Tuesday, December 14, 2010

இன்றைய செய்திகள். - டிசம்பர் - 14 - 2010.

உலகச் செய்தி மலர் :

* ஆஸ்திரேலியா அருகே பபுவா நியூகினியா தீவில் கடும் நிலநடுக்கம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் உள்ள பபுவா நியூகினியா நாட்டில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.

அங்குள்ள பெளகேன்வில்லே மாகாணம் முழுவதும் நில நடுகத்தால் குலுங்கியது. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு கட்டடங்களை விட்டு வெளியே ஓடினர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

பசிபிக் கடலில் 144 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை தகவல் ஏதுமில்லை.


* ராடியா மீதான புகார் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி, டிச. 13: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வைஷ்ணவி கம்யூனிகேசன் நிறுவனத் தலைவர் நீரா ராடியா மீதான புகார் மனுவின் நகலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் திங்கள்கிழமை பிறப்பித்தது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக வைஷ்ணவி கம்யூனிகேசன் நிறுவனத் தலைவர் நீரா ராடியாவுக்கும் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் விவரம் பத்திரிகைகளில் வெளியானது. விசாரணையின் பொருட்டு இந்த தொலைபேசி உரையாடலை வருமான வரித்துறை பதிவு செய்தது. விசாரணைக்காக பதிவு செய்யப்பட்ட இந்த உரையாடல் ஊடகங்களில் கசிந்துவிட்டது. இதையடுத்து இந்த உரையாடலை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். இது தனி மனித உரிமையை மீறும் செயலாகும் என்று கூறி தொழிலதிபர் ரத்தன் டாடா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அரசுத் தரப்பில் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டதற்கான காரணத்தை விளக்கி கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறைந்த காலகட்டத்தில் ரூ. 300 கோடிக்கான தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிவிட்டார் நீரா ராடியா. மேலும் அவர் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதோடு வெளிநாட்டு உளவு நிறுவனங்களுக்கு உளவு வேலை பார்த்து வருகிறார் என்று நிதியமைச்சரிடம் கடந்த 2007 நவம்பர் 16-ம் தேதி புகார் கொடுக்கப்பட்டது.
இந்தப் புகார் மனுவை அடுத்து அவரது தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன அதில் டாடாவுடன் பேசியதும் உள்ளது என்று அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த வழக்கில் கூடுதல் விவரங்களுடன் ஜனவரி முதல் வாரத்தில் மனு தாக்கல் செய்யுமாறு டாடாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுபோல் இந்த தொலைபேசி உரையாடலை வெளியிட்ட இரு ஆங்கில பத்திரிகைகள் தங்களது மனுக்களை பிப்ரவரி 2-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* பிடிவாதத்தை இந்தியா, சீனா கைவிட வேண்டும்: ஜெய்சங்கர்

பெய்ஜிங்,டிச.13: இந்தியாவும், சீனாவும் தங்களுக்கு இடையேயான நீண்டகாலப் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளும் விஷயத்தில் பழைய சிந்தனை ஓட்டத்துடனும், பிடிவாதத்துடனும் செல்படுகின்றன. இரு நாடுகளும் பிடிவாதத்தைக் கைவிட்டால் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம் என்று சீனாவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் தெரிவித்தார்

சீனப் பிரதமர் வென்ஜியாபோ, வரும் 15-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அவரது வருகை இரு நாடுகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வென்ஜியாபோவின் இந்த வருகையையொட்டி அந்நாட்டு செய்தி நிறுவனத்துக்கு இந்திய தூதர் ஜெய்சங்கர் திங்கள்கிழமை பேட்டியளித்தார். அப்போது, இரு நாடுகளும் பிரச்னையை தீர்த்துக்கொள்வதில் பிடிவாதப் போக்கை கடைப்பிடித்து வருகின்றன என்று சுட்டிக்காட்டினார்

மேலும் அவர் கூறியது: சில முக்கிய பிரச்னைகளை தீர்த்துக்கொள்வதில் இரு நாடுகளுக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவினாலும், இரு நாடுகளிடையே நல்லுறவு நீடிக்கிறது. இதில் இரு நாடுகளுமே சிறப்பாகச் செயல்படுகின்றன

பிரிக், ஜி-20 ஆகிய அமைப்புகளில் இந்தியாவும், சீனாவும் இணைந்து செயலாற்றுக்கின்றன. இந்த அமைப்புகள் மூலம் உலக அளவில் முக்கியமான விஷயங்களில் இரு நாடுகளும் செல்வாக்கை நிலைநாட்டி வருகின்றன.

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ரீதியான உறவும் சிறப்பாக உள்ளது. இந்தாண்டு மட்டும் இதுவரை ரூ. 4980 கோடி அளவுக்கு இரு நாடுகளிடையே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது இந்த ஆண்டின் இறுதிக்குள் ரூ. 6,000 கோடியை எட்டும் என்று இரு நாடுகளும் எதிர்பார்க்கின்றன என்றார் ஜெய்சங்கர்.

காஷ்மீரிகளுக்கு விசா குறித்து விவாதிக்கப்படும்: பிரதமர் வென்ஜியாபோவின் இந்திய பயணத்தின் போது காஷ்மீரிகளுக்கு தனித் தாளில் விசா வழங்கியது உள்பட இரு நாடுகளிடையே நீடிக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் ஹு ஜெங்கியூ தெரிவித்தார்.

வென்ஜியாபோ இந்தியாவுக்கு செல்லவுள்ள நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் இதைத் தெரிவித்தார்.
ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதே என்று கேட்டதற்கு, இந்த விஷயத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டோம். எனினும் இதுகுறித்து வென்ஜியாபோவின் இந்திய பயணத்தின்போது விவாதிக்கப்படும். சர்வதேச அளவில் இந்தியாவின் பங்கு அளப்பரியது. இதை மறுக்க இயலாது என்றார் ஹு ஜெங்கியூ.

* இந்தியாவுக்கான சிறப்புப் பிரதிநிதியாக டத்தோ சாமிவேலு நியமனம்


கோலாலம்பூர், டிச.13: இந்தியா, தெற்கு ஆசிய நாடுகளுக்கான மலேசியாவின் சிறப்பு பிரதிநிதியாக டத்தோ சாமிவேலு (74) நியமிக்கப்பட்டுள்ளார்.
மலேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 30 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து வந்த டத்தோ சாமிவேலு, சில தினங்களுக்கு முன்னர் பதவியை ராஜிநாமா செய்ததுடன் தீவிர அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற்றதுமே இந்தியா, தெற்கு ஆசிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதியாக அவரை அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸôக் நியமித்துள்ளார்.

டத்தோ சாமிவேலுவின் வாழ்க்கை வரலாறு குறித்து "ஏ லைப், ஏ லெஜெண்ட், ஏ லெகசி' என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் புத்தகத்தை வெளியிட்டு பேசிய நஜீப், சாமிவேலுவை இந்தியாவுக்கான சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளதை அறிவித்தார்

தேசியச் செய்தி மலர் :

* தில்லியில் குற்றங்கள் அதிகரிக்க காரணம்? ப.சிதம்பரம் கருத்துக்கு காங்கிரஸில் எதிர்ப்பு

புது தில்லி, டிச.13: வேறு இடங்களில் இருந்து வந்து குடியேறியுள்ளவர்களால்தான் தில்லியில் குற்றநடவடிக்கைகள் அதிகரித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

÷பாரதிய ஜனதா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சிதம்பரத்தின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
÷தில்லியில் திங்கள்கிழமை நாடாளுமன்றத்துக்கு வெளியே சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தில்லியில் குற்றநடவடிக்கைகள் அதிகரிக்க வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கியிருப்பவர்கள்தான் காரணம்.

தில்லியைச் சுற்றி அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஏராளமான குடியிருப்புகள் தோன்றியுள்ளன. இதில் வேறுபகுதிகளைச் சேர்ந்தவர்கள் வந்து தங்கியிருக்கின்றனர். இவர்களால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. பல நவீன நகரங்களில் இதுபோன்ற குடியிருப்புகள் அனுமதிக்கப்படுவதில்லை என்றார்.
÷தில்லியில் சனிக்கிழமை இரவில் இளம்பெண் ஒருவரை சிலர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். தில்லியில் இதுபோன்ற சம்பவம் கடந்த ஒருமாதத்தில் 4-வது முறையாக நடைபெற்றுள்ளது.

÷இந்த சம்பவங்கள் தில்லி நகர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பு மக்களும் அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சிதம்பரம், குடியேறிகளைக் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸில் எதிர்ப்பு:  சிதம்பரத்தின் கருத்துக்கு அவரது காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது

* 'செபி' கண்காணிப்பில் ஃபேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள்

மும்பை, டிச.13: பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) சமூக இணையதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதற்கென பிரத்யேக சாஃப்ட்வேரை "செபி' நிறுவியுள்ளது.

பங்கு பரிவர்த்தனை தொடர்பாக இந்த இணையதளங்களில் நிகழ்த்தப்படும் தகவல் பரிமாற்றங்களும் இனி கண்காணிப்புக்குள்ளாகும்.
சமீப காலமாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் பங்கு பரிவர்த்தனை தொடர்பான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பங்குகளை வாங்குவது, விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்தகைய இணையதளங்களை சில தீய சக்திகள் தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இவற்றைக் கண்காணிக்க செபி முடிவு செய்துள்ளது.
இப்போது நிறுவப்பட்டுள்ள புதிய சாஃப்ட்வேருடன், தொலைபேசி உரையாடல் பதிவு, நிதி பரிவர்த்தனை ஆவணங்கள், உள்ளிட்டவற்றை பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக செபி-யின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

* நித்யானந்தாவுக்கு சம்மன்

ராம்நகர், டிச. 13: நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் 3 பேரை டிசம்பர் 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ராம்நகர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

÷நித்யானந்தா என்ற ராஜசேகரன், அவரது சீடர்கள் பக்தானந்தா என்ற சீலம்ரெட்டி, சச்சிதானந்தா என்ற சிவ வல்லபானந்த் மற்றும் தலைமறைவாக உள்ள சதானந்தா என்ற தனசேகரன் ஆகிய 4 பேருக்கும் சம்மன் அனுப்ப சிஐடி போலீஸôருக்கு ராம்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

÷இவர்களில் தனசேகரன் இன்னும் தலைமறைவாக உள்ளார். மற்றவர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளனர். ஜாமீனில் உள்ள நித்யானந்தா உள்பட 3 பேரும் டிசம்பர் 16-ம் தேதி ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராகவும், தனசேகரனை கைது செய்து ஆஜர்படுத்தும்படியும் மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளதாக சிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன

* நாடாளுமன்ற முடக்கத்தால் மக்களின் வரிப்பணம் ரூ. 146 கோடி வீண்

புது தில்லி, டிச.13: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியதால் மக்களின் வரிப்பணம் ரூ. 146 கோடி வீணாகியுள்ளது.
÷நடப்பு நிதியாண்டில் மக்களவையை நடத்தும் செலவுக்காக ரூ. 347.65 கோடியும், மாநிலங்களவையை நடத்தும் செலவுக்காக ரூ. 172.33 கோடியும் ஒதுக்கப்பட்டது. இது தவிர நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தனக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து நாடாளுமன்றத்தை நடத்தும் செலவுக்காக தனியாக ரூ. 7.47 கோடியும் ஒதுக்கியது.

÷இதில் இரு அவைகளின் தலைவர்கள், துணைத் தலைவர், எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சம்பளம், பிற படிகள் உள்ளிட்டவையும் அடங்கும். நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 9-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 13-ம் தேதியுடன் முடிவ
டைந்தது.

இதில் அவை நடவடிக்கைகள் எதுவுமே நடைபெறவில்லை. இதனால் இந்த தொடருக்காக செலவு செய்யப்பட்ட ரூ. 146 கோடி வீணாகியுள்ளது. இவை அனைத்தும் பொதுமக்கள் வரியாக அரசுக்கு செலுத்திய பணமாகும்.

* 11 நாள்களாகியும் செயல்படாத சி.பி.ஐ. இணையதளம்

புது தில்லி, டிச. 13: கடந்த 11 நாள்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஹேக்கர்களால் செயல் இழக்கச் செய்யப்பட்ட மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இணையதளம் இன்னமும் செயல்படாமலேயே உள்ளது.

 பாகிஸ்தான் சைபர் படை என்று கூறிக்கொள்ளும் ஹேக்கர்கள், டிசம்பர் 2-ம் தேதி சி.பி.ஐ. இணையதளத்தில் உள்ள புரோகிராம்களை மாற்றி அதை செயல் இழக்கச் செய்தனர்.

இணையதளத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சி.பி.ஐ. அமைப்பு, தேசிய தகவல் மையம் ஆகியவற்றின் கணினி வல்லுநர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அந்த இணையதளத்தை மீண்டும் இயங்க வைக்க முடியவில்லை.

"பாகிஸ்தான் ஹேக்கர்கள் சி.பி.ஐ. இணையதளத்தை முடக்க பயன்படுத்தியுள்ள புரோகிராம்கள் மிகவும் சிக்கலானவையாக உள்ளன. எனவே முடங்கியிருக்கும் இணையதளத்தை மீண்டும் செயல்பட வைக்க கால தாமதம் ஏற்படுகிறது' என தேசிய தகவல் மைய நிபுணர்கள் தெரிவித்தனர்.

மாநிலச் செய்தி மலர் :

* மழை, வெள்ளச் சேதம்: மதிப்பிட வருகிறது மத்திய குழு

சென்னை, டிச. 13: தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது.

  தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழைக்கு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மழை சீரமைப்புப் பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களைப் பார்வையிட பத்து மாவட்டங்களுக்கு தனித்தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அதிகாரிகள் குழு மீண்டும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இப்போது ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வைத் தொடர்ந்து அதிகாரிகள் தங்களது அறிக்கையை டிசம்பர் 17-க்குள் அளிப்பர். அதற்கு முன்னதாக, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக ஆய்வை மேற்கொள்ள மத்தியக் குழு தமிழகம் வரவுள்ளது.

   பேரிடர் நிவாரண நிதியில் இருந்து | 1,600 கோடியை மத்திய அரசிடம் இருந்து தமிழகம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது

மத்திய குழு டிசம்பர் 17 அல்லது 18-ம் தேதிக்குள் தமிழகம் வரும் என்றும், அப்போது மாநிலத்தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அளிக்கும் இரண்டாம் கட்ட ஆய்வறிக்கை குழுவிடம் அளிக்கப்படும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

  இந்த அறிக்கையுடன், மத்திய குழுவின் ஆய்வுப் பணிகள் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இதன் அடிப்படையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்பட உள்ளது.

* தமிழகத்தில் 15 கூட்டுறவு மில்கள் மூடல்; வாழ்வு இழந்த 50 ஆயிரம் தொழிலாளர்கள்திருநெல்வேலி: தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு மில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்காததால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்பாலைகள் லாபகரமாக இயங்கிவருவதால் புதிது, புதிதாக தனியார் மில்கள் துவக்கப்பட்டு வருகின்றன.இதற்கு நேர் மாறாக அரசின் கூட்டுறவு நூற்பாலைகள் நஷ்டத்தை அடைந்து தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

காமராஜர், பக்தவச்சலம் போன்ற காங்கிரஸ் முதல்வர்கள் துவக்கி வைத்த பாரம்பரியம் மிக்க நூற்பாலைகளும் திராவிட ஆட்சிகளின் கவனிப்பின்மையால் இழுத்து மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 18 கூட்டுறவு மில்களில் தேனி, எட்டையபுரம் பாரதி, புதுக்கோட்டை, ஊத்தங்ககரை, கன்னியாகுமரி ஆகிய 5 மில்களை தவிர 13 மில்களும் மூடப்பட்டுள்ளன.
திருநெல்வேலி பேட்டையில் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை 1958ல் செயல்படதுவங்கியது. இந்த மில்லில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். தி.மு.க.,அ.தி.மு.க.,ஆட்சிகளில் 75 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு 2004ல் மில் மூடப்பட்டது.

திருநெல்வேலி பேட்டை மில்லில் கடந்த சில மாதங்களில் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடபொருட்கள், இயந்திரங்கள் "அதிகாரிகளின் துணையோடு கொள்ளை' போயிருப்பதாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். போலீசில் வழக்குபதிவு மட்டும் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 183 புள்ளிகள் உயர்வு

டிச.13: மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் முடிவடைந்தது. 95 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய குறியீட்டெண் சென்செக்ஸ் 11 மணியளவில் 187 புள்ளிகள் வரை சரிந்தது. பின்னர் சரிவில் இருந்து மீண்டு வர்த்தக இறுதியில் 182.89 புள்ளிகள் அதிகமாக 19,691.78 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையிலும் ஏற்றம் காணப்பட்டது. குறியீட்டெண் நிஃப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 5907.65 புள்ளிகளில் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், டிஎல்எஃப், பிஎச்ஈஎல், சிப்லா, என்டிபிசி, டாடா பவர், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் கம்யூ, ஆர்ஐஎல், இந்துஸ்தான் யூனிலீவர், ஜெய்ப்ரகாஷ் அசோ, எல் அண்ட் டி, மாருதி சுஸுகி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், ஜிந்தால் ஸ்டீல், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபம் கண்டன.

ஐடிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹீரோ ஹோண்டா, விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

விளையாட்டுச் செய்தி மலர் :* மக்களவையில் சாய்னாவுக்கு பாராட்டு

புது தில்லி, டிச.13: ஹாங்காங் ஓபன் பட்டம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலுக்கு மக்களவையில் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மக்களவைத் தலைவர் மீராகுமார் தனது உரையில், "தனது தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக பரிமளித்து வருகிறார் சாய்னா. இந்த ஆண்டில் சாய்னா வெல்லும் நான்காவது சர்வதேச பட்டம் இதுவாகும். இந்த அவையில் உள்ள உறுப்பினர்களின் சார்பாக சாய்னாவுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துகொள்கிறேன்.

அவரது சாதனைகள் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதுடன், வளரும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் உள்ளது. இதே போன்று சாய்னா எதிர்காலத்திலும் தொடர்ந்து பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்' என்று தெரிவித்தார்.

அவரது பேச்சை ஆமோதிக்கும் வண்ணம் மக்களவை உறுப்பினர்கள் மேசையைத் தட்டி தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிச் சுற்றில், சாய்னா சீன வீராங்கனை ஷிக்ஷியான் வாங்கை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். ஷிக்ஷியான், கடந்த மாதம் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* தெற்காசிய மகளிர் கால்பந்து: பூடானை சாய்த்தது இந்தியா

புது தில்லி, டிச.13: வங்க தேசத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி 18-0 என்ற கோல் கணக்கில் பூடான் அணியை படுதோல்வி அடைய செய்தது.

இந்தப் போட்டியில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, பூடான் ஆகிய அணிகள் ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகியவை பி-பிரிவில் இடம் பெற்றுள்ளன.

திங்கள்கிழமை நடந்த ஏ-பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி பூடான் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து கோல் அடித்தது.

சஸ்மிதா மல்லிக்கின் 7 கோல்களும்; பாலா தேவி (5), தபாபி தேவி (4), பிங்கி (1), அமூல்யா (1) ஆகியோரின் சிறப்பான ஆட்டமும் இந்தியா மகத்தான வெற்றி பெற உதவின. புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா சந்திக்க உள்ளது.


ஆன்மீகச் செய்தி மலர் :

* சாய்வு சௌரிக் கொண்டை வைர ஆபரண அலங்காரம்...

                                                                                நன்றி - தின மணி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி விழாவில், பகல் பத்து உற்சவத்தின் ஏழாம் திருநாளான திங்கள்கிழமை சாய்வு சௌரிக்கொண்டை வைர ஆபரணங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ நம்பெருமாள்.


அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில்

மூலவர் : ரங்கநாதர்

  உற்சவர் : நம்பெருமாள்

  அம்மன்/தாயார் : ரங்கநாயகி

  தல விருட்சம் :  புன்னை

  தீர்த்தம் :  சந்திர தீர்த்தம்
 மற்றும் 8 தீர்த்தங்கள்

  ஆகமம்/பூஜை :  பாஞ்சராத்திரம்

  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருவரங்கம்

  ஊர் :  ஸ்ரீரங்கம்

  மாவட்டம் :  திருச்சி

  மாநிலம் :  தமிழ்நாடு


பாடியவர்கள்:
 
 
மங்களாசாஸனம்

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார்

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
-தொண்டரடிப்பொடியாழ்வார்


 தல சிறப்பு:
 
  நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சந்நிதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில். பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. இத்தலத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம். இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று

தலபெருமை:

ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம்.

கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.

வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.

திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.

டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.

தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.

மோட்ச ராமானுஜர் : இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு  மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.

கம்பருக்கு அருளிய  நரசிம்மர் : கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், "அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர்,  கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து  தலையாட்டினார்.மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில்  இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.

கருடாழ்வாருக்கு 30 மீட்டர் வேஷ்டி! : ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30  மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.
 
ஒரே சன்னதியில் மூன்று தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள்  இயகப்படுகின்றன.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சந்நிதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று
விஞ்ஞானம் அடிப்படையில்: இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழா:
 
  வைகுண்ட ஏகாதசி இந்த மாதத்தின் இறுதியில் ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும். பகல்பத்து, ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும், பாடவும் பெறும். பிரம்மாண்டமான இந்த திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு பெருமாளை வணங்குவர். அதோடு இத்தலத்தில் நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் (10 நாட்கள்) லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். மாசி மாத தெப்பத்திருவிழா 10 நாள் விழாவிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். தவிரமாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின்போதும் வாரத்தின் சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள் வருகை இருக்கும்.
 
காலை 6.15 மணி முதல் 1 மணி வரை, பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


ஆன்மீகச் சிந்தனை மலர் :

அழியா இன்பத்தின் வாசல் - ராமானுஜர்

 * இறைவன் தொண்டினையும், அடியவர்களின் தொண்டினையும், ஆசிரியரின் தொண்டினையும் சமநிலையில் கருதிச் செய்யவேண்டும். முன்னோர்கள் கூறியிருக்கும் தெய்வீகமான நூல்களில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

* ஒருவன் எவ்வளவு அறிவுடையவனாக இருந்தாலும், இறைவன்,ஆசிரியர் ஆகியோருக்கு தொண்டு செய்யாமல் அவர்களை இகழ்ந்து மதிக்காமல் திரிந்தால் அவன் அழிந்து போவது நிச்சயம்.

* சிறந்த அடியார்களாகிய நல்லோரிடம் சேருவதே அழியாத இன்பத்திற்கு வாசல் ஆகும். அதனால் அடியார்களின் உள்ளம் மகிழும் படி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.


வினாடி வினா :-

வினா - உலகின் மிகப் பெரிய இரயில்வே சந்திப்பு எது ?

விடை - கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ் - நியூயார்க்.
 
 இதையும் படிங்க :

அறவுணர்வுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்: முனைவர் க. முத்துச்சாமி

புதுக்கோட்டை, டிச. 12: அறவுணர்வுக்கு முக்கியத்துவம் அளியுங்கள் என்றார் புதுகை மாமன்னர் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் க. முத்துச்சாமி.
 புதுக்கோட்டையில் திருக்குறள் கழகம், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தமிழ்ப் பயிலரங்கில் பங்கேற்ற அவர் பேசியது:

 ""ஒரு சமுதாயத்தில் வாழும் ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்வதற்குரிய நிலைக்கலன்கள் எவை என்பதை புலவர் பிசிராந்தையார் விளக்கியுள்ளார்.

வயதாகியும் நரைக்கவில்லையே என்று கேட்டவருக்கு விடை கூறும் முறையில் அமைந்துள்ள அவர் கூற்றில் சமுதாயத்தில் ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்வதற்குரிய அடித்தளங்கள் விளக்கப்பட்டுள்ளன.

 சமுதாயம் என்பது ஊர், குடும்பம், அரசு என்ற மூன்றில் கட்டமைக்கப்பட்டுள்ளதைப் புலவர் எடுத்துக்காட்டுகிறார். ஒரு மனிதனின் மன மகிழ்ச்சி அவனால் மட்டும் கட்டமைக்கப்படுவதில்லை. அவனைச் சுற்றியுள்ள புறச்சூழலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது அரிய சிந்தனையாகும். எனவே ஒரு மனிதனின் நல வாழ்வுக்கு அடிப்படைகள் யாவை என்பதை நம்முன்னோர்கள் சிந்தித்துள்ளனர்.

 ஒரு முறை தந்தை பெரியார் சொன்னார்: "எனக்கு பக்தி இல்லை என்றால் உங்களுக்கு என்ன நட்டம்? ஆனால், ஒழுக்கமில்லை என்றால்.... நாணயமில்லை என்றால்..... உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு இல்லாவிடில் அது இன்னொரு மனிதனுக்கு செய்கிற தீங்கு ஆகும்?' என்று.

 எனவே, ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குத் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் ஒழுக்கம், நாணயம், உண்மை உணர்வு ஆகியன வேண்டும். மனம், வாக்கு, தூய்மை என்ற மூன்றிலும் வேண்டும். இதைத்தான் நம் முன்னோர்கள் உண்மை, வாய்மை, மெய்மை என்ற மூன்றாக வகுத்துச் சிந்தித்துள்ளனர்

 உலகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான எமர்சன் சொன்னார்: "உலகத்தில் எது தலைசிறந்த வேலை? யார் தலைசிறந்தவர்? அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவரா? அறக்கருத்துக்களைக் கூறுபவரா? பொருளை மாற்ற முடிந்தவர் எவரோ அவரா இல்லை. என் மனநிலையை மாற்ற முடிந்தவர் எவரோ அவரே சிறந்தவர்' என்று.
 இதனையே சங்கப் புலவர் கபிலர் வேறு கோணத்தில் கூறுகிறார்: "முத்து, மாணிக்கம், பொன் கொண்டு செய்யப்பட்ட நகை கெட்டுப்போய்விட்டால் அதை எளிதில் சீர்செய்துவிட முடியும்.

 ஆனால்,சால்பு, மேன்மை, ஒழுக்கம் கெட்டுவிட்டால் குற்றம் துடைத்து பழைய நிலையை மீட்க முடியுமா? முடியாது. யாருக்கும் முடியாது. எனவே வாழ்வியில் அறங்களான துன்பம் அடைந்தவர்களுக்கு உதவுதல், நம்மைச் சேர்ந்தவர்களைப் பிரியாமல் இருப்பது, உலக வழக்கமறிந்து நடப்பது, சுற்றத்தாரைப் பகைக்காமல் வாழ்வது, பேதைகள் கூறும் பழிச்சொற்களைப் பொறுத்துக்கொள்வது, பிறர் கூறியதை மறுக்காமல் இருப்பது, மறைக்கப்பட வேண்டிதைப் பிறரிடம் தெரிவிக்காமல் இருப்பது, எதிரிகளைத்தாக்க காலம் வரும் வரை பொறுத்திருப்பது, விருப்பு வெறுப்பின்றி குற்றத்துக்கேற்ற தண்டனை தருவது ஆகியவற்றைக் கடைப்பிடித்து வாழ்வதுதான் தமிழர்களின் மேன்மையான வாழ்க்கை'' என்றார் முத்துச்சாமி.நன்றி - தின மணி , தின மலர், தட்ஸ்தமிழ்.

2 comments:

Chitra said...

Thank you for the news update.

ஹேமா said...

நித்தமும் செய்திகள் தருகிறீர்களா நன்று நன்றி !

Post a Comment