Thursday, December 9, 2010

இன்றைய செய்திகள். - டிசம்பர் - 09 - 2010

உலகச் செய்தி மலர் :

* ஆவணங்கள் கசிவுக்கு அமெரிக்காதான் பொறுப்பு, விக்கிலீக்ஸ் அல்ல-ஆஸி. அமைச்சர் ரூட் 

மெல்போர்ன்: அமெரிக்க தூதரக தகவல் தொடர்புகள் குறித்த தகவல்கள் கசிய விக்கிலீக்ஸோ அல்லது அதன் அதிபர் ஜூலியன் அஸ்ஸாஞ்சேவோ காரணம் அல்ல. மாறாக அமெரிக்காதான் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கெவின் ரூட்.

அஸ்ஸாஞ்சே ஆஸ்திரேலியர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கெவின் ரூட் கூறுகையில், அமெரிக்க ஆவணங்கள் வெளியாகிறது என்றால் அதற்கு விக்கிலீக்ஸையோ அல்லது ஜூலியனையோ எப்படி குறை கூற முடியும். அமெரிக்காதானே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அனைத்து ஆவணங்களுமே சட்டப்படியானவைதான். எதுவுமே சட்டவிரோதமாக வெளியிடப்படவில்லை.

அமெரிக்க பாதுகாப்பின் தரத்தைத்தான் இவை உண்மையில் அம்பலப்படுத்தியுள்ளன. தங்களது ஆவணங்களைக் கூட பாதுகாப்பாக அவர்களால் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.

இந்த விஷயத்தில் ஜூலியன் அஸ்ஸாஞ்சேவை குறை கூறவே முடியாது. அமெரிக்காதான் இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார் ரூட்.

கெவின் ரூட்டின் இந்தப் பேச்சுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கெவின் ரூட் முன்னாள் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

* சீனப் பிரதமர் அடுத்த வாரம் இந்தியா வருகை

பெய்ஜிங், டிச.8: சீனப் பிரதமர் வென்ஜியாபோ 3 நாள் பயணமாக 300-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் கொண்ட குழுவினருடன் அடுத்தவாரம் இந்தியா வரவிருக்கிறார்.

2005-ம் ஆண்டுக்கு பின் அவர் இந்தியா வருவது இது 2-வது முறை.சீனப் பிரதமரின் பயணம் இம்மாதம் 15-ம் தேதி துவங்குகிறது.

இந்த வருகையின் மூலம் இருதரப்பு தொழில் உறவில் மைல்கல் சாதனை படைக்கவிருப்பதாகவும்,இரு நாடுகளுக்கும் இடையே நீடித்துவரும் பரஸ்பர நல்லுறவை மேம்படுத்துவதே சீன பிரதமர் இம்முறை இந்தியா வருவதன் நோக்கம் என  இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த துûறைகளில் ஒத்துழைப்பைப் பெருக்குவது என்பது குறித்து பேச்சுநடத்துவது என சீனாவுக்கான இந்திய தூதர் எஸ்.ஜெய்சங்கர் சீன உயர்அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இருநாடுகளும் பரஸ்பர பிரச்னைகளில் பிணக்கை குறைத்துக்கொண்டு நல்ல வர்த்தக வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றன என ஜெய்சங்கர் நிருபரிடம் கூறினார். வங்கித்துறை உள்ளிட்ட பல துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைக்க பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக்கூடும். ஆனால், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. அவை முடிந்ததும் என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரியவரும். பிரதமர் மன்மோகன் சிங், வென்ஜியாபோ சந்திப்பு முக்கியமானதாகக் கருதபடுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

* பிரான்ஸ் நாட்டில் செயல்படுகிறது விக்கிலீக்ஸ்

பாரீஸ், டிச.8- விக்கிலீக்ஸ் இணையதளம் பிரான்ஸ் நாட்டில் இருந்து செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் முதல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓவிஹெச் என்னும் இணைய சேவை நிறுவனம் மூலம் விக்கிலீக்ஸ் செயல்படுகிறது.
இந்நிலையில், பிரான்ஸில் இருந்து விக்கிலீக்ஸ் செயல்படுவதை தடுப்பது குறித்து ஆராய அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் எரிக் பெஸன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் தொழில்நுட்ப பிரச்னைகளும் அடங்கியிருப்பதால் இதுகுறித்து உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்றும் கூடுதல் அவகாசம் தேவை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

* பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 என பதிவு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.இது குறித்த அமெரிக்க புவியியல் மற்றும் வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை மாகணமான தாவோ நகரில் நள்ளிரவில் (2.45 மணிக்கு) சகதி வாய்ந்தநிலநடுக்கம் ஏற்ட்டது. இதி ரிக்டர அளவு ‌கோலில் 6.1 ஆக பதிவானாது. இந்ந நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உயிர்சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்‌லை என தெரிவித்து்ளது.


தேசியச் செய்தி மலர் :

நோபல் பரிசு விழாவில் பங்கேற்க இந்தியா முடிவு

புதுதில்லி, டிச.8- நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் நோபல் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.

வரும் 10-ம் தேதி ஓஸ்லோவில் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா கலந்துகொள்வதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவைச் சேர்ந்த லீ ஜியாபோவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் தேசத்துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சீன அரசு குற்றம்சாட்டி சிறையில் அடைத்துள்ளது.

எனவே, அமைதிக்கான நோபல் பரிசு விழாவில் கலந்துகொள்வதை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளுக்கு தூதரகம் மூலம் சீனா கடிதம் அனுப்பியது. இதையடுத்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 19 நாடுகள் விழாவில் பங்கேற்க இயலாது என்று அறிவித்துவிட்டன.

இந்நிலையில், இந்தியா உட்பட 44 நாடுகள் விழாவில் கலந்துகொள்வதை உறுதி செய்து தகவல் அனுப்பியுள்ளன.

* பிரதமர் இன்று பெல்ஜியம், ஜெர்மனி பயணம்


புது தில்லி,டிச. 8: ஐரோப்பிய நாடுகளுடன் தொழில், முதலீட்டு ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உயர் நிலைக் குழுவுடன் பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

புது தில்லியிலிருந்து வியாழக்கிழமை புறப்படும் பிரதமர் பெல்ஜியத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக, தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பாக பேசவிருக்கிறார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கெல், அதிபர் கிறிஸ்டியன் உல்ஃப் ஆகியோருடன் உயர்நிலைப் பேச்சுகள் நடத்தவிருக்கிறார்.

இது தொடர்பான விவரங்களை வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் மேற்கத்திய நாடுகளுக்கான விவகாரங்களைக் கவனிக்கும் செயலர் விவேக் கட்ஜு நிருபர்களிடம் தெரிவித்தார்.


* உளவுத்துறை எச்சரிக்கையை உ.பி. அரசு புறக்கணித்தது: ப. சிதம்பரம்

வாரணாசி, டிச.8- வாரணாசியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை உத்தரப் பிரதேச மாநில அரசு கண்டுகொள்ளவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

வாரணாசியில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

"பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதில் முதல் பொறுப்பு மாநில அரசுக்குத்தான் உண்டு. அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். ஆனால், உத்தரப்பிரதேச அரசு தனது பொறுப்பில் கவனக்குறைவாக இருந்துள்ளது." என்று ப. சிதம்பரம் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதமே உளவுத்துறை சார்பில் மாநில அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும், அதில் வாரணாசியில் ஷீட்லா காட் பகுதியில் கங்கை கரையோரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார்

* சாதனைத் தமிழர் விருது வழங்கும் விழா

சென்னை, டிச.8: மகாகவி பாரதியாரின் 128வது பிறந்தநாளையொட்டி கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் "சாதனைத் தமிழர் விருது" வழங்கும் விழா வரும் 11-ம் தேதி தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
கொல்கத்தா, ஆர்பி அவென்யூவில் உள்ள சரத் ஸ்மிருதி சதனில் நடைபெறும் முதல்நாள் நிகழ்ச்சிக்கு ஹூலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.ஸ்ரீப்ரியா தலைமை வகிக்கிறார். சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் அரங்க ராமலிங்கம் சிறப்புரையாற்றுகிறார்.

மறுநாள் நடக்கும் விருது வழங்கும் விழாவில் சு. கிருஷ்ணமூர்த்திக்கு சாதனைத் தமிழர் விருது வழங்கப்படுகிறது. அவர் எழுதிய "புதிய காற்று: ஒப்பிலக்கியப் பார்வைகள்", "மதுபூர் வெகுதூரம்" ஆகிய நூல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்விழாவில் ஐபிஎஸ் அதிகாரி சிவக்குமார் , வேதபவன் தலைவர் எஸ்.மஹாலிங்கம், திருவள்ளுவர் கலைமன்றத்தின் மு.ராமையா உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

* 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக சிறப்பு நீதிமன்றம்: பரிசீலிக்க உத்தரவு

புதுதில்லி, டிச.8: ரூ. 1.76 கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

குற்றத்தின் முக்கியத்துவம் கருதி சிறப்பு நீதிமன்றம் அமைப்பது அவசியம், இல்லையெனில் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் அந்நிய நிதி மேலாண்மை சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது என நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் தெரிவித்தது.

அரசு தனிநீதிமன்றம் ஏற்படுத்தாவிடில், நோக்கம் நிறைவேறாது. இதுபோன்ற குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் கட்டாயம் தேவை என நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கில் சிறப்பு தொழில்நுட்ப அறிவு அவசியம் என்பதை ஒப்புக்கொண்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், இதுகுறித்து அரசுடன் கலந்தாலோசித்துவிட்டு நீதிமன்றத்திடம் தெரிவிப்பதாகக் கூறினார்.

மாநிலச் செய்தி மலர் :

* குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராசாவைத் தூக்கி எறிவோம்: முதல்வர் கருணாநிதி

சென்னை, டிச. 8: "2 ஜி' அலைக்கற்றை விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவைக் கட்சியில் இருந்து தூக்கி எறிவோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடங்கிய காலங்களில் அந்த ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்கிற விசாரணைக்கும் நாங்கள் தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தில்லி, சென்னை, பெரம்பலூர் ஆகிய நகரங்களில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை புதன்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பதில்:

சி.பி.ஐ. சோதனைகள் நடைபெறுவது ஒன்றும் பெரிதாகப் பேசப்படுகின்ற விஷயம் இல்லை.
சி.பி.ஐ. சோதனை நடைபெற்றதை அவமானமாகக் கருதுகிறீர்களா?

அப்படி நினைக்கவில்லை, ஆனால் அவமானத்திலேயே ஊறியவர்கள் சிலர் நாட்டிலே இருக்கிறார்கள்.

கட்சியில் இருந்து ராசா ஓரங்கட்டப்படுவார் என்று சொல்லப்படுகிறதே?
அவருடைய குற்றம் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு அவரைத் தூக்கி எறிவோம். அதுவரையில் நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என திமுக நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுகிற வரையில் நாங்கள் ராசாவைக் கைவிடத் தயாராகவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக்குழு வேண்டும் என்பதைப் பற்றி?

அதைப்பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பாஜக ஆட்சிக் காலத்தில் இருந்தே அலைக்கற்றை பிரச்னை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு கூட்டுக்குழு வேண்டுமென்று கோருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதில் என்ன?

நீங்கள் அதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடங்கியது முதல் அதற்குப் பிறகு நடைபெற்ற ஆட்சிக் காலங்களில் அந்த ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்று விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.


தொழில்நுட்பச் செய்தி மலர் :

வீனஸை அடைந்தது ஜப்பான் விண்கலம்

டோக்கியோ,டிச.8: வீனஸ் கோளை ஆய்வு செய்வதற்கு ஜப்பான் அனுப்பிய அகத்சுகி (விடியல்)  விண்கலம் செவ்வாய்க்கிழமை (டிச.7) சென்றடைந்தது.

வீனஸை சென்றடைந்ததில் இருந்து விண்கலம், சிக்னலை அனுப்புகிறது. ஆனால் எவ்விதத் தகவலையும் அனுப்பவில்லை. இதனால் விண்கலம் பழுதடைந்துள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விண்கலம் சிக்னலை அனுப்புவதன் மூலம் அது செயலிழக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அது பழுதடைந்திருக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வீனஸில் 2 ஆண்டுகள் ஆய்வு நடத்துவதற்காக அகத்சுகி விண்கலத்தை ஜப்பான் அனுப்பியது. இந்த விண்கல ஆய்வுக் குழுவில் அமெரிக்க விஞ்ஞானிகளும் இடம்பெற்றுள்ளனர்.

பலத்த எதிர்பார்ப்புடன் அனுப்பப்பட்ட விண்கலம், தகவல்களை அனுப்பாதது ஜப்பானுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தகச் செய்தி மலர் :

சென்செக்ஸ் 238 புள்ளிகள் சரிவு

மும்பை, டிச.8- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் 238 புள்ளிகள் சரிந்து 19,696 புள்ளிகளில் முடிவடைந்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஹெச்டிஎப்ஸி வங்கி, டிஎல்எப், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

டாடா மோட்டார்ஸ், ஒஎன்ஜிசி, கெயில் இந்தியா, ஹெச்.சி.எல்., கேஸ்ட்ரோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு காணப்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 72 புள்ளிகள் சரிந்து 5,903 புள்ளிகளில் முடிவடைந்தது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* டெஸ்ட் தொடர்: தோனி, டெண்டுல்கர் தென்னாப்பிரிக்கா பயணம்

மும்பை, டிச.8: கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றது.

டிசம்பர் 16-ல் தொடங்கும் 3 டெஸ்ட் போட்டி தொடருக்காக தோனி, டெண்டுல்கருடன் வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, ஸ்ரீசாந்த், ரிதிமன் சஹா, சுரேஷ் ரெய்னா, இஷாந்த் சர்மா மற்றும் அணி மேலாளர் ரஞ்சித் பிஸ்வால் ஆகியோரும் துபை வழியாக கேப்டவுன் நகருக்குச் சென்றனர்.

சதீஷ்வர் புஜாரா, ஜயதேவ் உனாத்கட் மற்றும் உமேஷ் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் ஆகியோர் முதல்கட்டமாக டிசம்பர் 6-ம் தேதி தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் சேவாக்கும் புறப்படுவதாக இருந்தது. எனினும் உடல்நலக்குறைவு காரணமாக சேவாக் அப்போது புறப்படவில்லை.

ராகுல் திராவிட்டும், விவிஎஸ் லக்ஷ்மனும் நேற்று தென்னாப்பிரிக்கா சென்றடைந்தனர்.

* சென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு

மும்பை: அடுத்த இரண்டு (2011, 2012) ஐ.பி.எல்., தொடர்களுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னா, முரளி விஜய் மற்றும் அல்பி மார்கல் ஆகியோர் நீடிக்க உள்ளனர்.

கடந்த 2008 ம் ஆண்டு ஐ.பி.எல்., அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது 8 அணிகள் சேர்க்கப்பட்டன. இந்த அணிகள் 3 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தன. இவர்களது ஒப்பந்த காலம் இந்த ஆண்டுடன் (2010) முடிந்து விட்டது. இதனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில், மறுபடியும் வீரர்கள் ஏலம் (ஜன. 8) நடக்க உள்ளது.

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ரெய்னா, முரளி விஜய் மற்றும் அல்பி மார்கல் ஆகிய 4 பேரை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதே போல மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின், ஹர்பஜன், போலார்டு மற்றும் லசித் மலிங்கா ஆகியோரை தங்கள் அணியிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

டிராவிட்டுக்கு கல்தா: பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, விராத் கோஹ்லியை மட்டுமே தற்போதைக்கு தக்கவைக்க முடிவு செய்துள்ளது. டிராவிட்டை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணம் பெங்களூரு அணிக்கு இல்லை. இதே போல டில்லி டேர் டெவில்ஸ் அணி, காம்பிரை தக்கவைத்துக் கொள்ள விரும்ப வில்லை. இதனால் டிராவிட், காம்பிர் போன்றோர் வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ள ஏலத்தில் எடுக்கப்படுவர் என தெரிகிறது.


ஆன்மீகச் செய்தி மலர் :

*அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோவில்.

மூலவர் : மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
  -
  அம்மன்/தாயார் : கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி
   -
  தீர்த்தம் :  கோடி தீர்த்தம்
 
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
 
 புராண பெயர் : திருக்கோகர்ணம்

  ஊர் : திருக்கோகர்ணம்
 
மாவட்டம் : உத்தர் கன்னடா
  மாநிலம் :  கர்நாடகா

பாடியவர்கள் :

திருஞானசம்பந்தர், அப்பர்

 தேவாரப்பதிகம்

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் பேரவன்காண்
 பிறப்பொன்று மில்லாதான் காண் கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண் 
கட்டங்கன் காண்கையிற் கபாலம் ஏந்திப் பறையோடு பல்கீதம் பாடினான்
 காண் ஆடினான் காண்பாணி யாக நின்று மறையோடு மாகீதம் கேட்டான் றான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற துளுவ நாட்டுத்தலம்.

தல சிறப்பு :

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கம் மரணமடைந்தவர்களுக்காக இங்கு தினமும் "பிசாசு மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடக்கிறது.
 
கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும், மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது.

தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப் பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் தரிசனம். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது.  பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம் மகாபலேஸ்வரர். கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.

மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் - இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது.

இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது.

விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுரமர்த்தினி சந்நிதிகள், விநாயகர், யானை முகத்துடனும் இரண்டு திருக்கரங்ளோடும் நின்ற கோலத்தில் "துவிபுஜ விநாயகராக'க் காட்சிதருகின்றார்.

இவர் முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்பர். கோயில் சிவலிங்கவடிவில் ஆதிகோகர்ணேஸ்வரர் காட்சி தருகிறார்.

 தல பெருமை :

நதி வடிவ அம்பிகை : கைலாயத்தில் சிவன் மலை வடிவிலும், அம்பிகை நதி வடிவிலும் காட்சி தருவதைப்போல இத்தலத்தில் சிவன் மலையாகவும், அம்பிகை நதியாகவும் அருள் புரிகின்றனர். அம்மனே இங்கு நதியாக ஓடுவதாக கூறப்படுகிறது.

இக்கோயிலின் முன்புறம் நதியும், அதற்கடுத்து மலையும் இருக்கிறது. சிவன் மலையாக வீற்றிருக்கும் தலங்களில், கிரிவலம் மிகவும் விசேஷம். ஆனால், இங்கே நதி இருப்பதால் கிரிவலம் வர முடியாது.

சித்தி தலம் : சிவபெருமான், சுயம்புவாக எழுந்தருளிய தலங்களில் ஒன்று இது. சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பதால் இது ஒரு சித்தி தலமாக விளங்குகிறது. இவரை மகாபலேஸ்வரர் என்கின்றனர். இங்குள்ள அம்மன் "தாமிர கவுரி' எனப்படுகிறாள்.

தல வரலாறு :

கோகர்ணம்- பெயர் விளக்கம் முன்னொரு காலத்தில் படைக்கும் தொழிலை சிறப்பாக நிறைவேற்ற சிவன் கடும் தவம் இருந்தார். அப்போது அவரது நெற்றியிலிருந்து ருத்ரன் வெளிப்பட்டார். படைக்கும் தொழிலை சிறப்பாக செய்ய ருத்ரனே தகுதி வாய்ந்தவர் என்று அவரை வேண்டினார். ருத்ரரும் ஒப்புக்கொண்டு, தான் படைக்கும் சகல ஜீவராசிகளும் நல்ல குணத்துடனும் பலத்துடனும் விளங்க பாதாள உலகம் சென்று கடும் தவம் இருந்தார். இதற்குள் 3 யுகங்கள் கழிந்து விட்டன. எனவே பிரம்மா தானே உயிர்களை படைக்க தொடங்கினார்.

இதையறிந்த ருத்ரர் பயங்கர கோபத்துடன் பாதாள உலகிலிருந்து பிரம்மனிடம் வந்தார். ஆனால், அவரால் படைக்கப்பட்ட பெரிய உலகம் குறுக்கிட்டது. அவர் அதை நொறுக்கத் தொடங்கினார். பயந்து போன பூமாதேவி, ""இறைவா! தாங்கள் தயவு செய்து கோபம் குறைந்து, தங்கள் உருவை சிறிதாக்கி கொண்டு என் காதின் வழியாக மெதுவாக வாருங்கள்,''என கெஞ்சினாள்.

இவளது வேண்டுதலை ஏற்ற ருத்ரன் கட்டை விரல் அளவில் உடலை சிறிதாக்கி கொண்டு அவள் காதின் வழியே வெளியே வந்து, ""பூமாதேவியே! நான் பாதாள உலகில் இருந்து வெளியே வருவதற்கு நீ கருப்பையாக இருந்ததனால் இந்த இடம் "ருத்ரயோனி' என்றும், அதற்கு காரணமான நீ "கோ' (பசு) என்றும், உனது காது "கர்ணம்' என்றும் வழங்கப்படும் என்றார். அன்றிலிருந்து இத்தலம் "கோகர்ணம்' ஆனது. எனவே, இத்தலத்தை "காது துவார தலம்' என்றும் அழைக்கிறார்கள்.

 திருவிழா :

மாசி சிவராத்திரியில் 9 நாள் திருவிழா. முதல் நாள் தேர்த் திருவிழாவும் 8ம் நாள் பிரமோற்ஸவமும் நடைபெறுகிறது. கார்த்திகை பவுர்ணமியில் திரிபுரதகன விழா.
 
திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

நல்ல எண்ணங்களை பெறுவோம் - வியாசர்

* பக்தி ஒளி இருக்கும் மனதில் அறியாமை என்னும் இருள் இருப்பதில்லை. பதவி சாதிக்க முடியாததைக் கூட பக்தியால் சாதிக்க முடியும்.

* பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.

* பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே உண்மையான விரதம். பிறருக்குத் தீமை செய்யாத எந்தத் தொழிலும் உயர்வானதாகும்.

* பேராசை குணம் மக்களின் வாழ்க்கையை திசை திருப்பத் தொடங்கினால், அதன் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வர்.

* கடவுளுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்ப கட்டம். ஞானம் முதிரும் போது பயம் அன்பாக மாறுகிறது. பூரண அன்பு நம் மனதில் பரிணமிக்கும் போது, பயம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவிடுகிறது.வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் ரயில்வே லைன் போடப்பட்ட இடம் எது ?

விடை - மும்பை முதல் தானே வரை [ 34 கி.மீ.]
முதல் ரயில்வே லைன் போடப்பட்ட தினம் - ஏப்ரல் 15 ஆம் நாள் 1853 ஆம் ஆண்டு.
 
இதையும் படிங்க :உடல், மனதுக்கு புத்துணர்வு தருவது யோகா பயிற்சியே : காந்தி மியூசிய தலைவர் பேச்சு

மதுரை : "" யோகா பயிற்சியின் உடல், மனதை புத்துணர்வாக வைத்துக் கொள்ளலாம்'' என, மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த சான்றிதழ் வழங்கும் விழாவில், மியூசியத் தலைவர் பொள்ளாச்சி மகாலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகழகத்தின், மதுரை மையமான காந்தி மியூசியத்தின் மூலம், எம்.எஸ்சி., யோகா படித்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில், மியூசிய செயலாளர் ரெங்கசாமி வரவேற்றார். தலைவர் பொள்ளாச்சி மகாலிங்கம் பேசுகையில்,""உடல் ஒரு நுணுக்கமான கருவி. அதை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும். உணவு
கட்டுப்பாடுடன் பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும்.

 யோகா பயிற்சியானது, உடலையும், மனதையும் புத்துணர்வாக வைத்திருக்கும். உலக நாடுகளில் யோகாவுக்கு வரவேற்பு உள்ளது. இக்கால இளைஞர்கள் யோகா பயிற்சி செய்ய வேண்டும்,'' என்றார். இயக்குனர் ரவிச்சந்திரன் யோகா அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் லட்சுமிகாந்தன் பாரதி,
பொருளாளர் தினகரன் பங்கேற்றனர்.ஆய்வு
அலுவலர் ஜெயராஜ் நன்றி கூறினார்.
நன்றி - தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.

3 comments:

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க.

சுந்தரா said...

நிறைய செய்திகளைத் தொகுத்துக்கொடுத்திருக்கீங்க.

நன்றி!

சங்கரியின் செய்திகள்.. said...

Thank you Chitra and Sundara.

Post a Comment