Monday, May 9, 2011

இன்றைய செய்திகள் - மே, 09 , 2011

முக்கியச் செய்தி :

* முடங்கிக் கிடக்கும் ஒரு வரலாற்று சரித்திரம்...


cavetemple.jpg

விழுப்புரம், மே 8: விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட முதல் குடைவறைக் கோயில் கம்பீரமாய் நிற்கிறது. ஆனால் அதுகுறித்த தகவல்கள் முழுமையாக இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.

விழுப்புரம்-செஞ்சி சாலையில் உள்ளது மண்டகப்பட்டு. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தூரமும், செஞ்சியிலிருந்து 17 கி.மீ. தூரத்திலும் உள்ளது. பிரதான சாலையில் இறங்கி 5 நிமிட நடைப்பயணத்தில் இந்த கோயில் உள்ளது. மிகப்பெரிய பாறைக் குன்றை குடைந்து இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் நிறுவப்பட்ட முதல் குகைக்கோயில் இதுவேயாகும் என்று அங்குள்ள வடமொழி கல்வெட்டிலிருந்த தகவலை தொல்லியல் துறை வைத்துள்ள தனி கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

செங்கல், மரம், உலோகம், சுதை இவற்றை பயன்படுத்தாமல் லக்ஷிதாயதன என்னும் இக்கற்றளி, பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கு நிர்மாணம் செய்யப்பட்டது.
மலையைக் குடைந்து கற்றளிகள் செய்யும் புதியமுறையை தமிழகத்தில் புகுத்தியவர் மகேந்திரவர்மனே ஆவார். இதனால்தானோ அவருக்கு லக்ஷிதன், விசித்திரசித்தன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. இக்கற்றளி மிக எளிய மண்டபம் போன்ற அமைப்பு கொண்டது. முன்னே மகாமண்டபம், பின்னர் அர்த்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

மிகப் பெரிய 4 தூண்கள் வேலைப்பாடின்றி எளிய பாணியில் அமைந்துள்ளன.
பின் சுவற்றில் 3 கருவறைகள் குடையப்பட்டுள்ளன. இதில் சுண்ணாம்பு பூச்சும், அதன் மேல் ஓவியத்தில் மும்மூர்த்திகளையும் வரைந்து வணங்கப்பட்டு வந்தன என்று ஊகிக்க இடமுள்ளது என்று தொல்லியல் துறையின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டிலேயே பல தவறுகள் உள்ளன.

கோயிலின் இருபக்கமும் உள்ள சிலைகள் துவார பாலகர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக கோயில்களில் இந்த துவார பாலகர்கள் ஆயுதங்களுடன் நேர் நிலையில் நின்றபடிதான் இருப்பர். ஆனால் இங்குள்ள சிற்பங்களில் வலதுபுறத்தில் அரசர் வாள்மீது கைவைத்து, கம்பீரத்தோடு, மணிமுடி தரித்து ராஜதோரணையில் நின்று கொண்டிருக்கிறார். இடதுபுறத்தில் நளினத்துடன் நிற்கும் பெண் சிற்பம் உள்ளது. அது அரசியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேபோல் 3 கருவறைகளிலும் கீழ்பாகத்தில் சிலை ஸ்தாபிதம் செய்வதற்கான துளைகள் உள்ளன. இதனால் அங்கு சிற்பங்கள்தான் இருந்திருக்க வேண்டும், ஓவியம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. காரணம் கோயிலின் முகப்பில் அழகான இரண்டு சிற்பங்களை செதுக்கியுள்ளவர்கள், கருவறையில் மட்டும் ஓவியம் வரைவதற்கான வாய்ப்பில்லை என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்
கின்றனர்.

மேலும் தொல்லியல் துறை வைத்துள்ள கல்வெட்டில் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தைக்கூட (கி.பி.571 அல்லது 600 முதல் 630) என குறிப்பிடவில்லை.

சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு கோயிலை கட்டமைத்த வரலாற்றை குறைந்தபட்ச தகவல்களுடன்கூட அங்கே வைக்கப்படவில்லை. வைத்துள்ள கல்வெட்டும் சிதைந்துள்ளது. மகாபலிபுரம் சிற்ப சரித்திரத்துக்கே முன்னோடியாக திகழ்ந்த இதை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதியில் உள்ளவர்களின் எண்ணம்.

அதிகளவில் கூட்டம் இங்கு வராவிட்டாலும், தினசரி சிலர் வந்து பார்த்துச் செல்கின்றனர். பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து செல்வதாக இக்கோயிலின் அருகே வசிக்கும் வீரம்மா என்ற பெண் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடம், அதற்கான எந்த வசதிகளும் இல்லாமல் 1,500 ஆண்டுகளாக ஒரு சரித்திரம் அமைதியாக முடங்கிக் கிடக்கிறது.

குடியரசுத் தலைவரிடம் செம்மொழி விருது பெற்றார் முனைவர் மு.இளங்கோவன்

08-semmozhi-award-mu-ilango-30.jpg


புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் டெல்லியில் 06.05.2011 காலை 11 .30 மணிக்கு நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றார் முனைவர் மு.இளங்கோவன்.

தமிழின் பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆய்வுசெய்துள்ளமையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகின்றது.

மு.இளங்கோவன் மலைபடுகடாம் என்ற நூலில் புகழப்படும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நன்னன் என்ற அரசனின் கோட்டையைக் கண்டுபிடித்துத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்தவர். தமிழ் ஆய்வுகளை இணையதளத்திற்கு எடுத்துச்சென்றவர்.

வாய்மொழிப்பாடல்கள், இலக்கியம் அன்றும் இன்றும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர். இவற்றைக் கவனத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகின்றது. விருதுத்தொகை ஒரு இலட்சமும், பாராட்டுப்பத்திரமும் வழங்கப்படுகின்றது.

உலகச் செய்தி மலர் :

* பின்லேடன் குறித்த புதிய வீடியோ காட்சிகளை வெளியிட்டது அமெரிக்கா

வாஷிங்டன்: ஒசாமா பின்லேடன் குறித்த புதிய வீடியோ படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. பின்லேடனின் அபோத்தாபாத் வீட்டிலிருந்து இவற்றைக் கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத மிகப் பெரிய அளவிலான வீடியோ உள்ளிட்ட தீவிரவாதம் குறித்த ஆவணங்களாக இது அமைந்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.

மொத்தம் ஐந்து வீடியோ படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவை மிரட்டி பின்லேடன் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் அதில் பெரும்பாலானவற்றில் தன்னைப் பற்றிய டிவி செய்திகளை பின்லேன் பார்ப்பது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளன.

பின்லேடன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர்களிலிருந்து இவை எடுக்கப்பட்டுள்ளன. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்த ஆவணங்கள் மிக முக்கியப் பங்கு வகிப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அல் கொய்தா அமைப்பின் பல்வேறு திட்டங்கள் குறித்த பல தகவல்களும் இதில் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஒரு வீடியோ காட்சியில் சிறிய அறையில், பெரிய போர்வையைப் போர்த்திக் கொண்டு பின்லேடன் அமர்ந்திருக்கிறார். கையில் ரிமோட் இருக்கிறது. டிவியில் தன்னைப் பற்றிய செய்தியை அவர் கூர்ந்து கவனிப்பதாக அந்தக் காட்சி உள்ளது.

மற்றவற்றில் தனது ஆதரவாளர்களுக்கு பின்லேடன் வீடியோ மூலம் ஆற்றும் உரைகள் அடங்கியுள்ளன. இந்த வீடியோக்களில் பின்லேடன் தனது தாடிக்கு டை அடித்திருப்பது நன்றாகத் தெரிகிறது. தனது வயதை குறைத்துக் காட்டும் வகையில் இதை அவர் செய்திருப்பதாக தெரிகிறது. அதேசமயம், அவர் டிவி பார்த்துக் கொண்டிருப்பது போல உள்ள வீடியோவில் தாடி வெள்ளையாக இருக்கிறது.

வெளியுலகுக்கு குறிப்பாக தனது ஆதரவாளர்களிடையே தான் இளமையான உருவத்துடன் காணப்பட வேண்டும் என்பதில் பின்லேடன் அக்கறை காட்டியதாக இதன் மூலம் தெரிவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தலைமறைவான பின்னர் பின்லேடன் அல் கொய்தா அமைப்புடன் நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்ளாமல் ஜவாஹிரி மூலம்தான் அனைத்தையும் செய்து வந்ததாக கருத்து நிலவியது. ஆனால் உண்மையில் கடைசி நிமிடம் வரை பின்லேன் அல் கொய்தா அமைப்புடன் தீவிரப் பங்காற்றி வந்தது இந்த வீடியோக்கள் உள்ளிட்டவை மூலம் தெரிய வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

அல் கொய்தாவின் கட்டுப்பாடு மற்றும் கட்டளை அறையாக பின்லேடனின் இருப்பிடம் இருந்து வந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள். திட்டங்களைத் தீட்டுவதோடு நில்லாமல் அல் கொய்தாவினரையும் பின்லேடனே இயக்கி வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

* 500 அகதிகளுடன் சென்ற கப்பல் பாறையில் மோதியது

ரோம்,மே 8: 500 அகதிகளுடன் சென்ற கப்பல் பாறையில் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லிபியா நாட்டில் ஆசியா மற்றும் ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பாத்து வருகிறார்கள். இவர்களில் 500 பேர் இத்தாலி நாட்டுக்கு அகதிகளாகச் செல்ல முடிவு செய்து ஒரு கப்பலில் புறப்பட்டனர்.

இத்தாலி அருகே லம்பிடிசா என்ற தீவில் ஞாயிற்றுக்கிழமை இவர்கள் சென்ற கப்பல் திடீரென்று ஒரு பாறையில் மோதி நின்றது.

இதனால் கப்பலில் இருந்த அகதிகள் பயத்தில் அலறினார்கள். சிலர் கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது இந்த வழியாக வந்த இத்தாலிய கடலோரக் காவல் படையினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் சில அகதிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் 800 அகதிகளுடன் மற்றொரு கப்பல் ஞாயிற்றுக்கிழமை லம்பிடிசா தீவுக்கு வந்தது.
இந்த ஆண்டு இது வரை 30 ஆயிரம் பேர் லம்பிடிசா தீவுக்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் துனிசியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

துனிசியா நாட்டில் கடந்த ஜனவரி மாதம் புரட்சி வெடித்ததில் இருந்து பலர் வாழ்வு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள்.

* இந்தியாவில் தாக்குதல்களை நிறைவேற்றியது ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தான் ராணுவம்

வாஷிங்டன், மே 8: இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நிறைவேற்றியது பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு உளவு அமைப்புமான ஐ.எஸ்.ஐ.யும்தான் என்பது விக்கி லீக்ஸ் தகவலில் அம்பலமாகியுள்ளது.

குவாந்தநாமோ சிறைக் கைதிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவற்றில் 779 விசாரணை அறிக்கைகளை விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

"இந்தியாவில் தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை பாகிஸ்தான் ராணுவம் தேர்வு செய்துள்ளது. பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது, சிலரைக் கடத்திச் சென்றது, சிலரைக் கொன்றது போன்றவற்றை நிகழ்த்த ஐ.எஸ்.ஐ. ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளது' என்று அமெரிக்க அதிகாரிகளிடம் கைதி ஒருவர் கூறியதாக ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத பயிற்சி முகாம்கள் நடைபெறுவது அமெரிக்காவுக்கு நீண்ட காலமாகவே தெரியும் என கைதிகள் பலர் கூறியுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பலர் பாகிஸ்தானில் எவ்வாறு பயிற்சி பெற்றனர் என்பதும் விரிவாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா, அல்ஜீரியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதச் செயல்களுக்குத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது, இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது குறித்து குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் இந்தியர்களைக் கொல்வதே லட்சியம் என லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த அல்ஜீரியா நாட்டவரான அப்துல் அஸீயா கூறியுள்ளார்.

பாகிஸ்தானிய கைதியான முகமது அன்வர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாதுக்குச் சென்று அங்கு 1998-ல் 21 நாள்கள் பயிற்சி பெற்றுள்ளார். இவர் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளார்.

முகமது அன்வர் ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீரிலும், ஆப்கானிஸ்தானிலும் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள ஆப்கனைச் சேர்ந்தவரும், ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடையவருமான சமன் குல் என்பவர், பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் மஸ்த் குல் என்பவரைப் பற்றிய தகவல்களைக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாதில் இருந்துகொண்டே காஷ்மீரில் நடக்கும் எல்லா கொரில்லா நடவடிக்கைகளையும் மஸ்த் குல்தான் ஒருங்கிணைத்தார் என சமன் குல் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகளில் இந்தியர்களை அதிகம் சோதனைக்கு உள்ளாக்குவதில்லை. எனவே, பயங்கரவாதச் செயல்களில் இந்தியர்கள் அதிகம் பேரை ஈடுபடுத்த வேண்டும் என அல் காய்தா தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் என்று மற்றோர் அறிக்கை குறிப்பிடுகிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்கு வெகு அருகிலேயே வசித்து வந்த பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இப்போது வெளியாகியுள்ள விக்கி லீக்ஸ் தகவல்கள் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் உறுதுணையாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

  • சிங்கப்பூரில் ஆட்சியைப் பிடித்தது ஆளும் கட்சி
singapore.jpg 

சிங்கப்பூர், மே 8: சிங்கப்பூரில் ஆளும் கட்சியான மக்கள் நடவடிக்கை கட்சி (பீப்பிள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி) மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 87 இடங்களில் 81 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றியது.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 6 இடங்களைப் பிடித்துள்ளது. அந் நாட்டின் வரலாற்றில் எதிர்க்கட்சி 6 இடங்களைப் பிடிப்பது இதுவே முதல்முறை.

2006-ல் நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகளைப் பெற்ற மக்கள் நடவடிக்கை கட்சி இந்தத் தேர்தலில் 60 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 22 லட்சம் வாக்காளர்களில் 20.57 லட்சம் (93.06 சதவீதம்) பேர் வாக்களித்தனர்.

தொழிலாளர் கட்சி 12.82 சதவீத வாக்குகளையும், தேசிய சாலிடாரிடி கட்சி (12.04 சதவீதம்), சீர்திருத்த கட்சி (4.28), சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி (2.8), சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (4.83), சிங்கப்பூர் மக்கள் கட்சி 3.1 சதவீத வாக்குகளையும் பெற்றன.

* மனித உரிமை மீறல்: இந்திய அதிகாரிகள் இலங்கைப் பயணம்

கொழும்பு, மே.8: இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா பொதுச் செயலர் பான்-கீ-மூன் அமைத்த நிபுணர் குழு அளித்த அறிக்கை குறித்து விவாதிக்க, உயர்நிலையிலான இந்திய அதிகாரிகள் இலங்கைக்குச் செல்லவுள்ளனர்.

2009-ம் ஆண்டு இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில், போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளதாக ஐ.நா.பொதுச் செயலர் அமைத்த நிபுண்ர் குழு அறிக்கை அளித்துள்ளது. இரு தரப்பினரும் இந்தத் தவறுகளை செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிக்கை குறித்து விவாதிக்க உயர்நிலையிலான இந்திய அதிகாரிகள் இலங்கை செல்லவுள்ளனர். வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், பாதுகாப்புத் துறைச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரடங்கிய இந்தக் குழு, வரும் வெள்ளிக்கிழமையன்று இலங்கை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை சந்திக்கவும் இக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசை இக்குழு வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இலங்கை அதிபர் ராஜபட்ச இந்த நிபுணர் குழு அளித்த அறிக்கை முழுமையில்லாததுடன், ஒரு சார்பாகவும் உள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இலங்கையின் உயர்மட்ட அலுவலர்கள் எவரையும் ஜூன் மாதம் வரை சந்திக்க இந்திய தரப்பு மறுத்துவந்த நிலையில், இந்தியக் குழுவின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. எனினும் மே 16-ம் தேதி இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்திக்க புதுதில்லி வருவார் என்று தெரிகிறது.


** யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து வாழ்ந்த லேடன்

terrorist.jpg

வாஷிங்டன்,மே7: பின் லேடனை அமெரிக்க கமாண்டோ வீரர்கள் சுட்டுக் கொன்று உடலை எடுத்து வருவதை விடியோ காட்சிகளாக நேரடியாகவே பார்த்தார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. ஆனால் அனைத்தும் எந்தவிதப் பின்னணிக் குரலும் ஓசையும் இல்லாமல் மெüனப் படமாகவே இருந்தது. அதே சமயம் ஒபாமாவும் மற்றவர்களும் அவ்வப்போது பொருள்பொதிந்த விமர்சனங்களை உதிர்த்துக் கொண்டே இருந்தனர்.

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பாப் உட்வர்ட் என்ற பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளர் இதைப் பற்றியும் பின் லேடனின் தலைமறைவு வாழ்க்கை பற்றியும் சுவையாகப் பல தகவல்களைத் தெரிவிக்கிறார்.
"பின் லேடனை சுட்டுக் கொன்ற பிறகு அவருடைய உயரம் என்ன என்று தெரிந்துகொள்ள கமாண்டோ வீரர்கள் விரும்பினர். கையில் இஞ்ச் டேப் எதுவும் இல்லாததால் 6 அடி உயரம் உள்ள கமாண்டோ வீரரை லேடனின் சடலத்துக்குப் பக்கத்தில் படுக்கவைத்து உயரத்தை உத்தேசமாக குறித்துக் கொண்டனர்.

இந்தக் காட்சியை விடியோவில் பார்த்துக்கொண்டிருந்த அதிபர் ஒபாமா பக்கத்தில் இருந்தவரிடம், "600 லட்சம் டாலர் மதிப்புள்ள ஹெலிகாப்டரையே அங்கே அழியவிட்டிருக்கிறோம், அற்ப வஸ்து ஒரு இஞ்ச் டேப்பைக் கையோடு எடுத்துப் போயிருக்கக்கூடாதா?' என்று கேட்டிருக்கிறார். இறந்த லேடனுடன் உயிரோடு இருக்கும் கமாண்டோ படுத்ததை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

லேடனுடன் இருந்த அபு அகமது அல் குவைதி என்பவர் ஓராண்டுக்கு முன்னால் அவருடைய நெருங்கிய நண்பருடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்தான் லேடன் இருக்கும் இடத்தை அமெரிக்க உளவுப்படை அறிய உதவியது.

அல் குவைதியின் நண்பர் ஒருவர் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "என்னப்பா எங்கே இருக்கிறாய், ரொம்ப நாளாகவே உன்னைப் பார்க்க முடியவில்லையே? என்ன நடக்கிறது உன் வாழ்க்கையில்? இப்போது என்ன செய்கிறாய்?' என்று கேட்கிறார்.

அல் குவைதி சற்றே ஆயாசமாக, சுரத்தே இல்லாமல் பதில் சொல்கிறார்; "முன்னால் இருந்த அதே மக்களுடன் மீண்டும் இருக்கிறேன்' என்று பதில் அளிக்கிறார். அதன் பிறகு சிறிது நேரம் இருவரும் பேசாமலே மெüனம் நிலவுகிறது. "அப்படியா கடவுள் எல்லாம் நல்லபடியாக இருக்க உதவட்டும்' என்கிறார். இந்த பதில்தான் சி.ஐ.ஏ. உளவாளிகளுக்கு துப்பு துலக்க உதவியது. யாரோ முக்கியப் பிரமுகர்களுடன் அல் குவைதி தலைமறைவாக வாழ்கிறார் என்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது.

அதன் பிறகு பின் லேடன் குடியிருந்த வீட்டைத் தொலைவிலிருந்து கண்காணிக்கும் வகையில் மற்றொரு வீட்டை சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் வாடகைக்கு அமர்த்தினார்கள். அந்த வீட்டில் யாரோ ஒருவர் சூழ்நிலைக் கைதி போல எப்போதும் அடைபட்டுக் கிடந்ததைப் பார்த்தார்கள். அவர் எப்போதாவது வெளியே உலாவினார். அவருடைய உயரம் எவ்வளவு என்று அறிந்துகொள்ள சி.ஐ.ஏ. உளவாளிகள் விரும்பினர். உடனே அமெரிக்க செயற்கைக்கோள் உதவியை நாடினர். அந்த செயற்கைக் கோள் அந்த வீட்டை அப்படியே தன்னுடைய கேமரா கண்ணில் நெருங்கிப் பார்த்து, அவர் உயரம் சுமார் 6 அடி என்று தெரிவித்தது. இப்படி ஒவ்வொரு விஷயமாக தொகுத்துத்தான் பின் லேடன் அங்கிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் ஆதிக்கம் செலுத்திய நாளிலிருந்து நேற்றுவரை ஐ.எஸ்.ஐ.யில் யாரெல்லாம் அதிகாரிகளாக இருந்திருக்கிறார்கள், அவர்களுடைய பின்புலம் என்ன என்றெல்லாம் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ. அமைப்பிலேயே அல் காய்தா ஊடுருவியிருக்கிறதா என்றும் பார்க்கப் போகிறார்கள். இதை அமெரிக்கப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.


தேசியச் செய்தி மலர் :

  • மேற்கு வங்கத் தேர்தல்: 82% வாக்குப் பதிவு
election.jpg

கொல்கத்தா, மே 7: மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப் பேரவைக்கான 5-ம் கட்டத் தேர்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. இதில் 82.2 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மேற்கு மேதினிப்பூர், பாங்குரா, புரூலியா மற்றும் புர்த்வானின் சில பகுதிகளில் உள்ள மொத்தம் 38 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.

அனைத்து தொகுதிகளுமே நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்தவை என்பதால் அவர்கள் வன்முறையை அரங்கேற்றி வாக்குப் பதிவை சீர்குலைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்குச் சாவடிகளை சுற்றி மாநில போலீஸôருடன் துணை ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 109 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதனால் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. வேட்பாளர்களும் பெரிய அளவில் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை என்று மாநிலத்தின் துணை தேர்தல் ஆணையர் வினோத் சுட்ஷி தெரிவித்தார்.
5-ம் கட்டத் தேர்தல் களத்தில் மொத்தம் 193 வேட்பாளர்கள் இருந்தனர். இதில் மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சரும், கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சூர்யகாந்த மிஸ்ரா, மேற்கு வங்க காங்கிரஸ் கட்சித் தலைவர் மானஸ் புனியா ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாவர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் இந்த தொகுதிகள் 2009-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அக்கட்சிக்கு பெரிதும் கை கொடுத்தன.

கடந்த 2006-ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் இத்தொகுதிகளில் 80.13 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதில் அதிக சதவீத வாக்குகள் இடதுசாரி முன்னணிக்கு சாதகமாகவே பதிவாகியிருந்தன.
மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைக்கு 6 கட்டமாகத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருந்தது. அதன்படி, இதுவரை 5 கட்டத் தேர்தல் நிறைவடைந்துவிட்டது. கடைசி கட்டத் தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

* தாகூரின் படைப்புகள் குறுகிய வட்டத்துக்கு உள்பட்டதல்ல: பிரணாப் முகர்ஜி


புது தில்லி, மே 8: ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகள் குறுகிய வட்டத்துக்கு உள்பட்டதல்ல என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

திட்ட கமிஷன் உறுப்பினர் நரேந்திர ஜாதவ், தாகூரின் கவிதைகள் அடங்கிய தொகுப்பை மராத்தியில் மொழி பெயர்த்து புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதை வெளியிட்டுப் பேசிய பிரணாப் முகர்ஜி, "தாகூரின் படைப்புகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அவரது படைப்புகள் குறுகிய வட்டத்துக்கு உள்பட்டதல்ல' என்றார்.

  • காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 100 தீவிரவாதிகள் 

வர்த்தகச் செய்தி மலர் :

இந்திய பங்குச் சந்தைகளின் நிலையற்ற தன்மையால் கடன் பத்திர முதலீட்டில் ஆர்வம் அதிகரிப்பு
மே 09,2011,00:26
சென்னை,: புதிய பங்கு வெளியீடுகளில், போதிய வருவாய் கிடைக்காததால், சில்லறை முதலீட்டாளர்கள், அதிக அளவில் கடன்பத்திரங்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாண்டு தொடக்கம் முதல் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள், ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக நிலையில்லாமல் உள்ளன.
இத்தகைய ழலிலும், நடப்பாண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் மே மாதம் 3ம் தேதி வரை 15 நிறுவனங்கள், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கின.
மிட்வேலி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தொடங்கி, வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வரை மேற்கொள்ளப்பட்ட இந்த பங்கு வெளியீடுகளில், சில்லறை முதலீட்டாளர்களின் பங்கேற்பு மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள், வெளியீட்டு விலையை விட குறைவாக கைமாறிக் கொண்டிருக்கின்றன. இதனால் சில்லறை முதலீட்டாளர்கள், ஆண்டிற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வருவாய்கிடைக்கக் கூடிய கடன்பத்திரங்களில் ஆர்வமாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.உதாரணமாக, அண்மையில் பியூச்சர் வென்ச்சர் இந்தியா நிறுவனம் பங்கு வெளியீட்டை மேற்கொண்டு மூலதனச் சந்தையில் களமிறங்கியது. ஒரு பங்கின் விலை 10-11 ரூபாய்என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதன் பங்குகள் வேண்டி சில்லறை முதலீட்டாளர்கள் 0.61 மடங்கிற்கே விண்ணப்பித்துள்ளனர். இதே போல், பி.டி.சி இந்தியா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், மூலதனச் சந்தையில் களமிறங்கி பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.


வங்கிகளில், குறித்த கால வைப்புத் திட்ட முதலீடுகளில் கிடைக்கும் வருவாயை விட கடன்பத்திரங்களில் கூடுதல் வருவாய்கிடைக்கிறது. மேலும், பங்குகளில் முதலீடு செய்வதை விட கடன்பத்திர முதலீடு பாதுகாப்பானது என்பதாலும், அதன் பக்கம் சில்லறை முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
துணிவே துணை...
பங்குச் சந்தை ஏற்ற, இறக்கமாக உள்ள நிலையிலும், பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற் கொள்ள உள்ளன. ஆஞ்சனேயா லைப்கேர் நிறுவனம், மூலதனச் சந்தையில் களமிறங்கி, பங்கு வெளியீட்டை மேற்கொள்கிறது. பங்கு வெளியீடு 9ம் தேதி (இன்று) தொடங்கி, 12ம்தேதியுடன் முடிவடைகிறது. 'புக்பில்டிங்' எனப்படும் ஏலமுறையில் பங்கு ஒன்றின் விலை 228 - 240 ரூபாய்என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர பொதுத்துறையை சேர்ந்த செயில்,ஓ. என்.ஜி.சி நிறுவனங்கள் மற்றும் இந்தியன் வங்கி ஆகியவையும், விரைவில் இரண்டாவது பங்கு வெளி யீட்டை மேற்கொள்ள உள்ளன

விளையட்டுச் செய்தி மலர் :

கிரிக்கெட்  
புனே எழுந்தது, பஞ்சாப் வீழ்ந்தது!
மொகாலி: ஐ.பி.எல்., லீக் போட்டியில், புனே வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ந்து ஏழு தோல்விகளால் துவண்டுபோன யுவராஜ் அணி ஒருவழியாக எழுச்சி கண்டது. பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத்தவறிய பஞ்சாப் அணி, தொடர்ந்து ஐந்தாவது தோல்வியை பதிவு செய்தது.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில், நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட், பேட்டிங் தேர்வு செய்தார்.
மார்ஷ் நம்பிக்கை:
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு, கேப்டன் கில்கிறிஸ்ட் (3) மோசமான துவக்கம் அளித்தார். ஸ்ரீகாந்த் வாக் வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில், மூன்று பவுண்டரி அடித்த வல்தாட்டி (23), ராகுல் சர்மா சுழலில் சிக்கினார். பின் இணைந்த ஷான் மார்ஷ், தினேஷ் கார்த்திக் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்த போது, புவனேஷ்வர் குமார் வேகத்தில் மார்ஷ் (32) போல்டானார்.
விக்கெட் "மடமட':
அடுத்து வந்த டேவிட் ஹசி (4) சோபிக்கவில்லை. பொறுப்புடன் ஆடிய தினேஷ் கார்த்திக் (30), மிட்சல் மார்ஷ் பந்தில் அவுட்டானார். பின் களமிறங்கிய மந்தீப் சிங் (6), சித்தார்த் சிட்னிஸ் (9), ரேயான் ஹாரிஸ் (4) நிலைக்கவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. பிரவீண் குமார் (3), ஸ்ரீவஸ்தவா (1) அவுட்டாகாமல் இருந்தனர். புனே அணி சார்பில் புவனேஷ்வர் குமார், ராகுல் சர்மா, பார்னல், மிட்சல் மார்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பாண்டே அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய புனே அணிக்கு, ஜெசி ரைடர்-மனீஷ் பாண்டே ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்த போது ரைடர் (15) அவுட்டானார். ஸ்ரீவஸ்தவா பந்தில் இரண்டு "பவுண்டரி' அடித்த ராபின் உத்தப்பா (22), நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பொறுப்புடன் ஆடிய மனீஷ் பாண்டே (28), பிரவீண் குமார் வேகத்தில் போல்டானார்.
யுவராஜ் அதிரடி:
பின், கேப்டன் யுவராஜ் சிங்-பெர்குசன் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. அதிரடியாக ஆடிய இவர், பார்கவ் பட் வீசிய ஆட்டத்தின் 15வது ஓவரில் இரண்டு "சிக்சர்', இரண்டு "பவுண்டரி' அடித்து வெற்றிக்கு வித்திட்டார். ஸ்ரீவஸ்தவா பந்தை தூக்கி அடிக்க முயன்ற யுவராஜ் (35), அவரிடமே "கேட்ச்' கொடுத்து வெளியேறினார். அபிஷேக் ஜுன்ஜுன்வாலா (0) வந்த வேகத்தில் திரும்பினார். பெர்குசன் (6*), மிட்சல் மார்ஷ் (2*) கைகொடுக்க, புனே அணி 17.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் சார்பில் ஸ்ரீவஸ்தவா 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக புனே அணியின் ராகுல் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
ஸ்கோர் போர்டு
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கில்கிறிஸ்ட் (கே)ஜுன்ஜுன்வாலா (ப)ராகுல்    3(8)
வல்தாட்டி (கே)புவனேஷ்வர் (ப)ராகுல்    23(22)
மார்ஷ் (ப)புவனேஷ்வர்    32(28)
கார்த்திக் (கே)ஜுன்ஜுன்வாலா (ப)மார்ஷ்    30(27)
டேவிட் ஹசி (கே)<உத்தப்பா (ப)புவனேஷ்வர்    4(5)
மந்தீப் (கே)யுவராஜ் (ப)பார்னல்    6(11)
சிட்னிஸ் (கே)ஜுன்ஜுன்வாலா (ப)பார்னல்    9(9)
ஹாரிஸ் (கே)யுவராஜ் (ப)மார்ஷ்    4(4)
பிரவீண் -அவுட் இல்லை-    3(5)
ஸ்ரீவஸ்தவா -அவுட் இல்லை-    1(1)
உதிரிகள்    4
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,)    119
விக்கெட் வீழ்ச்சி: 1-25(கில்கிறிஸ்ட்), 2-50(வல்தாட்டி), 3-80(மார்ஷ்), 4-94(டேவிட் ஹசி), 5-100(கார்த்திக்), 6-110(மந்தீப்), 7-114(ஹாரிஸ்), 8-116(சிட்னிஸ்).
பந்துவீச்சு: புவனேஷ்வர் 3-0-14-2, வாக் 2-0-18-0, பார்னல் 4-0-12-2, ராகுல் 4-0-17-2, யுவராஜ் 2-0-17-0, மார்ஷ் 4-0-26-2, ஜுன்ஜுன்வாலா 1-0-11-0.
புனே வாரியர்ஸ்
ரைடர் (கே)டேவிட் ஹசி (ப)பட்    15(18)
பாண்டே (ப)பிரவீண்    28(30)
உத்தப்பா (கே)ஸ்ரீவஸ்தவா (ப)ஹாரிஸ்    22(18)
யுவராஜ் (கே)+(ப)ஸ்ரீவஸ்தவா    35(15)
பெர்குசன் -அவுட் இல்லை-    6(14)
ஜுன்ஜுன்வாலா (கே)கில்கிறிஸ்ட் (ப)ஸ்ரீவஸ்தவா    0(3)
மார்ஷ் -அவுட் இல்லை-    2(6)
உதிரிகள்    12
மொத்தம் (17.1 ஓவரில், 5 விக்.,)    120
விக்கெட் வீழ்ச்சி: 1-32(ரைடர்), 2-69(உத்தப்பா), 3-84(பாண்டே), 4-116(யுவராஜ்), 5-117(ஜுன்ஜுன்வாலா).
பந்துவீச்சு: பிரவீண் 4-1-16-1, ஹாரிஸ் 4-0-26-1, ஸ்ரீவஸ்தவா 3-0-20-2, பட் 4-0-35-1, வல்தாட்டி 2.1-0-17-0.

ஆன்மீகச் செய்தி மலர் :

அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்


மூலவர்
:
வைத்தமாநிதிபெருமாள்
 
உற்சவர்
:
நிஷோபவித்தன்
 
அம்மன்/தாயார்
:
குமுதவல்லி நாயகி , கோளூர் வல்லி நாயகி
 
தல விருட்சம்
:
-
 
தீர்த்தம்
:
தாமிரபரணி, குபேர தீர்த்தம்
 
ஆகமம்/பூஜை
:
-
 
பழமை
:
1000-2000 வருடங்களுக்கு முன்
 
புராண பெயர்
:
திருக்கோளூர்
 
ஊர்
:
திருக்கோளூர்
 
மாவட்டம்
:
 
மாநிலம்
:
தமிழ்நாடு
பாடியவர்கள்: 
மங்களாசாஸனம்
நம்மாழ்வார்
வைத்தமாநிதியாம் மது சூதன னையே யலற்றி கொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன பத்து நூற்றுளிப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுலகாள்வாரே.
-நம்மாழ்வார்

 தல சிறப்பு:  பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதியில் இது 3 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும். பெருமாள் இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம்.
நவதிருப்பதியை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். எனவே கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் புறப்படுகிறது.
  தலபெருமை: 
இங்குள்ள விமானம் ஸ்ரீகர விமானம்.சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்க தலங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரக தலங்களாக போற்றப்படுகிறது. இங்கு  பெருமாளே நவகிரகங் களாக செயல்படுவதால் நவகிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக  தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களிலும்  உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி
1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம் 
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3.  செவ்வாய் : திருக்கோளூர் 
4. புதன் : திருப்புளியங்குடி 
5. குரு : ஆழ்வார்திருநகரி 
6.  சுக்ரன் : தென்திருப்பேரை 
7. சனி : பெருங்குளம் 
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்களம்)
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி  (தொலைவில்லிமங்களம்)
   தல வரலாறு: 
பார்வதியால் குபேரனுக்கு சாபம் ஏற்படுகிறது. இதனால் அவனிடமிருந்து நவநிதிகள் விலகுகின்றன. இவனிடமிருந்து விலகியநவநிதிகள் நாராயணனிடம் போய் சேருகின்றன. நாராயணன்இந்த நிதிகளை பாதுகாத்து வைத்திருந்ததால் அவருக்கு "வைத்தமாநிதி' என்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாளே இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். குபேரன் இத்தல பெருமாளை வழிபட்டு மீண்டும் நவநிதிகளை பெற்றான் என புராணங்கள் கூறுகின்றன. இத்தல பெருமாளுக்கு அதர்மபிசுனம் என்ற பெயரும் உண்டு.

 திருவிழா:  வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

  • எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு ரவீந்திரநாத் தாகூர்.

  • உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் என்று தான் சொல்ல வேண்டும்.


  • * ஆண்டவன் இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்திலும் ஒரு நியமத்தினை அல்லது ஒழுங்கினைக் காணமுடிகிறது. அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.

  • வினாடி வினா :

  • வினா - முதல் பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் யார் ?

  • விடை வாரன் ஹேஸ்டிங்ஸ் (1774 1785)

இதையும் படிங்க :


  • 102 வயதில் தமிழ் ஆர்வலருக்கு தேசிய விருது : விருது வாங்க விமானத்தில் பயணம்

ஆத்தூர் : அகவை முதிர்ந்தும், ஆற்றலோடு தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் அடிகளாசிரியருக்கு, "தொல்காப்பியர்' என்ற தேசிய விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. மேலும், வரும் 10ம் தேதி அடிகளாசிரியரின் 102வது பிறந்த நாளை, கிராம மக்கள் விழா எடுத்து கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2004ம் ஆண்டு, தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அதன் பின், மத்திய அரசு, செம்மொழி தமிழுக்கான ஜனாதிபதி விருதுக்கு, 17 அறிஞர்களை தேர்வு செய்து, 2009ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அறிவித்தது.கடந்த 2005-06ம் ஆண்டுக்கான, "தொல்காப்பியர்' விருதுக்கு, ஆத்தூர் அடுத்த தலைவாசல் கூகையூரில் வாழ்ந்து கொண்டிருக்கும், 102 வயது பேராசிரியர் அடிகளாசிரியரை தேர்வு செய்தது. மேலும், 2006-07ம் ஆண்டுக்கான, "குறள் பீடம்' விருதுக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் எல்ஹாரி, 2005 முதல் 2008ம் ஆண்டு வரை இளம் அறிஞர்கள் விருதுக்கு அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் டில்லியில் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், அகவை முதிர்ந்தும், ஆற்றலோடு தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் அடிகளாசிரியருக்கு, "தொல்காப்பியர்' விருது வழங்கி கவுரவித்துள்ளார்.
கடந்த 1910ம் ஆண்டு பிறந்த அடிகளாசிரியரின் பெயர் குருசாமி அய்யர். தமிழ் மீதும், மறைமலை அடிகள் மீதும் கொண்ட பற்று காரணமாக, தன் பெயரை, "அடிகளாசிரியர்' என மாற்றிக் கொண்டார். கடந்த 1937ம் ஆண்டு, சென்னை பல்கலையில் புலவர் பட்டம் பெற்ற அவர், கல்லூரிகளில் விரிவுரையாளராகவும், சென்னை தமிழ்த்துறை ஆராய்ச்சியாளராகவும், 1950ல், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை சுவடிப்புலத்தில் சிறப்பு நிலை இணை பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1970ல், சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழ் கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார்.

தொல்காப்பியம் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்ட அவர், பணி ஓய்வு பெறும் நிலையிலும் தொல்காப்பிய ஆராய்ச்சியை நிறைவு செய்து கொடுத்தார். அதனால், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், அடிகளாசிரியருக்கு, "தொல்காப்பிய செம்மல்' என்ற விருது வழங்கியது.மலும், அவரது தமிழ்த் தொண்டை பாராட்டும் விதமாக, சேக்கிழார் விருது, சிறந்த தமிழ் எழுத்தாளர் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டன. கடந்த 2009ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலை, அடிகளாசிரியரின் பணியைப் பாராட்டி, "தமிழ்ப் பேரவை செம்மல்' விருது வழங்கியது.மத்திய அரசு சார்பில் வழங்கிய தொல்காப்பியர் விருது பெறுவதற்காக, 102 வயதான அடிகளாசிரியர், சென்னையில் இருந்து ஏர்-இந்தியா விமானத்தில் டில்லி சென்றுள்ளார். அதனால், ஏர்-இந்தியா விமானத்தில் அதிக வயது பயணி என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். தமிழுக்குத் தொண்டாற்றி வரும் அடிகளாசிரியருக்கு, மே 10ம் தேதியுடன் 102 வயதாகிறது. அவரது பிறந்த நாளை, கூகையூர் கிராம மக்கள், ஆத்தூர், தலைவாசல் பகுதி தமிழ் ஆசிரியர்களும் சேர்ந்து கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து அடிகளாசிரியர், நமது நிருபரிடம் கூறியதாவது:தொல்காப்பியத்தின் மீது கொண்ட அதிக ஆர்வம் காரணமாக, ஆராய்ச்சி செய்து முடித்தேன். இதுவரை தமிழில் ஆராய்ச்சி நூல், படைப்பிலக்கியம், உரைநடை என, 64 நூல்கள் எழுதியுள்ளேன். தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.வீட்டில் தவிர வேறு எங்கும் சாப்பிடாமலும், தன் வேலைகளை தானே செய்து கொள்வதாலும் 100 வயதைக் கடந்து உயிர் வாழ முடிகிறது. மூச்சு உள்ளவரை தமிழுக்காக தொண்டு செய்வேன்.
இவ்வாறு அடிகளாசிரியர் கூறினார்.அடிகளாசிரியரின் நூல்களும், அவரது வாழ்க்கை முறையும் வருங்கால தலைமுறையினருக்கு உதவியாகவும், அவர்களுக்கு பாடமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அடிகளாசிரியரின் குடும்பம் :அடிகளாசிரியருக்கு சம்பத் அம்மாள் என்ற மனைவியும், திருநாவுக்கரசி(76), பேராசிரியர்(64), இளங்கோவன்(63), குமுதவள்ளி(62), செந்தாமரை(58), நச்சினார்கினியன்(52), சிவபெருமான்(50) என நான்கு மகன்கள், மூன்று மகள்களும் உள்ளனர். தமிழ் உணர்வை போற்றும் வகையில், தன்னுடைய பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் மட்டுமே வைத்துள்ளார்.பேராசிரியர் என்பவர், தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த போது சிறுநீரகக் கோளாறால் இறந்துவிட்டார். நச்சினார்கினியன் அரசு பள்ளி ஆசிரியராகவும், சிவபெருமான் அண்ணாமலை பல்கலையில் தமிழ்த்துறை இணை பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.
நன்றி தின மலர், தின மணி.

No comments:

Post a Comment