அவர்கள் இல்லை. அமெரிக்க வீரர்கள் வந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதுபட்டு விட்டது.

பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டுத் திரும்பிய அமெரிக்க வீரர்கள் பழுதடைந்திருந்த ஹெலிகாப்டரை தகர்த்து எரித்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

பின்லேடன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் கோரமாக உள்ளது. அவற்ற வெளியிட்டால் பிரச்சினை வரலாம் என கருதுகிறோம். எனவே அவற்றை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்த பிறகே முடிவெடுக்கப்படும். பின்லேடன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடுவது குறித்து தீவிரப் பரிசீலனை நடந்து வருகிறது என்றார்

*அமெரிக்காவிடமிருந்து ஒசாமாவை பலமுறை தப்ப வைத்த ஐஎஸ்ஐ-விக்கிலீக்ஸ்
சென்னை: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பலமுறை தப்ப வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இதனால் தான் இந்தமுறை பாகிஸ்தானிடம் சொல்லாமலேயே பின்லேடனை அமெரிக்கப் படைகள் தாங்களே வந்து அழித்தாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தூதரங்களுக்கு இடையிலான ரகசிய கேபிள் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில், குவாண்டநாமோ பே சிறையில் உள்ள சிலர் மூலமாகவே பின்லேடனின் புதிய இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்குத் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சிறையில் உள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சபீ்ர் லால் மெல்மா என்பவர், 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐஎஸ்ஐ உதவியோடு பின்லேடனை காபூலில் இருந்து காப்பாற்றி பாகிஸ்தானுக்குள் அழைத்துச் சென்றது குறித்த விவரங்களைஅமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லை வரை அவர்களை தானும் தனது கூட்டாளிகளும் அழைத்துச் சென்றதாகவும், எல்லைப் பகுதியில் அவர்களை ஐஎஸ்ஐ உளவாளிகள் வரவேற்று அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஒசாமாவின் இருப்பிடம் குறித்து நம்பகமான தகவல்கள் கிடைத்து அதை பாகிஸ்தான் அரசுடன் பகிர்ந்து கொண்டபோதெல்லாம், ஒசாமைவை ஐஎஸ்ஐ இடம் மாற்றி, காப்பாற்றிவிட்டதாகவும், பாகிஸ்தான் விமான நிலையங்கள் வழியாகக் கூட அல் கொய்தா தலைவர்களை ஐஎஸ்ஐ பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

பாகிஸ்தான் நம்பிக்கையான நாடு அல்ல-சிஐஏ:


இந் நிலையில் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் தலைவர் லியோன் பனெட்டா கூறுகையில், பாகிஸ்தான் எங்களது எல்லாவிதமான தகவல்களையும் கசிய விட்டது. இதனால் நாங்கள் பின்லேடன் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான தகவல் எதையும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கவில்லை.

நாங்கள் எந்த முடிவு எடுத்து பணியை செய்ய ஆரம்பித்தாலும் பாகிஸ்தான் அதற்கு இடைஞ்சலாக இருந்து வந்தது. இதனால் பின்லேடன் மீதான தாக்குதலை மிகவும் உஷாராக மேற்கொண்டோம்.

பாகிஸ்தான் தகவல்களை கசிய விடும் என்ற பயத்தின் காரணமாகவே தாக்குதல் தொடர்பாக நாங்கள் எதையும் தெரிவிக்கக்கூடாது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். பாகிஸ்தான் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடு அல்ல.

என்றாலும் பாகிஸ்தானுடன் நட்பு நீடிக்கும்:

என்றாலும் பாகிஸ்தானுடன் நட்பு நீடிக்கும். அது ஒரு குழப்பமான காரணங்கள் கொண்ட நட்பு. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுடனான உறவு தொடரும்.
எங்களது எதிரிகள் இன்னும் அந்த நாட்டில் தான் உள்ளனர். அவர்களுக்கு எதிராக எங்களது தாக்குதல் தொடரும் என்றார்.

* பின்லாடனுக்கு அடைக்கலம் கொடுத்ததால் பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கண்டிப்பு
வாஷிங்டன்:அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனுக்கு, பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்த தகவல் அம்பலமாகியுள்ளதை அடுத்து, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதிரடி நடவடிக்கையாக, அந்நாட்டில் உள்ள தனது தூதரகம் மற்றும் துணை தூதரக அலுவலகங்களை அமெரிக்கா இழுத்து மூடியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரங்கள், 2001ல், விமானங்கள் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் உட்பட, உலக நாடுகள் பலவற்றில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர், அல்-குவைதா தலைவர் பின்லாடன்.உலகின் பல்வேறு நாடுகளிலும், ஒசாமாவை, அமெரிக்க படைகள் சல்லடை போட்டுத் தேடிவந்தன. இரட்டை கோபுர தாக்குதல் நடந்து, பத்தாண்டுகளுக்கு பின்
பலவற்றில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர், அல்-குவைதா தலைவர் பின்லாடன்.உலகின் பல்வேறு நாடுகளிலும், ஒசாமாவை, அமெரிக்க படைகள் சல்லடை போட்டுத் தேடிவந்தன. இரட்டை கோபுர தாக்குதல் நடந்து, பத்தாண்டுகளுக்கு பின், ஒரு வழியாக, அவர் பதுங்கியிருந்த இடத்தை, அமெரிக்க புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்தனர்.அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் தான், கடந்த சில மாதங்களாக, ஒசாமா பின்லாடன் பதுங்கியிருந்தார்.கடந்த 1ம் தேதி அதிகாலையில், பின்லாடன் பதுங்கியிருந்த இடத்தில், அமெரிக்க கமாண்டோ படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இச்சண்டையில், பின்லாடனும், அவருடன் இருந்தவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே, இந்த தாக்குதலை அமெரிக்கப் படையினர் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். அதிபர் ஒபாமா, இதை, "நீதி நிலைநாட்டப்பட்டது' என்றார்

தேசியச் செய்தி மலர் :

* பிரதமருக்கு கொலை மிரட்டல்: புலனாய்வு போலீஸார் விசாரணை

pm.jpg

புதுதில்லி, மே 4- பிரதமர் மன்மோகன் சிங்கையும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயையும் கொல்லப் போவதாக தில்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.

இதையடுத்து, புலனாய்வு பிரிவு போலீஸார் அதுகுறித்து விசாரித்து வருகின்றனர். செல்போன் மூலம் அந்த மிரட்டல் வந்துள்ளது. அதன் எண் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்த இணைப்பு போலியான முகவரியில் பெறப்பட்டுள்ளது தெரியவந்தது.

ராம் அவதார், சஞ்சய் நகர், காசியாபாத் என்னும் போலியான பெயரில் அந்த செல்போன் எண்ணுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

எனினும், இந்த கொலை மிரட்டல் குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக காசியாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் ரகுபிர் லால் தெரிவித்தார்.

* இடாநகர்: அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ சென்ற ஹெலிகாப்டர் தவாங்கில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்த இடத்திலிருந்து முதல்வர் டோர்ஜீ உள்ளிட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

dorjee-khandu200-1_04052011.jpg

காண்டூவின் மரணமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அந்த இடத்திலிருந்து 3 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. டோர்ஜீ கதி குறித்தும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது டோர்ஜீயின் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி கந்து (56), மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள தவாங் பகுதியில் இருந்து தலைநகர் இடா நகருக்கு கடந்த சனிக்கிழமை காலை 9.50 மணிக்கு தனியார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன் எம்எல்ஏவின் சகோதரி மற்றும் அதிகாரிகள் உள்பட 4 பேர் சென்றனர். 20 நிமிடத்துக்கு பிறகு ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களாக அவரைத் தேடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் இன்று அவரது ஹெலிகாப்டர் லோப்தாங் என்ற இடத்தில், ஜாங் அருவிப்பகுதியில் விபத்துக்குள்ளாகி நொறுங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்களை தேடுதல் படையினர் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் அழுகிய நிலையில் உடல்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த உடல்களை தேடுல் படையினர் மீட்டு பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.

மொத்தம் 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ள. இறந்து நாட்களாகி விட்டதால் அவை அழுகிய நிலையில் காணப்பட்டன. முதல்வர் டோர்ஜீயின் உடலும் அடையாளம் காணப்பட்டு விட்டது.

முன்னதாக இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் , ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் என்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சில உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதல்வர் குறித்த தகவல்கள் சந்தோஷப்படும்படியாக இல்லை. இருப்பினும் தொடர்ந்து உடல்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் என்றார் சிதம்பரம்.

ராணுவத்தில் பணியாற்றியவர்:

ஹெலிகாப்டரில் பயணித்து உயிரிழந்த முதல்வர் டோர்ஜீ, அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் 6வது முதல்வர் ஆவார். 2 வது முறையாக முதல்வர் பதவியை வகித்து வந்தார்.

முன்பு ராணுவத்தில் உளவுப் பிரிவில் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
 
2வது முதல்வர்:

குறுகிய காலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழக்கும் 2வது முதல்வர் டோர்ஜீ ஆவார். இதற்கு முன்பு ஆந்திர முதல்வராக இருந்த ராஜேசகர ரெட்டியும் இதேபோலத்தான் ஹெலிகாப்டரில் பயணித்து உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.

* காமன்வெல்த் ஊழல்-திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டார் கல்மாடி

04-kalmadi300.jpg

டெல்லி: காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடி, சிபிஐ காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்ட விஐபிக்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறையில் அவரும் அடைக்கப்படுகிறார். 14 நாள் சிறைக் காவலில் கல்மாடியை அடைக்க டெல்லி சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை கல்மாடி உள்ளிட்ட 3 பேர் நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையி்ல ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து மே 18ம் தேதி வரை அனைவரையும் சிறையில் அடைக்க நீதிபதி சர்மா உத்தரவிட்டார்.

* 2ஜி வழக்கு: சு.சாமியின் கோரிக்கை சட்டப்படி ஏற்புடையதல்ல-சிபிஐ
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தன்னை அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்ற ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமியின் கோரிக்கை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சிபிஐ கூறி்யுள்ளது.

சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் கடந்த விசாரணையின்போது சாமி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கில் சிபிஐக்கு சட்டரீதியாக உதவ தயாராக இருப்பதாகவும், இதனால் தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இதில் சிபிஐக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று நம்புகிறேன்.

மேலும் என்னை இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீதிமன்றம் நியமிக்க வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இது சாத்தியம் தான். இந்த விவகாரத்தில் நானும் விசாரணை நடத்த சிபிஐ, அமலாக்கப் பிரிவினர் உதவ வேண்டு்ம் என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று சாமியின் மனுவுக்கு சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது. அதில்,

அரசு வழக்கறிஞராக தன்னை நியமிக்க வேண்டும் என்ற சாமியின் கோரிக்கை சட்டத்துக்கு உட்பட்டதல்ல. அவரது தனிப்பட்ட புகாரை தனியாக விசாரிக்கலாம். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் யு.யு.லலித்தை சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்றம் ஏற்கனவே நியமனம் செய்துள்ளது.

சிபிஐயின் வழக்குடன் சுவாமியின் மனுவை இணைக்கக் கூடாது. அவரது புகாரை சட்டத்துக்குட்பட்டு தனியாகக் கையாளலாம் என்று கூறியுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் வாதாட தனக்கு அவகாசம் வேண்டும் என சாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மே 18ம் தேதிக்கு இதன் மீது அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

* மதானிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக 2 நீதிபதிகளிடையே மாற்றுக் கருத்து

04-madhani300.jpg

டெல்லி: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள அரசியல்வாதி அப்துல் நாசர் மதானிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக இரு நீதிபதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியின் தீர்ப்புக்கு பெஞ்ச் அனுப்பியுள்ளது.

2008ம் ஆண்டு பெங்களூரில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் மதானி கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். அவரது மனுவை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது

மனுவை விசாரித்த பின்னர் ஜாமீன் அளிக்கலாம் என கட்ஜூ கருத்து தெரிவித்தார். ஆனால் மதானி மீது தேசப் பாதுகாப்பை சீர்குலைத்ததாக கடுமையான குற்றச்சாட்டு உள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவித்தார்.

இரு நீதிபதிகளும் தனித் தனியான கருத்தை தெரிவித்ததால் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக தீர்ப்பளிக்குமாறு தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் பரி்ந்துரைத்து மனுவை அவரிடம் அனுப்பி வைத்தனர்.

* ரூ.1,80,208 கோடி நஷ்டம்... டீஸல் லிட்டருக்கு ரூ. 3 உயர்கிறது!!

டெல்லி: சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், நீண்ட நாளாக கிடப்பிலிருக்கும் டீஸல் விலை உயர்வை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அநேகமாக லிட்டருக்ரு 3 வரை விலை உயரும் என்று எண்ணெய் நி்றுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெட்ரோல் விலையை உயர்வை சர்வதேச சந்தை விலை நிலைக்கேற்ப பெட்ரோல் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் மட்டும் 8 முறை பெட்ரோல் விலையை உயர்த்தின எண்ணெய் நிறுவனங்கள்.

ஆனால் டீஸல் விலையை மட்டும் உயர்த்தவில்லை. அப்படி உயர்த்தினால் பொதுமக்களின் கோபத்துக்கு உடனடியாக இலக்காக வேண்டுமே என்பதாலும், பொது மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் டீஸல் விலை உயர்வு மட்டும் தள்ளிப் போடப்பட்டு வந்தது.

ஆனால் இந்த தள்ளிப் போடலின் பலன், அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக ரூ180208 கோடி அளவுக்கு நஷ்டம் என்று கணக்குக் காட்டியுள்ளன. அதாவது டீஸல், கெரோஸின், சமையல் எரிவாயு போன்றவற்றை மானிய விலையில் தருவதால் ஏற்பட்டுள்ள நஷ்டம் இது என்று கூறுகின்றன. ஆனால் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய அரசு கடந்த நிதியாண்டில் 20,911 மட்டுமே அளித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் வெளியிடப்பட்டதைப் போல எண்ணெய் கடன் பத்திரங்கள் எதையும் இந்த ஆண்டு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இனியும் டீஸல் விலை உயர்வை தள்ளிப் போட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், தேர்தல் முடிவுகளழ் வெளியான கையோடு, டீஸல் விலை உயர்வையும் அறிவிக்க, டீஸல் விலை உயர்வு குறித்து முடிவெடுக்க அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ஒரு லிட்டர் டீஸலுக்கு ரூ 3 வரை உயர்த்தலாம் என ஏற்கெனவே இந்த குழு பரிந்துரைத்துள்ளதால், எடுத்த எடுப்பில் டீஸல் விலையில் ரூ 3 உயர்த்தப்படுகிறது.

டீஸலைத் தொடர்ந்து சமையல் எரிவாயு மற்றும் கெரோஸினுக்கும் விலை உயர்வை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

* 4-வது கட்ட தேர்தல்: மேற்கு வங்கத்தில் 84% வாக்குப் பதிவு
புது தில்லி/ கொல்கத்தா, மே. 3: மேற்கு வங்க மாநிலத்தில் 63 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடந்த வாக்குப் பதிவில் 84.8 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 294 உறுப்பினர்கள் கொண்ட பேரவைக்கு 4-வது கட்டமாக 63 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 84.8 சதவீத வாக்குகள் பதிவானதாக துணைத் தேர்தல் ஆணையர் வினோத் ஜுட்ஷி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "வாக்குப் பதிவு முடியும் நேரத்துக்கு முன்பாகவே வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து இரவு வரை நின்று வாக்களித்தனர். வாக்குப் பதிவு அமைதியாகவும் அசம்பாவிதங்கள் ஏதும் இன்றியும் நடந்தது' என்றார்.

"செவ்வாய்க்கிழமை தேர்தல் நடந்த ஹெளரா, ஹூக்ளி, கிழக்கு மேதினிப்பூர், புர்தவான் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சராசரியாக 83.19 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது' என்று மேலும் கூறினார் வினோத் ஜுட்ஷு.

சாதனை அளவாக ஹெளராவில் 79.9 சதவீதமும், ஹூக்ளியில் 82.59 சதவீதமும், கிழக்கு மேதினிப்பூரில் 89.32 சதவீதமும், புர்தவானில் 87.32 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் குப்தா தெரிவித்தார். வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே 90 இயந்திரங்கள் மாற்றப்பட்டதாகவும் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 43 இயந்திரங்களும் மாற்றப்பட்டதாக சுனில் குப்தா மேலும் தெரிவித்தார்.

பிகார் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுதிர் குமார் ராகேஷும், ஒரிசா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சீனிவாசனும் இந்தத் தேர்தலில் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் 71, 728 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 42 பொதுப் பார்வையாளர்களும், 9 செலவுக் கணக்கு பார்வையாளர்களும், 2 காவல் பணிகள் பார்வையாளர்களும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4-வது கட்ட தேர்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பார்வையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்ததை அடுத்து 2 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு அதிகாரிகள் நீக்கப்பட்டனர். செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலில் 4 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை மக்கள் புறக்கணித்தனர்.

மேற்கு வங்கத்தில் அடுத்து 5-வது கட்ட வாக்குப் பதிவு மே 7-ம் தேதியும் இறுதி கட்ட வாக்குப் பதிவு மே 10-ம் தேதியும் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

* பாலியல் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

sc.jpg

புது தில்லி, மே 4: பாலியல் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 15-க்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை எச்சரித்துள்ளது.

இந்த நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறினால் தலைமைச் செயலர்கள் ஜூலை 18-ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1999-ல் பாலியல் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் புத்ததேவ் கர்மாஸ்கர் என்பவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இதை கொல்கத்தா உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் புத்ததேவ் கர்மாஸ்கர். கடந்த பிப்ரவரி 14-ல் இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அத்துடன் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பாலியல் தொழிலாளர்களுக்கும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் மறுவாழ்வு அளிக்க அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மேற்கு வங்க மாநிலமும், உத்தரப் பிரதேசமும் ஏற்று உடனடியாக விளக்கம் அளித்தன. மற்ற எந்த ஒரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் விளக்கம் கொடுக்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், விளக்கம் அளித்த இரு மாநிலங்களைத் தவிர பிற மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் எச்சரித்தது.

* ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: பாபுலால் மராண்டி 4-வது நாளாக உண்ணாவிரதம்

encroach.jpg

ராஞ்சி, மே 4: ஆக்கிரமிப்புகளை அகற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து அந்த மாநில முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்) கட்சியின் தலவைருமான பாபு லால் மராண்டி 4-வது நாளாக புதன்கிழமையும் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

மாநில அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை எடுத்தபோது, பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 27-ம் தேதி ராஞ்சியில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சியை ஒடுக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். முன்னதாக ஏப்ரல் 5-ம் தேதியும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிரான கிளர்ச்சியில் இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், "பல்வேறு பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் அமைக்கப்படுவதற்காக மாநிலத்தில் சுமார் 19 லட்சம் மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போதும் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசே மாற்று இடம் வழங்க வேண்டும்' என்று கூறி பாபு லால் மராண்டி கடந்த 1-ம் தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தை புதன்கிழமையும் தொடர்ந்தார்.

எனினும், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரிலேயே மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறி அர்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக அரசு ஆக்கரிமிப்புகளை அகற்றி வருகிறது.

ராஞ்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
பெண்கள் மீது தடியடி நடத்தும் பெண் போலீஸார்.

* கறுப்புப் பண வழக்கு: தீர்ப்பு நிறுத்தி வைப்பு

புது தில்லி, மே 4: கறுப்புப் பண வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நிறுத்தி வைத்தது.

இந்த வழக்கின் மீதான தீர்ப்பு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து நீதிபதிகள் சுதர்ஷன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

ஆனால் கறுப்புப் பணம் விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் அமைப்புகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் விரும்புகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பிரச்னை இது. இதை பல்வேறு கோணத்தில் இந்த நீதிமன்றம் ஆராய்ந்து பார்த்ததில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைப்புகளின் நடவடிக்கையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிப்பது அவசியம் என கருதுகிறோம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மீது அதிருப்தியை வெளிப்படுத்தியது. கறுப்புப் பணம் விவகாரம் குறித்து மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று விளக்கம் கோரியது.

இதையடுத்து நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், கறுப்புப் பணம் விவகாரத்தை மத்திய அரசு ஏற்கெனவே கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 உயர் அதிகாரிகள் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. சில வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலும் பெறப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததால் தீர்ப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பை நிறுத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

*ராணுவ நிலங்களை ஆக்கிரமிக்கவிடமாட்டோம்: அந்தோனி

akant.jpg

புதுதில்லி, மே 4: நாட்டின் பல பகுதிகளில் காலியாக உள்ள ராணுவ நிலங்களை ஆக்கிரமிக்கவிடமாட்டோம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற கன்டோன்மெண்ட் போர்டுகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் முதலாவது பணி ஆய்வுக்கூட்டத்தில் வாசிக்கப்பட்ட உரையில் அவர் மேலும் தெரிவித்தது:

நாடு முழுவதிலும் உள்ள 62 கன்டோன்மெண்ட்கள்,

ராணுவ எஸ்டேட்டுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படாத நிலங்கள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றை தனியார் ஆக்கிரமித்துவிடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அந்த நிலங்கள் கண்காணிப்பில் இருக்கும். ராணுவம் வசம் உள்ள நிலங்களை வேறு பயனுக்காக பிறருக்குத்தர ஆட்சேபம் இல்லை என்ற சான்றிதழ்கள் விதிப்படி மட்டுமே தரப்படும்.

காலியாக உள்ள ராணுவநிலங்கள், பயன்படுத்தப்படாமல் உள்ள விமானதளங்கள், கவாத்து மைதானங்கள் ஆகியவற்றை அருகில் உள்ள ராணுவப்பிரிவு மூலம் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்படும். காலியாக உள்ள ராணுவ நிலங்கள் அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களாக நவீனமுறையில் கணக்கெடுக்கப்படும். பின்னர் அவற்றுக்கான நிலவுடைமைப் பத்திரங்கள் டிஜிட்டல் முறையில் தயார் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். இந்தத் திட்டத்தை உடனடியாக அமலாக்க அமைச்சக ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் கன்டோன்மெண்ட்கள், ராணுவ எஸ்டேட்டுகள் வசம் சுமார் 17 லட்சம் ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் உள்ளன. பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைப்படி ராணுவ நிலங்களைக் கணக்கெடுக்கும்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு குற்றம்காணும் நடவடிக்கையாக இல்லாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்டோன்மெண்டுகளின் நிலங்கள் அனைத்தையும் கணக்கெடுத்து அவற்றை சரியான முறையில் கண்காணித்து நிர்வகித்து வர வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

மாநிலச் செய்தி மலர் :
* அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது! - மின் வாரிய தலைவர் சி.பி.சிங்
கோவை: அடுத்த 2 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மின்பற்றாக்குறையே இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய தலைவர் சி.பி. சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

மின்வெட்டு பிரச்சினையை கண்டித்து கோவையில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் நாளை (வியாழக்கிழமை) வேலை நிறுத்தம் மற்றும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவையில் உள்ள தொழில் அமைப்பு பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் சி.பி.சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். இதற்கான கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் உமாநாத் முன்னிலை வகித்தார்.

6 துணை மின்நிலையங்கள்:

மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஆரல்வாய்மொழி, கயத்தார், உடுமலை, தேனி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் காற்றாலை மின் உற்பத்தியை வாங்கி வினியோகம் செய்வதற்கு ரூ.4 ஆயிரம்கோடி செலவில் 400 கே.வி திறன் கொண்ட 6 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இது 2 அல்லது 3 ஆண்டுகளில் செயல்பட தொடங்கும்.

ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான வரி என்பது புதிதாக போடப்பட்டது அல்ல. ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது அதிக அளவில் ஜெனரேட்டர் பயன்பாடு உள்ளதால் வரிச்சுமை உள்ளது போன்று தெரிகிறது. ஆனால் இதை நாங்கள் அமல்படுத்துவது இல்லை.

தற்போது தொழில் அமைப்புகள் சார்பில் நாளை (வியாழக்கிழமை) அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். தற்போதைய மின் திட்டங்கள் குறித்து நிலமையை அவர்களிடம் எடுத்து கூறி உள்ளோம். எனவே இந்த சூழ்நிலையில் வேலைநிறுத்தம் தேவையா என அவர்கள் முடிவு செய்ய வேண்டும்," என்றார்.

* மின்வாரிய தலைவருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: கோவையில் நாளை போராட்டம்
கோவை: கோவையில் மின்வாரிய தலைவருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம்

தொடரும் மின் வெட்டை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் மே 5-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தன. இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவு பெருகியது. கோவையில் பிடித்த இந்த நெருப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. கோவையில் போராட்டம் நடைபெறும் அதே நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பேச்சுவார்த்தை

இந்நிலையில் கோவையிலுள்ள தொழில் அமைப்புகளை சமாதானப்படுத்தி, போராட்டத்தை வாபஸ் பெறும் முயற்சியில் மின்வாரியத் தலைவர் சி.பி. சிங் கோவை வந்தார். தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை துவங்கியது. கலெக்டர் உமாநாத், வருவாய் அலுவலர் சண்முகசுந்தரம், தலைமைப் பொறியாளர் தங்கவேலு ஆகியோர் உடனிருந்தனர்.

தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா கந்தசாமி, காட்மா ரவிக்குமார், சேம்பர் ஆஃப் காமர்ஸ் கிருஷ்ணன், மின் நுகர்வோர் சங்கம் இளங்கோ, விவசாயிகள் சங்கம் தனபால் உள்ளிட்ட 24 பேர் கலந்து கொண்டனர். காலை 11.00 மணிக்கு துவங்கி மதியம் 1:00 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது.

தோல்வி

தொழில் அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட ஏழு கோரிக்கைகளில் எதையும் நிறைவேற்றுவதாக மின்வாரியம் உறுதி அளிக்கவில்லை. மின் தடையை சமமாகப் பகிர வேண்டும் என்பதையும் சி.பி.சிங் ஏற்கவில்லை என்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

திட்டமிட்டபடி போராட்டம்

விரைவில் உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறுகிறார்களே தவிர, மின் தடையால் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடிகளை மின் வாரியம் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை எனவே திட்டமிட்டபடி மாபெரும் போராட்டம் நடைபெறும் என கொடிசியா தலைவர் கந்தசாமி கூறினார்.

* பின்லேடன் மரணம் எதிரொலி-தமிழகத்தில் கடலோரப் பாதுகாப்பு அதிகரிப்பு.
சென்னை: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தீவிரவாதிகள் ஊடுறுவலைத் தடுக்கும் வகையில் தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி போலாநாத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிரடிப்படை வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாக குறிப்பிட்ட இடத்துக்கு அதிரடிப்படை வீரர்கள் விரைந்து செல்வார்கள். முக்கியமான இடங்களில் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்றும், இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள், மற்ற மாவட்டங்களைவிட பாதுகாப்பை பலப்படுத்தும்படியும், தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை போன்ற முக்கிய நகரங்களிலும் போலீசார் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

* தேர்தல் கமிஷனின் சட்டம், விதிமுறைகளை நடைமுறைபடுத்தினோம்: பிரவீன்குமார்

large_235384.jpg

மதுரை: ""தேர்தல் கமிஷனின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி விதிமுறைகள் உள்ளன. அதற்கு உட்பட்ட சட்ட, விதிமுறைகளையே தமிழகத்தில் தேர்தல் கமிஷன் நடைமுறைபடுத்தியது,'' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி, மதுரையில் நடந்தது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமை வகித்தார். அவர், ""தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள விவரங்களை சேகரிக்க வேண்டும். தபால் ஓட்டுகளில் சீல் உடைக்கப்பட்டிருந்தால் அதை ஏற்கக் கூடாது. பதிவு செய்த பின் தான் ஓட்டுகளை பெட்டியில் போட அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தமிழகத்தில் 62 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 50 ஆயிரம் போஸ்டர் ஒட்டியது, சுவர் விளம்பரம், கொடிகள் கட்டிய வழக்குகள், 11 ஆயிரம் அடிதடி வழக்குகள், 700 பண பட்டுவாடா செய்தவை. மதுரை மாவட்டத்தில் 330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 296க்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 21 வழக்குகள் விசாரணையில் உள்ளன.தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் முன்பு நடந்த இடைத்தேர்தல்களை விட, தற்போதைய பொதுத்தேர்தலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல்களில் வெளிப்படையாக பண பட்டுவாடா நடந்தது. தற்போது, அதை தடுத்துள்ளோம். சில இடங்களில் சிறிய அளவில் பண பட்டுவாடா நடந்துள்ளது. அதை பறிமுதல் செய்துள்ளோம். வரும் காலங்களில் இதுவும் தடுக்கப்படும்; மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.

தபால் ஓட்டுகள் விலை பேசப்படுவதாக தேர்தல் கமிஷனுக்கு புகார் வரவில்லை; தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தேதியில் தபால் ஓட்டுக்கான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை கிடைக்கப்பெறாதது பற்றி விசாரிக்கப்படும்.மதுரை மேற்குத் தொகுதியில் தேர்தல் விதிமீறல் தொடர்பான கலெக்டரின் அறிக்கையை, தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளோம். தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில், தமிழகத்தில் தான் தேர்தல் கமிஷன் அதிக கெடுபிடி செய்ததாக கூறப்படுகிறதே? என நிருபர்கள் கேட்டனர். பிரவீன்குமார்,"" தேர்தல் கமிஷனின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி விதிமுறைகள் உள்ளன. அதற்கு உட்பட்டு தமிழகத்தில் சட்டம், விதிமுறைகளை நடைமுறைபடுத்தினோம்,'' என்றார். கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா பங்கேற்றார்.

* கனிமொழிக்கு அமலாக்கத் துறை சம்மன்

kanimozhli.jpg

புதுதில்லி, மே 3: 2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக வரும் 5-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை திமுக எம்.பி.யுமான கனிமொழிக்கு அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிஃப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குநர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குநர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டிருப்பதாகத் தெரிகிறது.

2ஜி ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து சினியுக் நிறுவனத்தின் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கலைஞர் டி.வி.யில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிப்பார்கள் எனத் தெரிகிறது.

இந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ அமைப்பும் விசாரித்து வருகிறது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் நாட்டுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தனது முதல் குற்றப்பத்திரிகையில் கூறிய சிபிஐ, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா, ராசாவின் தனிச் செயலராக இருந்த சண்டோலியா உள்ளிட்டோர் மீதும், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ், ஸ்வான் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டியிருக்கிறது.

இதன் பிறகு கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில், 2ஜி முறைகேடு தொடர்பான சதியில் உடந்தையாக இருந்ததாக கனிமொழி மீது சிபிஐ குற்றம்சாட்டியது. சரத்குமார், மொரானி உள்ளிட்ட 5 பேரின் பெயர்களும் துணைக் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்தன.

இவர்கள் 5 பேரும் வரும் 6-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி அப்போது உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இவர்கள் 5 பேருக்கும் அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது.


ஆரோக்கியச் செய்தி மலர் :

சத்து நிறைந்த எள்ளின் மருத்துவகுணங்கள்

“இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு
கொளுத்தவனுக்கு கொள்ளைக்கொடு” என்று ஒரு பழமொழி உண்டு.


எள்ளில் உள்ள எண்ணெய் சத்துக்கள் உடல் மெலிவாக இருப்பவர்களை குண்டாக்கும் தன்மையுடையது என்பதற்காகவே இந்த பழமொழி கூறப்படுகிறது.

எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள்ளின் பயன்பாடு இருந்துள்ளது. எள் வறட்சிப் பகுதியிலும் வளரக் கூடியது. இதை பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சி தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.

தமிழ்நாட்டு சமையலில் எள்ளிற்கு முக்கிய பங்குண்டு. இதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட எள்ளின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

நடுநிலை கொழுப்புகள் ஃபாஸ்போலிப்பிட்டுகள், ஆர்ஜினைன், சிஸ்டைன், ஹிஸ்டீன், ஐசோலியுசிஸ், லியுசன், லைசின், ஃபோலிக் அமிலம், சுக்ரோஸ், அசிட்டைல்பைரசைன் போன்ற ரசாயனப்பொருட்கள் எள் செடியில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.

மருத்துவ பயன் உடையவை

விதைகள், இலைகள், வேர் போன்றவை மருத்துவப்பயன் உடையவையாகும்.

கண் நரம்புகள் பலம்படும்

எள் செடியின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.

பெண்களுக்கு பயன்தரும்

எள் பொடியை உணவில் சேர்த்து உண்டால் மாதவிடாய் இன்மையையும், மாதவிடாய் வலியையும் போக்கும். குழந்தை பெற்ற பெண்கள் உணவுப்பொருட்களில் அதிக அளவில் எள் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் தளர்ந்த தசைகள் இறுகும். கருப்பைப் புண் குணமடையும்.

விதைகள் நோய் தீர்க்கும். சிறுநீர் கழிவை கூட்டும். கட்டி வீக்கம் ஆகியவற்றை இளக்கும். இளம் பேதி மருந்தாக பயன்படும். மலச்சிக்கல் மற்றும் சீதபேதிக்கு பயன்தரும். வெந்தபுண், ஆவிக்கொப்புளம், சீழ்ப்புண்ணை ஆற்றும். தலைமுடிக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளில் அடிப்படைப் பொருளாக விதை எண்ணெய் பயன்படுகிறது.

எள்ளின் நன்மைகள்

100 கிராம் எள்ளில் 1450 மில்லிகிராம் சுண்ணாம்பு உள்ளது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் எள்ளில் , தாமிரம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் , துத்தநாகம், வைட்டமின் பி1 , வைட்டமின் இ, ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகின்றன. இதில் உள்ள நன்மையை உணர்ந்தே நம் முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது.

வர்த்தகச் செய்தி மலர் :

* பவுனுக்கு ரூ. 88 குறைவு

சென்னை, மே 4: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை, பவுனுக்கு ரூ. 88 குறைந்து ரூ. 16,664-க்கு விற்பனையானது.

ஒரு கிராம் விலை ரூ.2,083. செவ்வாய்க்கிழமை விலை: ஒரு பவுன் ரூ.16,752; ஒரு கிராம் ரூ.2,094.

* .சென்செக்ஸ் 65 புள்ளிகள் சரிவு
மும்பை, மே 4- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 65 புள்ளிகள் சரிந்து 18,469 புள்ளிகளில் முடிவடைந்தது.

பஜாஜ் ஆட்டோ, ஹீரோ ஹோண்டா, ஹெச்டிஎப்ஸி, டாடா பவர், டிஎல்எப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலிவர், பெல், எல் அன் டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 28 புள்ளிகள் சரிந்து 5,537 புள்ளிகளில் முடிவடைந்தது

விளையாட்டுச் செய்திகள்:

* கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி: புனே அணி 7வது தோல்வி

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத்தவறிய யுவராஜ் அணி, தொடர்ந்து ஏழாவது தோல்வியை பதிவு செய்தது.

இந்திய மண்ணில், நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற புனே அணி கேப்டன் யுவராஜ் சிங், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
கங்குலி இல்லை:

புனே அணியில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று களமிறக்கப்படவில்லை.

"டாப்-ஆர்டர்' ஏமாற்றம்:
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளிஜார்டு (6) மோசமான துவக்கம் அளித்தார். பின் இணைந்த கேப்டன் சச்சின், அம்பதி ராயுடு ஜோடி பொறுப்புடன் ரன் சேர்த்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்த போது, யுவராஜ் சுழலில் சச்சின் (24) சிக்கினார். இவருக்கு ஒத்துழைப்பு அளித்த அம்பதி (27) நிலைக்கவில்லை. அடுத்து வந்த ரோகித் சர்மா (12), சைமண்ட்ஸ் (3) பெரிய அளவில் சோபிக்கவில்லை.
சுமன் அபாரம்:
"மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய சுமன், அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். ஜெசி ரைடர், ஜெரோம் டெய்லர், தாமஸ் பந்தில் தலா ஒரு "சிக்சர்' விளாசிய சுமன், 16 பந்தில் 36 ரன்கள் (3 சிக்சர், 3 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய போலார்டு, தன்பங்கிற்கு இரண்டு "சிக்சர்' அடிக்க, மும்பை அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஜெரோம் டெய்லர் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தில் "சிக்சர்' அடிக்க முயன்ற போலார்டு (29), யுவராஜ் சிங்கிடம் "கேட்ச்'

கொடுத்து அவுட்டானார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் (8) அவுட்டாகாமல் இருந்தார். புனே அணி சார்பில் ஜெரோம் டெய்லர், யுவராஜ் சிங், ராகுல் சர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ரைடர் "டக்':
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய புனே வாரியர்ஸ் அணிக்கு, துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்பஜன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ரைடர், குல்கர்ணியிடம் "கேட்ச்' கொடுத்து "டக்-அவுட்' ஆனார். அடுத்து வந்த ஸ்மித் (6), ஜுன்ஜுன்வாலா (10) சோபிக்கவில்லை. மலிங்கா, ஹர்பஜன் பந்தில் தலா ஒரு "சிக்சர்' விளாசிய யுவராஜ் சிங் (20) நீண்டநேரம் நிலைக்கவில்லை.
பாண்டே அரைசதம்:
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் மனீஷ் பாண்டே அரைசதம் கடந்தார். இவருக்கு ராபின் உத்தப்பா ஒத்துழைப்பு அளிக்க, அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த போது, மலிங்கா பந்தில் "சிக்சர்' அடிக்க முயன்ற பாண்டே (59), ரோகித் சர்மாவிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மன்ஹாஸ் (0), மலிங்காவிடம் சரணடைந்தார். கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவைப்படநிலையில், 11 ரன்கள் மட்டுமே எடுத்த புனே அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ரோகித் சர்மா (34) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை சார்பில் மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு பரமேஸ்வரி சமேத பரமசுந்தரர் திருக்கோவில்

மூலவர்    :    பரமசுந்தரர்
உற்சவர்    :    -
அம்மன்/தாயார்    :    பரமேஸ்வரி:    -
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்    -
ஊர்    :    நன்னிலம்
மாவட்டம்    :    திருவாரூர்
மாநிலம்    :    தமிழ்நாடு

 தல சிறப்பு:

ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் பாம்பானது சிவன்மேல் எந்தவித பயம் இல்லாமல் படுத்துக்கொண்டு மக்களுக்கு காட்சி அளிக்கிறது. அடிக்கடி சிவன் அருகிலே பாம்பானது சட்டை உரிப்பதும் ரொம்ப அதிசயமாகும்.

தெட்சிணாமூர்த்தி இங்கு ஞானகுருவாக உள்ளதால் நமக்கு ஞானத்தையும், கல்வி அறிவினையும், மனஅமைதியும் கொடுக்கின்றார். அவரை வியாழக்கிழமைகளில் வழிபட மனக்குழப்பம் நீங்கி சித்தம் தெளியும் என்பது நம்பிக்கை. பரமேஸ்வரியை ஞாயிறு அன்று வழிபட கல்யாணம் நடைபெறுவதாக கூறுகின்றார்கள்.

 தலபெருமை:

10வது பாம்பு ஊர் : கல்வெட்டு தகவலின்படி இன்றும் இந்த ஊர் கோயிலானது. 10வது பாம்பு ஊர் என்று கூறப்படுகிறது. திருநாகேஸ்வரம், திருபாம்பிரத்திற்கு இணையாக பாம்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கோயில் அருகே நிறைய பெரிய பெரிய புற்றுகள் உள்ளன. இன்றும் ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் பாம்பானது சிவன்மேல் எந்தவித பயம் இல்லாமல் படுத்துக்கொண்டு மக்களுக்கு காட்சி அளிக்கிறது. அடிக்கடி சிவன் அருகிலே பாம்பானது சட்டை உரிப்பதும் ரொம்ப அதிசயமாகும். ஆனால் எத்தனை புகைப்படம், எப்படி எடுத்தாலும் பாம்பு மாத்திரம் காட்சி அளிக்கவில்லை என்பது உலக அதிசயம். ஆனால் பாம்புகள் கடிப்பதோ, கஷ்டமோ கொடுப்பதில்லை.

கல்வெட்டு : இந்த நிகழ்வுக்கு சான்றாக தெட்சிணாமூர்த்திக்கு பின்புறம் கல்வெட்டு உள்ளது. அதன்படி கி.பி. 917 ஆம் ஆண்டு முதலாம் பராந்தக சோழனால் திருப்பணி செய்யப்பட்டது, என்றும் இந்த கோயிலுக்காக நிறைய தானங்கள் அவன் கொடுத்தாகவும் தகவல் உள்ளது. பரமசுந்தரர், அமரசுந்தரர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அங்குள்ள குருவானவர் ஞானகுரு என்றும் ஞானகாரகன் என்றும் தெரிவிக்கிறது.

பரமசுந்தரர் : கல்வெட்டுக்கள் மூலம் சுவாமி பரமசுந்தரர் என்று அறியப்படுகிறது. மிகவும் அழகாக, நேர்த்தியாக ஆவுடையாருடன் காட்சி அளிக்கிறார்.

பரமேஸ்வரி : அம்பாள் மிகவும் அழகான தோற்றத்துடன் லட்சணமாக காட்சி அளிக்கிறாள்.

தெட்சிணாமூர்த்தி : வேறு எங்கேயுமே காணமுடியாத அழகான சிலை. தெட்சிணாமூர்த்தி பின்புறமே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலையின் பின்புறம் கல்வெட்டு இருப்பது அதிசயமாகும். மற்ற சிலைகள் எதுவும் காணப்படவில்லை.  கோயிலின் அருகே நிறைய புற்றுகள், பாம்புகள் இருப்பதாலும், செவ்வாய், வெள்ளி பாம்புக்கு பால் ஊற்ற ராகு, கேது, நாக தோஷம் போகும் என்கின்றனர். இது ராகு, கேதுவிற்குரிய பரிகாரஸ்தலங்களில் ஒன்றாகும்.

  தல வரலாறு:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புத்தகை என்ற மகாமுனிவர் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். சில நாட்களில் அவரைசுற்றி புற்றுகள் சூழ்ந்தது. அவரது கை மட்டும் இந்த சிவனை (ஸ்ரீ பரமசுந்தரர்) நோக்கியே இருந்தது. ஓம் நமச்சிவாய என்ற ஒலி மட்டும்வந்ததாகவும், அவருடைய தல வலிமையை மெச்சிய சிவன் அவருக்கு தரிசனம் தந்து, இங்கு எழுந்தருளினார் என்றும் கூறப்படுகிறது. எம்பெருமான் இம்முனிவருக்கு காட்சி அளித்ததால் இந்த ஊர் திருப்புத்தகை என்றும் நாளடைவில் புத்தகளூர் என மருவி வழங்கப்படுகிறது. இதற்குச் சான்றாக இன்றும் இந்த ஊரில் நிறைய பாம்புகளும், பாம்பு புற்றுகளும் காணப்படுகின்றன. பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை.

 திருவிழா:

சிவராத்திரி

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* புத்தர் - அன்பான ஒரு வார்த்தை போதும்!
* ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.

* அறிவோடும், விழிப்போடும் வாழ்க்கை நடத்துபவர்கள் ஞானம் என்னும் மேலான நிலையை அடைவர். அவர்கள் செல்லும் வழியை எமனால் கூட அறிய முடியாது.

வினாவினாடி :

வினா - சீனக்குடியரசின் முதல் ஜனாதிபதி யார் ?

விடை - டாக்டர் சன் யாட்சென்.

இதையும் படிங்க :

சாதனை பெண் சாந்தி சேத்தி!

E_1304051867.jpeg

பெண்கள் எதையும் சாதிப்பர் என்று சொன்னாலும், இந்தியாவை பொறுத்தவரை இன்னமும் கடற்படையில் பணிபுரிய பெண்கள் முன்வருவதில்லை. அதற்கான படிப்பில் சேரவே இன்னும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பது வருத்தமான விஷயம்.

இந்நிலையில், ஒரு பெண் பல வருடங்களுக்கு முன் கடல்சார் கல்வியை விரும்பி படித்ததுடன், படிப்படியாக முன்னேறி, அந்தத் துறை ஆண்களே வியக்கும்படியாக தலைமை தளபதியாக உயர்ந்து இருக்கிறார்.
அதுவும் எங்கே தெரியுமா? உலகிலேயே சர்வ வல்லமையும், நவீனமும் மிகுந்த அமெரிக்க டிகோட்டர் போர்க்கப்பலின் கமாண்டராக பதவி ஏற்றுள்ளார்.

அமெரிக்க போர்க்கப்பலின் முதல் பெண் கமாண்டர் என்ற புகழுக்கு சொந்தக்காரரான இவரால், நமக்கு பெரிய பெருமை உள்ளது. ஆம்... இவர் ஒரு இந்திய வம்சாவளி!

பெயர்: சாந்தி சேத்தி. இந்திய தந்தைக்கும், அமெரிக்க தாய்க்கும் பிறந்தவரான இவர், பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் அமெரிக்கா வில்தான். 93ம் ஆண்டு படிப்பை முடித்தவர், படித்த கையோடு கடற்படையில் ஓரு அதிகாரியாக உள்ளே நுழைந்தார்.

மாதக்கணக்கில் குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டும், பல நாட்கள் தண்ணீர் பிரதேசத்தில்தான் மிதக்க வேண்டும், ஒரு நாளைக்கு ஒரு நாடு, ஒவ்வொரு நாட்டிலும் ஓவ்வொரு தட்பவெட்ப சூழ்நிலை, நினைத்த நேரத்தில் வீட்டிற்கு போக முடியாது, உடம்பை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, கடல் துறையில்வேலை பார்க்க என்னவெல்லாம் நெகட்டிவாக சொல்வரோ, அதை எல்லாம் பாசிட்டிவாக எடுத்து, கடலே தன் வாழ்க்கை என, கடுமையாக உழைத்ததன் எதிரொலியாக, இன்று இவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்துள்ளார்.

போர் புரியவும், அமைதி ஏற்படுத்தவும், மீட்பு பணிக்காகவும் பல நாடுகளுக்கு சென்ற அனுபவமும் இவருக்கு நிறையவே உண்டு.

சாந்தி சேத்தி கமாண்டராக இருக்கும் போர்க்கப்பலில், 278 வீரர்கள் உள்ளனர். இதில், 45 பேர் பெண்கள்; அவர்களில், எட்டு பேர் உயரதிகாரிகள். சமீபத்தில் நட்பு ரீதியாக தன் அணியோடு கப்பலில் இந்திய பயணம் மேற்கொண்டவருக்கு, சென்னை ரொம்பவே பிடித்துப் போனது. முதல் முறையாக வந்த போதிலும், சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல விரும்பாமல், சமூக சேவை மையங்களுக்கு சென்று, நிறைய உதவிகள் செய்துவிட்டு வந்தார்.

கமாண்டருக்கே உரிய மிடுக்கோடு கம்பீரமாக மூன்று நாட்களும் சென்னையில் பம்பரமாக சுற்றி வந்தார். "என்ன வயது?' என்ற கேள்விக்கு, "உழைக்கிற வயது' என்று கூறி, புன்னகைத்தார். பொதுவாக, தன்னைப் பற்றி சொல்வதை விட, தன் அணியைப் பற்றி சொல்வதிலும், அந்த அணியின் பணியைப் பற்றி விவரிப்பதிலுமே அதிக ஆர்வமாக உள்ளார்.

இந்திய வம்சவாளிப் பெண் சாந்தி சேத்தியை முன்மாதிரியாகக் கொண்டு, அமெரிக்க பெண்கள் பலர் கடல்சார் கல்வியில் புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர். விரைவில் கடல் களத்தையும், வளத்தையும் பெற நம்மூர் பெண்களும் முன் வருவரா! ***

எஸ்.முருகராஜ்



நன்றி - தின மலர், தட்ஸ்தமிழ், தின மணி, சமாச்சார்.
--

                                                              
                 




--

                                                              
                 














--

                                                              
                 






--

                                                              
                 

No comments:

Post a Comment