Sunday, November 28, 2010

இன்றைய செய்திகள். - நவம்பர் - 28 - 2010.உலகச் செய்தி மலர் :

* 50 நாட்களுக்கு முன் பசிபிக் கடலில் மாயமான 3 வாலிபர்கள் உயிருடன் மீட்பு

ஆக்லாந்து: படகுப் போட்டியின்போது பசிபிக் பெருங்கடலில் காணாமல் போன 3 வாலிபர்கள் 50 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் உள்ள டோகிலே பகுதியைச் சேர்நதவர்கள் சாமு பேரஸ், பிலோ பிலோ, எட்வர்டு நாசவு. 15 வயதாகும் அம்மூவரும் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி நடந்த படகுப் போட்டியின்போது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மாயமானார்கள். இதையடுத்து மீட்பு குழுவினர் அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

50 நாட்களாக அயராது தேடி வந்த அவர்கள் இறுதியில் பிஜி என்னும் சிறிய தீவில் அந்த 3 வாலிபர்களையும் கண்டுபிடித்தனர். பின்பு அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இத்தனை நாட்களாக தீவில் இருந்த தேங்காயை சாப்பிட்டும், மழை நீரைக் குடித்தும் உயிர் வாழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.


* ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை நியாயமாக நடந்து கொள்ளும்: எஸ்.எம்.கிருஷ்ணா நம்பிக்கை

கொழும்பு, நவ.27: ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ளதால் ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்த அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இதை இலங்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றே நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை இந்தியாவின் புதிய தூதரகத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது எஸ்.எம்.கிருஷ்ணா இவ்வாறு தெரிவித்தார்.

நீண்டகால ஈழத்தமிழர் பிரச்னைக்கு அதிகாரப் பகிர்வின் மூலமே நிரந்தரத் தீர்வை காண முடியும் என்பதை இலங்கை அரசிடம் உறுதியாக தெரிவித்துவிட்டோம். இதற்கான நடவடிக்கையை அதிபர் ராஜபட்ச விரைந்து மேற்கொள்வார் என்றே நினைக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

* ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: சிரியா ஆதரவு

டமாஸ்கஸ், நவ.27: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க சிரியா முழு ஆதரவு தரும் என அந்நாட்டு அதிபர் பஷீர் அல் ஆசாத் உறுதியளித்துள்ளார்.
 இந்திய குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீலை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியபோது அவர் இந்த உறுதியை அளித்தார்.

மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டித்த அவர் அனைத்துவகை பயங்கரவாதச் செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்தார்.  முன்னதாக, அதிபர் மாளிகையில் இந்திய குடியரசுத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர். அது பற்றிய விவரங்கள் பின்னர் அறிக்கையாக வெளியிடப்பட்டது.
 இந்திய தொழில் நிறுவனங்கள் சிரியாவில் தொழில்தொடங்க உதவும்வகையில் அந்நாட்டிற்கு கடன்திட்டம் ஒன்றை பிரதிபா பாட்டீல் அறிவித்துள்ளார்.

தேசியச் செய்தி மலர்


* நீரா ராடியா ஒப்புதல்: ரூ 60 கோடி வாங்கினேன்.

புதுதில்லி,நவ.27: ""2 ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாக, ஆ. ராசாவுடன் பேசியிருக்கிறேன், இந்த விவகாரத்தில் என்னுடைய வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அரசின் முடிவை மாற்ற 60 கோடி ரூபாயை ஆலோசனைத் தொகையாகப் பெற்றிருக்கிறேன்'' என்று நீரா ராடியா வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

வைஷ்ணவி கார்பரேட் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆலோசனை நிறுவனத்தை நடத்தும் நீரா ராடியா தில்லியில் பல்வேறு பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசகராகச் செயல்படுகிறார். அதற்காக அவர்களிடம் ஆலோசனைக் கட்டணம் பெறுகிறார். அவருடைய வாடிக்கையாளரான டாடா குழுமத்தின் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பலன் கிட்டுவதற்காக தொலைத்தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாவுடன் பேசியிருப்பதையும், தான் கூறிய ஆலோசனைகளுக்காக ரூ.60 கோடியைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டதையும் அவர் ஒப்புக்கொண்டிருகிறார்.

* கைகா அணுமின் நிலைய 4வது பிரிவில் உற்பத்தி தொடக்கம்


கார்வார், நவ. 27: கைகா அணுமின் நிலையத்தின் 4-வது பிரிவில் மின் உற்பத்தி சனிக்கிழமை தொடங்கியது.

வட கன்னட மாவட்டத்தில் கார்வார் அருகே கைகா அணுமின் நிலையம் உள்ளது. இந்திய அணுமின் கழகத்தின் கட்டுப்பாட்டில் 2000 முதல் இந்த நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. மூன்று பிரிவுகள் ஏற்கெனவே தலா 220 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகின்றன.

இந் நிலையில், நான்காம் பிரிவு கட்டுமானப் பணி ஏற்கெனவே முடிவடைந்திருந்தது. எனினும், அணுமின் நிலையத்துக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார உற்பத்தி துவங்காமல் இருந்தது.
இதனிடையே சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு நான்காம் பிரிவில் மின்சார உற்பத்தி தொடங்கியது. இதில் 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

* உள்துறை அமைச்சக தகவலை கசியவிட்ட அதிகாரி சஸ்பெண்ட்

புது தில்லி, நவ.27: உள்துறை அமைச்சகத்தின் ரகசிய தகவலை கசியவிட்ட மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ரவி இந்தர் சிங் சனிக்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மத்திய பணியாளர் துறையும் விரைவில் அவருக்கு எதிராக நிர்வாக ரீதியான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் இயக்குநராகப் பணியாற்றியவர் ரவி இந்தர் சிங். இந்தப் பிரிவால்தான் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவகாரங்கள் அனைத்தும் கையாளப்படும்.

இந்நிலையில் இந்தப் பிரிவில் கையாளப்பட்ட முக்கியமான ரகசிய தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றுக்கு ரவி இந்தர் சிங் அளித்ததாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரை தில்லி போலீஸின் சிறப்புப் பிரிவினர் கடந்த ஒரு மாதகாலமாக தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினர். தில்லியில் உள்ள அவரது இல்லமும், அலுவலகமும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டன. இதில் அவர் ரகசியத் தகவல் அளித்தது உறுதியானது. இதையடுத்து அவரை கடந்த 23-ம் தேதி கைது செய்தனர்.

அவரிடம் இப்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவரலாம் என்று தில்லி போலீஸôர் நம்புகின்றனர்.

மாநிலச் செய்தி மலர்

* சென்னையில் ஜனவரி 3-ல் இந்திய அறிவியல் மாநாடு: பிரதமர் மன்மோகன் தொடங்கி வைக்கிறார்

சென்னை, நவ. 27: சென்னையில் வரும் ஜனவரி 3-ம் தேதி 98-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார்.
  சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மாநாடு ஜனவரி 7-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இதையொட்டி "பிரைட் ஆஃப் இந்தியா' என்ற அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியும் நடைபெறும். மாநாடு தொடக்க விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலா உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
  இதுகுறித்து, இந்திய அறிவியல் மாநாட்டின் பொதுத் தலைவர் கே.சி. பாண்டே, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி. சத்யநாராயணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

  98-வது இந்திய அறிவியல் மாநாடு, இந்திய பல்கலைக்கழகங்களில் தரமான கல்வி,  சிறப்பான அறிவியல் ஆராய்ச்சி என்ற மையப் பொளுடன் நடைபெற உள்ளது. இதில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள், துறை சார் வல்லுநர்கள் உள்பட 7,000 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

* ஆங்கில வழிக் கல்வி: அனுமதி பெறாத 200 பள்ளிகளை முறைப்படுத்த பள்ளிக் கல்வித் துறை சிறப்பு நடவடிக்கை

சென்னை, நவ.27: தமிழகம் முழுவதும் உரிய அனுமதியில்லாமல் ஆங்கில வழிக் கல்வி அளித்து வந்த 200 பள்ளிகளை முறைப்படுத்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் சனிக்கிழமை சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 1,600 சுயநிதி, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியோடு, உரிய அனுமதிபெற்று ஆங்கில வழியிலும் கற்பிக்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மேற்கொண்ட ஆய்வில், இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் உரிய அனுமதியின்றி ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிப்பது தெரியவந்தது.

ஆரோக்கியச் செய்தி மலர் :

* கண்களை கவனமாக கண்காணிக்க வேண்டும் !

இந்தியாவில் வேகமாக பரவிவரும் நோய்களில் ஒன்று, நீரிழிவு நோய். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் அதிக நீரிழிவு நோயாளிகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக, இந்தியா இருக்கும். 1995ம் ஆண்டு, 1.8 கோடியாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2030ல், எட்டு கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு தெரியுமா?
* வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, நகர்புறத்தில் 28 சதவீதமாகவும், கிராமப்புறத்தில் 5 சதவீதமாகவும் உள்ளது. இவர்களில் 18 பேர், நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

* நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு, தங்கள் நோய் பற்றி தெரிந்திருப்பதில்லை.

* நீரிழிவு நோயாளிகளில் மிகவும் குறைந்தவர்களே, கண் பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

* கண் மருத்துவர்கள் அனைவரும், நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சையளிக்கும் பயிற்சி பெற்றவர் அல்லர்.
* ஒரு நீரிழிவு நோயாளிக்கு பார்வையிழப்பு ஏற்படும் அபாயம், நீரிழிவு நோய் அற்றவரை விட 25 மடங்கு அதிகம்.

* நீரிழிவு நோயானது, கண் பார்வையிழப்பு, இருதய கோளாறு, சிறுநீரக கோளாறு, நரம்புகள் பாதிப்பு மற்றும் உடல் ஊனம் விளைவிக்கும் அபாயமுடையது.

* சமச்சீரான உணவு, தேவையான உடற்பயிற்சி மற்றும் தகுந்த சிகிச்சை மூலம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

வர்த்தகச் செய்தி மலர் :

* ரூ.51 லட்சம் கோடிக்கு "ஆன்-லைன்' வர்த்தகம்: விலை உயர்வுக்கு இதுவே முக்கிய காரணம்

சென்னை : மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலை இன்று விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன், பட்ஜெட் நேரத்தில் மட்டும் தான் பொருட்களின் விலை உயர்வு இருக்கும். அதுவும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இருக்காது. ஆனால், தற்போதுள்ள நிலையே வேறு மாதிரியாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு விலை இருக்கிறது.

விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு, அதிகாரிகளோடு மட்டும் கலந்தாலோசிக்காமல் வேளாண் தொழிலாளர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழுவை ஏற்படுத்திட வேண்டும். நாட்டில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு தான் ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும். ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்தாலே, பாதியளவு உணவுப் பொருளின் விலை குறைய வாய்ப்புண்டு, என்றார். சுதந்திரம் அடைந்ததும், இந்திய அரசு முதன்முதலில் எடுத்து கொண்ட முக்கிய நிகழ்வுகளில் ஒன்று வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாகும். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல், இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிகரற்ற நிலையை அடைய வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. ஆனால், தற்போதைய உணவு அமைச்சர், உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்கும் நடவடிக்கையில் இறங்க தயங்குவதற்கான காரணம் என்ன என்பது பொதுமக்களின் கேள்வி.

விளையாட்டுச் செய்தி மலர் :

* ஆசிய விளையாட்டு: கண்கவர் நிறைவு விழா: சீனா மீண்டும் ஆதிக்கம்


குவாங்சு: ஆசிய விளையாட்டு போட்டி வண்ணமயமான நிறைவு விழாவுடன், இனிதே முடிந்தது. கண்கவர் வாணவேடிக்கை, "லேசர் ÷ஷா' ஒளிவெள்ளம், ஆயிரக்கணக்கான கலைஞர்களின் ஆடல், பாடல் என நிகழ்ச்சிகள் களை கட்டின.

சீனாவின் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 12ம் தேதி துவங்கியது. இதில், முதலிடம் பெற்ற சீனா 199 தங்கம் உட்பட மொத்தம் 416 பதக்கங்கங்கள் பெற்று, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. 14 தங்கம் உட்பட 64 பதக்கம் வென்ற இந்தியா 6வது இடம் பிடித்தது.

கடந்த 16 நாட்கள் உலக ரசிகர்களை கட்டிப் போட்ட ஆசிய விளையாட்டு திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இதற்காக "பேர்ல்' நதிக் கரையில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக அரங்கில் நிறைவு விழா மிகச் சிறப்பாக நடந்தது. சீனாவின் தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. கண்கவர் வாணவேடிக்கை மற்றும் "லேசர் ÷ஷா' ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பின் ஒவ்வொரு நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இந்தியா சார்பில் ரவி திரிபாதி மற்றும் தான்யா குப்தா இணைந்து அசத்தலாக பாடினர். அப்போது பஞ்சாப் "பாங்கரா' உள்ளிட்ட இந்திய நடனங்களை கலைஞர்கள் ஆடினர்.

வீரர்கள் அணிவகுப்பை தொடர்ந்து, ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் அலங்கரிக்கப்பட்ட படகுகள் அணிவகுத்து வந்தன. வரும் 2014ல் அடுத்த போட்டியை நடத்த உள்ள தென் கொரியாவின் இன்ச்சியான் நகர நிர்வாகிகளிடம், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் கொடி ஒப்படைக்கப்பட்டது. பின் அதிர வைக்கும் வாணவேடிக்கைக்கு மத்தியில், ஆசிய விளையாட்டு ஜோதி அணைக்கப்பட்டு, போட்டிகள் முறைப்படி நிறைவு பெற்றன.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்.

மூலவர் - ராமர், ஆஞ்சநேயர்
பழமை - 1000 - 2000 வருடங்களுக்கு முன்
ஊர் - ஆலத்தியூர்
மாவட்டம் - மலப்புரம்
மாநிலம் - கேரளா

தல சிறப்பு :-

தையைத்தேடி கடல் கடந்து இலங்கைக்கு தாண்டி குதித்ததை நினைவு படுத்தும் வகையில், கல்லில் கட்டிய திடல் ஒன்று இங்குள்ளது.
 
இத்தலத்திற்கு வரும் பக்தர்கள், இங்குள்ள கல்லில் கட்டிய திடலை தாண்டினால் அவர்களது ஆரோக்கியம் பாதுகாத்து ஆயுள் பெருகும் என்பது நம்பிக்கை.

அத்துடன் குழந்தைகள் இரவில் தூங்கும் முன் "ஆலத்தியூர் அனுமானே நிம்மதியாக தூங்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டு தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.

தல வரலாறு :-

கேரளமாநிம் ஆலத்தியூரில் அமைந்துள்ள இந்த ஆஞ்சநேயர் கோயில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். கோயிலின் முலஸ்தானத்தில் ராமபிரான் சீதையில்லாமல் தனி தோற்றத்தில் வித்தியாசமாக வீற்றிருக்கிறார்.

சீதையை தேடிப்போகும் தனது உத்தம பக்தனான அனுமனுக்கு சீதையின் அடையாளங்களை சொல்லிக்கொடுத்து, அதைக் கேட்கும் தோற்றத்தில் தான், மூலஸ்தானத்தில் பக்கத்தில் அமைந்துள்ள கோயிலில் அனுமான் வீற்றிருக்கிறார். ராமபிரான் சொல்லும் ரகசியத்தை தலை சாய்த்து கேட்கும் ஆஞ்சநேயருக்கு முப்பத்தி முக்கோடி தேவர்களும் தங்களது சக்தியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சீதையை கண்டுபிடித்துவர ராமர், அனுமனிடம் சீதையைப்பற்றி கடந்த கால ரகசியம் சொல்லும் போது,அதைக்கேட்காமல் இருப்பதற்காக தம்பி லட்சுமணன் சிறிது தூரம் மாறி நிற்பான். அந்த இடத்தில் லட்சுமணனுக்கு ஒரு கோயில் இருக்கிறது. கிஷ்கிந்தா காண்டத்தின் இறுதிப்பகுதியாகிய இந்தப்பிரதிஷ்டையின் சந்தர்ப்பத்தால் தான் அனுமானுக்கு அதிக சக்தி கிடைத்திருக்கிறது.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* பிறரை அவமதிக்காதீர் ! - இராமானுஜர்.

* ஒருவனுடைய பிறப்பை பற்றியோ அல்லது செயல்களைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வது சிறந்தது. கடவுளுக்கு எதை நீ அர்ப்பணிக்கிறாயோ அது மிகவும் புனிதமானது. நீ கடவுளிடம் சரணாகதி அடையும் போது உன் பாவங்கள் நீங்குகின்றன. மற்றவர்களை அவமதிப்பது மிக கொடிய செயலாகும்.

விடாடி வினா :

* தேர்தலின் போது இடது ஆட்காட்டி விரலில் தடவப்படும் மை எதனால் ஆனது ?

விடை - சில்வர் நைட்ரேட்டினால் ஆனது.


இதையும் படிங்க :
* அமைதியாக இருப்பது ஏன்? - மாவீரர் நாள் செய்தியில் விடுதலைப் புலிகள் விளக்கம்.

தமிழரின் அரசியல் விடுதலை தமிழீழ தனியரசு அமைவதிலேயே உள்ளது. இதற்கு உலக சமூகம் வழி அமைத்துத் தரவேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவீரர் நாளையொட்டி விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் விடுத்துள்ள மாவீரர் தின அறிக்கை:

மரணம் என்பது மாவீரர்களுக்கு உரித்தானதன்று. அக்கினிப் பிழம்பாக, தீமைகளைச் சுட்டெரிக்கும் எரிமலையாக தமிழீழ தேசம் முழுவதும் வியாபித்து நிற்கும் மாவீரர்களை சாவு தீண்டுவதில்லை. காற்றோடு காற்றாகவும், கடலோடு கடலாகவும், மண்ணுக்குள் விதையாகவும் நித்தியத் துயில் கொள்ளும் எங்கள் வீரமறவர்கள் சாவை வென்ற சரித்திர நாயகர்கள்.

அவலங்களின் மத்தியில் வன்னிமண்...

அடங்காப் பற்றாக வணங்காது தலை நிமிர்ந்து நின்ற வன்னிமண் இன்று அந்நிய ஆக்கிரமிப்பின் உறை விடமாக அழிவுற்றுக் கிடக்கின்றது. ஈழத் தமிழினத்தின் வரலாற்றுப் பெருமை கூறும் யாழ்ப்பாணமும், திருகோணமலையும், மட்டக்களப்பும், அம்பாறையும் இன்று தமது வரலாற்றுப் பெருமைகளை இடிபாடுகளுக்குள் தொலைத்து நிற்கின்றன.

தமிழினத்தின் வரலாற்று வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு அங்கெல்லாம் பௌத்த விகாரைகளும், சிங்களப் பண்பாட்டுச் சின்னங்களும் முளைவிடுகின்றன. தமிழ் நிலங்களை புத்தர் சிலைகளும், அந்நிய ஆக்கிரமிப்புச் சின்னங்களும் ஆட்சிசெய்கின்றன. எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், வளங்களும் அந்நியர்களிடம் விலை பேசப்படுகின்றன. பேச்சுரிமை இழந்து, உயிர்வாழும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டிய இனம் என்ற வரையறைக்குள் ஈழத் தமிழினத்தை சிங்களம் பகுத்துள்ளது.

துட்டகாமினியின் மறுபிறப்பாக தன்னை முன்னிறுத்தி மகாவம்ச மனவுலகில் முடிசூடியிருக்கும் சிங்கள அதிபர் ராஜபக்ச, தனது மூதாதையரை விஞ்சிய இனவெறியராகத் தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். அன்று எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றிகொண்ட துட்டகாமினிகூட எல்லாளனுக்கு சமாதியமைத்து தமிழ் மன்னனின் வீரத்திற்கு மதிப்பளித்து நற்பெயர் தேடினான். ஆனால் துட்டகாமினியின் இரத்தவாரிசாகத் தன்னை அடையாளப்படுத்தும் ராஜபக்சவோ மாவீரர்களின் உறைவிடங்களை உழுதெறிந்து பௌத்தத்தின் காவலனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இனவெறிகொண்டு மாவீரர்களின் உறைவிடங்களை சிங்களம் உழுதெறிந்தாலும்கூட, எமது மண்ணுக்குள்ளேயே அந்த வீரமறவர்கள் நித்தியத் துயில் கொள்வதை சிங்களத்தால் தடுக்க முடியவில்லை.

நாம் போர் வெறியர்கள் அல்ல. நாம் அமைதியை விரும்பும் ஒரு தேசிய இனம். எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியையும், பண்பாட்டையும், பொருண்மிய வாழ்வையும் பேணி உலகின் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணி சகவாழ்வு புரிவதற்கே நாம் விரும்புகின்றோம். காலனித்துவ ஏகாதிபத்தியத்திடம் பறிபோய், இன்று சிங்களம் ஆக்கிரமித்திருக்கும் எமது இறையாண்மையை நிலைநாட்டி, எமது சொந்த மண்ணில் தனியரசு அமைத்து எம்மை நாமே ஆட்சிசெய்வதற்கே நாம் விரும்புகின்றோம்.

போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை. எமது மக்களின் உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு சலுகைகளுக்காக சிங்களத்தை நாம் யாசிக்கவுமில்லை. மென்வழி தழுவி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உலக சமூகம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்தே கடந்த ஒன்றரை ஆண்டாக ஒருதலைப்பட்சமான முறையில் நாம் அமைதியைப் பேணி வருகின்றோம்.

இந்த வகையில் ஈழத் தீவில் தமிழினத்தை வேரோடு துடைத்தழிக்கும் இனவழித்தொழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆறு தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தி வரும் சிங்களத்திடமிருந்து இனியும் எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழினம் எதிர்பார்ப்பது அபத்தமானது என்பதைப் புரிந்து கொண்டு, நீதியின்பால் நின்று எமது தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு உலகத் தலைவர்கள் வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

சோதனைகள் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் புகலிட உறவுகளைப் போன்று எமது மக்களின் விடிவிற்காக அயராது குரலெழுப்பும் தமிழகத் தலைவர்களுக்கும், எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். காலத்தின் தேவையறிந்து காலம்காலமாக எமது தொப்புள்கொடி உறவுகள் புரியும் தார்மீக உதவி தமிழீழ தேசத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியது.

எமது போராட்டத்திற்கான இந்தியப் பேரரசின் தார்மீக ஆதரவைப் பெற்றுத்தரும் பணியை தமிழக உறவுகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்று நாம் உரிமையுடன் கோருகின்றோம்.

எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும், எத்தனை இடர்களுக்கு ஆளானாலும் எம்தலைவனின் வழிகாட்டலில், மாவீரர்களின் இலட்சியப் பாதையில் பயணித்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என உறுதிபூணுவோமாக.

நன்றி.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
நன்றி - தின மலர், தின மணி, தட்ஸ்தமிழ்.

No comments:

Post a Comment