Tuesday, May 17, 2011

இன்றைய செய்திகள் - மே 17 , 2011.




«முக்கியச் செய்தி :

கடவுளின் பெயரால் முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா: விஜய்காந்த்-மோடி பங்கேற்பு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். இதைக் காண ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையில் திரண்டனர்.

இந்த பதவியேற்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள தவிர குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் பங்கேற்றனர்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 147 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று வேகம் பிடித்தன.

முதலில் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் ராயப்பேட்டையி்ல் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இன்று பிற்பகல் 12.45 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

ஜெ. ஜெயலலிதாவாகிய நான்

ஜெயலலிதா எடுத்துக் கொண்ட பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு உறுதிமொழி...

ஜெ. ஜெயலலிதா என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்,

தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக, உண்மையாகவும், உளச்சான்றின் படியும், என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க, அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பை விளக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை நிறைவேற்ற தேவையான அளவுக்கு அன்றி, ஒருவரிடமோ, பலரிடமோ நேர்முகமாகவோ, மறைமுகவாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.


உலகச் செய்தி மலர் :

* பாகிஸ்தானில் சவுதி தூதரக அதிகாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத்: கராச்சியில் சவுதி அரேபிய தூதரக அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தெற்கு பாகிஸ்தானில் உள்ள சவுதி தூதரகத்தில் குண்டுகள் வீசப்பட்ட 5 நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சவுதி தூதரக அதிகாரி ஹசன் எம். எம். அல் கதானி அலுவலகத்திற்கு செல்கையில் அவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வழி மறித்துள்ளனர். பின்னர் அவர்கள் ஹசனை சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவரை ஜின்னா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பஹ்ரைன் தூதரக்கத்திற்கு அருகில் நடந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள சவுதி தூதரகம் இறந்தவர் தூதரக அதிகாரி தான் என்று உறுதி செய்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 11-ம் தேதி ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இரண்டு குண்டுகளை கராச்சியில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் வீசினர். இந்த தாக்குதலில் யாரும் காயம் அடையவில்லை.

ஆனால் இந்த வெடிகுண்டு தாக்குதலில் தூதரக வளாகத்திற்குள் உள்ள கட்டிடங்கள் சிறிதளவு சேதமடைந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல்கள் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு தான் நடந்துள்ளன. பாகிஸ்தானில் இருக்கும் சவுதி அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளை சவுதி துணை வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் காலித் பின் சௌத் கேட்டுக் கொண்டுள்ளார்.

* என்ஜினில் தீ: சிங்கப்பூரில் அவசரமாக தரையிங்கிய காதே பசிபிக் விமானம்
ஹாங்காங்: காதே பசிபிக் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் 2-வது என்ஜினில் தீப்பிடித்ததால் சிங்கப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளுடன் இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவுக்கு காதே பசிபிக் விமானம் ஒன்று இன்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடத்திலேயே விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்ததால் சிங்கப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இது குறித்து அந்த விமான நிறுவனம் கூறியதாவது,

தரையிறங்கிய பிறகு சிங்கப்பூர் தீயணைப்பு படையினர் விமானத்தின் 2-வது என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைத்துவிட்டனர். அதில் இருந்த விமானிகளும், பயணிகளும் சிங்கப்பூர் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் இன்று வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றது.
  

* பாலியல் புகாரில் சிக்கிய ஐ.எம்.எஃப் தலைவருக்கு ஜாமீன் மறுப்பு

large_241936.jpg

நியூயார்க்,மே 16: பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவருக்கு நியூயார்க் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் மறுத்துவிட்டது.

 ÷ஐஎம்எஃப் அமைப்பின் தலைவராக உள்ளவர் டொமினிக் ஸ்ட்ரஸ்சன்( 62). இவர் கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் உள்ள மன்காட்டன் நகருக்கு சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

 ÷ அப்போது அறைக்கு வந்த ஓட்டல் பணிப்பெண்ணை டொமினிக் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் கூறப்பட்டது. போலீஸôர் வருவதற்குள் டொமினிக் அங்கிருந்து தப்பி நியூயார்க் நகருக்கு சென்றார்.

 ÷போலீஸôர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். டொமினிக் பிரான்ஸ் நாட்டின் மூத்த அரசியல் தலைவர். அவர் விரைவில் நடைபெறவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட இருந்தார். அதற்குள் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியதால் அந்த வாய்ப்பை இழந்து விட்டார்.

 கைது செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக திங்கள்கிழமை அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி மெலீஸô ஜாக்சன் வழக்கை விசாரித்தார். தன்மீதான குற்றச்சாட்டுகளை டொமினிக் மறுத்தார்.

 ரூ.5 கோடிக்கு டொமினிக்கு ஜாமீனில் விட வேண்டும் என்று அவரத் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

 ஆனால், அவர் தப்பிச் செல்வதற்கு வாய்ப்பிருப்பதால் வரும் 20-ம் தேதி வரை காவலில் வைத்திருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். வழக்கை அதே தேதிக்கு ஒத்திவைத்தார்

* எண்டவர் விண்கலம் புறப்பட்டது

ஹூஸ்டன், மே16: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, எண்டவர் விண்கலம் திங்கள்கிழமை புறப்பட்டது.

 ஆறு விண்வெளி வீரர்களுடன் எண்டவர் விண்கலம்,விண்வெளியிலுள்ள சர்வதேச ஆய்வு மையத்துக்குத் தேவையான 2 பில்லியன் டாலர் மதிப்பிலானப் பொருட்களை எடுத்து செல்கிறது. 16 நாட்களுக்கு பிறகு அது பூமிக்கு திரும்பும். 25 முறை விண்ணுக்குச் சென்று திரும்பியுள்ள எண்டவருக்கு இதுவே கடைசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்திற்கு பிறகு அதற்கு ஓய்வு கொடுக்க நாஸô விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இது,எண்டவர் விண்கலத்தின் கடைசி பயணம் என்பதால், அது விண்ணுக்கு செலுத்தப்படுவதை காண கென்னடி விண்வெளி மையத்துக்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்திருந்தனர். கடந்த மாதம் எண்டவர் விண்கலத்தை செலுத்த முயன்ற போது,தொழில் நுட்ப கோளாறு காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

* மிகப்பெரிய தங்கநாணயம் ஏலம்

பீஜிங்: சீனாவின் மிகப்பெரிய தங்க நாணயம் 1.18 மில்லியன் டாலர் அளவுக்கு ஏலம் போனது. சீனாவின் சீன கார்டி‌யன் ஏலம் எனும் நிறுவனம் , அந்நாட்டு அரசினால் கடந்த 2000-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கநாணயத்தை விலைக்கு வாங்கியது. இந்த நாணயம் சுமார் 10 கிலோ எடை கொண்டது. 99.9 சதவீதம் தூய தங்கத்தினால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்நாணயம் நேற்று ஏலம்விடப்படடது. 22 ரவுண்டுகளுக்குபின் 1.18 மில்லியன் டாலர் ஏலம் போனது. இதன் உண்மையான மதிப்பு 30 ஆயிரம் யுவான் ஆகும்.

தேசியச் செய்தி மலர் :


* 2ஜி வழக்கு: வருமான வரித்துறை தூங்குகிறதா? உச்ச நீதிமன்றம்

புது தில்லி, மே 16: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத வருமான வரித்துறைக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 இந்த விஷயத்தில் வருமான வரித்துறை தூங்கி விட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றதன் மூலம் பெற்ற பணத்துக்கு முறையாக வருமான வரி செலுத்தாதது தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

 அப்போது இந்த வரி ஏய்ப்பு விவகாரம் 2008-ஆம் ஆண்டே தெரியவந்தும், இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர்தான் வருமான வரித்துறை விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளது. இவ்வளவு தாமதம் ஏன் என்று நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.

 வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் விவேக் தங்கா, இந்த தாமத்தை நியாயப்படுத்தி வாதாடினார். மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் விசாரணையில் தடைகளை ஏற்படுத்தின என்று கூறினார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களின் நகல்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.



 எனினும் நீதிபதிகள் இந்த பதிலில் திருப்தியடையவில்லை. இந்த விஷயத்தில் வருமான வரித்துறை தூங்கி விட்டது. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறினர். வருமான வரித்துறை குறிப்பிட்ட காலத்துக்குள் வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள் மீது முழுமையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

 ÷இந்த வழக்கு விசாரணையில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய முன்றும் தங்களுக்கு இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 மோரீஷஸ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் உள்ளது. இதன்படி ஒரு நிறுவனம் அந்த நாட்டில் வரி செலுத்தி விட்டால், நமது நாட்டில் வரி செலுத்த வேண்டியதில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்ட 2ஜி ஒதுக்கீடு பெற்ற பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மோரீஷஸ் மூலமாக வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தங்கள் பங்குகளை விற்று வரிவிலக்கு பெற்றுள்ளன.

 
* கர்நாடக விவகாரம்: அரசியல் சட்டத்துக்கு விரோதமாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது- பிரதமர்
புதுதில்லி, மே 16: கர்நாடக விவகாரத்தில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காது என்று அத்வானி தலைமையில் தன்னைச்சந்தித்த தேசிய ஜனநாயகக்கூட்டணி கட்சித் தலைவர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார்.

 கர்நாடகத்தைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் பதவி நீக்கத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி கட்சித் தலைவர்கள் அத்வானி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக்குப் பிறகு பிரதமர் மன்மோகன்சிங்கை அத்வானியும் கூட்டணி கட்சித் தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.

 அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அத்வானி கூறுகையில், கர்நாடக ஆளுநர் பரத்வாஜ், அரசியல் சட்டத்துக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். அவரது நடவடிக்கைகளும், செயல்களும் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக உள்ளது. எனவே பரத்வாஜை மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். கர்நாடக அரசை கலைக்க பரத்வாஜ் அளித்துள்ள பரிந்துரையை ஏற்கக்கூடாது என்றும் வலியுறுத்தினோம்.

 இதை மிகவும் கவனத்தோடு கேட்டுக் கொண்ட பிரதமர், "கர்நாடக ஆளுநர் அனுப்பிய பரிந்துரை என்னும் தனது அலுவலகத்திற்கு வரவில்லை. அது உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது' என்றார்.

 மேலும், பிரதமர் கூறுகையில் "கர்நாடக விவகாரத்தில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காது' என்று பிரதமர் உறுதியளித்துள்ளார் என்றார் அத்வானி.

 மத்திய அரசு அவசரப்படாது: இதற்கிடையே கர்நாடக அரசை கலைக்கக்கோரி ஆளுநர் பரத்வாஜ் அனுப்பியுள்ள பரிந்துரை மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில்,

 கர்நாடக ஆளுநரின் அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு அவசரம் காட்டாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து ஆளுநர் அவசரமாக இந்த பரிந்துரையை அனுப்பிவைத்துள்ளார். உள்துறை இந்த பரிந்துரையை பரிசீலிக்கும். கர்நாடக ஆளுநருக்கும், அம்மாநில முதல்வருக்குமிடையே தனிப்பட்ட முறையில் மோதல் இருப்பதை மத்திய அரசு அறிந்துள்ளது. இதன் காரணமாகவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த

 2 நாட்களிலேயே பரத்வாஜ் இந்த பரிந்துரையை அனுப்பியுள்ளார். எனவே கர்நாடகத்தைப் பொறுத்தவதவரை ஆளுநரின் அறிக்கை அடிப்படையில் அவசரப்பட்டு எந்த முடிவையும் மத்தியஅரசு எடுத்துவிடாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 குடியரசுத் தலைவர் முன் இன்று பேரணி: இதற்கிடையே சட்டப்பேரவையில் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பேரவைக் கூட்டத்தைக்கூட்டும்படி ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அதை ஆளுநர் நிராகரித்துவிட்டார். இதையடுத்து குடியரசுத்தலைவர் முன் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டு தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 121 பேருடன் திங்கள்கிழமை இரவு தில்லி வந்து சேர்ந்தார்.

 தில்லியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குடியரசுத் தலைவரைச் சந்திக்க எடியூரப்பா தலைமையிலான குழுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

 சிதம்பரம் ஆலோசனை: இதற்கிடையே ஆளுநர் அனுப்பியுள்ள பரிந்துரையை அடுத்து கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது.

* ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை விவகாரம்: தில்லியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் சந்திப்பு

smk.jpg

புதுதில்லி, மே 16: இந்தியாவில் 3 நாள் பயணமாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் திங்கள்கிழமை தில்லி வந்தார்.

 இந்தப் பயணத்தின்போது இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் பலரை அவர் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

 விடுதலைப் புலிகளுடனான போர் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் இலங்கை மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டிருப்பதால் எழுந்திருக்கும் நெருக்கடியான நிலையில், தங்களுக்கு ஆதரவாக இருக்கும்படி இந்தியாவிடம் கோருவதற்காக அவர் வந்திருப்பதாகத் தெரிகிறது.

 எனினும் இது தொடர்பாக இலங்கை அரசிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

 இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்த அவர் இருதரப்பு, பிராந்திய விஷயங்கள் குறித்துப் பேசினார்.

 தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்பாகவும இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

 தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கைக் கடற்படையினர் அவர்கள் மீது அத்துமீறி நடந்துகொள்வது குறித்து சுட்டிக்காட்டிய எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக மீனவர்களைக் கையாளும்போது இலங்கை கடற்படை கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் வலியுறுத்தினார் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

 இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணா, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி இலங்கைக்கும் மிகவும் முக்கியமானதும் அவசியமானதும் ஆகும் என்று தெரிவித்தார்.

 தனது இந்தியப் பயணத்தின்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரையும் பெரீஸ் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது


 * ராணுவத் தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை. *
புதுதில்லி, மே 16: பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பு உஷார்நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சர், ராணுவத் தளபதிகள் உள்ளிட்டோரிடம் பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

 பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பதுங்கியிருந்த பின் லேடனை அமெரிக்க கமாண்டோ படையினர் அண்மையில் சுட்டுக் கொன்றனர்.

 இதையடுத்து பின் லேடனுக்கு ஆதரவாக இருந்ததாக பாகிஸ்தான் மீது உலக நாடுகள் குற்றம்சாட்டி வரு

 கின்றன.

 இதையடுத்து நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், கவனத்தைத் திசை திருப்புவதற்காக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

 இதை உறுதி செய்வது போல, பாகிஸ்தான் ஐ.எ.ஐ. உளவு அமைப்பின் தலைவர் சுஜா பாஷா அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். அபோட்டாபாத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதுபோல, இந்தியாவும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டால், பதிலடி கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும், இந்தியாவுக்குள் சில தாக்குதல் இலக்குகளுக்கு குறி வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

 இந்த நிலையில், இந்தியாவின் ராணுவத் தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் தலைமையில், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி மற்றும் ராணுவத் தளபதிகள் கலந்து கொண்ட கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடந்தது.

 தரைப்படைத் தலைமைத் தளபதி, வி.கே.சிங், விமானப்படைத் தலைமைத் தளபதி பி.வி.நாயக், கடல்படைத் தலைமைத் தளபதி நிர்மல் வர்மா, பாதுகாப்புத்துறைச் செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், டிஆர்டிஓ தலைவர் வி.கே.சரஸ்வத் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 90 நிமிடங்கள் நடந்த இந்தக் கூட்டத்தில் இந்திய-பாகிஸ்தான், இந்திய-சீன எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இருதரப்பு சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில், எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

 * குவாஹாட்டி, மே 16: அசாம் மாநில முதல்வராக தருண் கோகோய் புதன்கிழமை (மே 18) பதவியேற்கவுள்ளார். தொடர்ந்து 3-வது தடவையாக அவர் முதல்வர் பதவியில் அமரவுள்ளார்.

tharunkoka.jpg

 குவாஹாட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. மாநில ஆளுநர் ஜானகி வல்லப பட்நாயக், தருண் கோகோய்க்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணத்தை செய்து வைப்பார்.

 இதனிடையே, செவ்வாய்க்கிழமை அந்த மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் கட்சியின் பேரவைத் தலைவராக தருண் கோகோய் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அசாம் மாநிலத்துக்கான கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் திக்விஜய் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முதல்வர் பதவி ஏற்றபின் தமது அமைச்சரவையில் இடம்பெறவுள்ளவர்களின் பெயர் பட்டியலை எடுத்துக்கொண்டு தருண் கோகோய் தில்லிக்குச் செல்வார். இதுகுறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசித்து இறுதி செய்வார்.

*கேரள அமைச்சரவை நாளை பதவியேற்பு

umansan.jpg

திருவனந்தபுரம், மே16: கேரள மாநிலத்தில் புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து திங்கள்கிழமை பேச்சு வார்த்தை நடத்தி முடித்தது காங்கிரஸ் கூட்டணி.

 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை (மே 18) பதவியேற்க உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டி முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் 21 பேர் கொண்ட அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பேற்கும் எனத் தெரிகிறது.

 கூட்டணியில் 20 பேரவை உறுப்பினர்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது. தங்களுக்கு 5 அமைச்சர் பதவிகள் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது இக்கட்சி.

 மற்றொரு முக்கிய கூட்டணிக் கட்சியான கேரள காங்கிரஸ் -மாணி பிரிவு 4 அமைச்சர் பதவி கேட்டு வருகிறது. அத்துடன் பேரவை துணைத் தலைவர் பதவியும் தர வேண்டும் எனவும் கூறியுள்ளது. இக்கட்சிக்கு 9 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இக்கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளே கிடைக்கும் எனத் தெரிகிறது. முஸ்லிம் லீக்கைப் பொருத்தவரை, அக்கட்சி விரும்பும் துறைகள் ஒதுக்கப்பட்டால், அமைச்சர்கள் எண்ணிக்கையில் பிடிவாதம் பிடிக்காது எனக் கூறப்படுகிறது. முன்னணிக் கட்சிகளிடையே திங்கள்கிழமை பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து, ஒரே எம்.எல்.ஏ கொண்ட கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் தரலாம் என முடிவெடுக்கப்பட்டது.

 இதன்படி, கேரள காங்கிரஸ்-ஜேக்கப் கட்சியின் டி.எம்.ஜேக்கப், கேரள காங்கிரஸ்- பாலகிருஷ்ணன் பிரிவைச் சேர்ந்த கே.பி. கணேஷ்குமார், ராஷ்டிரீய சோஷியலிஸ்ட் கட்சி- பேபி பிரிவைச் சேர்ந்த ஷிபு பேபி ஜான் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

 காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, அக்கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெறும் எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இதற்கு கட்சி மேலிடத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னரே அமைச்சர்கள் பெயர் வெளியிடப்படும்.

* கனிமொழி, ராசாவின் ஆடிட்டர்களிடம் சிபிஐ விசாரணை
புது தில்லி, மே 16: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தை விசாரித்து வரும் சி.பி.ஐ. திங்கள்கிழமை கனிமொழி, ஆ.ராசா ஆகியோரின் கணக்குத் தணிக்கையாளர்களிடம் (ஆடிட்டர்) விசாரணை நடத்தியது.

 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூட்டுச் சதியாளர் என குற்றம் சாட்டப்பட்டார். கனிமொழி ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 7 மற்றும் 11-ன் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.

 இந்நிலையில், திங்கள்கிழமை கனிமொழியின் கணக்குத் தணிக்கையாளர் (ஆடிட்டர்) ரத்தினத்தை சி.பி.ஐ. விசாரணை செய்தது. டிபி ரியாலிட்டி நிறுவனத்திலிருந்து கடன் பெற்றதாகக் கூறப்பட்ட பணம் குறித்து ரத்தினத்திடம் விசாரணை நடத்தியது. கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளுக்கும் ரத்தினம்தான் தணிக்கை அதிகாரியாக உள்ளார்.

 இந்நிலையில், முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் கணக்குத் தணிக்கையாளர் வி. கணபதியையும் சி.பி.ஐ. திங்கள்கிழமை விசாரணை செய்தது.

 சென்னை தேனாம்பேட்டையில் டாடா குழுமத்தைச் சேர்ந்த வோல்டாஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நில விற்பனை தொடர்பாக கணபதி விசாரணை செய்யப்பட்டார். இந்த நில பேரத்தில் 2ஜி ஊழல் பணம் செலுத்தப் பட்டிருக்கலாம் என சி.பி.ஐ. சந்தேகிக்கிறது.

 2ஜி ஊழல் மூலம் நாட்டுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தலைமைத் தணிக்கை அதிகாரி அறிக்கையளித்திருந்தார். தில்லியில் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

மாநிலச் செய்தி மலர் :

* தேவேந்திரநாத் சாரங்கி புதிய தலைமைச் செயலாளர்

secdeventhira.jpg

சென்னை, மே 16: தமிழகத்தில் புதிய அரசின் தலைமைச் செயலாளராக தேவேந்திரநாத் சாரங்கி பொறுப்பேற்றுள்ளார். அவர் இப்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராக உள்ளார்.

 அதேபோன்று, முதல்வரின் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த் துறை, போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை என பல முக்கிய துறைகளின் செயலாளர் பொறுப்புகளை வகித்தவர் சாரங்கி. தலைமைச் செயலாளராக இருந்த கே.எஸ். ஸ்ரீபதி ஓய்வு பெற்ற போது, அடுத்த தலைமைச் செயலாளர்களாக வருபவர்களின் பட்டியலில் சாரங்கி பெயர் இருந்தது. ஆனால், மாலதி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அரசின் புதிய தலைமைச் செயலாளராக சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

 முதல்வரின் செயலாளர்கள்: முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெங்கடரமணன், ஷீலா ப்ரியா, ராம மோகன ராவ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளராக வெங்கடரமணனும், வேளாண் துறை செயலாளராக ராம மோகன ராவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 தலைமைச் செயலாளராக இருந்த மாலதி இப்போது புள்ளியியல் மற்றும் பொருளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 பேரவைச் செயலாளர் யார்?: சட்டப் பேரவைச் செயலாளராக இருந்த எம்.செல்வராஜ் அந்தப் பதவியில் இருந்து விலகி உள்ளார். அவர் பணி நீட்டிப்பில் இருந்தார். அவரது பணி மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. சட்டப் பேரவைச் செயலராக ஜமாலுதீன் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

* பி.இ. விண்ணப்ப விநியோகம் தொடக்கம்: முதல் நாளில் 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்
* தமிழகத்தில் முதல்முறையாக பழங்குடியின வன அதிகாரி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி!
கோவை, மே 16: தமிழகத்தில் முதல்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த கே.கே.சரவணக்குமார், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவர், 815-வது ரேங்க் பிடித்துள்ளார்.

 ஏற்கெனவே, இந்திய வனப் பணி (ஐ.எஃப்.எஸ்.) தேர்வில் வெற்றி பெற்று, நாகலாந்து மாநிலத்தில் வன அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயி காமராஜ், ரம்பா தம்பதியின் மகன் கே.கே.சரவணக்குமார் (32). கோட்டா பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் அதே ஊரில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு வரையிலும், கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 வரையிலும் படித்தார்.

 இதையடுத்து, 1996 முதல் 2000-ம் ஆண்டு வரையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை படித்தார். இதையடுத்து, புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் எம்.எஸ்சி. படித்து முடித்துவிட்டு, பி.எச்டி. ஆய்வை மேற்கொண்டார். ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற முனைப்பில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீஸ் போட்டி தேர்வுக்குத் தயாராகி வந்தார். இதனால், பி.எச்டி. ஆய்வை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

 கடந்த 2004-2005 ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் நேர்காணல் வரை சென்றார். ஆனால், வெற்றி பெறவில்லை. இதற்கிடையில் 2007-ல் ஐ.எஃப்.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

 பின்னர், டேராடூன் மையத்தில் 2 ஆண்டு பயிற்சி முடித்துவிட்டு, நாகலாந்து மாநில பிரிவில் திம்மாபூர் மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலராக (டி.எஃப்.ஓ.) பணிபுரிந்து வருகிறார். ஐ.ஏ.எஸ். ஆர்வம் இவரை விட்டு வைக்கவில்லை. 2010-ல் மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார். இப்போது 815-வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 இது குறித்து, நாகலாந்தில் வன அலுவலராகப் பணிபுரிந்து வரும் கே.கே.சரவணக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறியது: புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.எஸ்சி. படிக்கும்போது, அகில இந்திய அளவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு எழத வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதன்பேரில் கடுமையாக படிக்க ஆரம்பித்தேன். ஆனால், நேர்காணலில் தோற்று வெளியேறினேன். கடந்த 2007-ல் ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, நாகலாந்தில் மாவட்ட வன அலுவலராகப் பணிபுரிந்து வருகிறேன்.

 மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது. சிவில் சர்வீஸ் தேர்வு பாடத்திட்டம் ஆகியவை முற்றிலும் மாறுபட்டதால், சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி மூலம் பாடங்களுக்கு தேவையான புத்தகங்களை பெற்று படிக்க ஆரம்பித்தேன். இப்போது, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு ஐ.ஆர்.எஸ். அல்லது ஐ.பி.எஸ். கிடைக்க வாய்ப்புள்ளது.

 இதில் ஏதாவது ஒரு சர்வீஸில் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில், ஐ.எஃப்.எஸ். பணியை விட்டுவிட உள்ளேன் என்றார் கே.கே.சரவணக்குமார்.

* தமிழக நிதி நிலவரம்: ஆளுநரிடம் அறிக்கை தாக்கல்

சென்னை, மே 16: தமிழகத்தின் 2009-10 ஆம் ஆண்டின் நிதி நிலவரம், மாநில சிவில் நிலவரம் குறித்த அறிக்கையை இந்திய தணிக்கைத் துறை, ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவிடம் வழங்கியுள்ளது.

 இந்த அறிக்கை சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும். அரசியல் சட்டத்தின் படி, மாநில அரசின் கணக்குகள் குறித்த அறிக்கையை ஆளுநரிடம் தணிக்கைத் துறை சமர்ப்பிக்க வேண்டும்.


வர்த்தகச் செய்தி மலர் :

பங்குச் சந்தையில் 186 புள்ளிகள் சரிவு

மும்பை, மே 16: மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 186 புள்ளிகள் சரிந்தது. கடந்த வாரம் சனிக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டது. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் கடுமையாக எதிரொலித்தது. இதனால் வர்த்தகம் முடிவில் பங்குச் சந்தை குறியீட்டெண் 18,345 புள்ளிகளாக இருந்தது.

 2008-ம் ஆண்டு ஜூன் மாத்ததுக்குப் பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

 தேசிய பங்குச் சந்தையும் சரிவிலிருந்து தப்பவில்லை. அங்கு 45 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,499 புள்ளிகளானது.

 ஆசிய பங்குச் சந்தையிலும் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. ஐரோப்பிய பங்குச் சந்தையில் காணப்பட்ட ஏற்ற-இறக்கம் ஆசிய பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது. சர்வதேச மதிப்பீட்டு நிறுவனம் கோல்ட்மேன் சாஷ் நிறுவனம் ஜப்பான், தென்கொரியா பங்குச் சந்தைகளின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டதால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. தென் கொரியா, தைவான், சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் பங்குச் சந்தைகள் 0.73 சதவீதம் முதல் 1.36 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

 கடந்த சில வாரங்களாக சரிவைச் சந்தித்து வரும் பங்குச் சந்தையில் பெட்ரோல் விலையேற்றம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

 சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அவ்விதம் உயர்த்தப்பட்டால் அது பங்குச் சந்தையில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் குறைந்த போதிலும், பெட்ரோல் விலை உயர்வு, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட விவகாரங்களின் தாக்கம் அடுத்த மாதம் தெரியும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 பஜாஜ் ஆட்டோ பங்கு விலை 2.72 சதவீதம் சரிந்து ரூ. 1,300.85-க்கும், டாடா மோட்டார்ஸ் 0.23 சதவீதம் சரிந்து ரூ. 1,208.15-க்கும் விற்பனையாயின. எரிவாயு விலையை 8.5 சதவீதம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உயர்த்தியதே இதற்குக் காரணமாகும். வங்கித் துறையில் எஸ்பிஐ பங்குகள் 1.20 சதவீதம் சரிந்து ரூ. 2,617.30-க்கும், ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள் 1.70 சதவீதம் சரிந்து ரூ. 2,145.61-க்கும், டிஎல்எப் பங்கு விலை 2.58 சதவீதம் சரிந்து ரூ. 226.20-க்கும் விற்பனையானது. ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்கு விலை 3.20 சதவீதம் சரிந்து ரூ. 84.75-க்கும், ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் பங்கு விலை 2.10 சதவீதம் சரிந்து ரூ. 598.10-க்கும் விற்பனையானது.

 முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 0.46 சதவீதம் சரிந்து ரூ. 944.30-க்கும், இன்ஃபோசிஸ் பங்கு விலை 1.05 சதவீதம் சரிந்து ரூ. 2,849.75-க்கும் விற்பனையானது.

 ஹீரோ ஹோண்டா, பார்தி ஏர்டெல், பிஹெச்இஎல், டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர், ஹெச்டிஎப்சி, ஜிண்டால் ஸ்டீல், ஐடிசி ஆகிய நிறுவனப் பங்குகளும் சரிவிலிருந்து தப்பவில்லை.

 மொத்தம் 1,713 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,052 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 2,112.54 கோடியாகும்.


விளையாட்டுச் செய்தி மலர் :
கிரிக்கெட்

*     நான்காவது ஐ.பி.எல்., தொடர்: கிங்ஸ்லெவன் பஞ்சாப்-பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் (தரம்சாலா)

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த 62வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டெக்கான் கேப்டன் சங்ககரா "பீல்டிங்' தேர்வு செய்தார்.
விக்கெட் சரிவு:
புனே அணிக்கு ஜெசி ரைடர், மனிஷ் பாண்டே இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். டுமினி வீசிய முதல் ஓவரில் பாண்டே ஒரு பவுண்டரி, ரைடர் ஒரு இமாலய சிக்சர் அடித்தனர். ஸ்டைன் வேகத்தில் ரைடர்(18) வெளியேறினார். இதற்கு பின் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. ஓஜா சுழலில் கங்குலி "டக்' அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய ஓஜா பந்தில் பாண்டேவும்(23) வீழ்ந்தார்.
மிஸ்ரா ஜாலம்:
போட்டியின் 8வது ஓவரை வீசிய அமித் மிஸ்ரா இரட்டை "அடி' கொடுத்தார். 4வது பந்தில் உத்தப்பாவை(4) வெளியேற்றினார். 5வது பந்தில் மன்ஹாஸ்(0) போல்டானார். அடுத்து வந்த பெர்குசன் தடுத்து ஆட மிஸ்ராவின் "ஹாட்ரிக்' வாய்ப்பு தகர்ந்தது. அப்போது புனே அணி 5 விக்கெட்டுக்கு 45 ரன்கள் மட்டும் எடுத்து தத்தளித்தது.
பின் பெர்குசன், கேப்டன் யுவராஜ் இணைந்து போராடினர். ஓஜா சுழலில் யுவராஜ் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அசத்தினார். டுமினி வலையில் பெர்குசன்(11) சிக்கினார். கிறிஸ்டியன் பந்தில் யுவராஜ்(23) அவுட்டாக, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது.
கடைசி கட்டத்தில் மிட்சல் மார்ஷ் கைகொடுத்தார். அமித் மிஸ்ரா, ஓஜா பந்துகளில் சிக்சர்களை பறக்க விட்ட இவர் 37 ரன்கள் எடுத்தார். பார்னல்(16) ரன் அவுட்டானார். புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டும் எடுத்தது.
அசத்தல் ஆட்டம்:
சுலப இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு ஷிகர் தவான், சன்னி சோகல் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். மிட்சல் மார்ஷ் ஓவரில் சோகல் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில், யுவராஜ் பந்தில் தவான்(28) அவுட்டானார். ராகுல் சர்மா சுழலில் சோகல்(34) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய சங்ககரா(25), ராகுல் சர்மா பந்தில், விக்கெட் கீப்பர் உத்தப்பாவிடம் "கேட்ச்' கொடுத்தார். "அவுட்' என தெரிந்ததும், அம்பயரின் தீர்ப்புக்காக காத்திருக்காமல் தானாகவே வெளியேறி "ஜென்டில்மேனாக' நடந்து கொண்டார் சங்ககரா.
பின் கிறிஸ்டியன், டுமினி இணைந்து நம்பிக்கை தந்தனர். யுவராஜ் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த டுமினி 23 ரன்கள் எடுத்தார். பார்னல் பந்தில் சிப்லி ஒரு அசத்தல் பவுண்டரி அடிக்க, டெக்கான் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது.
இத்தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை புனே அணி இழந்தது.
ஆட்ட நாயகன் விருதை அமித் மிஸ்ரா வென்றார்.





ஆன்மீகச் செய்தி மலர் :

அருள்மிகு சவுமியநாராயணபெருமாள் திருக்கோவில்

மூலவர்    :     சவுமியநாராயணர்
      உற்சவர்    :     -
      அம்மன்/தாயார்    :     திருமாமகள்
      தல விருட்சம்    :     -
      தீர்த்தம்    :     தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்
      ஆகமம்/பூஜை     :     -
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     திருக்கோட்டியூர்
      ஊர்    :     திருகோஷ்டியூர்
      மாவட்டம்    :     சிவகங்கை
      மாநிலம்    :     தமிழ்நாடு
 
பாடியவர்கள்:      

மங்களாசாஸனம்

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்

கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம்பாடு சீர் செம்பொனார் மதில்சூழ் செழுங்கனி யுடைத் திருக்கோட்டியூர் நம்பனை நரசிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால் எம்பிரான்தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே.

-பெரியாழ்வார்

தல சிறப்பு:    
           
      மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது. ராமானுஜர் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம்.

அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது.    
     
தலபெருமை:   
           
     
சவுமிய நாராயணர்: சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டுமின்றி மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு "பிரார்த்தனை கண்ணன்' என்று பெயர். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், அப்பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும்வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது. பெரியாழ்வார் இவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்திருக்கிறார். பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் இது.

விளக்கு நேர்த்திக்கடன்: தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். "ஓம்', "நமோ', "நாராயணாய' எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு. இக்கோயிலில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது. இங்கு பிரார்த்திப்பவர்கள் ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர். அந்நேரத்தில் புதிதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

மகாமக கிணறு: புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை "மகாமக கிணறு' என்றே அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக விழாவின்போது, சுவாமி கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்.

ராமானுஜருக்கு உபதேசம்: இவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, "யார்?' என்று கேட்க, "நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,'' என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, "நான் செத்து வா!' என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். அவரை அழைத்த நம்பி, "ஓம் நமோநாராயணாய' என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி "நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்' என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.ராமானு
ஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு "கல்திருமாளிகை' என்றழைக்கப்டுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.
   
           
      தல வரலாறு:   
           
      பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார். இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டியரும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் "திருக்கோட்டியூர்' என்றும் பெயர் பெற்றது.    
           
    சிறப்பம்சம்:   
           
      அதிசயத்தின் அடிப்படையில்: மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது.
   
திருவிழா:    
           
      மாசியில் தெப்பத்திருவிழா, வைகுண்டஏகாதசி, நவராத்திரி.

திறக்கும் நேரம்:   
          
     காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.   
    

ஆன்மீகச் சிந்தனை மலர் :

தடைகளை வெல்ல வழி - சுவாமி விவேகானந்தர்.
‘மனித வடிவம் கொண்ட அனைத்து உயிரையும் வழிபடுங்கள்.

* இரக்கத்தால் பிறருக்கு நன்மை செய்வது நல்லது. ஆனால், இறைவனது படைப்பான அனைத்து உயிர்களுக்கும் பணி செய்வது அதைவிட மிக நல்லதாகும்.

* ஒவ்வொரு உயிரிலும் தெய்வீகத் தன்மை குடி கொண்டிருக்கிறது,உள்ளேயும் வெளியேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளத்தில் குடி கொண்டுள்ள தெய்வீகத் தன்மையை மலரச் செய்வதுதான் முடிவான லட்சியமாகும்.


வினாடி வினா :

வினா - ஒரு மசோதா எப்போது சட்டமாகிறது ?

விடை - ஜனாதிபதியின் கையெழுத்தைப் பெற்ற பிறகு.

இதையும் படிங்க :

ஜெய்ப்பூர் மன்னராக 12 வயது சிறுவன் !

E_1305193378.jpeg

இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது; ஆனாலும், அரச வம்சங்கள் இன்னமும் உள்ளன. கோட்டைகள், அரண்மனைகள் என, ஏராளமான சொத்துக்கள் அரச வம்சத்திடம் உள்ளன. ஆட்சி அதிகாரத்தை அவர்கள் இழந்து விட்ட போதிலும், பரம்பரை பழக்க வழக்கங்களை அவர்கள் இன்னமும் விடவில்லை. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மன்னராக, 12 வயது சிறுவன் பத்மநாபசிங் என்பவர் பதவி ஏற்றுள்ளார். இதற்கு முன் ஜெய்ப்பூர் மன்னராக, எண்பது வயது சவாய் பவானிசிங் என்பவர் இருந்தார். ராணுவத்தில் பிரிகேடியர் அந்தஸ்தில் பதவி வகித்து வந்த அவர், ஏப்., 17ம் தேதி மரணமடைந்தார். துக்க தினம் முடிந்த பின், ஏப்., 27ம் தேதி, ஜெய்ப்பூர் அரண்மனையில், மன்னராக, முறைப்படி பொறுப்பேற்றார் பத்மநாபசிங். பவானிசிங்கின் மகள் தியா குமாரி; அவரது மகன்தான் பத்மநாபசிங். நவம்பர் 2002ல், தன் வாரிசாக பத்மநாபசிங்கை அறிவித்தார் பவானிசிங். இப்போது, கச்வாகா ராஜ்புத் வம்ச மகாராஜாவாக பத்மநாபசிங் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெய்ப்பூர் நகரில் உள்ள பல அரண்மனைகள், கோட்டைகள் இவருக்கு சொந்தம்.

நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.

No comments:

Post a Comment