Wednesday, December 8, 2010

இன்றைய செய்திகள்.- டிசம்பர் - 08 - 2010






உலகச் செய்தி மலர் :

* விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது

லண்டன்,டிச.7: உலக நாடுகளின் ராணுவ ரகசியங்களை கைப்பற்றி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் விக்கி லீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (39), செவ்வாய்க்கிழமை (டிச.7) லண்டனில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக ஜூலியன் அசாஞ்சேயை கைது செய்ய ஸ்வீடன் சமீபத்தில் வாரண்ட் பிறப்பித்திருந்தது. இதையடுத்து அசாஞ்சே தலைமறைவானார். இந்நிலையில் லண்டனில் அவர் பதுங்கியிருப்பதாக ஸ்காட்லாந்து போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று அசாஞ்சேயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஸ்வீடன் பிறப்பித்திருந்த வாரண்ட் அடிப்படையில் அசாஞ்சேயை கைது செய்ததாக ஸ்காட்லாந்து போலீஸôர் தெரிவித்தனர்.

அசாஞ்சேயின் கைது குறித்து அவரது வழக்கறிஞர் மார்க் ஸ்டீபன் கூறுகையில், உலகத்தில் நடந்த சில அநியாயங்களை வெளிக்கொணர்ந்ததால் அசாஞ்சே குறிவைக்கப்பட்டுள்ளார். என்றார். அசாஞ்சே சில நாடுகளின் போலி வேஷத்தைக் கலைத்துள்ளார். இது அந்நாடுகளுக்கு அதிர்ச்சியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களால் அசாஞ்சேயின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது என்று விக்கி லீக்ஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்

* அமெரிக்க அதிகாரிகளுடன் பிரதமரின் சிறப்புத் தூதர் சந்திப்பு

வாஷிங்டன், டிச.7: ஆப்கன் மற்றும் பாகிஸ்தானுக்கான பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புத் தூதர் எஸ்.கே. லாம்பா அமெரிக்க உயர் அதிகாரிகளை சந்தித்து ஆப்கன் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.

வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலனுடன் லாம்பா நேற்று ஆலோசனை நடத்தினார். ஆப்கன் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரிச்சர்ட் ஹால்புரூக்கையும் வெளியுறவுத் துறை தலைமை அலுவலகத்தில் லாம்பா சந்தித்துப் பேசினார்.

இதுவரையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், தங்களின் முக்கிய குறிக்கோளான அல் காய்தா மற்றும் தலிபான்களை வீழ்த்தும் பணியில் இரு நாடுகளும் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது குறித்தும் லாம்பாவும், அமெரிக்க உயர் அதிகாரிகளும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

* தற்கொலைப் படை தாக்குதலில் தப்பினார் பலுசிஸ்தான் முதல்வர்

இஸ்லாமாபாத், டிச.7: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண முதல்வர் அஸ்லாம் ரெய்ஸôனியை குறிவைத்து தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை (டிச.7) தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் அவர் நூலிழையில் உயிர்தப்பினார்.
ஆனால் இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். முதல்வரின் பாதுகாப்புப் படை வீரர், 5 போலீஸôர் உள்பட 10 பேர் காயமடைந்தனர்

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வரின் மீதான தற்கொலைப்படை முயற்சி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நிகழ்ந்த இடத்தை பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அங்கு வேறு தீவிரவாதிகள் யாரும் பதுங்கியிருக்கிறார்களா என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தேசியச் செய்தி மலர் :

* பிரதமர் 9-ம் தேதி பெல்ஜியம் பயணம்: ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம்

புது தில்லி, டிச.7: இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் டிசம்பர் 9-ம் தேதி பெல்ஜியம் பயணமாகிறார்; அடுத்த ஆண்டு மார்ச்சில் ஐரோப்பிய யூனியனுடன் இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் நடைபெறும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.

இதுகுறித்து தில்லியில் செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுடனான வர்த்தக உறவு அதிகரிக்கும். இதன்மூலம் ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தகம் 100 பில்லியன் யூரோவைத் தொடும்.

இதுதொடர்பாக அடுத்த சுற்று பேச்சுவார்த்தை இந்த மாதம் நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த ஒப்பந்தம் மூலம் அந்த நாடுகளுடன் தாராள வர்த்தகத்தை இந்தியா நடத்தலாம்.


* இந்தியா2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம்: நாடாளுமன்றம் 18-வது நாளாக முடக்கம்

புது தில்லி, டிச.7: 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு (ஜேபிசி) அமைக்க வேண்டும் என்ற தங்களது பிடிவாதத்திலிருந்து எதிர்க்கட்சிகள் சற்றும் பின்வாங்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செவ்வாயன்று எவ்வித அலுவலும் நடைபெறவில்லை.

இரு அவைகளிலும் காலையிலிருந்தே எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். இதனால் ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் நிலைமையில் மாற்றம் ஏற்படாததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பாஜக, அதிமுக, சமாஜவாதி கட்சி, பிற இடதுசாரிக்கட்சி உறுப்பினர்களும் மக்களவை, மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்


* வாரணாசியில் குண்டு வெடிப்பு: பலி 1, 25 பேர் படுகாயம்: முக்கிய நகரங்களில் தீவிர பாதுகாப்பு




வாரணாசி : காசி கங்கையாற்றில் வழிபாட்டிற்காக, குழுமியிருந்த பக்தர்கள் கூட்டத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில்18 மாத பெண் குழந்தை பலியானது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள புனித நகரமான காசியில், ஷீத்தல காட் அருகே, கங்கையாற்றில், "கங்கா ஆர்த்தி' வழிபாடு நடத்துவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை நேரத்தில் திரண்டு இருந்தனர். இதை பார்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திரண்டு இருந்தனர். மாலை 6.30 மணிக்கு பக்தர்கள் வழிபாட்டில் மும்முரமாக இருந்த போது, திடீரென குண்டு வெடித்தது. குண்டு சத்தத்தை கேட்டு பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓடியதால், சிலர் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். குண்டு வெடிப்பில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் சில வெளிநாட்டு பயணிகளும் அடங்கியிருந்தனர். அவர்கள் உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கங்கையாற்று கரையோரம் வழிபாடு நடத்திய இடத்தில் ஆங்காங்கே ரத்தம் உறைந்து இருந்ததை பார்க்க முடிந்தது. சிலர் கூட்டத்தில் சிக்கியும் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். முதற்கட்ட சோதனையில், பால் கேன் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்தது தெரியவந்தது.

காசி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, உ.பி., மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லக்னோவில், உடனடியாக போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. காசி சம்பவத்தை அடுத்து எழுந்துள்ள பதட்டத்தை தணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். உ.பி., மாநில டி.ஜி.பி., பிரேம் பிரகாஷ் கூறுகையில், "சம்பவ இடத்திற்கு, வெடிகுண்டு நிபுணர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வெடித்த குண்டு, எந்த வகையை சேர்ந்தது, என்பது குறித்து அவர்கள் ஆய்வு நடத்துவர். காயம் அடைந்தவர்களில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு பயணிகளும் இடம் பெற்றுள்ளதாக, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது' என்றார். காசி சம்பவத்தை தொடர்ந்து, டில்லியில் உடனடியாக, பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவையடுத்து, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் நகரங்கள் உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் கவலை: காசி குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி அறிந்ததும், பிரதமர் மன்மோகன் சிங், கவலை தெரிவித்தார். அவர் விடுத்த வேண்டுகோளில், அனைத்து தரப்பினரும், அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார். சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். 


மாநிலச் செய்தி மலர் :

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை: தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு 2-வது முறையாக தேசிய விருது

தில்லியில் டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றும் ஊழியருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்ட
சென்னை, டிச. 7: மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குலோத்துங்கனுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி தில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், இந்த விருதை அவருக்கு வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் அ.து. குலோத்துங்கன். தனது 15-வது வயதில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட இவர், விடா முயற்சி மூலம் உடற் பயிற்சியாளர் படிப்பை முடித்து, 1977-ம் ஆண்டு மருத்துவத் துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இப்போது பூந்தமல்லி தொழுநோய் அலுவலகத்தில் உடற்பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

தொழு நோயாளிகளுக்கு பயிற்சி அளித்தல், டாக்டர்களுக்கு உதவி செய்தல், கால் புண்களுக்கு சிகிச்சை அளித்தல், நோயாளிகளுக்கு சிறப்பு காலனிகளை பெற்றுத் தருதல் உள்ளிட்ட பணிகளை இவர் செய்து வருகிறார்.

இவருடைய சிறந்த பணியை பாராட்டி கடந்த 2002-ம் ஆண்டு இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த 2002-ம் ஆண்டு சிறந்த ஊழியராக தேர்வு செய்யப்பட்ட குலோத்துங்கனுக்கு, அப்போதைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கினார்.

இந்த நிலையில், 2010-ம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு இரண்டாவது முறையாக இவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விருதை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கினார்.

* பகவத் கீதை ஒப்பித்தல் போட்டி

சென்னை, டிச. 7: எழும்பூர் சமஸ்கிருத பள்ளியின் சார்பில் 2011-ம் ஆண்டுக்கான பகவத் கீதை ஒப்பித்தல் போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன.
ஜனவரி 16, 21, 22, 23 ஆகிய தேதிகளில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் வகையில் போட்டிகள் தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை டிசம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
www.egmoresamskrtschool.com என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்த மேலும் விவரங்களுக்கு 044 - 2642 4721 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

* திருவள்ளூர், டிச.  7: திருவள்ளூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் அதிக ஆள்களை ஏற்றிக் கொண்டு அசுர வேகத்தில் பறப்பதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.


திருவள்ளூரில் இருந்து புல்லரம்பாக்கம், பாண்டூர், கடம்பத்தூர், வேப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட ஆட்டோக்களில் அரசு விதிகளின்படி டிரைவருடன் சேர்த்து 4 பேர் மட்டுமே செல்லலாம். ஆனால் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களில் பின்புறம் 4 பேர், உள்புறத்தில் மேலும், கீழுமாக 8 பேர் டிரைவரின் இரு புறங்களிலும் இரண்டு பேர் உள்பட 14 பேர் ஏற்றப்படுகின்றனர்.
விதிகளை மீறி அதிக ஆள்களை ஏற்றிக் கொண்டு செல்லும் ஷேர் ஆட்டோக்கள் நேரத்தை மிச்சப்படுத்தி அதன் மூலம் மேலும் இரண்டு முறை சென்று வரலாம் என்ற எண்ணத்தில் அசுர வேகத்தில் பறக்கின்றன. கடந்த சில நாள்களாக பெய்த மழையால் சாலைகளில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. இந்நிலையில் வேகமாகச் செல்லும் ஆட்டோக்கள் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

* சென்னை, டிச. 7: கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 கொடிநாளை (டிசம்பர் 7) முன்னிட்டு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரை:
கொடிநாளுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும்: ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா

 நாட்டுக்காக உயிரையும், உடலுறுப்புகளையும் இழந்து எண்ணற்ற தியாகங்கள் புரிந்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் விதமாக கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. அன்னிய நாடுகளின் ஆக்கிரமிப்புகளிலிருந்தும், தீவிரவாதிகளின் ஊடுருவலில் இருந்தும் நாட்டைப் பாதுகாக்க ராணுவத்தினர் வெளிப்படுத்தும் வீரம் போற்றத்தக்கது.

 நாட்டைப் பாதுகாக்கும் படை வீரர்களின் குடும்பங்களை நாம் பாதுகாப்போம் என உறுதியை அவர்களுக்கு அளிப்பது இந்த நாள் ஆகும்.

 ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கல்வியில் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு வழங்குகிறது. இதில் பல மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
 ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நலத் திட்டங்களுக்காக தமிழக அரசு ஏறத்தாழ  8 கோடியை செலவிட்டுள்ளது. இதன் மூலம் 16,435 முன்னாள் ராணுவத்தினரும், அவர்களின் குடும்பத்தினரும் பயனடைந்துள்ளனர்.

  கொடிநாள் நிதிக்கு தமிழக மக்கள் தாராளமாக நிதி அளித்ததால்தான் இந்தத் திட்டங்கள் சாத்தியமாகியுள்ளன. கடந்த ஆண்டு  8 கோடியை இலக்காகக் கொண்டு கொடிநாள் நிதி திரட்டப்பட்டது. பொதுமக்களின் ஒத்துழைப்போடு  14 கோடி வசூலிக்கப்பட்டது.

 இந்த ஆண்டு 9 கோடி 24 லட்சம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடிநாள் நிதிக்கு தமிழக மக்கள் தாராளமாக நிதி வழங்குவார்கள் என்று நம்புகிறேன்

வர்த்த்கச் செய்தி மலர் :

சென்செக்ஸ் 46 புள்ளிகள் சரிவு

மும்பை, டிச.7- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 46 புள்ளிகள் சரிந்து 19,934 புள்ளிகளில் முடிவடைந்தது.

டிஎல்எப், ஹெச்டிஎப்ஸி வங்கி, டாடா மோட்டார்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், விப்ரோ, மஹேந்திரா அன் மஹேந்திரா, என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு காணப்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 15 புள்ளிகள் சரிந்து 5,976 புள்ளிகளில் முடிவடைந்தது.


* நூல் விலையில் மாற்றம்: இருப்பு வைத்தவர்கள் அதிர்ச்சி:ஜவுளி உற்பத்தியாளர்கள் தவிப்பு
டிசம்பர் 08,2010,00:14 

சோமனூர்:நூல் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, அதிகளவில் இருப்பு வைத்த மில் அதிபர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்நோக்கும் பருத்தி விளைச்சலின் அடிப்படையில் மத்திய அரசு வெளிநாடுகளுக்கு பருத்தி, நூல் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட இடைத்தரகர்கள், உள்நாட்டில் இவற்றின் விலை உயர்வுக்கு வழி ஏற்படுத்தி விட்டனர்.ஆனால், பருத்தி, நூல் விலை உயர்வுக்கு ஏற்ற அளவில் துணி ரகங்களுக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில் பெரும் சரிவைத் சந்தித்து வந்தது.
தொழிற் துறையினரின் போராட்டங்கள், வேண்டுகோளை ஏற்ற மத்திய அரசு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. அதன்படி, கூடுதலான நூல் ஏற்றுமதிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 'கூடுதல் ஏற்றுமதிக்கு அனுமதி கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த பருத்தி, நூல் ரகங்கள், வெளிமார்க்கெட்டுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நூல் மில்கள் அதிர்ச்சி: இந்த தடை விதிப்பால், நூல் மில் அதிபர்கள் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர். கடந்தாண்டு சராசரியாக, 22 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்ட பருத்தி, நடப்பாண்டு, 44 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. கடந்த மூன்று மாதங்களில் இது, 47 ஆயிரம் முதல் 49 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை உயர்ந்தது.இந்நிலையில் இதன் விலை, 50 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் விற்பனையையும் நிறுத்தி, உற்பத்தியை இருப்பில் வைத்துக் கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நூல் ஏற்றுமதி தடை செய்யப்பட்ட நிலையில், பருத்தி விலையும் சரிந்துள்ளது. தற்போது, 40 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இதன் விலை உள்ளது. நூல் ரகங்களின் விலையும் கடந்த 10 நாட்களில் மூட்டைக்கு 1,000 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.கடந்த மாத துவக்கத்தில், 40 ரகம் ஊடை நூல், 50 கிலோ எடையுள்ள மூட்டை, 9,500 வரை விற்பனையானது. இது தற்போது, 8,700 ரூபாயாக குறைந்துள்ளது. 40 ரகம் பாவு நூல், 11 ஆயிரம் ரூபாய் வரை விற்றது; தற்போது 9,800 ரூபாயாக குறைந்துள்ளது

விளையாட்டுச் செய்தி மலர் :

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

அடிலெய்ட், டிச.7: ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது.
இதன்மூலம் இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

முன்னதாக திங்கட்கிழமை நடந்த 4-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 620 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

375 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா நேற்று 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது.

4 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் என்ற நிலையில் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 304 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.


* ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.


பெங்களூரு : பெங்களூருவில் நடந்த  4- வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனைதொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 48.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து,  இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது.  இதனால் 5 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ஆட்ட நாயகன் விருதை , 123 ரன்கள் மற்றும் 3 விக்கெட் எடுத்த இந்தியாவின் யூசப் பதான் பெற்றார்

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில்

மூலவர் :  மல்லிகார்ஜுனர்,( ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
  உற்சவர் :  -
  அம்மன்/தாயார் :  பிரமராம்பாள், பருப்பநாயகி
  தல விருட்சம் :   மருதமரம் 
  தீர்த்தம் :  பாலாநதி
  ஆகமம்/பூஜை :   -
  பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன்  
  புராண பெயர் :  திருப்பருப்பதம்
  ஊர் :  ஸ்ரீசைலம்
  மாவட்டம் :  கர்நூல்
  மாநிலம் :  ஆந்தர பிரதேஷம்
பாடியவர்கள்:

அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல னெருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டுத்தலங்களில் ஒன்று.

தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்திதேவர் அவதரித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது. ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று  
   
கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது.

ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், நம் கண்களுக்கு விருந்தாகின்றது.

ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் முதலியன தரிசிக்கத் தக்கன. தெற்கு வாயில் கோபுரம் "ரங்க மண்டபம்' எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது.

இக்கோயிலிலிருந்து அருகிலுள்ள நாகார்ஜுனர் அணைக்கு செல்ல விசைப்படகு வசதி உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சத்திரங்கள் உள்ளன.

மலையின் கீழேயிருந்து 3 மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும்

தலபெருமை:
மல்லிகார்ஜுனர்: மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் "மல்லிகார்ஜுனர்' எனப்படுகிறார்.

சிறப்பம்சம்: பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதார ஸ்தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது.
ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார்.

நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப்பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள்  சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.

மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது

தல வரலாறு:
தல வரலாறு: சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,""தந்தையே! கலங்காதீர்கள்.

நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்,''என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார்.

நந்தி தவம் செய்த "நந்தியால்' என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான்.

திறக்கும் நேரம்:
     
  காலை 5 - மதியம் 3மணி, மாலை 5.30 - இரவு 10 மணி. காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.  
   

ஆன்மீகச் செய்தி மலர் :

பாதுகாப்பாள் பராசக்தி - காஞ்சி பெரியவர்.    
* நம் உடல் சுத்தமாக, தண்ணீரில்  குளிக்கிறோம், ஆனால், அம்பிகையைத் தியானித்தால், தியானம் என்ற அந்த 
புனித நீரில் நம் மனமும் சுத்தமாகிறது.

* பசியோ, கஷ்டமோ தாங்க முடியாமல் போனால் "அம்மா' என்று கத்தி கண்ணீர் விடுகிறோம். காரணம் உலகத்துக்கெல்லாம் தாயாக விளங்கும் பராசக்தி ஓடிவந்து நம் துயரை  நீக்குவாள் என்ற நம்பிக்கையே.

* சஞ்சலமாகிய சேற்றிலிருந்து எழவேண்டும் என்றால், கரையில் இருக்கும் ஈஸ்வரன் என்ற கெட்டியான 
பொருளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.


வினாடி வினா:

வினா : பினிக்ஸ் அவார்ட் வாங்கிய முதல் ஆசியர் யார் ?

விடை: சீனியர் பி.சி. சொர்கார் - இந்தியா.
     
 

 இதையும் படிங்க :


ஐயப்பனின் 18 படி உணர்த்தும் தத்துவம்



சபரிமலை, டிச. 7: சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படிகளும் 18 தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதை குறிக்கிறது.
18 தெய்வங்கள்: 1. விநாயகர் 2. சிவன், 3. பார்வதி, 4.முருகன், 5. பிரம்மா, 6.விஷ்ணு, 7. ரங்கநாதர், 8. காளி, 9. எமன், 10. சூரியன், 11. சந்திரன், 12. செவ்வாய், 13. புதன், 14. குரு, 15. சுக்கிரன்,16. சனி, 17. ராகு, 18. கேது.

 இதில் காமம், குரோதம், லோபம், மதம், மாத்ஸர்யம், வீண்பெருமை, அகந்தை, சாத்வீகம், ராஜஸம், தாமஸம், ஞானம், மனம், அஞ்ஞானம், கண், காது, முக்கு, நாக்கு, மெய் இந்தப் 18 வித குணங்களில், நல்லவற்றை பின்பற்றி, தீயவற்றைக் களைந்து படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

 மேலும் 18-வது படி மோட்ச சன்யாச யோகம் உயிர்களிடம் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சந்நிதிக்கு வரும் பக்தர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கும்



நன்றி - தின மணி, தின மலர்.

2 comments:

Post a Comment