Saturday, November 20, 2010

இன்றைய செய்திகள்.

உலகச் செய்தி மலர் :

* காஷ்மீர் பிரச்னை: இந்தியா, பாகிஸ்தான் பேசித் தீர்க்க அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன், நவ,19: காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்வுகாணவேண்டும் என்பதையே அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாதென்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரி கூறியுள்ளார்.
"காஷ்மீர் போன்ற முக்கியமான பிரச்னையில் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும். இதற்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உண்டு. இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் இறுக்கத்தைத் தளர்த்தவும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவும் பேச்சுவார்த்தை உதவும். அமெரிக்கா இதில் தலையிடாது. இந்த விஷயத்தில் எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் பிரச்னை இரு நாட்டுக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அமெரிக்கா இவ்விரு நாடுகளையும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஊக்குவிக்கும்', என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பி.ஜெ.குரோலி தெரிவித்துள்ளார்.


*ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்தில் அவசரம் கூடாது: ரஷியா

மாஸ்கோ, நவ. 19: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்தில் அவசரம் காட்டினால் அதை எதிர்ப்போம் என்று ரஷியா அறிவித்துள்ளது.
சமீபத்தில் இந்தியா, ஜப்பானுக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்காவின் ஆதரவு உண்டு என்று தெரிவித்தார்.
இது குறித்து மாஸ்கோவில் கருத்துத் தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலெக்சி சாஸ்நோவ், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்தில் அவசரம் காட்டக் கூடாது.
இதில் அனைத்து நாடுகளும் நன்கு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நாட்டைச் சேர்ப்பது தொடர்பான முடிவை எடுக்க ஐ.நா. பொது அவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இது தொடர்பான நடைமுறைகள் பல ஆண்டுகள் நீடிக்கும்.
இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற ரஷியா ஆதரவு அளிக்கிறது என்றார் அவர்.
முன்னதாக ரஷிய பிரதமர் விளாதிமிர் புதின், அதிபர் திமித்ரி மெத்வதேவ் ஆகியோர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற இந்தியா தகுதியுள்ள நாடு என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


* 3 நாடுகளுக்கு எதிராக ஐ.நா.வில் மனித உரிமை மீறல் தீர்மானங்கள் நிறைவேற்றம்

நியூயார்க், நவ.19: மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஐ.நா. கமிட்டி வியாழக்கிழமை தனிப்பட்ட முறையில் 3 தீர்மானங்களை வலுவான பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளது.
வடகொரியா, மியான்மர், ஈரான் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் நடந்ததை கண்டிக்கும்வகையில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது, மியான்மரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறப்படுவதை ஏற்கமுடியாது, வடகொரியா, ஈரான் விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்ற நிலையை இந்தியா எடுத்தது.
3 நாடுகளிலும் மனித உரிமை மீறல் நடந்துள்ளது என அமெரிக்கா வாக்களித்துள்ளது. ஈரானில்மட்டும் நடந்திருக்கிறது. வடகொரியாவிலும் மியான்மரிலும் நடக்கவில்லை என்பது சீனாவின் நிலை.
தங்களுக்கு எதிராக உலக நாடுகளின் கண்டனத்தை பெற்றுத்தரும் இந்த தீர்மானத்தை மியான்மர், வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இந்த தீர்மானங்களை ஏற்க முடியாது. இவற்றை நிராகரிக்கிறோம் என ஈரான் மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவர் முகமது ஜாவித் லரிஜானி கூறினார்.



தேசியச் செய்தி மலர் :

*2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் சார்பில் வாஹன்வதி பதில்

புது தில்லி, நவ.19: 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி பதில் அளிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் பிரதமருக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விக்கு அரசு தரப்பில் சனிக்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் சார்பில் அதிகாரி ஒருவர் பதில் மனுவை தாக்கல் செய்வார் என்று சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து இப்போது பதிலளிக்க அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சிறப்பு வழிகாட்டுதலை அரசு அனுப்பியுள்ளதா என்று கேட்டதற்கு, கருத்து கூற வாஹன்வதி மறுத்துவிட்டார்.
இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரணியத்திடம் கேட்டதற்கு, இதை மாற்று ஏற்பாடு என்று கருதக் கூடாது. இந்த வழக்கை ஒருங்கிணைந்து கையாள இத்தகைய நியமனம் உதவும் என்று அவர் கூறினார்.

* இன்று பிகார் இறுதி கட்ட தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 35,000 வீரர்கள்

பாட்னா,நவ.19: பிகார் சட்டப் பேரவைக்கான இறுதி கட்ட தேர்தல் சனிக்கிழமை (நவ.20) நடைபெறவுள்ளது.
நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் வாக்குப் பதிவை புறக்கணிக்குமாறு மக்களுக்கு நக்ஸலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்பட அனைத்துத் தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதி கட்ட தேர்தலில் 26 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகள் ரோஹ்தாஸ், ஒளரங்காபாத், பக்சார், கைமுர், கயா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளன. 18 தொகுதிகள் நக்ஸல் அச்சுறுத்தல் மிகுந்த தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதிகளில் நக்ஸல்கள் வாக்குப்பதிவை சீர்குலைக்க முயலலாம் என்று பாதுகாப்புப் படை வீரர்கள் நினைக்கின்றனர். இதனால் அவர்கள் விடுக்கும் எத்தகைய சவாலையும் முறியடிக்கும் விதமாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 35,000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குச் சாவடிகளுக்கு 100 சதவீதம் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நக்ஸல் பாதிப்பு தொகுதிகளில் கூட்டுப்படையினர், போலீஸôர் என தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளை பாதுகாப்பு வீரர்கள் ஹெலிகாப்டரில் பறந்தவாறு கண்காணிக்க உள்ளனர். தேர்தல் கண்காணிப்பு பணியில் 4 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அச்சம் தேவையில்லை: இதற்கு முன்பு நடந்த 5-கட்ட தேர்தலும் அமைதியான முறையில் நடந்துள்ளது. நக்ஸல் பாதித்த பகுதிகளில்கூட பெரி அளவில் வன்முறை ஏதும் நடக்கவில்லை. இதேபோல 6-ம் கட்ட தேர்தலையும் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று அந்த மாநில காவல்துறை தலைவர் நிலமணி தெரிவித்தார்.
பாதுகாப்பு விஷயம்குறித்து மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அச்சமின்றி வந்து வாக்களித்துச் செல்லலாம். வாக்காளர்களுக்கு முழுமையான பாதுகாப்பை பாதுகாப்புப் படை வீரர்கள் அளிப்பார்கள். இதில் சந்தேகமே தேவையில்லை.
நக்ஸல் பாதித்த பகுதிகளில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 3 மணிக்கு நிறைவடையும். பிற தொகுதிகளில் வாக்குப் பதிவு 7 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடையும் என்றும் நிலமணி கூறினார்.

மாநிலச் செய்தி மலர் :

* 95% நிறுவனங்கள் மூடல்: 45 கோடி ஜவுளி உற்பத்தி பாதிப்பு

திருப்பூர், நவ. 19: பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜவுளித்தொழில் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை நாடுதழுவிய உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இப்போராட்டத்தையொட்டி மூடப்பட்ட 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்களால் திருப்பூர் மாவட்டத்தில் | 45 கோடி மதிப்பில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
நூல் ஏற்றுமதி அதிகரித்து இருப்பதால் கடந்த 2 மாதத்தில் மட்டும் அனைத்துரக நூல் விலையும் கிலோவுக்கு | 55 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மிகக் கடுமையான இந்நூல் விலையேற்றத்தால் ஜவுளி உற்பத்தியாளர்களால் தங்கள் உற்பத்திக்குச் சரியான விலை நிர்ணயிக்க முடியாமலும், உள்நாட்டு, ஏற்றுமதி வர்த்தகத்திலும் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் திருப்பூரில் மட்டும் 20 சதவீதத்துக்கும் அதிகமான உற்பத்தி நிறுவனங்கள் முடங்கியுள்ளதுடன், கடந்த 4 மாதங்களில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, இந்திய ஜவுளித் தொழிலுக்கு ஏற்பட்டுவரும் பெரும் பாதிப்புக்கு தீர்வுகாண உடனடியாக நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க அனைத்து ஜவுளித்தொழில் அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தின. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து நாடுதழுவிய உற்பத்தி நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்னின்று நடத்திய இப் போராட்டத்துக்கு நாடுமுழுவதும் பெரும் ஆதரவு இருந்தது. இப்போராட்டத்தையொட்டி திருப்பூரிலுள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் அதன்சார்பு நிறுவனங்கள் என சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. போராட்டத்தையொட்டி ஜவுளித்தொழில் அமைப்புகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பல்வேறு பின்னலாடை, ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், ஜாப்ஒர்க் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

*சென்னை, நவ. 19: நெசவுத் தொழிலைப் பாதுகாக்க பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பஞ்சுத் தட்டுப்பாடு, நூல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் நெசவு ஆலைகள் மூடப்பட்டு தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இத்தொழிலைச் சார்ந்துள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமைச் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மொத்த வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சில நிறுவனங்கள் பதுக்கி வைப்பதனால் பஞ்சின் விலை செயற்கையாக உயர்ந்து வருகிறது. இது ஒரு பக்கம் என்றால், உற்பத்தி அபரிமிதமாக இருப்பதாகக் கூறி வெளிநாடுகளுக்கு பஞ்சினை மத்திய அரசை ஏற்றுமதி செய்கிறது.
இந்த இரண்டு காரணங்களாலும் பஞ்சின் விலை தாறுமாறாக உயர்ந்து நெசவாலைகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் அவலமும் உருவாகி வருகிறது.
விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பை அளிக்கும் தொழிலான நெசவுத் தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
பதுக்கலை ஒழித்து, கொள்ளை லாப வியாபாரத்தை தடுக்க வழி காண வேண்டும். பஞ்சு உற்பத்தியாளர்களுக்கு ஏற்ற விலை நிர்ணயம் செய்யவும், நெசவுத் தொலுக்கு நியாயமான விலையில் பஞ்சு கிடைக்கவும் மத்திய, மாநில அரசுள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல இடைத்தரகர்கள் தலையீட்டையும் தடுக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நியாயமான விலையில் பஞ்சு கிடைத்திடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் மேலோங்கிட புதிய நீண்டகால நெசவுத் தொழில் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று தங்கபாலு கேட்டுக் கொண்டுள்ளார்.

* தமிழ்ப் பல்கலைகழகத்தில் சொல் வங்கி.

தஞ்சாவூர், நவ. 19: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சொல் வங்கி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று துணைவேந்தர் ம. ராசேந்திரன் தெரிவித்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத் துறை சார்பில் தேசிய பத்திரிகை நாளையொட்டி, கடந்த நவம்பர் 16-ம் தேதி முதல் நடைபெற்று வந்த இதழாளர் மொழிப் பயிற்சி நிறைவு விழா இங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசுகையில் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
""தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒரு சொல் வங்கியை உருவாக்கும் வகையில் மாதம் ஒருமுறை பத்திரிகையாளர்கள், மொழி வல்லுநர்கள் கூடி, கலந்துப் பேசி, அந்தந்த மாதம் பத்திரிகைகளில் வெளியாகும் புதிய சொல்களைக் கண்டறிந்து, தரப்படுத்தி அனைவருக்கும் வழங்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆர்வமுள்ள பத்திரிகையாளர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம்'' என்றார் ராசேந்திரன்.


ஆரோக்கியச் செய்தி மலர் :

* சிறுநீரக நோயை குணப்படுத்தும் மாதுளம் பழச்சாறு

லண்டன், நவ.19: சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது என ஆய்விலிருந்து தெரியவருகிறது,
இஸ்ரேலில் டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாதுளம்பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதயநோயையும், சாவு விகிதத்தையும் குறைப்பது தெரியவந்தது. ஏனெனில்,
மாதுளம்பழச்சாறு அருந்தியவர்கள் உடலில் இருந்த தீங்குவிளைவிக்கும் பொருள்களை மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் அவர்கள் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டதாக உணர்ந்தனர்.
இருப்பினும், இந்த சோதனையை இன்னும் பலரிடம் செய்துபார்ப்பது நல்லது என வெஸ்டன் கலிலி மருத்துவமனையில் இந்த ஆய்வை நடத்திய தலைமை மருத்துவ நிபுணர் பட்யா கிறிஸ்டல் தெரிவித்தார்.
இந்த செய்தியை டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது.
மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.
புராஸ்ட்ரேட் புற்று நோயை மாதுளம் பழம் குறைக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்விலிருந்து கண்டறியப்பட்டது நினைவுகூரத்தக்கது.


வர்த்தகச் செய்தி மலர் :

* மும்பை, நவ.19: மும்பை பங்குச் சந்தையில் கடந்த 2 மாதங்களில் ஏற்படாத அளவுக்குக் கடும் சரிவு வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. 345 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 19,585 புள்ளிகளானது. இந்த வாரத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட இரண்டாவது மிகப் பெரிய சரிவு இதுவாகும். 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றம் தொடர்ந்து 6-வது நாளாக முடங்கியது. இது பங்குச் சந்தையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் தங்களது புதிய முதலீடுகளை நிறுத்தின. மேலும் அயர்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியும் சரிவுக்குக் காரணமாக அமைந்தது. இந்த வாரத் தொடக்கத்தில் பங்குச் சந்தை மிக அதிகபட்சமாக 445 புள்ளிகள் வரை சரிந்தது.
இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 108 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,890 புள்ளிகளானது.
ஆசிய பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. ஆனால் ஐரோப்பிய பங்குச் சந்தை அயர்லாந்து நிதி நெருக்கடியால் சரிவைச் சந்தித்தது.
முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ், தொலைத் தொடர்பு நிறுவனப் பங்குகள், கட்டுமான நிறுவனப் பங்குகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

விளையாட்டுச் செய்தி மலர் :

* இந்தியாவுக்கு 2-வது தங்கம்

குவாங்ஜெள, நவ.19: பதினாறாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 2-வது தங்கத்தை வெள்ளிக்கிழமை வென்றது.
அதுமட்டுமல்லாமல் படகோட்டும் வீரர், வீராங்கனைகள் மேலும் 2 பதக்கங்களைக் கைப்பற்றினர்.
சீனாவின் குவாங்ஜெள நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வெள்ளிக்கிழமை 2 ஆயிரம் மீட்டர் படகுப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் லால் தாக்கர் தங்கத்தைக் கைப்பற்றினார். பந்தய தூரத்தை 7 நிமிடம் 4.78 விநாடிகளில் கடந்து முதலாவதாக வந்தார் தாக்கர்.
சீன தைபே வீரர் வாங் மிங் ஹுய் 2-வது இடத்தையும், இராக் வீரர் ஹைதர் ஹமாரஷீத் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி குறித்து தாக்கர் கூறியதாவது: 2006-ம் ஆண்டு தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தேன். இந்தப் போட்டியில் தங்கத்தைப் பெற்று விடவேண்டும் என்று கடுமையாக பயிற்சி செய்தேன். இப்போது தங்கப் பதக்கத்தை வென்றுவிட்டேன் என்றார் அவர்.
முதல்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் படகுப் பிரிவில் இந்திய தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் இரட்டையரில் வெண்கலம்: இதே மகளிர் இரட்டையர் பிரிவு படகுப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரதிமா புஹானா-பிரமீளா மின்ஸ் ஜோடி 2-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்த ஜோடி பந்தய தூரத்தை 7 நிமிடம் 47.50 விநாடிகளில் கடந்து வென்றது. இதே பிரிவில் சீன வீராங்கனைகள் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

* கிரிக்கெட் :- நாகபுரியில் இன்று கடைசி டெஸ்ட்: வெற்றிக்குப் போராடும் இந்திய, நியூசிலாந்து அணிகள்

நாகபுரி, நவ.19: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிய நாகபுரியில் சனிக்கிழமை துவங்குகிறது.
ஆமதாபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில் மூன்றாவது டெஸ்டில் வெற்றிபெற இரு அணிகளும் கடுமையாகப் போராடும்.
அனைத்துக்கும் மேலாக வருண பகவான் கருணை புரிந்தால் மட்டுமே இப் போட்டி நடைபெறும் என்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெறவுள்ள நாகபுரியில் கடந்த 2 நாள்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது.


ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருகோயில்:

மூலவர் - ஹரசாப விமோசன பெருமாள், கமல நாதன்
தாயார் - கமலவல்லி நாச்சியார்
பழமை - 1000 - 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் - பஞ்ச கமல ஷேத்திரம்
ஊர் - கண்டியூர்
மாவட்டம் - தஞ்சாவூர்
மாநிலம் - தமிழ்நாடு.

பாடியவர்கள்:

மங்களாசாஸனம் - திருமங்கையாழ்வார்.

பிண்டியார் மண்டையேந்தி பிறர்மனை திரிதந்துண்ணும்
உண்டியான் சாபந்தீர்த்த ஒருவனூர் உலகமேத்தும்
கண்டியூர ரங்கம் கச்சிபேர் மல்லை யென்று
மண்டினார் குயலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே.

தல பெருமை:- சிவனின் (ஹரன்) சாபம் தீர்த்ததால், இங்குள்ள பெருமாள் "ஹரசாப விமோசனப் பெருமாள்' என்றழைக் கப்படுகிறார். பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது. இதே ஊரில் சிவபெருமானும் குடிகொண்டார். அவருக்கு "கண்டீஸ்வரர்' எனப் பெயர். இத்தலம் ஒரு மும்மூர்த்தி தலமாகும். பிரம்மனுக்கு கோயில் கிடையாது என்பதால், கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதராக பிரம்மன் அருள்பாலிக்கிறார். "ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற நூலை எழுதிய நாராயண தீர்த்தர் கண்டியூர் அருகிலுள்ள திருப்பூந்துருத்தியை சேர்ந்தவர். இவர் இத்தல பெருமாளின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். திருமங்கையாழ்வார் இத்தலத் தில் பாடிய பாடலில் இங்குள்ள பெருமாளை, ஸ்ரீரங்கம் பெருமாள், காஞ்சி பெருமாள், கோயிலடி பெருமாள் ஆகிய பெருமாள்களுடன் ஒப்பிட்டு பாடுகிறார்.

சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று ஐந்து திருமுகங்கள் உண்டு. இதே போல் பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது. அதனால் சிவனுக்கு ஈடாக தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தார். இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத்தலையை கிள்ளியெறிந்தார். இந்த பிரம்மஹத்தி தோஷத்தை தொலைக்க, கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார். ஒரு இடத்தில் அந்த கபாலம் விழுந்தது. அங்கே விஷ்ணு இருந்தார். அந்த தலமே பூரணவல்லி தாயார் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்.


ஆன்மீகச் சிந்தனை மலர் :

* கற்றது கையளவு தான் ! - அவ்வையார்.

* நாம் கற்ற விஷயங்கள் வெறும் கைப்பிடி மட்டுமே. இன்னும் கற்கவேண்டிய விஷயங்கள் இந்த பரந்த பூமியைப் போல எவ்வளவோ இருக்கின்றன. அதனால் படித்து விட்டோம் என்ற இறுமாப்பு கூடவே கூடாது.

வினாடி வினா :-

* ஜெர்மனியின் நவீன தத்துவ இயக்கத்தை உருவாக்கியவர் யார் ?

விடை : ஜெர்மன் எழுத்தாளர், விமர்சகர், தத்துவ அறிஞர், பிரெடெரிக் வான் ஷ்லீகல் [ 1772 - 1829 ].


இதையும் படிங்க :

* பஞ்சபூதக் கோயில்கள்

ஐம்பூதங்களில் இறைவன் நெருப்பாக இருக்கிறார் என்ற தத்துவத்தை, திருவண்ணாமலை உணர்த்து கிறது. திருக்கார்த்திகையன்று திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவர். இந்தியாவின் ஆன்மிக வாழ்வில் லயித்துப் போன ஐரோப்பியர்கள், வாரணாசிக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலையில் தான் இருக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கிரிவலம் ஆன்மிக சுற்றுலாவால் ஆயிரக்கணக்கான நேரடியான, மறைமுக வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர். திருவண்ணாமலை, திருக்கார்த்திகை தீபம் குறித்த தகவல்களுக்காக yahoo groupsல் "thiruvannamalai' என்ற வெப்சைட் குழு உள்ளது.


--

No comments:

Post a Comment