Tuesday, May 3, 2011

இன்றைய செய்திகள் - மே, 03 , 2011

முக்கியச் செய்தி :

அமெரிக்க அதிரடிப்படை நள்ளிரவில் நடத்திய துணிகர
வேட்டை.

large_234854.jpg


இஸ்லாமாபாத் / வாஷிங்டன்:சர்வதேச பயங்கரவாதியும், அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஒசாமா பின்லாடன், அமெரிக்க அதிரடிப்படை நள்ளிரவில் நடத்திய துணிகர வேட்டையில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்மூலம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அப்போதாபாத்தில், அவர் பல ஆண்டுகளாக பதுங்கியிருந்தது அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர கட்டடங்கள், கடந்த 2001ம் ஆண்டு செப்., 11ம் தேதி, விமானங்கள் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் உட்பட உலக நாடுகள் பலவற்றில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன். அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவரான இவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படைகள் தேடி வந்தன. இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 115 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில், அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்திய பின், அங்கிருந்து தப்பிய ஒசாமா, பாக்., - ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பழங்குடியின பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இதனால், அப்பகுதியில் முகாமிட்டு அமெரிக்கப் படைகள் தீவிரமாக தேடி வந்தன. இந்த தேடுதல் வேட்டையில் பலன் கிடைக்கவில்லை. இருந்தாலும், ஒசாமா எங்கிருக்கிறார் என்பதை கண்டறியும் பணியில் அமெரிக்கப் படையினரும், அந்நாட்டு உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணையில், பயங்கரவாதி ஒசாமாவுக்கு செய்திகளைக் கொண்டு செல்லும் வேலையாட்கள் மூலமாக, அவர் மறைந்திருக்கும் இடம் கண்டறியப்பட்டது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீ., தொலைவில் உள்ள அப்போதாபாத்தில், பாகிஸ்தான் காகுல் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இருந்து சில அடிகள் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தெரிவித்த, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள், ஒசாமாவை கொல்வதற்கு அனுமதி கேட்டனர். அவரும் தீவிரமாக விசாரித்த பின், அனுமதி வழங்கினார்.
சுட்டுக் கொலை: இதையடுத்து, ஒசாமாவை கொல்வதற்கான திட்டம் தயாரானது. அவர் தங்கியிருந்த வீட்டிற்கு நேற்று அதிகாலை 1.30 மணிக்கு, நான்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய, அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையினர் 25 பேர், தங்களின் அதிரடியை துவக்கினர். அப்போது, ஒசாமாவின் பாதுகாப்புக்கு நின்றிருந்தவர்களுக்கும், அமெரிக்கப் படைவீரர்களுக்கும் இடையே சண்டை நடந்தது. 40 நிமிடங்கள் நீடித்த சண்டையில், ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார். ஒசாமா கொல்லப்பட்டதன் மூலம், அமெரிக்க ராணுவத்தின் பத்து ஆண்டு கால தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது. ஒசாமாவுடன் அவருக்கு செய்திகளைக் கொண்டு செல்லும் அவரின் மகனும், மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட மற்றொரு பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வீட்டில் இருந்த மற்ற எந்த பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதிப்பு இல்லை.

ஒசாமா தங்கியிருந்த வீட்டை, அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்த போது, தனது பாதுகாவலர்களுடன் சேர்ந்து ஒசாமாவும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். ஒசாமா கொல்லப்பட்ட பின், அவரின் உடலை அமெரிக்கப் படையினர் கைப்பற்றினர். இந்தச் சண்டையின் போது, அமெரிக்கப் படையினர் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று சேதம் அடைந்தது. அதை அமெரிக்கப் படையினர் வெடிமருந்துகள் மூலம் அழித்தனர். சண்டை நடந்து ஒசாமா கொல்லப்பட்டு நான்கு மணி நேரத்திற்குப் பின், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டார்.

பயங்கரவாதி ஒசாமா கொல்லப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியை சுற்றிவளைத்த பாகிஸ்தான் ராணுவத்தினர், ஒவ்வொரு வீடாக தேடுதல் வேட்டை நடத்தினர். ஒசாமா பதுங்கியிருந்த வீடு, வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது. வீட்டை சுற்றிலும் ஏழு அடி உயரத்திற்கு சுற்றுச்சுவரும், அதன்மீது மின்சார ஒயரும் பொருத்தப்பட்டிருந்தது என, பாகிஸ்தான் செய்தி சேனல்கள் கூறியுள்ளன.

பாகிஸ்தான் காகுல் ராணுவ பயிற்சிக் கல்லூரி அருகேயுள்ள இந்த வீட்டில், ஒசாமா பதுங்கியிருப்பதாக, அமெரிக்கப் படையினருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் கிடைத்துள்ளது. அது முதல் அந்த வீட்டை அமெரிக்க உளவு நிறுவனத்தினர் கண்காணித்து வந்துள்ளனர். ஒசாமா தங்கியிருந்த வீட்டில் தொலைபேசி இணைப்பு இல்லை. "டிவி'யும் கிடையாது. வீட்டில் உள்ளவர்கள் பயன்படுத்திய குப்பைகள் எல்லாம் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளன.

வீட்டின் ஜன்னல்கள் எல்லாம் பெரிய அளவில் இருந்தன. சில வழிகள் மூலமாகவே மட்டுமே அந்த வீட்டிற்குள் செல்ல முடியும். சிலர் மறைந்திருப்பதற்காக கட்டப்பட்டுள்ளது போலவே அந்த வீடு உள்ளது. பாகிஸ்தானின் கைபர் - பக்துங்வா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த வீட்டை முதலில் ஆக்கிரமித்து, அதன்பின் ஒசாமா பதுங்கியிருக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது.பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் உரிய நீதியை அமெரிக்க மக்களுக்கு வழங்கியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். உலகம் முழுவதும் இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகச் செய்தி மலர் :

* பாக். மவுனம் சாதிக்கிறது : எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இஸ்லாமாபாத்: அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் ‌மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அந்நாட்டு பிரதமர் யுசுப்ராஸா கிலானி தெரிவித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லாடன் அமெரிக்கப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து அதிபர் ஒபாமா , பாக். பிரதமர் கிலானிக்க தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். பின்லாடன் உலகில் எங்கிருந்தாலும் ஒழித்துகட்டுவது தான் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதன்படி தனது நோக்கத்தினை நிறை வேற்றியுள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மவுனம் சாதித்து வந்தது. அதுவும் பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய தேசிய கட்சிகள் ஒசாமா ‌சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. எனினும் முக்கிய எதிர்க்கட்சித்தலைவரான ஷபாஸ் ஷெரீப் கூறுகையில், இதுபாகிஸ்தான் இறையான்மைக்கு எதிரானது. அமெரிக்காவிற்கு ,பாகிஸ்தான் எப்படி உதவி செய்தது என்பது தெரியவில்ல‌ை என்றார். பின்லாடனை ஒழித்ததால் மட்டு‌ம் பயங்கரவாதத்தினை ஒழித்துவிட்டதாக கருதமுடியாது என தக்ரீ்இ-இன்சாப் கட்சியின் தலைவரும், மாஜி கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான். ஆனால் பிரதமர் யுசுப்ராஸாகிலானி கூறுகையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என்று மட்டும் கூறியுள்ளார். இதனால் கிலானி மவுனம் சாதித்து வருகிறார்

* ஒசாமா கொல்லப்பட்டது உளவு நடவடிக்கை: பாகிஸ்தான

இஸ்லாமாபாத், மே 2: ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது அமெரிக்காவின் உளவுத்துறை சார்ந்த நடவடிக்கை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

 பின் லேடன் கொல்லப்பட்டதால் பயங்கரவாதிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் கூறியிருக்கிறது.

 தங்களது ராணுவ மையத்துக்கு அருகிலேயே ஒசாமா கொல்லப்பட்டிருப்பதால், பாகிஸ்தான் கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.

 "அமெரிக்காவின் உளவு நடவடிக்கையில் ஒசாமா கொல்லப்பட்டார்' என்று பாகிஸ்தானின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெமீனா ஜன்ஜுவா கூறியுள்ளார். உலகில் எந்த மூலையில் ஒசாமா இருந்தாலும் அவரைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்கிற அமெரிக்கக் கொள்கையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.

 எந்த நாட்டுக்கும் எதிராகத் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் பாகிஸ்தானின் கொள்கை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பின் லேடன் கொல்லப்பட்டது குறித்து அதிபர் ஜர்தாரியிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் பேசியதாகவும் ஜன்ஜுவா கூறியுள்ளார்.

 அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடனும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் செய்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

* ஒசாமாவை ரகசியமாக சுட்டுக் கொன்றது எப்படி? அமெரிக்க அதிகாரி விளக்கம்

35114dbf1fd40eeaf.jpg


வாஷிங்டன், மே 2: ஒசாமாவை சுட்டுக் கொன்றது எப்படி? என்பது பற்றி அமெரிக்க அதிகாரி விளக்கம் அளித்தார்.

 பாகிஸ்தானில் பதுங்கி இருந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றார்கள். ஒசாமாவை சுட்டுக் கொன்றது எப்படி? என்பது குறித்து அமெரிக்க உயர் அதிகாரி திங்கள்கிழமை விளக்கம் அளித்தார். அவர் கூறியது:

 பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் பயங்கரவாதி ஒசாமா பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு மிக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலை உறுதி செய்த பிறகு பின்லேடனை கொல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரகசிய திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டம் ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது. அவ்வளவு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ÷

 இதுபற்றி பாகிஸ்தான் உள்பட எந்த நாட்டுக்கும் தெரிவிக்கப்படவில்லை. ஒசாமாவை கொல்ல 2 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. ஒசாமாவுடன் 3 ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனைத்து நடவடிக்கைகளும் 40 நிமிடத்தில் முடிந்து விட்டன.

 இந்த நடவடிக்கையின்போது ஒரு ஹெலிகாப்டர் இயந்திர கோளாறு ஏற்பட்டு சேதம் அடைந்தது. ஆனால் அமெரிக்க படையினர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றார்.

* அமெரிக்காவில் விழாக்கோலம்!

usa.jpg

நியூயார்க், மே 2: சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஒவ்வொரு அமெரிக்கரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

 பின்லேடன் மரண செய்தி வெளியானதும் அமெரிக்காவே விழாக்கோலம் பூண்டது. நியூயார்க், வாஷிங்டன் உள்பட நாட்டின் முக்கியமான நகரங்களில் மக்கள் பொதுவான இடங்களில் கூடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் தங்களது நாட்டு தேசியக் கொடியை தலைக்குமேல் உயர்த்தி அசைத்து வெற்றியை பறைசாற்றினர்.

 நியூயார்க்கில் பின்லேடனால் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் "கிரவுண்ட் ஜீரோ' கட்டடம் அருகே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்கள் விண் அதிரும் வகையில் கோஷமிட்டனர்.

 அமெரிக்காவைத் தீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் தப்பமுடியாது என்பதை வெளிப்படுத்தும் வகையில், "நம்மால் முடியும், நம்மால் முடியும்' என்ற உரத்த குரலே எங்குபார்த்தாலும் பிரதிபலித்தது. இந்தக் கொண்டாட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை யாரும் பங்கேற்கத் தவறவில்லை.

 பின்லேடனின் சகாப்தம் முடிந்த செய்தி செவியை எட்டியதுமே பலர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இதுபோன்ற இன்பத் தருணம் வரும் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினர். இன்னும் சிலர், பின்லேடன் கதை முடிக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணம் எங்கள் வாழ்வில் முக்கியமானது என்று பெருமிதமாகத் தெரிவித்தனர்.

 மேலும் சிலர், பின்லேடன் கொல்லப்பட்டதை கோலாகலமாகக் கொண்டாடும் இந்த இனிய நேரத்தில் அவரது கொடிய கரங்களின் தீண்டுதலால் இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறினர்.

 பின்லேடனை கொன்றதால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி அவ்வளவு எளிதில் அமெரிக்கர்களிடம் இருந்து அகன்றுவிடாது. அவர்களது கொண்டாட்டமும் அவ்வளவு விரைவில் முடிவுக்கு வந்துவிடாது என்றே அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

* அணு மின் கொள்கையில் மாற்றமில்லை: சீனா திட்டவட்டம்

ஹாங்காங், மே 2: சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் அணு மின்சாரம் தவிர்க்க முடியாத சக்தி என்று சீனா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஜப்பானின் புகுஷிமா தீவில் உள்ள அணு மின் நிலையத்தில் சுனாமியால் ஏற்பட்ட விபத்தையடுத்து, சீனா தனது அணு மின் கொள்கையை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக, பொருளாதார வளர்ச்சியில் அணு மின்சாரம் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 இது குறித்து சீனாவின் பெட்ரோலியம் எண்டர்பிரைசஸ் சங்கத்தின் துணைத் தலைவர் பெங் யுவான்ùஸங் கூறியது:

 அணு மின் கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய நிலை சீனாவுக்கு இப்போதைக்கு ஏற்படவில்லை. ஏற்கெனவே இத்தகைய தொழில்நுட்பத்தில் சீனா முன்னோடியாக விளங்குகிறது. இருப்பினும் ஜப்பானில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டிலுள்ள அனைத்து அணு மின் நிலையங்களின் நிலை குறித்து மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அணுமின் கொள்கையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் யோசனை அரசுக்கு இல்லை. இதற்காக அரசின் தேசிய மின் கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்படாது என்று கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் அணு மின் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தேசிய எரிசக்தி கொள்கையின் இலக்கை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதன்படி 2011 முதல் 2015-ம் ஆண்டு வரையான காலத்தில் 40 அணு மின் நிலையங்களை புதிதாக அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் மின் தேவையைப் பூர்த்தி செய்ய இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மரபு சாரா எரிசக்திகளான காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய மின்னாற்றல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து சூழல் காக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் அதிக அளவில் நீர் மின் நிலையங்களும் உள்ளன. இனி நீர் மின் நிலையங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற நிலையில் மாற்று வழியாக அணு மின்சாரத்தை சீனா பெரிதும் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* நேட்டோ படைகள் தாக்குதல்; கடாஃபியின் மகன், பேரன்கள் சாவு

netto.jpg

திரிபோலி, மே 1: நேட்டோ படைகளின் வான்வழி தாக்குதலில் லிபிய அதிபர் மம்மர் கடாஃபியின் இளைய மகன், பேரன்கள் கொல்லப்பட்டனர்.

 சண்டை நிறுத்தத்துக்கும், பேச்சுவார்த்தைக்கும் கடாஃபி முன்வந்துபோதும், அதை நிராகரித்துவிட்டு நேட்டோ படைகள் சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளன.

 லிபியாவில் அதிபர் கடாஃபி பதவி விலகக் கோரி கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக மேலை நாடுகளின் நேட்டோ படைகள் களமிறங்கி கடாஃபியின் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

 இந்த நிலையில் திரிபோலியில் உள்ள மகன் சயீப் அல்-அராபின் வீட்டில் கடாபி, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தங்கியிருந்துள்ளனர். இதையறிந்த நேட்டோ படைகள் போர் விமானத்தின் மூலம் ஏவுகணையை வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் கடாஃபியின் 29 வயது மகன் அல்-அராப், 12 வயதுக்குட்பட்ட கடாபியின் 3 பேரன்கள் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

 இத்தாக்குதலில் இருந்து கடாஃபியும், அவரது மனைவியும் காயமின்றி தப்பினர். நலமோடு இருக்கிறார்கள். அதேசமயம் வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் காயமடைந்துள்ளனர் என லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் மெüஸô இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

 இது திட்டமிட்ட தாக்குதலாகும். இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது. எந்தவொரு கொள்கையும் இதை அனுமதிக்காது. நேட்டோ படைகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறோம். இப்போது லிபியாவில் என்ன நடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். லிபிய மக்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 கடாஃபியின் மகன் சயீப் அல்-அராப் மற்றும் 3 பேரன்கள் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று கூறிய இப்ராஹிம், குழந்தைகளின் பெயர்களை தெரிவிக்கவில்லை.

வான்வழி தாக்குதல் நடத்தியதை உறுதி செய்துள்ள நேட்டோ படைகள், தாக்குதலில் இறந்தவர்கள் குறித்து வெளியான தகவலை உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை.


தேசியச் செய்தி மலர் :

* ஹஸôரேவுக்கு எதிரான மனு: தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

 புதுதில்லி, மே.2:லோக்பால் மசோதா வரைவுக்குழுவிலிருந்து அண்ணா ஹஸôரேவை நீக்கக் கோரும் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

 தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியது. ஜனசக்தி என்ற அமைப்பு, அண்ணா ஹஸôரேவின் ஹிந்து சுவராஜ் டிரஸ்ட் என்ற அமைப்பின் நிர்வாகத்தில் முறைகேடு நடந்துள்ளதால் அவரை லோக்பால் வரைவுக் குழுவிலிருந்து நீக்கவேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தது. 2003-ல் இந்த முறைகேடு நடந்ததாகவும் அது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையில் இந்த முறைகேட்டை உறுதி செய்துள்ளதாகவும் மனுவில் கூறியிருந்தது.

 மனுவை விசாரித்த நீதிபதிகள், வரைவுக்குழுவை அமைப்பது என்பது நிர்வாகத்துறையின் சிறப்புரிமையாகும். அதில் நீதித்துறை தலையிடமுடியாது என்பதால் ஹஸôரேவை நீக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறினர்.

 மேலும் இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியது: மசோதா இயற்றுவதற்கான வரைவுக்குழுவை அமைக்க சட்டம் மற்றும் நீதித்துறை தீர்மானம் இயற்றியுள்ளது. இது நிர்வாகத் துறையின் உள்விஷயம். இதில் நீதித் துறை தலையிட முடியாது. வரைவுக்குழுவில் யாரை நியமனம் செய்வதென்பது பற்றிய விஷயம் நீதித்துறையின் மறு ஆய்விற்கு உட்படாதது. ஒரு மசோதா சட்டமாக்கப்பட்ட பின்னரே நீதித்துறையின் மறு ஆய்விற்கு உட்படும் என அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது. மசோதா உருவாகின்ற நிலையில் அதை மறு ஆய்விற்கு உட்படுத்த இயலாது. மேலும் இந்த வழக்கில் எந்தவிதப் பொதுநலமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஆதலால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினர்.

 முன்னதாக மத்திய அரசும் ஹஸôரேவை வரைவுக்குழுவில் நியமித்தது தங்களின் சிறப்புரிமையாகும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

* திபெத் மடாலயத்தில் சீனா கெடுபிடி: இந்திய அரசிடம் முறையீடு

புதுதில்லி, மே 2: திபெத்தில் உள்ள புத்த மடாலயங்களைக் காலி செய்யக்கூறி சீன அரசு கெடுபிடி செய்வதாகக் கூறி இந்திய அரசிடம் முறையிட திபெத்தியர்கள் தில்லிக்கு அமைதி பாதயாத்திரை வந்துள்ளனர்.

 தலாய்லாமா தலைமையிலான திபெத்தியர்கள் தர்மசாலாவில் தங்கியுள்ளனர். இவர்களில் ஒருசாரார் அமைதி பாதயாத்திரையாக தில்லி வந்து ஜந்தர்மந்தரில் தர்ணா செய்தனர். பின்னர் பிரதமரிடம் மனு அளித்தனர்.

 இது பற்றி திபெத்தை சேர்ந்த பெண் எம்.பி.யான தவாஷிரிங்கிடம் விவரம் கேட்டபோது அவர் கூறியது:

 திபெத்தின் தென்பகுதியில் உள்ள நிகாபா என்ற இடத்தில் கிர்த்தி என்ற புத்த மடாலயம் உள்ளது. இங்கு 2500 புத்த பிக்குகள் தங்கியுள்ளனர்.

 சமீபத்தில் சீன அதிகாரிகள் இந்த மடாலயத்திற்குள் அத்துமீறி புகுந்து அங்கிருந்தவர்களை வெளியேற்றியதுடன் பலரை காரணமின்றி கைது செய்தனர். இந்த மடாலயம்தான் திபெத்தில் உள்ள பெரிய புத்த மடாலயம். இதில் மட்டுமல்லாமல் மற்ற மடாலயங்களிலும் இதுபோன்ற கெடுபிடி நடவடிக்கைகளில் சீன அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.

 2008-ம் ஆண்டு சீன அரசுக்கு எதிராக திபெத்தியர்கள் கிளர்ந்தெழுந்தபோது இந்த மடாலயத்தைச் சேர்ந்த புத்தபிக்குகளும் அதில் கலந்து கொண்டனர். அப்போது 20 திபெத்தியர்களை கொன்றதுடன் ஏராளமானோரை சீன ராணுவம் கைது செய்தது.

 சமீபத்தில் கிர்தி மடாலயத்தைச் சேர்ந்த புந்த்சுக் என்ற புத்தபிக்கு திபெத்தியர்களுக்கு சுதந்திரம் கேட்டு தீக்குளித்து உயிர்நீத்தார்.

அதிலிருந்து இந்த மடாலயத்தை காலிசெய்யவதற்காக சீன ராணுவம் கெடுபிடி செய்யத்தொடங்கிவிட்டது. எனவே, இந்த விஷயத்தில் இந்திய அரசு மற்றும் ஐ.நா. தலையிட வேண்டும் என வேண்டுகோள்விடுக்க முடிவு செய்தோம். இதையடுத்து தர்மசாலாவிலிருந்து அமைதியான பாதயாத்திரை மேற்கொண்டு தில்லி வந்தோம்.

 நானும் மற்றொரு எம்.பி.யான தொனாக் என்பவரும் தலைமைவகித்து வழிநடத்திய இந்த பாதயாத்திரையில் ஏராளமான புத்தபிக்குகள் பங்கேற்றனர்.

 தர்ணாவை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம் என்றார்.

* நம்மாலும் முடியும்: இந்திய விமானப் படை

புதுதில்லி, மே 2: ஒசாமா பின் லேடனை கண்டுபிடித்து அமெரிக்க கமாண்டோ படை தாக்குதல் நடத்தியது போல இந்தியாவாலும் தாக்குதல் நடத்த முடியும் என்று இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி பி.வி.நாயக் கூறியுள்ளார்.

 தில்லியில் திங்கள்கிழமை நடந்த பி.சி.லால் நினைவு கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.எனினும் அதுபோன்ற தாக்குதல்கள் நடத்துவதற்கு இந்தியாவிடம் எந்த மாதிரியான வசதிகள் இருக்கின்றன என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

 ஒசாமா கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஒசாமா மிகப்பெரிய பயங்கரவாதத் குழுவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் கொல்லப்பட்டிருப்பதால், அந்தக் குழு பதில் தாக்குதல் நடத்தக்கூடும். அதனால் ஒவ்வொருவரும் தனது பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவும் அதையே செய்திருக்கிறது' என்றார்.

* பூடானில் தரையில் கிடந்தது டோர்ஜி சென்ற ஹெலிகாப்டர் விழுந்ததா?
ஷில்லாங், மே. 2: அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு பயணம் செய்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சுகோய் 30 ரக போர் விமானங்கள் பிடித்த படத்தில் பூடான் பகுதியில் விமானம் அல்லது ஹெலிகாப்டர் விழுந்து கிடப்பது போன்று ஒரு படம் பதிவாகி உள்ளதாக கிழக்கு மண்டல ஏர் மார்ஷல் கே.கே. நோவார் திங்கள்கிழமை தெரிவித்தார்.

 அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு கடந்த சனிக்கிழமை தவாங்கில் இருந்து இடாநகருக்கு பவன் ஹான்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். அவருடன் விமானிகள் இருவர் உள்பட மொத்தம் 4 பேர் அந்த ஹெலிகாப்டரில் இருந்தனர். புறப்பட்ட 20 நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர் அனைத்து தகவல் தொடர்பையும் இழந்தது.

 இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்குமே என்று சந்தேகம் எழுந்தது. ராணுவம், விமானப் படை, இந்திய திபெத் எல்லைக் காவல் படை ஆகியவை தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

 இந்நிலையில் திங்கள்கிழமை இது குறித்துக் கூறிய கே.கே. நோவார், "அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு பயணம் செய்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் சுகோய் 30 ரக போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இஸ்ரோவும் செயற்கை கோள் மூலம் படம் பிடிக்கும் பணியை மேற்கொண்டது

அவை பிடித்த படங்களில் ஹெலிகாப்டர் விழுந்துகிடப்பது போன்ற படம் பதிவாகியுள்ளது. இதை வைத்து ஓரளவு வியூகத்துக்கு வர முடிந்துள்ளது. 3 இடங்களில் ஏதெனும் ஒன்றில் ஹெலிகாப்டர் விழுந்து இருக்கலாம் என்று கணித்துள்ளோம்.

 இதை வைத்து மேற்கு கமெங் மாவட்டத்தின் நகாஜன் பகுதி, பூட்டானில் உள்ள தஷி யங்ஷி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வானிலை சீராக இருக்குமானால் செவ்வாய்க்கிழமை 6 ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி மேற்கொள்ளப்படும்' என்றார். பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இப்போது 35 குழுக்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதில் ராணுவம் 26 குழுக்களாகவும், இந்திய திபெத் எல்லைக் காவல் படை 9 குழுக்களாகவும் பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன' என்றார்.

* எண்டோ சல்பானுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுதில்லி, மே 2: எண்டோ சல்பான் பூச்சிக் கொல்லி மருந்துக்கு ஏன் தடைவிதிக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 மனிதர்களை முடமாக்கும் கொடூர பூச்சிக் கொல்லி மருந்தான எண்டோ சல்பானுக்குத் தடை விதிக்க உத்தரவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு அமைப்பான இந்திய ஜனநாயக இளைஞர் பேரவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் எண்டோ சல்பான் பூச்சிக் கொல்லி மருந்து கொடூரத் தன்மையுடையது. மனிதர்களை முடமாக்கக்கூடியது. இதனால் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது எண்டோ சல்பான் என்று பல கணக்கெடுப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.

 எனவே இந்த கொடிய பூச்சிக் கொல்லி மருந்துக்குத் தடை விதிக்க வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது.

அந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன் திங்கள்கிழமை விசாரணைக்குவந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், எண்டோ சல்பான் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

 எண்டோ சல்பான் பூச்சிக் கொல்லி மருந்தால் கேரளம், கர்நாடக மாநிலங்களில் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கை,கால்கள் ஊனமடைதல், புத்திசுவாதீனம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பூச்சிக் கொல்லிக்குத் தடைவிதிக்கவேண்டும் எனக் கோரி கேரள முதல்வர் அச்சுதானந்தன் அண்மையில் உண்ணாவிரதம் இருந்தார். இதைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் ஒருநாள் முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* ஒரிசாவில் இரும்புத் தொழிற்சாலை அமைக்க பாஸ்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி

புதுதில்லி, மே 2: ஒரிசா மாநிலத்தில் இரும்புத் தொழிற்சாலை அமைக்க பாஸ்கோ நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

 ஒரிசா மாநிலம் ஜகத்சிங்பூரில் மிகப் பெரிய இரும்புத் தொழிற்சாலை அமைக்க தென் கொரியா நாட்டைச் சேர்ந்த பாஸ்கோ நிறுவனம் அம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. சுமார் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் துவங்கப்படவுள்ள இந்த தொழிற்சாலைக்கு 2005-ம் ஆண்டிலேயே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதற்காக 1253 ஹெக்டேர் வன நிலத்தை ஒதுக்கவும் ஒரிசா அரசு முடிவு செய்திருந்தது. இத்திட்டத்திற்கு ஒப்புதல் பெற மத்தியஅரசுக்கு அனுப்பியபோது ஒப்புதல் அளிக்க மத்தியஅரசு மறுத்துவிட்டது. வனப்பகுதியை அழித்து தொழிற்சாலை அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று காரணம் கூறி இத்தொழிற்சாலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது.

 இந்நிலையில் ஒப்பந்தம் செய்து கொண்ட 5 ஆண்டுகளுக்குள் திட்டத்தை செயல்படுத்தவேண்டும். ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் ஒப்பந்தம் கடந்த ஆண்டே காலாவதியாகிவிட்டது. இந்நிலையில் இத்திட்டத்துக்கு மத்திய அரசு இப்போது சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஒரிசாவில் பாஸ்கோ நிறுவனம் அமைக்கும் இரும்புத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கச்சா இரும்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்பது உள்பட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டாலும், புதிதாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இதற்கான முயற்சிகளை பாஸ்கோ நிறுவனமும் ஒரிசா அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை பாஸ்கோ நிறுவனம் வரவேற்றுள்ளது. ஒரிசா அரசுடன் விரைவில் மீண்டும் புதிதாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என அந்நிறுவனத் துணைத் தலைவர் விகாஸ் சரண் தெரிவித்தார். ஆண்டுக்கு ஒரு கோடியே 20 லட்சம் டன் இரும்பு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த தொழிற்சாலை அமையும் என்று அவர் தெரிவித்தார்.

* அமெரிக்கத் தூதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

புதுதில்லி, மே.2: ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதையடுத்து தில்லியில் அமெரிக்கத் தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 பாகிஸ்தானில் அல் கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் அமெரிக்கப் படைகளால் திங்கள்கிழமை அதிகாலை கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து தில்லி சாணக்கியபுரியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸôர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு, ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அருகிலுள்ள மற்ற தூதரகப் பகுதிகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 பின் லேடன் கொல்லப்பட்டதையடுத்து, பிற நாடுகளிலுள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானிலுள்ள அமெரிக்க பிரஜைகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலச் செய்தி மலர் :

* சென்னையில் 23 விமானங்கள் ரத்து
ஆலந்தூர், மே 2: ஏர் இந்தியா விமானிகள் 6-வது நாளாக வேலை நிறுத்தம் செய்வதால் சென்னையில் திங்கள்கிழமை 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

 ஏர் இந்தியா நிறுவன விமானிகள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

 வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து சென்னையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 சென்னையில் இருந்து விமானங்கள் கொழும்பு, சார்ஜா, துபாய்,மஸ்கட், குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்களும், ஹைதராபாத், மதுரை, கொல்கத்தா, பெங்களூர், மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பாதிக்கபட்டனர்.

* தீண்டாமை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை: ஐ.ஜி. எச்சரிக்கை

lgsecur.jpg

திருமங்கலம், மே 2: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 54 பேரை, போலீஸôர் கைதுசெய்து திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 இச்சம்பவத்தையடுத்து தீண்டாமை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி.எச்சரிக்கைவிடுத்தார்.

 திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது வில்லூர் கிராமம். இவ்வூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

 இதையடுத்து, போலீஸôர் தடியடி நடத்தினர். ஆனால், கலவரம் நீடித்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், செந்தில் மற்றும் பழனி ஆகிய இருவர் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் மாவட்ட எஸ்.பி. அஸ்ராகர்க், பேரையூர் டி.எஸ்.பி. அன்வர்ஷா ஆகியோரது வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரக் கும்பல் கற்களை வீசித் தாக்கியதில் 15-க்கும் மேற்பட்ட போலீஸôரும் காயமடைந்தனர். இதுகுறித்து ஐ.ஜி. மஞ்சுநாதா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், வில்லூர் கிழக்குத் தெருவில் மோட்டார் மோட்டார் சைக்கிளில் சென்ற தங்கபாண்டியன் என்பவரிடமிருந்து சிலர் பைக்கை பறித்துக் கொண்டனராம்.

 இதுதொடர்பாக, 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு, ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 அவர்களுடன் எஸ்.பி. அஸ்ராகர்க் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிந்தபின், இன்னொரு பிரிவினரது வீடுகள் மீது கல் வீசப்பட்டுள்ளது. மேலும், வில்லூர் காவல் நிலையத்துக்கு ஆயுதங்களுடன் திரண்டு வந்த சிலர், திடீர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். எஸ்.பி. மற்றும் பேரையூர் டி.எஸ்.பி. ஆகியோரது கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து கலவரக் கும்பலைக் கலைக்க தடியடி,கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கலவரக்காரர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டு 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது உசிலம்பட்டி கோட்டாட்சியர் புகழேந்தி, திருமங்கலம் வட்டாட்சியர் பரமேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வில்லூரில் முகாமிட்டுள்ளனர். 5 மாவட்டங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட போலீஸôர் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 இரட்டை டம்ளர் முறை, வாகனங்களில் குறிப்பிட்ட தெருவுக்குள் செல்லக் கூடாது என யாராவது தீண்டாமைக் கொடுமையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் சாதி, சமய, பேதமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றார் ஐ.ஜி.

 திண்டுக்கல் டி.ஐ.ஜி. சந்தீப் மாத்தூர்,எஸ்.பி. அஸ்ராகர்க், கமிஷனர் கண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

* பார்வையற்ற மாணவர்களுக்கான பி.எட். ஒலி பாடப் புத்தகங்கள்

சென்னை, மே 2: பார்வையற்ற மாணவர்கள் கேட்டு படிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பி.எட். ஒலி (ஆடியோ) பாடப்புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 நேத்ரோதயா தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த இந்த விழாவில், ஒலி புத்தகங்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மதிவாணன் வெளியிட, பார்வையற்ற மாணவர் ரமேஷ் பெற்றுக் கொண்டார்.

 விழாவில் நேத்ரோதயா நிறுவனர் கோவிந்தகிருஷ்ணன் பேசியது: பி.எட். படிக்கும் பார்வையற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒலி பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கிப் படிக்க சமுதாயக் கூடமும் துவங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு முழுக்க,முழுக்க இலவசமாக இவை அளிக்கப்படுகின்றன.

 மாணவர்கள் பயன்பெறும் வகையில் எங்கள் மையத்தில் கணினி மையம்,ஒலி நூலகம், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 150 பார்வையற்ற மாணவர்களுக்கு இலவச பி.எட். ஒலி புத்தகங்கள் வழங்கப்பட்டன என்றார்.

 பிர்லா குழுமம் சங்கர் நாராயணன், கமோடர் (ஓய்வு) வாசன், பின்னணி பாடகி சைந்தவி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

 மேலும் விவரங்களுக்கு: நேத்ரோதயா, 47/1, பிரிவு-2, நொளம்பூர், முகப்பேர் மேற்கு, சென்னை - 600 037. 044-2653 3680/2653 0712, 93828 96636 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

* எம்.எல். படிப்பில் மாற்றுத் திறனாளி சேர்க்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மே 2: மாற்றுத் திறனாளி மாணவியை எம்.எல். படிப்பில் சேர்க்க சட்டக் கல்வி இயக்குநரகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரைச் சேர்ந்த அனிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோதிமணி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

 அனிதா தேவி மனு விவரம்: நான் பி.எல். படிப்பு முடித்துள்ளேன். இந்து ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த நான் ஒரு மாற்றுத் திறனாளி. எம்.எல். படிப்புக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் என்னைத் தேர்வு செய்யவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதில் ஒரு சதவீதம் பார்வையற்ற திறனாளிகளுக்கும், ஒரு சதவீதம் காது கேளாத திறனாளிகளுக்கும், ஒரு சதவீதம் கை, கால் ஊனமுற்ற திறனாளிக்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும்.

 எம்.எல். படிப்பில் உள்ள 4 பிரிவுகளுக்கும் மொத்தம் 60 இடங்கள். இதில் மாற்றுத் திறனாளி இட ஒதுக்கீட்டின் படி 2 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. எனவே மாற்றுத் திறனாளி ஒதுக்கீட்டின் கீழ் என்னை எம்.எல். படிப்பில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

 மனுவை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சமூக நலத்துறைச் செயலர், சட்டத்துறைச் செயலர், சட்டக் கல்வி இயக்குநரகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் மாணவி அனிதாவை எம்.எல். படிப்பில் அனுமதிக்கவும் இடைக்காலமாக உத்தரவிட்டார். இந்த உத்தரவு இறுதித் தீர்ப்புக்கு உட்டப்பட்டது என்றும் நீதிபதி கூறினார்.

* திருவாங்கூர் ராஜ வைத்திய சாலை மீதான புகார்: 3 மாதத்தில் குற்றப் பத்திரிகை- உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மே 2: திருவாங்கூர் ராஜ வைத்திய சாலை மீதான மோசடி புகார் வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த லட்சமி சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்த மனு விவரம்: பத்திரிகைகளில் வந்த விளம்பரத்தைப் பார்த்து சோரியாசிஸ் நோய்க்கு சிகிச்சை பெறுவற்காக சென்னை மயிலாப்பூரில் திருவாங்கூர் ராஜவைத்திய சாலைக்குச் சென்றேன். அங்கு டாக்டர் விஜயகுமாரை அணுகியபோது எனது நோயைக் குணப்படுத்துவதாக உறுதியளித்தார். ஒரு முறை சிகிச்சை அளிக்க ரூ. 30 ஆயிரம் கட்டணம் வசூலித்தார். 2008 செப்டம்பர் முதல் 2009 ஜூலை வரை இதுபோன்ற சிகிச்சைபெற்றேன்.

 இந்த நிலையில், டாக்டர் விஜயகுமார் குண்டு தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அறியாமல் நான் வைத்தியசாலைக்கு சென்றபோது அங்கு விஜயகுமாரின் மகன் ஜெகதீஸ்குமார், தனது தந்தை வெளிநாட்டுக்குச் சென்றிருப்பதாகக் கூறினார். மேலும் தானே தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாகக் கூறி எனக்கு மருந்துகளைக் கொடுத்தார். இந்த சிகிச்சைக்காக நான் ரூ. 4 லட்சம் கட்டணமாக கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு நோய் குணமாகவில்லை. இந்த மோசடி குறித்து மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இது தொடர்பாக போலீஸôர் எந்த விசாரணையும் நடத்தியதாக தெரியவில்லை. குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை.

 எனவே இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸôருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார். மனுவை நீதிபதி சி.டி. செல்வம் விசாரித்து 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

* சட்டக் கல்லூரி வன்முறை: ஆம்ஸ்ட்ராங் சிறையில் அடைப்பு
சென்னை, மே 2: சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிறையில் அடைக்கப்பட்டார்.

 இதைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் கடந்த 2008-ம் ஆண்டு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் 44 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், வக்கீல் ரஜினிகாந்த் உள்பட 11 பேர் தலைமறைவாகிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

 இந்நிலையில் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் ஆம்ஸ்ட்ராங் சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுபவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார், அவரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியது.

 இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி ரமேஷ் வீட்டுக்கு அழைத்து சென்று அவர் முன் ஆஜர்படுத்தினர். அப்போது ஆம்ஸ்ட்ராங்கை சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்த அவர் உத்தரவிட்டார்.

வர்த்தகச் செய்தி மலர் :

* பங்குச் சந்தையில் தொடரும் சரிவு

மும்பை, மே 2: மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் சரிவு நீடித்தது. 138 புள்ளிகள் சரிந்ததால் குறியீட்டெண் 19 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழாக சரிந்து 18,998 புள்ளிகளானது.

 செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியாக உள்ளது. வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்பதால் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு தங்களது முதலீடுகளை தவிர்த்தனர். இதனால் வங்கிகளின் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன.

 கடந்த ஐந்து தின வர்த்தகத்தில் மொத்தம் 466 புள்ளிகள் சரிந்திருந்தது. திங்கள்கிழமை மேலும் 138 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 18,988 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தையில் 48 புள்ளிகள் சரிந்து 5,701 புள்ளிகளானது.

 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்யும் போக்கு அதிகமாக இருந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்னிய நிறுவனங்கள் ரூ. 689 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.

 ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. உலகையே நடுநடுங்கச் செய்த பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்ததும் இந்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏறுமுகம் காணப்பட்டது. தென் கொரியா 1.67 சதவீதமும், ஜப்பான் 1.57 சதவீதமும் முன்னேறின. சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டது. பிரான்ஸ் 0.28 சதவீதமும், ஜெர்மனி 0.93 சதவீதமும் உயர்ந்தன.

 மொத்தம் 1,810 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,032 நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்றன. மொத்த வர்த்தகம் ரூ. 2,421 கோடி.

* அட்சய திருதியை: தங்கம் விற்பனை 40 சதவீதம் உயரும்

5150067.jpg

மே 03,2011,00:12
புதுடில்லி: அட்சய திருதியை முன்னிட்டு, தங்க ஆபரணங்கள் விற்பனை, 40 சதவீதம் உயரக் கூடும் என, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் வர்த்தக கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.

அட்சய திருதியை, வரும் 6ம் தேதி வருகிறது. அன்று, தங்கம் வாங்கினால், தொடர்ந்து தங்கம் வாங்க கூடும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில், சில ஆண்டுகளாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால், வரும் அட்சய திருதியையன்று, அதிகளவில் தங்கம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை, 23 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ள போதிலும், மக்கள் தொடர்ந்து தங்க ஆபரணங்களை வாங்கி வருகின்றனர்.இதனால், கடந்த ஆண்டை விட, வரும் அட்சய திருதியை தினத்தன்று, தங்க விற்பனை, 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு தலைவர் பச்ராஜ் பமல்வா தெரிவித்தார்.கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று இருந்ததை விட, தங்கத்தின் விலை இவ்வாண்டு, 25 சதவீதம் உயர்ந்துள்ளது. அட்சய திருதியையன்று தங்க ஆபரணங்கள் விற்பனை, அளவின் அடிப்படையில், 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்

கொச்சி அணி கலக்கல் வெற்றி *சொந்த மண்ணில் டில்லி பரிதாபம்

புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், டில்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது. சொந்த மண்ணில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய, சேவக்கின் டில்லி அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின் லீக் போட்டியில், சேவக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி, ஜெயவர்தனாவின் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை சந்தித்தது. "டாஸ்' வென்ற ஜெயவர்தனா பீல்டிங் தேர்வு செய்தார்.
சேவக் ஏமாற்றம்:
டில்லி அணிக்கு வழக்கம் போல கேப்டன் சேவக், வார்னர் ஜோடி துவக்கம் தந்தது. கொச்சிக்கு எதிரான கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய சேவக், முதல் ஓவரில் 2 பவுண்டரி அடித்து அதிரடியை துவக்கினார். ஆனால், பரமேஷ்வரன் பந்தில் "சூப்பர்' சிக்சர் விளாசிய சேவக் (15), இம்முறை நிலைக்கவில்லை. தலா 13 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர், நமன் ஓஜா இருவரும், விரைவில் பெவிலியன் திரும்பினர்.
வேணுகோபால் ஆறுதல்:
பின் வேணுகோபால் ராவும், நகாரும் இணைந்து, அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 40 ரன்கள் எடுத்த வேணுகோபால், நகார் (18) அடுத்தடுத்த நிமிடங்களில் அவுட்டானர். பரமேஷ்வரன், வினய் குமார் ஓவர்களில் தலா 2 பவுண்டரி விளாசிய பெர்ட்டும் (27) நீடிக்கவில்லை.
டில்லி டேர்டெவில்ஸ் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் மட்டும் எடுத்தது. கொச்சி சார்பில் பரமேஷ்வரன், வினய் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
மெக்கலம் அபாரம்:
எளிய இலக்கை துரத்திய கொச்சி அணிக்கு, பிரண்டன் மெக்கலம் அபார துவக்கம் கொடுத்தார். மார்கல் ஓவரில் 3 பவுண்டரி விளாசி அசத்திய இவர், யாதவ் ஓவரில் தலா இரண்டு சிக்சர், பவுண்டரி அடித்து மிரட்டினார். இதனால் 4வது ஓவரின் முடிவில், கொச்சி அணியின் ஸ்கோர் 53 ஐ எட்டியது.

திடீர் சறுக்கல்:
பின், திடீரென மெக்கலம் (19 பந்தில், 37 ரன்கள்) மார்கல் வேகத்தில் சிக்கினார். மற்றொரு துவக்க வீரர் கிளிங்கர் (18), மெர்வி சுழலில் வீழ்ந்தார். பின் வந்த ஜெயவர்தனா (7) ரன் அவுட்டானார்.
எளிய வெற்றி:
இருப்பினும், பார்த்திவ் படேல், அகார்கர் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடிக்க, பிராட் ஹாட்ஜ், மார்கல் ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாச, ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.
இர்பான் பதான் வீசிய 15 வது ஓவரில் ஹாட்ஜ், மீண்டும் இரண்டு பவுண்டரி அடித்தார். பார்த்திவ் தன்பங்கிற்கு, ஒரு "சூப்பர்' பவுண்டரி அடிக்க, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, 15 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை பரமேஷ்வரன் தட்டிச் சென்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில்

    மூலவர்    :     தெய்வநாயகப்பெருமாள்
      உற்சவர்    :     மாதவப்பெருமாள்
      அம்மன்/தாயார்    :     கடல் மகள் நாச்சியார்
      தீர்த்தம்    :     சோபன, தேவசபா புஷ்கரிணி
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     கீழச்சாலை
      ஊர்    :     திருத்தேவனார்த்தொகை
      மாவட்டம்    :     நாகப்பட்டினம்
      மாநிலம்    :     தமிழ்நாடு


பாடியவர்கள்:

மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

போதலர்ந்த பொழில் சோலைப் புறமெங்கும் பொறு திறைகள்
தாதுதிர வந்தலைக்கும் தட மண்ணி தென்கரைமேல் மாதவன்
தானுறையுமிடம் வயல் நாங்கை வரிவண்டு
தேதென வென்றிசை பாடும் திருத்தேவனார்த் தொகையே

-திருமங்கையாழ்வார்

 தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. மேற்கு பார்த்த பெருமாள் என்பதால் மிகவும் விசேஷம். கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்திருப்பதால், விமானத்தின் நிழல் விமானத்திலேயே விழுமாறு அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.

பெருமாளின் திருமணம் நடந்த ஊராதலால் விமானத்தின் பெயர் சோபன (மங்கள) விமானம் என்று பெயர். கர்ப்பகிரகத்தின் முன்பு விசாலமான மண்டபம் இருக்கிறது. கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை வசிஷ்டர் தரிசனம் செய்துள்ளார்.

 தலபெருமை:

திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டார். திரு மகளை, தேவனார் (பெருமாள்) மணமுடிக்கும் காட்சியை காண தேவர்கள் தொகையாக மொத்தமாக வந்ததால் இந்த இடத்திற்கு திருத்தேவனார்த்தொகை என பெயர் ஏற்பட்டது.

  தல வரலாறு:
 

துர்வாச முனிவர் வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும், என்று சாபம் கொடுத்தார். அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். துர்வாசரும், "இந்திரனே! இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான். இறைவனது பிரசாதப்பொருள்களை அவமதிக்க கூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள்', என கூறி சென்று விட்டார். கங்கை கரையில் தவம் செய்து கொண்டிருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று சாப விமோசனம் கேட்டான் இந்திரன். அவரோ, நாம் பிறக்கும் போதே நமது முன் ஜென்ம வினைக்கேற்ப பலனை பிரம்மன் தலையில் எழுதி விட்டார். அதை மாற்ற யாராலும் முடியாது. வேண்டுமானால், நீ பிரம்மனிடம் சென்று கேட்டுப்பார் என கூறி அனுப்பி விட்டார். பிரம்மனோ, இது பெருமாள் காரியம், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ மகா விஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்து விடு, என்றார். பெருமாள், இந்திரனே! என் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் நானும் என் மனைவியும் தங்க மாட்டோம். நீ, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடல் கடையும் நேரம் வரை காத்திரு. அப்போது உன் சாபம் தீர்வதுடன், எங்களது திருமணத்தையும் காணும் பாக்கியம் பெறுவாய் என கூறி ஆசி வழங்கினார். பாற்கடலை கடையும் காலம் வந்தது. மகாலட்சுமி அதில் தோன்றினாள். மறைந்து போன ஐராவதம் யானையும் வந்தது. இந்திரன் மகாலட்சுமியை பலவாறாக போற்றினான். அவள் ஒரு மாலையை அவனுக்கு வழங்கினாள். அதை தன் கண்ணில் ஒற்றிக்கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனான்.

 திருவிழா:

வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

ஆன்மீகச் சிந்தனை மலர் :

ராமானுஜர் - எல்லாம் அவன் கையில்!

* நீங்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும், பரமனுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் தொண்டு செய்தால் தான் வாழ்க்கையில் உய்வு பெற முடியும்.

* பரமனின் திருவடிகளில் தன்னை உண்மையாகச் சமர்ப்பித்த ஒருவன், தன் வருங்கால வாழ்வுபற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. காரணம் பரமனின் கையில் தான் எல்லாமே உள்ளது. இதுபற்றித் துளியளவு கவலை கொண்டாலும், அவனது சரணாகதி பொருளற்றதாகும்.

* இந்த உலகில் வாழும் காலத்தில், உங்கள் நண்பர் யார், பகைவர் யார் என்பதை விவேகத்துடன் அறிந்து
கொள்ளுங்கள்.
- ராமானுஜர்

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் இலக்கண நூல் ஆசிரியர் யார்?

விடை - பாணிணி (கி.மு.6ஆம் நூற்றாண்டு)

இதையும் படிங்க ;

large_234985.jpg

கடற்கொள்ளையர்களிடம் எட்டு மாதமாக சிக்கித் தவிக்கும் தூத்துக்குடி கப்பல் மாலுமி

தூத்துக்குடி : சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில், கடந்த எட்டு மாதமாக சிக்கித் தவிக்கும், தூத்துக்குடி மாவட்ட கப்பல் மாலுமியை மீட்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலைச் சேர்ந்த மீனவர் லிட்டன் மகன் டனிஸ்டன்(26), தனியார் கப்பலில் மாலுமியாக பணிபுரிகிறார். இந்த சரக்கு கப்பல் கடந்தாண்டு செப்.,28ம் தேதி, பிரான்சிலிருந்து வளைகுடா நாட்டிற்கு சென்ற போது, சோமாலிய கடற்பகுதியில், அந்நாட்டு கடற்கொள்ளையர்கள் இக்கப்பலை சிறைபிடித்து கடத்தினர். இதில் பணிபுரிந்த டனிஸ்டன் உள்ளிட்ட 15 மாலுமிகள், பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டனர். அக்கொள்ளையர்களுக்கும், கப்பல் கம்பெனிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், கடந்த மாதம் எட்டு மாலுமிகளையும், கப்பலையும் விடுதலை செய்தனர். ஆனால், டனிஸ்டன் உள்ளிட்ட ஏழு பேரை மட்டும் அவர்கள் விடுவிக்கவில்லை. இந்திய கடற்படையால் கைது செய்து வைக்கப்பட்டுள்ள சோமாலிய கடற்கொள்ளையர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே, டனிஸ்டன் உள்ளிட்ட ஏழுபேரும் விடுவிக்கப்படுவர் என, அவர்கள் உறுதியாக கூறிவிட்டனர். கடந்த எட்டு மாதமாக அக்கொள்ளையர்களிடம் சிக்கித் தவிக்கும் டனிஸ்டனை மீட்க வலியுறுத்தி, அவர்களது குடும்பத்தினர் மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசனுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

கலெக்டரிடம் மனு: இந்நிலையில், புன்னக்காயல் கப்பல் மாலுமிகள் சங்க தலைவர் சேவியர் தலைமையில் டனிஸ்டன் தந்தை லிட்டன், குடும்பத்தினர், கிராம மக்கள் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வந்தனர். கடற்கொள்ளையர்களிடமிருந்து, டனிஸ்டனை மீட்க உதவும்படி, கலெக்டர் மகேஸ்வரனிடம் மனு அளித்தனர்.

தந்தை லிட்டன் கூறும்போது,"" கடற்கொள்ளையர்கள் கொடுமைப்படுத்துவதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன், டனிஸ்டன் போனில் தெரிவித்தான். பின்னர், அவனிடமிருந்து போன் தொடர்பே இல்லை. இதனால் குடும்பத்தினர், ஊர்மக்கள் துன்பத்தில் வாடுகிறோம். எனவே, டனிஸ்டனை மீட்க மத்திய, தமிழக அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.







நன்றி - தின மணி, தின மலர்.


--

                                                              
                 




--

                                                              
                 

No comments:

Post a Comment