Monday, December 6, 2010

இன்றைய செய்திகள். டிசம்பர் - 06 - 2010.உலகச் செய்தி மலர் :

* சவுதி அதிகாரிகளை விஷ சென்ட் கொடுத்து கொல்ல அல்கொய்தா திட்டம்

லண்டன்: சவுதி அரபிய அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை விஷம் கலந்த வாசனைப் பொருட்கள் கொடுத்து கொலை செய்ய அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு்ள்ளது.

அவர்கள் வங்கிகளையும், பெரிய நிறுவனங்களையும் கொள்ளையடிக்கவும் திட்டமிட்டிருந்ததாக சவுதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில மாதங்களில் 149 அல்கொய்தா தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக கடந்த மாதம் சவுதி தெரிவித்தது. அவர்கள் சவுதி அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்க பணம் மற்றும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தனர் என்று அது மேலும் தெரிவித்தது.

விசாரணையில் கைதானவர்கள் விஷம் கலந்த வாசனைப் பொருட்களை அதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களை கொல்லத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

கைதானவர்களில் 124 பேர் சவுதியைச் சேர்ந்தவர்கள், 25 பேர் வெளிநாட்டவர்கள். அவர்களுக்கு சோமாலியா மற்றும் ஏமன் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு என்று உள்துறை அமைசச்கம் கடந்த மாதம் தெரிவித்தது.

கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் தான் செய்த குற்றத்திற்கு வருந்துவது போல் நடித்து சவுதியின் தீவிரவாத ஒழிப்பு படையின் தலைமை அதிகாரியான இளவரசர் முஹம்மது பின் நயீபை கொல்ல முயன்றான. ஆனால் அவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

* வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் உரிமை: விதிமுறை மாற்றம் தேவை

துபை, டிச.5: வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் எப்போதுவேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் விதிமுறையை மாற்றவேண்டும். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலச்சங்கம் சனிக்கிழமை இந்திய தேர்தல் கமிஷனுக்கு முறையீடு அனுப்பியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விடுமுறையின்போதுதான் இந்தியாவுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே பெயர் சேர்க்க முடியும் என்கின்றனர். எனவே, பலர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே, தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் செய்து எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் தனிப் பிரிவை ஏற்படுத்துவது அவசியம்.

 கேரளத்தில் அடுத்து வரவிருக்கும் நியம சபா தேர்தலிலிருந்து இந்த முறையைக் கொண்டுவரவேண்டும் என இந்த அமைப்பின் தலைவர்  கே.வி.சம்சுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

* இலங்கையில் கனமழை: 56 ஆயிரம் பேர் வீடு இழந்தனர்

கொழும்பு, டிச. 5: இலங்கையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மழையால் அந்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய அணையான விக்டோரியா அணைக்கட்டு சனிக்கிழமை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இந்த அணை 3 ஆண்டுகளுக்கும் பிறகு இப்போதுதான் தனது முழு கொள்ளளவை எட்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றபடுகிறது.

இந்த தொடர் மழையின் காரணமாக மத்திய வெளிமடை பகுதியில்  வெள்ளத்தில் மூழ்கி ஒருவரும், மாத்தரை மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவரும் உயிரிழந்ததாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* வானில் சனி தரிசனம்!

புது தில்லி, டிச. 5: வானில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான அற்புதங்கள் நிகழ்கின்றன. அவற்றில் பல நமது கண்களுக்குப் புலப்படுவது இல்லை. சில அற்புதங்களை  விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் ஆய்வு செய்கின்றனர். மிகச்சில அற்புதங்களே சாதாரண மக்களும் கண்டுகளிக்கும் வகையில் உள்ளன. அந்த வகையில் பிரகாசிக்கும் சனி கோளையும், அதன்  வளையங்களை பூமியிலிருந்து பார்க்கும் வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது.

சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது பெரிய கோள் சனி. இந்தக் கோளை சுற்றி காணப்படும் வளையங்களே இதன் சிறப்பம்சம் எனலாம். இந்த வளையங்கள் தொடர்பாக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர். அத்தகைய வளையங்களை பூமியிலிருந்து பார்க்கும் வாய்ப்பு இப்போது கிட்டியுள்ளது. இவற்றைத் தொலைநோக்கிகள் மூலம் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


* நாடாளுமன்றத்தை முடக்கியதால் மத்திய அரசுக்கு ரூ. 78 கோடி இழப்பு: வி. நாராயணசாமி தகவல்

புதுச்சேரி, டிச. 5: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கடந்த 15 நாள்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கியதால் மத்திய அரசுக்கு ரூ. 78 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் வி.நாராயணாசாமி பேசியது:

கடந்த 15 நாள்களாக பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்து, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் குழு விசாரணை அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கி வருகின்றனர்.
÷நாடாளுமன்றத்தை முடக்கியதால் இதுவரை ரூ. 78 கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது

பிடிவாதமாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அரசியலாக்கவே எதிர்க்கட்சிகள்  நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.÷இதை தவிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அங்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக விவாதம் நடத்தவும் எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும்.

நாடாளுமன்றம் முடங்கியதால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா,  விவசாயிகளுக்கு நேர்த்தி செய்யப்பட்ட விதை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து வழங்கும் மசோதா, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஊழியர்களா?, மத்திய அரசு ஊழியர்களா? என்று முடிவு செய்வதற்கான மசோதா உள்ளிட்டவை தொடர்பான விவாதங்கள், நடத்த முடியவில்லை. ÷அதனால் எதிர்க்கட்சிகள் பிடிவாதத்தை கைவிட்டு, நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.

 * "ஏடிஎம்' மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம்: நாடு முழுவதும் கண்காணிப்பு

புதுடில்லி : “பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்க ஏ.டி.எம்.,கள் மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்' என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் இந்த கைவரிசையை ஒழித்துக் கட்ட நாடு முழுவதும் புலனாய்வு நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

கடந்த 2009-10ம் நிதியாண்டில், சந்தேகத்திற்குரிய, 17 ஆயிரம் வங்கிக் கணக்கு விவரங்களையும், அவற்றின் பணப் பரிமாற்றங்களையும் ஆய்வு செய்த நிதி புலனாய்வுப் பிரிவினர், மத்திய நிதியமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்

* அலைக்கற்றை விற்பனை அதிகரிக்கப்படும்: கபில் சிபல்

புதுதில்லி, டிச. 5: அலைக்கற்றை விற்பனை அதிகரிக்கப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
குறைந்த அளவு அலைக்கற்றை பயன்பாட்டில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே கூடுதலாக அலைக்கற்றை விடுவிக்கப்படும் என்றார் அவர்

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் பேட்டியளித்தபோது இத் தகவலைக் கூறினார்.
உரிய தகுதி இல்லாத, விதிகளைப் பின்பற்றாத தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு துல்லியமாக எவ்வளவு என்பதை தொலைத்தொடர்பு துறை விரைவில் கணக்கிடும் என்றார் அவர்

மாநிலச் செய்தி மலர் :

* 2 ஜி அலைக்கற்றை ஏலம் ரூ. 1.10 லட்சம் கோடியை மீட்கலாம்: பத்திரிகையாளர் குருமூர்த்தி

மதுரை, டிச.5: 2ஜி அலைக்கற்றை ஏலம் விவகாரத்தில் தகுதியில்லாத நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்தால் சுமார் ரூ.1.10 லட்சம் கோடியை மீட்கலாம் என பத்திரிகையாளர் எம்.எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.

மதுரையில் கலாசார ஒற்றுமைக்கான வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் "தேசிய அளவிலான பிரச்னைகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே சமுதாயத்தில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு வருகிறது. இப்போது அனைத்துத் தரப்பு மக்களிடமும்
2ஜி அலைக்கற்றை ஊழல் விவாதப் பொருளாகியுள்ளது. ஸ்பெக்ட்ரம் என்பது நமது நாட்டின் சொத்து. இதன் ஏலத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஊழலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மட்டும் பொறுப்பு அல்ல. அவருக்குப் பின்னால் பலருக்கும் தொடர்பு உள்ளது.
இது வெளிப்படையாக நடந்த ஊழல். மிகப் பெரிய மோசடி. இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பதை வெளிக்கொண்டு வர பொதுமக்கள் அனைவரும் அரசை வலியுறுத்த வேண்டும்.

* சாகித்ய அகாதெமியை வெளியேற்ற தமிழக அரசு நெருக்கடி!

சென்னை, டிச. 5: சென்னை தரமணியில் உள்ள அலுவலகத்தை காலி செய்யுமாறு சாகித்ய அகாதெமிக்கு தமிழக அரசு நெருக்கடி அளித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்திய மொழிகளில் கலை, பண்பாட்டு வளர்ச்சியில் இலக்கியம் சார்ந்த பணிகளை ஊக்குவிப்பது, அங்கீகரிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக 1952-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சி கொண்டதாக 1954-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட தெனிந்திய மொழிகளுக்கான மண்டல அலுவலகம் சென்னையில் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பிறமொழிகளில் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பது, தமிழில் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை பிறமொழிகளில் மொழிபெயர்க்க உதவுவது, என இந்த மையம் ஆற்றிய பணிகள் எழுத்துலகில் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்டது.
இன்றளவும் சாகித்ய அகாதெமி விருது என்பது இலக்கிய படைப்பாளர்கள் மத்தியில் மணிமகுடமாகவே உள்ளது.
இந்த நிலையில் தமிழ் மற்றும் பிறமொழிகளில் வெளியான சிறந்த படைப்புகள் அனைத்தையும் கொண்ட நூலகமும் அதன் ஒரு பகுதியுமே சாகித்ய அகாதெமியின் அலுவலகமாக அறியபட்டு வருகிறது. ஆய்வரங்கம், கருத்தரங்கம், அதிக புத்தகங்களுக்கான இடவசதி உள்ளிட்ட தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படாத நிலையில் 1990-ம் ஆண்டு சென்னையில் இருந்து மண்டல அலுவலகம் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தது.

இதனால் தமிழ் இலக்கியம் சார்ந்த எந்த நிகழ்வுகளும் நடைபெறாமல் போகும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து தமிழ் எழுத்தாளர்கள் தலைமையகத்துக்கு தெரிவித்து தென்னிந்திய மண்டல அலுவலகத்தில் இருந்து ஒரு பிரிவை சென்னையில் செயல்பட ஏற்பாடு செய்தனர்.
இதற்கு தகுதியான இடம் கிடைக்காத நிலையில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் சிலர் முன்முயற்சிகள் மேற்கொண்டனர்

வெளியேற்ற அரசாணை: இந்த அலுவலக வளாகத்தை காலி செய்ய வேண்டும் என 2007-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் குறிப்பிட்ட சில துறைகள் சாகித்ய அகாதெமிக்கும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கடிதங்கள் அனுப்பி வந்தன.

இந்த நிலையில், தரமணி வளாகத்தில் உள்ள சாகித்ய அகாதெமியின் சென்னை பிரிவை அங்கிருந்து வெளியேற்றி அந்த கட்டடத்தை காலி செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உத்தரவிட்டு அரசாணையை (எண்: 45) தமிழக அரசின் உயர்கல்வித்துறை 2008 பிப்ரவரி 20-ம் தேதி பிறப்பித்தது.

செம்மொழி மாநாடு நடத்தி, செம்மொழி நூலகத்துக்காக தமிழக சட்டப் பேரவையின் பழைய வளாகத்தையே அளித்த தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழில் இலக்கிய வளர்ச்சிக்கு உதவிவரும் சாகித்ய அகாதெமியின் சென்னைப் பிரிவு அலுவலகத்தை மீண்டும் தமிழகத்தை விட்டு வெளியேற விடமாட்டார் என தமிழ் எழுத்தாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சாகித்ய அகாதெமியின் சென்னைப் பிரிவு அலுவலகம் மூடப்பட்டால், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது மிகவும் குறைந்துவிடும் என்பதுகூடவா அரசு அதிகாரிகளுக்குப் புரியவில்லை

* கொடைக்கானலில் கடுங்குளிர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல்,டிச. 5: கொடைக்கானலில் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 கொடைக்கானலில் பெய்த தொடர் மழையால், வெள்ளி நீர்வீழ்ச்சி,பாம்பார் அருவி,பியர்சோழா அருவி,செண்பகா அருவி,வட்டக்கானல் அருவி மற்றும் நீர்வரத்துப் பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

 கொடைக்கானல்-பழனி வத்தலகுண்டு மலைச் சாலைகளான பேத்துப்பாறை, பெருமாள் மலை, லாஸ்காட் சாலை, பி.எல். செட்,சவரிக்காடு,வட்ட மலை ஆகிய  இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளன. சாலைகளில் அதிகமான தண்ணீர் தேங்கி உள்ளது.

 கடந்த இரு நாள்களாக மழை குறைந்து விட்டாலும், கடுங்குளிர் நிலவி வருகிறது.
 இதனால், ஏராளமான முதியோர், குழந்தைகள் உடல்நலம்  பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


தொழில்நுட்பச் செய்தி மலர் :

* கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் தாமதத்துக்கு அணு விபத்து நஷ்டஈட்டு சட்டமே காரணம்

மாஸ்கோ, டிச.5: அணு விபத்து நஷ்டஈட்டு சட்டத்தில் காணப்படும் குறிப்பிட்ட சில அம்சங்களால்தான், கூடங்குளத்தில் மேலும் 2 அணு மின் உலைகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக ரஷியா தெரிவித்துள்ளது.
 
கடந்த ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷியாவின் ஒத்துழைப்புடன் 2 அணு மின் உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 1000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணு உலைகளில் முதல் பிரிவு 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் உற்பத்தியைத் தொடங்கும். அதற்கு அடுத்த ஆண்டுக்குள் இரண்டாவது பிரிவும் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்னும் இறுதிவடிவத்தைப் பெறவில்லை. அணு விபத்து ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் | 1,500 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டும் என அணு விபத்து நஷ்டஈட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற அம்சங்களில் உரிய முடிவு எட்டப்படாததே கூடங்குளத்தில் மேலும் அணு மின் உலைகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் என அணு உலையை நிறுவும் ரஷிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே கருத்தை அமெரிக்க, பிரான்ஸ் நிறுவனங்களும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகச் செய்தி மலர் :

* ஆப்பிள் நிறுவனத்தின் பழைய மாடல்:கம்ப்யூட்டர் ரூ.ஒரு கோடிக்கு ஏலம்

டிசம்பர் 06,2010,00:36
லண்டன்:ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் வெளியிட்ட பழைய மாடல் கம்ப்யூட்டர் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.ஆப்பிள் நிறுவனம், கடந்த 1976ம் ஆண்டு முதன்முதலில் பர்சனல் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியது. அப்போது அதன் விலை 30,000 ரூபாய். இந்த மாடலில் மொத்தம் 200 கம்ப்யூட்டர்கள் மட்டும் தயாரிக்கப்பட்டது.
தற்போதைய கம்ப்யூட்டர்களை ஒப்பிடுகையில், அதன் செயல்திறன் 1,000 மடங்கு குறைவு.இந்நிலையில், அதில் விற்பனையாகாமல் இருந்த கம்ப்யூட்டர் ஒன்றை ஏலம் விட ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்தது. லண்டனில் உள்ள பிரபல கிறிஸ்டி ஏல மையத்தில் அந்த கம்ப்யூட்டர் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கம்யூட்டர் ஏலம், அனைவரையும் ஒரு கணம் திகைக்க வைக்கும் தொகைக்கு ஏலம் போனது.இந்த கம்ப்யூட்டரை இத்தாலியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளார். இந்த கம்ப்யூட்டருடன் இலவச இணைப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் தனது கைப்பட எழுதிய கடிதம், கம்ப்யூட்டர் இயக்குவதற்கு தேவையான புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.

இதுகுறித்து கம்ப்யூட்டரை வாங்கிய இத்தாலி தொழிலதிபர் மார்க்கோ கூறியதாவது:'கம்ப்யூட்டர்கள் மீது எனக்கு அதீத காதல் உண்டு. ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மாடல் கம்ப்யூட்டர் ஒன்றை ஏலம் விடுவதை அறிந்தவுடன், போன் மூலம், ஏல நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றேன்.பின்னர், எனது சகோதரர் ஏலத்தில் நேரில் கலந்து கொண்டு கம்ப்யூட்டரை வாங்கினார்.

இந்த கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், பர்சனல் கம்ப்யூட்டர் என்ற சொல் காதில் விழும் போது, அதை வாங்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியது. எனவே காலங்கடந்தாலும், பர்சனல் கம்ப்யூட்டர் என்ற சொல்லுக்கு பிள்ளையார் சுழி போட்ட இந்த கம்ப்யூட்டர் மாடலை ஏலத்தில் வாங்கியது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.இவ்வாறு மார்க்கோ கூறினார்.


விளையாட்டுச் செய்தி மலர் :

* ஐபிஎல் போட்டிகளில் விளையாட கொச்சி அணிக்கு அனுமதி

மும்பை, டிச.5- நான்காவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட கொச்சி அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனுமதி அளித்துள்ளது.
இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் என். சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கொச்சி அணிக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு அளிக்கப்பட்ட பதில் திருப்திகரமாக இருந்ததால் ஐபிஎல் நிர்வாகக் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

*பீட்டர்சன் இரட்டைசதம் (213); இங்கிலாந்து 551/4

அடிலெய்டு, டிச.5:  ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 551 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை துவங்கிய இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடத்தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. குக் 136 ரன்களுடனும், பீட்டர்சன் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ûஸ தொடர்ந்தது. குக் 148 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரிஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 18 பவுண்டரிகள் அடங்கும். ÷
குக் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து காலிங்வுட் களம்புகுந்தார். மறுமுனையில் பீட்டர்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 158 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை விட 306 ரன்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது. மேலும் 100 ரன்கள் சேர்த்துவிட்டு இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4-வது நாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இரண்டு நாள் ஆட்டமே மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா வெற்றிபெற முடியாது என்பது உறுதியாகிவிட்டது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி தோல்வியையோ அல்லது இன்னிங்ஸ் தோல்வியையோ தவிர்க்க கடுமையாகப் போராடும். இருப்பினும் இங்கிலாந்து பௌலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலை அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா- 245 (ஹசி 93, ஹாடின் 56, வாட்சன் 51, ஆண்டர்சன் 4வி/51), இங்கிலாந்து -551/4 (பீட்டர்சன் 213*, குக் 148, டிராட் 78, காலிங்வுட் 42, இயான் பெல் 41*, ஹாரிஸ் 2வி/84).


ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு வடபத்ரசாயி,ஆண்டாள் திருக்கோவில்

மூலவர் - வடபத்ரசாயி, ரங்கமன்னார்

அம்மன்/தாயார் - ஆண்டாள் [ கோதைநாச்சி ]

தீர்த்தம் :  திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம்
  :  -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  வில்லிபுத்தூர்
  ஊர் :  ஸ்ரீ வில்லிபுத்தூர்
  மாவட்டம் :  விருதுநகர்
  மாநிலம் :  தமிழ்நாடு


பாடியவர்கள் :

மங்களாசாஸனம்

பெரியாழ்வார், ஆண்டாள்

மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவளைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை எய்து வித்த இருடீ கேசா முலையுணாயே.

-பெரியாழ்வார்

தல சிறப்பு :

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. மூலவர் வடபத்ரசாயி (ரங்கமன்னார்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இத்தலத்தினுடைய கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது. இங்குள்ள உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தே காட்சி தருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்

கி.பி. 1536ம் ஆண்டு பாண்டிய மன்னர்களாலும் சோழ மன்னர்களாலும் விரிவுபடுத்தி கட்டப்பட்டது.

தல பெருமை:

மூலஸ்தானத்தில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் வடவிருசத்தினடியில் அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி அடிவருட சயனக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் கதை வேலையாய்ச் செய்து வர்ணம் தீட்டப்பட்ட கருடன், சேனை முதலியார், சூரியன், தும்பருநாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு, பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து உண்டான தாமரையில் அமர்ந்த பிரம்மா, வாள் சனகர், கந்தர்வர்கள், சந்திரன், மதுகைடபர், பிருகு, மார்க்கண்டடேயர் உருவங்கள்  இருக்கின்றன. விமானத்தைச் சுற்றி வர விமானத்திலே ஒரு சிறுவிட்ட வாசல் பிரகாரமும் இருக்கிறது. இதில் திருமுடியையும் திருவடிகளையும் சேவிக்க சிறிய திட்டி வாசல்கள் உள்ளன. இவை மார்கழித் திருநாள் ஆரம்பத்திற்கு  முதல்நாள் பிரியாவிடையன்று யாவரும் வழிபடதிறந்து வைக்கப்படுகின்றன.

திருத்தேர் : இக்கோயில் தேரில் மிகச் சிறத்த தொழில் நுட்பத்துடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சாலி வாகன சகாப்தம் கொல்லம் 1025 வருஷம் சௌமிய வருடம் ஆவணி 13 குருவாரம் என்று எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து இதன் பழமை நம்மை வியக்க வைக்கிறது.

திருப்பதியில் புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாள் மாலையை திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றது.

இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வரும் .

மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத் தான் கள்ளழகர் அணிவிக்கிறார்.

ஸ்ரீபெரியாழ்வார் (விஷ்ணு சித்தர்) அவதார தலம்

ஸ்ரீ ஆண்டாள் அவதார தலம். ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்பு பெயர் இத்திருத்தலத்தில் தான் கிடைக்கப்பெற்றது.

சக்கரத்தாழ்வார் சந்நதி மிகப்புராதனமானது பஞ்சலோகத்தால் ஆன விக்ரகமே  விக்ரகமாக விளங்குகிறது. வேறு எங்கும் இப்படி இல்லை.

திருப்பாவை விமானம் :மார்கழி நோன்பிருந்த ஆண்டாள், திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினாள். 30 பாசுரங்கள் உடையது இது. கண்ணனை தரிசிக்க தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும். தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில், ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு, "திருப்பாவை விமானம்' என்றே பெயர். ஆண்டாளை தரிசிப்பவர்கள் இந்த விமானத்தை அவசியம் தரிசிக்க வேண்டும்.

மாதவிப்பந்தல்:ஆண்டாள் சன்னதிக்கு முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாள். இந்தப்பந்தல் மரங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள், தன்னை கோபிகையாக பாவித்து, கண்ணனை வேண்டி பாடிய சிற்பங்கள் இந்த பந்தலுக்கு அருகிலுள்ள விதான சுவரில் உள்ளது. இதேபோல திருப்பாவை காட்சிகளை ஆண்டாள் கோயில் முன்மண்டபத்தில் ஓவியங்களாகவும் காணலாம்.

ஆண்டாள் மடியில் ரங்கநாதர்:ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார். அதுபோல, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் அருளுவதைக் காணலாம். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியது.

கீர்த்தி தரும் ஆண்டாள்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும் என்பர். எனவே, இவளிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் என்பர்.

ஆண்டாள் பாடிய பாசுரங்கள்:ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் உடையது.

ஸ்ரீவில்லிபுத்தூர்- பெயர் விளக்கம்:ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்திற்குரிய விளக்கத்தைக் கேளுங்கள்.ஸ்ரீ என்றால் லட்சுமி. இவளே ஆண்டாளாக அவதாரம் எடுத்தாள். வில்லி என்பது இவ்வூரை ஆண்ட மன்னன் பெயர். பாம்பு புற்று நிறைந்திருந்த பகுதியாக இருந்தது என்பதால் "புத்தூர்' என்றும் பெயர் வந்தது. பிற்காலத்தில், இவற்றை மொத்தமாகத் தொகுத்து "ஸ்ரீவில்லிபுத்தூர்' என பெயர் பெற்றது.

தல வரலாறு :

நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாக கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதை  கண்ணாடியிலே கண்டு களிப்பாள். மீண்டும் பூக்களை களைந்து பூஜைக்கு கொடுத்து விடுவாள். பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு சாத்துவார். ஒரு நாள் மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதை தவிர்த்து விட்டு வேறு மலர்களை சூட்டினார். உடனே இறைவன்,  "ஆழ்வார்!  கோதையின் கூந்தலில் சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு,' என்றார். ஆழ்வாரும் கோதையை மானுடர் யாருக்கும் மணமுடிக்க சம்மதிக்காமல் இறைவனுக்காக காத்திருந்தார். கோதையும் இறைவனையே நினைத்து ஏங்கி தொழுதபடியே இருந்தாள். இறைவனும் தாம் கோதையை நேசிப்பதாகவும் தன்னை திருவரங்கரத்திற்கு வந்து சந்திக்க சொல்ல, கோதையும் பூப்பல்லக்கில் அங்கு சென்று இறைவனோடு ஐக்கியமானாள் . ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோதையோடு  சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க இறைவனும் ஏற்று இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். வைணவர்களின் முக்கிய த்தலமாக இக்கோயில் போற்றப்படுகிறது.

திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* அழியா இன்பத்தின் வாசல் - இராமானுஜர்.

* இறைவன் தொண்டினையும், அடியவர்களின் தொண்டினையும், ஆசிரியரின் தொண்டினையும் சமநிலையில் கருதிச் செய்யவேண்டும். முன்னோர்கள் கூறியிருக்கும் தெய்வீகமான நூல்களில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

* ஒருவன் எவ்வளவு அறிவுடையவனாக இருந்தாலும், இறைவன்,ஆசிரியர் ஆகியோருக்கு தொண்டு செய்யாமல் அவர்களை இகழ்ந்து மதிக்காமல் திரிந்தால் அவன் அழிந்து போவது நிச்சயம்.

* சிறந்த அடியார்களாகிய நல்லோரிடம் சேருவதே அழியாத இன்பத்திற்கு வாசல் ஆகும். அதனால் அடியார்களின் உள்ளம் மகிழும் படி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

வினாடி வினா :


வினா:- இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் யார் ?

விடை :- ரபீந்திரநாத் தாகூர்- இந்தியா [ 1913]


இதையும் படிங்க :

பருவநிலை மாறுபாடு : பச்சௌரி எச்சரிக்கை.

கேன்கன் (மெக்ஸிகோ), டிச.5: பருவநிலை மாறுபாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் உலக நாடுகள் மெத்தனம் காட்டுவதாக ஐ.நா.வின் பருவநிலை மாறுபாட்டு பிரிவின் தலைவரும், விஞ்ஞானியுமான ஆர்.கே. பச்சௌரி குற்றம்சுமத்தியுள்ளார்.
பருவநிலை மாறுபாடு விவகாரத்தில் உலக நாடுகளின் செயல்பாடு ஆமை வேகத்தில் இருக்கிறது. இது அபாயகரமானது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மெக்ஸிகோவின் கேன்கனில் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் சனிக்கிழமை கலந்து கொண்டு உரைநிகழ்த்திய பச்சௌரி இவ்விதம் குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் ஆற்றிய உரை: ஹைட்ரோ கார்பன் எரிபொருளை பயன்படுத்துவதால் கார்பன் மோனாக்ûஸடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறி சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி வருகின்றன. இதனால் மனிதர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உயிரினங்களுக்கே பயங்கர அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் பசுமை இல்ல வாயுக்களால் சந்தித்து வரும், சந்திக்க உள்ள அபாயகரம் குறித்து மனிதர்களுக்கு போதுமான விழிப்புணர்வு
இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனை உலக நாடுகளின் நடவடிக்கையில் இருந்து உணர முடிகிறது. கடந்த பல ஆண்டுகளாக பருவநிலை மாறுபாட்டுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஏராளமான மாநாட்டை கூட்டி விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆக்கபூர்வமான முடிவேதும் எட்டவில்லை. இது கவலைக்குரிய விஷயம்.

பருவநிலை மாறுபாட்டுக்கு தீர்வுகாண தாமதித்து வருவதால் அதற்கு நிச்சயம் நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதில் இருந்து தப்பிக்க முடியாது. என்றாவது ஒருநாள் பருவநிலை மாறுபாட்டுக்கு தீர்வை காண வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்படும். அப்போது இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதென்பது சில நாடுகளின் சக்தியை மீறிய செயலாக இருக்கும். இப்பிரச்னைக்கு தீர்வுகாண இப்போது தேவைப்படும் நிதியைவிட பலமடங்கு அதிகமாக தேவைப்படும். இதை உலக நாடுகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

 பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை குறைப்பதற்கு சில நாடுகள் அளவு, காலத்தை நிர்ணயித்துள்ளன. இது பாராட்டுக்குரியது. சில நாடுகள் பருவநிலை மாறுபாடு குறித்தே கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நாடுகள் 2015-ல் பருவநிலை மாறுபாடு பெரும் பிரச்னையாக தலைதூக்கும் என்பதை மறந்திடக்கூடாது.

பருவநிலை மாறுபாட்டுக்கு தீர்வு காணுதல் என்பது எளிதான காரியம் இல்லை என்பதை நான் உணருவேன். இதில் உலக நாடுகளுக்கு எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. எனினும் இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் பிரச்னைக்கு தீர்வு காணுதல் பெரிய விஷயமாக இருக்காது. இப்போது நடக்கும் இந்த மாநாட்டிலேயே பருவ நிலை மாறுபாடு குறித்து ஆக்கபூர்வமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் 2011-ல் நடைபெறும் மாநாட்டில் உலக நாடுகள் போற்றத்தக்க முடிவை எட்டும் என்றார் பச்சௌரி.நன்றி - தின மணி, தின மலர்.

6 comments:

LK said...

உங்க பதிவு வந்தாப் போதும் பேப்பர் படிக்கக் வேண்டாம்

THOPPITHOPPI said...

சனி கோளையும், அதன் வளையங்களை பூமியிலிருந்து பார்க்கும் வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது.
-------------------------------------------

ஒவ்வொரு வருஷமும் நான் இப்படித்தான் செய்திகளை நம்பி மேல பாக்குறது ஆனா ஒரு முறைகூட பார்த்தது இல்லை

அப்பாதுரை said...

LK சொன்னது சரி. இப்போ தொடர்ந்து படிக்கும் பழக்கம் வந்துவிட்டது.

இந்த செய்தி இடம் மாறியிருக்கிறதோ? ஒத்து வரவில்லையே?
>>>சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே சமுதாயத்தில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு வருகிறது.

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றிங்க எல்.கே.

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றிங்க தொப்பி....

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றிங்க அப்பாதுரை சார்.

Post a Comment