Friday, December 17, 2010

இன்றைய செய்திகள். - டிசம்பர் - 17 - 2010.




உலகச் செய்தி மலர் :



* இந்திய-சீனக் கூட்டுறவு: 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து.

புது தில்லி, டிச.16: இந்தியா, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இரு நாடுகளிடையே நிலவும் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. எல்லைப் பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் அமைதியான முறையில் பேசித் தீர்த்துக் கொள்ள இரு நாட்டு பிரதமர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர் வென் ஜியாபோவும், பிரதமர் மன்மோகன் சிங்கும்  தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

பாதுகாப்பு, முக்கிய விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்து  ஆலோசித்தனர். இரு நாடுகளிடையே மொத்தம் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின

ஹாட்லைன்: பிரதமர் அலுவலகத்திலிருந்து சீன பிரதமருக்கு நேரடி தொலைபேசி (ஹாட்லைன்) வசதி ஏற்படுத்துவது. இரு நாடுகளும் இணைந்து ஆண்டுதோறும் மாநாடு நடத்துவது ஆகியன இதில் குறிப்பிடத்தக்கவையாகும்

இரு தலைவர்களும் 10 அம்ச கோரிக்கைக்கு உடன்பட்டுள்ளனர். இதில் எல்லை பிரச்னையும் அடங்கும். எல்லைப் பகுதியில் அமைதி நிலவ இரு நாடுகளும் பாடுபடுவது என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நாடான இந்தியா, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெறுவதற்கு ஆதரவு அளிப்பது என்றும் சீனா உறுதியளித்துள்ளது.

இரு நாடுகளிடையிலான ஏற்றுமதி, இறக்குமதியில் நிலவும் இடைவெளியைக் குறைக்கவும், எதிர்கால வளர்ச்சிக்கு இணைந்து பாடுபடவும் முடிவு செய்யப்பட்டது.

தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சீன பிரதமர் வென்ஜியாபோவை வரவேற்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

* நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகிறார் அசாஞ்சே

லண்டன், டிச. 16: விக்கி லீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார். அவரது விடுதலையை எடுத்து ஸ்வீடன் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

பிறநாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் தலைமைக்கு அனுப்பிய பல ரகசியங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளிப்படுத்தி அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டினார் அசாஞ்சே.

இந்தநிலையில் ஸ்வீடனில் இருந்தபோது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதான வழக்கில் லண்டனில் கடந்த சில நாள்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார். பிரிட்டிஷ் நீதிமன்றம், சில நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருந்த போதிலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் எனவும், அவரை ஸ்வீடனிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த நாடு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக லண்டன் உயர் நீதிமன்றத்திலும் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, ஸ்வீடனின் கோரிக்கையை நிராகரித்தார். பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும், பிரிட்டனிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஜாமீன் நிபந்தனைகள் அசாஞ்சேக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட இருக்கிறார்.

* அமெரிக்க உதவியை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துகிறது பாகிஸ்தான்

புதுதில்லி, டிச.16: அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவியை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் திருப்பிவிடும் பிரச்னைக்கு இறுதித் தீர்வுகிடைக்க வேண்டும் என்றும் அதுவரை அமெரிக்காவிடம் இதுகுறித்து கூறிக்கொண்டே இருப்போம் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார்.

அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்களை தலிபானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. இது மிகவும் தீவிரமாக கவனிக்க வேண்டிய விவகாரம். இதுகுறித்து அமெரிக்காவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இதில் இறுதித்தீர்வு காணப்படும்வரை அமெரிக்காவிடம் இதுகுறித்து தெரிவித்துக் கொண்டே இருப்போம் என அந்தோனி கூறினார்

* ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

புது தில்லி, டிச.16: ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள இந்திய தூதரகங்கள், அலுவலகங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தலிபான்கள் மற்றும் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்புகளின் மிரட்டலையடுத்து இந்த பாதுகாப்பை வழங்குமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காபூரிலுள்ள இந்தியத் தூதரகம், ஜலாலாபாத், காந்தகாரிலுள்ள தூதரக அலுவலகம், மஜார்-இ-ஷரீப், ஹெராத் பகுதியில் இந்தியர்கள் செயல்படுத்தும் திட்ட அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு போதிய பாதுகாப்பை வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூதரகங்களுக்கு இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பை அளித்து வருகின்றனர்.

தேசியச் செய்தி மலர் :

* உச்ச நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் ஸ்பெக்ட்ரம் விசாரணை!



புதுதில்லி, டிச. 16: 2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் குறித்து உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வியாழக்கிழமை உத்தரவிட்டனர்.

மேலும் பாஜக ஆட்சி நடைபெற்ற 2001-ம் ஆண்டிலிருந்து விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையை முடித்து, வரும் பிப்ரவரி 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் காலக்கெடு நிர்ணயித்தனர்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்பதை துல்லியமாகத் தெரிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அரசியல் தரகர் நீரா ராடியாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2001-ம் ஆண்டிலிருந்து (பாஜக ஆட்சியிலிருந்து) 2008 வரை விசாரிக்க வேண்டும்.

பிப்ரவரி 10-ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல்  செய்ய வேண்டும்.

அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிட வேண்டும்.

தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டது எப்படி என்பதை விசாரிக்க வேண்டும்.

இரட்டை தொழில்நுட்ப அனுமதி குறித்த அறிவிப்பு 2007 அக்டோபர் 19-ல் வெளியான நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக ஒரு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும்.

அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஊகத்தின் அடிப்படையில் பல நிறுவனங்களுக்கு அரசுத்துறை வங்கிகள் பெரும் அளவில் கடன் வழங்கி உள்ளது குறித்து விசாரிக்க வேண்டும்.

தனி நபர் அல்லது அமைப்பின் தலையீட்டுக்கு சிபிஐ இடம் கொடுக்க கூடாது.
நீரா ராடியாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

* கடிதத்தில் ராசா பெயர் குறிப்பிடப்படவில்லை: மொய்லி

புதுதில்லி, டிச.16: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் 2009 ஆகஸ்டில் தனக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்தார்.

அப்போதைய தலைமை நீதிபதிக்கு நான் கடிதம் எழுதினேன். அவரும் பதில் எழுதினார். அதில் எந்த அமைச்சர் பெயரும் குறிப்பிடப்படவில்லை. இதில் சர்ச்சை எதுவும் இல்லை. இதுதான் உண்மை என வீரப்பமொய்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தனது குடும்ப நண்பர்களுக்கு ஜாமீன் பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ராசா பேசியதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எம்பிக்கள் குழுவினர் புகார் மனு அளித்தனர். அந்த மனு சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. அவர் பாலகிருஷ்ணனின் கருத்தைக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து மொய்லியிடம் கேட்டபோது, பாலகிருஷ்ணன் எந்த பெயரையும் குறிப்பிடவில்லை என பதிலளித்தார்.

* ரிசர்வ் வங்கி பவள விழா : புதிய நாணயம் வெளியீடு

சென்னை : ரிசர்வ் வங்கி பவள விழாவை முன்னிட்டு, புதிய ஒரு ரூபாய் நாணயம் வெளியிடப்படவுள்ளது. இந்த, புதிய ஒரு ரூபாய் நாணயத்தின் முன் புறத்தில் அசோகா தூணின் சிங்கமும், மேற்புற இடப்பக்கம் இந்தியிலும், வலப்பக்கம் ஆங்கிலத்திலும், இந்தியா என்று எழுதப்பட்டிருக்கும். மையப்பகுதியில் சிங்கமுகத்தின் கீழ் மதிப்பு இலக்கம், சர்வதேச எண் அளவில் ஒன்று என்று பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் பின் புறத்தில் ரிசர்வ் வங்கியின், "லோகோ' பொறிக்கப்பட்டிருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி என்று இடப்பக்கம் இந்தியிலும், வலப்பக்கம் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். கீழே பவள விழா என்றும், "1935-2010' என்று ஆண்டும் குறிக்கப்பட்டிருக்கும்.


மாநிலச் செய்தி மலர் ;

* ஸ்ரீரங்கம், ரங்கா, கோவிந்தா...முழங்க சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு, இன்று அதிகாலை 4.10 மணியளவில் நடந்தது. பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்த பக்தர்கள், ஸ்ரீரங்கத்தில் குவிந்து இருந்தனர்.

பூலோக வைகுண்டமாக விளங்கும் ஸ்ரீரங்கத்தில், டிச., 6 ல் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. நேற்று நடந்த பகல் பத்து நிறைவு நாளில், மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு, இன்று அதிகாலை 4.10 மணிக்கு ரங்கா, கோவிந்தா கோஷம் முழங்க பரமபத வாசல் திறக்கப்பட்டது . முன்னதாக அதிகாலை 3.15 க்கு, நம்பெருமாள் ரத்தினங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 4.30 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசித்தார். வைகுண்ட ஏகாதசியையொட்டி, பிரசித்தி பெற்ற மூலவர் முத்தங்கி சேவை, இன்று காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. திருச்சி மற்றும் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 3,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.


* உலக வங்கி குழுவின் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை, டிச.16: தமிழகத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வுசெய்து வரும் அந்த வங்கி அதிகாரிகள் குழுவின் தலைவர் நடாஷா ஹேவர்ட் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது 2-ம் கட்டமாக இத்திட்டத்தை மேலும் 10 மாவட்டங்களில் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச்செயலர் அலாவுதீன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குநர் தீரஜ்குமார், உலக வங்கி அதிகாரிகள் கெவின் கிராக்ஃபோர்டு, வரலட்சுமி விமுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

உடுமலை: அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 15 நாட்கள் தண்ணீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், விவசாயிகள் தண்ணீர் தேவையில்லை என கூறியுள்ளதால் தண்ணீர் திறக்கும் அளவு  குறைக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தின் மூலம் உடுமலை, தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால், அணை நீர் மட்டம் உயரவில்லை. இதனால், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.  புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் இருப்பை கணக்கிட்டு, அவ்வப்போது உயிர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக, கடந்த மாதம்  24ம் தேதி அணை நிரம்பியது.  தொடந்து கடந்த 24 நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு டிசம்பர் 15 முதல் 31 வரை 15 நாட்கள் தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். ஆனால், பாசன பகுதிகளில் கன மழை காரணமாக நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், தேவை குறைவாக உள்ளதாலும் விவசாயிகள் தரப்பில் தற்போது தண்ணீர் தேவையில்லை என கூறி வருகின்றனர். ஆனால், கடை மடை விவசாயிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  விவசாயிகளின் தேவை அடிப்படையில் தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டு. பிரதான கால்வாயில் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவை அடிப்படையில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கேரளாவில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழில் எழுத அனுமதியில்லை

பொள்ளாச்சி: கேரளாவில் பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழ் மொழியில் எழுத கடந்தாண்டு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தாண்டு தேர்வு அறிவிப்பில் தமிழ் மொழியில் எழுத எவ்வித உத்தரவும் வெளியிடாததால் கேரளா வாழ் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரளா மாநில தமிழ் வளர்ச்சிப்பணி இயக்க தலைவர் விக்டர் சார்லி நமது நிருபரிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருந்த பகுதிகள் கேரளா மாநிலத்துடன் சேர்க்கப்பட்ட போது, அங்கு வசிக்கும் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க மொழிச்சிறுபான்மை சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் மொழிச்சிறுபான்மை சட்டம் சரியான முறையில் அமல்படுத்தப்படுகிறது. கேரளாவில் மொழிச்சிறுபான்மை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக போராட வேண்டியுள்ளது. கேரளாவில் வாழும் தமிழர்களுக்காக உயர்கல்வி வரையிலும் தமிழ்மொழியில் தேர்வு எழுதும் முறை உள்ளது.
 மேல்நிலைக்கல்வியிலும் தமிழ் மொழியில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கேரளா அரசை வலியுறுத்தி போராடியதால், பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழில் எழுத அனுமதித்து உத்தரவிடப்பட்டது. கடந்தாண்டு பொதுத்தேர்வில் தமிழ்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் தோற்றவர்கள் இம்ரூவ்மெண்ட் தேர்வை தமிழ் மொழியில் எழுதினர். ஆனால் இம்ரூவ்மெண்ட் தேர்வு முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பில் பிளஸ் 2 தேர்வை ஆங்கிலம், மலையாளத்தில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழில் எழுத கேரளா அரசு வெளியிட்ட உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. தமிழ் மொழியில் உள்ள விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் இல்லை என்று பொய்யான காரணத்தை கூறி இம்ரூவ்மெண்ட் தேர்வு முடிவை பள்ளிக்கல்வி தேர்வுத்துறை  வெளியிடாமல் உள்ளது.  இதனால் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் கேரளா முதல்வர் உடனடியாக தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, விக்டர் சார்லி தெரிவித்தார்.


வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 217 புள்ளிகள் உயர்வு

மும்பை, டிச.16: இந்திய பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 217 புள்ளிகள் உயர்ந்து 19,864.85 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 56.45 புள்ளிகள் உயர்ந்து 5948.75 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ஹீரோ ஹோண்டா, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், டிஎல்எஃப், பார்தி ஏர்டெல், ஜிந்தால் ஸ்டீல், ஐடிசி, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், சிப்லா, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபம் அடைந்தன.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா பவர், இந்துஸ்தான் யூனிலீவர், மாருதி சுஸுகி, பஜாஜ் ஆட்டோ, பிஎச்ஈஎல், எல் அண்ட் டி, ஜெய்ப்ரகாஷ் அசோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன

விளையாட்டுச் செய்தி மலர் :

* தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா மோசமான துவக்கம்



செஞ்சுரியன், டிச.16: தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் இன்று தொடங்கவிருந்த இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தொடர்ந்து பெய்துவரும் மழையால் டெஸ்ட் போட்டியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீசத் தீர்மானித்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கம்பீரும், சேவக்கும் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவக் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டெய்ன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அதன் பிறகு கம்பீர் 5 ரன்களுடனும், டிராவிட் 14 ரன்களுடனும் மோர்கல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. தெண்டுல்கர் 22 ரன்களுடனும் லட்சுமண் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்

* ஆசிய செஸ் போட்டி: அன்னூர் மாணவிக்கு தங்கம்

அன்னூர்: ஆசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டியில் அன்னூர் மாணவி, குழு போட்டியில் தங்கப்பதக்கமும், தனி நபர் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார்.ஆசிய செஸ் கழகம் மற்றும் எப்.ஐ. டி.இ., அமைப்புகளுக்காக, இலங்கை செஸ் கழகம் "ஆறாவது ஆசியன் பள்ளிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்' போட்டியை கொழும்புவில் நடத்தியது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டி டிச., 6ல் துவங்கி 13ல் முடிந்தது.  ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாணவியர் பிரிவில், குழு போட்டியில், அன்னூர் நவபாரத் நேஷனல் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி பிரியங்கா, திருத்துறைப்பூண்டி மாணவி ஹர்சினியுடன் இணைந்து தங்கப்பதக்கம் வென்றார்.  ஒன்பது வயதுக்கு உட் பட்ட மாணவியருக்கான தனி நபர் போட்டியில் அன் னூர் மாணவி பிரியங்கா இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென் றார்.  இப்போட்டியில் இந்தியாவிலிருந்து 26 பேர் பங்கேற்றனர். அதில் தமிழகத்திலிருந்து மூவர் பதக்கம் வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவி பிரியங்கா மற்றும் அவரது பெற்றோர் காளிதாஸ், மருதாம்பாள் ஆகியோருக்கு, பள்ளி அறங்காவலர்கள் மற்றும் முதல்வர் ஸ்டீபன்சன் பாராட்டு தெரிவித்தனர்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு துவராகாநாதர் திருக்கோயில்

மூலவர் : துவராகாநாதர்(துவாரகீஷ்)

பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன் 
 
  புராண பெயர் :  சுதாமபுரி

  ஊர் :  துவாரகை

  மாவட்டம் :  அகமதாபாத்

  மாநிலம் :  குஜராத்

தல சிறப்பு:
   
  இவ்வூர் ஒரு காலத்தில் "சுதாமபுரி' எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். இத்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது. 60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. இங்குள்ள சிற்பங்களே சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. கீழே சன்னிதானமும், மேல்மாடியில் கோபுரமும் உள்ளன. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோயிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி இன்னும் பல சிறிய கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம். துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.  
   
துவாரகையில் இருந்து 12 கி.மீ., தொலைவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான நாகேஸ்வரம் மகாதேவர் கோயில் உள்ளது.
 
 தலபெருமை:
பகவத்கீதை, ஸ்கந்தபுராணம், விஷ்ணு புராணம், ஹரிவன்ஷ் ஆகிய நூல்களில் இந்நகரம் தங்கத்தால் வடிக்கப்பட்ட தகவல் கூறப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடலில் மூழ்கிய துவாரகையின் அழிந்து போன சில பகுதிகளை கண்டெடுத்துள்ளனர்.இந்தியாவின் ஏழு தொன்மை மிக்க நகரங்களில் இதுவும் ஒன்று.

மூலவர் துவாரகீஷ் (துவராகாநாதர்) சிலை ஒரு மீட்டர் உயரமுள்ளது. இவர் நான்கு கரங்களுடன் உள்ளார். கற்சிலையாகும்.கோமதி நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. 

பேட் துவாரகை : துவாரகையில் இருந்து 32 கி.மீ., தொலைவில் பேட் துவாரகை, முல் துவாரகை என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரிஜினல் துவாரகை அமைந்துள்ளது. இதை படகுகளில் சென்று அடையலாம்.இது தனித்தீவாக காட்சியளிக்கிறது. ராமந்த்விப் தீவு என இதை அழைக்கின்றனர். கிருஷ்ணன் தன் குடும்பத்துடன் இங்கு தங்கியிருந்தார் என சொல்கிறார்கள்.பாமா, ருக்மணி, ராதா ஆகியோருக்கு தனித்தனி அறைகள் இங்கு இருந்தன.

அருகிலுள்ள தலங்கள் : கோபிதூலாப் என்ற இடத்தில் புண்ணியதீர்த்தமாடும் படித்துறை உள்ளது. இங்கே கிருஷ்ணன் பல கோபிகைகளை நீரில் மூழ்க வைத்து மோட்சம் அளித்தார். இங்கு மண் கோபி சந்தனம் என்ற பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை நெற்றி, மார்பு, கைகளில் நாமமாக இட்டுக் கொள்கின்றனர். சிலர் பூசுகின்றனர்.கிருஷ்ணரின் மனைவியான ருக்மணி கோயில் இங்கிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ளது. இது 1600 ஆண்டுகபழமையானது.கண்ணனைப் பெற்ற தாய் தேவகி, அண்ணன் பலராமன் ஆகியோருக்கும் கோயில்கள் உள்ளன. கோயில் வாசலில் அம்பாஜி (குஜராத்தின் காவல் தெய்வமான அம்பிகை) சன்னதியும், உள்ளே துளசி மாதா சன்னதியும் இருக்கிறது. துளசிக்கு சன்னதி இருப்பது அநேகமாக இங்கு மட்டுமே. பாரதயுத்தம் முடிந்த பிறகு குந்திதேவி இங்கு வந்து கண்ணனைச் சந்தித்தாள். "" உன்னை இனி எப்படி தரிசிப்பேன்?'' எனக் கேட்டு அழுத அவளிடம், ""உனக்கு எந்தக்கஷ்டம் வந்தாலும் நானே உன்னைக் காப்பாற்ற வந்து விடுவேன்,'' என்றாராம். உடனே குந்தி சொன்னாளாம் ""கண்ணா! அப்படியானால், தினமும் எனக்கு ஒரு கஷ்டத்தைக் கொடு,"" என்றாளாம்.எவ்வளவு இனிய பக்தி பாருங்கள். 

காந்தி பிறந்த இடம் : போர்ப்பந்தர் துவாரகைக்கு, பேட் துவாரகைக்கும் இடையில் உள்ளது. இவ்வூர் ஒரு காலத்தில் "சுதாமபுரி' எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர்.கண்ணனுக்கு அவல் கொடுத்த காட்சி அழகிய ஓவியமாக இங்கு வடித்துள்ளனர். இறைவனுக்கு 16 ஆரத்தி என்ற தீபாராதனை தினமும் நடத்தப்படும். இதுவே முக்கிய தீபாராதனை . பெருமாளின் விஸ்வரூபமான திரிவிக்கிரமனை தரிசித்த பலன் இப்பூஜையைக் கண்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்

தல வரலாறு:
ஜராசந்தன் கம்சனின் மைத்துனன். இவனது தங்கையைத்தான் கம்சன் திருமணம் செய்திருந்தான் கண்ணன்.

கண்ணன் கம்சனைக் கொன்றதால் தங்கை பூவிழந்ததைப் பொறுக்காத ஜராசந்தன் கண்ணனைக் கொல்ல முயன்றான். ஆனால், அவன் படையை தோற்கடித்து அனைவரையும் கொன்ற கண்ணன், பிற்காலத்தில் நடக்கவிருந்த மகாபாரத யுத்தத்தைக் கணக்கில் கொண்டு ஜராசந்தனை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான். உயிர்தப்பிய ஜராசந்தன் கண்ணனைப் பழிவாங்க காத்திருந்தான். இவர்களைத் தவிர காலயவணன் என்ற மன்னனும் கண்ணனைக் கொல்ல திட்டம் வைத்தி ருந்தான்.தன்னால் யாதவ குலத்துக்கு தீங்கு வரக் கூடாது என்று எண்ணிய கண்ணன், தன் குலத்தாருடன் மதுராவில் இருந்து இடம் பெயர்ந்து,சவுராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிக்கு வந்து விட்டார். அங்கே அவர்களுக்கு விஸ்வகர்மா பாதுகாப்பான ஒரு நகரத்தை அமைத்துக் கொடுத்தார்.கலையழகு மிக்க இந்நகரை கடலுக்கு நடுவே அமைக்க சமுத்திரராஜன் இடம் கொடுத்து உதவினான். 12 யோஜனை பரப்புள்ள இடம் தரப்பட்டது.துவாரகையை தங்கத்தாலேயே இழைத்தார் விஸ்வகர்மா. இதனால் இது "தங்க நகரம்' எனப்பட்டது. கண்ணன் தனது அவதாரம் முடிந்து மரணமடையும் வேளையில், வேடன் ஒருவன் அவன் மீது அம்பெய்தான். அப்போது துவாரகை கடலில் மூழ்கி விட்டது. பின்னர், இப்போதைய புதிய துவாரகை அரபிக்கடலில் கட்ச் வளைகுடா பகுதியில் எழுந்தது.

திருவிழா:
   
  கோகுலாஷ்டமி, தீபாவளி, ஹோலி, குஜராத் புத்தாண்டு, மட்கோபாட் என்ற உறியடித்திருநாள் . கோகுலாஷ்டமி அன்று "பாவன் பேடா' என்ற நடனத்தை பெண்கள் ஆடுவர். ஒவ்வொரு பெண்ணும் 52 பானைகளை தலையில் சுமந்து கொண்டு ஆடும் இந்த நடனம் பார்க்க அருமையாக இருக்கும்.  
   
திறக்கும் நேரம்:
   
  காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.  
   

ஆன்மீகச் சிந்தனை மலர் :

மனப்புயலை அடக்கிவிடு - பகவத் கீதை.

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.

வினாடி வினா :

வினா - சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதலில் குடியேறியவர்கள் யார் ?

விடை - பில்ஹெப்பர்ட் - அமெரிக்கா
        கிட்பொங்கோ - ரஷ்யா
        ஜெர்ஜிய் சிரிகாலேவ் - ரஷ்யா
 
 
இதையும் படிங்க :

நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு

அன்னூர்: அன்னூர் அருகே நான்கு கால்களுடன் பிறந்த கோழிக் குஞ்சை கிராம மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.  கஞ்சப்பள்ளி, முடக்குத் தோட் டத்தை சேர்ந்த விவசாயி குருசாமி. இவர் தோட் டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார்.  பல்லடம் சாந்தி பார்ச்சூன் நிறுவனத்திலிருந்து வரவழைக்கப்படும் கோழிக்குஞ்சுகளை ஒப்பந்த அடிப்படையில் 45 நாட்கள் வளர்த்து மீண்டும் அந்த நிறுவனத்துக்கு விற்று வருகிறார். 15 நாட்களுக்கு முன் அந்த நிறுவனத்திலிருந்து பண்ணைக்கு கோழிக் குஞ்சுகள் சப்ளை செய்யப்பட்டன. அதில் ஒரு குஞ்சுக்கு நான்கு கால்களும், இரண்டு மல துவாரங்களும் உள்ளன. இது குறித்து குருசாமி கூறியதாவது: குஞ்சாக இருந்தபோது நான்கு கால்களில் நடந்தது. 20 நாட்களில் நன்கு தீவனம் சாப்பிட்டு 800 கிராம் எடையுடன் உள்ளது. இப்போது முன்னங்கால்களை அழுத்தமாக பதித்தும், பின்னங்கால்களை லேசாக வைத்தும் நடக்கிறது. பின்னங்கால்களை அடிக்கடி மேலே தூக்கிக் கொள்கிறது. நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு இருக்கும் தகவல் தெரிந்து அல்லப்பாளையம், ருத்திரியம்பாளையம், கஞ்சப்பள்ளி கிராமங்களை சேர்ந்த பலரும் வந்து வியப்புடன் பார்த்துச் சென்றனர்.  இதுகுறித்து அன்னூர் கால்நடை மருத்துவமனை டாக்டர் தங்கவேல் கூறுகையில்,""நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு பிறப்பது அரிதானது. "ஜீன்' மாறுபாட்டால் இப்படி நடக்கிறது. கோழி வளரத்துவங்கும்போது பின்னங்கால்கள் தானாக சுருங்கி விடும். இதனால் எந்த பாதிப்பும் இல்லை.'' என்றார்.




நன்றி - தின மணி, தின மலர் 

2 comments:

ஆனந்தி.. said...

அடேங்கப்பா...பேப்பர் படிக்க அவசியம் இல்ல போலே சங்கரி..:)

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி ஆனந்தி. இதை.....இதை.....இதைத்தான் எதிர்பார்த்தேன் ஆனந்தி....

Post a Comment