Monday, May 16, 2011

இன்றைய செய்திகள் - மே,16 , 2011


முக்கியச் செய்தி :

ரயில் தண்டவாளம் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு இளைஞருக்கு பாராட்டு
திருத்தணி, மே 15: திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை வாலிபர் ஒருவர் பார்த்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணிக்கு நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு மின்சார ரயில் ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் வழியாக திருத்தணி நோக்கி வந்துகொண்டிருந்தது.

 திருத்தணி தர்மராஜாகோயில் எதிரே உள்ள ஏரியில் வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வாலிபர் ரமேஷ்(21), ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்்ற போது தண்டவாளம் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, சென்னையில் இருந்து திருத்தணிக்கு வந்துகொண்டிருந்த மின்சார ரயிலைப் பார்த்ததும் மேலும் அதிர்ச்சியடைந்தார். உடனே ரமேஷ் தான் அணிந்திருந்த சிவப்புநிற பனியனைக் கழற்றி கொடிபோல் காட்டியும், கூச்சலிட்டும் ரயிலை நிறுத்தினார்.

 பின்னர் ரயில் ஓட்டுநர் கீழே இறங்கிவந்து ரயில் தண்டவாளம் விரிசலடைந்தது பார்த்து திருத்தணி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்டவாள விரிசலை சரி செய்தனர்.

 இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி போலீஸôர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பெரும் விபத்தில் இருந்து ரயிலை தடுத்து நிறுத்திய வாலிபர் ரமேஷை திருத்தணி போலீஸôரும், ரயில்வே நிர்வாகத்தினரும் பாராட்டி நன்றி தெரிவித்தனர். இதனால் திருத்தணி - அரக்கோணம் இடையே 1 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உலகச் செய்தி மலர் :

* இந்தியா மீது தாக்குதல் நடத்த பாக். ஒத்திகை'
 இஸ்லாமாபாத், மே 15: மற்றுமொரு அபோடாபாத் சம்பவத்தைப் நிகழ்த்திப் பார்க்க இந்தியா முயற்சிக்குமானால், பாகிஸ்தான் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும். அதற்காக இந்தியாவில் சில இடங்களை குறித்து வைத்துள்ளோம். மேலும் அதற்கான ஒத்திகையையும் நடத்திப் பார்த்துள்ளோம் என்று அந்நாட்டின் ஐஎஸ்ஐ உயரதிகாரி அஹமத்சுஜா பாஷா எச்சரித்துள்ளார்.

 பாகிஸ்தானின் செனட், தேசிய சபை கூட்டுக் குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஷா இவ்வாறு இந்தியாவை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 அபோடாபாத் நகரில் பின் லேடன் வசித்து வந்தது, அவரை அமெரிக்க படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றது என எதையுமே முன்கூட்டி கண்டுபிடிக்க தவறியதற்காக ஆட்சியாளர்களின் கடும் கோபத்திற்கு உள்ளானவர் தான் பாஷா.

* பின்லேடன் உடலை எடுத்துச் சென்ற போர்க்கப்பலை பார்க்க அனுமதி

kappal.jpg

வாஷிங்டன், மே 15: அல்-காய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் உடலை கடலில் அடக்கம் செய்ய எடுத்துச் சென்ற கார்ல் வின்சன் என்ற போர்க்கப்பலை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
 பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்கக் கமாண்டோ வீரர்கள் சுட்டுக்கொன்று அவரது உடலை ஹெலிகாப்டரில் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து பின்லேடன் உடல் கார்ல் வின்சன் போர்க் கப்பல் மூலமே கடலுக்குள் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.

 இதனால் இந்த போர்க்கப்பலை பார்ப்பதற்கு பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். இதை புரிந்து கொண்ட அமெரிக்கா கப்பலைப் பார்க்க அனுமதி அளித்துள்ளது. கார்ல் வின்சன் கப்பல் இப்போது பிலிப்பின்ஸின் மணிலா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

 பிலிப்பின்ஸ் நாட்டு அதிபர் 3-வது பெனிங்கோ அகியூனோ, அவரது அமைச்சரவை சகாக்கள், முக்கிய ராணுவ அதிகாரிகள் ஆகியோர் கார்ல் வின்சன் கப்பலை சனிக்கிழமை பார்வையிட்டனர்.

 இதைத்தொடர்ந்து சில பத்திரிகையாளர்களும் சென்று பார்வையிட்டனர்.

 கப்பலைப் பார்வையிட வருபவர்கள் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து கப்பலுக்குள் விரிவாக ஏதும் விவாதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 இதனால் பார்வையாளர்கள் கார்ல் வின்சன் கப்பலை அமைதியாகப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

 பின்லேடனின் உடலை எடுத்துச் சென்ற கப்பல் என்பதால் அதன் மீது அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி கோபத்தை தீர்த்துக்கொள்ள முயலலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் அக்கப்பலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

* சீனாவில் 7 ஆயிரம் கிலோ எடையுள்ள டைனோசரின் எலும்புகள்
tinosar.jpg

பெய்ஜிங், மே 15: சீனாவில் 7 ஆயிரம் கிலோ எடையுள்ள பிரமாண்டமான டைனோசரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் கிழக்கு சாங்டாங் பகுதியில் இருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த எலும்புகளை கண்டெடுத்துள்ளனர்.

 ÷இவை மிகவும் பிரமாண்டமான எலும்புகளாக உள்ளன. டைசோனரின் மண்டை ஓடு, மேல் தாடை ஆகியவற்றின் எலும்புகள் கிடைத்துள்ளன. இவை சுமார் 11 மீட்டர் நீளம், 4 மீட்டர் உயரத்துடன் மொத்தம் 7 ஆயிரம் கிலோ எடையுடன் உள்ளன.

 ÷இப்பகுதியில் இதுபோன்ற பல படிமங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதாகவும், ஆனால் அவை சரியாக அடையாளம் காணப்படவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள டைனோசரின் எலும்புகளைப் பார்க்கும் போது அவை மிகவும் பிரமாண்டமான உருவத்தில் இருந்திருக்க வேண்டும். முன்கால்கள் உயரம் குறைந்தவை, மிக நீண்ட தலை, தாடையைக் கொண்ட டைனோசர் வகைகள் இங்கு வாழ்ந்துள்ளன.

 ÷இவை டைரனொசோரஸ் எனப்படும் டி ரெக்ஸ் இனத்தைச் சேர்ந்தவை. 65 முதல் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளன. இதே வகையைச் சேர்ந்த டைனோசர்களின் படிமங்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு கிடைத்துள்ள படிமங்களைவிட இவை அளவில் பெரியது.

 ÷வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளிலும் இதுபோன்ற டைனோசர்கள் வாழ்ந்துள்ளன. இவற்றின் முன்னங்கால்களில் இரண்டு விரல்களே இருக்கும். ஆனால் பிரமாண்டமான தலையும், தாடைகளும் மிகவும் பலம் வாய்ந்தவையாக இருந்துள்ளன. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது என்று விஞ்ஞானிகள் சீன செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

 ÷உலகிலேயே சீனாவின் சுசியாங் பகுதியில்தான் அதிக அளவில் டைனோசரின் எலும்புகள் கிடைத்து வருகின்றன. 1960-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 10 முறை அங்கிருந்து டைனோசரின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகை டைனோசர்கள் அங்கு வாழ்ந்துள்ளன.

* பின்லேடன் ஆதரவாளர்கள் எந்நேரத்திலும் தாக்கலாம்?அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு
சிகாகோ, மே 15: சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கொன்றுவிட்டதால் அவரது ஆதரவாளர்கள் கோபம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது.

பின்லேடன் வசித்து வந்த வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்லேடனின் எதிர்காலத் திட்டம் குறித்த ஆவணங்களையும் அமெரிக்கக் கமாண்டோ வீரர்கள் கைப்பற்றினர். அதன் மூலம் இரட்டை கோபுரத் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நினைவு நாளான்று (செப்டம்பர் 11) அமெரிக்கா மீது மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த அல்-காய்தா திட்டமிட்டிருந்தது அம்பலமானது.

அப்படி நடத்தவிருக்கும் தாக்குதல் அமெரிக்காவையே நிலைகுலைய வைப்பதாக இருக்கும் வகையில் பின்லேடன் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பின்லேடன் இறந்தாலும் அவரது ஆசையை, திட்டத்தை அவரது ஆதரவாளர்கள் நிச்சயம் நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.

நாட்டின் மத்தியில் அமைந்துள்ள சிகாகோ நகரைத் தாக்குவதே அல்-காய்தாவின் நீண்டகாலத் திட்டமாக இருந்து வருகிறது. நகரில் உயரமான கட்டடங்கள் அமைந்துள்ளதால் தாக்குவதற்கு எளிது என்பதால் அவர்கள் இந்நகரை தேர்ந்தெடுத்து பல முறை தாக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது.

இருப்பினும் சிகாகோவை தாக்க மீண்டும் முயற்சிக்கலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் அந்நகரின் மூலை முடுக்கெல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அல்-காய்தாவினரிடம் இருந்து சிகாகோ நகருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இதற்கு எவ்வித உறுதியான ஆதாரமும் இல்லை. இருப்பினும் நகரை யார் தாக்க நினைத்தாலும் அவர்களுக்கு தக்கப் பதிலடி கொடுக்கப்படும். உள்ளூர் போலீஸôரும், எப்பிஐ அதிகாரிகளும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றனர்.

இதனால் மக்கள் அச்சம் அடைய வேண்டிய அவசியமில்லை என்று சிகாகோ எப்பிஐ பிரிவின் செய்தித்தொடர்பாளர் ரோஸ் ரைஸ் தெரிவித்தார்.
பின்லேடன் பாகிஸ்தானில் மறைந்து வாழ்ந்துள்ளார். நாங்கள் அவரை வலைவீசித் தேடியபோதெல்லாம் பாகிஸ்தான் வாயைத் திறக்கவில்லை. பின்லேடனுக்கு பாகிஸ்தான் உதவியதை அந்நாட்டு புலனாய்வுத் தகவல்கள் உறுதி செய்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

""அல்-காய்தாவிடம் இருந்து அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்கா உஷாராகவே உள்ளது.

நாட்டின் அனைத்துப் பகுதியுமே தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பிரிவுகளுடன் உளவு அமைப்பு தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்கிறது. ஒருவேளை பயங்கரவாதிகள் தாக்க முயற்சித்தால் அவர்கள் தப்ப முடியாது'' என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் மாத்சாண்ட்லர் தெரிவித்தார்.


* மும்பையில் தாக்குதல் நடத்தியது லஷ்கர் பயங்கரவாதிகள்தான்: அமெரிக்கா
வாஷிங்டன், மே 15: மும்பையில் தாக்குதல் நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள்தான். இதனை மறுத்துக் கூற முடியாத அளவுக்கு ஆதாரங்கள் உள்ளன என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறியுள்ளது.

 இதனை கடந்த டிசம்பர் 2008-ஆம் ஆண்டில் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தில் இருந்த உயரதிகாரிகள் பாகிஸ்தானிடம் கூறியுள்ளனர். இத்தகவலை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

 மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது. அதில் மும்பையில் நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர் பயங்கரவாதிகள்தான் காரணம் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தானின் ராணுவ உளவு நிறுவனம் தொடர்ந்து ஆதரவும், உதவியும் அளித்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் லஷ்கர் பயங்கரவாதிகள் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ல் மும்பையில் புகுந்து ரயில் நிலையம், நட்சத்திர ஹோட்டல்கள் என முக்கிய இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

 இதற்கு லஷ்கர்-இ-தொய்பா இயக்கம்தான் காரணம் என்பதற்கு இந்தியா பல ஆதாரங்களை அளித்தும் தங்கள் நாட்டில் உள்ள அந்த பயங்கரவாத இயக்கத்தினர் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

 இந்நிலையில் மும்பை தாக்குதலுக்கு லஷ்கர்தான் காரணம் என அப்போதே பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறியுள்ளது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்டபின் அமெரிக்கா - பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

 எனவே பாகிஸ்தானுக்கு எதிராக மற்ற நாடுகளை அணி திரட்டும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே மும்பை தாக்குதல் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடித விவரம் அமெரிக்காவில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* இன்று கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் குடியரசுத் தலைவர் முன் அணிவகுப்பு

பெங்களூர், மே 15: பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில், கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் முன் அணிவகுப்பு நடத்துவார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

 கர்நாடகத்தில் உள்ள எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசை கலைக்க மத்திய அரசுக்கு அம்மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் பரிந்துரை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அரசுக்கு ஆதரவாக ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுக்க முயன்ற பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களையும் சந்திக்க பரத்வாஜ் மறுத்துவிட்டார். இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் அவசரக்கூட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

 இக்கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களிடம் அக்கட்சி எம்எல்ஏக்கள் சிலர் கூறுகையில், ஆளுநரின் முடிவை எதிர்த்தும், கர்நாடக பாஜக அரசுக்கு முழுப் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்கவும் அனைத்து எம்எல்ஏக்களும் திங்கள்கிழமை தில்லி செல்லவுள்ளோம். தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பாஜக எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்துவர்.

 224 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 121 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இதை குடியரசுத் தலைவர் முன் நிரூபிப்போம் என்று அவர்கள் கூறினர்.

 கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 16 பேரின் எம்எல்ஏ பதவியை பறித்து பேரவைத் தலைவர் கேஜி போபையா கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டார். அந்த உத்தரவை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.


* எரிபொருள் விலை உயர்வு: அமைச்சரவைக் குழு கூட்டம் அடுத்த வாரம் கூடுகிறது
புது தில்லி, மே 15: எரிபொருள்களின் விலை உயர்த்துவது குறித்து அடுத்த வாரம் அமைச்சரவைக் குழு கூடி முடிவு செய்ய உள்ளது.

 அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதன் எதிரொலியாக அமைச்சரவைக் குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

 "எரிபொருள்களின் விலை உயத்துவது பற்றி அடுத்த வாரம் கூட உள்ள அமைச்சரவைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்' என்று, இக்குழுவுக்கு தலைமை ஏற்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்துவது குறித்து முடிவு செய்வதற்காக பணிக்கப்பட்ட அமைச்சரவை குழு, அதற்கான கூட்டத்தை 5 மாநில தேர்தல் முடிவு வரை ஒத்திவைத்திருந்தது.

 இந்நிலையில், தமிழகம் தவிர, மேற்கு வங்கம், அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவாக விலை லிட்டருக்கு ரூ.5 என பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* கர்நாடக சட்டப் பேரவையைக் கலைக்க மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை?
பெங்களூர்,மே 15: கர்நாடக சட்டப்பேரவையைக் கலைக்கப் பரிந்துரைத்து மத்திய அரசுக்கு ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் அறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

 ÷16 எம்எல்ஏக்களை பதவிநீக்கம் செய்து பிறப்பித்த சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை தொடர்ந்து கர்நாடக அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதுதில்லியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூர் திரும்பிய ஆளுநர் பரத்வாஜ், உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

 ÷இந்நிலையில், மஜத செய்தி தொடர்பாளர் ஒய்.எஸ்.வி. தத்தா ஆளுநரின் உதவியாளரைச் சந்தித்து, பாஜக அரசைக் கலைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யக் கோரி கடிதம் கொடுத்தார். இதையடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி. பரமேஸ்வர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மோட்டம்மா ஆகியோரும், இதே கோரிக்கையை வலியுறுத்தி அவரிடம் கடிதம் கொடுத்தனர்.

 ÷இந்நிலையில், அரசுக்கு ஆதரவளிப்பதாக புதுதில்லியில் இருந்து தொலைநகல் அனுப்பிய பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும், ஞாயிற்றுக்கிழமை மாலையே பெங்களூர் திரும்பினர். அவர்கள் ஆதரவுக் கடிதம் கொடுக்க ஆளுநர் மாளிகைக்கு மாலை 6 மணிக்கு வந்தனர்.

 ஆனால், 9 மணி வரை ஆளுநரைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கர்நாடக அரசின் புதுதில்லி பிரதிநிதி தனஞ்செய்குமார் உள்ளிட்ட 5 பாஜக தலைவர்களை மட்டும் உள்ளே அனுமதித்த ஆளுநர், அதிருப்தி எம்எல்ஏக்களின் கடிதத்தை பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

 சட்டப்பேரவையைக் கலைக்கப் பரிந்துரை: இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளபடி மாநிலத்தில் அரசியலமைப்புச்சட்டம் சீர்குலைந்துள்ளதால், கர்நாடக சட்டப்பேரவையைக் கலைக்க குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்யுமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாக நம்பத்தகுந்த வடடாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கடிதத்ததை ஆளுநரின் உதவியாளர் திவாரி, இரவு 8 மணிக்கு புதுதில்லிக்கு கொண்டு சென்றதாகத் தெரிகிறது.

குடியரசுத் தலைவருக்கு எடியூரப்பா கடிதம்: ஆளுநரின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக ஆட்சேபித்துள்ள முதல்வர் எடியூரப்பா, அப்படி ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தால் அதனை ஏற்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 அதில், 11 அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவு தனக்கிருப்பதாகவும், சட்டப்பேரவையில் 121 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக அரசியலில் நடந்து வரும் இந்த திடீர் மாற்றங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

* திருமலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு: சணல், காகிதப் பையில் லட்டு
திருப்பதி,மே.15: திருமலை கோவில் நிர்வாகம் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
 இதன் ஒரு பகுதியாக பக்தர்களுக்கு பிளாஸ்டிக் கவரில் லட்டு வழங்கப்படுவதற்கு மாற்றாக சணல், காகிதத்தால் ஆன பைகளில் லட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணியை ஆந்திர மாநில மாற்றுத் திறனாளிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.

 இந்நிலையில் சணல் பை ரூ.6, காகித பை ரூ.4 விலையில் தயாரித்து சோதனை அடிப்படையில் பக்தர்களிடம் விற்பனை செய்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

 எனவே கோவில் நிர்வாகம் விரைவில் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலுமாக ஒழித்து சணல் பைகளில் லட்டு வழங்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.

* புதுவை முதல்வராக புதன்கிழமை பதவியேற்கிறார் ரங்கசாமி

pdyrenkasa.jpg

புதுச்சேரி, மே 15: புதுச்சேரி முதல்வராக புதன்கிழமை பதவியேற்கவுள்ளார் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி (60).

 புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி 20 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை பெற்றது.

 இதில், என்.ஆர். காங்கிரஸ் மட்டும் 15 இடங்களை பெற்று தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. அத்துடன் சுயேச்சை எம்.எல்.ஏ.வான வி.எம்.சி. சிவக்குமார், ரங்கசாமிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.

 இந்நிலையில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அக் கட்சியின் பேரவைக் குழுத் தலைவராக என்.ரங்கசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக் கடிதத்தை வழங்கினார்.

 ரங்கசாமி அளித்த கடிதம் மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உள்துறையின் ஒப்புதல் திங்கள்கிழமை கிடைக்கும் என தெரிகிறது.

 அதையடுத்து ரங்கசாமி, புதன்கிழமை முறைப்படி பதவியேற்பார் என அக் கட்சி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

 என்.ஆர்.காங்கிரஸ் மட்டுமே தனித்து ஆட்சியை அமைக்கும் நிலையில் உள்ளது.

 இதற்கிடையே தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை திங்கள்கிழமை சந்தித்து ரங்கசாமி ஆலோசனை நடத்துகிறார்.

* கேரள முதல்வராக உம்மன் சாண்டி தேர்வு

umansandi1.jpg

திருவனந்தபுரம், மே 15: கேரள சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக (முதல்வராக) உம்மன்சாண்டி அக்கட்சி எம்எல்ஏக்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 68 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பெரும்பான்மை இடங்களைப்பிடித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி கேரளத்தில் ஆட்சியமைக்கிறது. இதையடுத்து சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்க அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக (முதல்வராக) ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியை அடைய அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் முயற்சி செய்தார். ஆனால் அனுபவசாலியான உம்மன்சாண்டியைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் மேலிடம் ஆதரவு தெரிவித்ததாகக்கூறப்படுகிறது. இதையடுத்தே உம்மன்சாண்டி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 அரசியல் சட்டப்படி கேரள அமைச்சரவையில் முதல்வரைத் தவிர 20 அமைச்சர்கள் இடம் பெற வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது குறித்து உம்மன்சாண்டி முடிவு செய்வார். இதைத்தொடர்ந்து புதிய அரசு வரும் புதன்கிழமை பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* ஐ.நா. அறிக்கை: இந்திய ஆதரவை கோருகிறார் இலங்கை அமைச்சர்

புதுதில்லி,மே 15 : இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பு திங்கள் கிழமை நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.

 உள்நாட்டுப் போர் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக அமைந்துள்ள ஐ.நா. அறிக்கை குறித்து தங்கள் நாட்டின் நிலை குறித்து விளக்கவும், இலங்கைக்கு ஆதரவு திரட்டவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

 தில்லி வரும் அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை திங்கள்கிழமை சந்தித்து இதுகுறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மறுநாள் செவ்வாய்க்கிழமை அவர் கொழும்பு திரும்புவார்.

 கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகளை அந்நாட்டு அரசு மீறியதாகவும், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு உணவு சரிவர வழங்கப்படவில்லை, பலர் பட்டினியால் இறந்தனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

 எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை அரசு நடத்தியது இனப்படுகொலை என்று ஐ.நா. குழு குற்றம் சாட்டியது. இதை அடுத்து, அந்நாட்டு அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 ஆனால், அந்த நாடு இது குறித்து கவலைப்படவில்லை. இனப்படுகொலை குறித்து பல நாடுகள் குரல் எழுப்பிய போதும் இந்தியாவோ அமைதி காத்தது.

 இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐ நா பாதுகாப்பு சபையில் உலக நாடுகளிடையே பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 29 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இத்தகைய பின்னணியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் தில்லியில் இந்தியாவிடம் தங்களது நிலையை விளக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஆந்திர விவசாயிகள் பிரச்னை: ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம்
jehanmohan.jpg

குண்டூர், மே 15: ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மக்களவை இடைத்தேர்தலில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, விவசாயிகள் பிரச்னைகளுக்காக 48 மணி நேர உண்ணாவிரதத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.

 குண்டூரின் புறநகரப் பகுதியில் உள்ள ரெட்டி கல்லூரி மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

 அவருடன் 8 எம்எல்ஏக்கள், 3 மேலவை உறுப்பினர்கள், ஒரு எம்.பி. உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் அமர்ந்திருக்கின்றனர். 13 ஏக்கர் பரப்புள்ள கல்லூரி மைதானம் முழுவதும் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரால் நிரம்பியுள்ளது.

 விவசாயிகளின் இன்னலை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காவே இந்த உண்ணாவிரதம் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 "நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயித்திருக்கிறது. ஆனால் அந்த விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அரசே அவற்றைக் கொள்முதல் செய்ய வேண்டும்' என்று உண்ணாவிரதத்தின்போது ஜெகன்மோகன் வலியுறுத்தினார்.

 மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்கிற தனிக்கட்சியைத் தொடங்கினார். அண்மையில் நடந்த கடப்பா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மாநிலச் செய்தி மலர் :

* பேரவையின் வரலாறு

sec.jpg

சென்னை, மே 15: தமிழக சட்டப் பேரவைக் கட்டடமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வரலாறு, அங்குள்ள மிக உயரமான கொடிமரத்தைப் போலவே கம்பீரமானது.

 கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலராக இருந்தவர் பிரான்சிஸ் டே. இவர் விஜயநகர அரசின் நிர்வாகிகளிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை வாங்கி தலைமைச் செயலகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானம் இருக்கும் இடத்தில் போர்ட் ஹவுஸ் என்ற கட்டடத்ததைக் கட்டினார்.

 இந்தக் கட்டடம் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான 23.4.1640 அன்று பயன்பாட்டுக்கு வந்தபோது, "செயின்ட் ஜார்ஜ் கோட்டை' என்று பெயரிடப்பட்டது.

 கோட்டை வளாகத்தில் தொன்மையான புனித மேரி ஆலயம் ஒன்று உள்ளது. 1678ம் ஆண்டு இது கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில்தான் 1753 ஆம் ஆண்டு கவர்னல் ஜெனரல் ராபர்ட் கிளைவின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

 1687 முதல் 1692 வரை ஆளுநராக இருந்த யேல் என்பவர் காலத்தில்தான் ஆசியாவிலேயே மிக உயரமான கொடிமரம் இங்கு அமைக்கப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட கொடிமரம் இது.
 கோட்டைக்குள் சட்டப்பேரவை கூட்ட மண்டபம் 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்போது நூற்றாண்டு கண்ட புராதான கட்டமாக இது இருக்கிறது.

 சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு முதல் தேர்தல் 1920-ல் நடைபெற்றது. இதில் நீதிக் கட்சி வெற்றிபெற்று ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதல் பிரிமியர் என்ற அழைக்கப்பட்ட முதல்வர் பதவியை ஏற்றார்.
 12.1.1921-ல் இருந்து 1937 வரை நடைபெற்ற நீதிக் கட்சி ஆட்சியில் பேரவைக் கூட்டங்கள் கோட்டையிலேயே நடைபெற்றன. இதற்கிடையில், சென்னை மாகாண ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபு 6.3.1922-ல் சட்டப்பேரவைக்கு வந்துள்ளார். அப்போது தேக்கு மரத்தால் செய்யப்பட்ட நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய பேரவைத் தலைவர் இருக்கையைப் பரிசளித்தார். அந்த இருக்கையே இன்றும் பேரவைத் தலைவரின் இருக்கையாக இருந்து வருகிறது.

 14.7.1937ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது சேப்பாக்கத்தில் உள்ள செனட் மண்டபத்துக்கு பேரவை மாற்றப்பட்டது. 21.12.1937 வரை சுமார் 5 மாதங்கள் இங்குதான் பேரவை நடைபெற்றுள்ளது.

 இதன் பின் 27.1.1938 முதல் 26.10.1939 வரை சென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டத்தில் பேரவை இயங்கியது.

 30.10.1939-ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களும் ஈடுபட பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தித்ததைக் கண்டித்து ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை ராஜிநாமா செய்தது. இதன்பின் 30.4.1946 வரை தேர்தலே நடைபெறாமல் ஆளுநர் ஆட்சியே தொடர்ந்தது. பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆந்திரகேசரி டி.பிரகாசம் 24.5.1946-ல் முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து, 27.3.1952 வரை மீண்டும் கோட்டையிலேயே பேரவை திரும்பிச் செயல்பட்டது.

 1952-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று, மேலவை உறுப்பினராக இருந்த ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. அப்போது மேலவை உறுப்பினர்களையும் சேர்த்து பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 375 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கைக்கு கோட்டை மண்டப இடம் போதாது என்பதால் சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டு அங்கு பேரவை செயல்பட்டது. பேரவை கட்டுவதற்காக 10 லட்சம் ரூபாய் வரை அப்போது செலவிடப்பட்டுள்ளது.

 (இந்தப் பேரவை கட்டடம்தான் பின்னர் பாலர் அரங்கமாகவும், கலைவாணர் அரங்கமாகவும் இருந்தது. பின்னர் திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது.)

 1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு பேரவை மீண்டும் கோட்டைக்கே திரும்பி 30.3.1959 அங்கு நடைபெற்றது.

 20.4.1959-ல் தொடங்கி 30.4.1959 வரையிலும், 4.5.1959 முதல் 9.5.1959 வரையிலும் உதகையிலுள்ள அரண்மூர் மாளிகையிலும் பேரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

 இதன்பின் 31.8.1959-ல் இருந்து 13.1.2010 வரை கோட்டையிலேயே பேரவைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன.

 ஓமந்தூரார், பி.எஸ். குமாரசாமிராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர்.
 இதற்கிடையில் 2001-ல் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது புதிய தலைமைச் செயலகம் கட்டு முயற்சி நடைபெற்றது. ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு கட்டத் திட்டமிடப்பட்டு, எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இதைப்போல அண்ணா பல்கலைக்கலைக்கழகத்தின் இடத்திலும் புதிய தலைமை செயலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.

 ÷2006 திமுக ஆட்சி வந்துபோது அரசின் தோட்டத்தில் 1,000 கோடி ரூபாயில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. இதனை பிரதமர் மன்மோகன் சிங் 13.3.2010-ல் திறந்து வைத்தார்.

 இங்கு 19.10.2010 பேரவைக் கூட்டம் தொடங்கப்பட்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
 செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த பேரவை மண்டபம் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகமாக மாற்றப்பட்டது.

 இந்நிலையில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா திங்கள்கிழமை ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். பேரவைத் தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதா தெரிவித்தவாறு மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பேரவை செயல்பட உள்ளது.

* அதிமுக அரசில் 34 அமைச்சர்கள்: சென்னை பல்கலை. அரங்கில் இன்று பதவி ஏற்பு
govejaya.jpg

சென்னை, மே 15: மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக திங்கள்கிழமை பொறுப்பேற்க உள்ளார் ஜெயலலிதா. அவருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 33 பேரும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளனர். இவர்களுக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை மாலை ஜெயலலிதாவும், அவரது அமைச்சரவை சகாக்களும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்து பணிகளைத் தொடங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான பணிகளை அந்தக் கட்சி தலைமை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக பேரவைக் குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அமைச்சர்கள் பட்டியல்
ஜெயலலிதா---முதல்வர்---இந்திய ஆட்சிப் பணி,
போலீஸ் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய்
அலுவலர்கள், லஞ்சத் தடுப்பு, காவல், உள்துறை.
ஓ.பன்னீர்செல்வம்---நிதித் துறை
கே.ஏ.செங்கோட்டையன்---வேளாண் துறை
நத்தம் ஆர். விஸ்வநாதன்---மின்சாரத் துறை
கே.பி.முனுசாமி---நகராட்சி நிர்வாகம், ஊராட்சித் துறை
சி.சண்முகவேலு---தொழில் துறை
ஆர்.வைத்திலிங்கம்---வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி---உணவுத் துறை
சி.கருப்பசாமி---கால்நடைத் துறை
பி.பழனியப்பன்---உயர்கல்வித் துறை
சி.வி.சண்முகம்---பள்ளிக் கல்வித் துறை
செல்லூர் கே.ராஜு---கூட்டுறவுத் துறை
கே.டி.பச்சமால்---வனத் துறை
எடப்பாடி கே.பழனிச்சாமி---நெடுஞ்சாலை மற்றும்
சிறு துறைமுகங்கள்.
எஸ்.பி.சண்முகநாதன்---இந்து சமய அறநிலையத் துறை.
கே.வி.ராமலிங்கம்---பொதுப்பணித் துறை.
எஸ்.பி.வேலுமணி---சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம்.
கே.டி.எம்.சின்னய்யா---பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை.
எம்.சி.சம்பத்---சிறுதொழில்கள் துறை.
பி.தங்கமணி---வருவாய்த் துறை.
ஜி.செந்தமிழன்---செய்தி மற்றும் விளம்பரத் துறை.
எஸ்.கோகுல இந்திரா---வணிகவரித் துறை.
செல்வி ராமஜெயம்--சமூகநலத் துறை.
பி.வி.ரமணா---கைத்தறி மற்றும் துணி நூல் துறை.
ஆர்.பி.உதயகுமார்---தகவல் தொழில்நுட்பத் துறை.
என்.சுப்பிரமணியன்---ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத் துறை.
வி.செந்தில் பாலாஜி---போக்குவரத்துத் துறை.
என்.மரியம் பிச்சை---சுற்றுச்சூழல் துறை.
கே.ஏ.ஜெயபால்---மீன்வளத் துறை.
இ.சுப்பையா---நீதித் துறை.
புத்திசந்திரன்---சுற்றுலாத் துறை.
எஸ்.டி.செல்லபாண்டியன்---தொழிலாளர் நலத் துறை
வி.எஸ்.விஜய்---சுகாதாரத் துறை.
என்.ஆர்.சிவபதி---விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை.

* பொறியியல் கல்லூரி விண்ணப்பம் பெற திருப்பூர் மாவட்டத்தில் மையம் இல்லை: பெற்றோர் குமுறல்

உடுமலை, மே 15: பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பெற திருப்பூர் மாவட்டத்தில் மையம் அமைக்கப்படாதது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 ÷தமிழகத்தில் மொத்தம் 124 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுயநிதி கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அடங்கும். இது தவிர இந்த ஆண்டு 24 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் புதிதாக அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளன.

 ÷பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த ஆண்டு 1.5 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

 ÷பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்தே பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களைப் பெற பிளஸ் 2 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 16 முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்படும் என சென்னை அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 ÷அதாவது மே 16 முதல் 31 ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும், ஜூன் 3 ம் தேதி விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 ÷ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 500, எஸ்சி, எஸ்டி பிரிவுகளுக்கு ரூ. 250 எனவும் நேரிலும், தபாலிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இந் நிலையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள திருப்பூர் மாவட்டத்தில் மையங்கள் எதுவும் அமைக்காதது மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக திருப்பூர் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 2 மையங்களையாவது அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

* பல லட்சங்கள் சுருட்டிய போலி உளவுத்துறை அதிகாரி கோவையில் கைது
கோவை: கோவையில் உளவுத்துறை அதிகாரியாக நடித்து பல லட்சம் அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

டூபாக்கூர்

கோவை சித்தாபுதூரில் ஐயப்பன் கோவில் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆசாமி ஒருவர் தங்கினார். சுற்றியிருந்த நபர்களிடம் தன்னை மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர் அங்கிருந்தவர்களிடம் தனக்கு ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகளைத் தெரியும் என்றும், கொஞ்சம் பணம் செலவழித்தால் மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கித் தர முடியும் என்றும் கூறியுள்ளார். இவரை நம்பிய சிலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

போலீசில் புகார்

பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை கிடைக்காததால், இவரது நடத்தையில் சந்தேகம் கொண்டனர். இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். போலீசார் உடனே அந்த டூபாக்கூர் ஆசாமியை கைது செய்தனர்.

விசாரணையில், மேற்படி ஆசாமி கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குலு பகுதியைச் சேர்ந்த ரகுநந்தனின் மகன் சரத்குமார்(25)என்பது தெரிய வந்தது. இவர் கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தவர். அவரது அறையை சோதனை செய்ததில் போலீஸ் உடை, போலி ஆவணங்கள், போலீஸ் லத்தி போன்றவை சிக்கின. இவர் பல்வேறு இடங்களில் பல லட்சம் சுருட்டியுள்ளதும் தெரிய வந்தது.

களத்தில் இறங்கிய கமிஷனர்

இதன் பின், மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்த ஆசாமி மீதான வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தீவிர விசாரணையில் மேலும் பல மோசடிகள் வெளிவரலாம் என்கிறது காவல்துறை வட்டாரம்.

* தமிழக சட்டசபையில் பெண் எம்.எல்.ஏக்களினின் எண்ணிக்கை அடியோடு குறைவு
15-tn-assembly300.jpg

சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த முறையை விட இந்த முறை பெண் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

ஆண்டுக்கு ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது 22 பெண் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தற்போது 14 ஆக குறைந்து விட்டது. இவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர்.

இந்த ஆண்டு அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் 136 பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அவர்களில் 14 பேருக்கு மட்டுமே வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், 2006ம் ஆண்டு தேர்தலின்போது 156 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் பெண்களின் பங்கு வெறும் 5 சதவீதம்தான்.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 3 பெண்கள்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் - கோகுல இந்திரா, ராஜலட்சுமி மற்றும் பா. வளர்மதி. மூவருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.
கடந்த முறையை விட இந்த முறை பெண் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

ஆண்டுக்கு ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது 22 பெண் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தற்போது 14 ஆக குறைந்து விட்டது. இவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர்.

இந்த ஆண்டு அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் 136 பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அவர்களில் 14 பேருக்கு மட்டுமே வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், 2006ம் ஆண்டு தேர்தலின்போது 156 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் பெண்களின் பங்கு வெறும் 5 சதவீதம்தான்.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 3 பெண்கள்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் - கோகுல இந்திரா, ராஜலட்சுமி மற்றும் பா. வளர்மதி. மூவருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

பெரிய கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுக சார்பில், ஜெயலலிதா உள்பட 9 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே வென்றுள்ளனர்.

திமுக சார்பில் 11 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு அவர்களில் புஷ்பலீலா ஆல்பன் மட்டுமே வென்றுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் நான்கு பேர் நிறுத்தப்பட்டு விஜயதரணி மட்டுமே வென்றுள்ளார்.

சிபிஎம் சார்பில் பாலபாரதி மட்டும் நிறுத்தப்பட்டு அவர் வெற்றி பெற்றார்வர்த்தகச் செய்தி மலர் :

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதி 43 சதவீதம் வளர்ச்சி
மே 16,2011,00:31

புதுடில்லி:கடந்த, 2010-11ம் நிதியாண்டில், சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி, 43 சதவீதம் வளர்ச்சியடைந்து, 3.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது, 2009-10ம் நிதியாண்டில், 2.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, ஏற்றுமதி மேம்பாட்டு குழு தெரிவித்துள்ளது.இது குறித்து, இக்குழுவின் தலைவர் ஜாட்டின் ஆர் மேத்தா கூறியதாவது:கடந்த மார்ச் மாதம் வரையிலுமாக, சிறப்பு பொருளாதார மண்டலங்களில், 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 6 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

மத்திய அரசு, 584 சிறப்பு பொருளாதார மண்டலங்களை கொள்கை அளவில் அமைக்க முடிவு செய்துள்ளது. இதில், 377 மண்டலங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், 133 மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.

சிறப்பு பொருளாதார மண்டலங்களின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, 100 சதவீத வரிவிலக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 50 சதவீத வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மேத்தா கூறினார்

விளையாட்டுச் செய்தி மலர் :

* ஐபிஎல்லை வைத்து சூதாட்டம்-பாக். முன்னாள் கேப்டன் அக்ரம் ரஸா கைது
லாகூர் : ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய நடுவருமான அக்ரம் ரஸா கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் 6 புக்கிகளும் கைதாகியுள்ளனர்..

11 வருடத்திற்கு முன்பு பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டவர் இந்த ரஸா. இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தி்ல ஈடுபட்டு கைதாகியுள்ளார்.

குல்பர்க் நகர் என்ற இடத்தில் ஹோட்டலில் வைத்து இந்த ஏழு பேரையும் பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், குல்பர்க்கில் உள்ள லிபர்ட்டி பகுதியில் ஒரு ஹோட்டலி்ல வைத்து ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் அக்ரம் ரஸா. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன். தற்போது அம்பயராக இருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளை ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து நாங்கள் அங்கு சென்று கைது செய்தோம்.
 
அவர்களிடமிருந்து பணம், மொபைல் போன்கள், இந்தியாவைச் சேர்ந்த பல தொலைபேசி எண்கள் அடங்கிய டைரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தோம் என்றனர்.

46 வயதாகும் ரஸா, 9 டெஸ்ட் மற்றும் 49 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக்கின் நெருங்கிய நண்பர் இந்த ரஸா. இவரும் சூதாட்டத்தில் சிக்கி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.

கிரிக்கெட்

கொச்சி டஸ்கர்ஸ் சுலப வெற்றி: ராஜஸ்தான் அணி ஏமாற்றம்
இந்தூர்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் பிராட் ஹாட்ஜ் "ஆல்-ரவுண்டராக' அசத்த, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் ஏமாற்றிய ராஜஸ்தான் அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.

இந்தூரில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கொச்சி அணி கேப்டன் மகிளா ஜெயவர்தனா, "பீல்டிங்' தேர்வு செய்தார்.

மேனரியா ஆறுதல்:

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு, பசால்-டிராவிட் ஜோடி மோசமான துவக்கம் அளித்தது. ஆர்.பி. சிங் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த பசால் (16), அதே ஓவரில் அவுட்டானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிட் (1) சோபிக்கவில்லை. அடுத்து களமிறங்கிய அஜின்கியா ரகானே (8) வந்த வேகத்தில் திரும்பினார். பிரசாந்த் வீசிய ஓவரில் மூன்று "சிக்சர்' விளாசிய வாட்சன் (20) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பினல் ஷா (5), ஜேக்கப் ஓரம் (0), ஷேன் வார்ன் (2) உள்ளிட்டோர் பிராட் ஹாட்ஜ் சுழலில் சிக்கினர். சவான் (1), "ரன்-அவுட்' ஆனார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அசோக் மேனரியா, 28 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஹாட்ஜ் சுழலில் அவுட்டானார். பரமேஸ்வரன் வேகத்தில் தோஷி, "டக்-அவுட்' ஆக, ராஜஸ்தான் அணி 18.3 ஓவரில் 97 ரன்களுக்கு சுருண்டது.

கொச்சி அணி சார்பில் பிராட் ஹாட்ஜ் 4, ஸ்ரீசாந்த், பரமேஸ்வரன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஹாட்ஜ் அபாரம்:

சுலப இலக்கை விரட்டிய கொச்சி அணிக்கு மகிளா ஜெயவர்தனா (6) ஏமாற்றினார். "சிக்சர்' மழை பொழிந்த பிரண்டன் மெக்கலம், 12 பந்தில் 29 ரன்கள் (4 சிக்சர், ஒரு பவுண்டரி) எடுத்து அவுட்டானார். பின் இணைந்த பார்த்திவ் படேல், பிராட் ஹாட்ஜ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடியாக ரன் சேர்த்தது. டெய்ட் பந்தில் பார்த்திவ் ஒரு "சிக்சர்' விளாசினார். மறுமுனையில் தோஷி, சவான் பந்தில் தலா ஒரு "சிக்சர்' அடித்தார் ஹாட்ஜ். கொச்சி அணி 7.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பார்த்திவ் (21), ஹாட்ஜ் (33) அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் ஜேக்கப் ஓரம், தோஷி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக பிராட் ஹாட்ஜ் தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் போர்டு
ராஜஸ்தான் ராயல்ஸ்
பசால் எல்.பி.டபிள்யு.,(ப)ஆர்.பி. சிங்    16(15)
டிராவிட் (கே)ஷா (ப)ஸ்ரீசாந்த்    1(4)
வாட்சன் (ப)பரமேஸ்வரன்    20(13)
ரகானே எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்ரீசாந்த் 
   8(9)
மேனரியா (கே)ஷா (ப)ஹாட்ஜ்    31(28)
பினல் ஷா (கே)ஞானேஸ்வரா (ப)ஹாட்ஜ்    5(5)
ஓரம் (ப)ஹாட்ஜ்    0(3)
வார்ன் (ப)ஹாட்ஜ்    2(9)
சவான் -ரன் அவுட்-(ஜடேஜா/ஹாட்ஜ்)    1(3)
டெய்ட் -அவுட் இல்லை-    10(9)
தோஷி (கே)ஜெயவர்தனா (ப)பரமேஸ்வரன்    0(13)
உதிரிகள்    3
மொத்தம் (18.3 ஓவரில், "ஆல்-அவுட்')    97
விக்கெட் வீழ்ச்சி: 1-18(பசால்), 2-18(டிராவிட்), 3-26(ரகானே), 4-63(வாட்சன்), 5-68(பினல் ஷா), 6-77(ஓரம்), 7-81(வார்ன்), 8-82(சவான்), 9-89(மேனரியா), 10-97(தோஷி).
பந்துவீச்சு: ஆர்.பி. சிங் 4-0-17-1, ஸ்ரீசாந்த் 4-0-16-2, பரமேஸ்வரன் 3.3-0-20-2, பிரசாந்த் 1-0-18-0, ஹாட்ஜ் 4-0-13-4, ஞானேஸ்வரா 1-0-7-0, ஜடேஜா 1-0-5-0.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

T_500_775.jpg

    மூலவர்    :     பாலசுப்ரமணிய சுவாமி    -
      தல விருட்சம்    :     ஆலமரம்
      தீர்த்தம்    :     நந்தவனக் கிணறு
      ஆகமம்/பூஜை     :     -
      பழமை    :     500-1000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     புகழிமலை (ஆறுநாட்டார் மலை )
      ஊர்    :     வேலாயுதம்பாளையம்
      மாவட்டம்    :     கரூர்
      மாநிலம்    :     தமிழ்நாடு

 தல சிறப்பு:

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலம். விஷ்ணு துர்க்கை : இத்தலத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை 12 வாரம் எலுமிச்சம் பழ விளக்கு போட்டு வணங்கினால் 12வது வார முடிவில் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். சஷ்டி விரதம் அனுஷ்டித்தால் குழந்தை வரம் கிடைக்கிறது.

இது 360 படிகள் கொண்ட மலைக்கோயில்

 தலபெருமை:


360 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மனதுக்கு அமைதி தரும் முருகன் தலம். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் பல ஆண்டுகளுக்கு முந்தயை பழமையான 12 ஆம் நூற்றாண்டுக் கோயில். சேர மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம். கோபுரங்கள் மைசூர் பகுதிகளில் இருக்கும் கோபுரங்களைப் போல் காட்சி அளிக்கிறது. தாமிலி எழுத்துக்கள் கோயிலின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

கோயில் அமைந்துள்ள மலையில் சமணர்கள் தங்கியதற்கான கல் படுக்கைகள் காணப்படுகின்றன . தொல் பொருள் ஆராய்ச்சி துறையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

  தல வரலாறு:


இந்த முருகன் கோயில் எப்போது தோன்றியது என்று வரலாற்று அடிப்படையில் கூறமுடியவில்லை. எனினும் கி.பி.15 ம் நூற்றாண்டினரான அருணகிரிநாதர் இந்த மலை மீதுள்ள இறைவனை தம் திருப்புகழில் பாடியிருப்பதால் அவர் காலத்திற்கு முன்பே கோயில் பேரும் புகழும் பெற்றுச் சிறப்புடன் விளங்கியிருக்கவேண்டும் என்பது உறுதி. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளை நோக்கும்போது அருணகிரிநாதர் காலத்தில் இக்கோயிலின் கருவறைப்பகுதி மட்டுமே இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது.

 திருவிழா:

தைப்பூசம் - 15 நாட்கள் - லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சூரசம்காரம் - 7 நாட்கள் - 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர். கார்த்திகை தீபம், ஆடிக்கிருத்திகை மற்றும் மாதந்தோறும் கிருத்திகை சஷ்டி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தவிர தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் இருக்கும்

திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

மலர் போல மகிழ்ச்சிப்படுத்து - ஸ்ரீஅன்னை.

* எத்தனை அன்பு! எத்தனை மென்மை! இனிமை! இவ்வுலகில் இருக்கின்றன. அத்தனையும் நமக்காகவே. நாம் அவற்றை நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

* ஒரு மலரைப் போன்று இருங்கள். மலரைப் போல திறந்த வெளிப்படையான குணமும், சாந்தமும், கருணையும், அன்பும் மனதிற்குள் எழவேண்டும்.

* மலர் எப்படி தன்னிச்சையாக மலர்ந்து மணம் பரப்பி தான் இருக்கும் இடத்திலிருந்து மற்றவர்களை மகிழ்விக்கிறதோ அதுபோல ஒவ்வொருவரும் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும்.
-ஸ்ரீஅன்னை

வினாடி வினா :

வினா - இந்தியாவில் மாநிலத் தேர்தல் கமிஷனால் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் எது ?

விடை - மத்தியப் பிரதேசம்.
இதையும் படிங்க :

"மன திருப்தியுடன் வாழ்கிறேன்!'

large_241298.jpg

நாட்டியக் கலைஞர் ஸ்வர்ணமுகி: என் அப்பா சம்பதி பூபால், அம்மா ரஞ்சனி இரண்டு பேருமே, புகழ் பெற்ற பரதக் கலைஞர்கள்கள். வீட்டில் நாங்கள் ஐந்து பேர். அனைவரும் படிப்பில் கவனம் செலுத்த, நான் மட்டும், பரதம் தான் வாழ்க்கை என முடிவெடுத்தேன்.பாவ, ராக, தாளத்துடன் ஆடும் தனித்துவ நடனமான, 108 கர்ணங்களை, நான்கு வயதில் இருந்தே எனக்கு கற்றுக் கொடுத்தார் அப்பா. தினமும் விடியற்காலையில், ஒவ்வொரு கர்ணத்தையும், 100 முறை பயிற்சி செய்ய வைப்பார்.உடம்பெல்லாம் ரணமாக வலிக்கும். ஆனால், அந்தப் பயிற்சிக்கு எல்லாம் பலனாக, 108 கர்ணங்களையும் ஆடிய முதல் பெண் என்ற பெருமை கிடைத்தது. பின் நாட்களில், வியர்வை கூட துளிர்க்காமல், சிரித்த முகத்துடன், முழுத் தெம்புடன், மேடைகளில் பல மணி நேரம் ஆடியதற்கு, அந்தப் பயிற்சி தான் கை கொடுத்தது.கடந்த, 1977ல், எம்.ஜி.ஆர்., என்னை, அரசவை நர்த்தகியாக நியமித்தார். சர்வதேச அரங்குகளில், பல நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பண்ணினேன். காலையில் - லண்டன், மதியம் - பாரிஸ், மாலை - பிராங்பர்ட்னு, மூச்சு விடக் கூட நேரம் இல்லாம ஓடிக் கொண்டிருந்தேன்.பரிசுகள், பாராட்டுகள்னு, புகழின் உச்சியில் இருந்த என் வாழ்க்கையில், விடை தெரியாத கேள்வி ஒன்று இருந்தது. அது, "கடவுள் யார்' என்பது தான். பின், சில மாற்றங்களால், நான் கிறிஸ்தவராக மதம் மாறினேன். திருமணமே வேண்டாம் என முடிவெடுத்திருந்த போது, ஷவுரி பாபுவை சந்தித்தேன். பின் திருமணம் முடிந்து, இப்போது, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.எனக்கு ஒரே மகள். அவரும், மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார். பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி, "ஆடின காலை எப்படி கட்டிப் போட்டீங்க' என்பது தான். நடனத்தை நிறுத்தியதற்காக நான் எப்பவும் வருத்தப்பட்டதில்லை. மன திருப்தியுடன் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.

--

                                                              
                 
--

                                                              
                 

No comments:

Post a Comment