Thursday, December 2, 2010

இன்றைய செய்திகள். - டிசம்பர் - 02 - 2010.உலகச் செய்தி மலர் :

* லஷ்கர் உள்பட 4 பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு: ரகசியங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்

லண்டன், டிச.1: இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா உள்பட 4 பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது என்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இத்தகவலை இஸ்லாமாபாதில் உள்ள அமெரிக்க தூதர் கடந்த 2009-ம் ஆண்டில் அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை கைப்பற்றி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது விக்கிலீக்ஸ். இதன் மூலம் பல அதிர்ச்சி தரும் விஷயங்களை வெளிவந்துள்ளன. பல்வேறு நாடுகளைப் பற்றி அமெரிக்கா வைத்துள்ள மோசமான அபிப்பிராயம், பிற நாடுகளின் உள்விவகாரங்களை அமெரிக்கா வேவு பார்ப்பது போன்றவை வெட்டவெளிச்சமாகி வருகின்றன. இது அமெரிக்காவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அரசுக்கு பாகிஸ்தானில் உள்ள அந்நாட்டு தூதர் ஆனிபீட்டர்சன் அனுப்பிய ரகசிய தகவல்கள் சிலவற்றை விக்கிலீக்ஸ், புதன்கிழமை வெளிட்டுள்ளது.

அதில், பயங்கரவாத ஒழிப்பு பணி உள்பட பல்வேறு வகைகளில் அமெரிக்காவிடம் இருந்து 2001-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பல கோடி ரூபாயைப் பெற்று வருகிறது. எனினும் அவற்றை பயங்கரவாத ஒழிப்புப் பணிக்கு பாகிஸ்தான் முழுமையாகப் பயன்படுத்தவில்லை.

பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் இதுவரை நிறுத்திக் கொள்ளவில்லை என்று தூதர் ஆனிபீட்டர்சன் அமெரிக்கா தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதேபோல பாகிஸ்தானுடன் அணு ஆயுதங்கள் இருப்பது தொடர்பாக மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் அமெரிக்கா வைத்திருந்துள்ளது. பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது ஆபத்தை விளைவிக்கும் என்று பிரிட்டனும் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.


* வன விலங்கு சரணாலயமாக மாறுகிறது முல்லைத்தீவு

கொழும்பு, டிச.1- விடுதலைப் புலிகளின் முக்கியத் தளமாக விளங்கிய முல்லைத்தீவு காட்டுப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட முல்லைத்தீவு காட்டில் தான் புலிகளின் முக்கியத் தலைவர்கள் முகாமிட்டு செயல்பட்டனர். எனவே, விடுதலைப் புலிகள் மீண்டும் முல்லைத்தீவை தங்கள் செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சியாகவே அப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், காட்டுப் பகுதியைச் சுற்றி மின்கம்பி வேலி அமைத்து மனிதர்கள் உள்ளே செல்வதை தடுக்கவும் நடிவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கையில் உள்ள கிராமங்களுக்குள் நுழையும் சிறுத்தைகள் மற்றும் யானைகளை முல்லைத்தீவில் விடவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


* தென் கொரியா, அமெரிக்கா போர் ஒத்திகை முடிந்தது

சியோல்,டிச.1: வட கொரியாவின் அத்துமீறிய தாக்குதலுக்குப் பிறகு மிகுந்த பதற்றத்துக்கு இடையே நடந்த தென்கொரியா - அமெரிக்கா கூட்டு ராணுவ ஒத்திகை முடிவுக்கு வந்தது.
வட கொரியாவில் கம்யூனிச ஆட்சி நடக்கிறது. அந்த நாடு சீனாவுக்கு மிகவும் நட்பு நாடாகும். இரண்டாவது கிம் ஜோங் அங்கு சர்வாதிகாரியாக ஆட்சி நடத்துகிறார்.

தென் கொரியா மீது சண்டை போடப்போவதாக மிரட்டியோ அல்லது ஏதாவது விஷமத்தில் ஈடுபட்டோ அவ்வப்போது அந்த நாட்டைச் சீண்டுவதே வட கொரியாவுக்கு வேலை. வட கொரியாவின் சேட்டைகளையெல்லாம் அதன் நண்பனான சீனா ரசித்துப் பார்த்து உள்ளூர மகிழ்ந்துவருகிறது.


தேசியச் செய்தி மலர் :

* நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் டேப்பை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, டிச. 1: 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய டேப்பை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக நல அமைப்பு ஒன்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் புதன்கிழமை மீண்டும் விசாரித்தது.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நீரா ராடியா பல்வேறு தரப்பினருடன் பேசிய தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்ட டேப் அல்லது சி.டி.யை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில்  ஒப்படைக்க வேண்டும். தேவையான டேப் நகல்களை விசாரணை அமைப்புகள் எடுத்துக் கொள்ளலாம். இந்த டேப் நீதிமன்றத்தின் லாக்கரில் வைக்கப்படும். வழக்குக்குத் தேவைப்படும் போது அவை பயன்படுத்தப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.


* நாடாளுமன்றம் முடக்கம் தொடர்கிறது: கூச்சல், குழப்பத்துக்கு இடையே மசோதாக்கள் நிறைவேற்றம்

புது தில்லி, டிச.1: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் புதன்கிழமை, தொடர்ந்து 14-வது நாளாக முடங்கின.

கூச்சல், குழப்பத்துக்கு நடுவே ஒரு சில துணை மானிய கோரிக்கை மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. முதலில் நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்ற இரு அவைகளும் பின்னர் நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதே நிலைதான் புதன்கிழமையும் தொடர்ந்தது

எனினும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சில துறைகளுக்கான முக்கிய துணை மானிய கோரிக்கை மசோதாக்களை நிறைவேற்ற முன்வந்தார். ஆளும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்களின் உதவியுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

பிரணாப் கருத்து: நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இதுபோன்று கூச்சல், குழப்பத்துக்கு இடையே நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது, மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்றார்.

* குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதிகளை பதவி நீக்க புதிய மசோதா

புதுதில்லி டிச. 1: கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக எழுந்த அமளிக்கிடையே மக்களவையில் இந்த மசோதாவை சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தாக்கல் செய்தார்.

ஏற்கெனவே இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது


மாநிலச் செய்தி மலர் :

* தமிழகத்தில் தொடரும் கனமழை: 1.5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் அழூகும் அபாயம்.

சென்னை, டிச. 1: தமிழகத்தில் தொடரும் கனமழையால் 1.5 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சேத விவரங்கள் குறித்த மதிப்பு ஓரிரு நாள்களுக்குப் பிறகே தெரியவரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுதல், வீடுகள் இடிந்தது போன்ற காரணங்களால் மழைக்கு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமாகியுள்ளது. இந்த நிலையில், இலங்கை, தமிழகம், தெற்கு ஆந்திரத்தை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. புதன்கிழமையும் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

 இதனால், சென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்பட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

  1.5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள்: கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை தொடரும்: காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்டும் புதிய பயிர் சுழற்சி முறை

காஞ்சிபுரம்: புதிய பயிர் சுழற்சி முறையை பின்பற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் தங்கள் நிலத்தில் இருந்து வருமானம் பெறலாம். விவசாயிகள் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை லாபம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாக விவசாயத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
÷விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கு புதிய பயிர் சுழற்சி முறையை விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்ல வேளாண்மைத் துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

நெல்லானது, ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை விளைவதற்கு ஏற்ற பருவத்தைக் கொண்டது. மக்காச்சோளம், டிசம்பர்-ஜனவரி மாதங்களில் நல்ல விளைச்சலைத் தரும். ÷இதேபோல் பயறு வகைகளில் ஏப்ரல்-மே மாதங்களில் நல்ல விளைச்சலை தரும். இந்த மூன்று வகை பயிர்களையும் மாற்றி மாற்றி விவசாயிகள் தங்கள் நிலங்களில் ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.

இந்த மூன்று வகையான பயிர்களையும் விவசாயிகள் பயிர் செய்தால் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைப்பதுடன், ஒரே விதமான சத்துக்கள் மண்ணில் இருந்து உறிஞ்சப்படாமல் பயிற்சி சுழற்சி முறையின் காரணமாக மண்ணின் வளம் பாதுகாக்கப்பட்டு விளைச்சலும் பெருகும்


தொழில்நுட்ப செய்தி மலர் :* ஆப்பிள் ஐபேட்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள்.

பெங்களூர்: இந்திய 'சுவையில்' இனி 'ஆப்பிளை' சுவைக்கலாம். ஆம், ஆப்பிள் ஐபேடுகளில், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் சேவையைப் பெற வாய்ப்பு உருவாகியுள்ளது.

உலகம் முழுக்கத் தமிழர்கள்  விரவியிருந்தாலும் சில விஷயங்களில் தமிழைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதில் ஒன்று ஐபேட். இதில் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளைக் காண, பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.

தற்போது வெளியாகியுள்ள புதிய ஐஓஎஸ் (iOS 4.2.1) ஆபரேட்டிங் சிஸ்டம் இந்தக் குறையைப் போக்குகிறது. இதன் மூலம், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆப்பிள் ஐபேடில் படிக்கவும் அதிலிருந்து இந்திய மொழிகளில் மெயில் அனுப்பவும் முடியும்.

இந்தியச் சந்தையின் மதிப்பை உணர்ந்து, அதை அங்கீகரிக்கும் வகையில் தனது ஐபேட்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளையும் இடம் பெற செய்துள்ளது ஆப்பிள்.

ஐபேடுகளில் தமிழ் சேவையைப் பெற வேண்டுமானால் புதிய ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கு உங்ககளது ஐபேடை அப்கிரேட் செய்து கொள்ள வேண்டும். இந்த அப்கிரேடை செய்ய,

- முதலில் சாதாரண முறையில் ஐஓஎஸ் 4.2.1 அப்கிரேடுக்கு முயலுங்கள் (முடியாவிட்டால் அடுத்த ஸ்டெப்புகளுக்குப் போகலாம்)

 ஐடியூன்கள், குயிக்டைம் மற்றும் ஆப்பிள் தொடர்பான அனைத்தையும் ஐபாடிலிருந்து நீக்குங்கள்.

- பின்னர் மீண்டும் ஐடியூன்களின் புதிய வெர்சனை இன்ஸாடல் செய்யுங்கள்.

- பயர்வாலை நீக்குங்கள்.

- இப்போது மீண்டும் ஐஓஎஸ் ஆபரேடிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்ய முயலுங்கள்.

இந்த முயற்சியில் வெற்றி பெற முடியாவிட்டால் உங்களது ஆபரேட்டிங் சிஸ்டம் பழையதாக இருக்கலாம். எனவே அதை முதலில் அப்கிரேட் செய்யுங்கள்.

அதற்கு முதலில் ஐடியூன் 10.1ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

உங்களது ஐபேடை கம்ப்யூட்டருடன் பொருத்துங்கள்.

ஐடியூன்களை ரன் செய்யுங்கள், பின்னர் டிவைஸை கிளிக் செய்யுங்கள்.

பின்னர் ஆபரேட்டிங் சிஸ்டம் அப்கிரேடை கிளிக் செய்து அதில் கூறப்படுவதை பின்பற்றுங்கள்.

ஆபரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் ஆகி விட்டால், உங்களது மொழியில் நீங்கள் பிரவுஸ் செய்ய முடியும்.

வர்த்தகச் செய்தி மலர் :* தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு.

புதுதில்லி, டிச.1- இந்தியாவில் தங்கம் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது.

தில்லி சந்தையில்10 கிராம் தங்கம் 21 ஆயிரம் ரூபாய்க்கு இன்று விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிலோ 43,950 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

திருமண சீசன் நெருங்குவதால் தங்கம், வெள்ளி விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

* சென்செக்ஸ் 328 புள்ளிகள் உயர்வு.

மும்பை, டிச.1- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 328 புள்ளிகள் உயர்ந்து 19,850 புள்ளிகளில் முடிவடைந்தது.

சிப்லா, டாடா ஸ்டீல், மஹேந்திரா அன் மஹேந்திரா, டாடா மோட்டார்ஸ், எல் அன் டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

பார்தி ஏர்டெல், ஹீரோ ஹோண்டா, விப்ரோ, மாருதி சுசுகி, ஹிந்துஸ்தான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 98 புள்ளிகள் உயர்ந்து 5,960 புள்ளிகளில் முடிவடைந்தது.


விளையாட்டுச் செய்தி மலர் :

* இந்தியா வெற்றிபெற 259 ரன்கள் இலக்கு

ஜெய்ப்பூர், டிச.1: நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருதின கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 259 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. குவாஹட்டியில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இன்று எந்தவித மாறுதலும் செய்யப்படவில்லை. நியூஸிலாந்தில் பிரன்டன் மெக்கல்லம் இன்றும் விளையாடவில்லை. ஆனால் கிரான்ட் எலியோட்டுக்கு பதிலாக கேப்டன் டேனியல் வெட்டோரிகளமிறங்கியுள்ளாரகாயமடைந்துள்ள டாரில் துஃபேக்கு பதிலாக டிம் செளதீ களமிறக்கப்பட்டுள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக குப்டில், ஹௌ ஆகியோர் களமிறங்கினர். 4-வது ஓவரிலேயே ஹௌ ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில்லியம்சன் 29 ரன்களுக்கும், டெய்லர் 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிவந்த குப்டில் 70 ரன்கள் எடுத்திருந்தோபுத அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு ஸ்டைரிஸ், வெட்டோரி ஆகியோர் நிதானமாக ஆடினர்.  59 ரன்கள் எடுத்து ஸ்டைரிஸ் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது.

இந்தியத் தரப்பில் ஸ்ரீசாந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முனாப் படேல், அஸ்வின், பதான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணி தலைவர் கௌதம் கம்பீர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு வைஷ்ணவிதேவி திருக்கோவில்

மூலவர் - வைஷ்ணவிதேவி, [சிரோ பாலி ]
தீர்த்தம் - கங்கா நதி
பழமை - 1000 - 2000 ஆண்டுகளுக்கு முன்
ஊர் - கட்ரா
மாவட்டம் - கட்ரா
மாநிலம் - ஜம்மு & காஷ்மீர்

தல சிறப்பு :-

இந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலம் இது. அம்மனின் சக்தி பீடங்களில் முக்கியமானது. இங்கு அம்மன் அரூபமாக (சிலை வடிவில் இல்லாமல்) அருள்பாலிக்கிறாள்.( துர்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றனர்.)
 
திருவிழா :

வருடந்தோறும் நவராத்திரி நாட்களில் திருவிழா நடைபெறுகிறது. அந்நாட்களில் திரிகுதா என்ற இம்மலை அலங்கரிக்கப்பட்டு வெகு விமரிசையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்கும் பொருட்டு சிறப்பாக நடைபெறுகிறது.

கட்ராவில் இருந்து மாதா கோவில் தர்பாருக்குச் செல்ல 14 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். இந்த 14 கி.மீ., தூர நடை பயணத்தில், மனம் லேசாவது டன் இனம் புரியாத குதூகலமும் ஏற்படும்!

கட்ராவில் இறங்கி பஸ் ஸ்டாண்டில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி அறக்கட்டளை அலுவலகத்தில் "யாத்ரி பர்ச்' என்ற அனுமதிச் சீட்டை நம் முழு முகவரியைக் கொடுத்து பெற்றுக் கொண்டு நடை பயணத்தைத் தொடர வேண்டும்.

நடக்கத் துவங்கிய சில நிமிடங்களி லேயே திரி கூட பர்வதத்தின் (கோயிலுக்குச் செல்லும் முதல் பாதை) அடிவாரத்தை அடைந்து விடலாம். அடிவாரத்தின் அருகில் 24 மணி நேரமும் இலவச உணவு பக்தர்களுக்கு வழங்கப்படும்.

மலைப்பாதையில் அரை கீ.மி., தூர பயணத்தில் ராணுவ செக்போஸ்ட் உள்ளது. இங்கு யாத்ரீ-பர்ச்சை கொடுத்து, ராணுவ முத்திரை பெற்று பயணத்தை தொடர வேண்டும். ராணுவ செக்போஸ்ட்டில் முழு செக்கப் இருக்கும். இங்கிருந்து வைஷ்ணவி தேவியின் கோயில் உள்ள தர்பாருக்குச் செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. படிகள் உள்ள பாதையும், நம்மூர் பழனியில் உள்ள யானைப் பாதை போன்ற சறுக்கு பாதையும் உண்டு. சறுக்குப் பாதையும், படிக ளும் தனித் தனியாக உள்ளன. இதில் நமக்கு வசதியான பாதையை தேர்ந் தெடுத்து பயணத்தைத் தொடரலாம்.

கோயில் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இருபுறமும் பசுமைக் காடுகளுக்கு மத்தியில் 24 மணி நேரமும் "ஜெய் மாதா தி' கோஷத்துடன் பல்வேறு இன, மாநில மக்கள் நடந்து செல் வதைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சிதான். 7 வயது முதல் 70 வயது வரையிலானவர்கள் வைஷ்ணவ தேவியின் தரிசனம் ஒன்றே குறிக்கோளாக பரவசமாக செல்வர்.

நடை பயணத்தில் நாம் பவித்ர கங்கா நதியை கடக்க வேண்டும். தன்னை நாடி வரும் பக்தர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காக தேவியே அம்பெய்து நதியை உற்பத்தி செய்ததாக ஒரு செவி வழி புராணச் செய்தி உண்டு.

வழியில் சரண்பாதுகா என்ற இடம் உள்ளது. இங்கு மாதா தேவி பக்தர் களை பின் தொடர்ந்து அரக்கன் வரு கின்றானா என்று கண்காணித்து பாது காவல் செய்வதாக ஐதீகம் உள்ளது.

அடுத்து வருவது அர்த் குமாரி. இங்கு நாம் செல்லும் பாதையில் ஒரு குகை இருக்கிறது. குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்ரகத்தை தரிசித்து பின்னர், பயணத்தை தொடர வேண்டும்.

அர்த் குமாரியில் இருந்து நடந்தால் மாதா வைஷ்ணவி தேவியின் கோயில் அமைந்துள்ள தர்பாருக்கு முக்கால் கிலோ மீட்டருக்கு முன் பஜார் உள்ளது.

இங்கு தான் மாதாவை பூஜிக்க புஷ்பங்களையும், நிவேதனங்களை யும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

தேவியை தரிசிக்கும் போது, அங்குள்ள பூஜாரி பக்தர்களுக்கு நாணயங்களை பிரசாதமாக வழங்கு வார். அதை பத்திரமாக நம்முடைய வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்தால், தேவியே நம்முடன் இருக்கின்ற தைரியம் ஏற்படும்.

க்யூவில் நகர்ந்து செல்லும் போது 2.5 அடி உயரம், 2.5 அடி அலகம் கொண்ட சிறிய குகை போன்ற துவாரம் உள்ளது. அதில் படுத்த படி ஒவ்வொருவரும் ஊர்ந்து 38 அடி தூரம் சென்றால் மீண்டும் திறந்த வெளி வரும்.

சிறிது தூரத்தில் மீண்டும் ஒரு குகை வருகிறது. இது சற்று விஸ்தாரமானதாக இருக்கும். இங்கு தான் மாதா வைஷ்ணவி தேவியின் பிண்டிகள் எனப்படும், சிலா விக்கிரகங்கள் உள்ளன.

மஹா காளி, மஹாலட்சுமி, மஹா சரஸ்வதி என்று மூன்று வடிவங்களில் மாதா அருள் பாலிக்கிறார்.

அங்குள்ள அகண்ட ஜோதி எப்போதும் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கும். மாதா தேவிக்கு காலை, மாலை என்ற இரு வேளை பூஜை உண்டு.

மாதா தேவியின் கோயில் அடர் காடுகளுக்கு நடுவில் கடல் மட்டத்திலி ருந்து 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளதால் கோடை காலத்தில் சென்று வரலாம்.

 தல வரலாறு :

தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால் பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால் சக்தி கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள்.

அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது கிருஷ்ணன் சிவனின் கோபத்தை தணிக்க சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றே ஜம்மு வைஷ்ணவிதேவி கோயிலாகும்.


ஆன்மீகச் சிந்தனை மலர் :

நல்லது நடக்குமென நம்புங்கள் - சாரதாதேவியார்.

* ஒரு மனிதனுக்கு நல்லகாலம் வந்தால் மட்டுமே அவன் மனம் ஆன்மிக
விஷயத்தில் நாட்டம் கொள்ளும்.

* ஆசைகள் அனைத்தும் நம்மை விட்டு எப்போது விலகிச் செல்கிறதோ அந்தப்
பிறவிதான் நம்முடைய கடைசிப் பிறவியாகும்.
* கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. உலகைப் படைத்தவன் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான். நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்பி அவனைச் சரணடையுங்கள்.


வினாடி வினா :-

வினா : உலக அளவில் அதிக அளவில் பேசப்படும் முதல் மொழி எது ?

விடை :- சீன மொழி - மாண்டரின்.


இதையும் படிங்க :

வேடந்தாங்கல் சரணாலயத்தில் 15 ஆயிரம் பறவைகள்.

மதுராந்தகம், டிச. 1: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகிலுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் புதன்கிழமை பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது. ÷இந்த ஆண்டு இங்கு 15 ஆயிரம் பறவைகள் வந்துள்ளதாக சரணாலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மதுராந்தகத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து அரிய வகை பறவையினங்கள் ஆயிரக்கணக்கில் வருகின்றன.

பருவகால சூழல், உணவு, இனப்பெருக்கம் ஆகிய பல்வேறு காரணங்களுக்காக பல்லாயிரம் கி.மீ. தொலைவை கடந்து இங்கு பறவைகள் வந்து செல்கின்றன. வேடந்தாங்கல் ஏரியில் அமைந்துள்ள மரங்கள், ஏரியில் கிடைக்கும் மீன்கள் மற்றும் பருவகால சூழல் போன்றவை பறவைகள் இனப் பெருக்கத்துக்கு உகந்ததாக உள்ளன. இதனால் இங்கு வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்து பின்னர் தங்கள் குஞ்சுகளுடன் தாயகம் திரும்புகின்றன.

நிகழாண்டில் பருவமழையைத் தொடர்ந்து வேடந்தாங்கல் ஏரியில் தற்போது நீர் நிரம்பியுள்ள நிலையில் பறவைகள் வரத் தொடங்கியுள்ளன.

இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரிய வகை பறவைகளான நத்திகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், தட்டவாயன், கரண்டி வாயன், வக்கா, பாம்புத்தாரா, நீர் காகம், சாம்பல் நாரை, மிளிர் உடல் அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 18 வகை பறவையினங்கள் தற்போது வந்துள்ளன. இவை எண்ணிக்கையில் 15 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் சரணாலயம் திறக்கப்பட்டு, பறவைகள் தங்கியிருக்கும் காலம் வரை திறந்திருக்கும். இந்த ஆண்டு பருவமழை தாமதம் ஆனதால் சரணாலயமும் தாமதமாக திறக்கப்பட்டது.


நன்றி - தின மலர், தின மணி, தட்ஸ்தமிழ்.

1 comment:

Chitra said...

Thank you for the collection of news.

Post a Comment