Monday, May 2, 2011

இன்றைய செய்திகள் - மே, 02 , 2011



WR_642422.jpeg


முக்கியச் செய்தி :

01-dorjee-khandu13-200.jpg.jpg

அருணாச்சல் முதல்வருடன் மாயமான ஹெலிகாப்டர் இதுவரை சிக்கவில்லை-தேடுதல் தீவிரம்
இடாநகர்: அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூவுடன் சென்ற ஹெலிகாப்டர் என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. கிட்டத்தட்ட 30 மணி நேரம் தாண்டி விட்ட நிலையில் ஹெலிகாப்டரும் அதில் பயணித்த அருணாச்சல் பிரதேச முதல்வர் உள்பட 5 பேரின் கதியும் என்ன என்பது தெரியவில்லை.


டோர்ஜியும், மேலும் நான்கு பேரும் ஹெலிகாப்டர் ஒன்றில் நேற்று காலை தவாங் நகரிலிருந்து கிளம்பினர். தலைநகர் இடா நகரை இந்த ஹெலிகாப்டர் 11.30 மணியளவில் வந்தடைந்திருக்க வேண்டும்.

ஆனால், இடையிலேயே அந்த ஹெலிகாப்டருனான தொடர்பு அறுந்து போனது. இதனால் அது விபத்துக்குள்ளானதாக அஞ்சப்பட்டு அதை தேடும் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுதப்பட்டன.

இந் நிலையில் வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர் பூடானில் டபோர்ஜிஜோ பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளதாக முதல்வரின் செயலாளர் முன்னதாக தெரிவித்தார். ஆனால் அது பின்னர் மறுக்கப்பட்டு விட்டது.

முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் எங்கு போனது என்பது தெரியவில்லை. அது விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நூற்றுக்கணக்கானோர் தேடுகிறார்கள்

தவாங் மற்றும் டெங்கா ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 300 ராணுவத்தினர், இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர், போலீஸார் உள்பட நூற்றுக்கணக்கானோர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பூட்டான் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் பூட்டான் பாதுகாப்புப் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய விமானப்படை விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இஸ்ரோவும் செயற்கைக் கோள் மூலம் படங்களை எடுத்து அனுப்பி உதவி வருகிறது.

ஹெலிகாப்டரில் காண்டூ தவிர ஹெலிகாப்டர் கேப்டன் ஜே.எஸ்.ஜப்பார், கேப்டன் கே.எஸ்.மாலிக், பாதுகாப்பு அதிகாரி யேஷி சோட்டாக், தவாங் எம்எல்ஏ ஷேவாங் டோண்டுப்பின் சகோதரி யேஷி லாமு ஆகியோரும் உடன் இருந்தனர்.

தேடுதல் பணிகளைக் கண்காணித்து முடுக்கி விடுவதற்காக நாராயணசாமி உள்ளிட்ட 2 மத்திய அமைச்சர்கள் இடா நகர் விரைந்துள்ளனர்.

கவலையில் குடும்பத்தினர்

டோர்ஜீ குறித்த தகவல் ஏதும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகமடைந்துள்ளனர். அனைவரும் குவஹாத்தி விரைந்து அங்குள்ள விமான நிலையத்தில் காத்துள்ளனர்.

டோர்ஜீயின் மனைவி மற்றும் மகனைத் தொடர்பு கொண்ட காங்கிரஸ் த லைவர் சோனியா காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்துள்ளார்.

தேடுதல் வேட்டையில் பாதிப்பு

தேடுதல் வேட்டை நடந்து வரும் பகுதியில் வானிலை மோசமாக இருப்பதால் தேடுதல் வேட்டையில் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் மாலை நெருங்கி வருவதால் தேடுதல் படையினர் பெரும் கவலையடைந்துள்ளனர்.

இன்று காலையில் விமானப்படையின் தேடுதல் வேட்டை, மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது.

இன்று காலை டவாங்கிலிருந்து இரண்டு எம்ஐ 17 ஹெலிகாப்டர்களை அனுப்ப விமானப்படை திட்டமிட்டது. ஆனால் ஒரு ஹெலிகாப்டரால் மட்டுமே போக முடிந்தது. அந்த ஹெலிகாப்டரும் கூட 2 முறை மட்டுமே தேடுதல் பணியில் ஈடுபட முடிந்தது. இன்னொரு ஹெலிகாப்டரை அனுப்ப முடியவில்லை.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட பகுதியை செயற்கைக் கோள் மூலம் படம் பிடித்து இரண்டு படங்களை இஸ்ரோ பெற்றுள்ளது. இதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதன் மூலம் ஏதாவது துப்பு கிடைக்கிறதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

பூட்டான் பிரதமருடன் எஸ்.எம்.கிருஷ்ணா பேச்சு

இதற்கிடையே பூட்டான் பிரதமர் ஜிக்மே தின்லேவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொலைபேசி மூலம் பேசி ஆலோசனை நடத்தியுள்ளார். தேடுதல் வேட்டையில் உதவுமாறு அப்போது தின்லேவை கிருஷ்ணா கேட்டுக் கொண்டார்.

அதன் பேரில் தற்போது இந்திய, பூட்டான் எல்லைப் பகுதியில், பூட்டான் பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

ராணுவத்தில் பணியாற்றியவர் டோர்ஜீ

ராணுவத்தின் உளவுப் பிரிவில் பணியாற்றியவர் காண்டூ. வங்கதேசப் போரின்போது முக்கியப் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சீனாவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, தலாய் லாமாவை தவாங் பகுதிக்கு சில மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்தார் காண்டூ என்பது நினைவிருக்கலாம்.

2வது முறையாக முதல்வர் பதவியை வகித்து வரும் காண்டூ, அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் 6வது முதல்வர் ஆவார்.

முதல் முறையாக 2007ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். கெகாங் அபாங் ராஜினாமாவைத் தொடர்ந்து டோர்ஜி முதல்வரானார். பின்னர் 2009ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்டோபர்25ம் தேதி 2வது முறையாக முதல்வர் ஆனார்.

பழைய ஹெலிகாப்டரா?

டோர்ஜீ பயணம் செய்த ஹெலிகாப்டர் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது. ஆனால் அதை பவன் ஹன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் வாங்கப்பட்டது. வி.ஐ.பிக்களின் பயணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகச் செய்தி மலர் :

01-gadaffi200.jpg

* நேட்டோ படைகள் தாக்குதலில் கடாபி தப்பினார்-மகன் பலி

திரிபோலி: நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் லிபிய அதிபர் மும்மர் கடாபி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதேசமயம், அவரது இளைய மகனும், 3 பேரப் பிள்ளைகளும் பலியாகி விட்டனர்.


லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் மூஸா இப்ராகிம் இதுகுறித்துக் கூறுகையில், லிபியாவில் உள்ள மக்களுக்கு ஆதிக்கப்படையினரால் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை என்பதை இந்த சம்பவம் நிரூபிப்பதாக உள்ளது. அப்பாவி மக்களை நேட்டோ படையினர் வேட்டையாடி வருகின்றனர்.

திரிபோலியில் உள்ள ஒரு வீட்டைக் குறி வைத்து நேட்டோ படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வீடு தரைமட்டமானது. அந்த வீட்டில் அதிபர் கடாபியின் 29 வயது மகன் சைப் அல் அராப் தங்கியிருந்தார். இவர் ஜெர்மனியில் படித்தவராவார். தாக்குதலில் அராப் பலியாகி விட்டார். அதேபோல கடாபியின் 3 பேரப் பிள்ளைகளும் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு நாங்கள் பழிவாங்குவோம் என்றார் இப்ராகிம்.

கடாபியின் அதிகம் அறியப்படாத மகன் அராப். இவர், தனது தந்தையின் அதிகார மையத்திற்குள் ஒருபோதும் இருந்ததில்லை. அரசியலிலும் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கியே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடந்த வீட்டுக்கு பத்திரிக்கையாளர்களை லிபிய அரசு அதிகாரிகள் அழைத்துச்சென்று காட்டினர். மூன்று ஏவுகணைகள் வீட்டைத் தாக்கி அழித்திருந்தன. வீட்டின் மேற்கூரை முழுமையாக காலியாகி விட்டது.

இந்த தாக்குதலின்போது அப்பகுதியில் கடாபி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார்.

* போர்க்குற்றம் குறித்த ஐ.நா. அறிக்கை-இலங்கைக்கு சீனா ஆதரவு

பெய்ஜிங்: இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தைப் புரிந்துள்ளது என்று ஐ.நா. நிபுணர் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் இலங்கைக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது சீனா.


போர்க்குற்றம் புரிந்துள்ளது இலங்கை ராணுவம், அப்பாவித் தமிழர்களையும், தமிழ்ப் பெண்களையும் கொடூரமாக கொலை செய்தும், கற்பழித்தும் கொடுமைப்படுத்தியது இலங்கை ராணுவம், மிகவும் அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி தமிழர்களை கூட்டம் கூட்டமாக அழித்தனர் என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச அளவில் இலங்கைக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கு சீனா தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், இந்த விஷயத்தை உலக நாடுகள் யாரும் தலையிட்டு குழப்பமாக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். இதை இலங்கையே கையாளும்.

இதுதொடர்பாக இலங்கை அரசு ஏற்கனவே ஒரு குழுவை அமைத்து ஆராய்ந்து வருகிறது. தங்களது பிரச்சினைகளை இலங்கை அரசும், மக்களும் தாங்களாகவே தீர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை சீனாவுக்கு உள்ளது என்றார் ஹாங்.

சீனாவின் இந்த ஆதரவால் இலங்கைக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிபுணர் குழு அறிக்கை மற்றும் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பிரச்சினை வரும்போது சீனாவும், இந்தியாவும், இலங்கையைக் காப்பாற்றும் என்ற பெருத்த நம்பிக்கையில் அந்த நாடு உள்ளது. இந்த நிலையில் சீனாவின் ஆதரவு பகிரங்கமாக வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* முபாரக்குக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு
எகிப்து அதிபர் முபாரக்கிற்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக நீதித்துறை மந்திரி மொகமத் எல் குயின்பு தெரிவித்துள்ளார்

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மீதும் லஞ்ச ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி சுட்டுக் கொல்லப்பட்டதாக முபாரக் மீது குற்றச்சாட்டு உள்ளது.

முபாரக் மற்றும் அவரது குடும்பத்தின் மீது தற்போது ராணுவ கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முபாரக்குக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த தகவலை தற்போது புதிதாக பதவி ஏற்று இருக்கும் நீதித்துறை மந்திரி மொகமத் எல் குயின்பு தெரிவித்துள்ளார்.

* போப் இரண்டாம் ஜான் பாலுக்கு அருளாளர் பட்டம்: வாடிகனில் நடந்த பிரார்த்தனையில் அறிவிப்பு

popsecond.jpg

ரோம், மே 1: ரோம் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலய சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனையின் போது மறைந்த போப் இரண்டாம் ஜான் பாலுக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது, அவரது போதனைகள், உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்கள், அவர் எதிர்கொண்ட சவால்கள் ஆகியவை நினைவு கூறப்பட்டன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 முன்னதாக போலந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரேசில் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான மக்கள் ரோம் நகரின் பழமையான குதிரைப் பந்தய மைதானத்தில் சனிக்கிழமை இரவு மெழுகுவர்த்தியுடன் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் போப்பின் சொந்த ஊரான போலந்திலிருந்து வந்திருந்த பாடல் குழுவினர் பல்வேறு கீதங்களை இசைத்தனர். அப்போது, தசை இறுக்க நோயால் பாதிக்கப்பட்ட (பார்கிசன் நோய்) பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி மரிய சைமன்ஸ் பியரி, போப் ஜான் பாலை நோக்கி பிரார்த்தனை செய்து எவ்வாறு அந்த நோயிலிருந்து குணமடைந்தார் என்று விளக்கப்பட்டது. இந்த ஒரு சம்பவமே அவருக்கு அருளாளர் பட்டம் வழங்க தகுதியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 முன்னதாக நகரின் முக்கிய 8 தேவாலயங்களில் சனிக்கிழமை முழு இரவு சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டன. அதை தொடந்து காலை 10 மணிக்கு புனித பீட்டர் தேவாலய சதுக்கத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் போப் பதினாறாம் பெனடிக்ட் கலந்து கொண்டு, போப் இரண்டாம் ஜான் பால் நல்லடக்கத்தின் போது பாடப்பட்ட கீதங்களை பாடி, அவரது திரு ரத்தம் அடைத்து வைக்கப்பட்டிருந்த புனித பேழையை முத்தமிட்டார். அப்போது, போப்பின் நீண்டகால செயலாளராக பணியாற்றிய கருதினால் ஸ்தனிஸ்லாஸ் டிஸ்வாஸ், அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். போப் இரண்டாம் ஜான் பால் கடந்த 2005 ஏப்ரல் 2-ம் தேதி இறந்தார். அதைத் தொடர்ந்து, அவரது திரு ரத்தம் புனித பேழையில் பாதுகாத்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேசியச் செய்தி மலர் :

* மொரீஷியஸ் வழியாக வந்த பணப்பரிமாற்றம்? ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த விசாரணை

large_234385.jpg

போர்ட் லூயிஸ் :"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தற்போது, தங்களது அடுத்த கட்ட விசாரணையை, மொரீஷியஸ் நாட்டின் பக்கம் திருப்பியுள்ளனர். ஒதுக்கீட்டில் முறைகேடாக பெற்ற பணம் மொரீசியஸ் வழியாக, இந்தியாவிற்கு வந்ததா என்று ஆராயப்படும்.

ஏற்கனவே, ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் சி.பி.ஐ.,யும், அமலாக்கப் பிரிவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இதுவரை, இரண்டு குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், மற்ற குற்றப்பத்திரிகைகளை இம்மாதம் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. முறைகேட்டில் தொடர்புடைய பணம் எங்கிருந்து வந்தது. இப்பணம் எங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி எல்லாம், அமலாக்க துறை தீவிர விசாரணை நடத்தியது. இதில், மொரீஷியஸ் உட்பட ஆப்ரிக்க நாடுகளில் முதலீடு செய்திருப்பது தெரிந்தது. எனவே, இது பற்றி வெளிநாடுகளில் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அடுத்த குற்றப்பத்திரிகை தாக்கலை, மே 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், இதற்கென வழங்கப்பட்ட காலக்கெடுவை தள்ளிவைக்க கோரிக்கை வைக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்போதுள்ள சட்டப்படி, மொரீஷியஸ் நாட்டில் முதலீடு செய்யும் பணத்திற்கு, எவ்வித வரி விதிப்பும் அந்நாட்டு அரசு செய்வதில்லை.

எனவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலன் அடைந்தவர்கள், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் பணப்பரிமாற்றத்திற்கு அந்த நாட்டை மையமாக பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிந்துள்ளது. இதையடுத்து, மொரீஷியஸ் நாட்டில் செய்யப்பட்டுள்ள முதலீடு, யார் யாருக்கு மொரீஷியசில் இருந்து பணம் எந்ததெந்த வகையில் போய் இருக்கிறது என்பது பற்றி சி.பி.ஐ.,யும், அமலாக்கப் பிரிவும் தீவிரமாக விசாரிக்க உள்ளன. முதலில் கிடைத்த தகவலின் அடிப்படையில், 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒரே மாதியான முகவரியைக் கொடுத்து, போர்ட் லாயிஸ் நகரில் முதலீடு செய்துள்ளன. குறிப்பாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தொடர்புடைய பத்து நிறுவனங்கள், மொரீஷியஸ் நாட்டில் செயல்படுவது போல் பல்வேறு பெயர்களில் பதிவு செய்துள்ளன. ஆனால், இவை கொடுத்துள்ள முகவரி பொதுவாக உள்ளது. "தி லெஸ் கேஸ்கேட்ஸ் பில்டிங், எடித் காவெல் தெரு, போர்ட் லாயிஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, மொரீஷியஸ் அரசின் கம்பெனிகள் பதிவாளர் மொரீஷியஸ் ஆப்÷ஷார் வங்கி ஆணையம் ஆகியவற்றிற்கு அளித்த தகவலில் ஒரே இடத்தில் செயல்படுவது போல் காட்டப்பட்டுள்ளது.

* ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழல்: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாணிடம் சிபிஐ விரைவில் விசாரணை

மும்பை, மே 1: ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழல் வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாணிடம் சிபிஐ விரைவில் விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

 விசாரணைக்கு தேவையான ஆதாரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய சங்கத்திடம் இருந்தும், வேறு சில இடங்களில் இருந்தும் சிபிஐ திரட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அசோக் சவாண் மீது சிபிஐ அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகியுள்ளது. ஆதர்ஷ் வீட்டுவசதி சங்க பொது செயலாளர் ஆர்.சி. தாகூர், ஓய்வு பெற்ற ராணுவ பிரிகேடியர் எம்.எம்.வான்சூ, காங்கிரஸ் தலைவர் கே.எல். கித்வாய் உள்ளிட்டோரிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது.

 மகாராஷ்டிர முதல்வராகும் முன் அசோக் சவாண், மாநில வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவரும், ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கத்தின் ஆர்.சி.தாகூர், எம்.எம். வான்சூ, கே.எல்.கித்வாய் உள்ளிட்டோரும் இணைந்து முறைகேடு செய்து ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வீடுகளை வாங்கிக் கொடுத்தனர் என்பது சிபிஐ தரப்பு குற்றச்சாட்டு.

 கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளை முதல்வர் அசோக் சவாண் அவரது மாமியார் உள்ளிட்டோருக்கு வாங்கிக் கொடுத்த தகவல் வெளியானதும் மகாராஷ்டிரத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காங்கிரஸ் தலைமை வேறு வழியின்றி அவரை முதல்வர் பதவியில் இருந்து விலக வைத்தது. அசோக் சவாண் மட்டுமின்றி ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் தியாகிகளுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டை முறைகேடாக தங்களுக்குச் சொந்தமாக்கிய விஷயமும் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில் சிபிஐ விசாரணை செய்யவுள்ளதாக வெளியான தகவல் குறித்து கருத்துத் தெரிவித்த அசோக் சவாண், சிபிஐ-யிடம் இருந்து இதுவரை எனக்கு சம்மன் ஏதும் வரவில்லை. விசாரிக்க நோட்டீஸ் அனுப்பினாலும், அது சிபிஐ-யால் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைதான் என்றார்.

 ஆதர்ஷ் முறைகேடு தொடர்பாக அசோக் சவாண், ராணுவ அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மாநில அரசு அதிகாரிகள் என மொத்தம் 14 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

* ஷாகித் பல்வாவுக்கு நெருக்கமாக இருந்தார் சாதிக் பாட்ஷா: சிபிஐ

புது தில்லி, மே 1: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா, சாதிக் பாட்ஷா ஆகியோர் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர் என்று சிபிஐ குற்றம்சுமத்தியுள்ளது.

 முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு நெருக்கமான மறைந்த சாதிக் பாட்ஷாவின் தனி உதவியாளராக இருந்த கெவின் அமிர்தராஜிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வா, வினோத் கோயங்கா ஆகியோரிடம் சாதிக் பாட்ஷா நெருக்கமாக இருந்தது தெரியவந்ததாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது. தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இதை தெரிவித்துள்ளது. அமிர்தராஜிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தையும் நீதிமன்றத்தில் அளித்துள்ளது. வினோத் கோயங்கா, பல்வாவின் டி.பி.ரியாலிட்டி நிறுவனத்துக்கும், பாட்ஷாவின் கிரீண் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கும் இடையே உறவு இருந்தது உண்மைதான். 2008-ல் கிரீண் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சில அதிகாரிகளிடம் டி.பி.ரியாலிட்டி நிறுவனக் குழுவினர் நேர்முகத் தேர்வு நடத்தினர்.

 இதையடுத்து 42 அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குமாறு அவர்கள் பரிந்துரைத்தனர். இதை ஏற்ற கிரீண் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் 42 அதிகாரிகளையும் பணியில் இருந்து நீக்கியது.

 அதேபோல, டி.பி.ரியாலிட்டி குழும நிறுவனங்களில் ஒன்றான எடெர்னா டெவலப்பர்ஸ் நிறுவனம் கிரீண் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1.25 கோடி அளித்தது. அந்தத் தொகையை சிறிது காலத்துக்குப் பின்னர் கிரீண் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் திருப்பி அளித்துவிட்டது. இப்படி இரு நிறுவனங்களுக்கு இடையே ஏதோ உறவிருந்தது மட்டும் உண்மை என்று அமிர்தராஜ் கூறியதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாதிக் பாட்ஷாவிடம் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மார்ச் மாதம் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

* மேயர் நீக்கப்பட்டால் நிலைக்குழு உறுப்பினர்களும் பதவி இழப்பர்- உச்சநீதிமன்றம்

புதுதில்லி, மே 1: மாநகராட்சி மேயர்கள் நீக்கப்பட்டால் அவரால் நியமிக்கப்பட்ட நிலைக்குழு உறுப்பினர்களும் பதவியில் நீடிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 பிகார் மாநிலம் பாட்னா நகர மேயர் அப்ஜல் இமாம் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.எம். பன்சால், எச்.எல்.கோகலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தத்தீர்ப்பை அளித்துள்ளது.

 பாட்னா நகர மேயராக இருந்த சஞ்சய்குமார் துணை மேயர் சந்தோஷ் மேத்தா ஆகியோர் மீது 2009-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்து நீக்கப்பட்டனர். புதிய மேயராக அப்ஜல் இமாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 இதையடுத்து மாநகராட்சியின் 7 நிலைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை புதிய மேயர் அப்ஜல் இம்மாம் நியமித்தார். ஆனால் முந்தய நிலைக்குழு உறுப்பினர்கள் பதவியில் நீடித்ததால் புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்க அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அப்ஜல் இமாம் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த மாஜிஸ்திரேட், புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்க அனுமதி மறுத்துவிட்டார்.

 இந்த தீர்ப்பை பாட்னா உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்ஜல் இம்மாம் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள், பாட்னா மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்ஜல் இம்மாம் 7 நிலைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமித்தது சரிதான் என்று உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், ஒரு மாநகராட்சியின் மேயர் பதவி விலகினாலோ, அல்லது நீக்கப்பட்டாலோ அவரால் நியமிக்கப்பட்ட நிலைக்குழு உறுப்பினர்களும் பதவி இழந்துவிடுகிறார்கள். எனவே புதிய மேயர் நியமித்த நிலைக்குழுவே செல்லுபடியாகும். புதிய மேயரால் நியமிக்கப்பட்ட

 நிலைக்குழுவை அனுமதிக்காவிட்டால் மாநகராட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு கஷ்டமாகிவிடும் என்று தெரிவித்தனர்.

* காமன்வெல்த் ஊழல்; தில்லி அரசின் ரூ.1,300 கோடி பணிகள்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

புது தில்லி, மே 1: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளின் போது தில்லி அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்ட ரூ.1,315.66 கோடி மதிப்பிலான பணிகள் குறித்து மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

 ÷காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளுக்கான பணிகளுக்கு வழக்கத்தை விட அதிக பணம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படவில்லை. பல இடங்களில் மிகமோசமான தரத்திலான பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை லஞ்ச ஒழிப்புத் துறையில் தொழில்நுட்பப் பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே இப்பணிகளை மேற்கொண்ட தில்லி பொதுப்பணித்துறையில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்ற விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

 ÷ஏற்கெனவே இந்த முறைகேட்டில் காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையால் தில்லி முதல்வர் ஷிலா தீட்ஷித்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 ÷காமன்வெல்த் போட்டிக்காக மத்திய அரசும், தில்லி அரசும் இணைந்து ரூ.3,316.58 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொண்டுள்ளது. இவை தவிர பல்வேறு அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மூலம் காமன்வெல்த் போட்டிக்காக பலகோடி ரூபாய் செலவில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

* லோக்பால் மசோதா வரைவுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது

புது தில்லி, மே 1: ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குறித்து விவாதிப்பதற்காக வரைவுக்குழுவின் இரண்டாவது கூட்டம் திங்கள்கிழமை புது தில்லியில் நடைபெற உள்ளது.

 இதில், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், வீரப்ப மொய்லி, ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் ஆகியோரும், காந்தியவாதியான அண்ணா ஹஸôரேயின் பிரதிநிதிகள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், சந்தோஷ் ஹெக்டே, அரவிந்த் கேஐரிவால் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

 கடந்த ஏப்ரல் 16-ம் தேதி வரைவுக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

 இந்நிலையில், லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, அண்ணா ஹஸôரேயின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் நடத்தினர்.

 மும்பை, புணே, லக்னெü, கான்பூர், ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களுர், சென்னை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நகரங்களிலும் ஊர்வலம் நடைபெற்றது.

* சுவிஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது: ஷுங்லு கமிட்டி

புது தில்லி, மே 1: காமன்வெல்த் போட்டிக்கான ஸ்கோரிங் கருவிகள் கொள்முதல் ஒப்பந்தத்தை சுவிட்சர்லாந்தின் "சுவிஸ் டைம்ஸ்' நிறுவனத்துக்கு அளிப்பதென சுரேஷ் கல்மாதி தலைமையிலான போட்டி ஒருங்கிணைப்புக் குழு முன்கூட்டியே தீர்மானித்துவிட்டது என இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்த ஷுங்லு கமிட்டி குற்றம்சுமத்தியுள்ளது.

 காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்த ஷுங்லு கமிட்டி, பிரதமர் அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் மேற்கண்டவாறு குற்றம்சுமத்தியுள்ளது.

 மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாட்டில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளது உண்மைதான். விளையாட்டுப் போட்டிகளுக்கான ஸ்கோரிங் கருவிகள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை போட்டி ஒருங்கிணைப்புக் குழு முறையாகக் கையாளவில்லை. சுவிஸ் டைம்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதை அந்தக் குழு முன்கூட்டியே தீர்மானித்துவிட்டது.

 அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிக்கும் நோக்கில் விதிமுறையை தவறுதலாகக் கையாண்டுள்ளனர். தகுதியுடைய பல நிறுவனங்கள் ஒப்பந்தத்தை பெற முயற்சித்தன. ஆனால் அந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் செய்தனர். சுவிஸ் டைம்ஸýக்குத்தான் ஒப்பந்தம் என்பதை உறுதி செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். குழுவின் முதல் கூட்டத்தில் இருந்து கடைசிக் கூட்டம் வரை சுவிஸ் டைம்ஸýக்கு சாதகமாகவே செயல்பட்டனர்

வேண்டுமென்றே ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் தாமதப்படுத்தினர். குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஒப்பந்தத்தை 2 ஆண்டுகள் 9 மாதம் வரை இழுத்தடித்தனர். இந்தத் தாமதத்தால் மட்டும் நாட்டுக்கு 18 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஒருங்கிணைப்புக் குழு பாரபட்சமாகச் செயல்பட்டு நாட்டுக்கு இழைப்பை ஏற்படுத்தியதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று ஷுங்லு கமிட்டி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 காமன்வெல்த் விளையாட்டு போட்டி முறைகேடு குறித்து விசாரணை நடத்திய சிபிஐ, முறைகேடு நடந்ததை உறுதி செய்தது. சுவிஸ் டைம்ஸýக்கு ஒப்பந்தம் வழங்கியதில் மட்டும் நாட்டுக்கு ரூ.95 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறிந்தது.

 இதையடுத்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சுரேஷ் கல்மாதி நீக்கப்பட்டார். ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த சுரேஷ் கல்மாதி, லலித் பனோட்,வி.கே. வர்மா, சுர்ஜித் லால், எஸ்.வி.பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

 இந்நிலையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையென ஷுங்லு கமிட்டியாலும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தபடுத்தப்படவுள்ளது.

* மேற்கு வங்கத்தில் 4-வது கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப்பதிவு

கொல்கத்தா, மே 1: மேற்குவங்கத்தில் 4-வது கட்டமாக செவ்வாய்க்கிழமை (மே 3)தேர்தல் நடைபெறவுள்ள 63 தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

 இம்மாநில சட்டப்பேரவைக்கு 6 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3 கட்ட தேர்தல்களில் வாக்குப்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிûலையில் 4-வது கட்டமாக செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. ஹெüராô, ஹூக்லி, கிழக்கு மேதினிப்பூர் மற்றும் புர்ட்வான் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் உள்ள 63 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 7 அமைச்சர்கள் உள்பட 366 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 1,26,03,454 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நடைபெறவுள்ள இந்த 63 தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

 மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பையும், மாற்றத்தையும் ஏற்படுத்திய நந்திகிராம், சிங்குர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களும் செவ்வாய்க்கிழமைதான் தேர்தலை சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஹெüரா, மற்றும் கிழக்கு மேதினிப்பூர் மாவட்டங்களில் 16 தொகுதிகளிலும், ஹூக்லி மாவட்டத்தில் 18 தொகுதிகளிலும், புர்ட்வான் மாவட்டத்தில் 13 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :


* ஐ.நா. உடன்படிக்கையை அமல்படுத்தினால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும்: வே.வசந்திதேவி

vasanthidevi.jpg

சென்னை, மே 1: குழந்தைகள் உரிமை குறித்து ஐ.நா. சபை ஏற்படுத்திய உடன்படிக்கையையும் நடைமுறைகளையும் அமல்படுத்தினால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என தமிழக மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் வே.வசந்திதேவி தெரிவித்தார்.

 குழந்தைகள் உழைப்பை தடை செய்தல், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமலாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குழந்தை உழைப்பு எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

 இதில் தமிழக மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான வே.வசந்திதேவி பேசியதாவது:

 நம் மக்களாட்சியின் வயது 60-ஜ கடந்த பிறகும் கூட பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், செங்கல் சூளைகள், கல் குவாரிகள், உணவகங்கள் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் குழந்தைகள் இன்னும் தொழிலாளர்களாக உள்ளனர். இந்தியாவில் வறுமை இல்லை; வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்றாக மிளிர்கிறது எனப் பேசிக்கொண்டே இன்னொரு பக்கம் வறுமையைக் காரணமாகச் சொல்லி குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

 நாகரிக சமூகத்தின் மதிப்புமிகு பிரஜையாக குழந்தைகளைக் கருத வேண்டும் என்பது ஐ.நா.வின் குழந்தைகள் உரிமையின் உடன்படிக்கை. குழந்தைக்கே முதலிடம் என்ற கோட்பாட்டை மக்களாட்சிக்கு முன்மொழிந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த உடன்படிக்கை ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில் நடந்தது என்ன?

1986-ம் ஆண்டு கொண்டுவந்த குழந்தை உழைப்புச் சட்டத்தை இன்னும் அமல்படுத்திக்கொண்டே இருக்கிறோம். இதனால்தான் இன்றும் குழந்தைத் தொழிலாளர் நிலை தொடர்கிறது. இந்தச் சட்டப்படி, 1997 முதல் 2006 வரை தமிழகத்தில் தொழிலாளர் நலத்துறையால் மேற்கொள்ளப்பட்ட 12,32,050 ஆய்வுகளில் 6,122 குழந்தைத் தொழிலாளிகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 1,054 முதலாளிகள் மட்டும் அபராதம் செலுத்தியுள்ளனர்; சிறைத் தண்டனை கிடையாது. இதே நிலைமைதான் இந்தியா முழுவதும் உள்ளது.

 இதை மாற்ற குழந்தைத் தொழிலாளர் தொடர்பான சட்டங்களில் திருத்தம் வேண்டும். குழந்தைகளுக்கு நிர்ணயிக்கப்படும் 14 வயது என்பதை ஐ.நா. உடன்படிக்கையின்படி 18 வயதாக மாற்றி கட்டாயக் கல்வி, தரமான கல்வி, இலவசக் கல்வி, சமச்சீர் கல்வி ஆகியவற்றை அனைத்துக் குழந்தைகளுக்கும் அளிக்கும் வகையில் இந்தச் சட்டத்தை மாற்றினால்தான் குழந்தை உழைப்பை முற்றிலும் அகற்ற முடியும் என்றார்.

 இந்தக் கருத்தரங்கில் யுனிசெப் நிறுவனத்தின் குழந்தை உரிமைப் பாதுகாப்பு அலுவலர் வித்யாசாகர், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொருளாளர் மோசஸ், குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசார அமைப்பின் மாநில அமைப்பாளர் பெ.ஜோசப் விக்டர் ராஜ், வடக்கு மண்டல அமைப்பாளர் க.மூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் அ.தேவநேயன், குழந்தை உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

* நெல்லை-வாக்கு எண்ணும் மைய ஜன்னல்களின் படங்களை அனுப்ப உத்தரவு!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களை புகைப்படம் எடுத்து அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடந்த 13ம்தேதி 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வாக்குகள் பதிவான மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு கருதி வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் ஜன்னல் கதவுகளை படம் பிடித்து அனுப்பும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களான நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி, புளியங்குடி எஸ் வீரசாமி செட்டியார் கல்லூரி ஆகியவற்றில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் ஜன்னல்களை புகைப்படம் எடுத்து அனுப்பும்படி நெல்லை கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து தொகுதிகளின் வாக்கு பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளின் ஜன்னல்களை போலீசார் புகைப்படம் பிடித்து அவசர அவசரமாக மாவட்ட நிர்வாகத்து அனுப்பி வைத்தனர்.

* தன்னாட்சி பெற்ற அணு ஒழுங்குமுறை ஆணையம்- மசோதா தாக்கலாகிறது

நெல்லை: அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திற்கு பதிலாக தன்னாட்சி பெற்ற அணு ஓழுங்கு முறை ஆணையம் உருவாக்குவதற்கான மசோதாவை அடுத்த பாராளுமன்ற கூட்டதொடரில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து இந்திய அணுசக்தி கழகத்தின் கூடன்குளம் அணுமின் நிலையம் வெளியிட்ட செய்திகுறிப்பு, ஜப்பான் நாட்டின் புகுசி்மா அணு உலையில் ஏற்பட்ட கதிர்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் அணுசக்தி திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள், மகாரஷ்டிரா மாநிலம் ஜைதாபூர் அணு உலையின் தற்போதைய நிலை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இந்திய அணுசக்தி கழக தலைவர் ஜெயின், மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவுகான் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் ஜைதாபூரில் 165 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அணு உலை அமைப்பதற்கான சுற்று சூழல் அனுமதி அனைத்தும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும். இந்த இரண்டு உலைகளும் 2019ம் ஆண்டு மின் உற்பத்தி செய்யும். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

தற்போதுள்ள அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திற்கு பதிலாக இந்திய அணு ஒழுங்கு முறை ஆணையம் தன்னாட்சி அந்தஸ்த்துடன் செயல்படுவதற்கான மசோதா வருகின்ற பாராளுமன்ற கூட்ட தொடரில் கொண்டு வரப்படும்.

அணு உலைகளின் உயர்மட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அணுசக்தி ஆணையத்தின் பாதுகாப்பு ஆய்வு குழுவை மத்திய அரசு கேட்டுக் கொள்ளும். அணு உலைக்கான உதிரி பாகங்கள், தொழில்நுட்பங்கள் உள்நாட்டில் தயாரிப்பாக இருந்தாலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறையின் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும். அணுசக்தி திட்டத்தில் வெளியப்படையான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மின்வெட்டை எதிர்த்து போராட்டத்திற்கு தயாராகும் கோவை
கோவை: தொடரும் மின் தடையை கண்டித்து கோவையில் 38 தொழில் அமைப்புகளின் சார்பில், மே 5ம் தேதி மாபெரும் கண்டனப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது.

இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து திரளும் ஆதரவு பிரமிப்பூட்டுவதாக உள்ளது. தொழிற் சங்கங்கள், உற்பத்தியாளர்கள், சமூக அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கள், பொது மக்கள் என பலரும் தங்களது ஆதரவை தெரிவிப்பதால் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மின் தடைக்கு மட்டும் எதிரான போராட்டமாக இருக்காது என்கிறார்கள் அமைப்பாளர்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் முதல் கோரிக்கையே மின் தடையை எல்லோருக்கும் சமமாக பகிருங்கள் என்பதுதான். தமிழகத்தின் மொத்த தேவையான 12,000 மெகா வாட் மின்சாரத்தில் சென்னை மண்டலத்துக்கு மட்டுமே 3,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மொத்த தேவையில் இது 30 சதவீதம் ஆகும்.

மொத்த தமிழகமே தினமும் 3 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும்போது சென்னைக்கு மட்டும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த பாரபட்சத்தை கண்டித்து முதன் முதலில் குரல் எழுப்பியது கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் எனும் அமைப்பு. ’சென்னை மட்டும்தான் தமிழகமா?! என்று கேட்டு கோர்ட் படியேறியது தமிழக மின் நுகர்வோர் சங்கம். பல்வேறு தரப்புகளிலும் இருந்து எழுந்த ஆட்சேபத்தினால் சென்னையில் ஒரு மணி நேரம் மின் தடை அமலுக்கு வந்தது.

தமிழகம் முழுவதும் சமச்சீர் மின் தடை, தலை நகரில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கும், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வாரி வழங்கப்படுவதை ரத்து செய்தல், மின் உற்பத்தியை அதிகப்படுத்துதல், ஜெனரேட்டர் உபயோகப்படுத்த டீசலுக்கு மானியம் ஆகியவை இந்தப் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* தேனீக்களிடம் சிக்கிய திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோரை தேனீக்கள் சூழந்து தாக்கத் தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் நீர் கசிவதை ஆய்வு செய்ய ஒரிசாவில் இருந்து சிறப்பு குழு வந்தனர்.

அந்த ஆய்வுக் குழுவுடன் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன், நிருபர்கள் குழு சாத்தனூர் அணையின் மதகுக்கு ஒரு படகின் மூலம் சென்றனர்.

படகில் செல்பவர்களுக்கு பாதுகாப்பாகவும், படகு ஆடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அணையின் மேலிருந்து படகுடன் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருந்தது.

ஆனால் எதிர்பாரா வண்ணம் அணையில் தேனீக்கள் கூடு கட்டியிருந்த இடத்தில் அந்த கயிர் மோதியது. இதில் கூடு சேதம் அடைந்தது. இதையடுத்து தேனீக்கள் பறந்து வெளியேற ஆரம்பித்தன. கலெக்டர் ராஜேந்திரன், டிவி கேமராமேன் விஜி ஆகியோரை தேனீக்கள் கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் இருவரும் அலறினர்.

சிறப்பு படை வீரர்களையும் தேனீக்கள் கொட்டியதால் அவர்களும் ஆய்வுப் பணியில் ஈடுபடமுடியாமல் திரும்பினர்.

தேனீக்கள் கொட்டியதால் கலெக்டர் உள்ளிட்டவர்கள் சிசிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை பெற்று திரும்பினர்.

* அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு கேள்வித்தாள் லீக்-தேர்வு தாமதம்

டெல்லி: அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான கேள்வித்தாள் இன்று உ.பி. மாநிலத்தில் முன்கூட்டியே வெளியாகி விட்டதால், நுழைவுத் தேர்வு தொடங்குவது சில மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டு பிற்பகலில் தொடங்கியது.

இன்று காலை 9.30 மணிக்கு நாடு தழுவிய அளவில் அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (AIEEE) நடைபெறுவதாக இருந்தது. இரு தாள்களைக் கொண்டது இந்தத் தேர்வு. காலை 9.30 மணிக்கு முதல் தாளுக்கான தேர்வும், பிற்பகல் 2 மணிக்கு 2வது தாளுக்கான தேர்வும் தொடங்குவதாக இருந்தது.
 
இந்த நிலையில் உ.பி. மாநிலத்தில் கேள்வித்தாள் முன்கூட்டியே லீக் ஆகி விட்டதாக தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்வுகளை தள்ளிப் போட்டது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம். அதன்படி, காலை தொடங்குவதாக இருந்த முதல் தாளுக்கான தேர்வு பிற்பகல் 12 மணிக்கும், 2வது தாளுக்கான தேர்வு இரவு 7 மணிக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 80 நகரங்களில் 1600 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு ஆன்லைனிலும் நடைபெறுகிறது. அதை 1 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.

* ஐஸ்ஓ சான்றிதழ் பெற்று அசத்தும் கோவை மாநகராட்சி பள்ளிகள்

கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகள் ஐ.எஸ்.ஓ எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ்களைப் பெற்றுள்ளன.

கோவை மாநகராட்சியில் 16 மேல் நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலை, 13 நடுநிலை, 42 ஆரம்பப்பள்ளிகள், ஒரு சிறப்புப் பள்ளி என மொத்தம் 82 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 30,000 மாணாக்கர்களுக்கு மேல் இப்பள்ளிகளில் பயில்கின்றனர்.

தனிக்கவனம்

மாநகராட்சி ஆணையாளராக அன்சூல் மிஸ்ரா பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்தே அரசுப்பள்ளிகளின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வந்தது. கடந்த நிதியாண்டில் கல்வித்துறை மேம்பாட்டிற்கென அதிக நிதியை ஒதுக்கியது மாநகராட்சி நிர்வாகம். கல்விக்குழுவின் பரிந்துரைகளின் படிஅறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் ஆய்வகம், நூலகம், குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு, கழிப்பிடம், ஒய்வறை, உணவருந்துமிடம், நாப்கின் மெஷின் மற்றும் இன்சினரேட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் பள்ளிகளில் செய்தது.

ஆசிரியர்களும் சிறப்பாகச் செயல்பட்டதில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக பெரும்பாலான அரசுப் பள்ளிகளும் 10ஆம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வுகளில் 100% தேர்ச்சி எனும் சாதனையை படைத்தன.

ஜெர்மன் நிறுவனம்

பள்ளிகளை ஆய்வு செய்து ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வழங்கும் ஜெர்மன் நிறுவனம் கோவை மாநகராட்சியின் 8 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஐ.எஸ்.ஒ 9001-2010 தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஆர்.எஸ்.புரத்தில் இருக்கும் மாநகராட்சி ஆண், பெண் இருபாலர் பள்ளி, மாநகராட்சி பெண்கள் (மேற்கு) பள்ளி, அம்மணியம்மாள் பள்ளி, ஒப்பணக்கார வீதி , ரங்கநாதபுரம், ராமகிருஷ்ணபுரம், சித்தாபுதூர், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மாநகராட்சி பள்ளிகள் இந்தச் சாதனையை படைத்துள்ளன. தமிழகத்தில் மொத்தம் 600 பள்ளிகள் ஐ.எஸ்.ஒ தரச்சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

* 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது!

29-kb33-200.jpg

டெல்லி: 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.


இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது.

கடந்த 45 ஆண்டுகளாக திரைத் துறையில் உள்ள பாலசந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார்.

அசாதாரண கதைகளைப் படமாக்குவதில் பாலச்சந்தரின் துணிச்சலுக்கு நிகர் அவரே.

மிகச் சிறந்த கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாஸன், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மிகச் சிறந்த நடிகரான நாகேஷ், ராதாரவி, நடிகைகள் ஜெயந்தி, ஸ்ரீபிரியா, ஜெயசுதா, ஜெயப்ரதா, சுஜாதா என 30க்கும் மேற்பட்டோரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பாலச்சந்தர்.

கமல்ஹாஸன் உள்ளிட்ட 12 இயக்குநர்களை உருவாக்கியவர்.

இவர் இயக்கிய இருகோடுகள், அபூர்வராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும், ருத்ரவீணா தெலுங்குப் படமும் தேசிய விருதுகளை வென்றுள்ளன.

பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினையும்அளித்து கெளரவித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் 1930ம் ஆண்டு பிறந்தவர் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்தா, சர்வர் சுந்தரம் என நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை திரையுலகுக்கு அழைத்து வந்தவர் அமரர் எம்ஜிஆர். அவரது தெய்வத்தாய்தான் பாலச்சந்தரின் முதல் திரைப் பிரவேசம். பாலசந்தர் இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி. 1965ம் ஆண்டில் அவர் இயக்கிய இந்தப் படத்தில் நாகேஷ் நடித்தார்.

தமிழகம் தவிர, ஆந்திரம், கர்நாடகத்திலும் பல விருதுகளை வென்றுள்ளார் பாலச்சந்தர்.

சின்னத் திரையில் அட்டகாசமான தரம் கொண்ட நாடகங்களை அறிமுகப்படுத்தியதும் பாலசந்தர் தான். தூர்தர்ஷனுக்காக இவர் இயக்கிய ரயில் ஸ்னேகம் மறக்க முடியாத ஒரு படைப்பாகும்.

அவர்கள், 47 நாட்கள், சிந்துபைரவி ஆகியவை பாலசந்தரின் மாபெரும் படைப்புகளாகும்.

* நெல்லையில் பிடிபட்ட மலைப் பாம்பின் வயிற்றில் 15 முட்டைகள்

திருநெல்வேலி, மே 1: திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் மரத்தின் அடிப்பகுதியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை சனிக்கிழமை இரவு ஜேசிபி இயந்திரம் மூலம் பிடித்த போது பாம்பின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு முட்டைகள் வெளியே வந்தன.

 கொக்கிரகுளத்தில் உள்ள மருதமரத்தின் அடிப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டுவந்து மரத்தின் அடியில் தோண்டினர்.

 அப்போது ஜேசிபி இயந்திரம் பாம்பின் வயிற்றுப் பகுதியில் பட்டதால் காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் காயமடைந்த பகுதியில் இருந்து முட்டைகள் வெளியேவர தொடங்கின. உடனே மலைப்பாம்பை மருத்துவமனைக்கு தீயணைப்பு வீரர்கள் எடுத்துச் சென்றனர்.

 பாம்பின் வயிற்றுப் பகுதியில் இருந்த 15 முட்டைகளை மருத்துவர்கள் வெளியே எடுத்து காயம் ஏற்பட்ட பகுதியை சுத்தம் செய்து தையல் போட்டனர். பின்னர், மலைப்பாம்பு தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆரோக்கியச் செய்தி மலர் :
வாழைக்காயின் மருத்துவ குணங்கள்!
அன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது வாழைக்காய் எனலாம்.

சமையலில் பெரும்பாலும் வாழைக்காயை வறுவல் செய்தும், பொறியல் செய்தும், கூட்டு செய்து சாப்பிடுவதுடன், சாம்பாரிலும் போட்டு சாப்பிடுவர்.

ஆனால், வாழைக்காயில் உள்ள மருத்துவ குணம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ வாழைக்காயின் மருத்துவ குணங்கள்...

வாழைக்காய்களில் பல வகைகள் இருந்த போதிலும், மொந்தன் எனப்படும் நாட்டு வாழைக் காய்களையே சமையலுக்காக பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். மற்ற வகை வாழைக்காய்களையும் சாப்பிடலாம். அவை பரவலாகக் கிடைப்பதில்லை.

வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதுடன், மாவுச்சத்தும் உள்ளது. எனவே வாழைக்காய் அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமனாகும். நல்ல வளர்ச்சியையும் அளிக்கும்.

வாழைக்காய் சாப்பிடுவதால், பசி அடங்கும். மேலும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் வழங்கப்படுகிறது.

வாழைக்காயின் மேல் தோலை மட்டும் மெலிதாகச் சீவியெடுத்து விட்டு உட்புறத் தோலுடன் சமைப்பதே சிறந்தது. அப்போதுதான் தோலில் உள்ள சத்துகள் உடலில் சேரும்.

வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது. வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்களைப் போக்க வாழைக்காய் ஏற்றதாகும்.

என்றாலும் வாழைக்காய் சாப்பிடுவதால், வாய்வு ஏற்படக்கூடும். எனவே வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் வாழைக்காயை அளவுடன
எடுத்துக் கொள்ளலாம். அல்லது தவிர்க்கலாம்.

அதேபோல், வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றது. என்றாலும், மலத்தை இறுக்கி விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி, மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.
வர்த்தகச் செய்தி மலர் :

* அன்னியச் செலாவணிக் கையிருப்பு அதிகரிப்பு  

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 22-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 179 கோடி டாலர் (ரூ.8,055 கோடி) உயர்ந்து 30,970 கோடி டாலராக (ரூ.13,93,650 கோடி) அதிகரித்துள்ளது.

பாரத ரிசர்வ் வங்கியின் அண்மைக் கால புள்ளிவிவரம் ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் கையிருப்பு 28.60 கோடி டாலர் (ரூ.1,287 கோடி) சரிவடைந்து 30,791 கோடி டாலராக (ரூ.13,85,595 கோடி) குறைந்திருந்தது.

அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. கணக்கீடு செய்ய எடுத்துக் கொண்ட காலத்தில் இதரசெலாவணிகளுக்கு எதிராக டாலர் மதிப்பு சரிவடைந்தது.

இதனையடுத்து, இதர செலாவணிகள் மதிப்பு 175 கோடி டாலர் உயர்ந்து 27,910 கோடி டாலராக அதிகரித்தது. எனவே அன்னிய செலாவணி கையிருப்பும் உயர்ந்துள்ளது.


விளையாட்டுச் செய்தி மலர் :

* 5-வது வெற்றியை ருசித்தது சென்னை

சென்னை, மே 1: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் அணியை தோற்கடித்தது.

சென்னை வீரர் அல்பி மோர்கல் கடைசிக் கட்டத்தில் 3 சிக்ஸர்களை விளாசியதோடு, டெக்கான் அணியின் முன்னணி வீரர்கள் 3 பேரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

இந்த ஆட்டத்தில் இஷாந்த் சர்மா வீசிய 19-வது ஓவரில் கடைசி 3 பந்துகளில் அல்பி மோர்கல் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார். இதில் கடைசி சிக்ஸரை 114 மீட்டர் தூரத்தில் அடித்து இந்த ஐபிஎல்லில் அதிக தூரத்தில் சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையை எட்டினார். 24 பந்துகளில் அரைசதமடித்த டெக்கான் வீரர் சாஹால், இந்த ஐபிஎல் தொடரில் அதிகவேக அரைசதம் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 3 ரன்களில் ஓஜா பந்துவீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

சுருக்கமான ஸ்கோர்

சென்னை - 165/5

(ரெய்னா 59, ஹசி 46)

டெக்கான் - 146/8 (சாஹால் 56,

மோர்கல் 3வி/38)

இன்றைய ஆட்டங்கள்

* மும்பை - பஞ்சாப், இடம்: மும்பை, நேரம்: மாலை 4.

* டெல்லி - கொச்சி, இடம்: தில்லி, நேரம்: இரவு 8.

* முதலிடத்தில் ராஜஸ்தான்

ஜெய்ப்பூர், மே 1: ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் புணேயை வீழ்த்தியது.

 இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி 11 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது ராஜஸ்தான். இந்த ஆட்டத்தில் தோற்றதன் மூலம் 8 ஆட்டங்களில் விளையாடி 6 தோல்வியைப் பதிவு செய்துள்ளது புணே வாரியர்ஸ்.

 முதலில் ஆடிய புணே வாரியர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

 முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் வார்னே பீல்டிங்கைத் தேர்வு செய்தார். புணே அணியில் ரைடர் 18 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மணீஷ் பாண்டே 30 ரன்கள் எடுத்தார்.

 இதன்பிறகு வந்தவர்களில் யுவராஜ் சிங் 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். இருப்பினும் உத்தப்பா சற்று அதிரடியாக ஆடினார். 21 பந்துகளை சந்தித்த உத்தப்பா 7 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் மன்ஹாஸ் 24 ரன்கள் சேர்க்க புணே வாரியர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணியில் வாட்சன் 12 ரன்களிலும், திராவிட் 18 ரன்களிலும், போத்தா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு ஜோடி சேர்ந்த மேனரியாவும், ராஸ் டெய்லரும் புணே வீரர்களின் பந்துவீச்சை பதம் பார்த்தனர்.

 மேனரியா 22 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கார்த்திக் வீசிய 16-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், இரண்டு பவுண்டரிகளையும் விரட்டினார் ராஸ் டெய்லர். இறுதியில் அந்த அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் குவித்தார். டெய்லர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 சுருக்கமான ஸ்கோர்

 புணே - 143/7 (உத்தப்பா 35, பாண்டே 30)

 ராஜஸ்தான் - 144/4 (டெய்லர் 47*, ராகுல் சர்மா 3வி/13)

 இன்றைய ஆட்டங்கள்

 * மும்பை - பஞ்சாப், இடம்: மும்பை, நேரம்: மாலை 4.

 * டெல்லி - கொச்சி, இடம்: தில்லி, நேரம்: இரவு 8.

ஆன்மீகச் செய்தி மலர் :

* * அருள்மிகு தூவாய் நாதர் திருககோவில்

மூலவர்    :    தூவாய் நாதர்
உற்சவர்    :    சத்தியவாகீஸ்வரர்
அம்மன்/தாயார்    :    பஞ்சின் மென்னடியாள்
தல விருட்சம்    :    பலாமரம்
தீர்த்தம்    :    ஆகாச தீர்த்தம்
ஆகமம்/பூஜை     :    காமிய ஆகமம்
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    திருஆருர்ப் பரவையுள் மண்டளி, ஆருர்ப்பரவையுண்மண்டளி
ஊர்    :    தூவாநாயனார் கோயில்
மாவட்டம்    :    திருவாரூர்
மாநிலம்    :    தமிழ்நாடு

பாடியவர்கள்:

சுந்தரர்

தேவாரப்பதிகம்

தூவாயா தொண்டு செய்வார் படுதுக்கங்கள்
காவாயா கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு
ஆவாஎன் பரவையுண்மண்டளி அம்மானே.


-சுந்தரர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 89வது தலம்.

 தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோயிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். ஒரு காலத்தில் இக்கோயில் கடலினுள் மண்கோயிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது.

இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

 தலபெருமை:

ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் தனது இரண்டாவது துணைவியான சங்கிலி நாச்சியாரிடம்,""நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்,'என்று உறுதி மொழி கொடுத்தார்.

திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர் சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார்.

மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், ""இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும்,'என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றார்.
இங்குள்ள அனைத்து விக்ரகங்களும் விஸ்வகர்மாவினால் செய்யப்பட்டது என்பர். கோயிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். சனிபகவான் தெற்கு பார்த்து அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். ஒரு காலத்தில் இக்கோயில் கடலினுள் மண்கோயிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது.

  தல வரலாறு:

பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்த போது, உலகை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர்.

சிவபெருமான், துர்வாச முனிவரிடம்,""இத்தலத்தின் அக்னி மூலையில் குளம் அமைத்து சிவனை வழிபட்டால் கடல் அமைதியடையும். உயிர்கள் காப்பாற்றப்படும்,'என்றார்.

அதன்படி, துர்வாசர் தலைமையில் முனிவர்கள் இங்கு ஒன்று கூடி குளம் அமைத்து, இறைவனை பூஜைசெய்தனர்.

முனிவர்களின் பூஜையை ஏற்ற சிவன், பொங்கிவந்த கடலை, அக்னி மூலையில் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்து கொண்டார். துர்வாச முனிவர் பூஜித்த காரணத்தினால் இத்தல இறைவனுக்கு துர்வாச நாயினார் என்ற பெயரும் உண்டு.

திருவிழா:

மார்கழி திருவாதிரை.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* பகுத்தறிவே எஜமானனாக இருக்க வேண்டும் - அன்னை

திறமையுடன் வாழவேண்டும், உடம்பிடமிருந்து அது கொடுக்கக்கூடிய உச்ச அளவைப் பெறவேண்டும் என்றால் பகுத்தறிவே வீட்டுக்கு எஜமானனாக இருக்க வேண்டும் என்பதை சிறு வயதிலேயே கற்கத் தொடங்கிவிடுவது நல்லது.

இது யோகம் அல்லது உயர் அனுபூதி பற்றிய விஷயம் அன்று. இது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டிலும், எல்லா இடத்திலும் கற்றுத் தரவேண்டிய ஒன்று. மனிதன் மனோமய ஜீவனாக இருப்பதற்காகப் படைக்கப்பட்டவன்.

வினாடி வினா :

வினா
- உலகத்தின் உயரமான மசூதி எது ?

விடை - ஹாசன் II மசூதி காஸபிளாங்கா, மொராகோ

இதையும் படிங்க :

கனவு நனவாக கைகொடுங்க சாமியோவ்...!
large_234435.jpg

கோவை:தெருவோரத்தில் உண்டு, உறங்கியபடி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் இன்ஜி., கல்லூரிகளில் படிக்கின்றனர். மிகுந்த சிரமத்துக்கு இடையே படிக்கும் இம்மாணவர்கள் படிப்பைத் தொடர, உதவும் உள்ளங்களின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பேரூர், செட்டிபாளையம் ஊராட் சிக்கு உட்பட்டது ஆறுமுகக்கவுண்டனூர். இங்கு நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் இரு மாணவர்கள், படிப்பை தொடர நிதியின்றி பரிதவிக்கின்றனர்.

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் பார்த்திபன், இந்துஸ்தான் கல்லூரியில் எம்.சி.ஏ., முதலாமாண்டு படிக்கிறார்; 83 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ள இவர் படிப்பதும், உறங்குவதும் தெருவில் தான்.சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் குடிசையில் இருந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட, இரவில் ரோட்டோரத்தில் படுத்து இவரது குடும்பத்தினர் உறங்குகின்றனர். ஒரு முறை கல்லூரி பாடப் புத்தகங்களும் மழைவெள்ளத்தில் நனைந்து நாசமான சம்பவமும் நடந்திருக்கிறது. இரவு 12.00 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டு, வாகனப்போக்குவரத்து குறைந்தபின்னர் பேரூர் ரோட்டோரங்களில் படுத்து உறங்குகின்றனர். பார்த்திபன் பி.சி.ஏ., பட்டப்படிப்பையும் தனியார் கல்லூரியில் முடித்திருக்கிறார். ஆனால், முதல் பட்டதாரிக்கான கல்வி உதவித்தொகை உட்பட எந்த கல்வி உதவித்தொகையும் இவருக்கு கிடைக்கவில்லை. படிப் பதற்கு புத்தகங்கள் வாங்க பணம் இல்லாததால், கல்லூரி நூலகத்தை பயன்படுத்திக் கொள்கிறார். எம்.சி. ஏ., படித்த போதும், லேப்டாப் இல்லை. இரவில் அண்டை வீடுகளில் கேட்டு, வாசலில் உள்ள மின்விளக்கு வெளிச்சத்தில் படிக்கிறார். வங்கியில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது; ஆயினும் 1.7 லட்Œம் செலவாகி உள்ள நிலையில் 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே கடனாக கிடைத்திருக்கிறது.

அதேபோன்று, மதன் என்ற மற்றொரு நரிக்குறவர் இன மாணவர், இன்டஸ் இன்ஜி., கல்லூரியில் பி.டெக்., தகவல் தொழில்நுட்பம் முதலாமாண்டு பயின்று வருகிறார். கவுன்சிலிங் மூலம் இடம் கிடைத்திருக்கிறது. இவ ரும் கல்விக்கடன் பெற்றுள்ளார். இதுவரை, 56 ஆயிரம் ரூபாய் செலவாகி இருக்க, 26 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஒரு ஆறுதலாக, முதல்பட்டதாரிக்கான உதவித்தொகை இவருக்கு வழங்கப்படுகிறது. இவரும், தெருவில் படுத்துறங்கி பக்கத்து வீட்டுவாசலில் உள்ள மின்விளக்குகள் மூலமே படித்து வருகிறார். கல்லூரி பஸ்சுக்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய்; கல்விக்கட்டணமாக 15,000 ரூபாய் செலவு ஏற்படுதாக கூறும் இவருக்கு "லேப்டாப்' இல்லை.நல்ல உடை இல்லை; கட்டாயம் ஷூ அணிந்து செல்ல வேண்டும், புத்தகங்களை நூலகத்தில் எடுத்து மட்டுமே படிக்க முடியும் என்ற போதும் மனம்தளராமல் படித்து வருகின்றனர். இருவருமே பிளஸ் 2வரை தமிழ்வழியில் படித்தவர்கள் என்பதால், ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள, பயிற்சி வகுப்புக்குச் செல்ல விரும்புகின்றனர். கட்டணம் செலுத்த முடியாததால்செல்லவில்லை. தெருவில் உறங்கி தெருவிலேயே படிப்பதை விட, விடுதியில் தங்கிப் படிப்பது போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். பெற்றோர் ஊசி, பாசி விற்பதன் மூலம் ஈட்டும் வருவாய் அவர்களின் உணவுக்கே போதாத நிலையில், கல்விக்கு கூடுதலாக செலவிட நினைப்பது சிரமமே. சமூக, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய இரு மாணவர்கள், சுயமாக முன்னேறி இருக்கின்றனர். உதவும் உள்ளங்கள் 97506 70733 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.




நன்றி - தின மலர், தின மணி, சமாச்சார். தட்ஸ்தமிழ்.

--

1 comment:

சாகம்பரி said...

சிரமம் எடுத்து செய்த பதிவு என்று தெரிகிறது. செய்திகள் தயாரிக்க நிறைய HOME WORK செய்திருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

Post a Comment