Saturday, December 18, 2010

இன்றைய செய்திகள்.- டிசம்பர் - 18 - 2010உலச் செய்தி மலர் :

இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும்: விக்கிலீக்ஸ் ஆவணம்

வாஷிங்டன்,டிச.17: உலகில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்த முயலும் வேளையில் பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கும் இந்தியாவிடம் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 அந்நாட்டு அரசுக்கு தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் அனுப்பிய கடிதத்தில் இவ்விதம் தெரிவித்துள்ளதை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.

 இந்தியாவில் பல்வேறு மதம், மொழி, இனத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் சகிப்புதன்மையுடனும்,
ஒற்றுமையுடனும் வாழ்கின்றனர். இந்திய மக்கள் தங்களது விருப்பப்படி எந்த ஒரு மதத்தையும் பின்பற்றலாம். ஒவ்வொரு மதத்தினரும் பிற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்றனர். இதனால் இந்தியாவில் பயங்கரவாதிகளின் சித்தாந்தங்கள் எடுபடுவதில்லை என்று தூதரகம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

 இந்தியாவில் கணிசமான முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் இந்து மக்களுடன் சகோதரத்துவத்துடனையே பழகுகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர். இதுபோன்ற விஷயங்கள் குறித்து இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தூதரகம் கூறியுள்ளது.

புலிகள் அச்சுறுத்தல் விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவத் தயார்: இலங்கை

கொழும்பு, டிச.17: விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக இந்தியா ராணுவரீதியிலான உதவி கேட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வெல தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களைக் கொல்ல விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத் துறை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து ரம்புக்வெலவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரம்புக்வெல, இவ்விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாகவும், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த விவகாரத்தில் இலங்கையிடம் உள்ள தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியா ராணுவ ரீதியிலான உதவி கோரினால் அதுகுறித்து அப்போது ஆய்வுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்

* பிரதமர் பதவி ஏற்காததன் மர்மம் என்ன?: புத்தகத்தில் எழுத சோனியா முடிவுலண்டன், டிச.17: 2004 மக்களவை பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குப் பெரும்பான்மை வலு கிடைத்த பிறகும் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது ஏன் என்பதை தன்னுடைய சுயசரிதையில் எழுதப் போவதாகத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

இதை "விக்கி லீக்ஸ்' வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

2006-ம் ஆண்டு கலிபோர்னியா மாநில கவர்னர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நிகரின் மனைவி மரியா சிரீவர் புதுதில்லிக்கு வந்திருந்தார். அவரைக் கெளரவிக்க அமெரிக்கத் தூதரகம் சார்பில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விருந்தில் சோனியா கலந்துகொண்டார்.

பொது நிகழ்ச்சிகளுக்கு வந்தால் அளவோடு பேசுவது, அதிகம் யாருடனும் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருப்பது என்றே இருக்கும் சோனியா காந்தி அன்று அந்த விருந்தில் அனைவரிடமும் சற்று தாராளமாகவே பேசிப்பழகினார்

பல விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்துகளை மனம் திறந்து பேசினார். சில வேளைகளில் நகைச்சுவையாகக் கூட கருத்துகளைத் தெரிவித்தார்.

""உங்கள் கட்சிக்கும் கூட்டணிக்கும் பெரு வெற்றி கிடைத்த நிலையில் பிரதமர் பதவியை ஏன் ஏற்கவில்லை?'' என்று மரியா கேட்டார்.

""பல சந்தர்ப்பங்களில் பலரும் என்னிடம் இதே கேள்வியைத்தான் கேட்கிறார்கள், உரிய காலம் வரும்போது இதற்கான பதிலை நான் சொல்வேன்; என்னுடைய வாழ்க்கையில் நடந்தவை குறித்து புத்தகம் எழுதுவேன் அப்போது இதைப்பற்றி நிச்சயம் தெரிவிப்பேன், இந்த முடிவுக்காக நான் வருந்தவில்லை'' என்று சோனியா அவருக்குப் பதில் அளித்தார்

மரியா சிரீவர் பாராட்டு: தன்னுடைய கட்சிக்கும் கூட்டணிக்கும் பெரும்பான்மை வலு கிடைத்திருந்த நிலையிலும் கூட பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்ததற்காகவும் நெருக்கடியான காலத்தில் காங்கிரஸýக்குத் தûமை ஏற்று அதை வலுப்படுத்தியதற்காகவும் சோனியாவின் துணிச்சலைப் பாராட்டுவதாக மரியா சிரீவர் தெரிவித்தார்.

* லியூ ஜியாபோவை சிறையில் சந்திக்க குடும்பத்தாருக்கு அனுமதி மறுப்பு

பெய்ஜிங்,டிச.17: இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற லியூ ஜியாபோவை சிறையில் அவரது குடும்பத்தார் சந்திக்க சீன அரசு அனுமதி மறுத்துள்ளது.

 கடந்த சில தினங்களுக்கு முன் லியூ ஜியாபோவை சந்திப்பதற்கு அவரது சகோதரர் லியூ  ஜியாகுவாங் உள்பட குடும்பத்தார் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் சிறை அதிகாரிகள் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
 இத்தகவலை லியூ ஜியாபோவின் குடும்பத்தார் தெரிவிக்கவில்லை. அவர்களது சார்பில் அந்நாட்டு மனித உரிமை மற்றும் ஜனநாயக அமைப்பு கூறியுள்ளது.

 சீன அரசின் இத்தகைய போக்கு சீனாவில் உள்ள லியூ ஜியாபோவின் ஆதரவாளர்களுக்கும், ஜனநாயக போராளிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 அமைதிக்கான நோபல் பரிசு கடந்த 10-ம் தேதி நார்வேயின் ஆஸ்லோவில் வழங்கப்பட்டது. ஆனால் லியூ ஜியாபோ விடுவிக்கப்படாததால் அவரால் விருது விழாவில் பங்கேற்க முடியவில்லை. அவரது மனைவி லியூ ஜியாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் அவராலும் விருது விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
 லியூ ஜியாபோ சார்பில் யாருமே கலந்து கொள்ளாததால் விழா அரங்கில் அவருக்காக ஒதுக்கப்பட்ட நாற்காலியில் நோபல் விருதை வைத்து கெüரவித்தனர். இந்த நிகழ்வு பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது.

 விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்லவிருந்த லியூ ஜியாபோவின் ஆதரவாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். விருது வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்குகூட லியூ ஜியாபோவின் ஆதரவாளர்களை சீன அரசு அனுமதிக்கவில்லை. அந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொலைக்காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

* அமெரிக்க தாக்குதலில் 20 தீவிரவாதிகள் சாவு

பெஷாவர்,டிச.17: பாகிஸ்தான் நாட்டின் கைபர் பழங்குடிகள் பகுதி மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 20 தீவிரவாதிகள் இறந்தனர், 7 பேர் காயம் அடைந்தனர்.
கைபர்-பக்டூன் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை பகலில் இந்தத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலுக்கு "டுரோன்' என்று அழைக்கப்படும் ஆள் இல்லாத உளவு விமானத்தை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தியது.

ஒரு மணி நேரத்துக்குள் இருமுறை தாக்குதல் நடத்தி இந்தத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தேசியச் செய்தி மலர் :

* லஷ்கரைவிட இந்து தீவிரவாத குழுக்களே மிகப்பெரும் அச்சுறுத்தல்: ராகுல் காந்தி

புதுதில்லி, டிச.17: லஷ்கர்- இ- தோய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளைவிட இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் 2009 ஜூலையில் நடந்த விருந்தின்போது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் குறித்தும், லஷ்கர்-இ-தோய்பாவின் நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் அமெரிக்க தூதர் திமோதி ரோமர் விசாரித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு ராகுல் காந்தி, இந்திய முஸ்லீம் சமுதாயத்தில் உள்ள சில குழுவினரும் லஷ்கர்-இ-தோய்பாவை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் முஸ்லீம் சமுதாயத்தினருடன் மோதலையும், பதற்றத்தையும் உருவாக்கும் இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சி இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என ராகுல் காந்தி எச்சரித்ததாக அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராகுல் குறித்த விக்கிலீக்ஸ் வெளியீட்டில் சதிச்செயல் இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உண்மையை ஆராய்வோம். இதன் பின்னணியில் சில சதிச்செயல்கள் இருக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்தார்.

* 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் ரஷிய அதிபர்

புது தில்லி, டிச.17: இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு டிசம்பர் 20-ம் தேதி ரஷிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் வருகை தரவுள்ளார்.

இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் எம். கடாகின் கூறியதாவது: மெத்வதேவின் வருகையின்போது இந்தியாவுடன் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகறது. மேலும் 2 அணு மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெறும்.

2 நாள் பயணத்தின்போது ஆக்ரா, மும்பைக்கு மெத்வதேவ் செல்வார். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்காக மெத்வதேவ் அப்போது இரங்கல் தெரிவிப்பார் என்றார் அவர்

* தேர்தல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதில் புதிய விதிகள் அறிமுகம்

புது தில்லி, டிச. 17: தேர்தல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதில் புதிய விதிகளை அமல்படுத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம் பேரவைத் தேர்தலின்போது புதிய விதிகள் அமலாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

வேட்பாளர்கள் தங்கள் சொத்து ஆவணங்களைத் தாக்கல் செய்யும்போது வருமானத் வரித் துறையின் புலனாய்வு பிரிவின் உதவியோடு அந்த ஆவணங்களின் தகவல்கள் குறித்து ஆராயப்படும்.
தேர்தல் நேரத்தில் வருமான வரித் துறையினர் விமான நிலையங்களில் சோதனையில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் வான்வழியாக பணம் கைமாறுவது தடுக்கப்படும்.

ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் தனித்தனி செலவுக் கணக்கு பதிவேடு பராமரிக்கப்படும்.
மாநிலத்தின் தலைமை அலுவலகம், மாவட்ட தலைநகரங்களில்  24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் செயல்படும்.

பிகார் பேரவைத் தேர்தலின்போது இந்த விதிகள் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டதால் முறைகேடுகள் பெருமளவில் குறைந்தன. எனவே, இனிவரும் தேர்தல்களில் புதிய விதிகளை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

* இந்திய ஊடகங்கள்: சீனப் பிரதமர் அதிருப்தி

புது தில்லி, டிச.17: இந்திய ஊடகங்கள் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளார் சீன பிரதமர் வென்ஜியாபோ.

இந்தியா-சீனா இடையிலான பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி மிகுந்த அதிருப்தி அளிக்கின்றன. இருதரப்பு உறவையே பாதிக்கும் வகையில் செய்திகள் வெளியாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் செல்லும்முன் பத்திரிகை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிடம் வென்ஜியாபோ பேசினார். அப்போது இக்கருத்தை அவர் வெளியிட்டார். இந்தியாவில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தி இரு நாடுகளிடையே நட்பை வளர்க்க வேண்டும்.

இந்திய-சீன எல்லையில் இது வரை ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடித்தது கிடையாது, ஆனாலும் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதாக ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
இதனால் இரு நாடுகளிடையே ஏற்பட்ட விரிசலை நிவர்த்தி செய்ய இரு தலைவர்களும் பேச்சு நடத்த வேண்டியுள்ளது என்றார் வென்ஜியாபோ.

வெள்ள அபாய ஒப்பந்தம்: சட்லஜ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்கள் குறித்த தகவலை இந்தியாவுக்கு அளிக்க சீனா முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் தில்லியில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு திபெத் பகுதியில் பெய்யும் மழையளவைக் கண்காணிக்கும் மையத்தை சீனா அமைக்கும். இதன் மூலம் சட்லஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறித்த தகவலை முன்கூட்டியே சீனா அளிக்கும்

இந்த ஒப்பந்தத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு திபெத் பகுதியில் பெய்யும் மழையளவைக் கண்காணிக்கும் மையத்தை சீனா அமைக்கும். இதன் மூலம் சட்லஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறித்த தகவலை முன்கூட்டியே சீனா அளிக்கும்.

இதற்காக ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் தொகையை இந்தியா, சீனாவுக்கு அளிக்கும். இந்தத் தொகை மூலம் மழை கண்காணிப்பு மையத்தை சீனா நிர்வகிக்கும். ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் வரையான காலத்தில் தினசரி இரண்டு முறை சட்லஜ் ஆற்றில் வெள்ள நிலைமை குறித்த தகவலை சீனா அளிக்கும்.

சட்லஜ் நதிநீரை பிரதானமாகக் கொண்டு 6 நீர்மின் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்தத் தகவல் மூலம் அவற்றை பாதுகாப்பாக செயல்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல பிரம்மபுத்திரா நதியின் வெள்ள அபாயம் குறித்த தகவலை அளிப்பதற்கும் சீனாவுடன் இந்தியா கடந்த ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கும் ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்தை இந்தியா அளிக்கும்.

நல்லெண்ண நடவடிக்கையாக இதுபோன்ற வெள்ள அபாய தகவலை பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு இந்தியா இலவசமாக அளிக்கிறது

* தமிழக அரசு நிர்ணயித்த பள்ளி கல்விக் கட்டணம் செல்லும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி, டிச. 17: தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழக அரசு நியமித்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி, தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது.
இதை எதிர்த்து தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் கல்விக் கட்டண நிர்ணயத்துக்கு இடைக்கால தடை விதித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்சு, இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்தது. நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை நடப்பு ஆண்டுமுதலே நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தனியார் பள்ளிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் சதாசிவம், சௌகான் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணம் செல்லும் என்று கூறி தனியார் பள்ளிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மாநிலச் செய்தி மலர் :

தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு தயாரிப்பு தனியார் வசம்


சென்னை, டிச. 17: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகளை தனியார் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் அலட்சியத்தால் தொலைதூரங்களில் உள்ள கிராமங்களுக்கு உரிய நேரத்தில் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தொடர்கதையாகி வரும் இந்தப் பிரச்னைக்கு தேர்வாணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளும், துறைகள் ரீதியான தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்தத் தேர்வுகள் நடத்தப்படும்.

கிராம நிர்வாக அலுவலர் போன்ற தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் சேரும். அதுபோன்ற தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்ட உடன் விண்ணப்பங்களை பிரிக்கவும், அவற்றைச் சரிபார்க்கவும் தேர்வாணையத்தின் சார்பில் அதிகாரிகள் கொண்ட பிரிவுகள் உருவாக்கப்படும். இதற்கு தமிழக அரசிடம் அனுமதி கோர வேண்டும். அரசு எத்தனை பிரிவுகளை அனுமதிக்கிறதோ அந்த அளவுக்கு பிரிவுகள் அமைக்கப்படும்.

* எஞ்சியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலவச மின் இணைப்பு: மின் வாரியம் பதில்

சென்னை, டிச.17: எஞ்சியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (டிசம்பர் 31) இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின் இணைப்பு கோரி பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் 2 லட்சம் விவசாயிகளுக்கு நான்கு கட்டமாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

முதல் கட்டமாக டிசம்பர் 31-ம் தேதிக்குள் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதன்படி டிசம்பர் 16-ம் தேதி வரையில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின் இணைப்பு வழங்கப்படுமா என்பது குறித்து தினமணியில் டிசம்பர் 17-ம் தேதி செய்தி வெளியானது

* மழை, வெள்ள பாதிப்புகளைச் சீரமைக்க ரூ. 230 கோடி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கல்குணம் கிராமத்தில் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் அழுகிய நெற்பயிரை மத்தியக் குழுவிடம் வெள்ளிக்கிழமை காண்பிக்கும்

சென்னை, டிச. 17: கடலூர், நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளைச் சீரமைக்க சுமார் ரூ. 230 கோடி தேவை என்று மத்தியக் குழுவினரிடம் மாவட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த மாவட்டங்களில் மத்திய குழுவினர் தங்களது ஆய்வை வெள்ளிக்கிழமை தொடங்கினர். மத்திய திட்டக்குழு முதுநிலை ஆராயச்சி அலுவலர் ஏ.முரளீதரன், மத்திய நிதி அமைச்சக உதவி இயக்குநர் ஜிதேந்திரகுமார், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்புச் செயலர் எஸ்.எஸ். பிரசாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடலூர் மாவட்டத்தில் தங்களது ஆய்வை மேற்கொண்டனர்.

முன்னதாக, வியாழக்கிழமை இரவு அவர்கள் நெய்வேலி வந்தனர். வெள்ளிக்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டு கடலூர் சென்றனர்.

குறிஞ்சிப்பாடியை அடுத்த கல்குணம், மருவாய், மருதூர், பூங்குடி, வீராணம் ஏரி, சேத்தியாத் தோப்பு, லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வெள்ளப் பெருக்குக்குக் காரணமான வீராணம் ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு ஆகிய பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளச் சேதப்பகுதிகளையும், நீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்கள், வெற்றிலை, மஞ்சள், கருணை உள்ளிட்ட பணப்பயிர்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

57 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்: கடலூர் மாவட்டத்தில் மட்டும் மழை வெள்ளத்தால் 57 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் சேதம் அடைந்து இருப்பதாக அவர்கள் கூறினர். இதுகுறித்து, மத்தியக் குழு தலைவர் விஸ்வநாதன், உறுப்பினர் முரளீதரன் ஆகியோர் கூறியது

வர்த்தகச் செய்தி மலர் :

* ஹீரோ - ஹோண்டா நிறுவனங்களின் கூட்டணி முறிந்தது

சென்னை : கடந்த 26 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வந்த, ஹீரோ-ஹோண்டா நிறுவனங்களின் கூட்டணி முடிவடைந்தது. இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக, ஹீரோ-ஹோண்டா இருந்து வருகிறது. இதில், 'ஹீரோ' இந்திய கம்பெனி; 'ஹோண்டா' ஜப்பான் நாட்டு கம்பெனி. இரு நிறுவனங்களும், 1986ல் ஒன்றாக இணைந்து செயல்பட துவங்கியது.

இந்நிறுவனத்தின், 'ஸ்பெலண்டர்' மோட்டார் சைக்கிள், விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. 'டூவீலர்' தயாரிப்பில் நீண்ட காலமாக இந்நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், இரு நிறுவனங்களும் தனித்தனியாக பிரிவது என முடிவெடுத்துள்ளன. அதனால், 26 ஆண்டுகளாக நீடித்து வந்த கூட்டணி, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர் ஸ்ரீதர் கூறியதாவது: கடந்த 26 ஆண்டுகளாக, 'ஹீரோ' நிறுவனத்துடன் ஒன்றாக செயல்பட்டு வந்த, 'ஹோண்டா' நிறுவனம், தன் வசமுள்ள 26 சதவீத பங்குகளை, 'ஹீரோ' நிறுவனத்திற்கு இன்றைய பங்கின் விலையில், விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதனால், நிறுவனத்தின் பணப்புழக்கத்தில் எந்த பிரச்னையும் இருக்காது.
பங்குகள், எதிர்காலத்தின் அடிப்படையில், அதாவது கடன் பத்திரங்கள் வாங்குவது போல் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, 'சுசுகி, எஸ்கார்ட்ஸ்' போன்ற நிறுவனங்கள் பிரிந்துள்ளன. இந்திய டூவீலர் வாகனச் சந்தையில் மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதால், நிறுவனங்கள் தங்களது சொந்த பிராண்டில், வாகனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்ய விரும்புகின்றன. ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்ட நிலையில், வாகன உற்பத்தி செய்வதில் எந்த சிக்கலும், 'ஹோண்டா' நிறுவனத்திற்கு இல்லை.

வரும் 2014 வரை, ஹீரோ ஹோண்டா பிராண்டில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த இரு நாட்களாக பங்குகளின் விலையில் மாற்றமில்லை. ஆனால், எதிர் காலத்தில், 'ஹீரோ' நிறுவனம் ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். 'ஹோண்டா' நிறுவனம், ஏற்கனவே தனது பிராண்டில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், இத்துறையில் முதலீடு செய்து வருகின்றன. இதனால், உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள், பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.


விளையாட்டுச் செய்தி மலர் :

* வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா (366/2)

செஞ்சுரியன், டிச.17: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க வீரர்கள் காலிஸ் 102 ரன்களுடனும், ஆம்லா 116 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை தனது முதல் இன்னிங்ûஸத் தொடர்ந்தது இந்திய அணி. மோர்கல் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் கேப்டன் தோனி ஆட்டமிழந்தார். இதையடுத்து இரண்டாவது நாளில் ரன் கணக்கைத் தொடங்காமலேயே இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
வலுவான தொடக்கம்:

பின்னர் தனது முதல் இன்னிங்ûஸத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஸ்மித், பீட்டர்சன் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 111 ரன்களை எட்டியபோது ஸ்மித் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பீட்டர்சனுடன் ஆம்லா ஜோடி சேர்ந்தார்.

பீட்டர்சன் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் காலிஸ் ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி 78 பந்துகளில் அரைசதமடித்தார் ஆம்லா. அவரைத் தொடர்ந்து காலிஸýம் 73 பந்துகளில் அரைசதமடித்தார்.
இதனால் அணியின் ஸ்கோர் 60 ஓவர்களில் 250 ரன்களைக் கடந்தது.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய காலிஸ் 130 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் சதமடித்தார். அடுத்த சில நிமிடங்களில் ஆம்லாவும் 165 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது. காலிஸ் 102 ரன்களுடனும், ஆம்லா 116 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில்

மூலவர் : ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்)
  உற்சவர் : பொன்னப்பன்
  அம்மன்/தாயார் : பூமாதேவி
   -
  தீர்த்தம் :  அஹோத்ரபுஷ்கரணி
  ஆகமம்/பூஜை :  வைகானஸம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருவிண்ணகரம்
  ஊர் :  திருநாகேஸ்வரம்
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு


பாடியவர்கள்:
 
 
மங்களாசாஸனம்

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல் வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை இளங்குமரன் தன் விண்ணகர்.

-பேயாழ்வார்


 தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. தாயார் அவதரித்த தலம்
 
இத்தலத்திற்கு அருகில் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் அமைந்துள்ளது.

108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம். திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டானது போல் இப்பெருமானுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு.

தலபெருமை:

 திருமால், மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று நடந்தது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில், திருமால் சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த விளக்கில் மகாலட்சுமி எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் பார்த்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆவணி திருவோணத்தன்று காலையில் பெருமாள் கருட வாகனத்தில் "உதயகருடசேவை' அருள்கிறார். பின், "தெட்சிண கங்கை' என்னும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுகிறார். அதன்பின்பு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்கு சுவாமிக்கு காட்டிய தீபத்தின் முன்னால், அருள்வாக்கு சொல்லும் வழக்கமும் இருக்கிறது.

பஞ்சகோல சுவாமி: இத்தலத்தில் சுவாமி பாதம் நோக்கி காட்டிய வலது கையில் கீதை உபதேசமான, "மாம் ஏகம் சரணம் விரஜ' என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு "என்னை சரணடைபவர்களை காப்பேன்' என்று பொருள். நம்மாழ்வார் இவரை "யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர்' என்ற பொருளில் மங்களாசாசனம் செய்துள்ளார். அவருக்கு  திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன் (பிரகார சன்னதி), முத்தப்பன் என ஐந்து கோலங்களில் திருமால் காட்சி தந்தருளினார். இவர்களில் முத்தப்பன் சன்னதி தற்போது இல்லை. மணியப்பன் சன்னதியில் சுவாமியுடன் சங்கு, சக்கரம் அருகிலேயே இருப்பது விசேஷமான தரிசனம்.இக்கோயிலில் நைவேத்யங்கள் உப்பில்லாமலேயே தயாரிக்கப்படுகிறது. உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வது பாவத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் என்பதால், இங்கு ஆயுள்விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் நடக்கிறது. இத்தலத்திலுள்ள அஹோத்ர புஷ்கரணி மிகவும் விசேஷமானது. இதற்கு "பகலிராப்பொய்கை' என்றும் பெயருண்டு. இந்த குளத்தில் இரவு, பகல் எந்த நேரமும் நீராடலாம் என்பது சிறப்பம்சம்.

மனைவியை பிரியாத பெருமாள்: பொதுவாக பூமாதேவி பெருமாளுக்கு இடது புறத்தில் இருப்பாள். ஆனால், அவர் அவளை இங்கு மணம் முடித்த தலம் என்பதால், சுவாமிக்கு வலதுபுறம் இருக்கிறாள். பூமாதேவியை, திருமாலுக்கு, மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது ஒருபோதும் தன் மகளை விட்டு பிரியக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். எனவே, பெருமாள் இங்கு தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.

தல வரலாறு:

மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், ""எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்,'' என்று கேட்டாள். மகாவிஷ்ணு அவளிடம், ""நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்,'' என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். லட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், ""சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது,'' என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள். இதனால் தான், எல்லாப் பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

திருவிழா:
 
  புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம்.
 

திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

எப்போதும் நிதானமாக இருங்கள் - புத்தர்.

* மனிதன் நல்ல எண்ணங்களுடன் செயல்புரிந்தால் அவனைப் பின்தொடர்ந்து இன்பம் நிழல்போல வரும்.
* தூங்க முடியாமல் விழித்திருப்பவனுக்கு இரவு கொடியதாகும். களைத்துப் போனவனுக்கு செல்லும் வழி மலைப்பைத் தரும். அதுபோல தர்மத்தை பின்பற்றாதவனுக்கு வாழ்க்கை துன்பத்தைத் தரும்.

* வெறுப்பு, கடுஞ்சொல் இவற்றிலிருந்து விலகி நில்லுங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் அனைவரையும் நேசித்து மகிழுங்கள். எந்த நிலையிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.

* நாவின் ருசிக்காக உயிர்க்கொலை செய்பவன் வாழும்போது மட்டுமில்லாமல் மரணத்திற்குப் பின்னும் துன்பத்தை அடைவான்.

வினாடி வினா :

வினா - உலகிலேயே அதிகமான வருட மழை பொழிவைப் பெறும் பகுதி எது ?

விடை - சிரபுஞ்சி.


இதையும் படிங்க ;மொகரத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா; சமூக ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு

திருப்புவனம்: மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மொகரம் தினத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா திருப்புவனம் அருகே நடந்தது.இந்த கிராமத்தில் நான்குதலைமுறையாக இந்த விழா நடந்துவருகிறது. திருப்புவனத்திலிருந்து 6 கி.மீ., தூரத்தில் உள்ள முதுவன்திடல் ஊராட்சியில் 500 இந்துகுடும்பங்கள் உள்ளன. ஆரம்பத்தில் முஸ்லீம்கள் வசித்ததால் இங்கு பாத்திமா நாச்சியார் தர்கா, பள்ளிவாசல் உள்ளது. காலப்போக்கில் முஸ்லீம்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்ததால், இந்துக்குடும்பங்களை சேர்ந்தோர் பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலை கோவிலாக வழிபடுகின்றனர்.

கிராம காவல்தெய்வமாகவும், வேண்டுதல் நிறைவேற்றும் தெய்வமாகவும் வழிபடுகின்றனர். இதற்காக இந்துக்கள் முறைப்படி மொகரம்பண்டிகையையொட்டி, காப்புக்கட்டி 10நாள் விரதமிருந்து தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.அமாவாசை முடிந்து மூன்றாம்நாளில் பிறைதெரிந்தவுடன் காப்புக்கட்டுதலுடன் தீமிதி திருவிழா துவங்குகிறது. 9நாள் முடிவில் அதிகாலையில் மொகரம்பண்டிகையன்று தீமிதிக்கின்றனர்.

எடுத்து உடலில் கொட்டுகின்றனர்: வேண்டுதல் நிறைவேற நேர்த்தி கடன் செலுத்தும் பெண்கள், "பூமொழுகுதல்' என தீக்கங்குகளை, ஈரத்துணியால் உடல் முழுவதும் போர்த்தி உட்காருகின்றனர். அவர்கள்மீது குழியில் கிடக்கும் "நெருப்பாய்' இருக்கும் தீக்கங்குகளை "பாத்திமா, பாத்திமா' என்ற கோஷத்துடன் மண்வெட்டியில் எடுத்து உடலில் கொட்டுகின்றனர்.

"பாத்திமா' என சூட்டி வெற்றிவாகை : இக்கிராமத்தினரின் காவல்தெய்வமான பாத்திமாநாச்சியாருக்கு முதல்காணிக்கை செலுத்துவதும், எந்த விளைபொருள் விளைந்தாலும் முதலில் படைப்பதும் இன்றளவும் தொடர்கிறது. இங்குள்ள கபாடி, கிரிக்கெட், வாலிபால் குழு, மகளிர் குழுக்கள் பெயரையும் "பாத்திமா' என சூட்டி வெற்றிவாகை சூடுகின்றனர். இந்து,முஸ்லீம்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் இந்த தீமிதி திருவிழாவைக்காண வெளிநாடு மற்றும் பல மாநிலங்களிலிருந்து வருகின்றனர்.
நன்றி - தின மணி, தின மலர்.

5 comments:

LK said...

nandri

ஜோதிஜி said...

ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுத்து நீங்கள் கொடுக்கும் செய்திகள் என்னைப் போன்றவர்களுக்கு வரம். இந்திய மக்களின் சகிப்புத்தன்மை வரம் என்பதைப் போலவே இதை வைத்து அரசியல்வாதிகள் நடத்தும் விளையாட்டுகள் சாபமே?

ஹேமா said...

செய்திகளின் தொகுப்பு அருமை!

அப்பாதுரை said...

உங்கள் செய்தித் தொகுப்பு காலைக் காபியுடன் பழக்கமாகி விட்டது. நன்றி.

பாத்திமா நாச்சியார் - அட! இதெல்லாம் பரவலாகத் தெரியாமலே போய்விடுகிறதே! மழை நிவாரணத்துக்கு 270 சொச்ச கோடி தானா? செல்போனுக்கு லஞ்சமே லட்சக்கோடிகள் என்றார்களே? இந்த 270 கோடி அரசியல்வாதிகள் பாக்கெட்டுக்கு பத்தாதே? மக்களுக்கு என்ன போய்ச்சேரும்?

அப்பாதுரை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post a Comment