Friday, May 20, 2011

இன்றைய செய்திகள் மே, 20 2011 ,

முக்கியச் செய்தி :

சிறுத்தைகளிடம் கடிபட்டுச் சாகும் வால்பாறை குழந்தைகள்: ஓர் அலசல் ரிப்போர்ட்

19-leopard300.jpg

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள குழந்தைகள் சிறுத்தைகளுக்கு பலியாகும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது.

சிறுமி பலி:

வால்பாறையைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மூன்று வயது மகள் ஜனனி. நேற்று, வால்பாறையிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள தாய்முடி எஸ்டேட்டில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு குடும்பத்துடன் விருந்திற்குச் சென்றார்.

இரவு 7 மணி அளவில் விருந்து முடிந்து ஜெகமூடி எஸ்டேட்டில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டிற்கு சக்திவேல், அவரது மனைவி, மகள் ஜனனி மற்றும் இன்னொரு மகள் ஆகியோர் தேயிலை தோட்டம் வழியாகச் சென்றுள்ளனர்.

பாய்ந்த சிறுத்தை:

அப்போது தேயிலைத்தோட்டத்தில் பதுங்கி இருந்த ஒரு சிறுத்தை, சிறுமி ஜனனியை குறிவைத்து பாய்ந்தது. சிறுத்தை சிறுமியின் கழுத்தை கவ்விக்கொண்டு, புதருக்குள் ஓட முற்பட்டது. சிறுமியின் தாயார் உதவி கேட்டு போட்ட கூச்சலில் சிறுத்தை சிறுமியை போட்டுவிட்டு ஓடிவிட்டது.

தாய் கண் எதிரே பலி:

சிறுத்தையால் கடிபட்ட சிறுமி ஜனனி, சம்பவ இடத்திலேயே தாயின் கண்ணெதிரில் துடிதுடித்து இறந்தார். சிறுமியின் உடல் முடீஸ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்கதையாகும் உயிர்பலி:

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுவரை மூன்று குழந்தைகள் சிறுத்தைகளுக்குப் பலியாகியுள்ளனர். இது தவிர, கடந்த ஆண்டு வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகள் சிறுத்தையினால் தாக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தனர்.

சிறுத்தை மட்டுமல்லாமல் யானைகளும் அடிக்கடி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. யானையிடம் மிதிபட்டு கடந்த ஆண்டுகளில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இது தவிர மலைப்பாம்புகள், செந்நாய் போன்றவற்றின் தொல்லைகளும் அதிகரிக்கிறது. நேற்றுகூட, வால்பாறை தொழிலாளர் குடியிருப்புக்குள் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது.

கண்டுகொள்ளாத எஸ்டேட் அதிபர்கள்:

கடந்த பலவருடங்களாக எஸ்டேட் பகுதிகளில் மின்விளக்கு அமைக்குமாறு அதன் உரிமையாளர்களை வனத்துறை எச்சரித்து வருகிறது. ஆனால் பலரும் அதை காதில் வாங்கிக்கொள்வதில்லை. பொதுமக்களையும் இரவு இருட்டியதற்குப்பின் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

முன்னெப்போதும் இருந்ததை விட, வால்பாறை பகுதிகளில் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் எஸ்டேட் பகுதிகளில் எப்போதும் அச்சத்துடனேயே நடமாட வேண்டி உள்ளது. வேட்டை தடை செய்யப்பட்டதனால் வால்பாறை பகுதிகளில் சிறுத்தைகளின் இனப்பெருக்கம் அதிகரித்து வருவதும் ஒரு காரணம் என்கிறார்கள் சூழலியளாளர்கள்.

போராட்டம்:

இந்நிலையில் சிறுத்தைகளின் அட்டகாசத்தை அடக்கும் வரை சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டோம் என எஸ்டேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நேற்று போராட்டம் செய்தார்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் வந்து எங்களது பாதுகாப்பான வாழ்விற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். இதனால் அப்பகுதியில் இரவு பத்து மணி வரை பதட்டம் நீடித்தது.

உலகச் செய்தி மலர் :

* கடாபியின் மனைவி, மகள் துனிசியாவுக்கு தப்பி ஓட்டம்: அகதி முகாமில் தஞ்சம்

மாஸ்கோ:  லிபிய அதிபர் கடாபியின் மனைவி சபியா, மகள் ஆயிஷா ஆகியோர் துனிசியாவுக்கு தப்பியோடிவிட்டதாக அல் ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து துனிசிய பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள ஒருவர் கூறியதாவது,

சபியாவும், ஆயிஷாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பே துனிசியா வந்துவிட்டனர். அவர்கள் தற்போது ஜெர்பா தீவில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் உள்ளனர்.

அதிபர் கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. தன்னை எதிர்க்கும் மக்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறார் கடாபி. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர்.

லிபியாவில் நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தி வரும்போதிலும் கடாபியின் ராணுவம் தொடர்ந்து மக்களைத் தாக்கி வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் திரிபோலியில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் கடாபியின் இளைய மகனும், 3 பேரக் குழந்தைகளும், பல நண்பர்களும் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே பெரும்பாலான மக்கள் லிபியாவில் இருந்து துனிசியாவுக்கு தப்பிச் செல்லும் சாலையை கடாபியின் படை தகர்த்துள்ளது.

கடாபி படைகள் யாப்ரின் நகரைச் சுற்றியே பெரும்பாலும் தாக்குதல்கள் நடத்துகிறது. அந்நகரத்தாரும், போராட்டக்காரர்களும் கூறுகையில்,

கடாபியின் படைகள் கிராட் ஏவுகணைகளையும், ராக்கெட்டுகளையும் பயன்படுத்தி தாக்குகின்றன. இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்கள் உணவும், மருத்துவ வசதியும் இன்றி தவிக்கின்றனர் என்றனர்.

* பின்லேடன் பேச்சு அடங்கிய ஆடியோவை வெளியிட்டது அல் கொய்தா

வாஷிங்டன்: அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடனின் பேச்சு அடங்கிய ஒலிநாடாவை வெளியிட்டுள்ளது அல் கொய்தா. கொல்லப்படுதவற்கு முன்பு பின்லேடன் பேசிய பேச்சு இது.

பல்வேறு அல் கொய்தா ஆதரவு இணையதளங்களில் இது வெளியாகியுள்ளது. அதில், அரபு உலகை ஆட்டிப்படைத்து வந்த மக்கள் புரட்சிகளை வெகுவாக புகழ்ந்துள்ளார் பின்லேடன்.

12 நிமிடங்களுக்கும் மேலாக இந்த ஆடியோ ஓடுகிறது. தனது மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு இந்த ஆடியோவைப் பதிவு செய்துள்ளார் பின்லேடன் என்று தெரிகிறது.

பின்லேடன் தனது பேச்சில் கூறுகையில், வடக்கு ஆப்பிரிக்காவின் மெகரப் நகரில் தொடங்கிய புரட்சி இன்று அரபு நாடுகளில் பரவி வருவது பாராட்டுக்குரியது.

மெகரப்பில் புரட்சியின் உதயம் தொடங்கியுள்ளது. துனிசியாவிலிருந்து வந்த இந்த புரட்சி ஒளி, மக்கள் மனங்களிலும், முகங்களிலும் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது.

பின்னர் எகிப்தில், தஹ்ரிர் சதுக்கத்தில் கூடிய மக்கள் போராட்டத்தின் அலை இன்று எகிப்து மக்கள் முகங்களிலும் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது. இது ஆட்சியாளர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று கூறியுள்ளார் பின்லேடன்.

* லிபியாவில் வெளிநாட்டு செய்தியாளர்கள் விடுதலை

reporter.jpg

திரிபோலி, மே 19: லிபியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 4 வெளிநாட்டு செய்தியாளர்களை அரசு அதிகாரிகள் புதன்கிழமை விடுவித்தனர்.

 லிபியா அரசுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் நடைபெற்று வரும் மோதல் குறித்து செய்தி சேகரிக்க பல நாடுகளிலிருந்து செய்தியாளர்கள் லிபியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் நான்கு பேரை லிபிய அதிகாரிகள் கைது செய்தனர்.

 இதில் இணையதள செய்தி நிறுவனமான குளோபல் போஸ்ட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் போலி, செய்தி எழுத்தாளரான கிளேர் மார்கானா கில்லிஸ் ஆகிய இருவரும் அமெரிக்கர்கள்.

 பிரிட்டனைச் சேர்ந்த நைஜல் சாண்ட்லர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மனு பிராபோ ஆகியோர் மற்ற இருவர். இவர்கள் நால்வரும் கடந்த 6 வாரங்களாக லிபிய அதிகாரிகளால் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

 இவர்களை புதன்கிழமை லிபிய அரசு விடுவிக்க உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்ட நால்வரும் லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள ரிக்úஸôஸ் ஹோட்டலுக்கு வந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

 லிபியாவில் செய்தி சேகரிக்க வந்துள்ள அனைத்து வெளிநாட்டு செய்தியாளர்களும் இங்குதான் தங்கியுள்ளனர்.

 லிபியா நிலைமை குறித்து ஐ.நா: லிபியாவில் நிலைமை மோசமடைந்து வருகிறது என ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் பான்-கி-மூன் கருத்து தெரிவித்துள்ளார்.

 நியூயார்க்கில் அளித்த பேட்டியொன்றில் அவர் கூறியது:

 லிபியாவில் நடந்து வரும் சண்டையை நிறுத்தி, அமைதி திரும்புவதற்கு ஐ.நா.வின் சிறப்புத் தூதுவராக அப்துல் இலா அல்-காதிப் அனுப்பப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அவர் திரிபோலி போய்ச் சேர்ந்தார்.

 இவர் அங்குள்ள முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறார். அந்நாட்டில் அரசுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்து வரும் மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் கூறிவருகிறார். ஆயினும் நிலைமை மோசமடைந்து வருகிறது என்றே கூற வேண்டும். குறிப்பாக மிஸராட்டா பகுதியில் கடந்த 2 மாதங்களாக லிபிய ராணுவத்தின் முற்றுகை தொடர்கிறது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு உயிரிழந்திருக்கக் கூடும்.

 லிபியாவில் பல்வேறு மூத்த அதிகாரிகளை காதிப் சந்தித்திருக்கிறார். ஆனால் கடாஃபியை அவர் இதுவரை சந்திக்கவில்லை என்று பான்-கி-மூன் தெரிவித்தார்.

 கடந்த 41 ஆண்டுகளாக லிபிய அதிபராக உள்ள மம்மர் கடாஃபிக்கு எதிராக பிப்ரவரி மாதம் பென்காஸி நகரில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கும், கடாஃபியின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் கிளர்ச்சியாளர்களை அடக்க ராணுவத்தை அனுப்பினார் கடாஃபி.

 இதைக் கண்டித்து ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லிபியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என இதில் முடிவு செய்யப்பட்டது. இந்தத் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 ஐ.நா. தீர்மானத்துக்குப்பின் லிபியாவில் அமெரிக்க நேசப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ஆயினும் லிபியாவின் பல நகரங்களில் கடாஃபிக்கு தொடர்ந்து ஆதரவு இருந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களால் அவற்றை முழுவதும் கைப்பற்ற இயலவில்லை.

 தனது ஆட்சியைக் கவிழ்த்து, லிபியாவின் வளங்களை மேற்கத்திய நாடுகள் சூறையாடவே இந்த சர்வதேசத் தாக்குதல் நடத்தப்படுகிறது என கடாஃபி கூறி வருகிறார்.

தேசியச் செய்தி மலர் :

* ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி, மே 19: நாடு தழுவிய அளவில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ள இந்த கணக்கெடுப்பு ஜாதி, மதம், வறுமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும். இதன் மூலம், மக்களின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து தெரியவரும் என அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

 மக்கள்தொகை கணக்கெடுக்கும் மாபெரும் பணியில் ஜாதி வாரியாகவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களையும் கணக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மட்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் 1931-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

 இந்த கணக்கெடுப்பு நடத்துவது முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதற்காக குறைந்த விலையிலான கையடக்க கம்ப்யூட்டர் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இந்த கையடக்க கம்ப்யூட்டர் அளிக்கப்படும். இந்தக் கருவியை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அடையாள அட்டை வழங்கும் (யுஐடி) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அப்போது இந்த கணக்கெடுப்பு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களைக் கண்டறிய உதவும்.

 ஊரக மேம்பாடு, வீட்டு வசதி, நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு அமைச்சகங்களும் இந்திய பதிவாளர் துறையும் சேர்ந்து இந்த கணக்கெடுப்பை நடத்தும்.


* கல்மாடிக்கு எதிராக மற்றொரு வழக்கு

புதுதில்லி, மே 19: பதவி நீக்கம் செய்யப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அமைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி மீது மற்றொரு வழக்கை அமலாக்கப் பிரிவு பதிவு செய்திருக்கிறது.

 இந்த வழக்கில் அன்னியச் செலாவணி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் கல்மாடி மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் நடந்த மோசடிகள் தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட கல்மாடி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

 ஏற்கெனவே கல்மாடி மீது அன்னியச் செலாவணி விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. கல்மாடியை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு அனுமதி கோரியிருக்கிறது. இந்த நிலையில், அன்னியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கல்மாடி மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை புதிதாக வழக்குப் பதிவு செய்திருப்பதாக அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 வங்கிக் கணக்குகள், அசையும் மற்றும் அசையாச் சொத்துகள், காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பு மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், கடந்த ஆண்டு செய்த அன்னியச் செலாவணி பரிவர்த்தனைகள் போன்றவை தொடர்பான விவரங்களை அளிக்குமாறு கல்மாடியிடம் அமலாக்கப் பிரிவு கூறியிருக்கிறது.

 இந்தத் தகவல்களை அளிப்பதற்கு தமக்கு சில வார அவகாசம் அளிக்குமாறு கல்மாடி கோரியிருப்பதாகவும் தெரிகிறது.


* புத்ததேவ் ராஜிநாமா: ஆளுநர் ஏற்பு

buddhadev.jpg

கொல்கத்தா, மே 13: மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ராஜிநாமாவை ஆளுநர் எம்.கே.நாராயண் ஏற்றுக் கொண்டார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை ஆளும் கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி கட்சி படுதோல்வி அடைந்தது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆளுநர் நாராயணைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது தனது அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். அதை ஏற்றுக் கொண்ட நாராயண், மாற்று ஏற்பாடு செய்யும்வரை முதல்வரையும் அவரது அமைச்சரவை சகாக்களையும் பதவியில் நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதை புத்ததேவ் ஏற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மக்களவை இடைத்தேர்தல்: 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகன்மோகன் வெற்றி
கடப்பா (ஆந்திரம்), மே 13: கடப்பா மக்களவைத் தொகுதியில் 5 லட்சத்து 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்றார்.

புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி வெற்றி பெற்றார்.

கடப்பா மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியும், புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஜெகன்மோகனின் தாயாரும், மறைந்த ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மனைவியுமான விஜயலட்சுமி ஆகியோர்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதும் எம்பி, எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் ஜெகன் புதிய கட்சியைத் துவக்கினார்.

இந்நிலையில் கடப்பா மக்களவை மற்றும் புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 8-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி சார்பில் கடப்பா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும், புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதியில் விஜயலட்சுமியும் போட்டியிட்டனர்.

வெள்ளிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஜெகன்மோகன் ரெட்டி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டி.எல்.ரவீந்திரரெட்டியை 5 லட்சத்து 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஜெகன்மோகன் மொத்தம் 6,55,496 வாக்குகள் பெற்றார். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 70 சதவிகிதம் ஆகும். ரவீந்திர ரெட்டி 1,34,496 வாக்குகளும், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரும்

மாநிலங்களவை மூத்த உறுப்பினருமான எம்.வி.மைசூரா ரெட்டி 1,28,727 வாக்குகளும் பெற்றனர். இத்தொகுதியில் காங்கிரஸ், தெலுங்கு தேசகட்சி வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர்.

புலிவெந்துலா: புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதியில் விஜயலட்சுமி 85,191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விஜயலட்சுமிக்கு 1,14,039 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் மறைந்த ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் சகோதரருமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டிக்கு 28,729 வாக்குகளும், தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் பி.ரவிக்கு 12,051 வாக்குகளும் கிடைத்தன.

இடைத்தேர்தல் தோல்வி காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியைத்தொடர்ந்து ஜெகன்மோகன் கூறுகையில், ஆந்திர சட்டப்பேரவைக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்றார். அவர் மேலும் கூறுகையில் ஆறுதல் யாத்திரையை மே 14-ம் தேதி முதல் விஜயநகர் மாவட்டத்திலிருந்து துவங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

* லோக்பால் குழுவுக்கு எதிரான மனு இன்று விசாரணை
லக்னெü, மே 19: லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்காக குழு நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

 லக்னெüவைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக் பாண்டே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

 அரசியல் சட்டப்படி லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்கு ஒரு குழுவை அமைப்பது தொடர்பான தீர்மானத்தையோ, அறிவிக்கையையோ மத்திய அரசு பிறப்பிக்க முடியாது என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 நீதிபதிகள் பிரதீப் காந்த், வேத்பால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், விசாரணைக்கான தேதியை வியாழக்கிழமை முடிவு செய்தது. முன்னதாக, இந்த மனு தொடர்பாக 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அட்டர்னி ஜெனரலுக்கு ஏப்ரல் 20-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

* தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 6 விருதுகளை அள்ளியது "ஆடுகளம்'

filimcommi.jpg

புது தில்லி, மே 19: தனுஷ் நடித்த ஆடுகளம் தமிழ்த் திரைப்படம் ஆறு தேசிய விருதுகளைக் குவித்துள்ளது. சிறந்த நடிகராக தனுஷ் (ஆடுகளம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரஜத் கமல் பதக்கத்துடன் ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

 இப் படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது. அவருக்கு தங்கத் தாமரை பதக்கத்துடன் இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

 சிறந்த தமிழ்த் திரைப்படமாக தென்மேற்குப் பருவக் காற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ரஜத் கமல் பதக்கமும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதினை படத்தின் தயாரிப்பாளர் ஷிபு ஐசக், இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொள்வர்.

 இது தவிர, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உள்ளிட்ட பல்வேறு விருதுகளைத் தமிழ்ப் படங்கள் குவித்துள்ளன.

 58-வது தேசிய திரைப்பட விருதுகள் புது தில்லியில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.

 மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் சார்பில் விருதுக் குழுவின் தலைவர் ஜே.பி. தத்தா விருது பெறுவோர் பட்டியலை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

 சிறந்த திரைப்படம்: தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக ஆதாமிண்டே மகன் அபு என்ற மலையாளப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப் படத்துக்கு தங்கத் தாமரை (ஸ்வர்ண கமல்) பதக்கமும், இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

 படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சலீம் அகமது விருதினைப் பெறுகிறார். இப் படத்தில் நடித்த சலீம் குமாருக்கு ரஜத் கமல் பதக்கமும் ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

 ஆடுகளம் திரைப்படத்துக்கு சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நாட்டிய இயக்கம் (கோரியோகிராபி) ஆகியவற்றுக்கான விருதுகளுடன், சிறப்புப் பரிசாக இப்படத்தின் வில்லன் நடிகருக்கும் விருது கிடைத்துள்ளது.

 ஆடுகளம் பெற்ற விருதுகள் விவரம்:

 இயக்கம்: வெற்றிமாறன் (ஸ்வர்ண கமல் - இரண்டரை லட்சம் ரூபாய்).

 நடிகர்: தனுஷ் (ரஜத் கமல் - ரூ. 50,000).

 திரைக்கதை: வெற்றிமாறன் (ரஜத் கமல் - ரூ.50,000).

 படத் தொகுப்பு: டி.இ. கிஷோர் (ரஜத் கமல் - ரூ.50,000).

 கோரியோகிராபி: தினேஷ் குமார் ( ரஜத் கமல் - ரூ.50,000).

 சிறப்புப் பரிசு (வில்லன் நடிப்பு): வ.ஐ.செ. ஜெயபாலன் (சான்றிதழ்).

 பெருமை பெற்ற தமிழ்ப் படங்கள்: ஆடுகளம் திரைப்படத்துடன் தமிழ்ப் படங்களான தென்மேற்குப் பருவக்காற்று, மைனா, நம்ம கிராமம், எந்திரன் ஆகியவையும் தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளன.

 சிறந்த பாடலுக்கான விருது தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது. ஆறாவது முறையாக அவர் தேசிய விருதினைப் பெறுகிறார்.

 சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது எந்திரன் படத்துக்கு கிடைத்துள்ளது. அந்த விருதினை சாபு சிரில் பெறுகிறார்.

 இதே படம் சிறப்புக் காட்சி அமைப்புக்கான (ஸ்பெஷல் எபெக்ட்ஸ்) விருதினையும் பெறுகிறது. இவ் விருதினை வி.ஸ்ரீநிவாஸ், எம். மோகன் பெறுகின்றனர்.

 சிறந்த நடிகைக்கான விருது சரண்யா பொன்வண்ணனுக்குக் கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருதினை மைனா படத்தில் நடித்த ஜே.தம்பி ராமையா பெறுகிறார். அது போல் சிறந்த துணை நடிகைக்கான விருதினை நம்ம கிராமம் படத்தில் நடித்த சுகுமாரி பெறுகிறார்.

 இவர்கள் அனைவருக்கும் ரஜத் கமல் பதக்கமும், ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இவற்றுடன், சிறந்த ஆடை அலங்காரத்துக்கான விருது நம்ம கிராமம் படத்தில் பணியாற்றிய இந்திரன்ஸ் ஜெயநுக்குக் கிடைத்துள்ளது. இவர் ரஜத் கமல் பதக்கம் பெறுவார்.

 இதர படங்களுக்கான விருதுகள் விவரம் வருமாறு: இந்திரா காந்தி சிறந்த அறிமுக இயக்குநர் படம்: பாபு பண்ட் பாஜு (மராத்தி). ஸ்வர்ண கமல், ரூ.1.25 லட்சம்.

 முழுநேர பொழுதுபோக்கு: தபாங் (ஹிந்தி). ஸ்வர்ண கமல், ரூ.2 லட்சம்.

 தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது : மொனேர் மனுஷ். ரஜத் கமல், ரூ.1 .50 லட்சம்.

 சமூகப் பிரச்னைகளுக்கான சிறந்த படம்: சாம்பியன்ஸ் (மராத்தி). ரஜத் கமல், ரூ.1 .50 லட்சம்.

 சிறந்த குழந்தைப் படம்: ஹெஜ்ஜகலு (கன்னடம்) ஸ்வர்ண கமல், ரூ.1.50 லட்சம்.

 சிறந்த நடிகைக்கான விருது பாபு பண்ட் பாஜு (மராத்தி) படத்தில் நடித்த மிதாலி ஜகதப் வரத்கருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது ஐ ஆம் கலாம் ஹிந்தி படத்தில் நடித்த ஹர்ஷ் மாயர், சாம்பியன்ஸ் மராத்தி படத்தில் நடித்த சாந்தனு, மாசென்ற கர்கர், பாபு பண்ட் பாஜு (மராத்தி) படத்தில் நடித்த விவேக் சபுகஸ்வர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

 பின்னணி பாடகருக்கான விருது சுரேஷ் வட்கர் (மீ சிந்து சப்கல்-மராத்தி), பின்னணிப் பாடகிக்கான விருது ரேகா பரத்வாஜ் (இஷ்கியா - ஹிந்தி), சினிமாடோகிராபருக்கான விருது மது அம்பட் (ஆதாமின்டே மகன் அபு - மலையாளம் ), சிறந்த திரைக்கதைக்கான விருது ஆனந்த் மகாதேவன், சஞ்சய் பவார் (மீ சிந்து சப்கல்-மராத்தி) ஆகியோருக்குக் கிடைத்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் ரஜத் கமல் பதக்கமும் ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

 இவற்றுடன், அசாமி, வங்கம், ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களுக்கும் தனித்தனி விருதுகள் வழங்கப்படுகின்றன.

 பொழுதுபோக்கு அல்லாத படம், இனக்குழுவுக்கான படம், வாழ்க்கை வரலாறு, கலை-பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், வளர்ச்சிப் பணி, சமூகப் பிரச்னைகள், குடும்ப மதிப்பீடுகள், கல்வி, விளையாட்டு, புலனாய்வு, சிறு கதைப்படம் ஆகிய பல்வேறு தலைப்புகளிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* மேற்கு வங்க மாநிலத்தின்முதல் பெண் முதல்வராக மம்தா இன்று பதவியேற்பு
கொல்கத்தா, மே 19: மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளார்.

 நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸீம், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதன்மூலம் 34 ஆண்டுகால இடதுசாரி கட்சிகளின் ஆட்சியை திரிணமூல் காங்கிரஸ் பறித்தது.

 கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் தலைவராக மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.

 இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு மம்தா பானர்ஜிக்கு, மாநில ஆளுநர் எம்.கே. நாராயணன் அழைப்பு விடுத்தார்.

 மேலும் மாநில முதல்வராக மம்தாவை, நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார்.

 இந்த நிலையில் பதவியேற்பு விழா கொல்கத்தாவிலுள்ள ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.01 மணிக்கு நடைபெறவுள்ளது.

 பதவியேற்பு விழாவுக்கு 3,200 பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அரசியல், தொழில், கலை, கலாசாரத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.

 அப்போது மேற்கு வங்க மாநிலத்தின் 11-வது முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்கவுள்ளார். மேலும் இந்த மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் மம்தா என்பது குறிப்பிடத்தக்கது.

 மம்தாவுக்கு, ஆளுநர் எம்.கே. நாராயணன் பதவியேற்புப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைப்பார். பின்னர் அமைச்சர்கள் பதவியேற்பர் என்று தெரிகிறது.

 விழாவுக்காக ஆளுநர் மாளிகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 தேர்தலில் 42 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியும், அமைச்சரவையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, அவரது மனைவி மீனா உள்ளிட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோனி, இடதுசாரி கட்சிகளின் தலைவர் பிமன் போஸ், கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்பர் என்று தெரிகிறது. பதவியேற்பு விழாவை நேரடியாகக் காண ஷாஹித் மினார் மைதானத்தில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பர்.

 இதைத் தொடர்ந்து பிபிபி பாக் அருகே அமைந்துள்ள தலைமைச் செயலக கட்டடத்துக்கு மம்தா செல்வார். மாலையில் அவர் அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்வார் என்று தெரிகிறது. புத்ததேவுக்கு மம்தா அழைப்பு

 மேற்கு வங்க முதல்வராக வெள்ளிக்கிழமை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பதவி ஏற்க உள்ளார்.

 தனது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாசார்யாவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி இதற்கான அழைப்பிதழை புத்ததேவ் இல்லத்திற்கு சென்று அளித்தார். பதவி ஏற்பு விழாவில் புத்ததேவ், அவரது மனைவி மீரா பட்டாசார்யா ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். 1998-ம் ஆண்டுக்குப் பிறகு திரிணமூல் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் புத்ததேவ் பட்டாசார்யா வீட்டிற்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

 மம்தா பானர்ஜி கூறியதன்பேரில் புத்ததேவ் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்ததாக செய்தியாளர்களிடம் சாட்டர்ஜி கூறினார். அனைத்துத் தரப்பினருக்கும் அளிக்க வேண்டிய உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் வீட்டிற்கு நேரில் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

 மம்தா பானர்ஜியின் செயல் பாராட்டத்தக்க வகையில் உள்ளது என்று புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் மனோஜ் பட்டாசார்ஜி குறிப்பிட்டார். இத்தகைய மனிதநேயப் பண்புகள் கட்சியில் உள்ள அனைத்து தரப்பினரிடமும் பரவ வேண்டும் என்று தான் விரும்புவதாகக் குறிப்பிட்டார்

* புரூலியா ஆயுத வழக்கு: காலாவதியான வாரண்டுடன் டென்மார்க் சென்ற சிபிஐ அதிகாரிகள்
புது தில்லி, மே 19: புரூலியாவில் ஆயுதங்கள் கொட்டப்பட்ட வழக்கு தொடர்பாக, காலாவதியான வாரண்டுடன் டென்மார்க் நாட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். இது நாட்டுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில், வெளிநாட்டு விமானத்திலிருந்து ஏகே-476 ரக துப்பாக்கிகள், குண்டுகள், பயங்கர ஆயுதங்கள் கொட்டப்பட்டன. ஒரு வாரம் கழித்து மீண்டும் அந்த வெளிநாட்டு விமானம், இந்திய எல்லைக்குள் பறந்துவந்தபோது, விமானப்படையைச் சேர்ந்த மிக் விமானம், அதை தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக பம்பாயில் (இப்போது மும்பை) இறக்கச் செய்தது. இது லாட்வியா நாட்டுக்குச் சொந்தமான விமானம் என்பது விசாரணையில் தெரியவந்தது. 1995-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி இந்த வழக்கை சிபிஐ பதிவு செய்தது. அதுமுதல் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் லாட்வியாவைச் சேர்ந்த 5 பேர் மீதும், டென்மார்க்கைச் சேர்ந்த கிம் டேவி, பீட்டர் பிளீச் என்பவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து கிம் டேவி, கிம் பிளீச் ஆகியோரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கு டென்மார்க்கிலும் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு கிம் டேவியைக் கொண்டு செல்வதற்கான உத்தரவை டென்மார்க்கிலுள்ள மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து டென்மார்க் அரசு, டென்மார்க் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதற்கான விசாரணைதான் இப்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கிம் டேவியை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான வாரண்டை கொல்கத்தாவிலுள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்தது.

அந்த வாரண்டுடன் சிபிஐ அதிகாரிகள் 2 பேர் இம்மாதம் 16-ம் தேதி டென்மார்க் சென்றுள்ளனர். ஆனால் அந்த வாரண்ட், கடந்த ஜனவரியுடன் காலாவதியானது, என்ற விவரமே டென்மார்க் சென்றதும்தான் அந்த அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இது இந்திய அரசுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கிம் டேவி மீது புதிய வாரண்டை பிறப்பித்து, அதை தங்களுக்கு அனுப்புமாறு டென்மார்க்கிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கோரினர். இதையடுத்து புதிய வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த வாரண்டை, ஸ்கேன் செய்து கொல்கத்தா சிறப்பு குற்றப்பிரிவு போலீஸôர் அனுப்பியுள்ளனர். அசல் வாரண்டை போலீஸôர் பின்னர் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா கூறியதாவது: கிம் டேவி தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐ-யிடம் தயாராக, உள்ளன. டென்மார்க்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் வியாழக்கிழமை துவங்கிவிட்டன என்றார் அவர்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது: புரூலியா போன்ற முக்கியமான வழக்குகளில் காலாவதியான வாரண்டை எடுத்துச் சென்று நாட்டுக்கு பெருத்த அவமானத்தைத் தேடித் தந்துள்ளனர். மத்திய அரசின் மற்றுமொரு மிகப் பெரியத் தவறாகும் இது என்றார் அவர்.

மாநிலச் செய்தி மலர் :
* 23ம் தேதி எம்எல்ஏக்கள் பதவியேற்பு: 27ல் சபாநாயகர் தேர்வு

19-fort-st-george300.jpg

சென்னை: தமிழக சட்டசபை வரும் 23ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் எம்எல்ஏக்கள் பதவியேற்கவுள்ளனர். 27ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

புதிதாக தேர்வான எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபையில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைக்கப்பட வேண்டும்.

சட்டசபை கூட்டத்தை புதிய கட்டிடத்தில் இருந்து மீண்டும் பழைய இடமான புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த முடிவு செய்யப்பட்டதால் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு அடுத்த வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை அரங்கை நிர்மாணிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணி ஓரிரு நாட்களில் இந்த பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில் சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

14வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் மே 23ம் தேதி (திங்கட்கிழமை) பகல் 12.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள்.

மே 27ம் தேதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 3ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையின் முதல் கூட்டம் நடக்கும். அன்று கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா உரை நிகழ்த்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

* புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படுகிறது சத்தி வனப்பகுதி
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் வனக் காப்பகமாக அறிவிக்கப்படவுள்ளது.

புரொஜக்ட் டைகர்

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் சுமார் 40,000 புலிகள் இருந்தன. தொடர்ந்த வேட்டை மற்றும் வனப்பகுதிகள் அழிப்பின் காரணமாக, 1973ல் புலிகளின் எண்ணிக்கை 1,800 ஆக குறைந்தது.

புலிகளைக் காக்கும் வகையில் அவ்வாண்டு ‘புரொஜக்ட் டைகர்’ எனும் திட்டம் மத்திய அரசால் துவக்கப்பட்டது. ஆனபோதும், புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை. 2006ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 1,411 புலிகளே இந்தியாவில் இருந்தன.

கணக்கெடுப்பு

புரொஜக்ட் டைகர் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த துவங்கியது மத்திய அரசு. அதன்படி, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் புலிகளின் கணக்கெடுப்பு நடைபெறும். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 1,706ஆக உயர்ந்தது கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் 2006ல் 68 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010ல் நூற்றுக்கும் மேல் உயர்ந்தது தெரிய வந்தது.

புலிகள் காப்பகம்

ஒரு வன டிவிஷனில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட புலிகள் இருப்பதாக தெரிய வந்தால் அவ்வனப்பகுதியை அரசு புலிகள் காப்பகமாக அறிவித்து விடும். ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட சத்தி டிவிஷனில் ஆறு முதல் எட்டு புலிகள் வரை இருப்பதாக வனத்துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

எனவே, இப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்க கடந்த ஆண்டே மத்திய சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார். ஆனால், அப்போதைய திமுக அரசு சத்தி டிவிஷனை புலிகள் காப்பகமாக அறிவிக்கவில்லை.

விரைவில் அறிவிப்பு வெளியாகும்

இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஈரோடு வனத்துறையினர் தேசிய அளவில் 42வது புலிகள் காப்பகமாக சத்தி டிவிஷன் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் எனத் தெரிவித்தார்கள்.

* தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்டம் நீடிப்பு: புது அரசு முடிவு

large_242855.jpg

சென்னை: சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சூசகமாக தெரிவித்தார். அதே நேரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி, பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை உடனே நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில், சமச்சீர் கல்வி திட்ட அறிவிப்பை, தி.மு.க., வெளியிட்டது. அதன்படி, தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்விக்கென சட்டம் கொண்டு வரப்பட்டு, அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வரும் கல்வியாண்டில், இதர வகுப்புகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு, பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளதால், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் ரத்தாகுமா, பழையபடி ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வி திட்டங்கள் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பள்ளி கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.வி.சண்முகம், டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று, துறை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பாடநூல் கழக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், துறை செயலர் சபீதா, பாடநூல் கழக தலைவர் ஜீவரத்தினம் மற்றும் பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் பள்ளிகள் துறை, தேர்வுத்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உட்பட, பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் நடந்து வரும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் கேட்டறிந்தார். குறிப்பாக, விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் குறித்தும், தனியார் பள்ளிகளுக்கான கட்டண அறிவிப்பு குறித்தும், அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார்.


ஆரோக்கியச் செய்தி மலர் :

பசியை தூண்டும் புதினா

19-mint300.jpg

நமது அன்றாட சமையலில் சுவையும், மணமும் தரும் பொருட்களில் புதினாவிற்கு முக்கிய பங்குண்டு. புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது. காரச் சுவையும், மணமும் கொண்டது. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போல புதினாவும் அன்றாட உணவில் பயன்படுத்தப்படுகிறது.

புதினாவில் உள்ள சத்துக்கள்:

புதினாவில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.அதிக நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு நார்ச்சத்தும் இதனுள் அடங்கியுள்ளன. கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவையும் புதினாவில் உள்ளன. இது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.

வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்:

புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்துகின்றது. வறட்டு இருமல், ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது. புதினாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஊளைச்சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வாயுத் தொல்லையை போக்கவும் புதினா உதவுகிறது

புதினா கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தினால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லடைப்பு போன்றவை நீங்கும். இந்த கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்களுக்கு மலக்குடலில் உள்ள பூச்சிகள் சரியாகும்.

புதினா இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் செய்து அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.நன்கு காய்ந்த பின் அதை எடுத்து எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை ( 8 :1 )அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும் தூளான பின் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பற்பொடியை தினசரி உபயோகித்து வந்தால் ஆயுள் வரை பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் வராது. வாய் துர்நாற்றத்தை புதினா போக்குகிறது.

புதினா தேநீர்:

புதினாவை நிழலில் காயவைத்து, பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது.

சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்தால் உடல் உஷ்ணம் தணியும், எரிச்சல் கட்டுப்படும். பெண்களுக்கு மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி பிரச்சினைக்கு புதினாக் குடிநீர் சிறந்த மருந்தாகும்.

புதினாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மருத்துவ குணம் உடையது. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்

மாமிசங்களை பதப்படுத்தும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. பிரியாணி மற்றும் இறைச்சி வகைகளிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது.


T_500_1464.jpg

அருள்மிகு அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா திருக்கோயில்

நன்றி - தின மலர்.


வர்த்தகச் செய்தி மலர் :


* சென்செக்ஸ்' 55 புள்ளிகள் அதிகரிப்பு

மே 20,2011,00:07
மும்பை: பல நாள்களுக்கு பிறகு, நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. ஒரு சில ஆசிய பங்கு சந்தைகளில் பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததை தொடர்ந்தும், லார்சன் அண்டு டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் நிதிநிலை செயல்பாடு சிறப்பாக இருந்ததையடுத்தும், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு அதிகரித்து காணப்பட்டது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 55.20 புள்ளிகள் உயர்ந்து, 18,141.40 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,198.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,057.82 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 17 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 7.50 புள்ளிகள் அதிகரித்து, 5,428.10 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,452.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,411.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.


* தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.56 குறைந்தது
சென்னை: தங்கத்தின் விலையில் நேற்று திடீரென சவரனுக்கு ரூ 56 குறைவு ஏற்பட்டது.

சென்னையில் கடந்த 15-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2,044-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.16,352-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

16-ந் தேதி (மறுநாள்), தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.96 அதிகரித்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.2,056-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.16,448-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

இந்த நிலையில் நேற்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.2,049-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 16,392-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்

கோல்கட்டா அணிக்கு கலக்கல் வெற்றி! * புனே அணி பரிதாபம்

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யூசுப் பதான் "ஆல்-ரவுண்டராக' அசத்த, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை கோல்கட்டா அணி தக்க வைத்துக் கொண்டது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த 65வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. புனே அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. கோல்கட்டா அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. "டாஸ்' வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சுழல் ஜாலம்:

புனே அணி துவக்கத்திலேயே திணறியது. யூசுப் பதான் சுழலில் ஜெசி ரைடர்(1) காலியானார். அப்துல்லா பந்தில் மனிஷ் பாண்டே(16) வெளியேறினார். பெர்குசன்(16) தாக்குப்பிடிக்கவில்லை. இதையடுத்து 3 விக்கெட்டுக்கு 44 ரன்கள் மட்டும் தத்தளித்தது. பின் கங்குலி, உத்தப்பா இணைந்து அணியை காக்க முயன்றனர். தன்னை புறக்கணித்த கோல்கட்டா அணிக்கு கங்குலி சரியான பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப அப்துல்லா பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார். இம்மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. சாகிப் பந்தில் கங்குலி(18) பரிதாபமாக அவுட்டானார். யூசுப் பதான் வலையில் உத்தப்பாவும்(12) சிக்க, நிலைமை மோசமானது.

யுவராஜ் மந்தம்:

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய அறிமுக வீரர் சச்சின் ராணா, காலிஸ் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். மறுமுனையில் போராடிய கேப்டன் யுவராஜ், ஒரு நாள் போட்டி போல மந்தமாக ஆடியதால், ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. பாலாஜி வீசிய கடைசி ஓவரில் யுவராஜ்(24), ராணா(18) அவுட்டாகினர். புனே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 118 ரன்கள் மட்டும் எடுத்தது.
காம்பிர் அபாரம்:

சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி. தாமஸ் வேகத்தில் கோஸ்வாமி(6) வீழ்ந்தார். பின் கேப்டன் காம்பிர், மனோஜ் திவாரி இணைந்து அசத்தினர். தாமஸ் பந்தில் திவாரி சிக்சர் அடித்தார்.பார்னல் ஓவரில் காம்பிர் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். புவனேஸ்வர் வேகத்தில் திவாரி(24) போல்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் அதிரடியாக ஆடினார். ராகுல் சர்மா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து புவனேஸ்வர் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். மறுபக்கம் பவுண்டரிகளாக பறக்க விட்ட காம்பிர், அரைசதம் கடந்தார். பார்னல் பந்தில் கங்குலியின் சூப்பர் "கேட்ச்சில்' யூசுப்(29) அவுட்டானார். கோல்கட்டா அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. காம்பிர் (54), பாட்டியா(1)அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை யூசுப் பதான் வென்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா திருக்கோயில்
மூலவர்    :    நரசிம்ம சாஸ்தா
உற்சவர்    :    -
அம்மன்/தாயார்    :    -
தல விருட்சம்    :    இலுப்பை மரம்
தீர்த்தம்    :    சரப தீர்த்தம்
ஆகமம்/பூஜை     :    -
பழமை    :    500 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    -
ஊர்    :    அங்கமங்கலம்
மாவட்டம்    :    தூத்துக்குடி
மாநிலம்    :    தமிழ்நாடு

 தல சிறப்பு:

இக்கோயிலில் நரசிம்மர், சாந்தமான நரசிம்ம சாஸ்தாவாக தங்கை அன்னபூரணியுடன் வீற்றிருக்கிறார்.

பிரகாரத்தில் மகாகணபதி, பாலசுப்ரமணியர், அகத்தியர், பேச்சியம்மன் மற்றும் பிரம்மசக்தி ஆகியோர் உள்ளனர்.

 தலபெருமை:

ஒரு சமயம் தென்காசியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் நரசிம்ம சாஸ்தாவுக்கு நாய் வாகனத்தை நேர்த்திக்கடனாக செய்து கொண்டு வந்தார். கோயிலில் வைத்து திறந்து பார்த்த போது அது நந்தி வாகனமாக மாறியிருந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். அப்போது புறையூர் கிராமத்தில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அயனாதீஸஅவரர் கோயிலில் பிரதிஷ்டை செய்யவிருந்தனர். இந்த நந்தியை அங்கு பிரதிஷ்டை செய்தால் நல்லது என பலரின் ஆலோசனைப்படி புறையூருக்குக் கொண்டு சென்று உரிய முறையுடன் பிரதிஷ்டை செய்தனர். தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலேயே முறைப்படியான பூஜைகள் தொடங்கி விடுகின்றன. புரட்டாசி மாத நவராத்திரி பூஜையின் போது 1008 தீபம் இலுப்பை எண்ணெயில் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் துன்பங்கள், தடைகள், எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். ஆடிப்பூரமும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியும், ஆவணி மூலம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தியின் போது நரசிம்மருக்க பானக அபிஷேகம் செய்யப்படுவது சிறப்பானது. தாமிரபரணி ஓடை கடம்பா குளத்தில் தென்திசை நோக்கி நரசிம்ம சாஸ்தாவும், அவருக்கு வலப்புறம் அன்னபூரணியும் சேர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

  தல வரலாறு:


மகாவிஷ்ணு, தன் பக்தன் பிரகலாதனின் துயர்போக்க தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்டார். சந்தியாகால வேளையில் தனது திருக்கரங்களால் இரண்யனைத் தூக்கி தன் தொடையில் இருத்தி, கூரிய நகத்தால் தொடையையும், மார்பையும் பிளந்து வதம் செய்தார். அதன் பின்னரும் நரசிம்மருக்கு கோபம் குறையவில்லை. மகா உக்கிரமாக அனல் பறக்க நின்ற அவரைக் கண்டு, தேவர்களும் அஞ்சினர். முனிவர்களும், தேவர்களும் ஒன்றுகூடி திருவடிகளைத் தொழுது பல துதிகளால் போற்றி சாந்தப்படுத்த முயன்றார். ஆனால் நரசிம்மரோ நெருங்க முடியாத அளவுக்கு கோபக் கனலுடன் காட்சியளித்தார். தேவேந்திரன் உட்பட அனைவரும் பிரம்மாவை வணங்கி சாந்தப்படுத்த வேண்டினர். பிரம்மாவோ, என்னிடம் வரம் பெற்ற இரண்யனை சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட சினத்தைத் தணிக்க என்னால் இயலாது என்றார். நரசிம்மரின் தோற்றத்திற்குக் காரணமான பிரகலாதனிடம் சொல்லி சாந்தப்படுத்தமாறு யாவரும் வேண்டினர். தன்னைப் போற்றித் துதித்த பிரகலாதனை அழைத்து தன் மடிமேல் வைத்துக் கொண்டார் நரசிம்மர். ஆனாலும் அவரது கோபம் முழுவதுமாகக் குறையவில்லை. நரசிம்மரின் உக்கிரம் தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடுமோ என எல்லோரும் அஞ்சினர். மகாலட்சுமியும் தன் பங்கிற்கு அவரது சினத்தினைப் போக்க உதவினாள். சினம் தணிந்தார் சிங்கவேள். இதுவரை புராணங்கள் சொல்கின்றன. அதன் பின்னரும் சிறிதளவு சினம் நரசிம்மருக்கு இருந்ததாகவும், அதனைப் போக்க அவரது தங்கையான அன்னபூரணி உதவியதாகவும் சொல்கிறது இக்கோயிலின் தலபுராணம். தேவர்கள் வேண்டுகோளின்படி அன்னபூரணி, நரசிம்ம மூர்த்தியிடம் சினம் தணிந்திட வேண்டினாள். தங்கையின் விருப்பத்திற்கேற்ப சாந்தரூபமாக மாறினார், நரசிம்மர். பின்னர் சரப தீர்த்தத்தில் நீராடி, லிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கி சாந்தமானார். இதனால் இவ்வூரில் உள்ள லிங்கம் நரசிங்க நாத ஈஸ்வரன் என்றும்; இங்குள்ள சிவாலயம் நரசிங்க நாத ஈஸ்வரன் கோயில் கோயில் என்றும் பெயர் பெற்றது.

 திருவிழா:

நரசிம்ம ஜெயந்தி

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

எல்லாம் அவன் கையில்! - ராமானுஜர்.

* பழமையான பெரிய ஆசாரியர்களின் உபதேசங்களில் நம்பிக்கை கொள்ளுங்கள். உலக இன்பங்களில் ஒரு பொழுதும் அடிமையாகாதீர்கள். உலக ஞானத்தைக் கொண்டு களிப்படையாதீர்கள்.

* இறைவனுடைய மகிமை பற்றியும் அவனுடைய படைப்பின் அதிசயங்கள் பற்றியும் கூறும் நூல்களையே அடிக்கடி பயிலுங்கள்.

* பரமனுடைய திருநாமங்களையும் மகிமைகளையும் கேட்டு மகிழ்வது போலவே, பரமனுடைய அடியார்களின் திருநாமங்களையும் மணிமொழி களையும் செவியுற்று மகிழுங்கள்.

* நீங்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும், பரமனுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் தொண்டு செய்தால் தான் வாழ்க்கையில் உய்வு பெற முடியும்.

வினாடி வினா :

வினா - திட்டக் கமிஷன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படுகிறது ?

விடை - 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை.

இதையும் படிங்க :

* உலக அருங்காட்சியக தினம்

large_243239.jpg

சென்னை: உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் "மகத்தான பாரதத்தின் மரபுச்சின்னங்களில் மகாபாரதம்' எனும் புகைப்படங்களின் கண்காட்சி நேற்று நடந்தது.இதை பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் துவக்கி வைத்து பார்வையிட்டார். அருகில் தொல்லியல் துணைக் கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி


* தொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல்
ஆத்தூர்: மத்திய அரசின் உயரிய விருதான, "தொல்காப்பியர்' விருது பெற்ற அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம், "தொல்காப்பியம்' குறித்த ஆய்வு கட்டுரை எழுத, 2.50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.

கடந்த, 2005-06ம் ஆண்டுக்கான, "தொல்காப்பியர்' தேசிய விருதுக்கு, ஆத்தூர் அடுத்த தலைவாசல், கூகையூரில் வசிக்கும், 102 வயது பேராசிரியர் அடிகளாசிரியர் தேர்வு செய்யப்பட்டார். கடந்த, 6ம் தேதி, டில்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் அவ்விருதை வழங்கினர்.

அடிகளாசிரியரின், 102வது பிறந்த நாள் விழாவை, குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி கூகையூர் கிராம மக்கள் நேற்று(மே-11)விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். அதில், ஆத்தூர், தலைவாசல் பகுதி தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு அடிகளாசிரியரிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.

தொடர்ந்து, அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம், "தொல்காப்பியம்' குறித்து எளிதான முறையில் ஆய்வு கட்டுரை எழுதுவதற்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்துள்ளது.
இதுகுறித்து, "தொல்காப்பியர்' தேசிய விருது பெற்ற அடிகளாசிரியர் கூறியதாவது:

உலகத்தில் தமிழ் மொழியை தவிர வேறு எந்த ஒரு மொழிக்கும் இலக்கண நூல் கிடையாது. எந்த மொழிக்கும் கிடைக்காத இலக்கண நூல், தமிழ் மொழிக்கு தொல்காப்பியம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு மொழி அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொல்காப்பிய இலக்கண நூலை ஆய்வு செய்து, எளிமையான முறையில் கட்டுரைகள் எழுதி கொடுக்கும்படி, மத்திய உயர்கல்வி மற்றும் மனிதவள மேட்டுத்துறையின் கீழ் சென்னையில் அமைந்துள்ள மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம் தெரிவித்தது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் தொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை பணிகளைமுடித்துகொடுக்க உள்ளேன்.
இவ்வாறு அடிகளாசிரியர் கூறினார்.
நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.

--

No comments:

Post a Comment