Wednesday, December 1, 2010

இன்றைய செய்திகள். - டிசம்பர் - 01 - 2010.

*உலகச் செய்தி மலர் :*
 
** தேவைப்பட்டால் யுரேனியத்தை அணுகுண்டுகளாக மாற்றுவோம்: வட கொரியா எச்சரிக்கை* 
சியோல், நவ.30: நாங்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யுரேனியத்தை
செறிவூட்டும் ஆலையை நிறுவி வருகிறோம் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
யுரேனியத்தை செறிவூட்டும் ஆலையை நிறுவி வருவதாக வட கொரியா முதல் தடவையாக
சர்வதேச அரங்கில் ஒப்புக்கொண்டுள்ளது. 

தேவைப்பட்டால் தங்கள் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணுகுண்டுகளாக
தயாரிக்கவும் தயங்கமாட்டோம் என்றும் அந்நாடு மிரட்டல் விடுத்துள்ளது
சமீபத்தில் வட கொரியா-தென் கொரியாவுக்கு இடையே நடந்த பீரங்கிச் சண்டையால் அங்கு
போர் பதற்றம் உருவாகியது. இதைத்தொடர்ந்து தென் கொரியாவும், அமெரிக்காவும்
மஞ்சள் கடலில் கூட்டு கடற்படை போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது பதற்றத்தை
அதிகரிக்க வைத்துள்ளது. இந்நிலையில் தங்களிடம் செறிவூட்டப்பட்ட யுரேனியம்
உள்ளதாக வட கொரியா பகிரங்கமாகவே அறிவித்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரிக்க
வைத்துள்ளது. 

** ஜப்பானில் நிலநடுக்கம்* 

டோக்கியோ, நவ.30: ஜப்பானில் தெற்கு கடற்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை
நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுமானியில் 6.9 ஆக பதிவானது. இதனால்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டோக்கியோவின்
புறநகர் பகுதிகளில் கட்டடங்கள் ஆட்டம் கண்டன.
 
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டது பற்றி தகவல் இல்லை. 
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்ûலை என தெரிவிக்கப்பட்டது.
இந்திய நேரப்படி காலை 8.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின்
தென்முனையிலிருந்து 480 கி.மீ. தொலைவில் ஒகாசாவாரா தீவுக்கு அருகே நிலநடுக்கம்
மையம் கொண்டிருந்தது
இந்த நிலநடுக்கம் ஜப்பான், அமெரிக்க பூகம்பவியல் மையங்களில் முறையே 6.9, 6.6 என
வெவ்வேறு அளவுகளாக பதிவானதற்கான காரணங்கள் உடனடியாகத் தெரியவில்லை. 
ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். 1995-ம் ஆண்டில் 7.2 என்ற
அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேற்கு துறைமுகமான கோபே நகரில் 6,400 பேர்
உயிரிழந்தனர். 

திபெத்தில்...: திபெத்தின் கிழக்குப்பகுதியில் தலைநகர் லாஸôவிலிருந்து 75
கி.மீ. தொலைவில் டாம்ஜுங் மாவட்டப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில்
நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிர்சேதம், பொருள்சேதம் ஏற்பட்டதாக உடனடியாக
தகவல் கிடைக்கவில்லை. பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மீட்புக்
குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என திபெத் நிலநடுக்க பதிவு மைய
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


** விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் மீது உளவு பார்த்த குற்றத்தின் கீழ் வழ்க்குப்
பதிவு.*
 
வாஷிங்டன், நவ.30: ராணுவ ரகசியங்களை வெளியிடும் விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர்
ஜூலியன் அசாஞ்சே மீது உளவு பார்த்த குற்றத்துக்கான வழக்குப் பதிவு செய்யப்படும்
என்று தெரிகிறது. அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை சட்ட விரோதமாகக் கைப்பற்றி
அவற்றை அவர் இணையதளத்தில் வெளியிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்படலாம். 
இத்தகவலை வாஷிங்டன் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 

அமெரிக்க அதிகாரிகள், இணையதளத்தின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகிக்கும்
அசாஞ்சேயிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

குற்றவியல் சட்டத்தின்படி நடைமுறை விதிகளை அசாஞ்சே மீறியதாக "வாஷிங்டன் போஸ்ட்'
பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த ஆவணங்கள் வைத்துள்ள ஒவ்வொருவரிடமும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை
நடத்தி வருவதாகத் தெரிகிறது. அத்துடன் விக்கி லீக்ஸ் இணையதளத்துக்கு மிகவும்
ரகசியமான ஆவணங்களை அளித்தவர்கள் குறித்த விவரமும் ஆராயப்பட்டது. இதற்காக
இந்நிறுவன பணியாளர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளது. 

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அதிகாரிகள் இந்த விசாரணையை
மேற்கொண்டுள்ளனர்.

 
*தேசியச் செய்தி மலர் :* 

** குஷ்வந்த் சிங் புத்தகம் வெளியீடு*
 
புது தில்லி, நவ.30: பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகம்
தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. 

இந்தப் புத்தகத்தை பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குருசரண் கெüர்
வெளியிட்டார். "தி சன்செட் கிளப்' என்று புத்தகத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
புத்தக வெளியீட்டு விழாவில் 96 வயதான குஷ்வந்த் சிங் பேசியதாவது:
 
இதுதான் என்னுடைய கடைசிப் புத்தகம். எனக்கு இப்போது 96 வயதாகிறது. நான் இன்னும்
எவ்வளவு நாள் இருப்பேன் என்று தெரியாது. 100 ஆண்டு வாழ்ந்தால் நான் ஒரு
அதிர்ஷ்டக்காரன் என்றார் அவர்.
 
ஏராளமான புத்தகங்கள், நாவல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார் குஷ்வந்த் சிங்.
2002-ல் தனது சுயசரிதையை எழுதினார் குஷ்வந்த் சிங்.
 
** தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு நிதி குறைப்பு* 

புதுதில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வுக்காக இந்த
நிதியாண்டில் இதுவரை ரூ.77 லட்சத்தை மட்டுமே அரசு செலவு செய்திருக்கிறது. தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எஸ்.சி அகர்வால் என்பவர் செய்திருந்த
மனுவுக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது. அதில் கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.5
கோடி செலவிடப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பி்ல் அளிக்கப்பட்ட தகவலில்
2008-09-ம் ஆண்டில் ரூ.1.19 கோடி செலவிடப்பட்டது, கடந்த நிதியாண்டில் 4.91 கோடி
செலவிடப்பட்டிருப்பதாகவும் இந்த நிதியாண்டில் இதுவரை ரூ.77 லட்சம் மட்டும்
செலவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் அமலுக்கு
வந்த 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையிலும், பெரும்பான்மையான மக்களுக்கு
இந்தச் சட்டத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்ற பலமான
கருத்தும் நிலவுகிறது. 

** இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் விக்கிலீக்ஸுகு கண்டனம்* 

புது தில்லி, நவ. 30: தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை
அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியிட்டதாகக் கூறி விக்கி லீக்ஸ் இணையதளத்துக்கு
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோத்தி ரோமர் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இது குறித்து தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "தேச
பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை வெளியிடுவதை அமெரிக்கா கண்டிக்கிறது. 
இந்தச் செயல் வருத்ததிற்கும் கண்டனத்திற்கும் உரியது. அவ்வாறு வெளியிட்டதன்
மூலம் இந்த இணையதளம் அடிப்படை மனித உரிமையையும் அர்ப்பணிப்பு உணர்வுடன்
செயல்பட்டவர்களின் வேலைத் திறனையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. 

பொறுப்புள்ள, ஒளிவு மறைவற்ற, வெளிப்படையாகச் செயலாற்றக் கூடிய அரசாங்கத்தையே
அமெரிக்காவிலும் உலக நாடுகளிலும் அதிபர் ஒபாமா ஆதரித்து வந்திருக்கிறார். ஆனால்
விக்கிலீக்ஸின் செயல்பாடு ஒபாமாவின் லட்சியத்துக்கு எதிராக உள்ளது.
 
ஜனநாயக, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்காக பாடுபடுவது, பயங்கரவாதத்துக்கு
எதிரான நடவடிக்கை, கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய இரு
தரப்புக்கும் பொதுவான சவால்களை அமெரிக்காவுடன் இணைந்து எதிர்கொள்ளும்
இந்தியாவின் அணுகுமுறையை அமெரிக்கா பெரிதும் மதிக்கிறது' என்று அந்த
அறிக்கையில் திமோத்தி ரோமர் தெரிவித்துள்ளார். 
*
*
*மாநிலச் செய்தி மலர் :* 

** தமிழக அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்வு*
 
சென்னை, நவ. 30: தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்
மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் விவரம் (செவ்வாய்க்கிழமை
நிலவரப்படி):

அணைகள் விவரம் கொள்ளளவு நீர் இருப்பு நீர் வரத்து

(அடி) (கன அடியில்)
மேட்டூர் 120 118.51 11,326
பவானிசாகர் 105 87.32 2,351
அமராவதி 110 88.3 2,670
பெரியாறு 152 131.1 2,374
வைகை 71 69.88 2,856
பாபநாசம் 143 83.9 4,895
மணிமுத்தாறு 118 72.25 2,354
பெருஞ்சாணி 77 75.13 948
சாத்தனூர் 119 117 2,234
சோலையாறு 160 154.3 714
ஆழியாறு 120 119.7 457 


** டிசம்பர் 4-ல் குரூப் 1 இலவச மாதிரி தேர்வு* 

சென்னை,நவ.30: சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோகஸ் அகாதெமி
குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை சனிக்கிழமை (டிச.4)
நடத்தவுள்ளது. 

குரூப்-1 முதல் நிலைத் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. அதில் ஃபோகஸ் அகாதெமி மாணவர்கள் 43 பேர்
வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வெள்ளிக்கிழமை
(டிச. 3) முதல் தொடங்கவுள்ளது.
 
மேலும் முதன்மைத் தேர்வினை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மாதிரித்
தேர்வும் நடைபெறவுள்ளது. கலந்து கொள்ள விரும்பும், தகுதியுள்ள மாணவர்கள் தங்கள்
பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 94427 22537,
044-3200 0809.
 
*வர்த்தகச் செய்த மலர் :* 

*பொருளாதார வளர்ச்சி 8.9 சதவீதமாக உயர்வு* 

புது தில்லி, நவ.30: நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின்
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்
மூலம் நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக உயரும் என்ற
நம்பிக்கை அதிகரித்துள்ளது. சேவைத் துறையில் ஏற்பட்ட கணிசமான வளர்ச்சி
ஒட்டுமொத்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. சேவைத் துறை இரண்டாம் காலாண்டில்
9.6 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தது.
 
இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய
நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் கணித்திருந்தது. ஆனால் எதிர்பார்ப்பையும்
மீறி மிக அதிக அளவுக்கு வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
 
பொருளாதார வளர்ச்சி விகிதம் இதே அளவுக்கு இருந்தால் நடப்பு நிதி ஆண்டில்
ஒட்டுமொத்த வளர்சி விகிதம் நிச்சயம் 8.75 சதவீதத்துக்குக் கீழ் குறையாது என்று
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்தார்.
 
இரண்டாம் காலாண்டில் வேளாண் துறை 4.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. முந்தைய
காலாண்டில் எட்டியதைக் காட்டிலும் 1 சதவீதம் கூடுதலாகும். உற்பத்தித் துறை
வளர்ச்சி 9.8 சதவீதமாகும். முந்தைய ஆண்டு இது 8.4 சதவீதமாக இருந்தது. முதல்
காலாண்டில் 13 சதவீதமாக இருந்த வளர்ச்சி இப்போது 9.8 சதவீதமாக சரிந்துள்ளது.
உற்பத்தித் துறையில் முதலீடுகள் கணிசமாக குறைந்ததே இத்துறை வளர்ச்சிக்
குறைவுக்கு முக்கியக் காரணமாகும்.
 
** சென்செக்ஸ் 116 புள்ளிகள் ஏற்றம்* 

மும்பை, நவ.30: மும்பை பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.
குறியீட்டெண் சென்செக்ஸ் ஏறக்குறைய 169 புள்ளிகள் சரிவுடன் இன்றைய வர்த்தகம்
தொடங்கியது. பின்னர் நண்பகலுக்கு மேல் படிப்படியாக உயரத்தொடங்கிய சென்செக்ஸ்
இறுதியில் 116 புள்ளிகள் உயர்வுடன் 19,521 புள்ளிகளில் முடிவடைந்தது. 
தேசிய பங்குச்சந்தையிலும் ஆரம்ப வர்த்தகத்தில் குறியீட்டெண் நிஃப்டி 56
புள்ளிகள் வரை சரிந்தது. பின்னர் ஏற்றம் கண்டு வர்த்தக இறுதியில் 32.70
புள்ளிகள் அதிகமாக 5862.70 புள்ளிகளில் முடிவடைந்தது. 

*விளையாட்டுச் செய்தி மலர் :* 

*காமன்வெல்த் போட்டி முறைகேடு: 11 இடங்களில் சிபிஐ சோதனை* 
புது தில்லி, நவ.30: காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நிகழ்ந்த மிகப் பெரிய
முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ போலீஸôர், செவ்வாய்க்கிழமை 11
இடங்களில் சோதனை நடத்தினர். இதில் நான்கு பேரின் வீடுகளிலும் சோதனை
நடத்தப்பட்டது. இவர்கள் நால்வரும் போட்டி ஏற்பாட்டுக்குழு தலைவராயிருந்த சுரேஷ்
கல்மாடியின் நெருங்கிய
நண்பர்களாவர். 

 107 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை அளிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட
ஒப்பந்தங்களில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டு
நான்குபேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
காமன்வெல்த் போட்டி முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்கும் கருவிகளை வாங்குவதில்
ஸ்விட்சர்லாந்து நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக நிகழ்ந்த முறைகேடு குறித்து
முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழுவின் செயலர் லலித் பனோட், இயக்குநர் ஜெனரல்
வி.கே. வர்மா, ஆர்.கே. சசேத்தி, இணை இயக்குநர் ஜெனரல் (ஒருங்கிணைப்பு) சங்கீதா
வெலிங்கர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன. தில்லியைச் சுற்றி
அமைந்துள்ள குர்காவ்ன், நொய்டா பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக இப்போது
மூன்றாவது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர்
இங்கிலாந்து ராணியிடமிருந்து பெறப்பட்ட "பேட்டன்', இந்தியாவுக்குக் கொண்டு
வருமுன் கடந்த ஆண்டு லண்டனில் நிகழ்ந்த தொடர் ஓட்டத்திற்கு செலவிட்ட தொகை
தொடர்பாக மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இப்போது முதல் முறையாக கல்மாடியின் நெருங்கிய நண்பர்களான பனோட், வர்மா ஆகியோரது
வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமலாக்கப் பிரிவு
அதிகாரிகள் வர்மாவிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர். பனோட்டின்
நடவடிக்கைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
*ஆன்மீகச் செய்தி மலர் :*
 
மூலவர் :  மூகாம்பிகை 
தீர்த்தம் :  அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு
ஆகமம்/பூஜை
:  -
பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
 -
ஊர் :  கொல்லூர்
மாவட்டம் : உடுப்பி
மாநிலம் :  கர்நாடகா 
பாடியவர்கள் - ஆதி சங்கரர்.
 
*தல சிறப்பு :-*
 
ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி என்பவர் வழிபட்ட சுயம்பு
லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த லிங்கத்தில் அம்பாள் அரூபமாக
அருள்பாலிப்பதை உணர்ந்த அவர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார்.
அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார். அந்த
உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த
அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே
நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இந்த லிங்கத்தின் நடுவில்
ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம்.
இதில் இடது புறம் பிரம்மா, விஷ்ணு, சிவனும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி,
பார்வதியும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து
முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை
செய்த கரம் இருக்கிறது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் ஆனது. பொதுவாக
கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும்
தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள்
அனுமதிக்கப்படுவதில்லை. 

*தல பெருமை :-

அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, கரத்துடன், காளி,
மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். ஐம்பொன்னால்
ஆன காளி, சரஸ்வதி சிலைகள் மூகாம் பிகையின் இருபுறமும் உள்ளன. முத்தேவியருக்கும்
தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. நவராத்திரி இக்கோயிலில் மிக விசேஷமாக
கொண்டாடப்படுகிறது.
 
ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரஸ்வதியாக பாவித்து வணங்கி, "கலா ரோகணம்' பாடி
அருள் பெற்றார். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச்
செல்லப்படுகிறது. அன்று குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக நடக்கும்
வித்யாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.
 
சகலநோய் நிவாரணி: ஒரு முறை ஆதிசங்கரர் மூகாம்பிகை நினைத்து இங்கு தவம்
புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம்
தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின்
கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கஷாயத்தை
சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. இத்தலத்திலிருந்து
தான் ஆதி சங்கரர் "சவுந்தர்ய லஹரி' எழுதியுள்ளார். 

குடஜாத்ரிமலை: கொல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது.
அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த துண்டு பகுதி
குடஜாத்ரி மலையானது என்பர். இதில் 64 வகை மூலிகைகளும், 64 தீர்த்தங்களும்
உள்ளன. இந்த மலையில் கணபதி குகை, சர்வஞபீடம், சித்திரமூலை குகை உள்ளன. இந்த
குகையில் ஆதிசங்கரரும், கோலமகரிஷியும் தவம் செய்ததாகவும், இவர்கள் தேவைக்காக
அம்பாளே ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்ததாகவும் கூறுவர். 

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூகாசுரன் எனும் அசுரன் சிவனை நோக்கி
தவமிருந்தான். அவன் தவப்பயனை அடைந்துவிட்டால் உலகிற்கு துன்பம் ஏற்படும்
என்பதால், தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். 

அம்பிகை, மூகாசுரனின் தவத்தைக்கலைத்து, அவனுடன் போரிட்டாள். அவன் அம்பிகையிடம்
சரணடைந்தான். அவனது வேண்டுகோளுக் கிணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி,
"மூகாம்பிகை' என்ற பெயரில் தங்கினாள். 

  சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சுயம்பு லிங்கத்தின்
நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது
தரிசிக்கலாம்.
*
*
*ஆன்மீகச் சிந்தனை மலர் :*
 
*உலகம் யாருக்கு கட்டுப்படும்? - ஆதி சங்கரர்.*
 
குரு என்பவர் உண்மையை அறிந்தவர். தன்னை அண்டின சீடர்களின் நலனுக்காக இடைவிடாது
பாடுபடுபவர். தூயோன் என்பவன் உள்ளமும் மனமும் தூய்மையாக இருக்கிறவன். பண்டிதன்
என்பவன் விவேகி.சம்சாரத்தில் சாரமாக இருப்பது எது? அடிக்கடி இதை நினைத்துக்
கொண்டிருப்பதேயாகும். 'சம்சாரத்தில் ஏது சாரம்' என்று நினைத்துக் கொண்டே
இருந்தால் பற்றைவிட்டுப் பிறப்பை அறுக்கலாம்.

சூரன் என்பவன் துன்மார்க்கத்தில் மனம் போகாமல் மனதை அடக்குகிறவன்; பெண்களின்
பார்வைகளான பாணங்களால் அடிபடாதவன். சமர்த்தன் என்பவன் பெண்களின் நடையினால்
வஞ்சிக்கப்படாதவன். குருடன் என்பவன் படித்திருந்தும் கெட்ட காரியம் செய்பவன்.
செவிடன் என்பவன் இதத்தை நல்லதை கேட்காதவன். 

இந்தப் பிரபஞ்சம் பிரியமாகப் பேசக் கற்றுக் கொண்டு தர்மத்தை அனுஷ்டிப்பவனுக்கு
மட்டுமே வசப்படும்.
 
*வினாடி வினா :-*

*வினா *: கல்வியறிவில் முதல் இடம் பெறும் இந்திய மாநிலம் எது ?
*விடை *: கேரளம் - 90.92 % 2 வது இடம் பெறும் மாநிலம் - மிசோரம் - 88.49 %
[
*
*
*அறிவியல் செய்தி மலர் :*

** மூளையின் புதிய பரிமாணம் - வானவில் மூலம் ஒளியேற்றம் !*
 
மனதைக் கண்டவர் எவரும் இலர் - காற்றை விட பன்மடங்கு சக்தி வாய்ந்ததும், எளிதில்
கட்டுப்படாத்துமான, கண்ணிற்கு புலப்படாத அந்த சக்தியின் இரகசியத்தை கண்டறிந்த
எந்த நரம்பியல் நிபுணரும் இதுவரை இல்லை.

             ஆனால், நிபுணர்கள் இன்று அந்த சக்தியை மிகவும் நெருங்கி
விட்டதாகத் தெரிகிறது. சில அண்டு காலமாகவே பல ஆய்வாளர்களும் மூளையின்
செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட, சிந்தனைகள், உணர்வுகள், வேதனைகள் மனக் கோளாறு
போன்றவைகள் குறித்து அறிந்து கொள்ள பல புதிய தொழில்நுட்பங்களை தயாரித்துள்ளனர்.
     ஆனால் இத்துறை எளிதில் சிக்காத சவாலாகவே இருந்து வருகிறது..

          இப்போதைய ஆய்வில், திரு. ஸ்கூநோவர், 27,  கொலம்பியாவில், 
நியூரோஸைன்ஸ் படிக்கும் Ph.D மாணவர், ஒரு வித்தியாசமான கொக்கி போட்டு பிடிக்க
முயற்சித்திருக்கிறார். அவர் மூளையின் அழகான பிம்பங்களைக் கொண்டு அதன் பொதுவான
கருத்துக்களை வெளிக்கொணரும் முடிவில், அழகான புதிய கலைப் புத்தகத்தை
வடிவமைத்திருக்கிறார். “Portraits of the Mind: Visualizing the Brain From
Antiquity to the 21st Century,”
 மிக சுவாரசியமான இந்த ஆய்வு மேலும் பல தகவல்களைத் தரக்கூடும். 

*இதையும் படிங்க :* 

*சிறு கடன் மூலம் கிராமப்புற பெண்கள் முன்னேறுகிறார்கள்* 
சென்னை, நவ. 30: சிறு கடன் முறையினால் இந்தியாவின் கிராமப்புற பெண்கள்
அதிகளவில் முன்னேறி வருகிறார்கள் என "ஹேண்ட் இன் ஹேண்ட்' தன்னார்வ அமைப்பின்
தலைமை செயல் அதிகாரி கல்பனா சங்கர் தெரிவித்தார்.
சென்னை தொழில் வர்த்தக சபை சார்பாக "இந்தியாவில் சிறு கடன் தொடர்பான மறு ஆய்வு'
கருத்தரங்கம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. 
இதில் அவர் பேசியதாவது: 

2001-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 100 கோடி மக்கள் தொகையில் 40
சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள்
குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்காக மிக கடுமையான பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
இதனால் மிகவும் பாதிக்கப்படுவது பெண்கள். எனவே, அவர்களை மீட்பது சவாலான
காரியமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. 

இதே போல் இந்தியாவின் கிராமப்பகுதிகளில் 75.26 சதவீதம் ஆண்களும், 55.07 சதவீதம்
பெண்களும் படிப்பறிவு பெறாதவர்களாக இருக்கிறார்கள். இதிலும், பெண்கள் தான்
மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள்.
மனித வளர்ச்சியை பொறுத்தவரை இந்தியா 119-வது இடத்தில் இருக்கிறது. பெண்களின்
முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி விகிதத்தை தீர்மானிக்கிறது. ஆனால், கிராமப்புற
பெண்களில் 47 சதவீதம் பெண்கள் எந்தவித வேலைக்கும் செல்லாமல் இருக்கிறார்கள்.
எனவே, இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது நமது கடமையாகும். 
அந்த வகையில், "ஹேண்ட் இன் ஹேண்ட்' உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகள்
அவர்களுக்கு சிறு கடன் முறையில் பல உதவிகளை செய்து வருகின்றன. இதனால் பல
பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்கள்
இதனால் பெரும் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது ஹேண்ட் இன் ஹேண்ட் தன்னார்வ அமைப்பு 40 ஆயிரம் குழுக்களோடு சேர்ந்து
தமிழ்நாடு, கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் அரசின் உதவியுடன் சிறு
கடன் முறையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
 
மேலும், இது போன்ற சிறு தொகை கடன்கள் வாங்குபவர்கள் குறைந்த செலவிலான தொழிலை
தொடங்குகிறார்கள். மேலும், அவர்களுக்கு எந்த தொழிலை தொடங்குவது என்பது
பற்றியும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
 
ஆடுகள், வான்கோழிகள் பண்ணை அமைத்தல், பசு மாடுகள் வளர்ப்பு, தண்ணீர்
சுத்திகரித்தல் உள்ளிட்ட தொழில்களை தொடங்குகிறார்கள். சில வருடங்களில் இது
அவர்களுக்கு பெருமளவு தொகையை பெற்று தருகிறது. மேலும், சிறு கடன் உதவிகள்
முறையில் வழங்கப்படும் தொகைகளுக்கு மிக குறைந்த அளவிலான வட்டி தொகையே
நிர்ணயிக்கப்படுவதால் கடனை திரும்ப செலுத்துவதும் மிகவும் சுலபமாகிறது.
 
இது போன்ற தன்னார்வ அமைப்புகளுக்கு உதவி புரிய அரசு முன் வர வேண்டும். ஏனெனில்,
அரசின் உதவி இருந்தால் மட்டுமே இந்த சிறு கடன் முறையின் மூலம் பலரது
வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்றார் கல்பனா சங்கர்.



நன்றி - தின மலர், தின மணி, N.Y. Times. 

3 comments:

சங்கரியின் செய்திகள்.. said...

நண்பர்களே, தாமதமான மின் செய்தி மடலுக்கு வருந்துகிறேன். மின்சாரம் செய்த சதியே காரணம். முன் அறிவிப்பின்றி பல மணி நேரங்கள் மின்சார விநியோகம் இருப்பதில்லை. நேற்று முழுவதும் மின் இணைப்பு இல்லை. இன்றும் விடியற்காலை முதலே மின்சாரம் இல்லாமல், காலை 10 மணிக்குத்தான் வந்தது. இதற்கு விடிவுதான் எப்போது என்று தெரியவில்லை.

THOPPITHOPPI said...

நன்றி

Chitra said...

எந்த வித கட்சி சார்புமின்றி, நீங்கள் தொகுத்து தரும் செய்திகளுக்கு நன்றிங்க.

Post a Comment