Wednesday, December 15, 2010

இன்றைய செய்திகள். - டிசம்பர் - 15 - 2010.





உலகச் செய்தி மலர் :

* தமிழில் தேசிய கீதம் பாடம் தடை ஏதுமில்லை-இலங்கை அரசு பல்டி!

கொழும்பு: இலங்கை தேசிய கீதத்தை இனி சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும், தமிழில் பாடக் கூடாது என்று கூறியதை, அடுத்த சில மணி நேரங்களில் மறுத்துள்ளது இலங்கையின் ராஜபக்சே அரசாங்கம்.

இலங்கையில், தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து, அதிபர் ராஜபக்சே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.

லண்டனில் தமிழர்களால் துரத்தப்பட்டு இலங்கைக்கு தப்பி ஓடி வந்த நிலையில், அந்த ஆத்திரத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தமிழ் இணையதளங்கள் கருத்து தெரிவித்திருந்தன.

இது தமிழர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் கருணாநிதி இது தொடர்பாக இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், "இலங்கையில் சிங்களர்களும், தமிழர்களும் வசித்து வருகின்றனர். அதனால் அந்நாட்டு தேசிய கீதம் இந்நாள் வரை சிஙகளத்திலும், தமிழுலும் பாடப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ராஜபக்சே அரசு அந்த வழக்கத்திற்கு தடை விதித்து இனி இலங்கை தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கான தீர்மானமும் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் ஏடுகள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் உண்மை என்றால் ராஜபக்சே அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே புண்பட்டிருக்கும் தமிழர்களை இந்த செய்தி மேலும் புண்படுத்தும். இலங்கையின் அரசின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்," என்று கூறியிருந்தார்.

இலங்கை மறுப்பு:

இப்போது இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை விவகார மந்திரி ஜான் சேனவிரத்னே விளக்கம் ஒன்றை அளித்து உள்ளார்.

அதில், இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வருவதில் மாற்றம் செய்வது குறித்து அமைச்சரவை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்ட உரிமையை பறிக்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம், என்றும் அவர் கூறியுள்ளார்

* தமிழர்களை உடனடியாக காப்பாற்றுங்கள்-மன்மோகனுக்கு பிரான்ஸ் தமிழ் அமைப்பு கோரிக்கை

பாரீஸ்: இலங்கையில் சிக்கித் தவிக்கும், சீரழிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை உடனடியாகக் காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என்று பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.

அமைப்பின் பொதுச் செயலாளர் விசுவலிங்கம் கிருபாகரன் அனுப்பியுள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது...

இன்று 62 ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் உங்களை வாழ்த்துவதில் மிகப் பெருமை அடையும் அதேவேளை இலங்கைத் தீவில் குறிப்பாக, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் படும் அவலங்களை உங்கள் அவசர கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் விஷயத்தில் 1987 ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசினால் பாதிக்கப்படுகின்றனர்.

அரசியல், பொருளாதார, கலை, கலாசார இன்னல்கள் கஷ்டங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமையாகும். இக்கடமையிலிருந்து இந்தியா தவறுவது இம் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தொடர்ந்து கொடுத்து வருகிறது.

இன்று இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள்-புத்த விகாரைகள்-சிங்கள மயப்படுத்தல் போன்றவை மிகத் தீவிரமாக நடைபெறுகின்றன. வடக்கு- கிழக்கிலுள்ள மக்களில் கூடுதலானோர் அகதிகளாக முகாம்களிலும் கைதிகளாக தடுப்புக் காவலிலும் உள்ளனர்.

இவர்களது தாயக பூமியான வடக்கு கிழக்கு பூகோள அமைப்பை இரவோடு இரவாக சிறிலங்கா அரசும் அதன் ராணுவமும் மாற்றி வருகின்றன.

இம் மக்களையும் இவர்களது நிலங்களையும் உடனடியாக காப்பாற்றுவதற்கு இந்திய மக்களும் இந்திய அரசும் உடனடியாக 1987 ஆம் ஆண்டு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஓர் தற்காலிக தீர்வை உங்களால் காண முடியும்.

1987 ஆம் ஆண்டு இந்திய - சிறிலங்கா உடன்படிக்கை உண்மையில் ஓர் நிரந்தர தீர்வாக இருக்காவிடினும் இந்த உடன்படிக்கையை நீங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தியாவினால் தமிழ் மக்கள் படும் இன்னல்களுக்கு உடன் பரிகாரம் நிச்சயம் காண முடியுமென கூறிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

*சீனப் பிரதமர் இன்று இந்தியா வருகை

பெய்ஜிங், டிச.14: சீன நாட்டின் பிரதமர் வென் ஜியாபோ புதன்கிழமை இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

3 நாள் அவர் இந்தியாவில் தங்கியிருப்பார்.
காஷ்மீர் மக்களுக்கு தனித்தாளில் விசா வழங்கி வரும் விவகாரம், ஐக்கியநாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம், வளர்ந்து வரும் வர்த்தக ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகனுடன், வென் ஜியாபோ கலந்து ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வென் ஜியாபோவின் வருகையால் இரு நாடுகளிடையே வர்த்தக உறவு மேம்படும் என்று எதிர்பார்ப்பதாக சீன பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.

* விக்கிலீக்ஸை பாதுகாக்க வேண்டும்: அசான்ஜே வேண்டுகோள்

மெல்போர்ன், டிச.14- விக்கிலீக்ஸ் இணையதளத்தையும் அதன் சேவையையும் காப்பாற்றும்படி ஜுலியன் அசான்ஜே தனது ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், விக்கிலீக்ஸின் எதிர்காலத்திற்காக போராடுமாறு அவர் தனது தாயார் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்தகவலை "தி ஏஜ்" பத்திரிகை வெளியிட்டுள்ளது.
"விசா, மாஸ்டர் கார்ட், பேபால் ஆகியவை அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப செயல்படுகின்றன." என்று அசான்ஜே குற்றம்சாட்டியுள்ளார்.

"விக்கிலீக்ஸ் இணையதளம், அதன் ஊழியர்கள், எனது பணி ஆகியவற்றை சட்டவிரோத மற்றும் அநீதியான நடவடிக்கைகளில் இருந்து இந்த உலகம் பாதுகாக்க வேண்டும்." என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சுவீடன் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவின் பேரில் அசான்ஜே லண்டனில் கைது செய்யப்பட்டார்.

தேசியச் செய்தி மலர் :

* இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளை பிடிக்க தனிப்படைகள்

புதுதில்லி, டிச.14- தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 31 முக்கிய நபர்களை பிடிக்க சிறப்பு தனிப்படைகளை மத்திய அரசு அமைத்துள்ளது.

வெளிநாட்டு ஆதரவுடன் இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபடும் அந்த இயக்கத்தின் 31 நபர்கள் தலைமறைவாக செயல்படுகின்றனர். அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த தீவிரவாதிகளை பிடிக்க 3 சிறப்பு தனிப்படைகளை மத்திய அரசு அமைத்துள்ளது.

தேடப்படுபவர்களில் பலர் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த வாரம், இந்தியாவின் பிரபல கோயில் நகரமான வாரணாசியில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது.

* சத்யானந்த மிஸ்ரா புதிய தகவல் ஆணையர்

புதுதில்லி, டிச.14:  மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைவராக தகவல் ஆணையர் சத்யானந்த மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதுள்ள ஏ.என்.திவாரியின் தலைமை தகவல் ஆணையர் பதவிக்காலம் டிசம்பர் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது.

மத்தியப் பிரதேசத்தின் 1973-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சத்யானந்த மிஸ்ரா டிசம்பர் 20-ம் தேதி பதவியேற்பார் எனத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

தகவல் ஆணையராக மிஸ்ராவை நியமிக்கும் முடிவு பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் மற்றும் சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வரவில்லை. ஊடகங்களின் மூலமாகவே இதுகுறித்து தெரிந்துகொண்டேன் என சத்யானந்த மிஸ்ரா தெரிவித்தார்.

* பேசியது ராசாதான்: உச்சநீதிமன்ற நீதிபதி தகவல்

புதுதில்லி, டிச.14:  கிரிமினல் வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் பேசியது முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாதான் என்பது உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு தெரியும் என்றும் அவருக்கு எழுதிய கடிதத்தில் ராசாவின் பெயரை தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் நீதிபதி எச்.எல் கோஹலே தெரிவித்தார்.

நீதிபதி ரகுபதி விவகாரம் தொடர்பாக அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கோஹலே அனுப்பிய அறிக்கையில் எந்த மத்திய அமைச்சரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். தலைமை நீதிபதியாக இருந்தபோது ரகுபதி எழுதிய கடிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும்  பாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.

அதற்கு தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள கோஹலே பதில் அளித்துள்ளார்.
நீதிபதி ரகுபதியிடம் தொலைபேசியில் பேசியதாக எந்த மத்திய அமைச்சர் பெயரையும் என்னுடைய கடிதத்தில் நான் குறிப்பிடவில்லை என்றும் அந்த மத்திய அமைச்சர் யார் எனத் தெரியாது என்றும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். நீதிபதி ரகுபதியின் கடிதம் ஏற்கனவே அவரிடம் இருந்தது. அதில் 2-வது பாராவில் ராசாவின் பெயரை நீதிபதி ரகுபதி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் என கோஹலே தெரிவித்தார்.

* 2ஜி விவகாரத்தில் சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி: டில்லி, தமிழகத்தில் 34 இடங்களில் ரெய்டு

சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி வலுத்து வருகிறது. கார்ப்பரேட் தரகர் நிரா ராடியாவின் டில்லி வீட்டில் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு மேற்கொண்டுள்ளது. டில்லியில் மொத்தம் 7 இடங்களிலும் ; தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 27 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. அண்மையில் மாஜி அமைச்சர் ராஜாவின் ரெபம்பலூர் வீடு, அவரது சகோதரர் களியபெருமாள், நண்பர் சாதிக்பாஷா ஆகியோரது வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிராய் அதிகாரி வீட்டிலும் : டிராய் ( தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ) மாஜி தலைவர் பிரதிப் பாய்ஜால் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. பிரதீப் பாய்ஜால் 2004 -2008 காலகட்டத்தில் டிராய் தலைவராக இருந்தார்.

மாநிலச் செய்தி மலர் :

* தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்க முயற்சி?



சென்னை, டிச. 14: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 இந்தத் திருத்தங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே முடக்கக் கூடும் என்று ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்திய மக்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்று போற்றப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் துறைகள் தொடர்பான தகவல்கள், செயல்பாடுகளை அறிய இந்த சட்டம் பேருதவியாக உள்ளது. மேலும், அரசுத் துறைகளில் நடைபெறும் பல ஊழல்களையும் இந்த சட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
 இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிக்கை டிசம்பர் 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

 இந்தத் திருத்தங்கள் தொடர்பான கருத்துகளை  டிசம்பர் 27-ம் தேதிக்குள்  usrti-​dopt​@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்ப வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய திருத்தங்கள்: தகவல் கேட்டு விண்ணப்பம் செய்வோர் ஒரு விண்ணப்பத்தில் ஒரு பொருள் குறித்த விவரங்களை மட்டுமே கேட்க வேண்டும். தகவல் கோரும் விண்ணப்பம் என்பது 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.

 விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களைத் திரட்டுவதற்காக ஏதேனும் இயந்திரங்களைப் பயன்படுத்த நேரிட்டால், அதற்கான செலவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரிடமிருந்து வசூல் செய்யப்படும்

முடக்க முயற்சி: இந்தத் திருத்தங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிதைத்து, சட்டத்தையே முடக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுவதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 குறிப்பிட்ட ஒரு நிகழ்வு தொடர்பான தகவல்களைப் பெற ஒரு கேள்வி மட்டும் கேட்டால், போதுமான தகவல்கள் கிடைக்காது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்பது அவசியமாகிறது. அவ்வாறு பல கேள்விகளை உள்ளடக்கிய விண்ணப்பங்களை, பல பொருள்கள் குறித்து கேள்வி கேட்பதாகக் கூறி, நிராகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில்தான் இப்போதைய திருத்தங்கள் உள்ளன என்றார் சம்பத்.

  மக்கள் சக்தி கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரும், தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான சிவ. இளங்கோ கூறியது:
 நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துள்ளது. அவர்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே இந்த சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு குறைவான மக்கள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் நிலையிலேயே, பல அரசுத் துறைகளின் மிக மோசமான செயல்பாடுகள் அம்பலமாகியுள்ளன.
 எனவே, இப்போது பயன்படுத்தும் மிகக் குறைவான மக்கள் கூட இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாத வகையில், மத்திய அரசு சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.

 மத்திய அரசின் இந்த முயற்சியை தொடக்க நிலையிலேயே தடுத்தாக வேண்டும். எனவே, தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, இந்தத் திருத்தங்களை தடுப்பதற்கான போராட்டங்களை நடத்த எங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது என்றார் சிவ. இளங்கோ.

* ஓசோன் படலத்தை பாதிக்கும் தடை செய்யப்பட்ட வாயு அடங்கிய 65 சிலிண்டர் பறிமுதல்

திருவொற்றியூர், டிச. 14: வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, தடை செய்யப்பட்ட வாயு அடங்கிய 65 சிலிண்டர்களை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சென்னையில் பறிமுதல் செய்தனர்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் |2.50 கோடி ஆகும்.

இது குறித்து வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் சி.ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தை பாதிக்கும் வாயுக்கள் உபயோகப்படுத்துவதை தடுக்கும் முயற்சிகளில் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் ஏ.சி., ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட குளிர் சாதனப் பொருள்களில் உபயோகப்படுத்தப்படும் சில வகை வாயுக்களுக்கு சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தடை செய்யப்பட்ட வாயுக்களில் ஒன்று ஆர் 22.

இந்நிலையில் இத்தகைய வாயுக்களை சிலர் சட்டவிரோதமாக வேறு பெயர்களில் இறக்குமதி செய்வதாக தகவல்கள் கிடைத்தன. சென்னை துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் இத்தகைய பொருள்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.

இதில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சென்னை மரைன் டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனம் இறக்குமதி செய்திருந்த 5 சரக்குப் பெட்டகங்களைத் திறந்து சோதனையிட்டதில் 65 சிலிண்டர்களில் ஆர் 22 வாயு நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆனால் ஆவணங்களில் இது ஆர் 401ஏ என குறிப்பிடப்பட்டிருந்ததன் மூலம் திட்டமிட்டு கடத்தல் மூலம் இறக்குமதி செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து 65 சிலிண்டர்களையும் பறிமுதல் செய்துள்ளோம். கடத்தலில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.


வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 107 புள்ளிகள் உயர்வு

மும்பை, டிச.14- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 107 புள்ளிகள் உயர்ந்து 19,799 புள்ளிகளில் முடிவடைந்தது.
ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, எல் அன் டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

ஹீரோ ஹோண்டா, ஜின்டால் ஸ்டீல், மஹேந்திரா அன் மஹேந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலிவர், மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 5,944 புள்ளிகளில் முடிவடைந்தது

* பவுனுக்கு ரூ. 88 உயர்வு

சென்னை, டிச. 14: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 88 உயர்ந்து ரூ. 15,368-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 1,921.
திங்கள்கிழமை விலை:
ஒரு பவுன் ரூ. 15,280.
ஒரு கிராம் ரூ. 1,910.


விளையாட்டுச் செய்தி மலர் :

* ஹாங்காங்கில் பட்டம் வென்றது முதலிடத்துக்கு சமம்: சாய்னா நெவால்

ஹைதராபாத், டிச.14: ஹாங்காங் ஓபன் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது முதலிடத்துக்கு சமமானது என்றார் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்.
இப்போது சாய்னா தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: ஹாங்காங் ஓபனில் கிடைத்த வெற்றி தரவரிசையில் முன்னணியில் உள்ள பல வீராங்கனைகளை வீழ்த்தியதன் மூலம் கிடைத்த சிறப்பான வெற்றி.
இந்த ஆண்டு எனது கனவு ஆண்டு. இந்தாண்டில் ஹாங்காங் ஓபனோடு சேர்த்து 4 சூப்பர் சீரிஸ் போட்டிகளை வென்றுள்ளேன். இது தரவரிசையில் முதலிடத்துக்கு கொண்டு செல்லுமா என்பது தெரியாது.

இந்த ஆண்டுக்குள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். தரவரிசையில் 3 அல்லது 4 இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது ஹாங்காங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது முதலிடத்துக்கு சமமானது

இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய ஓபன் கிராண்ட்ப்ரீ, சிங்கப்பூர் ஓபன், இந்தோனேசிய ஓபன், காமன்வெல்த் போட்டி, ஹாங்காங் ஓபன் ஆகியவற்றில் சாய்னா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

* கிரிக்கெட்டை பிரபலப்படுத்தியதில் டெண்டுல்கரின் பங்கு அளப்பரியது: கிரீம் ஸ்மித்

ஜோகன்னஸ்பர்க், டிச.14: கிரிக்கெட் போட்டியை உலக அளவில் பிரபலப்படுத்தியதில் டெண்டுல்கரின் பங்கு அளப்பரியது என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் திங்கள்கிழமை இரவு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைவர் ட்யூசெலி நியோகா, இரு அணி வீரர்கள், கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில்

மூலவர் : காளியம்மன் (கொண்டத்துக்காரி )

பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
 
  புராண பெயர் :  அழகாபுரி, பராபுரி

  ஊர் :  பாரியூர்

  மாவட்டம் :  ஈரோடு

  மாநிலம் :  தமிழ்நாடு


தல சிறப்பு:
 
  இத்தலத்தில் அம்மன் ருத்ரகோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் சிறப்பாகும். இது 40 அடி நீளம் கொண்டது.
 
1500 ஆண்டுகள் பழமையான கோயில் இது. அம்பாள் கீழ் உள்ள பீடம் 7 பீடமாக அமைந்துள்ளது. எழில் மிகுந்த சூழலில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

 தலபெருமை:
அம்மன் சிரசில் ருத்ரன் உள்ளார். முடி ஜூவாலா முடி (நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போல் இருக்கும்) தாங்கி ருத்ரகாளியாக அமைந்துள்ளார். ருத்ரனின் முகம் அம்மனின் சிரசில் அமைக்கப்பட்டுள்ளது.

குண்டம் இறங்குதல் : பக்தர்கள் மரக்கட்டைகளை கொண்டு வந்து மலை போல் குவித்து அவற்றை எரித்து 40 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக்கி விடுவார்கள். முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள். காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மிகப்பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி ஆகும். ஆண், பெண், சிறுவர் சிறுமியர் உடல் ஊனமுற்றவர்கள் மெத்தையில் நடந்து வருவது போல் தீ கங்கில் அம்மனை நினைத்து 40 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி வருவது ஆச்சர்யமாக இருக்கும்.

குண்டமே அம்மனின் பெயரோடு சேர்ந்து கொண்டத்து (குண்டம்)காளியம்மன் என்று வழங்கப்படுகிறது.

வாக்கு கேட்டல் : அம்மனின் வலது கையில் ராம் வாக்கு உள்ளது. இடது கையில் உத்தர வாக்கு உள்ளது. அம்பாளிடம் தங்கள் பிரச்சினைகளுக்கு உத்தரவு கேட்பவர்கள் வலது கை வாக்கு கிடைத்தால் காரியத்தை தொடர்கின்றனர். இடது கை வாக்கு கிடைத்தால் நிறுத்தி விடுகின்றனர். ஆனால் வியாதிகள் குணமாவதற்கு இடது கை உத்தரவே பெரிதும் வேண்டப்படுகிறது.

முனியப்ப சுவாமி (குழந்தை பாக்கியம்) : இத்தலத்தில் பிரம்மாண்ட வடிவில் உள்ள முனியப்ப சுவாமி மிகவும் அருள் வாய்ந்தவர். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் அம்மனிடம் பூ வைத்து வாக்கு கேட்டுவிட்டு முனியப்ப சுவாமிக்கு செவ்வாய் அன்று 12 குடம் தண்ணீர் ஊற்றி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. தவிர முனியப்ப சுவாமியை வழிபடுவோர் பேய் பிசாசு தொல்லைகளில் இருந்து விடுபடுவர். இவரது திருவடிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட எந்திரங்கள், மஞ்சள் கயிறு போன்றவை தீராத நோய்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தவை.

அம்மன் வடக்கு பார்த்து இருக்கும் கோயில் இது.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அம்மன் அருள்பெற்ற சித்தர் சூரராச் சித்தர் என்பவர்.இவர் அம்மனின் அருள்பெற்றதோடு மந்திரசக்தி படைத்தவராக விளங்கினார். இவர் தம் மந்திரசக்தியின் திறனால் அன்னை காட்சி கொடுத்தாராம். திருக்கோயிலின் கீழ்ப்புறத்தில் பட்டாரி என்னும் கோயில் இருக்கிறது. இதற்கருகில் இன்னும் சமாதி நிலையில் சித்தர் இருப்பதாக கருதப்படுகிறார்.

தல வரலாறு:
பாரியூரில் இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் கொண்டத்து காளியம்மன் கோயில எப்பொழுது அமைக்கப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் கிடையாது.

இக்கோயில் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சரித்திரப்புகழ் பெற்ற கோயிலாக இருக்க வேண்டும் பல நூற்றாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த கோயில் பின்பு அப்பகுதி முக்கியஸ்தர்களால் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலில் சூரராச் சித்தர் என்பவர் மந்திர சக்தி படைத்தவராக இருந்துள்ளார். மந்திரசக்தியினால் அவருக்கு அன்னை காட்சி தந்ததாக கூறப்படுகிறது. சுற்றிலும் பச்சைபசேல் என வயல் வெளிகள் சூழ, மனதுக்கு அமைதி தரும் வகையிலான சுற்று சூழலோடு அமைந்திருக்கிறது.

திருவிழா:
 
  மார்கழி தேர்த்திருவிழா (குண்டம் இறங்குதல்) 5 நாள் திருவிழா 10 லட்சத்துக்ககும் அதிமான பக்தர்கள் கலந்து கொள்வர். ஆடி வெள்ளி உற்சவம் 5 வெள்ளிக் கிழமைகளும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பக்தர்கள் கூடுவர். தவிர தை வெள்ளிக்கிழமைகள், மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். விசேச நாட்களான நவராத்திரி, கார்த்திகை தீபம், பொங்கல், தீபாவளி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடக்கும். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது கண்கொள்ளாக்காட்சி.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

பெண்களிடம் பக்தி செலுத்துங்கள் - மகாகவி பாரதியார்.

* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க
வேண்டுமானால், ஆண்கள் பெண்களிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும்.

* இந்துமதம் துறவறத்தை ஆதரிப்பதில்லை, மாறாக
உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே தேவ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டது.

* பெண்கள் தாம் விரும்புபவரைத் திருணம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொண்ட ஆணுக்குப் பெண் அடிமையல்ல. உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; உயிரிலே ஒரு பகுதியாகும்.

* பெண் விடுதலைக்காக தர்மயுத்தம் துவங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம், இதற்கு பராசக்தி துணைபுரிவாள்.

வினாடி வினா :

வினா - உலகத்தின் முதல் விண்வெளிப் பயணி யார் ?

விடை - சிரு. டிடோ - ரஷ்யா.  

இதையும் படிங்க :

சீனி.விசுவநாதன்' - பாரதியாருக்கு வாய்த்த உ.வே.சா.




சென்னை, டிச.14: ஊர்தோறும், வீடுகள்தோறும் சங்கத் தமிழ் நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்த "தமிழ்த் தாத்தா' உ.வே.சா.வைப் போல, பாரதியாரின் படைப்புகளைத் தேடிப் பிடித்து கால வரிசைப்படுத்திப் பதிப்பித்த பெருமைக்குரியவர் சீனி.விசுவநாதன் என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பாராட்டினார்.
பிரம்ம கான சபையின் சார்பில் மகாகவி பாரதியாரின் 129-வது பிறந்த நாள் விழா, ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார் தொகுத்த "காலம்தோறும் பாரதி' (இரண்டாம் தொகுதி), சீனி.விசுவநாதன் பதிப்பித்த "கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' (11, 12-ம் தொகுதிகள்), கவிஞர் சுரதா கல்லாடன் எழுதிய "நல்லிதய முத்துக்கள்', கவிஞர் ஈஸ்வர் எழுதிய "நல்லி குப்புசாமி அந்தாதி' ஆகிய நூல்களை அவ்வை நடராஜன் வெளியிட, "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார்.

நூல்களை வெளியிட்ட பிறகு, அவ்வை நடராஜன் பேசியதாவது:

கண்ணில் தெரியாத செய்திகளை எல்லாம் தேடித் தேடி இந்த 12 தொகுதிகளையும் நிரப்பி வைத்திருக்கிறார் சீனி.விசுவநாதன்.

பாரதியாரின் பாடல்களைப் போலவே அவரது கட்டுரைகளும் ஆழமானவை. உலக நாடுகளின் அரசியல் நிகழ்வுகளை நுணுக்கமாக அவர் ஆராய்ந்து எழுதியிருக்கிறார் என்பதை அந்த உரைநடைகளைப் பார்த்தால் விளங்கும்.
90 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் விடுதலை குறித்து அவர் எழுதியிருக்கிறார். அப்போதே, தமிழில் எகிப்து என்றுதான் எழுதியிருக்கிறாரே தவிர, "ஈஜிப்ட்' என்று எழுதவில்லை.

ஆங்கிலச் சொற்கள் கலந்த போதும், பிரான்ஸ் நாட்டு அதிபர் பேசிய பேச்சு குறித்து எழுதும்போது வெறும் இலக்கியம் படித்தவரல்ல
இந்த பிரெஞ்சு நாட்டறிஞர் என்று கூறியிருக்கிறார்.

"சுதேசமித்திரன்' கட்டுரைகளின் தனித்தன்மை என்னவென்றால் பல நுணுக்கமான ஆங்கிலச் சொற்களையெல்லாம் பாரதியார் தமிழ்ப்படுத்தி இருப்பதுதான்.

இதைப் பார்க்கும்போது, பழந்தமிழ் நூல்களை எல்லாம் தேடித் தேடி, கால்கள் தேயத் தேய, நடந்து நடந்து, ஊர்தோறும், வீடுதோறும் ஏடுகளைத் தேடிய ஒரு உ.வே.சா.வைப் போல, பாரதியாருக்கு வாய்த்த உ.வே.சா. இந்த சீனி.விசுவநாதன்.

சங்கத் தமிழ் என்று சொல்கிறோம், திருமுறைத் தமிழ் என பேசி மகிழ்கிறோம். அதுபோல, அறிஞர் தூரன் அவர்கள் சொன்ன தொடர்தான் "பாரதி தமிழ்' என்ற தொடர். அந்த பாரதி தமிழின் களஞ்சியத்தை இப்போது வெளியிட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய தொகுப்பாளரான நல்லியின் இந்த நூல்களுக்குள் தேனி போல் சென்று, எண்ணி 120 தொடர்களைத் தேர்ந்தெடுத்து இது நல்லி எழுதியதல்ல; நல்லிதயம் எழுதிய கருத்துகள் என்று புத்தகப்படுத்தியிருக்கிறார் கல்லாடன்.
ஒரு தொடர் முடிந்தால், முடிந்த தொடரை வைத்து அடுத்த பாடலைத் தொடர்வதற்கு அந்தாதி என்று பெயர்.

அந்தாதி பாடுவது என்பது அளப்பரிய புகழுடன் விளங்கும் தலைவனை மனம் நெகிழ்ந்துபோய் புலவன் பாடுவது ஆகும். இதை எப்படி எழுதுவது என்பதற்கு உதாரணமாக ஈஸ்வர் "நல்லி குப்புசாமி அந்தாதி' படைத்திருக்கிறார்.

பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் கடந்த மூன்று நாள்களாக எங்கும் நிகழ்ச்சிகள் கிறுகிறுக்க வைக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக இந்த நூல் வெளியீட்டு விழாவும் உள்ளது.

இந்த நூல்கள் தமிழனுக்கு கிடைத்த மாபெரும் கலைச் செல்வங்கள் ஆகும். இந்தத் தொகுதிகளை அனைவரும் வாங்க வேண்டும். தமிழுக்கு, நமக்கு கிடைத்த பெரும் செல்வம் இது. இதை வெளியிட கிடைத்த வாய்ப்பால் நான் பெருமிதமடைகிறேன் என்றார் அவ்வை நடராஜன்.



நன்றி - தின மணி , தின மலர், தட்ஸ்தமிழ்.

2 comments:

சிவகுமாரன் said...

தமிழர்களை எல்லாம் கருவறுத்த பின்னால் தேசிய கீதம் எந்த மொழியில் பாடினால் என்ன? கருணாநிதிக்கு இப்போதான் விழிப்பு வருகிறதோ ?

Chitra said...

Thank you for the news.

Post a Comment