Tuesday, November 30, 2010

இன்றைய செய்திகள்.- நவம்பர் - 30 - 2010.உலகச் செய்தி மலர் :

* இந்தியாவை புறக்கணித்த துருக்கி : விக்கிலீக்ஸ் அம்பலம்

வாஷிங்டன், நவ.29- துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கன் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்று இவ்வாறு இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள விவகாரம் விக்கிலீக்ஸ் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அரசியல் விவகாரத்துறை இணைச் செயலர் வில்லியம் பர்ன்ஸை, துருக்கியின் அரசியல் விவகாரத்துறை இணைச் செயலர் ராஃப் என்ஜின் சோய்சல் சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தூண்டுதலால் துருக்கி இவ்வாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கன் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

ஆப்கனில் அமைதி ஏற்பட இந்தியா நீண்ட காலமாக முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும், அந்த நாட்டின் புனரமைப்புக்காக இந்தியா பெருமளவில் நிதியுதவி மற்றும் கட்டமைப்பு உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் குறித்து அமெரிக்கா சர்ச்சைக்குரிய விமர்சனம்: விக்கிலீக்ஸ்

வாஷிங்டன், நவ.29- ரஷ்ய பிரதமர் உள்ளிட்ட பல வெளிநாட்டுத் தலைவர்கள் குறித்து அமெரிக்க உயர் அதிகாரிகள் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினை அடங்காத நாய் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்வு உடையவர் என்றும், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜத் ஹிட்லரைப் போன்றவர் என்றும், லிபியாவின் மூத்த தலைவர் கடாபி நம்பிக்கைக்குரிய பெண் செவிலியர் இல்லாமல் பயணம் செய்யாதவர் என்றும் அமெரிக்கத் தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது
.
இதையடுத்து, அமெரிக்கா மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* எல்லை தாவா : இந்தியா சீனா பேச்சு

பீஜிங்:எல்லை பிரச்னை குறித்து இந்திய - சீன பிரதிநிதிகள், பீஜிங்கில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய - சீன எல்லையில் லடாக் பகுதியையொட்டிய அக்சாய் சின் மற்றும் அருணாசல பிரதேசத்தில் திபெத்தையொட்டிய பகுதிகளில் உள்ள எல்லையை இருநாடுகளும் உரிமை கோருகின்றன. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 4,000 கி.மீ., தூரத்துக்கு எல்லை பகுதிகள் உள்ளன.இருநாட்டு எல்லை பகுதியை வரையறை செய்வது குறித்து, இதுவரை 13 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், உரிய தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் நேற்று, சீன தலைநகர் பீஜிங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், சீன பாதுகாப்பு ஆலோசகர் தாய் பிங்குவா ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள், இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.


தேசியச் செய்தி மலர் :

* புத்த மடாலயம் புதையும் அபாயம்

இடநகர் மற்றும் அருணாசலபிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற 330 ஆண்டு பழமைவாய்ந்த தலாய்லாமாவின் புத்த மடாலயம் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது. அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டத்தில் உள்ள இம்மடாலயம் 1680 இல் நிறுவப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள, ஆசியாவிலேயே 2வது பெரிய புத்த மடாலயம் தற்போது நிலச்சரிவில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் மின் கம்பங்கள் மண்ணில் புதைந்தன. இதைதொடர்ந்து நிபுணர்கள் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அருணாச்சல பிரதேச முதல்வர் டோஜி, நிவாரணப் பணிகளை செய்யும் படியும், நிலச்சரிவு அபாயங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உதவி கோரவும் முடிவு செய்துள்ளார் அவர்.

* ஸ்பெக்ட்ரம் விவகாரம்: மத்திய தொலைத் தொடர்பு சட்ட ஆலோசகர் சஸ்பெண்ட்

புது தில்லி, நவ. 29: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த சட்ட ஆலோசகர் சந்தோக் சிங் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தொலைத் தொடர்புத் துறை சட்ட ஆலோசகராகப் பணியாற்றிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இரண்டு மாதங்களில் ஓய்வு பெற உள்ள அவர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க அவர் ஆலோசனைகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.*கிலானி, அருந்ததி ராய் மீது தேசவிரோத வழக்கு

புது தில்லி, நவ. 29: ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையத் அலி ஷா கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்டோர் மீது ஞாயிற்றுக்கிழமை தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  கடந்த அக்டோபர் 21-ல் தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்தியாவுக்கு எதிராக இவர்கள் கருத்து தெரிவித்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

  இது தொடர்பாக தில்லி பெருநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி நவிதா குமாரி பாஹா, கிலானி, அருந்ததி ராய் உள்ளிட்ட 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யுமாறு கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.  இந்த வழக்கு தொடர்பாக தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, ஷேக் செüகத் ஹுசேன், ஜம்மு காஷ்மீர் பேராசிரியர் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதில் ஷேக் செüகத் ஹூசேன், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர் ஆவார்.

  இதையடுத்து இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக இவர்கள் அனைவர் மீதும் தில்லி போலீஸôர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.    ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

* 7 நாள்களில் பதிலளிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு

புது தில்லி, நவ. 29: மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து 7 நாள்களில் பதிலளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

  கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக மும்பையில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் ராணுவ உயரதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், 6 மாடிகளுக்கு மட்டுமே அனுமதி பெற்ற நிலையில் 31 மாடிகள் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

  விதிகளை மீறி கட்டப்பட்ட மாடிகளை ஏன் இடிக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 12-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இதற்குப் பதிலளிக்க 4 வாரங்கள் தேவை என்று ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய கூட்டுறவு சங்கம் கோரிக்கை விடுத்தது.

  15 நாள்கள் அவகாசம் முடிந்த நிலையில் அடுத்த 7 நாள்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :

* தமிழகத்தில் கனமழை: 1.4 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின.

சென்னை, நவ. 29: தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் 1.5 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

  வீடுகள் இடிந்தது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது போன்ற சம்பவங்களால் மழைக்கு இதுவரை 103 பேர் பலியாகியுள்ளனர்.

  தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக இந்த மழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
 
தஞ்சை, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகளவு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தஞ்சாவூரில் 5 ஆயிரத்து 903 ஹெக்டேரும், கடலூரில் 16 ஆயிரத்து 411 ஹெக்டேரும், நாகப்பட்டினத்தில் 37 ஆயிரத்து 890 ஹெக்டேரும், மதுரையில் 709 ஹெக்டேரும், விழுப்புரத்தில் 702 ஹெக்டேர் அளவுக்கும் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

* பள்ளிக் குழந்தைகள் மீதான வன்முறை ஊடகங்கள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை தேவை'


சென்னை, நவ. 29: பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் செயல்களின்போது புகார் வரும் வரை காத்திருக்காமல் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) வேண்டுகோள் விடுத்துள்ளது
.
 பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பொது விசாரணைக் கருத்தரங்கு நவ.28, 29 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

 இந்தக் கருத்தரங்கில் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.


தொழில்நுட்பச் செய்தி மலர் :

* ஐபேட் மோகம் - கணினி விற்பனை பாதிப்பு : கார்ட்னெர்

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏதும் பர்சனல் கணினியில் இல்லாதலால் இதன் விற்பனையைப் பாதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐபேட் இன் வெற்றிகரமான செயல்பாடுகள் காரணமாக வாடிக்கையாளர்கள் பார்வை அதன்மீது திரும்பியிருப்பதாலும் கணினியின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கார்ட்னரின், நேற்றைய ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. எதிர்காலத்தில் ஐபாட் பயன் படுத்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமானாலும், பர்சனல் கணினி என்பது வாழ்க்கையில் இணைந்து விட்ட ஒன்றாக ஆகிவிட்டதாலும் அதற்கென்று உள்ள தனிப்பட்ட பயன்களாலும், பர்சனல் கம்ப்யூட்டருக்கு பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயர்வு

மும்பை, நவ.29- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயர்ந்து 19,405 புள்ளிகளில் முடிவடைந்தது.
ஆர்ஐஎல், மாருதி சுஸுகி, விப்ரோ, பெல், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

ஹெச்டிஎப்ஸி வங்கி, ஏசிசி, டிஎல்எப், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 78 புள்ளிகள் உயர்ந்து 5,830 புள்ளிகளில் முடிவடைந்தது.


விளையாட்டுச் செய்தி மலர் :

* டிராவில் முடிந்தது ஆஷஸ் முதல் டெஸ்ட்.

பிரிஸ்பேன், நவ.29: ஆஸ்திரேலிய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் அலாஸ்டர் குக் 235* ரன்களும், டிராட் 135* ரன்களும் குவித்தனர்.

முன்னதாக, 4-ம் நாள் ஆட்ட நேரமுடிவில் தனது 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்டிராஸ் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சுருக்கமான ஸ்கோர்:
இங்கிலாந்து: முதல் இன்னிங்ஸ் 260
2-வது இன்னிங்ஸ் 517/1 டிக்ளேர் (ஸ்டிராஸ் 110,
குக் 235*, டிராட் 135*; நார்த் 1வி-47)
ஆஸ்திரேலியா: முதல் இன்னிங்ஸ் 481
2-வது இன்னிங்ஸ் 107/1 (வாட்சன் 41*, பாண்டிங் 54*; பிராட் 1வி-18)

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை துவங்குகிறது.


ஆன்மீகச் செய்தி மலர் ;

* அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோவில்.

மூலவர் - நட்டாற்றீஸ்வரர்
தாயார் - நல்லநாயகி [அன்னபூரணி]
தீர்த்தம் - காவிரி தீர்த்தம்
பழமை - 500 - 1000 ஆண்டுகளுக்கு முன்
ஊர் - காங்கயம்பாளையம்
மாவட்டம் - ஈரோடு
மாநிலம் - தமிழ்நாடு.

தல சிறப்பு :

இங்கு சிவன் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் பிருத்வி (மண்) தலமாகும் . கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தலவிருட்சம் அத்திமரம் இருக்கிறது. மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம். நடக்கும் முருகன்: இங்குள்ள முருகன், வலது காலை முன்வைத்தும், இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். அகத்தியர் இங்கு சிவனைத் தரிசிக்க வந்தபோது, முருகன் அவரை முன்னின்று வரவேற்றதன் அடிப்படையில் இக்கோலத்தில் காட்சி தருவதாக சொல்கின்றனர். இவர் இடது கையில் கிளி வைத்திருப்பது வித்தியாசமான தரிசனம்.

தல பெருமை :-

பிருத்வி தலம்:காவிரியின் நடுவிலுள்ள குன்றின் மீது, ஓம்கார வடிவில் அமைந்த கோயில் இது. இதைச் சுற்றியுள்ள கொக்கராயன் பேட்டையில் முக்கூடநாத சுவாமி கோயில், சாத்தம்பூரில் வல்லாளேஸ்வரர், காளமங்கலத்தில் மத்திய புரீஸ்வரர், மொளசியில் முக்கண்ணீஸ் வரர் என நான்கு சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்நான்கு சிவத்தலங்களுக்கும் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளதால் இவை பஞ்சபூத தலங்களாகக் கருதப்படுகின்றன. இங்கு மணலில் வடிக்கப்பட்ட லிங்கம் இருப்பதால், இதை பிருத்வி (மண்) தலமாகக் கருதி வழிபடுகிறார்கள். இக்கோயிலுக்குச் செல்பவர்கள் ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். இதற்காக பரிசல் உண்டு.

அம்பாளுக்கு சங்காபிஷேகம்:காவிரியாற்றின் நடுவில் அமைந்த தலம் என்பதால், ஆடிப்பெருக் கன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அன்று அகத்தியருக்கு தலைப் பாகை மற்றும் வஸ்திரம் அணிவிப்பர். சித்திரை முதல்நாள், ஆடிப்பெருக்கு மற்றும் கார்த்திகை கடைசி திங்களன்று சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். அகத்தியர் சிவபூஜை செய்த போது, சுவாமிக்கு கம்பு தானியத்தை படைத்து வழிபட்டார். இதன் அடிப்படையில் சித்திரை முதல் நாள் மட்டும் சிவனுக்கு தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்யமாகப் படைக்க படும். அன்று பக்தர்களுக்கு இதையே பிரசாதமாகத் தருவர்.

அம்பாள் நல்லநாயகி, சிவன் சன்னதிக்கு வலப்புறம் இருக்கிறாள். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நற்பலன்களைத் தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். அன்னபூரணி என்றும் பெயருண்டு. ஆடிப்பூரத்தன்று மதிய பூஜையில் இவளுக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தலவிருட்சம் ஆத்திமரம் இருக்கிறது. மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம். இம்மரத்தின் கீழ் காவிரி கண்ட விநாயகர் இருக்கிறார்.

நடக்கும் முருகன்: இங்குள்ள முருகன், வலது காலை முன்வைத்தும், இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். அகத்தியர் இங்கு சிவனைத் தரிசிக்க வந்தபோது, முருகன் அவரை முன்னின்று வரவேற்றதன் அடிப்படையில் இக்கோலத்தில் காட்சி தருவதாக சொல்கின்றனர். இவர் இடது கையில் கிளி வைத்திருப்பது வித்தியாசமான தரிசனம்.

பரிசலில் நடராஜர்:மார்கழி திருவாதிரையன்று நடராஜருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று ஒரு பரிசலில் நடராஜர் எழுந்தருளி, காவிரி நதியிலேயே கோயிலைச் சுற்றி வருவார். அவருக்கு முன்பாக மற்றொரு பரிசலில் மேள

வாத்தியங்கள் செல்லும். மாலையில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். இந்த வைபவம் இங்கு மிக விசேஷமாக நடக்கும். விஜயதசமியன்று கொலுவில் வைத்த அம்பாள் சிலையை, பரிசலில் எழுந்தருளச் செய்வர்.

அதிசயத்தின் அடிப்படையில்: கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தலவிருட்சம் அத்திமரம் இருக்கிறது. மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம்


ஆன்மீகச் சிந்தனை மலர் :

நல்லதை மட்டும் பாருங்கள் - சிவானந்தர்.

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும்
தூய்மையைக் கடைபிடியுங்கள். உங்கள் அந்தரங்க எண்ணத்தை கடவுள் அறிவார். அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை.

* அகிம்சையே ஒப்பற்ற ஆன்மிக சக்தியாகும். இதைப் பின்பற்றத் தொடங்கினால் எல்லா நற்குணங்களும் நம்மை வந்தடையும்.


வினாடி வினா :-

வினா: இந்திய அரசியலமைப்பை அமைக்கப் பரிந்துரை செய்த கமிட்டி எது?

விடை : கேபினட் கமிஷன் - 1946
மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 389.இதையும் படிங்க

சீரற்ற இதயத்துடிப்பு : புதிய கருவி அறிமுகம்.

சென்னை,நவ.29: சீரற்ற இதயத்துடிப்பை கண்டுபிடிக்கும் நவீன கருவி அப்பல்லோ மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பல்லோ குழுமத்தின் செயல் தலைவர் ஆர்.பாசில், இதய சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் ஐ.சத்யமூர்த்தி, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேசன், புதிய கருவி குறித்து டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கும் பேராசிரியர் யூஜின் டொனார் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

இதயத்திலுள்ள மின் உந்துவிசைகள் சரியாக செயல்படாததால், இதயம் மிக வேகமாக அல்லது மிக மெதுவாக முறையற்ற வகையில் துடிக்கிறது. இந்தியாவில் சுமார் 80 லட்சம் பேர் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கத்துக்கு மாறான இதயத் துடிப்பைக் கொண்டுள்ள நோயாளிகளுக்கு அதற்கு எதிரான மருத்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர்களில் 50 சதவீதத்தினருக்கு மருந்துகள் பயனளிப்பதில்லை. அல்லது தாங்க முடியாத பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இந்த குழப்பங்களை நீக்குவதற்காக புதிய பரிசோதனை கருவி அப்பல்லோ மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கருவியின் மூலம் இதயத்தின் வரைபடத்தையும், அதன் மின் செயல்பாட்டையும் 3டி முறையில் டாக்டர்கள் கண்காணிக்க முடியும். இதனால் இதயத்தின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் ரேடியோ ஃபிரிக்குவன்சி ஆற்றலை செலுத்துவதன் மூலம் இந்தப் பிரச்னையை பெரும்பாலும் குணப்படுத்திவிடலாம் என்று தெரிவித்தனர்.
நன்றி - தின மலர் , தின மணி, சமாசார்.

3 comments:

Chitra said...

Thank you for the news.

THOPPITHOPPI said...

எங்களுக்காக நேரம் ஒதுக்கி செய்திகளை தொகுத்து கொடுத்தமைக்கு நன்றி

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே.

Post a Comment