Sunday, December 5, 2010

இன்றைய செய்திகள்.- டிசம்பர் - 05 - 2010

உலகச் செய்தி மலர் :


* இந்தியா வந்தார் பிரான்ஸ் அதிபர் சர்கோஸி


பெங்களூர், டிச.4- பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தார்.


இன்று காலை, பெங்களூர் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்குள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் அவர் விஞ்ஞானிகளிடையே உரையாற்றவுள்ளார்.


சர்கோஸியுடன் அவரது மனைவி கர்லா புருனி உடன் வந்துள்ளார். மேலும், அமைச்சர்களும் மற்றும் உயர் அதிகாரிகளும் வந்துள்ளனர்.


பிற்பகல் 1.50 மணிக்கு ஆக்ரா புறப்பட்டு செல்வதற்கு முன்பாக, செய்தியாளர்களிடம் பேசிய சர்கோஸி கூறியதாவது: பிரான்ஸ் மற்றும் இந்தியா இரு நாடுகளும் சிறந்த நட்பு நாடுகளாக உள்ளன. மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவின் மீது நடந்த தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். எனவே, எல்லா ஜனநாயக நாடுகளும் இந்தியாவின் பக்கம் இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தொடுக்கப்படும் தீவிரவாத தாக்குதல்கள், உலகின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தி வருகின்றன. தாலிபான்களுக்கு எதிரான போரிலிருந்து
பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. தாலிபான்கள் மீண்டும் தலையெடுக்க விடக்கூடாது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு சண்டை அதன் உச்சத்தை அடைந்தால், அதனால் யாருக்கும் பலனேதுமில்லை. இதில் வென்றே தீர வேண்டும்.
பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், சில ஆப்பிரிக்க மற்றும் அரேபிய நாடுகளுடன் இந்தியாவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற வேண்டும். இதற்கு பிரான்ஸ் ஆதரவளிக்கும்.
 நாட்டின் வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றின்மூலம் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மன்மோகன் சிங் ஆர்வமாக இருக்கிறார். அமைதி மற்றும்
ஸ்திரத்தன்மையில் சிங்கின் கருத்து சரியானதாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி மகத்தானது. உலக அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். உலகின் பிரபல நாணயங்களின் வரிசையில் இந்தியாவின் நாணயமும் இடம்பெறும் என்ற நம்பிக்கையுள்ளது.
இந்தியாவின் நட்பு நாடாக பிரான்ஸ் உள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் அணு மின்சாரம் தயாரிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு பிரான்ஸ் ஆதரவு அளிக்கும். இந்தியாவின் அணு மின்சாரத் திட்டங்களை பிரான்ஸ் ஆதரிக்கும் என்றார்.
முன்னதாக, தனி விமானத்தில் எச்ஏஎல் விமான நிலையம் வந்த சர்கோஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது 


* சிபிஐ இணையதளத்தை சிதைத்த பாக்.விஷமிகள்


புதுதில்லி, டிச.4- இந்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இணையதளத்தை பாகிஸ்தான் விஷமிகள் சிதைத்துள்ளனர்.
நேற்றிரவு சிபிஐ இணையதளத்தின் முதல் பக்கத்தில் "சிதைக்கப்பட்டுள்ளது" என்ற தகவலுடன் "பாகிஸ்தான் இணையதள ராணுவம்" என்கிற வாசகமும் அத்துமீறி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.


தேசிய தகவலியல் மையத்தால் சிபிஐ உள்ளிட்ட அரசின் இணையதளங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இணையதளத்தின் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி இவ்வாறு சிபிஐ இணையதளம் சிதைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிபிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும், இணையதளம் மீண்டும் பாதுகாப்பாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


* தண்டவாளத்தில் வெடிகுண்டு: இந்தியா-பாக்.ரயில் கவிழ்ந்தது.


இஸ்லாமாபாத், டிச.4- தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மீது மோதியதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே இயங்கும் தார் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்தது. எனினும், பயணிகள் யாருக்கும் காயமில்லை.
கராச்சியில் இருந்து 67 கி.மீ. தொலைவில் உள்ள தபேஜி ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், ரயிலின் இரு பெட்டிகள் மட்டும் கவிழ்ந்தன. இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.


இச்சம்பவத்தால் உயிரிழப்பு எதுவுமில்லை என்றும், யாரும் காயமடையவில்லை என்றும் ரயில்வே டி.எஸ்.பி. அப்தாப் மேமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இச்சம்பவம் நடைபெற்றபோது, ரயிலில் மொத்தம் 155 பயணிகள் இருந்தனர். இதில், 50 பேர் இந்தியர்கள், 105 பேர் பாகிஸ்தானியர்கள்.


தண்டவாளத்தில் தீவிரவாதிகள் குண்டுகளை வைத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.


* பருவநிலை மாறுபாடு பிரச்னை: அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு இந்தியா அதிருப்தி


 கேன்கன்(மெக்ஸிகோ) ,டிச.4: பருவநிலை மாறுபாட்டைத் தடுப்பது தொடர்பான ஒப்பந்த விஷயத்தில் அமெரிக்காவின் செயல்பாடுகள் குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
பருவநிலை மாறுபாடு பிரச்னை தொடர்பாக ஐ.நா. ஏற்பாடு செய்துள்ள சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தை மெக்ஸிகோவின் கேன்கன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டுள்ளார்.


பருவநிலை மாறுபாடு பிரச்னையைத் தீர்ப்பதற்காக கொடுப்பதாக உறுதி அளித்த தொகையை அளிக்க அமெரிக்கா தாமதம் காட்டி வருகிறது.


வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் இதுபோன்ற கார்பன் வெளியிட்டைக் குறைக்கும் ஒப்பந்தத்துக்கு வரவேண்டும் என்று ஜப்பான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்தது.


அமெரிக்கா விளக்கம்: இதனிடையே குறைவான நிதி அளித்தது தொடர்பாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. இந்த நிதி தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.


தேசியச் செய்தி மலர் :


* சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் விருப்பப் பாடமாக சீன மொழி


புதுதில்லி, டிச. 4: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் சீன மொழி விருப்பப் பாடமாக சேர்க்கப்பட உள்ளது.
சிபிஎஸ்இ உயர்நிலை, மேல்நிலை பாடத்திட்டத்தில் இப்போது 32 மொழிகள் உள்ளன. இவற்றில் 12 வெளிநாட்டு மொழிகளும் அடங்கும்.


2011-12 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சீன மொழிப் பாடத்தையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் இந்தப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.


இதற்கான பாடத்திட்டங்களை தயாரிக்கும் பணியில் சீன மொழி அறிஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மொழியைக் கற்பிக்க உள்ள ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.


சர்வதேச பொருளாதார சந்தையில் சீனா வேகமாக வளர்ந்து வரும் நிலையில் சீன மொழியைக் கற்றுக் கொள்ள மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மறுபுறம் ஹிந்தியைக் கற்றுக் கொள்ள சீன மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


*குடியரசுத் தலைவருடன் பிரதமர் திடீர் சந்திப்பு


புது தில்லி, டிச. 4: குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை, பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.


  குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.


  2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக கடந்த 16 நாள்களாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.


   ஐக்கிய அரபு அமீரகம், சிரியா ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் அண்மையில் பயணம் மேற்கொண்டது, பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் இந்திய வருகை,  பிரஸ்ஸல்ஸில் நடைபெற உள்ள ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மாநிலச் செய்தி மலர் :


*எழுத்தாளர் அனுத்தமா காலமானார்.


சென்னை, டிச.4: புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் அனுத்தமா நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 8.45 மணி அளவில் காலமானார்.


சென்ற நூற்றாண்டின் சிறுகதை, நாவல் துறைகளில் கோலோச்சியவர் இவர். இவருடைய இயற்பெயர் ராஜேஸ்வரி. மூத்த தலைமுறையினரால் மிகவும் மதிக்கப்பட்ட எழுத்தாளர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். 300 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 22 நாவல்கள், 15 வானொலி நாடகங்கள் படைத்தவர். இவர் எழுதிய முதல் சிறுகதை ‘அங்கயற்கண்ணி’, 1947 ஜூனில் கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. பெண் கதாபாத்திரங்களை இயல்புக்கு ஏற்ப தன் கதைகளில் புகுத்தியவர். கௌரி என்ற நாவலில் காதல் திருமணம் பற்றியும், வீட்டார் பார்த்துச் செய்யும் மணம் பற்றியும் வெளிப்படுத்தியிருப்பார். நகைச்சுவையும் இவருடைய கதைகளில் வெளிப்படும். கு.ப.ரா, லக்ஷ்மி போன்ற சென்ற தலைமுறை எழுத்தாளர்களின் சமகாலத்தவர். பெண்ணியம் தொடர்பான கதைகள், நாவல்கள் அதிகம் படைத்தவர். இவருடைய கேட்டவரம் நாவல் வாசகர்களிடையே புகழ்பெற்ற ஒன்று. அதன் பெயரால் கேட்டவரம் அனுத்தமா என்றே அழைக்கப்பட்டவர்.


மணல்வீடு என்ற நாவல், 1949ல் கலைமகள் விருது பெற்றது. மாற்றாந்தாய் என்னும் சிறுகதை ஜகன்மோகினி இதழ் சிறுகதைப்போட்டியில் தங்கப்பரிசு பெற்றது. தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசையும் பெற்றிருக்கிறார்.


சிலேடைச் செல்வர் கி.வா.ஜ.வினால் எழுத்துலகில் வளர்க்கப்பட்டவர். குடும்பப் பாங்கானவை என்ற சிறப்பு பெற்ற இவருடைய கதைகள் கலைமகள் இதழில் அதிகம் வெளிவந்திருக்கின்றன.


மேலும் விவரங்களுக்கு: ப்ளாட் 3, இரண்டாவது தளம், மதர்மிர்ரா அபார்ட்மெண்ட், 20/35, மூன்றாவது குறுக்குவெட்டுத் தெரு, மந்தவெளிப்பாக்கம், சென்னை. போன்: 044-24612773
* தமிழகத்தில் கனமழை தொடரும்: பலி எண்ணிக்கை 163 ஆக உயர்வு.


சென்னை, டிச. 4: தமிழகத்தில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமையும் மழையின்
அளவு அதிகமாக இருந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி, திருவாரூரில் 140 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக வேதாரண்யத்தில் 130 மி.மீ., மழையும் பெய்துள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகிய ஊர்களில் 90 மி.மீ., நாகப்பட்டினம் 80 மி.மீ., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 70 மி.மீ., கடலூர், கொடவாசல், மன்னார்குடியில் 60 மி.மீ என மழை அளவு மழை பதிவாகியுள்ளது.


கனமழை தொடரும்: இதனிடையே, "இலங்கையின் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம், புதுவையில் கனமழை தொடரும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை உருவான இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, இப்போது
வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்றும், இதன் காரணமாக மழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது


சுங்கவரியைக் குறைக்க மத்திய அரசு சம்மதம்: லாரி ஸ்டிரைக் வாபஸ்


நாமக்கல், டிச. 4: அகில இந்திய அளவில் நடைபெற இருந்த லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


சனிக்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில் சுங்கவரியைக் குறைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டதை அடுத்து இம் முடிவு எடுக்கப்பட்டதாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தெரிவித்தது.


தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரியைக் குறைக்க வேண்டும்; கனரக லாரிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு வசூலிக்கப்படும் ரூ.3.45 கட்டணத்தை குறைக்க வேண்டும்; சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் 
வாகனங்களுக்கு மொத்த சுங்கத் தொகையில் 50 சதவீதம் வசூலிக்க வேண்டும்; சரக்குகள் இன்றி காலியாக செல்லும் லாரிகளுக்கு 25 சதவீதம் சுங்கம் வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவித்திருந்தது


 வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தலைவர் சண்முகப்பா அறிவித்தார்.


இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியது:
முக்கிய கோரிக்கைகளில் சிலவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. மீதமுள்ள கோரிக்கைகளை 3 மாதங்களுக்குள் நிறைவேற்றுவதாக அமைச்சர் கமல்நாத் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார். எனவே, போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். 3 மாதங்களுக்குள் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.


* ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை தொடக்கம்


திருச்சி, டிச. 4: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திங்கள்கிழமை (டிச.6) தொடங்குகிறது. டிசம்பர் 17-ல் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது.


பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் நம்பெருமாள் பகல்பத்து உற்சவத்தின் போது அர்ச்சுன மண்டபத்திலும், இராப்பத்து உற்சவத்தின் போது திருமாமணி மண்டபத்திலும் (ஆயிரங்கால் மண்டபம்) எழுந்தருளுவார்.


முக்கிய உற்சவங்கள்: நிகழாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா திங்கள்கிழமை திருநெடுந்தாண்டகம் வைபவத்துடன் தொடங்கவுள்ளது.  பகல்பத்து உற்சவம் டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்குகிறது. காலை 6.15 மணிக்கு நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தை அடைகிறார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தொழில்நுட்பச் செய்தி மலர் :


* யோகஹமா (ஜப்பான்), டிச.3: கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானிய நிறுவனமான நிசான், இப்போது பேட்டரியில் ஓடக்கூடிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத இந்த காருக்கு "லீஃப்' என பெயரிடப்பட்டுள்ளது.


2011-ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு வர உள்ள இந்த காருக்கு ஏற்கெனவே 26 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர். இதில் 20 ஆயிரம் பேர் அமெரிக்கர்கள். உள்நாட்டில் 6 ஆயிரம் கார்களுக்கு முன்பதிவைப் பெற்றுள்ளது நிசான். புதிய ரகக் காரை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டொஷியுகி ஷிகா, வெள்ளிக்கிழமை நிசான் ஆலையில் அறிமுகப்படுத்தினார். இந்தக்காரின் விலை 45 ஆயிரம் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 21 லட்சம்.


அமெரிக்காவில் இந்தக் காரை வாங்குவதற்கு 7,500 டாலர் வரை வரிச் சலுகை அளிக்கப்படும். இந்தக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரம் வரை ஓடும். இதில் அதிகபட்சம் 56 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.


முதல் கட்டமாக இந்த கார் ஜப்பானில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும். இந்த ஆலை ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். பின்னர் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டு 2.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்தக் கார் வயர்லெஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு வீட்டிலோ, அலுவலகத்திலோ விட்டிருந்தால், பேட்டரி எந்த அளவு சார்ஜ் ஆகி உள்ளது என்பதை உங்களது ஐ-போனில் தெரிந்து கொள்ளலாம். முழு அளவு சார்ஜ் ஆக இன்னும் எவ்வளவு மணி நேரம் ஆகும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.


வர்த்த்கச் செய்தி மலர் :


* பங்குச் சந்தையில் 830 புள்ளிகள் உயர்வு


மும்பை, டிச.4: பங்குச் சந்தையில் கடந்த வாரம் 830 புள்ளிகள் உயர்ந்தது. தொடர்ந்து மூன்று வாரமாக சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தையில் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை தவிர்த்து பிற நாள்களில் ஏற்றம் காணப்பட்டது. இதனால் குறியீட்டெண் கணிசமாக உயர்ந்தது.


இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 4 சதவீத ஏற்றமே காணப்பட்டது.


2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், வீட்டு வசதி கடன் வழங்கியதில் முறைகேடு உள்ளிட்ட பல விவகாரங்களால் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. தொடர்ந்து மூன்று வாரங்களாக சரிவைக் கண்டுவந்த பங்குச் சந்தை கடந்த வாரம் முன்னேற்றத்தை சந்தித்தது. இதனால் குறியீட்டெண் 19,966 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 5,992 புள்ளிகளானது.
2010-11-ம் நிதிஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8.9 சதவீதம் உயர்ந்ததும் பங்குச் சந்தை ஏற்றம் பெறக் காரணமாயிற்று. அரசு கணித்திருந்த 8.5 சதவீத அளவைக் காட்டிலும் வளர்ச்சி கூடுதலாக இருந்தது பங்குச் சந்தை முதலீட்டாளர்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.


முதல் காலாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி 8.8 சதவீதமாக இருந்தது. இரண்டு காலாண்டிலும் கணிசமான முன்னேற்றம் இருப்பதால் மூன்றாவது காலாண்டிலும் வளர்ச்சி ஏறுமுகமாக இருக்கும் என்று நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் கெüஷிக் பாசு தெரிவித்தார்.


நாட்டின் பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டில் ஒட்டுமொத்த வளர்ச்சி 8.75 சதவீதமாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.


இதனிடையே முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டதாக நான்கு நிறுவனங்களை செபி தடை விதித்தது. முர்ரிஇண்டஸ்ட்ரீஸ், ஆக்ருதி சிட்டி, வெல்ஸ்பன் கார்ப்பரேஷன் லிமிடெட், பிரெஷ்மன் இந்தியா நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.


பங்குச் சந்தையில் டிஎல்எப் நிறுவனப் பங்கு விலை 4.53 சதவீதம் சரிந்து ரூ.306.55-க்கும், ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரக்சர் 4.29 சதவீதம் சரிந்து ரூ.836.70-க்கும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 4.27 சதவீதம் சரிந்து ரூ.107.60-க்கும் விற்பனையாயின. உலோக நிறுவனங்களில் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 2.39 சதவீதம் சரிந்து ரூ.165.55-க்கு விற்பனையானது.


விளையாட்டுச் செய்தி மலர் :


* கம்பீர் சதம்[126] : தொடரை வென்றது இந்தியா


வடோதரா, டிச.4: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.


முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.


பின்னர் ஆடிய இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் கம்பீர் 126 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குஜராத் மாநிலம் வடோதராவில் இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்திய அணியில் ஜாகிர்கான் சேர்க்கப்பட்டார். முதல் இரண்டு ஆட்டங்களில் காயம் காரணமாக விளையாடாத நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் அணியில் சேர்க்கப்பட்டார். மற்றபடி எந்த மாற்றமும் செய்யப்பட்டவில்லை.


ஸ்கோர் போர்ட்:


பௌலிங்:


ஜாகிர்கான் 8 - 2 - 31 - 2  
ஆசிஷ் நெஹ்ரா 8 - 1 - 38 - 0
முனாப் பட்டேல் 10 - 0 - 28 - 1
அஸ்வின் 9 - 1 - 49 - 2
யூசுப் பதான் 8 - 0 - 27 - 2
ரவீந்திர ஜடேஜா 7 - 0 - 40 - 0.


இந்தியா
முரளி விஜய் (ரன்அவுட்) வெட்டோரி 30
கம்பீர் அவுட் இல்லை 126
கோலி அவுட் இல்லை 63
உபரி 10
மொத்தம்  (39.3 ஓவர்களில், 1 விக்கெட் இழப்புக்கு) 229
விக்கெட் வீழ்ச்சி: 1-115 (முரளி விஜய்).
பௌலிங்
மில்ஸ் 6 - 0 - 39 - 0
மெக்கே 6.3 - 0 - 42 - 0
பிராங்க்ளின் 4 - 0 -  34 - 0
வெட்டோரி 9 - 0 - 41- 0
நாதன் மெக்கல்லம் 8 - 0- 36 - 0
ஸ்டைரிஸ் 6 - 0 - 32 - 0
ஆன்மீகச் செய்தி மலர் :


* அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்


மூலவர் - தம்பதியருடன் முருகன்


தல விருட்சம் - நாவல்


தீர்த்தம் - நூபுர கங்கை


பழமை - 1000 - 2000 ஆண்டுகளுக்கு முன்


ஊர் - சோலைமலை [ அழகர் கோவில் ]


மாவட்டம் - மதுரை


மாநிலம் - தமிழ்நாடுபாடியவர்கள் :


அருணகிரிநாதர்


திருப்புகழ்


அகரமு மாகிஅதிபனு மாகிஅதிகமு மாகி அகமாகி -


அயனென வாகிஅரியென வாகிஅரனென வாகி அவர்மேலாய்;


இகரமு மாகி யைவைகளு மாகியினிமையுமாகி வருவோனே -
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்


மகபதி யாகிமருவும்வ லாரி மகிழ்களி கூரும்வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே


செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே -
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.


-அருணகிரிநாதர்


தல சிறப்பு :


சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.  
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். முருகன் அவ்வையாரிடம் "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான்.


ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது.முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்குள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடி காவல் தெய்வமான ராக்காயி அம்மனை தரிசிக்கலாம். இத்தீர்த்தம் சுவையானது. சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். மலையடிவாரத்தில் கள்ளழகர் திருக்கோயிலும், மலைமீது சோலைமலை முருகன் கோயிலும் அமைந்துள்ளன.தல வரலாறு :


தமிழ்பாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, ""என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?'' என்றான். சந்ததோஷப்பட்ட பாட்டி ""வேண்டும்''என்றார்.உடனே முருகன்,""பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?''என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,""சுட்ட பழத்தையே கொடேன்''என்றார்.சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,""பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்''என்று கூறி சிரித்தான்.


சிறுவனின் மதிநுட்பத்தை அறிந்த பாட்டி, மரத்தில் இருப்பவன் மானிடச் சிறுவனல்ல என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் முருகன் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார். முருகன் இந்த திருவிளையாடலால் உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது, "உயிர்களின் மீது "உலகப்பற்று' என்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால் இறைவனை உணரலாம்' என்பதே அது.


அதிசயத்தின் அடிப்படையில்:


 சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். 


திருவிழா:


தமிழ்வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.


திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்
ஆன்மீகச் சிந்தனை மலர் :


நன்மை தரும் செயல் - அவ்வையார்


* நல்லவர்களை நேரில் காண்பதும், அவர்களின் அறிவுரைக்கேட்பதும், அவர்களோடு இணைந்து பழகுவதும், அவர்தம் நற்குணங்களைப் புகழ்ந்து பேசுவதும் நமக்கு நன்மை தரும் செயலாகும்.

* பெரிதாக மடல் கொண்ட தாழைக்கு மணம் இல்லை. ஆனால், சிறிய இதழ்களைக் கொண்டிருந்தாலும் மகிழம்பூவிற்கு நிறைய மணம் உண்டு. கடலில் நிறைய நீர் இருந்தும் குடிப்பதற்குப் பயன்படாது. கடல் அருகே மணற்குழியில் சுரக்கும் ஊற்றுநீர் சிறிதாக இருந்தாலும் உண்பதற்கு பயன்படும். 


* பொன்னால் செய்த குடம் உடைந்த பின்னும் பொன்னாகப் பயன்படும். அதுபோல, சிறந்த பண்புகளுடைய செல்வந்தர் வறுமை நிலையை அடைந்தாலும் முன்புபோலவே தன்முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வார்கள்.  
   


வினாடி வினா :


வினா - அரசியல் நிர்ணயத்தில் பங்கு கொண்ட காங்கிரசைச் சேராத தலைவர் யார் ?


விடை - டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்.    


இதையும் படிங்க :


கின்னஸ் சாதனைக்காக ஓவியம் வரையும் பெண


புதுச்சேரி, டிச. 4: கின்னஸ் சாதனைக்காக விதைகளைக் கொண்டு ஓவியம் வரையும் முயற்சியில் புதுச்சேரியைச் சேர்ந்த சி.விஜயலட்சுமி ஈடுபட்டுள்ளார்.


÷விதைகளால் உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய ஓவியத்தை அவர் உருவாக்கி வருகிறார். இதுவரை யாரும் விதைகளால் மிகப்பெரிய ஓவியத்தை உருவாக்கவில்லை. இவர் 16 சதுர மீட்டர் அளவிலான பெரிய வரைத்தாளில் இந்த ஓவியத்தை வரைந்து வருகிறார்.


÷இந்த ஓவியம் ரத்ததானம் செய்வதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இதை சனிக்கிழமை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து 2-வது ஓவியமாக பீன்ஸ் விதைகளால் மிகப்பெரிய ஓவியத்தை வரைய உள்ளார்.


இது 72 சதுர மீட்டர் கொண்டதாக இருக்கும். இந்த ஓவியம் அனைவருக்கும் கல்வி எனும் தலைப்பில் இருக்கும்.


இந்த பீன்ஸ் விதை ஓவியத்தில் புத்தகத்தை வரைந்து அதில் ஒரே குறிக்கோள் அனைவருக்கும் கல்வி எனும் வாசகத்தை ஆங்கிலத்தில் குறிப்பிட்டு எழுதி ஓவியமாகப் படைக்க உள்ளார்.


ஆயில் பெயிண்டிங், அக்ரலிக் பெயிண்டிங், மெட்டாலிக் பெயிண்டிங், வாட்டர் கலர் பெயிண்டிங், கிளாஸ் பெயிண்டிங், ம்யூரல் பெயிண்டிங் போன்ற வண்ணம் தீட்டும் வகையில் 60 வகையான ஓவியங்களைத் தீட்டி வருகிறார்.


பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றுள்ளார். கோலம், ரங்கோலி கலையிலும் தேர்ச்சி பெற்றவர்.
÷இந்த ஓவிய சாதனை முயற்சியை வைசியாள் வீதியில் உள்ள ஆர்ய வைஸ்ய வாசவி திருமண நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை 6.01 மணிக்குத் தொடங்கினார். இந்த இரண்டு ஓவியங்களையும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு முடிக்கிறார்.


நன்றி - தின மணி , தின மலர், தட்ஸ்தமிழ்.

6 comments:

Chitra said...

Thank you, Madam.

LK said...

nandri

அப்பாதுரை said...

நல்ல டைஜஸ்ட்.

சீன மொழி பாடமாக அமைகிறதா? இந்தியே படிக்க மாட்டேன்னு அடம் பிடிச்ச தமிழ்நாடாச்சே? மகாராஷ்ட்ராவில செல்லுமா? ஆச்சரியமா இருக்கு - வரவேற்க வேண்டிய முன்னேற்றம்.

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி சித்ரா.

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி எல்.கே

சங்கரியின் செய்திகள்.. said...

அப்பாதுரை சார் நன்றி.

Post a Comment