Monday, December 13, 2010

இன்றைய செய்திகள்.- டிசம்பர் - 13 - 2010







உலகச் செய்தி மலர் :



* அணுசக்தி துறையில் ஜெர்மனியுடன் ஒத்துழைப்பு: பிரதமர் நம்பிக்கை

பெர்லின், டிச. 11: அணுசக்தி துறையில் இந்தியாவும், ஜெர்மனியும் இணைந்து செயல்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பிரஸ்ஸல்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு சனிக்கிழமை சென்ற அவர், அந்த நாட்டு அதிபர் கிறிஸ்டியன் உல்ஃப், பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
"ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஜெர்மனி அரசு தளர்த்தியுள்ளதால் இரு நாட்டு வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அணுசக்தி துறையில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம்' என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

"அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைப் பின்பற்றி அணுசக்தி துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்' என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வதில் இணைந்து செயல்படுவோம். நிரந்தர, நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று இரு தலைவர்களும் கூட்டாக தெரிவித்தனர்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவும், ஜெர்மனியும் 2011 முதல் இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் என்பது நினைவுகூரத்தக்கது.
வர்த்தக இலக்கு: "இந்தியா- ஜெர்மனி வர்த்தகம் இப்போது 13 பில்லியன் யூரோவாக உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 பில்லியன் யூரோவை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என்று ஏஞ்சலா மெர்கெல் கூறினார்.

இந்திய- ஜெர்மனி வர்த்தகத்தைப் பொறுத்தவரை வானமே எல்லை என்று குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன் சிங், ஜெர்மனி நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உயர் தொழில்நுட்பம், எரிசக்தி, கல்வி ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
சர்வதேச தீவிரவாதம், பருவநிலை மாறுபாடு, ஆப்கானிஸ்தான் நிலவரம் ஆகியவை குறித்தும் இரு நாட்டுத் தலைவர்கள் விவாதித்தனர்


* அமெரிக்க தீவை வாங்க திட்டமிட்டிருந்த சாமியார் நித்தியானந்தா

பெங்களூர்: அமெரிக்காவில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அங்கு தனது ஆசிரமத்தை பெரிய அளவில் விஸ்தரிக்க திட்டமிட்டிருந்தார் நித்தியான்நதா என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருந்து சிக்கிய நித்தியானந்தா மீதான வழக்கு மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர் செய்த லீலைகள் குறித்த தகவல்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. அவர் மீது பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் கற்பழிப்புப் புகார் கூறியுள்ளார்.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சலெஸ் அருகே ஒரு குட்டித் தீவை விலைக்கு வாங்கி அங்கு பிரமாண்ட ஆசிரமம் அமைக்க நித்தியானந்தா முயற்சித்தது தெரிய வந்துள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் அமெரிக்காவில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஆசிரமம் வைத்துள்ளார். அதே பாணியில் தானும் அங்கு ஆசிரமம் அமைக்க முயன்றுள்ளார் நித்தியானந்தா. ஆனால் அதற்குள் ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி கைதாகி விட்டார்.

நித்தியானந்தாவுக்கு வெளிநாடுகளில் 15 இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. இதில் அமெரிக்காவில் மட்டும் 4 இடங்களில் ஆசிரமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

கொழும்பு: இனவெறியின் எல்லைகளை காட்டாறு போல கட்டறுத்து ஓடிக் கொண்டிருக்கிறது ராஜபக்சே அரசு. எப்படியெல்லாம் தமிழையும், தமிழைனையும் கொல்ல முடியுமோ, அதையெல்லாம் செய்து வருகிறது ராஜபக்சே அரசு.

தற்போது அதில் ஒரு முக்கிய நிகழ்வாக, இனிமேல் இலங்கையில், தேசதிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும், தமிழில் பாடப்பட மாட்டாது என்ற முடிவை எடுத்துள்ளதாம் ராஜபக்சே அரசு.

தற்போது சிங்களத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. ஆனால் தற்போதுதான் ஒரே நாடாகி விட்டதே, இனியும் எதற்கு தமிழ் என்று பேசி வருகிறாராம் ராஜபக்சே. இதையடுத்து இனிமேல் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாடினால் போதும் என்று அவர் முடிவெடுத்துள்ளாராம்.

லண்டனுக்குப் போன ராஜபக்சேவுக்கு தமிழர்கள் கொடுத்த பிரமாதமான வரவேற்பினால் வெகுண்டு, வெந்து நொந்து போய் கொழும்புக்குத் தப்பி ஓடி வந்த வேகத்தில் இந்த தமிழ் தேசிய கீதத்திற்குத் தடை போட்டுள்ளார் ராஜபக்சே.

லண்டன் திரும்பிய பின்னர் அவர் அமைச்சரவையைக் கூட்டி எந்த நாட்டிலும் பல மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை. அப்படிஇருக்கையில் இலங்கையில் மட்டும் ஏன் இரு மொழிகளில் பாட வேண்டும் என்று கேட்டாராம்.

ராஜபக்சேவின் இந்தப் பேச்சுக்கு உடனே ஒத்து ஊதி ஆமோதித்தாராம் இனவெறி அமைச்சரான விமல் வீரவன்ச. அதேசமயம், இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று சற்றே தைரியமாக கூறியுள்ளனர் அமைச்சர்கள், வாசுதேச நாணயக்கார மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர்.

ஆனாலும் ராஜபக்சே சொல்லுக்கு அப்பீல் ஏது. எனவே அமைச்சரவை அவரது கூற்றை ஏற்றுக் கொண்டு விட்டதாம்.

இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த முக்கியமான முடிவை ராஜபக்சே அன்ட் கோ விவாதித்துக் கொண்டிருந்தபோது, வாய் மூடி, எதுவும் பேசாமல், கப்சிப்பென்று உட்கார்ந்திருந்தார்களாம் அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழர்களான டக்ளஸ் தேவானாந்தா, ஆறுமுகம் தொண்டமான், ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம் அத்தாவுல்லா ஆகியோர்.

* பிரிட்டனில் கருத்து சுதந்திரம் இல்லை: இலங்கை அமைச்சர்

கொழும்பு, டிச.12- பிரிட்டனில் தற்போது கருத்து சுதந்திரம் இல்லை என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

"அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிடும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனரை பிரிட்டன் கைது செய்துள்ளது. பிரிட்டனில் கருத்து சுதந்திரம் இல்லை. ஆப்கன், ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் போர்க்குற்றம் தொடர்பான புகார்கள் குறித்து பிரிட்டன் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்." என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* உள்ளாட்சி தேர்தல்: மாயாவதி கட்சி அபார வெற்றி

லக்னோ, டிச.12- உத்தரப் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் உள்ள 49 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளில், 30 இடங்களை பகுஜன் சமாஜ் கட்சி கைப்பற்றியுள்ளது.

முலாயம் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

* "தேர்தல் கருத்துக் கணிப்பை தடை செய்ய வேண்டும்': எஸ்.ஒய்.குரேஷி

போபால், டிச. 12: தேர்தல் கருத்துக் கணிப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மத்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்தார்.

 போபாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் குறித்த கருத்தரங்கில் அவர் மேலும் கூறியது:
தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற கருத்துக் கணிப்புகள் இடையூறாக உள்ளன.

பணம் கொடுத்து செய்தி வெளியிடும் விவகாரம் குறித்து பல்வேறு புகார்கள் எழுவதால் தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கலாம் என்பதே எனது கருத்து.

வாக்குப் பதிவு நாளில், முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு சில சமயங்களில் | 500 மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. இது போன்ற குற்றங்களில் தண்டனையை கடுமையாக்க
வேண்டும்.

தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. இது குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. இது குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

 பல்வேறு இடங்களில் பதிவான வாக்குகளை கலந்து ஒரே இடத்தில் வாக்குகளை எண்ண திட்டமிட்டுள்ளோம்.

இதன்மூலம் குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாக்காளருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன என்ற ரகசியத்தைக் காப்பாற்ற முடியும் என்றார்.

இந் நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பேசியதாவது:

ஜனநாயகத்தின் பிரமாண்ட திருவிழா தேர்தல். இதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பிராந்திய அளவில் 7 கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தேசிய அளவில் ஏப்ரல் 2, 3-ம் தேதிகளில் கருத்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறும்.

ஜனநாயக ரீதியில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்றார்.

* காஷ்மீரிகளுக்கு தனி விசா தருவதை நிறுத்தியது சீனா: நிலையில் மாற்றம்?

புது தில்லி, டிச.12: காஷ்மீர் பகுதி மக்களுக்கு தனி விசா வழங்குவதை சீனா நிறுத்தியுள்ளது.
இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து சீனாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீன பிரதமர் வென் ஜியாபோ, இந்தியாவுக்கு புதன்கிழமை வரவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இருநாடுகளின் ராஜாங்க உறவுகளைப் பாதிக்கும் விவகாரங்களை ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்போம் என்று சீன அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

இதில் முக்கியமாக சீனா செல்லும் காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்குவதை நிறுத்துவதை பரிசீலிப்பதாக அந்த அதிகாரிகள் கூறியிருந்தனர். அதன்படி இப்போது காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்குவதை சீனா நிறுத்திக் கொண்டுள்ளது என்று இந்திய வெளிறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சமீபத்தில் சீனாவில் நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காஷ்மீரைச் சேர்ந்த பாடகி தன்யா குப்தா, சீனா சென்றார்.

அவருக்கு சீன தூதரகம் தனி விசா வழங்கவில்லை. அவருக்குப் பின் சீனா சென்ற காஷ்மீர்வாசிகள் இருவருக்கும் தனி விசா வழங்கவில்லை

முன்னதாக வியத்நாம் சென்ற போது சீன பிரதமர் வென் ஜியாபோவை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார். அப்போது இந்த தனி விசா விவகாரம் குறித்து இந்தியாவின் அதிருப்தியை அவரிடம் நேரில் தெரிவித்து, இதனை சீனா மாற்றிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஓராண்டாக காஷ்மீரில் இருந்து சீன விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும் சீனா தனி விசாவை வழங்கி வந்தது.
இது தொடர்பாக அப்போதே கண்டனம் தெரிவித்த இந்தியா,  திபெத் சீனாவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தபகுதியோ, அதைவிட காஷ்மீர் இந்தியாவின் முக்கியம் வாய்ந்த இடம் என்று குறிப்பிட்டிருந்தது.

சீனா எப்போதுமே இந்தியாவை விட பாகிஸ்தானுடன் அதிக நட்புறவைக் காட்டி வருகிறது. எனவே காஷ்மீருக்கு தனி விசா வழங்கியதன் மூலம் காஷ்மீரை உரிமை கொண்டாடிவரும் பாகிஸ்தானுக்கும் சீனா மறைமுக ஆதரவு அளித்ததாகக் கருதப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது சீனாவின் நிலையில் இந்தியாவுக்கு சாதகமான சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


* பெளத்த நாட்டவர்களுக்கு வந்த உடனே விசா: இந்தியா முடிவு

புது தில்லி,டிச.12: கம்போடியா, பிலிப்பின்ஸ், வியத்நாம், லாவோஸ், மியான்மர் ஆகிய 5 பெளத்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியா வந்திறங்கியவுடன் விசா வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

  ஜப்பான், சிங்கப்பூர், பின்லாந்து, லக்ஸம்பர்க், நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வந்தவுடன் விசா வழங்கும் முறையை ஏற்கெனவே இந்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மேலும் 5 ஆசிய நாடுகளுக்கு இம்முறையை இந்திய அரசு நீட்டித்துள்ளது.

  இந்தியாவில் உள்ள புத்த தலங்களுக்கு இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து செல்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த நாட்டவர்களுக்கு புத்தாண்டு பரிசாக வரும் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து இம்முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 இதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சக அதிகாரிகள், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடனும், உள்துறை அமைச்சக அதிகாரிகளுடனும் ஆலோசித்து முடிவெடுத்துள்ளனர்.

 இந்த 5 நாடுகளில் இருந்து வரும் பெளத்தமத பக்தர்களும், மக்களும் அலைக்கழிக்கப்படாமல் விமான நிலையங்களில் வந்திறங்கியதும் அங்கேயே விசாவை பெற்றுக்கொள்ளலாம். இந்த விசா மூலம் இந்தியாவில் 30 நாள்கள் தங்கியிருந்து சுற்றிப்பார்க்க இயலும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 வந்தவுடன் விசா வழங்கும் முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து நவம்பர் வரை ஜப்பான், சிங்கப்பூர், பின்லாந்து, நியூசிலாந்து, லக்ஸம்பர்க் ஆகிய நாடுகளில் இருந்து 5,644 பேர் இந்தியாவுக்கு வந்து இந்த விசாவை பெற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

 இப்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ள 5 நாடுகளைச் சேர்ந்த மக்களிடமும் இந்த விசா முறை வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

 இந்தியாவில் உள்ள புத்த தலங்களுக்கு பெளத்த நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு பயணிகள் புத்த தலங்களுக்கு எளிதாக செல்லும் வகையில் சிறப்பான ரயில் சேவை அளிக்கப்பட்டு வருகிறது


* இன்போசிஸ் நிறுவனத்தின் தொழில் 'ரகசியம்' குறித்த நூல் வெளியீடு

பெங்களூர்: நாட்டின் 2வது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தனது தொழில் 'ரகசியம்' குறித்த நூலை வெளியிடுகிறது.

Leadership @ Infosys என்ற பெயரில் வெளியாகும் இந்த நூலில் இன்போசிஸ் நிறுவனத்தின் தொழில் உத்திகள், தலைமைத்துவ செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தகவல்கள் இடம் பெறவுள்ளன.

டிசம்பர் 13ம் தேதி வெளியாகும் இந்த நூலை பெங்குயின் இந்தியா கொண்டு வருகிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் தொடர் வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்தும் இந்தநூலில் விளக்கப்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியும், நிர்வாக இயக்குநருமான கோபாலகிருஷ்ணன் கூறுகையில், தலைமைத்துவ கோட்பாடு உள்ளிட்டவை குறித்து இதில் நாங்கள் விளக்க முற்பட்டுள்ளோம். ஒவ்வொருவரின் சுய அனுபவத்தின் அடிப்படையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நூலின் ஆசிரியர் இன்போசிஸ் தலைமைத்துவ கழகத்தின் துணைத் தலைவரும், இயக்குநருமான மாட் பார்னி ஆவார். இதற்கு இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அணிந்துரை வழங்கியுள்ளார்.

மாநிலச் செய்தி மலர் :

* கொடைக்கானலில் அதிரடிப்படையினர் தீவிர சோதனை

கொடைக்கானல்,டிச. 12: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, அதிரடிப் படையினர் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 கொடைக்கானல் மலைப் பகுதிகளான பாலமலை, அடுக்கம், தாழையூத்து கொம்பு, வெள்ளகெவி, வட்டக்கானல், பேரிஜம் ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.

 இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. தினகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீஸôர் மற்றும் வனத்துறையினர்,  மலைப் பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. பாஸ்கரன்,இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் வனத்துறை ரேஞ்சர்கள்  முஸ்தபா,ராஜாமணி உள்பட பலர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* கதைகளுக்கு இருக்கும் வரவேற்பு இலக்கிய நூல்களுக்கு இல்லையே!



மதுரை, டிச. 12: தமிழகத்தில் கதை நூல்களுக்கு இருக்கும் வரவேற்பு இலக்கிய நூல்களுக்கு இல்லாதது வேதனை அளிப்பதாக உள்ளது என பேராசிரியர் தமிழண்ணல் தெரிவித்தார்.

 மதுரையில் மீனாட்சி புத்தக நிலையத்தின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி காலேஜ் ஹவுசில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து அவர் பேசியதாவது:

   புதுமைப்பித்தன் கதைகளைவிட, ஜெயகாந்தன் கதைகளைப் படிக்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. வாழும் கபிலராக ஜெயகாந்தன் இருக்கிறார். நாட்டில் கதை நூல்களுக்கு இருக்கும் வரவேற்பு இலக்கிய நூல்களுக்கு இருப்பதில்லை. வாஸ்து, ஜோதிடம், சமையல் குறிப்புகளை எழுதுகிறவர்கள் இப்போது ஜெயகாந்தனைவிட அதிக மதிப்புப் பெறுகிறார்கள்.

 ஜெயகாந்தனைப் பின்பற்றி இப்போது இலக்கியப் படைப்பாளிகள் செயல்பட்டு வருகிறார்கள். சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது முதல் படைப்பாளிகள், பதிப்பாளர்களிடம் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

 "வரப்புயர நீர் உயரும்...நீர் உயர...நெல் உயரும்' என்பது போலவே திறமை போற்றப்பட்டால் புலமை வளரும். புலமையைப் போற்றினால் இலக்கியம் வளரும். இலக்கியம் வளர்ந்தால் படைப்பாளர் வளருவர். படைப்பாளர் வளர பதிப்பாளர் வளருவர்.

 நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், தமிழண்ணல், மணிமொழியன், பா.ஆனந்தகுமார், பேராசிரியர் ரா.மோகன், நிர்மலா மோகன், ம.பெ. சீனிவாசன், கர்ணன், வீ.மோகன், யாழ். சந்திரா உள்ளிட்ட 26 பேருக்கு பதிப்பகம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ஜெயகாந்தன் பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய ஜெயகாந்தன், "இப்போது எனக்கு 77 வயதாகிறது. தமிழில் பிழை திருத்தவே நான் அச்சகத்தில் பணிபுரிந்தேன். அங்கேதான் எனக்கு மீனாட்சி புத்தக நிலையத்தின் செல்லப்பன் அறிமுகமானார். நான் திருத்தம் செய்த புத்தகத்தில் பிழைகளே இருக்காது. ஆகவே, ஏராளமான பதிப்பகத்தார் என்னை பிழை திருத்த நாடினர். இப்போது எழுதுகிறவர்கள் இருப்பதைப் போல, எழுத்தைப் படிப்பவர்கள் அதிகம் இல்லை என்பதில் வருத்தமாக உள்ளது. உண்மையில், எழுதுகிறவர்கள் மெஜாரிட்டியாகவும், படிப்போர் மைனாரிட்டியாகவுமே உள்ளனர். இதுவும் நான் எழுதாததற்கு காரணமாகும்.

   தம் மொழி மீது அன்பு கொண்டவர்களுக்கு பிற மொழி மீது வெறுப்பு வராது. தமிழில் பல வார்த்தைகள் இல்லாமல் இருப்பதில் எனக்கு வருத்தமில்லை. அதைச் சேர்த்துக் கொள்ளலாம். தொல்காப்பியர் கூட திசைச் சொல், வட சொல் எனக் கூறியுள்ளார். வட மொழிக்கும், தமிழுக்கும் மரபார்ந்த சொந்தம் உள்ளது.

கருணாநிதியிடம் எனக்குப் பிடித்தது வடமொழிச் சொல்லை அவர் பயன்படுத்துகிறார். வலிந்து தமிழாக்கம் செய்வது சரியல்ல. மாறுபட்ட அர்த்தத்தைத் தரும்போது மொழி கடன் வாங்குகிறது. தேசமே கடன் வாங்கும்போது மொழி வாங்குவது சரியானதே. கம்பன் அதுபோல நிறையச் சொற்களைப் பயன்படுத்துகிறார்.

 பிறமொழிகளை நேசிப்பதால் தமிழுக்குக் குறைவு வராது. நாம் யாருக்கும் அடிமையாக மாட்டோம். பெருமையுடையோரைப் பெருமைப்படுத்த வேண்டும். நான் எழுத மாட்டேன் என்று கூறியதை மாற்றி, மீண்டும் மீனாட்சி புத்தக நிலையத்தார் எனை எழுத வைப்பார்கள் என நம்புகிறேன்' என்றார் ஜெயகாந்தன்

* பாரதியார் கொள்கை முழக்கமே இன்று நாட்டுக்கு தேவை: பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி

திருவள்ளூர், டிச. 12: அச்சமில்லை, அச்சமில்லை என்று பாடிய பாரதியின் கொள்கை முழக்கம் தான் இன்று நாட்டுக்கு மிகவும் தேவையானது என்று பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட பாரதியார் குறித்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, திருவள்ளூரை அடுத்துள்ள கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிபத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி மேலும் பேசியது:

பாரதியாரின் கனவை கிராமப் பகுதியில் உள்ள இலவசப் பள்ளி மூலம் நடைமுறைப் படுத்துவது மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பாரதியின் சிந்தனைகளை பரப்பும் வகையில் பள்ளிகளுக்கு இடையே போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவது பாராட்டுக்குரியது

மாணவர்களுக்கு ஞாபகத் திறன் அதிகளவில் இருக்க வேண்டும். மாணவர்கள் பள்ளியில் படித்து மேல் படிப்புக்குச் சென்ற பிறகும், சிறுவயது முதல் பெரியவர்கள் தங்களுக்கு வழங்கிய அறிவுரைகளை எந்நேரமும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு தங்களது வாழக்கைப் பாதையை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக, பாரதியாரின் வாழ்க்கை நிகழ்வுகள், கவிதை குறிப்புகள், விடுதலை வேட்கையில் ஈடுபாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை எஸ்.குருமூர்த்தி திறந்து வைத்து பார்வையிட்டார்.

விழாவுக்கு சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வி.முரளிதரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜி.சிட்டிபாபு நன்றி கூறினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

வர்த்த்கச் செய்தி மலர் :

*சார்லிசாப்ளின் படங்கள் டிவிடி மூலம் இந்தியாவில் விற்பனை
டிசம்பர் 12,2010,16:01
புதுடில்லி:சார்லி சாப்ளின் படங்களான திகிட், தி கோல்டுரஷ், சிட்டிலைட் போன்றவை மதன்முறையாக டிவிடி மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளன. ஈகிள் ஹோம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் எம்கே2 குரூப் உடன் இணைந்து இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது

* வால்பாறையில் காய்கறி விலை 'கிடுகிடு' உயர்வு.

வால்பாறை: சமவெளிப்பகுதிகளில் கன மழை எதிரொலியால், வால்பாறையில் காய்கறி விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. வால்பாறைக்கு தேவையான காய்கறிகள் பொள்ளாச்சி, கோவை, பழநி, மேட்டுப்பாளையம், ஊட்டி உள்ளிட்டப்பல்வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்படுகிறது. சமவெளிப்பகுதிகளில் தற்போது கன மழை பெய்துவருவதால் , வால்பாறைக்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வால்பாறை மார்கெட்டில் காய்கறி கிடு, கிடுவென விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.28 க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.60க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.28 க்கும், பெரியவெங்காயம், காரட், பீன்ஸ் ஆகியவை கிலோ ரூ.40 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் ஒன்றுக்கு ரூ.16 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத வகையில் காய்கறி விலை உயர்வால் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காய்கறி வாங்க முடியாமல் பரிதவிக்கின்றனர்

விளையாட்டுச் செய்தி மலர் :




* உலக மகளிர் செஸ்: காலிறுதியில் கொனேரு ஹம்பி

ஹட்டே, டிச.12: இத்தாலியில் நடைபெற்று வரும் உலக மகளிர் செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மூன்றாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை அன்னா ஸடோன்ஸ்கியை ஹம்பி எதிர்கொண்டார். இதில் முதல் ஆட்டத்தில் ஹம்பி வெற்றி பெற்றார். காலிறுதிக்கு முன்னேற இரண்டாவது ஆட்டத்தில் டிரா செய்தாலேபோதும் என்ற நிலையில், அந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து ஹம்பி காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தார்.

மற்றொரு 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை ஹரிகா, உக்ரைனின் மரியா முஸிசுக்கை எதிர்கொண்டார். இதில் முதல் இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தன. இதனால் மூன்றாவது ஆட்டத்தில் வெற்றி பெறும் நபரே காலிறுதிக்கு முன்னேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

* சிறந்த 10 விளையாட்டு நிகழ்வுகள் பட்டியலில் சச்சினின் இரட்டை சதம்

லண்டன், டிச.12: டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2010-ம் ஆண்டின் சிறந்த 10 விளையாட்டு நிகழ்வுகள் பட்டியலில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில்  சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் குவித்தது இடம்பெற்றுள்ளது.

லண்டனிலிருந்து வெளியாகும் உலகின் முன்னணி பத்திரிகையான டைம்ஸ், இந்த ஆண்டின் மிகச் சிறந்த முதல் 10 விளையாட்டு நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதில்,
""விளையாட்டில் சில சாதனைகள் எளிதில் முறியடிக்க முடியாததாக இருக்கும். அந்த வகையில் கிரிக்கெட்டில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 200 ரன்களைக் குவித்ததும் ஒரு மகத்தான சாதனையாகும்.

கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கும் சச்சின், குவாலியரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதத்தை எட்டிய விதம் பரவசமூட்டுவதாக இருந்தது.

அந்த ஆட்டத்தில் "லிட்டில் மாஸ்டர்' சச்சின் 199 ரன்கள் அடித்திருந்தபோது, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் உற்சாகக் கூச்சலிட்டும், இந்திய தேசியக் கொடியை ஏந்தியும் உச்சக்கட்ட பரவசத்தில் இருந்தனர். அவர் மேலும் 1 ரன் எடுத்து 200 ரன்களைத் தொட்டத்தருணம், உலக கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் என்றும் அழியாது நிலைபெற்றுவிட்டது'' என்று டைம்ஸ் பத்திரிகை புகழ்ந்துள்ளது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு மகாதேவர் திருக்கோவில்

மூலவர் : மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்,

  அம்மன்/தாயார் : உமையம்மை
  தல விருட்சம் :  சரக்கொன்றை
  தீர்த்தம் :  சிவகங்கை
   -
  பழமை :  2000-3000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருவஞ்சிக்குளம்
  ஊர் :  திருவஞ்சிக்குளம்
  மாவட்டம் :  திருச்சூர்
  மாநிலம் :  கேரளா

பாடியவர்கள்:
 
 
சுந்தரர்

தேவாரப்பதிகம்

தலைக்குத்தலை மாலை அணிந்த தென்னே சடைமேற்கங்கை வெள்ளம் தரித்த தென்னே அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்த தென்னே
 அதன்மேற்கத நாகங்கச்சு ஆர்த்த தென்னே மலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு அலைக்கும்கடல் அங்கரை மேல் மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற மலைநாட்டுத்தலம்.


தல சிறப்பு:
 
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தனது 18வது வயதில் தன் நண்பர் சேரமானுடன் கேரளாவில் உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்குள்ள இறைவனிடம், இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி "தலைக்கு தலை மாலை' என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். உடனே சேரமான் குதிரையில் சுந்தரரை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன்னே கைலாயம் சென்று விட்டார். சுந்தரர் இறைவனின் பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போதும் இறைவனை நினைத்து பதிகம் பாடினார். ""தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே நானெனை பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே!'' இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார்

இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள்.

கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னனதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை

தலபெருமை:
சமயக்குரவர்களில் சுந்தரர் பாடிய தலம் இது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். ஒரு முறை சேர மன்னன் திருவாரூர்க்கு வர, சுந்தரர் அவரை வரவேற்று உபசரித்தார்.

சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார்.

தல வரலாறு:
தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும்.

இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார்.

திருவிழா:
 
  மாசி மாதம் மகாசிவராத்திரி 8 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசையில் ஆறாட்டு நடக்கிறது.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :



* மன உறுதியுடன் இருங்கள் - சுவாமி விவேகானந்தர்.

*    ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக் கின்றான். அவனை உணர்ந்த வனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.

*    தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லா வற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல் பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம்.

*    எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூய வராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டு மானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும்.

*    உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.
  

வினாடி வினா :

வினா - புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்மணி யார் ?


விடை - அருந்ததி ராய்.

இதையும் படிங்க:

ரூ. 23 லட்சம் கோடியைச் சுருட்டினார் தந்தை: அவமானத்தால் மகன் தற்கொலை

நியூயார்க், டிச.12: அமெரிக்காவில் முதலீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 23 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயைச் சுருட்டிய பெர்னார்ட் மேடாஃப்பின் மகன் மார்க் மேடாஃப் (46) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பணமோசடியை நிகழ்த்திய பெர்னார்ட் மேடாஃப்,  இப்போது  150 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.

பணமோசடி குற்றத்துக்காக அவர் கடந்த 2008 டிசம்பர் 11-ல் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து அதே நாளில் அவரது மகன் மார்க் மேடாஃப் தற்கொலை செய்து கொண்டார்.

தந்தை செய்த மோசடியால் ஏற்பட்ட தொடர் அவமானங்கள் காரணமாகவும், தந்தையிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் பணம் கேட்டு வந்ததாலும் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
நியூயார்க்கில் உள்ள வீட்டில் இருந்த அவர் நாயைக் கட்ட பயன்படுத்தப்படும் கயிற்றால் சனிக்கிழமை தூக்கிட்டுக் கொண்டார். அடுத்த அறையில் அவரது 2-வயது மகன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

சாவதற்கு முன் ஃபுளோரிடாவில் உள்ள தனது மனைவிக்கு அவர் இ-மெயில் அனுப்பியுள்ளார். அதில் மகனை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்த மெயிலைப் பார்த்த அவரது மனைவி நியூயார்க்கில் உள்ள தனது தந்தைக்கு தகவல் அனுப்பியுள்ளார். அவர் மார்க்கின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டது தெரியவந்தது. தற்கொலைக் காரணம் குறித்த குறிப்பு எதையும் மார்க் எழுதிவைக்கவில்லை என்று போலீஸôர் தெரிவித்தனர்.

தந்தையின் மோசடி: இவரது தந்தை பெர்னார்ட் மேடாஃப் (71) முதலீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். முதலில் அதிகம் லாபம் தருவதைப் போல காட்டி மக்களைக் கவர்ந்தார். இதனால் அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பலர் இவரது முதலீட்டு நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். கோடிக்கணக்கில் பணம் சேர்ந்த உடன் அவர் தலைமறைவாகி விட்டார். ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 23 லட்சத்து 50 ஆயிரம் கோடியை அவர் சுருட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க வரலாற்றிலேயே தனிநபர் ஒருவர் இத்தனை கோடி ரூபாயைச் சுருட்டியது இதுவே முதல் முறை.
பின்னர் போலீஸôர் அவரை கைது செய்தனர். நீதிமன்றம் அவருக்கு 150 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இப்போது அவர் வடக்கு கரோலினா சிறையில் உள்ளார்.



நன்றி - தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.

No comments:

Post a Comment