Friday, December 3, 2010

இன்றைய செய்திகள். - டிசம்பர் - 03 - 2010

உலகச் செய்தி மலர் :

* எல்லைப் பிரச்சனை இருதரப்பு உறவை பாதிக்காது : சீனா

பீய்ஜிங்: இந்தியாவுடன் நிலவும் எல்லைப் பிரச்னை காரணமாக இரு தரப்பு உறவுகள்  பாதிக்கப்படாது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண கடந்த 7 ஆண்டுகளில் 13 முறை  பேச்சுகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் 14-வது சுற்று பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது. இதில் இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர மேனனும் சீன தரப்பில் அந்நாட்டு பிரதிநிதி தாய் பிங்குவோவும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இருதரப்பும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "நியாயமான, இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு விரைவில் ஏற்படும்' என கூறப்பட்டது.


* அல்-குவைதா பற்றி முஷாரப் தந்தார் தகவல்: “விக்கி லீக்ஸ்

வாஷிங்டன் : அல்-குவைதா இயக்கத்தை சேர்ந்த சிலர், பாகிஸ்தானின் எல்லை பகுதிகளில் பதுங்கியிருப்பதாக அப்போதைய பாக்., அதிபர் முஷாரப் ஒத்து கொண்டார் என்பது, "விக்கி லீக்ஸ்' ஆவணங்கள் மூலம் வெளிவந்துள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருப்பது தான், பழங்குடிப் பகுதிகள். பஜாவுர், முகமது, கைபர், ஒராக்சய், குர்ரம், வடக்கு வாசிரிஸ்தான், தெற்கு வாசிரிஸ்தான் என, மொத்தம் ஏழு பழங்குடிப் பகுதிகள் இதில் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் "கூட்டு நிர்வாக பழங்குடிப் பகுதிகள்' (எப்.ஏ.டி.ஏ.,) என்றழைக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர், தலிபான்களுக்கு ஆதரவளிக்கின்றனர். இவர்கள் தான் தலிபான்கள் ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்கும், அதேபோல் பாகிஸ்தானில் இருந்து ஆப்கனுக்கும் ஊடுருவ உதவி செய்கின்றனர். ஆனால், இன்று வரையிலும் பாகிஸ்தான் அரசு, அல்-குவைதாவினரோ, பின்லேடன் மற்றும் அவரது உதவியாளர் அய்மன் அல் ஜவாகிரி ஆகியோர் பாகிஸ்தானில் இல்லை என திரும்ப திரும்ப சொல்கிறது. இதுகுறித்து, பர்வேஸ் முஷாரப் பாக்., அதிபராக இருந்த போது, அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் பேசியுள்ளார். அப்போது, பஜாவுர் பகுதியில் அல்-குவைதாவினர் சிலர் இருப்பதாக அவர் ஒத்து கொண்டார்.

* தமிழர் படுகொலையை முன் நின்று நடத்தியவர்கள் ராஜபட்ச, பொன்சேகா

வாஷிங்டன், டிச.2: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ராஜபட்ச,அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தான் முக்கியக் காரணம் என்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்கள் பலவற்றை கைப்பற்றியுள்ள விக்கிலீக்ஸ் அவற்றை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் பல நாட்டுத் தலைவர்களின் போலி முகமூடிகள் கிழிந்து வருகின்றன.
இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில், இலங்கையில் போரின் போது அப்பாவித் தமிழர்கள் பலரும் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ராஜபட்ச, அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது தம்பிகள், ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம். போரின் போது மனித உரிமைகளை மீறி, இலங்கை ராணுவத்தினர் செயல்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சமாதானப்படுத்திய அமெரிக்கா: இந்தியாவுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதால் அதிருப்தியடைந்த பாகிஸ்தானை அமெரிக்கா எவ்வாறு சமாதானப்படுத்தியது என்ற ரகசியத்தையும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறையினர் பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரியிடம் பேசியுள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இந்த உரையாடலை விக்கிலீக்ஸ் கைப்பற்றி வெளியிட்டுள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* பிரதமரை அவமதித்துள்ளார் ராசா: உச்ச நீதிமன்றம் மீண்டும் கண்டனம்

புதுதில்லி, டிச. 2: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பிரதமரின் அறிவுரையை உதாசீனப்படுத்தியதோடு, அவருக்கு மரியாதைக் குறைவாக கடிதம் எழுதி அவரை அவமதித்துள்ளார் அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி,ஏ.கே. கங்குலி ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வதை சில நாள்களுக்கு ஒத்திவைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், ராசாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். ஆனால் அந்த கடிதத்தை அவர் உதாசீனப்படுத்திவிட்டார்.

மேலும் சட்ட அமைச்சகம் தெரிவித்த கருத்து தொடர்பாக பிரதமருக்கு ராசா எழுதிய கடிதத்தில், "நியாயமற்றது. பாரபட்சமானது, தன்னிச்சையானது' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளார்.

உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்குக் கடிதம் எழுதும்போது இதுபோன்ற வார்த்தைகளையா பயன்படுத்துவது? இதில் அவரது போக்கு, அணுகுமுறை ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. இந்தக் கடிதம் மூலம் பிரதமரை அவர் அவமதித்துள்ளார் என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்

* பீகார் பேரவைத் தலைவராக நரேன் சௌத்திரி மீண்டும் தேர்வு.

பாட்னா, டிச. 2: பிகார் மாநில சட்டப் பேரவைத் தலைவராக ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நரேன் சௌத்ரி, வியாழக்கிழமை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  அண்மையில் பிகார் பேரவைக்கு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

 இந்நிலையில் பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக, சென்ற முறை இப்பொறுப்பை வகித்த நரேன் சௌத்ரியின் பெயர் பேரவையில் முன்மொழியப்பட்டது. அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் சார்பில் யாரும் போட்டியிடவில்லை. இதையடுத்து சௌத்ரி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தாற்காலிக சபாநாயகர் சதாநந்த சிங் அறிவித்தார்.  நரேன் சௌத்ரிக்கு முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் சட்டப் பேரவை கட்சித் தலைவர் அப்துல் பாரி சித்திக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


மாநிலச் செய்தி மலர் :


* மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது மேட்டூர் அணை.

சேலம், டிச. 2: மேட்டூர் அணை 3 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை மாலை நிரம்பியது.

தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்ய 1934-ல் பிரிட்டிஷாரால் மேட்டூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 16.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும். அணை கட்டப்பட்டு 76 ஆண்டுகளான நிலையில் இதுவரை 36 முறை அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் சில மாதங்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் தண்ணீர் தேவையும் குறைந்தது. எனவே அணைக்கு வரும் தண்ணீர் சில நாள்களாகத் தேக்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 5.15 மணிக்கு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது. அணையில் 124 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்றாலும், பாதுகாப்பு கருதி 120 அடி தண்ணீர் மட்டும் தேக்கப்படுகிறது.

இதற்கு முன் 12.8.2007-ல் அணையின் நீர்மட்டம் 122.68 அடியை எட்டியது. அதன்பிறகு தற்போது 120 அடியை எட்டியுள்ளது.

மாலை 5 மணியளவில் அணைக்கு விநாடிக்கு 9,543 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கால்வாய் பாசனத்துக்காக 410 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.
இரவு 8 மணி முதல் அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணை திறப்பு மூலம் அணை மின் நிலையம், கதவணை மின் நிலையங்களில் 210 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும்.

* பள்ளிக் கட்டணம்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்க்கும் மனு தள்ளுபடி

சென்னை, டிச. 2: தனியார் பள்ளிக் கட்டணம் தொடர்பாக உயர் நீதிமன்றம் 5.10.10-ல் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு கட்டணம் நிர்ணயித்தது. இதை எதிர்த்து 6,400 பள்ளிகள் அந்தக் குழுவிடம் மேல்முறையீடு செய்துள்ளன.

இதனிடையே, கட்டணத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிமன்ற தனி நீதிபதி, கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட முறை சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது என்று கூறி கட்டண முறைக்கு தடை விதித்தார்.

இதை எதிர்த்து அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் கடந்த 5.10.10-ல் உத்தரவு பிறப்பித்தது.

நீதிபதி நிர்ணயித்த கட்டணங்களை பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்றும், கட்டணத்தை எதிர்த்து நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகள், இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்களிடம் என்ன கட்டணம் வசூலித்தனவோ அத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மேற்கொண்டு கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது

உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுவதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதை ஏற்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்


*ஆரோக்கியச் செய்தி மலர் :

பழங்கள், காய்கறிகள் சாப்பிட்டாலும்புற்றுநோய் ஆபத்தை தடுக்க முடியாது:ஆய்வில் தகவல்

லண்டன்:"பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை' என்று, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு, புகையிலை பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை அதிகம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோயை நோயை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த கருத்துக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.புற்றுநோய் மற்றும் அது தொடர்பான உணவு பழக்கவழக்கங்கள் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின் முடிவு சமீபத்தில், பல்கலைக்கழகத்தின் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது.

புகைப்பிடிக்கும் பழக்கம், மது, உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களே புற்றுநோய்க்கு முக்கிய காரணம்.உடல் பருமன் குடல், கிட்னி உள்ளிட்ட பகுதிகளில், புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். புகைப்பிடிப்பதால், நுரையீரல், வாய், குடல் பகுதிகளில் புற்றுநோய் பாதிக்கும். நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம், குணமாக்கக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கும்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்பச் செய்தி மலர் :

* பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

பாலசூர் (ஒரிசா) டிச.2: பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

ஒரிசாவின் சாண்டிப்பூர் கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. விண்ணில் சீறிப்பாய்ந்த ஏவுகணை 290 கி.மீ. தூரம் சென்று இலக்கை சரியாகத் தாக்கியது.

முன்பு இருந்ததைவிட இந்த பிரம்மோஸ் ஏவுகணை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சோதனை வெற்றியடைந்து மகிழ்ச்சியளிக்கிறது என்று பாதுகாப்புத் துறை விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை 300 கிலோ எடையுள்ள ஆயுதங்களைச் சுமந்து சென்று 290 முதல் 300 கி.மீ. தொலைவு உள்ள இலக்கைத் தாக்கும் திறனுடையது. 8.4 மீட்டர் நீளமுள்ள இதனை, நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம், தரையில் வைத்தும் ஏவ முடியும். ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 2.8 மடங்கு அதிகவேகத்தில் இது செல்லும்.

நெரிசல் மிகுந்த இடங்களில் கூட இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறனுடயது. எல்லையில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏவுகணை சோதனை நடைபெற்ற சாண்டிப்பூர் கடற்கரைப்பகுதியில் இருந்து 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், வியாழக்கிழமை தாற்காலிகமாக வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்திய பாதுகாப்பு ஆய்வு, அபிவிருந்தி அமைப்பு, ரஷியாவுடன் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. இந்தியாவில் ஓடும் நதியான பிரம்மபுத்திரா, ரஷியாவில் பாயும் மோஸ்க்வா நதியின் பெயரை இணைந்து பிரம்மோஸ் ஏவுகணை என பெயர்சூட்டப்பட்டுள்ளது. அதிவேகமாக பாய்ந்து செல்லும் ஏவுகணைகளில் இதுவும் ஒன்று.

வர்த்த்கச் செய்தி மலர் :

* பங்குச் சந்தையில் 143 புள்ளிகள் உயர்வு

மும்பை, டிச.2: மும்பை பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமையும் ஏற்றம் பெற்றது. மொத்தம் 143 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 19,992 புள்ளிகளானது. தொடர்ந்து நான்கு நாள் வர்த்தகத்தில் மொத்தம் 713 புள்ளிகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச் சந்தையில் 50 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 6,011 ஆக உயர்ந்தது.

உணவுப் பணவீக்க விகிதம் நவம்பர் 20-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ஒற்றை இலக்க அளவுக்குக் குறைந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. இதனால் பங்குகளின் விலைகள் கணிசமாக உயர்ந்தன.

ஆசிய பங்குச் சந்தைகளில் சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தை 0.71 சதவீதமும், ஜப்பானின் நிகெகி 1.81 சதவீதமும் உயர்ந்தன.


விளையாட்டுச் செய்தி மலர் :* உலகக் கோப்பை

2011 உலகக் கோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை பாகிஸ்தானின் லாகூரில் வியாழக்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடக்க நிகழ்ச்சி
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பிப்ரவரி 17-ம் தேதி நடைபெறுகிறது.


ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோவில்

மூலவர் - வடக்கு நாதர்
பழமை - 2000 - 3000 ஆண்டுகளுக்கு ந்
ஊர் - திருச்சூர்
மாவட்டம் - திருச்சூர்
மாநிலம் - கேரளா

தல சிறப்பு :

இத்தலத்தில் உள்ள லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. அமர்நாத் லிங்கத்தை "பனிலிங்கம்' என அழைப்பதைப்போல் இத்தலத்து சிவனை "நெய்லிங்கம்' என அழைக்கிறார்கள்.
 
திருவிழா :

திருச்சூரில் பூரம் திருவிழா மிகவும் சிறப்பு. ஆனால், அத்திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா என்கிறார்கள். சிவராத்திரி காலங்களில் கோயிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
தல பெருமை :

லிங்கத்தின் அமைப்பு: 12 அடி உயரம், 25 அடி அகலம் உள்ள மிகப்பழமையான இந்த நெய்லிங்கம் எப்போதும் உருகாமல், பாறை போல் இறுகி உள்ளது. எப்போதாவது நெய் வெளிப்பட்டால்,  உடனே உருகி காணாமல் போய்விடுகிறது. நெய் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் மற்றும் பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்த லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.

விலகிய நந்தி: இங்குள்ள நந்தி சிவனின் எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் உள்ளார். பிரதோஷ காலங்களில் சிவன் இங்கு எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கோயிலின் சிறப்பம்சம். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார், மற்றவர்கள் தொட அனுமதியில்லை.

தல வரலாறு :

ஒருமுறை சிவனுக்கும் அர்ஜீனனுக்கும் நடந்த போரில் சிவனது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதற்காக தன்வந்திரி பகவான் நெய் தடவி சிகிச்சை செய்தார். இதனால் இங்கு நெய்யால் செய்யப்பட்ட லிங்கம் இருப்பது விசேஷமானது. அமர்நாத்தில் பனிலிங்கம் போல், திருச்சூரில் நெய்யே லிங்கமாக இருப்பது ஆச்சரியமான விஷயம்.
இதை "தென் கைலாயம்' என்கிறார்கள். பரசுராமர் பிரதிஷ்டை செய்த இத்தலம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. கேரளாவில் உள்ள மேற்கு பார்த்த சிவாலயம் இது.

திறக்கும் நேரம்:

காலை 4 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* தானத்தை தம்பட்டம் அடிக்காதீர்கள் - பாம்பன் சுவாமிகள்

* ஒரு மனிதனின் தயவைப் பெறுவதற்குக்கூட நீண்டநாள் போராடுகிறீர்கள். அரசாங்கத்தின் தயவு வேண்டுமானால் இன்னும் அதிகநாள் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சாதாரண ஜென்மங்களுக்கே இப்படி காத்திருக்க வேண்டியது என்றால், கடவுளின் அருளைப் பெறுவதற்கு எவ்வளவுநாள் காத்திருக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே அவரது கருணையைப் பெற பொறுமையுடன் காத்திருங்கள். மிகப்பெரிய பலன் கிடைக்கும்.

* பாவம் செய்யும்போது எப்படி மறைவாக செய்கிறீர்களோ அதேபோல மிகுந்த புண்ணியமான அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும். அப்படியானால்தான் அந்த தானத்திற்குரிய பலன் வெகுவாக கிடைக்கும்.

வினாடி வினா :


வினா :- இந்திய யூனியன் அரசியலமைப்புச் சபையின் தலைவர் யார் ?


விடை :- ஜவஹர்லால் நேரு..


இதையும் படிங்க :

சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண் !!

லண்டன் : ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49). இவர், சூரியன் தனக்கு உரிமையான சொத்து என, கூறி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறி, அதற்குரிய ஆவணங்களை தயார் செய்து, ஸ்பெயின் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் அதற்குஉரிய கட்டணத்தை தனக்கு செலுத்த வேண்டும் எனவும், அவர் கோரியுள்ளார். இதில் வரும் வருவாயில் 50 சதவீதத்தை அரசிடம் கொடுத்து விடுவதாகவும், 20 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு அளிக்கவும், 10 சதவீத நிதியை உலகத்தின் பசி, பிணி போக்கும் திட்டத்துக்கு வழங்கப் போவதாகவும், 10 சதவீத நிதியை ஆராய்ச்சிக்காக செலவிடப் போவதாகவும், மீதமுள்ள 10 சதவீத நிதியை தான் வைத்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். கோடையினால் ஏற்படும் வறட்சி, வெயில் கொடுமையினால் பலி, போன்றவற்றுக்கு இவர் நஷ்டஈடு வழங்குவாரா என்பது தெரியவில்லை

நன்றி - தின மலர், தின மணி , சமாச்சார்.

2 comments:

Chitra said...

Very interesting!

THOPPITHOPPI said...

நல்ல செய்திகன் தொகுப்புகள்

நன்றி.

Post a Comment