Wednesday, May 4, 2011

இன்றைய செய்திகள் - மே, 04 , 2011


முக்கியச் செய்தி :

இறந்தது பின்லேடன் தான்-உறுதி செய்ய உதவிய இறந்து போன சகோதரியின் மூளை திசு டிஎன்ஏ!

03-bin-laden3-200.jpg

வாஷிங்டன்: பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுவிலிருந்த டிஎன்ஏவை, இறந்து போன அவரது சகோதரியின் மூளை திசுவிலிருந்து எடுத்த டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அது பின் லேடன் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது சிஐஏ.

நியூயார்க்கில் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு உலகம் முழுதும் வசித்து வரும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்களை பட்டியல் எடுத்து, அவர்களில் பெரும்பாலானவர்களின் ரத்த மாதிரியையும் திசுக்களையும் எடுத்து டிஎன்ஏ 'சிக்னேச்சரையும்' பதிவு செய்து வைத்துவிட்டது.
நியூயார்க்கில் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு உலகம் முழுதும் வசித்து வரும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்களை பட்டியல் எடுத்து, அவர்களில் பெரும்பாலானவர்களின் ரத்த மாதிரியையும் திசுக்களையும் எடுத்து டிஎன்ஏ 'சிக்னேச்சரையும்' பதிவு செய்து வைத்துவிட்டது.

வழக்கமாக ஒரு நபரின் டிஎன்ஏ அவரது பெற்றோர் அல்லது குழந்தையின் டிஎன்ஏவோடு 50 சதவீதம் தான் ஒத்து இருக்கும். இன்னொரு 50 சதவீத டிஎன்ஏ அவருக்கே உரிய தனித்துவத்துடன் இருக்கும்.

இதனால் டிஎன்ஏ மேட்சிங் செய்யும்போது ஏற்படும் குறையைக் கலைய, பெற்றோர், குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவுகளின் டிஎன்ஏக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இதன்மூலம் குறையை (error) கலைய முடியும்.

இதற்காக கடந்த 10 ஆண்டுகளாகவே பின்லேடனின் பல உறவினர்களிடமும் சிஐஏ டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வந்தது.

ஆனால், பின்லேடனுக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை. அவரது சகோதரர்கள், சகோதரிகள் அனைவருமே ஒன்றுவிட்ட சகோதரிகள் அல்லது சகோதரர்கள் தான் (siblings). இவர்களில் பெரும்பாலானவர்கள், பின்லேடன் தீவிரவாதப் பாதைக்குத் திரும்பியவுடனேயே அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டவர்கள்.

இதில் ஒரு சகோதரி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் மசாசூசெட்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானவுடன், அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்ற உதவியோடு, அந்தப் பெண்ணின் மூளையில் இருந்து திசுக்களில் இருந்து டிஎன்ஏ மாதிரியை எடுத்து வைத்திருந்தனர்.

பின்லேடன் கொல்லப்பட்டவுடன், அவரது உடலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவை அவரது இந்த உறவினர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவோடு ஒப்பிட்டபோது 99.9 சதவீதம் இது பின்லேடன் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தவிர பாகிஸ்தானில் பிடிபட்ட பின்லேடனின் இரு மனைவிகளிடமும் அவரது உடலை அமெரிக்கப் படையினர் காட்டி, அது பின்லேடன் தான் என்று உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக டிஎன்ஏ மேட்சிங் செய்ய 14 நாட்கள் வரை ஆகும். ஆனால், கடந்த ஆண்டு அரிசோனா பல்கலைக்கழகத்தின் நுண்ணியிரியல் பிரிவு ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தது. 2 மணி நேரத்தில் டிஎன்ஏ மேட்சிங் செய்யும் அந்த அதிநவீன கருவியை சிஐஏ, ஆப்கானில்தானில் தயார் நிலையில் வைத்திருந்தது.

பின்லேடனின் உடலை அங்கு கொண்டு சென்று டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டு, இது 99.9 சதவீதம் பின்லேடன் தான் என்று தகவல் தரப்பட்ட பின்னரே தொலைக்காட்சிகள் முன் தோன்றி அவர் கொல்லப்பட்டதை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஆனாலும் மிச்சமுள்ள 0.1 சதவீத சந்தேகத்தை வைத்து இது பின்லேடன் இல்லை என்று வாதிடுவோர் நிச்சயம் இருக்கத் தான் செய்வார்கள் என்கிறார், டிஎன்ஏ ஆராய்ச்சியாளரான கி்ட் ஏடன்..

உலகச் செய்தி மலர் :

* பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை வீடியோ மூலம் நேரடியாகப் பார்த்த ஒபாமா!

03-obama-with-high-level-team2.jpg

வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவர் மட்டுமல்லாமல் ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.

ஒபாமா, ஹில்லாரி தவிர துணை அதிபர் ஜோ பிடனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக் காட்சிகளை அவர்கள் பார்த்துள்ளனர். பின்லேடனை சுட்டு வீழ்த்திய வீரர்களில் ஒருவரது ஹெல்மட்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த வீடியோ காமரா மூலம் இந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகி அதைத்தான் ஒபாமா குழுவினர் பார்த்துள்ளனர்.

பின்லேடனை இடது கண்ணில் அமெரிக்க வீரர் சுட்டுத் தள்ளியதை நேரில் பார்த்துள்ளார் ஒபாமா. அவ்வாறு சுட்டதும் பின்லேடன் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வீரர் மீண்டும் பின்லேடனின் இடதுபுற நெஞ்சில் சுட்டு மரணத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த வீடியோவில், பின்லேடனை அவரது மனைவி காப்பாற்ற முயற்சித்து பின்லேடனுக்கு முன்னால் வந்து நிற்பது போன்ற காட்சியும் இருப்பதாக தெரிகிறது.

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பின்லேடன் பாதுகாவலர்கள்:

ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஹெலிகாப்டர்களில் சென்ற அமெரிக்கக் கடற்படை சீல்கள் பிரிவைச் (Navy Seal Team-6) சேர்ந்த கமாண்டோக்கள் தான் இந்த ஆபரேசனை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால், இந்த 4 ஹெலிகாப்டர்கள் தவிர மேலும் ஏராளமான போர் விமானங்களும், கனரக ஆயுதம் ஏந்திச் செல்லும் சரக்கு விமானங்களும், மேலும் ஏராளமான வீரர்களைக் கொண்ட சி-15 ரக விமானங்களும், ஆளில்லா உளவு விமானங்களும், ராக்கெட்களை வீசக் கூடிய AC-13 ரக ஹெலிகாப்டர்களும், CH-47, UH-60 ரக ஹெலிகாப்டகள் பலவும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.

சீல்கள் வந்த நான்கு CH-47 ஹெலிகாப்டர்களில் ஒன்றை பின்லேடனின் பாதுகாவலர்கள் சுட்டு வீழ்த்தியதும் உறுதியாகியுள்ளது. ஆனால், அது எந்திரக் கோளாரால் செயலிழந்ததால் தாங்களே அதை குண்டுவீசி அழித்துவிட்டதாகவும், அமெரிக்கத் தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் சில அமெரிக்க வீரர்கள் காயமோ அல்லது உயிரிழந்திருக்கவோ வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலை 7,000 கி.மீ. தொலைவில் இருந்தபடி ஒபாமாவும் அவரது டீமும் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

* பாக். தூதரகத்தில் விசா வழங்கும் பணிகளை நிறுத்தியது அமெரிக்கா

இஸ்லாமாபாத்: பின்லேடன் கொல்லப்பட்தற்குப் பழிவாங்கும் வகையில் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் ஆகியவை காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. அங்கு விசா வழங்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், பெஷாவர், லாகூர், கராச்சியில் உள்ள துணைத் தூதரகங்கள், வழக்கமான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. விசா உள்ளிட்டவை வழங்கும் பணிகளும் இதில் அடக்கம்.

இருப்பினும் அமெரிக்க குடிமக்களுக்கான அவசர கால சேவைப்பிரிவு மட்டும் தொடர்நது செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பின்லேடனுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் பெரும் பேரணி

குவெட்டா: அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனை கெளரவப்படுத்தும் வகையில் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் பெரும் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அமெரிக்காவை எதிர்த்துக் கோஷமிட்டனர்.


அமெரிக்கக் கொடிகளை எரித்தும், அதிபர் ஒபாமாவின் கொடும்பாவிகளை எரித்தும் போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். அமெரிக்காவைப் பழி வாங்குவோம் என்றும் கோஷமிடப்பட்டது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எம்.பி. மெளலவி அஸ்மத்துல்லாவின் தலைமையில் பங்கேற்றனர்.

பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் நடந்துள்ள முதலாவது பின்லேடன் ஆதரவு பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்மத்துல்லா நிகழ்ச்சியின்போது பேசுகையில், முஸ்லீம் உலகின் கதாநாயகன் பின்லேடன். அவரது தியாகம், ஏராளமான போராளிகளைக் கவர்ந்து விட்டது. மிகப் பெரிய தியாகியாக அவர் உருவெடுத்துள்ளார்.

இந்த இயக்கம் இத்துடன் முடிந்து விடாது. இது தொடரும். ஆயிரக்கணக்கான பின்லேடன்கள் பிறப்பார்கள் என்றார் அவர்.

* தமிழக விவகாரங்களுக்கு தனிப்பிரிவு அமைக்க இலங்கை முடிவு

கொழும்பு: தமிழக விவகாரங்களை கண்காணிப்பதற்கென்று தனிப் பிரிவு ஒன்றை துவங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளாதாக அந்நாட்டு தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விஷயத்தில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் முனைப்பாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. அறிக்கை வெளியாகியதையடுத்து தமிழக அரசியல்வாதிகளின் கருத்துகள் ஆங்கிலத்திலும் அதிகமாக வெளிவருகிறது. இதனால் அவர்களின் கருத்துகள் சர்வதேச ஊடகங்களிலும் வெளிவருகின்றன. இது இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடியைத் தருகிறது.

இதையடுத்து இனி தமிழக அரசியல்வாதிகளின் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அதற்கு எதிர் நடவடிக்கைகள் எடுப்பதற்கும் வசதியாக தமிழக விவகாரங்களுக்கென்று தனியாக ஒரு பிரிவைத் துவங்குமாறு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் உத்தரவிட்டுள்ளதாக அந்த இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

* பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல தாவூத்தை நம்மால் அழிக்க முடியாது-ப.சிதம்பரம்

03-dawood-pc200.jpg

டெல்லி: ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல நம்மால் பாகிஸ்தானுக்குள் போய் தாவூத் இப்ராகிமை அழிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


அமெரிக்காவால் பாகிஸ்தானுக்குள் புகுந்து உலகப் பெரும் தீவிரவாதியான பின்லேடனை சுட்டுக் கொன்றது போல இந்தியாவும் ஏன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிம் போன்ற தீவிரவாதிகளை அழிக்கக் கூடாது, அழிக்க முடியாது என்ற கேள்வி இந்தியர்கள் மனதில் எழுந்துள்ளது.

உலகைப் பொறுத்தவரை பின்லேடன் மிகப் பெரிய தீவிரவாதியாக இருக்கலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தாவூத் இப்ராகிம்தான் இந்தியாவின் பின்லேடனாக இருக்கிறான்.

பின்லேடன் மேற்கத்திய நாடுகளைத்தான் குறிப்பாக அமெரிக்காவைத்தான் குறி வைத்து தாக்கி வந்தான். இந்தியா அவனது இலக்காகவே இல்லை. இந்தியாவுக்கு எதிராக அல் கொய்தா அமைப்பு பெரிய அளவில் எதையும் செய்ததில்லை.

அதேசமயம் லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் இந்தியாவைக் குறி வைத்துத் தொடர்ந்து தாக்கி வருகிறது. தாவூத் இப்ராகிம் போன்றவர்கள்தான் இந்தியாவை தொடர்ந்து குத்திக் குதறிக் கொண்டிருக்கின்றனர். எனவே பின்லேடனின் சாவால் இந்தியாவுக்கு லாபமோ, நஷ்டமோ கிடையாது. மாறாக தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சயீத் போன்றோர்தான் நமக்கு உண்மையான மிரட்டல். இன்னும் வெளிப்படையாக சொல்வதானால், இந்தியாவுக்கான தீவிரவாத அபாயம் சற்றும் குறையவில்லை, அது அழிக்கப்படவும் இல்லை.

ன்லேடனின் மரணம் அமெரிக்காவுக்கு வேண்டுமானால் உற்சாகத்தைக் கொடுக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு இதனால் பலன் ஏதும் இல்லை.

பின்லேடனைப் போலவே தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில்தான் புகலிடம் அடைந்து தங்கியுள்ளான். அவனை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐதான் தொடர்ந்து காத்து ஆதரித்து வருகிறது. பாகிஸ்தான் அரசின் ஆதரவும் கூட அவனுக்கு உள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்குமே கூட நன்றாகத் தெரியும்.

அதேசமயம், பின்லேடனை தூள் தூளாக்க அமெரிக்க தலைவர்கள் எடுத்த ஆணித்தரமான நடவடிக்கைகளில் ஒரு பங்கைக் கூட, தாவூத்தை வீழ்த்த இந்தியத் தலைவர்கள் எடுக்கவில்லை, எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்த விஷயத்தில் இந்தியாவின் இயலாமையை ஒத்துக் கொள்ளும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

* தென் கொரியா: கூகுள் அலுவலகத்தில் போலீஸார் சோதனை
சியோல், மே 3- தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள கூகுள் அலுவலகத்தில் அந்நாட்டுப் போலீஸார் திடீரென சோதனை நடத்தினர்.

இத்தகவலை தென் கொரியப் போலீஸார் இன்று சியோல் நகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இணையதள தேடுபொறி நிறுவனமான கூகுளுக்குச் சொந்தமான செல்போன் விளம்பரப் பிரிவான "ஆட்மோப்" சட்டவிரோதமாக உள்ளூர் மற்றும் முக்கிய இடங்கள் குறித்த தகவல்களை சேகரித்துள்ளதாக வந்த சந்தேகத்தின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கொரிய தொடர்புத்துறை ஆணையத்தின் அனுமதி பெறாமலேயே கூகுளின் "ஆட்மோப்" பிரிவு உள்ளூர் தகவல்களை சேகரித்துள்ளது என்று தென் கொரிய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, போலீஸாரின் சோதனையை உறுதிபடுத்திய கூகுள் நிறுவனம், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளத


தேசியச் செய்தி மலர் ;

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை

டெல்லி: குஜராத் மாநிலத்தில் இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் போலியான என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


ஐபிஎஸ் அதிகாரி ஜிஎல் சிங்கால் என்பவர் இதுதொடர்பாக தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையை பிறப்பித்துள்ளது.

முன்னதாக சிங்கால் தாக்கல் செய்திருந்த மனுவில், இஷ்ரத் ஜஹான் வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி.யில் முதலில் கர்னைல் சிங், மோகன் ஜா மற்றும் சதீஷ் வர்மா ஆகியோர் இருந்தனர்.

தற்போது இவர்களில் இரண்டு பேர் குழுவில் இல்லை. சதீஷ் வர்மா மட்டுமே இருக்கிறார். எனவே விசாரணைக் குழுவை மாற்றியமைத்து மீண்டும் மூன்று பேர் இடம் பெறச் செய்ய வேண்டும். அதன் பின்னரே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் இஷ்ரத் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. மேலும் எஸ்ஐடியை மாற்றி அமைக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்த சிங்கால் தற்போது வதோதரா துணை ஆணையராக இருக்கிறார். கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அகமதாபாத்துக்கு வெளியே வைத்து இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என்கிற பிரனேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ரானா, ஜீஷன் ஜோஹர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது போலி என்கவுண்டர் என்பது பின்னர் தெரிய வந்தது. இந்த என்கவுண்டரை நடத்திய குழுவில் சிங்காலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


டோர்ஜியின் ஹெலிகாப்டரை தேடும் பணி இன்னும் தொடர்கிறது

செவ்வாய்க்கிழமை, மே 3, 2011, 11:28[IST]

இடாநகர்: இன்று அதிகாலையிலேயே 100-க்கும் மேற்பட்ட மீட்பு பணி வீரர்கள் அருணாச்சல பிரதேச மலைப் பகுதியில் முதல்வர் டோர்ஜி கந்துவுடன் காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தவாங் மாவட்டத்தில் உள்ள சேலா கணவாய் அருகில் இருக்கும் நகர்ஜி என்னும் இடத்தில் ஹெலிகாப்டர் போன்ற பொருளை இஸ்ரோ ராடார் படம் பிடித்துள்ளது. அதை வைத்து தேடுதல் பணி தீவிரமாக நடக்கிறது.

இஸ்ரோ ராடார் பிரகாசமான மெடல் துண்டுகளைக் காட்டியுள்ளது. அது ஹெலிகாப்டரின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது,

மீட்பு பணி வீரர்கள் இன்று அதிகாலையிலேயே சேலா கணவாய்க்கு சென்றபோதிலும் அங்கு பலத்த மழை பெய்வதால் தேடுதல் பணியை முழுவீச்சாக மேற்கொள்ள முடியவில்லை. இன்று மாலை முதல் குழு செயற்கைகோள் காட்டிய இடத்தைச் சென்றடையும் என்றார்.

மீட்புக் குழு அங்கு செல்லும் வரை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதா என்று உறுதியாகக் கூறமுடியாது என்று அருணாச்சல பிரதேச மின்வாரியத்துறை அமைச்சர் கார்பம் கம்லின் தெரிவித்தார்.

சேலா கணவாயில் ஏற்கனவே 2 எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 6.05 மணிக்கு 2 ஹெலிகாப்டர்கள் தவாங்கில் இருந்து புறப்பட்டு சேலா கணவாய் வழியாகப் பறந்து தேடும் என்று இந்திய விமானப் படை செய்தித் தொடர்பாளர் ரஞ்சீப் சாகூ தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி கந்து (56), மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள தவாங் பகுதியில் இருந்து தலைநகர் இடா நகருக்கு கடந்த சனிக்கிழமை காலை 9.50 மணிக்கு தனியார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன் எம்எல்ஏவின் சகோதரி மற்றும் அதிகாரிகள் உள்பட 4 பேர் சென்றனர். 20 நிமிடத்துக்கு பிறகு ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

அந்த ஹெலிகாப்டரில் என்ஜின் கோளாறு ஏற்பட்டிருந்தால் பாதுகாப்பாக தரையிறங்குவது கடினம்.

கடந்த மாதம் 19-ம் தேதி தவாங்கில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

* கனிமொழிக்கு அமலாக்கத் துறை சம்மன்

புதுதில்லி, மே 3: 2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக வரும் 5-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை திமுக எம்.பி.யுமான கனிமொழிக்கு அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிஃப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குநர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குநர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டிருப்பதாகத் தெரிகிறது.

2ஜி ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து சினியுக் நிறுவனத்தின் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கலைஞர் டி.வி.யில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிப்பார்கள் எனத் தெரிகிறது.

* மத்தியப் பிரதேசத்தில் 45 மயில்கள் இறப்பு

போபால், மே.3: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களில் மட்டும் 45 மயில்கள் இறந்துள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குவாலியர் வனச்சரக அதிகாரி ஆர்.டி.மஹ்லா இது பற்றிக் கூறுகையில், நரவளி கிராமத்தில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி 26 மயில்களும், 30-ம் தேதி 19 மயில்களும் இறந்துள்ளதாகத் தெரிவித்தார்.

26 மயில்களின் பிரேதப் பரிசோதனையில் , அவை குடல் பாதிப்பினால் இறந்தது தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மற்ற மயில்களுக்கான பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்த அவர், இறந்து போன மயில்களின் குடலுறுப்புக்களை பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

நரவளி கிராமத்தைச் சுற்றி மயில்களின் குடிநீருக்காக ஏற்பாடு செய்திருப்பதுடன், வனக்காவலர்களும் அந்தப் பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மஹ்லா தெரிவித்தார்.

இதற்கிடையில் மயில்கள் இறந்ததுக்கு ராய்ருவில் உள்ள மதுபான ஆலை , கழிவுகளை குடிநீரில் கலந்ததுதான் காரணம் என்று கூறி உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அந்த மதுபான ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் திங்கள்கிழமை சீல் வைத்துவிட்டதாக, குவாலியர் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் திரிபாதி தெரிவித்தார். அந்த ஆலை மீது குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

* 4-வது கட்ட தேர்தல்: மேற்கு வங்கத்தில் 84% வாக்குப் பதிவு

புது தில்லி/ கொல்கத்தா, மே. 3: மேற்கு வங்க மாநிலத்தில் 63 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடந்த வாக்குப் பதிவில் 84.8 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 294 உறுப்பினர்கள் கொண்ட பேரவைக்கு 4-வது கட்டமாக 63 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 84.8 சதவீத வாக்குகள் பதிவானதாக துணைத் தேர்தல் ஆணையர் வினோத் ஜுட்ஷி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "வாக்குப் பதிவு முடியும் நேரத்துக்கு முன்பாகவே வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து இரவு வரை நின்று வாக்களித்தனர். வாக்குப் பதிவு அமைதியாகவும் அசம்பாவிதங்கள் ஏதும் இன்றியும் நடந்தது' என்றார்.

"செவ்வாய்க்கிழமை தேர்தல் நடந்த ஹெளரா, ஹூக்ளி, கிழக்கு மேதினிப்பூர், புர்தவான் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சராசரியாக 83.19 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது' என்று மேலும் கூறினார் வினோத் ஜுட்ஷு.

* 2-வது பசுமைப் புரட்சி பிகாரில் ஏற்படும்: அப்துல்கலாம்

kalam.jpg

பாட்னா, மே 3: நாட்டில் 2-வது பசுமைப் புரட்சி பிகார் மாநிலம் பலிகஞ்சில் ஏற்படும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் தெரிவித்தார்.

பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு அருகிலுள்ள பலிகஞ்ச்சில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதுகுறித்து மேலும் கூறியது:

பலிகஞ்ச் விவசாயிகள் இரண்டாவது பசுமைப்புரட்சியை படைக்கும் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது முயற்சியால் விவசாய உற்பத்தி இரண்டு மடங்கு ஆகியுள்ளது. 1999-ம் ஆண்டு இப்பகுதி விவசாயிகள் 2.4 ஹெக்டேர் நிலத்தில் கோதுமை, நெல் பயிரிட்டனர். 2004-ம் ஆண்டில் பயிரிடப்படும் நிலம் 2 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் வீரிய விதை, சத்தான உரம், புதிய விவசாயக்கொள்கை ஆகியவற்றை கடைப்பிடித்து நெல், கோதுமை பரியிட்டு 5 ஆண்டுகளில் உற்பத்தியை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக்கி சாதனை படைத்துள்ளனர். பலிகஞ்ச் விவசாயிகளின் இந்த முயற்சி தொடரவேண்டும். இதன்மூலம் பிகாரை நாட்டின் பசுமை மாநிலமாக மாற்ற வேண்டும்.

விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம், வீரியவிதைகள், தரமான உரம், நீர் ஆதாரம் ஆகியவற்றை அடங்கிய அறிவுசார்ந்த விவசாயமாக 2-வது பசுமைப்புரட்சி அமைய வேண்டும். விவசாய விளை பொருளுக்கு சரியான விலை, உணவு பதப்படுத்துதல் வசதி, சந்தை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்க வேண்டும். விவசாய தொழில் நுட்பம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

விவசாய விஞ்ஞானிகளுடன் இணைந்து நமது விவசாயிகள் செயல்படவேண்டும். அப்போது மட்டுமே அதிக வீரியம் உடைய விதைகளை உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

* அர்ஜுனா விருது: ஜாகீர் கானுக்கு பிசிசிஐ பரிந்துரை
புது தில்லி, மே.3- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிந்துரை செய்துள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் அபாரமாக பந்து வீசிய ஜாகீர் கான், 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் பாகிஸ்தான் வீரர் அப்ரிதியுடன் சேர்ந்து முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

சச்சின், ஷேவாக், கம்பீர் ஆகியோர் ஏற்கெனவே அர்ஜுனா விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலச் செய்தி மலர் :

praveen.jpg

தடையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட டிவி மீது நடவடிக்கை-தேர்தல் ஆணையம்

* சென்னை: தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட டிவி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த டிவிக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.


மே 10ம் தேதி மாலை வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை எந்த ரூபத்திலும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இருப்பினும் கடந்த 28ம் தேதியன்று தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்துக் கணிப்பு ஒன்றை வெளிட்டது. அதில் தமிழகத்தில் லேசான மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலத்திற்கும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருந்தது.

இதையடுத்து நடத்தை விதிமுறையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட அந்த டிவியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

மதுரையில் பிரவீண்குமார்:

இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் அலுவலர்களுக்கு ஐந்து மண்டலத்தில் நேரடியாக சென்று பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த பயிற்சி வகுப்பு நடத்துவதற்காக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் இன்று காலை மதுரை வந்தனர்.

அவர்கள் மதுரை மாவட்டத்தின் 7 சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள மதுரை மருத்துவ கல்லூரிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

பின்பு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வாக்கு எண்ணிக்கை குறித்து பயிற்சி அளித்தார்.

அப்போது, மதுரை மத்திய தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் டப்ளை செய்தது தொர்பாக குறித்த புகாரின் பேரில் மீண்டும் தேர்தல் நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் சகாயத்துடன் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

* சீரான மின்சாரம் கோரி மே 5ஆ‌ம் வேலை நிறுத்தம் 
மின் தடை காரணமாகவும், அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாகவும் சிறுதொழில்கள் மற்றும் குறுந்தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று திருச்சியில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு இதனை செய்தியாளர்களிடம் அமைப்பின் சார்பில் அறிவித்தனர்.

வரும் மே மாதம் 5ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

* கத்திரி வெயில் இன்று தொடக்கம்

heat.jpg

சென்னை, மே 3: தமிழகத்தில் கத்திரி வெயில் புதன்கிழமை தொடங்குகிறது.

இந்த ஆண்டில் சித்திரை மாதம் 21-ம் நாள் (மே 4) முதல் வரும் வைகாசி 15-ம் நாள் வரை ( மே 29) வரை கத்திரி வெயில் நீடிக்கும். தொடர்ந்து 26 நாள்களுக்கு கத்திரி வெயில் நீடிக்கும்.

6 ஊர்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது:

சென்னை உள்ளிட்ட 6 ஊர்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவைத் தாண்டியது. மிக அதிகபட்சமாக திருத்தணியில் 108 டிகிரியாக வெயில் சுட்டெரித்தது.

இதர முக்கிய இடங்களில் செவ்வாய்க்கிழமை பதிவான வெப்பநிலை (டிகிரி ஃபாரன்ஹீட்டில்): வேலூர், திருநெல்வேலி 106, சென்னை 102, மதுரை, திருச்சி 100, தஞ்சாவூர் 99, காரைக்கால், நாகப்பட்டினம் 96, புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி, தருமபுரி, சேலம் 95, கோயம்புத்தூர் 91.

திருச்செங்கோட்டில் 70 மில்லி மீட்டர் மழை:

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலுடன் கூடிய வறண்ட காலநிலை நிலவியபோதும், நாமக்கல் மாட்டம் திருச்செங்கோட்டில் 70 மில்லி மீட்டர் அளவுக்கு பலத்த மழை பெய்துள்ளது. இதுதவிர கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் புதன்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்...:

நகரில், காலை 8 மணி முதல் வெயிலின் தீவிரம் தொடங்கியது. பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கானல் நீர் பிரதிபலிக்க அனல்காற்று வீசியது. கடற்காற்று தாமதமாக வீசுவதால் கடந்த 2 நாள்களாக இரவிலும் புழுக்கம் அதிகரித்துள்ளது. இதனால், மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரையில் காற்று வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. வானம் புதன்கிழமை பொதுவாக மேக மூட்டத்துடன் இருக்கும். பகலில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரியாக இருக்கும்.

* கடலூரில் கடல் சீற்றம்

sea.jpg

கடலூர், மே 3: கடல் சீற்றம் காரணமாக, கடலூர் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை.

கடல் வளத்தைப் பெருக்கும் வகையில், தற்போது கடலில் மீன்பிடிக்க பெரிய படகுகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கட்டுமரங்கள் மற்றும் சிறிய கண்ணாடி இழைப் படகுகள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் கட்டுமரங்கள் மற்றும் கண்ணாடி இழைப் படகுகள் சுமார் 25 ஆயிரம் உள்ளன. கடலூரில் மட்டும் 10 ஆயிரம் படகுகள் உள்ளன.

இந்நிலையில் கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் 2 நாள்களாக அதிகமாக உள்ளது. இதனால் திங்கள்கிழமை சுமார் 20 சதவீத படகுகளே மீன் பிடிக்கச் சென்றன. செவ்வாய்க்கிழமை படகுகள் முற்றிலும் மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார்.

கடல் சீற்றம் அதிகரித்து உள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை என்றும், பொதுவாக 10 நாள்களாக கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கடல் சீற்றம் அதிகரித்து இருப்பதான் காரணமாக, தாழங்குடா, சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம் கடலோரப் பகுதிகளில் பெருமளவு கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தாழங்குடா பகுதியில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, 100 அடி தூரம் நிலப் பரப்பு முழுவதும் கடல் நீரில் மூழ்கி விட்டது என்றும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் பல கடலுக்குள், இழுத்துச் செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம் பகுதிகளில் கடற்கரையோரம் உள்ள சவுக்குத் தோப்புகளிலும் கடல் அரிப்பு ஏற்பட்டு, சவுக்கு மரங்கள் சாய்ந்து கிடப்பதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

* காற்றாலை மின்சார விநியோகத்துக்காக ரூ. 4 ஆயிரம் கோடியில் 6 துணை மின்நிலையங்கள்

கோவை, மே 3: காற்றாலை மின் விநியோகத்துக்கு ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தலா 400 கே.வி. திறன் உடைய 6 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்று, மின்வாரியத் தலைவர் சி.பி.சிங் கூறினார்.

மின்வெட்டைக் கண்டித்து கோவை தொழில் அமைப்புகள் மே 5-ல் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதையடுத்து, தமிழக மின்வாரியத் தலைவர் சி.பி.சிங் கோவை ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

மின்தடை என்பது தமிழகம், புதுவை, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா என தென்மாநிலங்கள் முழுவதும் காணப்படுகிறது. தமிழகத்தில் 10 ஆயிரத்து 124 மெகா வாட் மின்சார உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு திறன் உடைய மின் இயந்திரங்கள் உள்ளன. 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில்,7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் வெளி மாநிலங்களிலிருந்து பெறப்படுகிறது.

தமிழகத்தில் காற்றாலைகளுக்கு ரூ. 500 கோடி பாக்கி உள்ளது. விரைவில் இத் தொகை வழங்கப்படும். காற்றாலை மின்சாரத்தை மின்வாரியம் வாங்குவதில்லை என்ற தவறான கருத்து வெளியாகி உள்ளது. காற்றாலை மின்சாரம் சீரானதாக இல்லை. மே 15 முதல் அக்டோபர் வரை காற்று வீசும் காலம் என்பதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காற்றாலை மின் உற்பத்தியாளர்கள், சீரான மின்சாரம் தருவது குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால்தான் அதைப் பெற முடியும். காற்றாலை மின் உற்பத்தியை நம்பி வாங்க முடியாது.

காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் ஆரல்வாய்மொழி, தேனி, உடுமலை, கயத்தாறு பகுதிகளிலிருந்து காற்றாலை மின்சாரத்தை வாங்கி விநியோகம் செய்ய ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 6 இடங்களில் தலா 400 கே.வி. திறன் கொண்ட துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். இதில், 2 இடங்களுக்குக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு மின்கடத்திகள் நிறுவப்படும். இவை செயலாக்கம் பெற இன்னும் 5 ஆண்டுகளாகும்.

மின்நிலையங்கள் அமைப்பது என்பது நீண்டகாலத் திட்டமாகும். அதற்கு ஆரம்பகட்டப் பணிகளுக்கே 2 ஆண்டுகள் தேவைப்படும். பணிகளை முடிக்க 4 ஆண்டுகளாகும். தமிழகத்தில் 2012-ம் ஆண்டுக்குள் மின்சாரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நிலை எட்டப்படும்.

சென்னையில் மட்டும் மின்தடைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஏன் என்று கேட்கின்றனர். மகாராஷ்டிராவில் மும்பை, கர்நாடகத்தில் பெங்களூரு என ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய நகரங்களில் இதுபோன்ற மின்தடை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

* புதிய பணி, பதவி உயர்வுக்கு திறந்த நிலை பல்கலை. பட்டத்தை ஏற்கக் கூடாது: தமிழக அரசு
tnlogo.jpg

சென்னை, மே 3: பள்ளிப் படிப்பை படிக்காமல் திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் நேரடியாகப் பட்டம் பெற்றவர்களை புதிய பணிக்கோ, பதவி உயர்வுக்கோ தேர்ந்தெடுக்கக் கூடாது என்று தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை.

பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ இதன்பின் பட்டப் படிப்பு எனப் படிக்காமல், பள்ளிப் படிப்பை பாதியில் முடித்து விட்டு பின்னர் திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டங்கள் பெறும் முறை உள்ளது. இவ்வாறு பட்டங்களைப் பெற்று அரசுப் பணிகளில் சேர்வதும், பதவி உயர்வு பெறுவதும் தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில், திறந்த நிலை பட்டங்கள் குறித்த சர்ச்சை எழுந்தது. பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் பெறும் பட்டங்களை ஏற்கக் கூடாது என உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றங்கள், "திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பெறும் பட்டங்கள் செல்லாது' எனக் கூறின.

பதவி உயர்வு தொடர்ந்தது: நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறினாலும் அரசின் பல்வேறு துறைகளில் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கூட சிலருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்னையில் தமிழக அரசு தெளிவான உத்தரவு பிறப்பிக்காததும் குழப்பத்துக்கு காரணமாக இருந்தது.

"பதவி உயர்வுக்கோ, காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யும் போதோ திறந்த நிலை பட்டதாரிகளை தேர்ந்தெடுக்கக் கூடாது. இதைக் கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி இந்த உயர்வு வழங்கப்பட்டது எப்படி? அதுபோன்று வழிங்கப்படுவது சரியான முறையல்ல என்று கடிதத்தில் குறிப்பிடப்பிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிப் படிப்பை முடிக்காமல் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் படித்தவர்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உட்பட சில அரசுத் துறைகளில் பதவி உயர்வும், பணியிடமும் அளிக்கப்பட்டுள்ளதற்கு என்ன நடவடிக்கை என்பதை தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. பதவி உயர்வு பெற்றவர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டு மீண்டும் அவர்களுக்கு பழைய பதவியே அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

* வீட்டுமனைகளாகும் விளைநிலங்கள்

நாகர்கோவில், மே 2:÷கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ அறுவடை முடிந்த விளைநிலங்களை வீட்டுமனைகளாக்கும் நடவடிக்கைகள் இப்போது தொடர்கின்றன.

÷இவ்வாறு நன்செய் நிலங்களை வீட்டுமனைகளாக்கும் நடவடிக்கைகளால் இயற்கை எழில் அழிக்கப்படுவதுடன் நெல் உற்பத்தியும் குறைந்துவிடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

÷தமிழகத்தின் பரப்பளவில் 2 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் 60 ஆண்டுகளுக்கு முன்புவரை பசுமையான பகுதியாக காட்சியளித்தது.

÷ஏறக்குறைய 85,802 ஹெக்டேர் நிலப்பரப்பு, பயிரிடும் பகுதியாக 1950-ம் ஆண்டுவாக்கில் இருந்துள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெல் களஞ்சியமாக இம்மாவட்டம் திகழ்ந்துள்ளது.

÷ஆனால் இப்போது இம்மாவட்டத்தின் பசுமை குறைந்து கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை மாவட்டத்தின் விவசாயப் பரப்பு 50 ஆயிரம் ஹெக்டேராக இருந்தது. ஆனால் இப்போது 25 ஆயிரமாக குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

÷நாகர்கோவில் அருகேயுள்ள பார்வதிபுரத்தில் இருந்து சுங்கான்கடை வரையிலான பசுமையான நெல் விளைநிலங்கள் கண்கொள்ளாக் காட்சியாக  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது.÷ஆனால் இப்போது அதன் பெரும்பகுதி கான்கிரீட் கட்டடங்களாக காட்சியளிக்கின்றன. ÷இதுபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெல் பயிரிடும் நிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.

÷விளைநிலங்கள், மனை நிலங்களைவிட குறைவான விலையில் கிடைப்பதாலும், விவசாயம் லாபகரமாக இல்லாததாலும், விவசாயக் கூலி அதிகமாக இருப்பதாலும், விளைநிலங்களுக்கு சொந்தக்காரர்கள் அதை விற்பனை செய்துவிடுகிறார்கள்.

÷விளைநிலங்கள் அழிவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். அத்துடன் மாவட்டத்தில் நெல் விளைச்சல் குறைந்து, உணவுக்கு மற்ற மாவட்டங்களை நாடும் நிலை உருவாகும்.

÷விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தொழிலை இழக்க நேரிடும் என்கிறார் மத்திய மீன்வள ஆராய்ச்சி நிலைய முன்னாள் விஞ்ஞானி ஆர்.எஸ். லால்மோகன்.

÷விளைநிலங்கள் அழிவதைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்களை ஆட்சியாளர்களும், மாவட்ட நிர்வாகமும் உறுதியாக அமல்படுத்த வேண்டும் என்கிறார் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்க தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம்.

÷வியாபார நோக்கில் பெருமளவில் நன்செய் நிலப்பரப்புகளை வீட்டுமனைகளாக்கும் நடவடிக்கைகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

வர்த்தகச் செய்தி மலர் :

 463 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம்
மே 03,2011,16:00

மும்பை : வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று, சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம் இறுதியிலும் சரிவுட‌னேயே முடிவடைந்தது. இந்திய ரிசர்வ் வங்கி, இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகளின் பாதிப்பே, பங்குவர்த்தகத்தை நிலைகு‌லையச் செய்ததாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய வர்த்தநேர முடிவில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 463.33 புள்ளிகள் குறைந்து 18534.69 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 136.05 புள்ளிகள் குறைந்து 5565.25 என்ற அளவிலும் முடி‌வடைந்தது. குறுகிய கால கடன் வட்டி விகிதமான (ரெப்போ ரேட்டை ) 50 அடிப்படை புள்ளிகள் அளவிற்கு ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின் மூலம், ரெப்போ ரேட் 7.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல், சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் 3.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பண கையிருப்பு விகிதத்தை 6 சதவீதமாகவே ‌தொடரப் போவதாகவும் அது அறிவித்துள்ளது. , 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்றும் அது கணித்துள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகம், பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 2012ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணவீக்கம் 6 சதவீத அளவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்தி மலர் :

கிரிக்கெட்

கோல்கட்டா அணி "ஹாட்ரிக்' வெற்றி *டெக்கான் மீண்டும் பரிதாபம்

ஐதராபாத்: ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது.

நான்காவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடக்கிறது. இதில் நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில், காம்பிரின் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, சங்ககராவின் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டெக்கான் கேப்டன் சங்ககரா, பீல்டிங் தேர்வு செய்தார்.
காம்பிர் அதிரடி:

கோல்கட்டா அணிக்கு காலிஸ், மார்கன் துவக்கம் கொடுத்தனர். கிறிஸ்டியன் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து அதிரடியை துவக்கிய மார்கன் (14) நிலைக்கவில்லை. இஷாந்த் சர்மா ஓவரில் 2 பவுண்டரி அடித்த, காலிஸ் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். துவக்கத்தில் இருந்தே அதிரடியில் அசத்திய, கேப்டன் காம்பிர் (22 பந்து, 35 ரன்கள்) அடுத்த சில நிமிடத்தில் திரும்பினார்.

யூசுப் அபாரம்:

இதன் பின் யூசுப் பதான், மனோஜ் திவாரி ஜோடி, ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டது. இருவரும் மாறி, மாறி பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அனுப்ப, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதற்கு வசதியாக டெக்கான் அணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது.
மூன்று முறை "கேட்ச்' வாய்ப்பில் இருந்து தப்பிய யூசுப் பதான், பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா பந்துகளில் சிக்சர்கள் விளாசினார். இஷாந்த் சர்மாவையும் விட்டுவைக்காத யூசுப் பதான், இவரது பந்தில் "சூப்பர்' சிக்சர் அடித்து அசத்தினார். மறுமுனையில் மனோஜ் திவாரி 33 ரன்கள் எடுத்தார். 20 ஓவரின் முடிவில் கோல்கட்டா அணி, 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் (47) அவுட்டாகாமல் இருந்தார்.
இக்பால் அசத்தல்:

சற்று கடின இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சன்னி சோகல், சிகர் தவான் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பாலாஜி ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சோகல் (26), இக்பால் அப்துல்லாவின் சுழலில் சிக்கினார். இதே ஓவரில் கேப்டன் சங்ககராவும், "டக்' அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது.

மீண்டும் சரிவு:

இந்நிலையில் சிகர் தவானுடன் காமிரான் ஒயிட் ஜோடி சேர்ந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காமிரான் ஒயிட்டை (13), ரஜத் பட்டியா தனது முதல் பந்தில் போல்டாக்கினார். "அதிரடி' கிறிஸ்டியனையும் (1), ஐந்தாவது பந்தில் பெவிலியன் திருப்பி அனுப்ப, 70 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து, டெக்கான் திணறியது.

தவான் ஆறுதல்:

ஒருமுனையில் விக்கெட் சரிந்த போதும், சிகர் தவான் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாலாஜி பந்தில் பவுண்டரி அடித்த இவர், அரைசதம் கடந்தார். சற்று தாக்குப்பிடித்த ரவி தேஜா (30), பிரட் லீ வேகத்தில் வீழ்ந்தார். போராடிய சிகர் தவானும் (54) காலிஸ் பந்தில் போல்டாக, டெக்கான் அணியின் தோல்வி உறுதியானது. கடைசி நேரத்தில் பரத் சிப்லி (12*), அமித் மிஸ்ரா (9*) போராட்டம் வீணானது.
டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கோல்கட்டா அணியின் இக்பால் அப்துல்லா, ரஜத் பட்டியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில்

மூலவர்    :    முத்தாலம்மன்
பழமை    :    500 வருடங்களுக்கு முன்
மாவட்டம்    :    திண்டுக்கல்
மாநிலம்    :    தமிழ்நாடு

தல சிறப்பு :

பசுமை நிறம் கொண்ட மலைகளால் சூழப் பெற்று வாழை,மா, தென்னை நிறைந்து பயன் தரும் சோலைகளும் செறிந்து ஓங்கும் நிலவளம்,வான் மழை முறையாக பெய்யும் நீர் வளம் சேரப்பெற்று திகழும் இவ்வூரின் மையப்பகுதியில் ஸ்ரீமந்தை முத்தாலம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது.

 தலபெருமை:

ஊட்டுச்சோறு வந்தவுடன் அம்மனுக்கு ஊர் மக்களின் சார்பாக கிராமத்தில் அபிஷேகம் செய்து பூஞ்சோலைக்கு புறப்படும் இக்காட்சியை ஊரணியின் உள்ளேயும், நான்கு புறங்களிலும் மக்கள் குழுமி நின்று அம்பிகை பூஞ்சோலை செல்வதை கண்டு களிக்க காண கண் கோடி வேண்டும். அம்மன் கிழக்கு கரையை அடைந்தவுடன் அனை வரையும் காப்பேன் என்று உறுதி கூறுவது போல் நான்கு திசையிலும் மூன்று முறை அருட்கண் பார்வை செலுத்தி பூஞ்சாலை நோக்கி புறப்படுவது கண்டு மக்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்கி மெய் சிலிர்க்க ஆனந்த கண்ணீர் மல்க பிரியா விடை பெறுவார்கள். அன்று இரவு நாடகம் நடைபெறுவதுடன் திருவிழா இனிது நிறைவேறும்.

சாத்தரை விழா: இங்கு நடக்கும் திரு விழாவை சாத்தரை என குறிப்பிடுவது வழக்கம். (சாறு+அறை) சாறு என்றால் விழா.அறை என்றால் அறிவித்தல். காப்புக்கட்டுக்கு அடுத்த நாள் புதன் கிழமை அம்மனுக்கு திரு உருவம் பிடிப்பதற்கு காரணக்காரர்கள் பிடி மண்ணை வேளாளரிடம் கொடுப்பார்கள்.  அம்மன் விரதமிருக்கும் சோமவாரம் தவிர மற்ற நாட்களில் கலை நிகழ்ச்சி நடைபெறும்.திருவிழாவிற்கு முதல் நாள் கிராம தெய்வமான மலையலங்கார சுவாமி சின்னையளூர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படும். திருவிழா அன்று பொது மக்கள் முன்னிலையில் காரணக்காரர்கள் அம்பாள் கோயிலின் மண்டபம், ஈசானி மூலையில் அமைந்து இருக்கும் சூரிய நாராயணன் கல் தூணில் பால், சந்தனம், மஞ்சள், குங்குமம் அபிஷேகம் செய்து ஆராதனை செய்து காப்புக் கட்டி எல்லோரும் வழிபடுவர்.நாதஸ்வர இசையுடன் குடை சுருட்டி, மகர தோரணம் முதலிய விருதுகளுடன் ஆடல் பாடல்களுடன் வாண வேடிக்கை சிறக்க, பார்க்கின்றவர்கள் கண்டு வியப்புறும் படி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பிகை எழுந்தருளச் செய்யப்படும்.ஊர் தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டு நகரத்தார் பெண்கள் மாவிளக்கு எடுத்து வணங்குவர். முறைப் படி அனைத்து இன மக்களும் அம்மனுக்கு மாவிளக்கு ஆரத்தி எடுத்து வணங்குவர்.

   தல வரலாறு:
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய நாட்டில் அரசாட்சி மேற்கொண்டு நீதி,நேர்மை நிலைக்கத் தெய்வ வழிபாடும் பக்தியும் கொண்டு வணங்கிய மாமன்னர் திருமலை நாயக்கரின் பிரதிநிதியாக இருந்து நத்தத்தை தலைநகராக்கி ஆட்சி செலுத்திய ஜமீன் சருகு துந்துமி லிங்கமநாயக்கரின் முயற்சியால் சிறுகுடியில் ஐயனார் மலையில் மணக்கோலத்தில் மலையலங்கார சுவாமியும் செம்பாயி அம்மனும் மற்றும் பரிவார தெய்வங் களையும் மண்ணினால் செய்து நில புலன்களை மானியம் கொடுத்து திருப் பணியை நிறை வேற்றினர்.

 திருவிழா:

இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திங்கள் முதல் செவ்வாய் காப்புக்கட்டி இரண்டாவது செவ்வாய், புதன் கிழமை திருவிழா நடப்பது வழக்கம்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

ரமணர் - அகந்தை அகலட்டும்.

* இதயத்தில் இருக்கும் அகந்தை விலகுதலே சரணாகதி
ஆகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால்
ஏமாறுவதில்லை, அவர் காண்பதெல்லாம் அகந்தை, எந்த அளவுக்குப் பாக்கி இருக்கிறது என்பதும், அதனை எந்த அளவில் அழிக்கலாம் என்பதுமேயாகும்.

* தெய்வீகம் அனைத்துக்காலங்களிலும் அனைத்து
சூழல்களிலும் பரவி நிற்கிறது. தனி மனிதர் தன்
விருப்பம் போல் நடக்க முடியாது, தெய்வீகத்தின்
சக்தியை உணர்ந்து நடக்க வேண்டும்.

வினாடி வினா :

வினா - இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட இடம் எது ?

விடை - கொல்கத்தா.

இதையும் படிங்க :

சுவர் ஏறி குதித்த குழந்தை தொழிலாளர்கள் போலீசில் தஞ்சம்

large_235392.jpg

அவிநாசி: அவிநாசி அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லில், கடுமையாக வேலை வாங்கியதால், எட்டு குழந்தைத் தொழிலாளர் உட்பட ஒன்பது பேர் தப்பி ஓடி, மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே குன்னத்தூர் - ஊஞ்சப்பாளையத்தில், தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 11.00 மணிக்கு, மில் ஹாஸ்டலில் இருந்து 10 சிறுமியர் உட்பட 11 பேர், சுவர் ஏறி குதித்து தப்பினர்; அங்குள்ள கோவில் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். தப்பி ஓடும் போது, இருவர் வழி தவறி சென்று விட்டனர். அவ்வழியே வந்த ஒருவர், சிறுமியரை குன்னத்தூர் போலீசில் ஒப்படைத்தார். தப்பியவர்களில் பெரும்பாலோர் சிறுமியர் என்பதால், அவிநாசி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமியரிடம் டி.எஸ்.பி., பழனிசாமி விசாரணை செய்தார். அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சு, நாகவள்ளி, கருப்பாயி, சத்யா, செல்வி, சாவித்திரி, சத்யாகுமாரி, நந்தினி என்பது தெரிந்தது. தொழிலாளர் நல ஆய்வாளருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட துணை தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் துரைராஜ் தலைமையில், வட்டார ஆய்வாளர் ரமேஷ், தொழிற்சாலை ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் கொண்ட குழுவினர், அவிநாசி ஸ்டேஷனுக்கு சென்றனர். இதில், ஒன்பது பேரில் எட்டு பேர் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர் என்பது கண்டறியப்பட்டது. சிலரது கைகளில் காயம் ஏற்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பெண் குழந்தைகள் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டம், கார்குப்பம், அய்குந்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 பேரை, ஸ்பின்னிங் மில் வேலைக்கு, ஏஜன்ட் ராஜா என்பவர் அழைத்து வந்தார். மில்லில், வார்டன் ஸ்ரீதேவி என்பவர், எங்களை அடிக்கடி அடிப்பார். காலையில் இருந்து இரவு வரை, நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும்; உட்கார்ந்தால் அடிப்பார். மில் மிஷினில் உள்ள பஞ்சுகளை, "பம்ப்' மூலம் சுத்தம் செய்யும் போது பலருக்கும் காயம் ஏற்படும். மிகவும் கஷ்டமாக இருப்பதாக சொல்லியும் கூட, ஊருக்கு அனுப்பவில்லை. வேறு வழி தெரியாமல், சுவர் ஏறி குதித்து தப்பினோம். இன்னும் பலர் அங்கு உள்ளனர். அவர்களையும் காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொழிற்சாலை ஆய்வாளர் துரைராஜிடம் கேட்ட போது, ""குன்னத்தூர் அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லில் இருந்து வெளியேறிய தொழிலாளர்களுக்கு, மருத்துவமனையில் வயது சான்றிதழ் பெற்றுள்ளோம். எட்டு பேர், குழந்தைத் தொழிலாளர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் கூறிய தகவல் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மில்லில் ஆய்வு நடத்த உள்ளோம். குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.

சி.எஸ்.இ.டி., கண்டனம்: அவிநாசி சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மைய ஒருங்கிணைப்பாளர் நயினான் கூறுகையில், ""ஸ்பின்னிங் மில்லில் பெண் குழந்தைத் தொழிலாளர்களை வைத்து கடுமையாக வேலை வாங்கியுள்ளனர். அனைவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தொழிலாளர் நல சட்டத்தை மீறியுள்ள மில் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் குழந்தைகளை துன்புறுத்திய வார்டன் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மில்லில் தொழிலாளர் நல ஆய்வாளர், போலீசார் இணைந்து விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.

இருவர் எங்கே?: ஊஞ்சப்பாளையம் ஸ்பின்னிங் மில்லில் இருந்து மொத்தம் 11 பேர் தப்பினர்; ஒன்பது சிறுமியர் மட்டுமே போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். தப்பி ஓடும்போது மில் உரிமையாளரின் ஆட்கள் அங்கு வந்ததால், முரளி, ஈஸ்வரி ஆகியோர் வழி தவறி விட்டனர். இதுவரை அவர்கள் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை.

காணாமல் போன முரளியின் தங்கை மஞ்சு கூறுகையில், ""அனைவரும் ஒன்றாக சுவர் ஏறி குதித்து தப்பினோம். எனது அண்ணன் முரளி, ஈஸ்வரி ஆகியோர், இருட்டில் வழிமாறிச் சென்று விட்டனர். அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்,'' என்றார்.





நன்றி - தட்ஸ்தமிழ், வெப்துனியா, தின மணி, தின மலர்.







--

                                                            
                 




--

                                                            
                 

No comments:

Post a Comment