Tuesday, December 7, 2010

இன்றைய செய்திகள்.- டிசம்பர் - 07 - 2010உலகச் செய்தி மலர் :

* அணுசக்தி உடன்பாட்டில் இந்தியா, பிரான்ஸ் கையெழுத்து

புதுதில்லி, டிச.6: பிரான்ஸ் அணுஉலைகளை இந்தியாவில் அமைப்பதற்கு வழிசெய்யும் அணுசக்தி உடன்பாட்டில் இந்தியாவும், பிரான்சும் இன்று கையெழுத்திட்டன.

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற குழு அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த அணுசக்தி உடன்பாட்டில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. அணுசக்தித் துறை தொடர்பான மேலும் 4 ஒப்பந்தங்களும் அப்போது கையெழுத்தாகின.

மகாராஷ்டிராவின் ஜெய்தாபூரில் 2 அணு உலைகளை அமைப்பது தொடர்பாக இந்திய அணுசக்திக் கழகத்துக்கும், பிரெஞ்சு நிறுவனமான ஆரீவாவுக்கும் இடையே இந்த உடன்பாடு கையெழுத்தானது.


* கொலம்பியா நிலச்சரிவில் 200 பேர் புதைந்தனர், 3 பேர் உயிருடன் மீட்பு


மெடலின்: கொலம்பியாவின் மெடலின் நகரில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்ட மக்கள் புதையுண்டு போயுள்ளனர் என்று ரெட் கிராஸ் தெரிவித்துள்ளது.

கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலினில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் புதைந்துள்ளதாக ரெட் கிராஸ் பணியாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ரெட் கிராஸ் அமைப்பின் துணை தலைவர் சீசர் தெரிவித்ததாவது,

தற்போதைய நிலவரப்படி 150 முதல் 200 பேர வரை காணாமல் போயுள்ளனர். இது வரை 3 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகள் அகற்றப்பட்டால் தான் அதில் சிக்கியிருப்பவர்களில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பது தெரியும் என்றார்

* விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு தூதரகம் மூலம் உதவி வழங்குவோம்: ஆஸ்திரேலியா

சிட்னி, டிச.6- விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசான்ஜ் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டால் அவருக்கு தூதரகம் மூலம் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இத்தகவலை ஆஸ்திரேலிய அரசின் தலைமை வழக்கறிஞர் ராபர்ட் மெக்லேலேண்ட் இன்று சிட்னியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளதால், தற்போது அவர் சர்வதேச போலீஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

ஜுலியன் அசான்ஜ் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டால் தூதரகம் மூலம் உதவி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

திபெத்தில் தாது சுரங்கம்: சீனா கண்டுபிடிப்பு

பீஜிங், டிச.6- திபெத் பகுதியில் பெரியளவில் தாது சுரங்கம் இருப்பதை சீன புவியியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அங்குள்ள சுமார் 3000 சுரங்கப் படுகைகளில் 102 வகை தாதுப் பொருட்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் மதிப்பு 100 பில்லியன் டாலர்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

சீனாவின் மற்ற பகுதிகளை விட திபெத்தில் குரோமியம் மற்றும் தாமிரம் பெருமளவில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* ஜி அலைக்கற்றை விவகாரம்: ஐ.மு. கூட்டணி கூட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு

புது தில்லி, டிச. 6: 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை (ஜே.பி.சி.) அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.
இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க ஆளும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்தக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

பெரும்பாலான கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தில்லியில் இல்லாததால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாவும், அடுத்த சில நாள்களில் கூட்டம் நடைபெறும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

* 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு: பிரதமர் அறிவுரையை ஏற்காதது ஏன்? தொலைத் தொடர்புத் துறைக்கு பி.ஏ.சி. கேள்வி

புது தில்லி, டிச. 6: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் அறிவுரையை ஏற்காதது ஏன் என தொலைத் தொடர்புத் துறைக்கு பொது கணக்குக் குழு (பி.ஏ.சி.) கேள்வி எழுப்பியுள்ளது.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் |1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான, எம்.பி.க்களைக் கொண்ட பொது கணக்குக் குழு, தொலைத் தொடர்புத் துறைக்கு 8 பக்கங்கள் அடங்கிய கேள்வித் தொகுப்பை அனுப்பி உள்ளது.

* இந்தியா, பிரான்ஸ் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புது தில்லி, டிச.6: இந்தியா, பிரான்ஸ் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக ஒரு அணு மின் நிலையம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி, பிரமதர் மன்மோகன் சிங் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்குப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு இதுவரை பிற நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்காமலிருந்தது. இப்போது பிரான்ஸ் அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
2012-ம் ஆண்டில் இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 12,000 கோடி யூரோவாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. விமான போக்குவரத்து, அணு சக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

இரு தலைவர்களும் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, விண்வெளி ஆராய்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து விரிவாக பேச்சு நடத்தினர். ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

கையெழுத்தான 7 ஒப்பந்தங்களில் 5 ஒப்பந்தங்கள் அணு சக்தி தொடர்பானவை. சினிமா தயாரிப்பு, புவி அறிவியல் மற்றும் தட்ப வெப்ப நிலை தொடர்பான இரண்டு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைப்பதை வரவேற்பதாக சர்கோஸி குறிப்பிட்டார்.

பாதுகாப்புத் துறையில் குறுகிய தூரம் சென்று இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் தயாரிப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று தெரிகிறது. போர் விமானங்களில் இந்தியாவின் காவேரி இன்ஜினைப் பயன்படுத்துவது குறித்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ), ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் வகுத்த விதிமுறைகளை ஈரான் கடைபிடிக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

* 10, 11-ல் பெங்களூரில் மனித வள உச்சி மாநாடு

பெங்களூர், டிச. 6: மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் இம்மாதம் 10-ம் தேதி முதல் 2 நாள்கள் பெங்களூரில் மனித வள உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது.

இந்தியா தவிர, ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகள், ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மனிதவள அறிஞர்கள், இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். மனித வளத்தின் மூலம் வர்த்தகத் திறனைக் கட்டமைப்பது மாநாட்டின் நோக்கமாகும். இந்தத் தலைப்பில் பல்வேறு மனித வள மேம்பாட்டு அறிஞர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.

மேலும், மைக்ரோ சாப்ட், ஐடிபிஐ வங்கி, அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை, அக்கென்சர், எஸ்ஸôர் போன்ற நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்கள். பெங்களூர் சாங்கே சாலையில் அமைந்துள்ள லீ மெரிடியன் ஓட்டலில் தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை மாநாடு நடக்கிறது. மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள்
வாசிக்கப்படவிருக்கின்றன. மாநாட்டில், இளம் மனிதவள மேலாளர் விருது வழங்கப்படும் என்று மையத்தின் இயக்குநர் சிராஜ் தெரிவித்தார்.

* பி.ஜே.தாமஸ், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி, டிச.6: மத்திய கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து பி.ஜே.தாமஸை நீக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தாமஸுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் மத்திய கண்காணிப்பு ஆணையராக தாமஸை நியமித்ததை எதிர்த்து அந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்மீது அரசுக்கும், தாமஸுக்கும் நோட்டீல் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


மாநிலச் செய்தி மலர் :

* மேலவை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்.

சென்னை, டிச. 6: சட்ட மேலவைக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 7) கடைசி நாளாகும்
.
தமிழகத்தில் சட்ட மேலவைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த மாதம் 22-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் போன்றவற்றைச் செய்வதற்கு டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எத்தனை பேர்? வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, (நவம்பர் 22-ம் தேதிக்குப் பிறகு) இதுவரை பட்டதாரி தொகுதிகளில் பெயர் சேர்க்க ஒரு லட்சத்து 69,088 பேரும், ஆசிரியர் தொகுதிகளில் பெயர் சேர்ப்புக்கு 25,850 பேரும் மனுச் செய்துள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர்கள் 3 லட்சத்து 13,622 பேரும், ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர்கள் 70,923 பேரும் உள்ளனர்.

* நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆஜர்

சென்னை, டிச.6: பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அசோக் வர்தன் ஷெட்டி, ராஜேஷ் லக்கானி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்கள்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்பாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சேவாமன் அறக்கட்டளையைச் சேர்ந்த ஏ.நாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியாக நிறைவேற்றவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

தமிழகத்தில் திடக் கழிவு மேலாண்மை கொள்கையோ, சுகாதாரக் கொள்கையோ இல்லை. சுகாதாரக் கொள்கையை உருவாக்குவதற்கான திட்ட வரைவு தொடக்க நிலையிலேயே உள்ளது என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்வு

மும்பை, டிச.6- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று ஓரளவு உயர்வு காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்து 19,981 புள்ளிகளில் முடிவடைந்தது.

டாடா மோட்டார்ஸ், ஜின்டால் ஸ்டீல், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ இன்ட்ஸ்ட்ரீஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு காணப்பட்டது.

ஹீரோ ஹோண்டா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, எல் அன் டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி .55 மட்டுமே சரிந்து 5,992 புள்ளிகளில் முடிவடைந்தது.

விளையாட்டுச் செய்தி மலர் :
* ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 620/5 [டிக்ளேர்]

அடிலெய்டு, டிச.6: ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. திங்கள்கிழமை நடந்த 4-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 620 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 375 ரன்கள் கூடுதலாகும்.
3-ம் நாள் ஆட்டத்தின்போது இரட்டை சதமடித்த இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் 227 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து தனது 2-வது இன்னிங்ûஸத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில், துவக்க ஆட்டக்காரர் வாட்சன் அரை சதமடித்தார். சிறப்பாக விளையாடி அணியின் ரன் உயர்வுக்கு வழிவகுத்த துணைக் கேப்டன் மைக்கேல் கிளார்க் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
4 விக்கெட் இழப்புக்கு 513 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் திங்கள்கிழமை தனது முதல் இன்னிங்ûஸத் தொடர்ந்தது இங்கிலாந்து. மேற்கொண்டு 14 ரன்கள் சேர்த்து 227 ரன்களில் பீட்டர்சன் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரது அதிகபட்ச ரன்குவிப்பு இதுவாகும். இதற்குமுன்
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 226 ரன்கள் குவித்திருந்தார் அவர்.

எப்படியும் ஆட்டம் டிக்ளேர் செய்யப்படும் என்ற நிலையில், இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாகவே விளையாடினர். 9 ஓவர்களில் அந்த அணி 69 ரன்கள் குவித்தது. அணியின் ஸ்கோர் 620-ஆக இருந்த போது இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் முதல் இன்னிங்ûஸ டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். கடந்த 20 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ரன் குவிப்பு இதுவேயாகும். இயான் பெல் 68 ரன்களுடனும், பிரையர் 27 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்னும் ஒரு நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகள் விரைவிலேயே வீழ்த்தப்படும் பட்சத்தில், 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா 245, இங்கிலாந்து 620-5வி டிக்ளேர் (பீட்டர்சன் 227, இயான் பெல் 68*, பிரையர் 27*; ஹாரிஸ் 2வி-84)
2-வது இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா 238-4வி (வாட்சன் 57, காடிச் 43, கிளார்க் 80, ஹசி 44*; ஸ்வான் 2வி-72)

*இந்திய - நியூஸிலாந்து ஒரு நாள் தொடர்: பெங்களூரில் இன்று 4-வது ஆட்டம்

பெங்களூர், டிச.6: இந்திய - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஒரு நாள் ஆட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் மூன்று ஆட்டங்களிலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. எனவே, இந்த ஆட்டத்தின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
எனினும் தொடரை 5-0 என முழுவதும் கைப்பற்றும் நோக்கில் இந்தியாவும், ஆறுதல் வெற்றியையாவது பெறும் விதத்தில் நியூஸிலாந்தும் களமிறங்க உள்ளன.

ஆட்டம் தொடங்கும் நேரம்: பிற்பகல் 2.30


ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு பிரகலாத வரதன் [அஹோபிலம்] திருக்கோவில்

மூலவர் : மலை அடிவாரக்கோயில்: பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன். மலைக்கோயில்:அஹோபில நரசிம்மர்
  உற்சவர் : மலையின் மேலும் மலையின் கீழுமாக மொத்தம் 9 உற்சவ மூர்த்திகள்.
  அம்மன்/தாயார் : மலை அடிவாரக்கோயில்: அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி. மலைக்கோயில்: லட்சுமி
  தல விருட்சம் :  -
  தீர்த்தம் :  மலை அடிவாரக்கோயில்: இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜதீர்த்தம், பார்க்கவ தீர்த்தம். மலைக்கோயில்:பாவநாசினி
   -
 பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருச்சிங்கவேள் குன்றம்
  ஊர் :  அஹோபிலம்
  மாவட்டம் :  கர்நூல்
  மாநிலம் :  ஆந்தர பிரதேசம்

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்

 மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்ற ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் நின்ற பசுந்தீ மொன்டு சூறை நீள் விசும் பூடிரிய சென்று காண்டற் கரிய கோயில் சிங்க வேள் குன்றமே.

 -திருமங்கையாழ்வார்

தல சிறப்பு :

மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது.
 
இங்கு மலை அடிவாரத்தில் ஒரு கோயிலும், மலை மேல் ஒரு கோயிலும் உள்ளன. அடிவாரத்திலிருந்து மலைமேல் உள்ள கோயிலுக்கு 10 கி.மீ. தூரம் உள்ளது. மலைமீதுள்ள நரசிம்ம தலங்களை தகுந்த பாதுகாப்புடன் சென்றால் தான் தரிசிக்க முடியும். மாலை நேரத்தில் மிருகங்களின் நடமாட்டம் இருக்கிறது. கரடுமுரடான பாதைகளுடன், செங்குத்தான மலைமீதும் ஏற வேண்டும். மாலை 6 மணிக்குள் மலைக்கோயில் தரிசனத்தை முடித்து இறங்கி விட வேண்டும்.

மலை அடிவாரக்கோயிலில் உள்ள மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் குகை விமானம்

தல பெருமை :

அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை'.
பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார்.

மலை அடிவாரக்கோயிலில் நரசிம்மரை தரிசனம் கண்டவர்கள்: கருடன், அஹோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான அழகிய சிங்கர். மலைக்கோயிலில் நரசிம்மரை தரிசளம் கண்டவர்கள்: பிரகலாதன், கருடன்.

நவ நரசிம்ம க்ஷேத்ரம்: மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. எனவே இதனை "நவ நரசிம்ம க்ஷேத்ரம்' என்பர். மலையின் கீழ் உள்ள அஹோபிலத்தில், 1. பார்கவ நரசிம்மர் (சூரியன்) 2. யோகானந்த நரசிம்மர் (சனி) 3. சக்ரவட நரசிம்மர் (கேது) ஆகிய கோயில்களும், மேல் உள்ள அஹோபிலத்தில் 4. அஹோபில நரசிம்மர் (குரு) 5. வராக (குரோதா) நரசிம்மர் (ராகு) 6. மாலோலா நரசிம்மர் (வெள்ளி) 7. ஜுவாலா நரசிம்மர் (செவ்வாய்) 8. பாவன நரசிம்மர் (புதன்) 9. காரஞ்ச நரசிம்மர் (திங்கள்) ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கருடனின் வேண்டுகோளின்படி நரசிம்ம அவதாரம் எடுப்பதற்காக வைகுண்டம் விட்டு கிளம்பிய பெருமாள், இத்தலத்தில் வேடுவர் கோலத்தில் லட்சுமியை திருமணம் செய்ததாக ஐதீகம்.இங்குள்ள மலையின் மீது பாவநாசினி என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கிருந்து மேலே சென்றால், வராஹ நரசிம்மரின் சன்னதியை தரிசிக்கலாம். அங்கிருந்து 2 கி.மீ. தூரம் சென்றால் மாலோலா நரசிம்மரை தரிசிக்கலாம். அடுத்து 3 கி.மீ. தூரம் சென்றால் நரசிம்மர் அவதாரம் எடுத்த தூணும், நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட இடமும் உள்ளது. மலையடிவாரக்கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை "ஜெயஸ்தம்பம்' அதாவது வெற்றித்தூண் என்கிறார்கள். இந்த தூணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலை நிறுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்த தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை. ராமபிரான் சீதையை தேடி வரும் போது இந்த தூணின் முன்பு வழிபாடு செய்ததாகவும், வழிபாடு செய்தவுடன் சீதை கிடைத்து விட்டதைப்போன்ற உணர்வு ராமனுக்கு ஏற்பட்டதாகவும் புராணங்கள் கூறுகிறது.அஹோபில மடங்களுக்கு தலைமைப்பீடம் இதுதான். தற்போது ஸ்ரீ நாராயண யதேந்திர மகாதேசிகன் சுவாமிகள் 45வது ஜீயராக உள்ளார்.ஆதிசங்கரர் இங்குள்ள நவ நரசிம்மர்களை வழிபாடு செய்ய வந்தபோது, அவரது உயிருக்கு  ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாகவும் வரலாறு உள்ளது.

தல வரலாறு :

இரணியகசிபுவின் மகன் பிரகலாதன். இவனுக்கு நாராயணனின் மீது அளவுகடந்த பக்தி. ஆனால், தந்தையோ, தானே கடவுள் என்று கூறி வந்தான். ஒருமுறை உன் நாராயணனைக் காட்டு என இரணியன் கூற, "அவர் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார், அகில உலகத்தையும் அவரே காத்து வருகிறார்' என நாராயணனின் புகழ் பாடினான். கோபம் கொண்ட இரணியன், தன் கதாயுதத்தால் ஒரு தூணை ஓங்கி அடித்தான். தூண் பிளவுபட்டு, நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். இந்த அவதாரம் இத்தலத்தில் நிகழ்ந்தது. முன்பு பிரகலாதன் இங்கு வாழ்ந்த அரண்மனைப்பகுதி தற்போது காடாக மாறிவிட்டது. நரசிம்ம அவதார தரிசனத்தை காண்பதற்கு கருடாழ்வாருக்கு ஆசை ஏற்பட்டது. எனவே இந்த தரிசனம் வேண்டி இங்கு தவமிருந்தார். மகிழ்ந்த பெருமாள், மலை உச்சியில் நரசிம்ம அவதாரம் காட்டியருளினார். பக்தபிரகலாதனுக்காக தூணிலிருந்து வெளிப்பட்டது, இரணியனை வயிற்றைக் கிழித்தது, ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது, பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்த நரசிம்மனாக அமர்ந்தது போன்ற இந்த அவதாரத்தின் 9 திருக்கோலங்கள் இங்குள்ளன. கருடன் தவமிருந்ததால் இந்த மலைக்கு "கருடாச்சலம்' என்றும், "கருடாத்ரி' என்றும் பெயர். சேஷாத்ரியாக உயர்ந்திருப்பது திருவேங்கடமலை (திருப்பதி) என்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபிலமாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* மவுனமே பூரண ஞானம் - ரமணர்

ராமரும், லட்சுமணரும் சீதையும் தாண்டகாரண்யத்தில் தங்கியிருந்த போது, ஒரு ஆஸ்ரமத்திலிருந்து மற்றொரு ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அப்படி கிளம்பும்போது, ராமனின் வயதில் ஒத்த சில இளைஞர்களும் அவர்களுடன் கிளம்பிவிட்டார்கள். இப்படி ராமர் தொடர்ந்து சொல்லும் போது கூடவே பல ரிஷிகுமாரர்களும் தோற்றத்தில் மரவுரி தரித்து ராமலட்சுமணர்களைப் போலவே தோற்றம் அளித்தனர். தொடர்ந்து காட்டுவழியில் செல்லும் போது சில பெண்கள் ராமசீதா வருகையை அறிந்தனர். ராமலட்சுமணர் மற்றும் சீதையைப் பார்க்கும் ஆவலில் ஓடிவந்தவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. சீதையை மட்டுமே அப்பெண்களால் அடையாளம் காணமுடிந்தது. பெண்கள் சீதையை சூழ்ந்து கொண்டு நின்று ஒவ்வொரு இளைஞராக ""இவர் ராமரா அல்லது இவர் ராமரா''? என்று கேள்வி கேட்டனர். ஒவ்வொரு இளைஞரையும் கண்ட சீதை "இவர் ராமர் இல்லை, இவர் ராமர் இல்லை' என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். கடைசியாக லட்சுமணரை காட்டி, இவர் ராமரா என்று அப்பெண்கள் கேட்டனர். சீதை அதற்கும் இல்லை என்று மறுத்தாள். கடைசியாக ராமரையே சுட்டிக்காட்டி கேட்டபோது மவுனம் சாதித்தாள் சீதை. மவுனம் சம்மதம் அல்லவா?
பக்தனுக்கும் இது தான். கடவுளைக் காணும் வரை அவரைப் பற்றிய கேள்விகள் எழும். பரம்பொருளை தரிசித்தபின் பேசத் தோன்றாமல் மவுனம் வந்துவிடும். மவுனம் என்பது முழுமை. அதுவே பூரண ஞானம் ஆகும்.

வினாடி வினா:-

* வினா - இந்தியாவில் பந்த் நடத்துவதைத் தடை செய்த முதல் மாநிலம் எது ?

விடை - கேரளம்.


இதையும் படிங்க :

குப்பைக் கழிவுகளால் மாசடையும் குடிநீர்

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பகுதியில் அரசுத் துறைகளின் பொறுப்பற்ற செயல் காரணமாக குடிநீர் மற்றும் காற்று கடுமையாக மாசடைந்து வருகிறது.

திருக்கோவிலூர் நகரத்தில் சேகரமாகும் குப்பை மற்றும் கழிவுப் பொருள்களை பேரூராட்சி நிர்வாகம் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக அருகிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து கொட்டி வருகிறது.

கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின்கீழ் தென்பெண்ணை ஆற்றிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் குடிநீரால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதனால் குடியிருப்புகள் இல்லாத பகுதியில் குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கனகனந்தல் ஊராட்சி எல்லையில் 5 ஏக்கர் பரப்பளவில் குப்பை கொட்டுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் இடத்தை வாங்கியது. ஆனாலும் அங்கு குப்பைகளை கொட்டுவதற்கு பதிலாக தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றிலேயே கொட்டப்படுகிறது.

போதிய அளவுக்கு குப்பை லாரி இல்லை என்றும், புதிதாக குப்பை லாரி வாங்கியதும் தென்பெண்ணை ஆற்றில் குப்பைகளை கொட்ட மாட்டோம் என்றும் பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து விரிவான செய்தி தினமணி நாளிதழில் பலமுறை வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் |10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக குப்பை அள்ளும் லாரியை வாங்கியது. இருந்தும்கூட தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றிலேயே குப்பையை கொட்டி வருகின்றனர்.

இந்நகரத்தின் மையப் பகுதியில் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தையொட்டி செல்லும் சித்தேரியான் கால்வாய் தூர்ந்துபோன நிலையில் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இது பன்றிகளின் புகலிடமாகவும் மாறியுள்ளது. ஹோட்டல், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள கழிவுப் பொருள்களையும், இறைச்சிக்கழிவுகளையும் இங்கு கொட்டி வருவதால் இப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது.

மேலும் இங்குள்ள குப்பைகள் அடிக்கடி எரிக்கப்படுவதால் இவ்வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்களும், திரையரங்கத்துக்கு வரும் பொதுமக்களும், நகரவாசிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

கருத்துவேறுபாடு:-தூர்ந்துபோன நிலையில் காணப்படும் சித்தேரியான் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய பொதுப்பணித் துறை இதனை தட்டிக் கழித்து வருகிறது. "இதுகுறித்து நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது' என்று அரசுக்கு தெரிவித்துவிட்டதாக பொதுப்பணித் துறையினர் கூறுகின்றனர்.

ஆனால், இக்கால்வாய் பொதுப்பணித் துறைக்கு சொந்தமானதால் அதனை சீரமைக்க அவர்கள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இவ்விரு துறையினருக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, தூர்ந்துபோன சித்தேரியான் கால்வாயை சீரமைக்க, தென்பெண்ணை ஆற்றில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

* மனிதனின் நிம்மதி தூக்கத்தில் தெரியும்!

கோவை:"" மனிதனின் நிம்மதி தூக்கத்தில் தெரிகிறது. ஆனாலும், அதிகாலை நான்கரை மணிக்கு மேல் தூங்குவது நோயின் அறிகுறி''என, திருவெம்பாவை பக்தி சொற்பொழிவில் புலவர் வேலாயுதன் தெரிவித்தார். ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யாபவனில் "திருவெம்பாவை- சிந்தனைஉரை ' தொடர் பக்தி சொற்பொழிவு நேற்றுமுன்தினம் துவங்கியது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில் புலவர் வேலாயுதம் "தூங்கியது போதும்' என்ற தலைப்பில் பேசியதாவது: ஒருவர் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பதைவிட, பேச்சில் என்ன சொல்லப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் மேலோட்டமாக பேச்சை கேட்பார்கள், சிலர் மெய் உணர்வுடன் கேட்டு உள்ளத்தில் பதிந்து கொள்வார்கள்.

திருவெம்பாவை நமக்கு அறிவுறுத்துவது மார்கழி நீராடலைத் தான்.மார்கழி மாதம் ஒரு விடியல் மாதம். விடியலுக்கு முன் நீராடி, ஆண்டவனை பிரார்த்திக்க வேண்டும். கடவுளும் பக்தனுக்கு அருள் புரிய வேண்டும் என்பதையே தெரிவிக்கிறது

மனிதனுக்கு மிக முக்கியமானது தூக்கம். அதுவும் நன்றாக தூங்க வேண்டும். தன்னை மறந்து தூங்குவதுதான் தூக்கம். ஒவ்வொரு உயிருக்கும் தூக்கமும் வேண்டும், இறப்பும் வேண்டும். உயிர் ஓய்வு எடுக்க வேண்டும். மறுநாளுக்கான ஆற்றல் பெற இது மிகவும் அவசியம். தூக்கம் என்பது அதிகாலை நான்கரை மணி வரையில் தான் நீடிக்க வேண்டும். அதற்கும் மேல் தூங்குவதும், எழுந்த பின் மீண்டும் படுக்கைக்கு செல்வதும் நோயின் அறிகுறி. ஒருவனுக்கு தூக்கம் வருகிறது என்றால் அவன் நிம்மதியாக இருக்கிறான் என்று பொருள். தூக்கம் வராமல் படுக்கையில் உருள்பவன் நோயாலும், நிம்மதி இல்லாமலும் இருக்கிறான் என எடுத்துகொள்ள வேண்டும். மனிதனுக்கு விடிவு காலமே இந்த அதிகாலை தான். அதனால் விடியும் வரை காத்திருக்காமல், அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். இது வாழ்க்கை உயர இறைவன் கொடுத்த வரமாகும். இவ்வாறு புலவர் வேலாயுதம் பேசினார்
நன்றி - தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.

8 comments:

LK said...

நன்றி தொடருங்கள்

சங்கரியின் செய்திகள்.. said...

Thank you LK.

Chitra said...

Thank you for the news updates.

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...

எனக்கு ஒரு பதிவு எழுதவே போதும் போதும்னு ஆகிடுது, எப்படி தான் இவ்வளவு விஷயத்த டைப் அடிக்கிரிங்கலோ

Sundar said...

நான் இன்றுதான் முதன்முதலாக உங்கள் பிளாக்கை படிக்கிறேன். மிக நன்றாக உள்ளது.அஹோபிலம் செல்ல வழியையும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து எவ்வளவு தொலைவு உள்ளது?

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றிங்க சித்ரா, தொப்பிதொப்பி,

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றிங்க சுந்தர். வருக வணக்கம்.

Post a Comment