Thursday, November 18, 2010

இன்றைய செய்திகள்.

>உலகச் செய்தி மலர் :

* தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு கெளரவம்

பிரிட்டோரியா, நவ. 17: தென்னாப்பிரிக்காவுக்கு முதல்முறையாக வந்த 200 இந்தியத் தொழிலாளர்களின் பெயர்கள் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்காவின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது.
இதனை கெளடெங் மாகாண முதல்வர் நொமுவல் மொகோயானி, செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
1860 நவம்பர் 16-ம் தேதி 75 ஆயிரம் தென்னாப்பிரிக்க சுதந்திர போராட்ட வீரர்களுடன் இணைந்து 200 இந்தியர்கள் முதல் முதலாக தென்னாப்பிரிக்க மண்ணில் தடம் பதித்தனர்.
இதில் பேசிய நொமுவல் மொகோயானி, இந்தியர்களின் வருகை தென்னாப்பிரிக்க வரலாற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியர்களின் பங்களிப்பைக் கூறாமல் தென்னாப்பிரிக்காவின் வரலாற்றை விவரிக்க முடியாது. மகாத்மா காந்தியின் உயரிய அஹிம்சை கொள்கையை எப்போதும் பின்பற்ற வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்காவுக்கான இந்தியத் தூதர் வீரேந்திர குப்தா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த சுதந்திர தினப்பூங்காவில் தென்னாப்பிரிக்க சுதந்திரப் போர், முதல், இரண்டாவது உலகப் போரில் இறந்தவர்களின் பெயர்கள் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

* இந்தியாவில் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பில்லை: உலகத் தொழிலாளர் அமைப்பு ஆய்வு

ஜெனீவா, நவ.17: இந்தியாவில் அண்மைக்காலம் வரை தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பு சரிவர கிடைக்கவில்லை. தொழிலாளர்கள் எந்த நேரமும் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படும் அபாயம் இருந்துவருகிறது என உலக தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வு குறைகூறியிருக்கிறது.
உலகமயமாக்கல் முயற்சியின்போது தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்கு எவ்வளவு மதிப்பளிக்கப்பட்டது என்பதை அறிய முதல்முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை செவ்வாய்க்கிழமை இங்கு வெளியிடப்பட்டது.
தொழிலாளர்களுக்கு முறையான மருத்துவ வசதி, ஓய்வூதியம் வழங்குதல், வேலைகிடைக்காதோருக்கு உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்டவையே சமூக பாதுகாப்பின்அளவுகோலாகக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில், இந்தியாவில் அண்மைக்காலம்வரை தொழிலாளர் நலன் முறையாகப் பேணப்படவில்லை என இந்த ஆய்வறிக்கையில் இடித்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான ஹஜிமேஜரை சேர்ந்த கிரெஜிஸ்ட் இதனை தெரிவித்தார் தற்போது உலகில் உள்ள ஊதியம் பெறும் உழைப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரில் சுமார் 20 சதத்தினர் மட்டுமே ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்புத் திட்டங்களால் உரிய பயன்பெற முடிகிறது. உலகின் சராசரி உற்பத்தியில் 17.2 சதம் மட்டுமே சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. இப்படி செலவுசெய்வதைக்கூட அதிக வருவாய்ப்பிரிவினர் கொண்ட நாடுகளில்மட்டும்தான் பார்க்கமுடிகிறது. ஏழை நாடுகளில் இதற்கு இடமே இல்லை.
மேலும், வேலைபார்க்கும் வயதுடைய தொழிலாளர்களில் 40 சதவிகிதத்தினர்மட்டுமே பணம் கட்டி ஓய்வூதியம் பெறும் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அதிலும் ஆசிய நாடுகளில் இந்த அளவு 20 சதமாகத்தான் இருக்கிறது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், மற்ற நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75 சதத்தினர் ஓய்வூதியப்பலன்களைப் பெற முடியும்போது, இந்தியாவில் 20 சதத்தினர்மட்டுமே இதைப் பெற முடிகிறது என்றார்.

தேசியச் செய்தி மலர் :

* ஆ.ராசா மீது பிரதமர் நடவடிக்கை எடுத்தார்: காங்கிரஸ்

புது தில்லி, நவ. 17: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்தார்; இதன் மூலமே அவர் பதவியை ராஜிநாமா செய்தார் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
மத்திய அமைச்சர் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்காமல் உள்ளது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி தில்லியில் புதன்கிழமை கூறியது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை (இன்று) உரிய பதிலை அளிக்கும்.
இந்த பதில் மிகத் தெளிவாக இருக்கும். இந்த விவகாரத்தில் மேலும் ஊகங்களை எழும்ப வாய்ப்பு இல்லாத அளவுக்கு சரியான பதிலை மத்திய அரசு அளிக்கும்.
ராசா விவகாரத்தில் பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது மிகப்பெரிய தவறு, நியாயமற்ற பேச்சு. 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே, ஆ.ராசாவின் ராஜிநாமா கடிதத்தை பிரதமர் பெற்றுவிட்டார் என்றார். ஊழல் விவகாரத்தில் பாஜக இரட்டை நிலையைப் பின்பற்றுகிறது. தனது மகன்களுக்கு அரசு நிலத்தை முறைகேடாக ஒதுக்கியதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய பாஜக தலைமை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஜேபிசி விசாரணை தேவையில்லை: முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரும், பிரபல பத்திரிகையாளருமான அருண் செüரியே, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை தேவையில்லை என்று கூறியுள்ளார் என்றார் திவாரி.
காமன்வெல்த் ஊழல் விவகாரத்தில் ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்கா சிங்குக்கும் தொடர்பு உள்ளது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கனிஷ்கா சிங் ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டார். எனவே காங்கிரஸ் கட்சி தனியாக விளக்கம் தர தேவையில்லை என்றார் அவர்.

* கறுப்புப் பணம்: ஸ்விஸ் வங்கியிடம் தகவல் பெற நிதியமைச்சகம் முடிவு

புது தில்லி, நவ.17: ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்த தகவலை அந்நாட்டு அரசின் உதவியோடு பெற மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சில குறிப்பிட்ட வங்கிக் கணக்குகள் குறித்த தகவலை அந்நாட்டு பெடரல் நீதிமன்றத்தின் மூலம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் பெடரல் நீதிமன்றம், இதைப் போன்ற கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டால் அது தொடர்பான விவரங்களை அளிப்பதென முடிவு செய்துள்ளது.
இந்த நடைமுறை ஏப்ரல் 1, 2011 முதல் அமலுக்கு வருகிறது. பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் மூலம் இத்தகைய தகவலைப் பெற உள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விவரங்களைக் கோருவதற்கான கடிதத்தை அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி தயாரித்து வருகிறார்.
இதற்காக அன்னிய வரி, வரி ஆய்வு சார்ந்த துறைகளின் ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எந்தெந்த கணக்குள், அதில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தின் அளவு உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக பல தனி நபர்கள் ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் தங்களது சேமிப்புகளை வைத்துள்ளனர். இவ்விதம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றிய தகவலை இனி ஸ்விட்சர்லாந்து அரசு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா, ஸ்விட்சர்லாந்து இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. டிடிஏஏ எனப்படும் இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தத்தின்படி வரி ஏய்ப்பு செய்வோர்கள் பற்றிய தகவலை அந்நாட்டு அரசு அளிக்கும்.
இதற்கு முன்னர் ஸ்விட்சர்லாந்து வங்கிகளிடமிருந்து இதைப் போன்ற தகவலைப் பெற முடியாது. டிடிஏஏ ஒப்பந்தம் போடப்பட்டதால் தகவல் பெறுவது சாத்தியமாகி உள்ளது.

* பணியின்போது உயிரிழந்த மத்திய படை வீரர் மனைவியருக்கு சலுகைகள்

புதுதில்லி, நவ.17: தீவிரவாதகளை எதிர்த்துப் போரிடும்போதோ அல்லது கலவரங்களை ஒடுக்கும்போதோ உயிரிழந்த மத்திய துணை ராணுவப் படை வீரர்களின் மனைவியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அந்த வீரர் கடைசியாக வாங்கிய சம்பளத்துக்கு இணையாக ஓய்வூதியம் வழங்கப்படும். இது தவிர மற்றவர்களைப்போல் குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும். தீவிரவாதிகளுக்கு எதிரான போர், கலவரம் போன்றவற்றில் உயிரிழந்தால் கருணைத் தொகை | 15 லட்சம் வழங்கப்படும். இதர பணியின்போது இறந்தால் | 10 லட்சம் வழங்கப்படும். மேலும் பணியின்போது உயிரிழந்த மத்திய படை வீரர்களின் மனைவிஅல்லது குழந்தைகளுக்கு 5 சதவீத பணியிடங்கள் ஒதுக்கப்படும். அதுபோல் பணியின்போது உயிரிழந்தோர் மனைவிகளின் குறைகளைத் தீர்ப்பதற்காக மறுவாழ்வு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் மத்திய போலீஸ் கேன்டீனில் அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான பொருள்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
அண்மைக் காலங்களில் மாவோயிஸ்டு இதர பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதலில் ஏராளமான மத்திய படை வீரர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அவர்களது மனைவியரின் மறுவாழ்வுக்காக பல்வேறு சலுகைத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 7 லட்சத்து 45 ஆயிரம் மத்திய படைவீரர்கள் உள்ளனர்

மாநிலச் செய்தி மலர் :

* அரபிக் கடலுக்கு நகர்ந்த புயல் சின்னம்

சென்னை, நவ. 17: தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் பரவலாக வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதி இப்போது மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடலில் கர்நாடகம் - கேரளம் இடையே நீண்டு பரவியுள்ளது. எனினும், வடகிழக்குப் பருவமழை இப்போது தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்கள், ராயலசீமா, கர்நாடகத்தின் உள் பகுதிகளிலும் தீவிரமடைந்துள்ளது.
இதையடுத்து தமிழகம், புதுவை, கேரளம், ஆந்திரம், கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகள், ராயலசீமா, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குக் கனமழை பெய்யக் கூடும்.
குளச்சலில் அதிகபட்ச மழை: இந்த நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 190 மில்லி மீட்டர் மழை கொட்டியது.

* விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை; அணைகள் நிரம்புகின்றன

விழுப்புரம், நவ. 17: விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் அணைகள் நிரம்பி வருகின்றன.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழையளவு:
செஞ்சி 54 மி.மீ, திண்டிவனம் 55 மி.மீ, விழுப்புரம் 74 மி.மீ, திருக்கோவிலூர் 12 மி.மீ, வானூர் 22 மி.மீ, கள்ளக்குறிச்சி 80 மி.மீ, சங்கராபுரம் 24 மி.மீ, உளுந்தூர்பேட்டை 20 மி.மீ, மரக்காணம் 48 மி.மீ மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக மணிமுக்தா அணையின் கொள்ளளவான 36 அடியில் 30.3 அடியும், கோமுகி அணையில் 46 அடிக்கு 44 அடியும், வீடூர் அணையில் 32 அடிக்கு 28.7 அடியும், சாத்தனூரில் 119 அடிக்கு 106.7 அடியும் நீர் நிரம்பியுள்ளது.

வர்த்த்கச் செய்தி மலர் :

* சீனா, ஐரோப்பாவின் துயரம்: இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிப்பு

சந்தை ஏறிய வேகத்திலேயே சறுக்கி இறங்கி வருகிறது. காரணங்கள் இல்லாமல் சறுக்கவில்லை என்பது தான் ஆறுதல். சீனா மற்றும் ஐரோப்பாவின் துயரம் நமக்கும் துயரமாகிவிட்டது.
சென்ற வாரம் முழுவதும் இறக்கத்தையே சந்தித்த சந்தை, இந்த வாரம் திங்களன்று ஒரு ஜோரில் தான் ஆரம்பித்தது. அதாவது உலக நடப்புகள் சந்தைக்கு சாதகமாக இல்லாதிருந்தாலும், அதையெல்லாம் மீறி 153 புள்ளிகள் கூடுதலாகவே முடிவடைந்தது. டாடா ஸ்டீல் நல்ல காலாண்டு முடிவுகளை தந்திருந்தது. வங்கிப் பங்குகள் குறிப்பாக ஸ்டேட் பாங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பாங்க் ஆகியவை மேலே சென்றது, சந்தையின் ஏற்றத்திற்கு காரணம். செவ்வாய் காலை துவக்கம் சந்தைக்கு சாதகமாகத் தான் இருந்தது. ஆனால், சிறிது நேரம் செல்ல செல்ல சந்தை இறங்கத் துவங்கியது. இறங்கத் துவங்கியது என்றால் அப்படி ஒரு பரமபத இறக்கம். சீனாவில் நிலைமைகள் சரியில்லாததால் மெட்டல் பங்குகள் உருகின. இது தவிர, ஐரோப்பியாவின் அயர்லாந்தில் மறுபடி பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன. இதுவும் ஒரு காரணம். இதனால், ரிலையன்ஸ், எல் அண்ட் டி, மற்றும் சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகளின் விலை மிகவும் குறைந்தன. இது, சந்தையை கீழே இழுத்துச் சென்றது. முடிவாக மும்பை பங்குச் சந்தை 444 புள்ளிகள் கீழே இறங்கி முடிவடைந்தது. புதனன்று சந்தைக்கு விடுமுறை. இறுதியாக மும்பை பங்குச் சந்தை 444 புள்ளிகள் குறைந்து 19,865 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 132 புள்ளிகள் குறைந்து 5,988 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இரண்டு சந்தைகளும் முக்கிய அளவான 20,000, 6,000 ஆகிய அளவுகளை விட குறைந்து முடிவடைந்தது.


விளையாட்டுச் செய்தி மலர் :

* வெள்ளி வென்றார் சந்தியாராணி* ஹாக்கியில் மீண்டும் அபார வெற்றி* காலிறுதிக்கு முன்னேறினார் செய்னா.

குவாங்சு: ஆசிய விளையாட்டு "உஷு' போட்டியில், இந்தியாவின் சந்தியாராணி தேவி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில், இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி, 2வது வெற்றியை பதிவு செய்தது. பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் செய்னா நேவல் காலிறுதிக்கு முன்னேறினார்.

சீனாவின் குவாங்சு நகரில், 16வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. நேற்று நடந்த பெண்களுக்கான "உஷு' (சான்÷ஷாயு 60 கி.கி.,பிரிவு) போட்டியில் நடந்த பைனலில் இந்தியாவின் சந்தியாராணி தேவி, ஈரானின் காதிஜக் அசாத்பூரை சந்தித்தார். இதில், சந்தியாராணி 0-2 (0-5, 0-5) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இதன்மூலம் இம்முறை "உஷு' போட்டியில் இந்தியாவுக்கு 2வது பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக ஆண்களுக்கான 60 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் பிமோல்ஜித் சிங் வெண்கலம் வென்றிருந்தார்.


ஆனிமீகச் செய்தி மலர் :

* அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று மகா தேரோட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், இன்று மகா தேரோட்டம் நடக்கிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா ஏழாம் நாளான இன்று, மகா தேரோட்டம் நடக்கிறது. பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதரராய் சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாச்சலேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் இரும்பு சங்கிலியால் ஆன வடத்தைப் பிடித்து, 60 டன் எடை கொண்ட மகா ரதத்தை இழுத்துச் சென்று, வீதி உலா வருவர். அதைத் தொடர்ந்து, பெண்கள் வடம் பிடித்து இழுத்து செல்லும் பராசக்தியம்மன் தேர் உலாவும், சண்டிகேஸ்வரர் தேரும் தனித்தனியாக வீதி உலா நடக்கிறது. தேர் உலாவின் போது, பக்தர்கள் மண்டகப்படி செலுத்தியும், நேர்த்திகடனை செலுத்தி வழிபடுவர். மகா தீபத்தை முன்னிட்டு, ஐந்தரை அடி உயரமுள்ள கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, 3,500 கிலோ நெய் மற்றும், தீப திரிக்காக ஆயிரம் மீட்டர் காடா துணியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


* அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்:

மூலவர் - அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்
தயார் - அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள்
பழமை - 1000 - 2000 ஆண்டுகளுக்கு முன்
புராண பெயர் - திருவண்ணாமலை
ஊர் - திருவண்ணாமலை
மாவட்டம் - திருவண்னாமலை
மாநிலம் - தமிழ்நாடு.

பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்.

தேவாரப்பதிகம் :

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22வது தலம்.

தல சிறப்பு :- லிங்கமே மலையாக அமைந்த மலை *தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம் *பஞ்சபூத தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. *நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம். *நான் என்ற அகந்தை அழிந்த தலம் *உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் *பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். *அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம் *அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் *எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். *9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம் *தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். *தமிழகத்தின் திருப்பதி என்று போற்றப்படுமளவுக்கு லட்சோபலட்சம் பக்தர்கள் தினந்தோறும் வந்து வழிபடும் அதி அற்புத சக்தி வாய்ந்த சிவ தலம். *6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. *ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. *சேஷாத்திரி சுவாமிகள், ரமண மக ரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம் கிரிவல சிறப்பு : கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்றுதான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் சுற்றுவது சிறப்பு முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் மலை வலம் வந்தார்களாம். எனவே அந்த நாளில் கிரிவலம் சுற்றுவது நல்லது. சந்திரன் பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார்.இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் நல்லது. இந்த கோயில் அக்னி கோயில்.

இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை)புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது.

கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடதுபக்கமாகவே செல்லவேண்டும்.நம்மோடு சித்தர்களும் நடந்து வருவார்களாம்.அவர்கள் தான் நம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்களாம்.பேசிக்கொண்டு செல்லக்கூடாது.இறைவனை நினைத்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடியே நடக்க வேண்டும்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மலையைப்பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். வணங்கி விட்டு வேறு திசை பார்க்காது வானத்து நிலவை ஒருதரம் பார்த்தல் அவசியம். இம்மலையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும்., வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட வந்து இந்த கிரிவலம் செய்கின்றனர்.

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கமே மலையாக அமைந்த மலை தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும்.இது ஏகத்தை குறிக்கும்.மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும்.மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும்.இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும்.
விஞ்ஞானம் அடிப்படையில்: நாட்களில் நிலவின் ஒளி மலை மீதும், மலையிலுள்ள மூலி‌கை செடிகள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது. அந்த நாட்களில் மலையை சுற்றி வந்தால் மலையிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம்மீது பட்டு உடலும் உள்ளமும் தூய்மையடைகிறது. மலையைச் சுற்றும் போது கைகளை வீசிக் கொண்டு நடக்காமல் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.


ஆன்மீகச் சிந்தனை மலர் :

* இறைவனின் மாவீரன் நீ ! - ஸ்ரீ அரவிந்தர்.

* உலகில் இருப்பதால் மட்டுமே பயனில்லை. நல்ல லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அதற்காக வாழவேண்டும். நம்மால் முடிந்த நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நாம் மனிதனாக பிறந்திருக்கிறோம்.
* பிறரை நாம் நேசிக்காமல், நம்மை மட்டும் பிறர் நேசிக்க வேண்டும் என்று கோருவது இயற்கைககு புறம்பானதாகும்.

வினாடி வினா :-

* இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை எது ? அது எப்போது எங்கு உருவாக்கப்பட்டது.

விடை :- பஞ்சசீலக் கொள்கை. 1955 இல் பாண்டுங் மாநாட்டில் உருவாக்கப்பட்டது.


இதையும் படிங்க.......

* என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம் !!

நான் பாடிய பழைய பாடல்களை இப்போது உள்ள புதிய பாடகர்கள் உணர்ச்சியே இல்லாமல் பாடி கேவலப்படுத்துகிறார்கள். இந்த பாவம் சும்மா விடாது என்று டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசமாக கூறினார். பின்னணி பாடகி பி.சுசீலாவின் அறக்கட்டளை சார்பில் சாதனை புரிந்த பின்னணி பாடகர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில், பின்னணி பாடகர் ஜேசுதாசுக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருதும், டி.எம்.சவுந்தரராஜன், பி.பி.சீனிவாஸ் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. விழாவில் பின்னணி பாடகர்கள் பாலமுரளி கிருஷ்ணா, ஹரிகரன், மனோ, உன்னி மேனன், ஹரீஷ் ராகவேந்திரா, மாணிக்க விநாயகம், டி.எம்.எஸ்.செல்வகுமார், பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம், சித்ரா, சந்தியா ஆகியோர் கலந்துகொண்டு பாடினார்கள். டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல்களை, சில பாடகர்கள் இணைந்து பாடியபோது, பாடல் வரிகள் நினைவுக்கு வராமல் தடுமாறினார்கள்.

அதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த டி.எம்.சவுந்தரராஜன், புதிய பாடகர்களை கண்டித்து ஆவேசமாக பேசினார். அவர் பேசும்போது, `அந்தக்காலத்தில் நாங்கள் உணர்ச்சிகளை கொட்டி பாடினோம். அதே பாடல்களை உணர்ச்சியே இல்லாமல் திரும்பப்பாடி, சிலர் கேவலப்படுத்துகிறார்கள். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த பாவம், சும்மா விடாது என்று பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய பி.சுசீலா, `உங்க அளவு திறமையான பாடகர்கள் யாரும் கிடையாது. மிக உயரத்தில் இருக்கிறீர்கள். இப்போது உள்ள பாடகர்கள் எல்லோருமே உங்களை வணங்குகிறார்கள் என்றார். இதனால் சிறிது நேரம் மேடையில் பரபரப்பு நிலவியது........

No comments:

Post a Comment