Saturday, November 27, 2010

இன்றைய செய்திகள்- நவம்பர் - 27 - 2010..
உலகச் செய்தி மலர் :

* தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எப்போது ? இலங்கை அமைச்சர் பதில்

கொழும்பு, நவ. 26: தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் விஷயம் பரிசீலனையில் உள்ளது என
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கூறினார்.

இடம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் 17 ஆயிரம்
முதல் 20 ஆயிரம் பேர் மட்டுமே முகாம்களில் உள்ளனர். அவர்களும் விரைவில் அவர்களது சொந்த
இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள்.
தமிழர்கள் வசிக்கும் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த விஷயத்தில் கருணாநிதி கூடுதல்
அக்கறை காட்டுகிறார். எனினும், தமிழர்கள் மறு குடியமர்வு விஷயத்தில் இலங்கை தீவிரமாக
உள்ளது என்றார்.

ராஜபட்சவுடன் கிருஷ்ணா சந்திப்பு: கூட்டுக் கூட்டத்துக்கு முன்னதாக, இலங்கை அதிபர் ராஜபட்சவை
எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்துப் பேசினார்.
ஆயுதமேந்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான
நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக வியாழக்கிழமை அளித்த
பேட்டியில் கிருஷ்ணா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


* போருக்கு வித்திடுகிறது தென் கொரியா: வட கொரியா எச்சரிக்கை

யோன்பியோங், நவ. 26: தனது நடவடிக்கைகளின் மூலம் போருக்கு தென் கொரியா வித்திடுகிறது என
வட கொரியா எச்சரித்துள்ளது.

தென் கொரியாவில் உள்ள யோன்பியோங் தீவுகளின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ராக்கெட்
குண்டுகளை வீசி வட கொரியா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து சிறிது நேரம் பீரங்கிச் சண்டை
நடைபெற்றது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக இரு நாடுகளுமே பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டன.

வட கொரிய ராணுவத்தினரும், மக்களும் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
பயங்கரமான நெருப்பைப் பொழிய தயார் நிலையில் ராணுவத்தினர் உள்ளனர்.
மோதல்கள் அதிகமானால் அது போருக்கு வழிவகுக்கும். நெருப்புடன் விளையாட விரும்புபவர்கள்
அழிந்து போவார்கள் என அறிக்கையில் வட கொரியா தெரிவித்துள்ளது.

* இலங்கை ரயில்வே திட்டங்களுக்கு இந்தியா ரூ.1880 கோடி கடன்


கொழும்பு, நவ.26: இலங்கையில் போரினால் பாதித்த வடக்குப் பகுதியில் மூன்று ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரூ.1880 கோடியை அந்நாட்டுக்கு இந்தியா கடனாக வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இலங்கை அதிபர் ராஜபட்ச, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். கிருஷ்ணா முன்னிலையில் கொழும்பில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

தேசியச் செய்தி மலர் :

* பிகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்.

பாட்னா, நவ. 26: பிகார் மாநிலத்தின் 32-வது முதல்வராக நிதீஷ் குமார் (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், அவருக்கு பதவிப் பிரமாணத்தையும், ரகசிய காப்புப் பிரமாணத்தையும் ஆளுநர் தேவானந்த் கொன்வர் செய்துவைத்தார்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுசீல் குமார் மோடி அமைச்சராகப் பதவியேற்றார். அவர் துணை முதல்வராக இருப்பார்.

இவர்களைத் தவிர்த்து ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 18 பேரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 10 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ராவின் மகன் நிதீஷ் மிஸ்ரா, அமைச்சரவை ஒருங்கிணைப்புத் துறை முதன்மைச் செயலர் அப்சல் அமானுல்லாவின் மனைவி பர்வீன் அமானுல்லா, அட்வகேட் ஜெனரலாக இருந்த பி.கே.சாஹி ஆகியோர் அமைச்சராகப் பதவியேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்கரி, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் சரத் யாதவ், முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாரும் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

* கடலோர வழிகாட்டி புத்தகம் தயாரிக்கிறது கடற்படை

புது தில்லி, நவ. 26: மும்பை தீவிரவாத தாக்குதல்கள் போன்ற தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் விதமாக கடலோர வழிகாட்டிப் புத்தகம் ஒன்றை தயாரித்து மாநில அரசுகளுக்கு வழங்க உள்ளது இந்திய கடற்படை

இந்த வழிகாட்டி புத்தகத்தில் கடலோர பகுதிகளில் உள்ள கிராமங்கள், அவற்றின் மக்கள் தொகை, மீனவர் கிராமங்கள், அவற்றின் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களின் தொடர்பு எண்கள், படகு குழாம்கள் போன்றவை பற்றி விரிவான தகவல்கள் அதில் இடம்பெற்று இருக்கும்.

 மேலும் இதுவரை நாடு முழுவதும் உள்ள 25 லட்சம் மீனவர்களைப் பற்றிய தகவல்களை கடற்படை சேகரித்து உள்ளது. மும்பை தாக்குதல் போன்ற தீவிரவாத தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழ்ந்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு இந்த வழிகாட்டி புத்தகம் மாநில அரசுகளுக்கு உதவியாக அமையும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.


* வீட்டுக் கடன் ஊழலுக்கும் 2 ஜி முறைகேட்டுக்கும் தொடர்பு!- அம்பலமாகும் உண்மைகள்

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுக்கும், வீட்டு வசதிக் கடன் ஊழலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சி.பி.ஐ. அம்பலப்படுத்தியுள்ளது.

2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்றவை பெரும்பாலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களே.

தொலைத்தொடர்பு துறைக்கும், ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லையே, எப்படி இந்த நிறுவனங்கள் புதிய தொழிலுக்கு வருகிறார்கள் என்று அப்போதே பலரும் ஆச்சரியம் தெரிவித்தனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இந்த 9 நிறுவனங்களும் தொடங்கப்பட்டு சில நாட்களே ஆகியிருந்தது முக்கியமானது. ஆனால் தொலைத் தொடர்பு லைசென்ஸ் பெற பல நூறு கோடி ரூபாயை இந்த நிறுவனங்கள் வங்கிக் கணக்கில் காட்டி இருந்தன.

சில நிறுவனங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,600 கோடியைக் காட்டின. மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை இந்த நிறுவனங்கள் எப்படி ஏற்பாடு செய்தன என்பது யாருக்கும் புரியாத புதிராக இருந்தது.

இந் நிலையில் இந்த 9 நிறுவனங்களும் வீட்டு வசதிக் கடன் ஊழலிலும் சிக்கியுள்ளன. மெகா குடியிருப்புத் திட்டம் என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளன. முறைகேடாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசியிலிருந்து பெறப்பட்ட அந்த பணத்தை ஆதாரமாகக் காட்டித்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொலைத் தொடர்பு உரிமையை இந்த நிறுவனங்கள் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்த சிபிஐ உள்பட நாட்டின் புலனாய்வு அமைப்புகள் விசாரணை மற்றும் அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளன.

அரசு வங்கிகளில் பல ஆயிரம் கோடியை முறைகேடான வழியில் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அதை தாற்காலிகமாக கணக்கில் காட்டி 2 ஜி உரிமம் வாங்கியுள்ளன. இந்த முறைகேட்டின் அளவு ரூ. 45,000 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறாம்.

*பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு

புதுடில்லி : எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 7.8 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர்.


மாநிலச் செய்தி மலர் :

* தமிழகம், புதுவையில் இன்று கனமழை.

சென்னை, நவ. 26: தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் சனிக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 வங்கக் கடலில் இலங்கை கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் காரணமாக தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கன மழை நீடித்து வருகிறது.

 இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம்,  புதுவையில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.

 மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):
 நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, மணமேல்குடி 70; காரைக்கால், தஞ்சாவூர், வல்லம், கொடவாசல், மன்னார்குடி, நன்னிலம் 60; முத்துப்பேட்டை 50, கும்பகோணம், பட்டுக்கோட்டை, வலங்கைமான், கொள்ளிடம், சீர்காழி, கடலடி, பம்பன் 40; காட்டுமன்னார்கோயில், சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அதிராமப்பட்டணம், மதுக்கூர், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, மயிலாடுதுறை, கமுதி, ராமநாதபுரம், மணியாச்சி, கன்னியாகுமரி, நாகர்கோயில், ஜெயங்கொண்டம், அருப்புக்கோட்டை 30.

ஆரோக்கியச் செய்தி மலர் :

* காய்கறி, பழங்கள் சாப்பிடுவோர் 40 சதவீதம் உயர்வு.

கோவை: ""சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் காய்கறி, பழங்கள் சாப்பிடுவோர் எண்ணிக்கை 30-40 சதவீதம் அதிகரித்து விட்டது. இதனால் உணவு உற்பத்தியை விட தோட்டக்கலை உற்பத்தி வரும் ஆண்டுகளில் அதிகரித்து விடும்,'' என்று டில்லி தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் எச்.பி.சிங் கூறினார். கோவை வேளாண் பல்கலையில் தாவர பல்லுயிர் பெருக்கம் மற்றும் நில எழிலூட்டுதல் குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு நேற்று மாலை துவங்கியது.  பல்கலை துணை வேந்தர் முருகேசபூபதி பேசியதாவது: நகரங்களில் வசிக்கும் 15 வயதுக்கு மேற்பட்ட 11 சதவீதம் பேருக்கு இன்று சர்க்கரை நோய் உள்ளதாகவும், கிராமப்புறங்களில் மூன்று சதவீத பேருக்கு மட்டுமே உள்ளதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஆகவே நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இயற்கை பூங்காக்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.  இதற்காகவே பல்கலை சார்பில் ஆண்டுதோறும் பிளவர் ஷோக்களும் படிப்புகளும் நடத்தப்படுகின்றன.  இது தொடர்பான மாணவர் பரிமாற்றம் மற்றும் படிப்புக்காக சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, துணைவேந்தர் முருகேச பூபதி பேசினார். டில்லி தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் எச்.பி.சிங் பேசியதாவது:  பூக்கள் நிறைந்த சூழலிலும்,இல்லாத சூழலிலும் 15 நாட்கள் வசித்தவர்கள் இடையே நடத்திய ஆய்வில், பூக்கள் நிறைந்த சூழலில் வசித்தவர்களின் திறன் 20 சதவீதம் உயர்ந்துள்ளதும் சர்க்கரை அளவு குறைந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது. 


தொழில்நுட்பச் செய்தி மலர் :

* ஐபோன், ஐபாட் மூலம் தமிழ் கற்க புதிய சாப்ட்வேர்!

ஆஸ்டின்: ஐபோன்கள் மற்றும் ஐபாட் ஆகியவற்றின் மூலம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளைப் கற்றுக் கொடுக்கும் புதிய அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஐம்கரா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் இன்று இந்தியர்கள் பரவி விட்டனர். குறிப்பாக தமிழர்கள் இல்லாத பகுதியே இல்லை என்று கூட கூறலாம்.

தமிழர்களும், இந்தியர்களும் உலகம் முழுவதும் விரவியிருப்பதால் தமிழும், இந்திய மொழிகளும் இன்று உலகமயமாகியுள்ளன.

ஐம்கரா நிறுவனம் இதற்காகவே ஒரு விசேஷ அப்ளிகேஷன் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது. இது ஐபாட் மற்றும் ஐபோன்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை கற்றுத் தருகிறது.

நமக்கு நமது தாய்மொழியை கற்றுக் கொடுக்கிறது இந்த அப்ளிகேஷன். தமிழை எழுதவும், படிக்கவும் இந்த ஐம்கரா அப்ளிகேஷன் உதவுகிறதாம்.

எழுத்துக்களை சொல்லிக் கொடுக்க அடையாளங்களை (Symbols) இது பயன்படுத்துகிறது.

ஆடியோ-விஷூவல் வடிவில் உள்ள இது, தமிழ் மீதான அறிவை மேம்படுத்த விரும்புவோருக்கும் பேருதவியாக வந்துள்ளது. ஆப்பிள் ஸ்டோர்களில் இதை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். தற்போது வந்துள்ள 1.0 வெர்சன், மொழிகளின் அடிப்படைகள் குறித்ததாக அமைந்துள்ளது. இருப்பினும் விரைவில் இதை மேலும் மேம்படுத்தி வெளியிடவுள்ளனராம்.

வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் இந்தியர்கள் தங்களது தாய் மொழியை தங்களது பிள்ளைகளுக்கு தெளிவாக, சரியாக சொல்லித் தர இந்த அப்ளிகேஷன் உதவும் என்கிறது ஐம்கரா.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 181 புள்ளிகள் சரிவு

மும்பை, நவ.26- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 181 புள்ளிகள் சரிந்து 19,136 புள்ளிகளில் முடிவடைந்தது.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், மஹேந்திரா அன் மஹேந்திரா, பெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
டிசிஎஸ், சிப்லா, பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஒஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 47 புள்ளிகள் சரிந்து 5,751 புள்ளிகளில் முடிவடைந்தது.விளையாட்டுச் செய்தி மலர் :

* ஆசிய விளையாட்டு : ஒரே நாளில் 4 தங்கம் 

குவாங்ஜெü, நவ.26: சீனாவின் குவாங்ஜெü நகரில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை இந்தியா ஒரே நாளில் 4 தங்கம் வென்றது.

இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

சாதனை: குவாங்ஜெü ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவின் விளையாட்டு சாதனையில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. 1982-ம் ஆண்டு தில்லியில் நடந்த போட்டியில் 13 தங்கங்களை வென்றதே ஆசிய விளையாட்டில்   இந்தியாவின் அதிகபட்ச சிறப்பாக இருந்தது. இந்த ஆசிய விளையாட்டில் 14 தங்கங்களை வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் இந்தியாவுக்கு 14-வது தங்கத்தை பெற்றுத்தந்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டில் 10 தங்கம், 17 வெள்ளி, 26 வெண்கலத்துடன் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்தது இந்தியா. இப்போது மொத்தம் 64 பதக்கங்களுடன் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்தப் போட்டியில்தான் இந்தியா அதிக அளவு பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஒரே நாளில் 4 தங்கம்: வெள்ளிக்கிழமை நடந்தப் போட்டிகளில் மட்டும் இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

* செஸ்: ஆடவர் அணிக்கு வெண்கலம்

குவாங்ஜெü, நவ.26: ஆசிய விளையாட்டில் செஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிக்கிழமை வெண்கலம் வென்றது. செஸ்ஸில் இந்தியா வெல்லும் 2-வது பதக்கம் இது. முன்னதாக, மகளிர் தனிநபர் பிரிவில் ஹரிகா துரோணவள்ளி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
  
கிருஷ்ணன் சசிகிரண், சூரிய சேகர் கங்குலி, ஜிஎன் கோபால், பி அதிபன் ஆகியோர் கொண்ட இந்திய அணி வெள்ளிக்கிழமை நடந்த 9-வது (கடைசி) சுற்றில் ஈரான் அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3.5-0.5 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை வென்று போட்டியில் 3-ம் இடத்தைப் பிடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் சீன அணி 3.5-0.5 என்ற புள்ளிக்கணக்கில் பிலிப்பின்ûஸ வீழ்த்தியது. இதையடுத்து, சீனா தங்கமும், பிலிப்பின்ஸ் வெள்ளியும் வென்றன. 3-ம் இடம் பிடித்த இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிட்டியது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில்

மூலவர் - வீரபத்திரர் [ ராஜராயுடு ]
உற்சவர் - கல்யாண வீரபத்திரர்
தாயார் - பத்ரகாளி
ஆகமம் - வீரசைவாகமம்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் - ராஜவீடு
ஊர் - ராயசோட்டி
மாவட்டம் - கடப்பா
மாநிலம் - ஆந்திர பிரதேசம்

தல பெருமை :- 

மார்ச் மாதத்தில் ஐந்து நாட்கள் வீரபத்திரர் மீது சூரிய ஒளி விழுகிறது. முதல் நாளில் காலில் விழும் ஒளி, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக உடலில் விழுந்து, ஐந்தாம் நாள் முகத்தில் விழும்.  
   
பயம் நீங்க, மனக்குழப்பம் தீர வீரபத்திரரிடம் வேண்டிக்கொள்ளலாம்

சடாரி சேவை: ராஜகோபுரத்துடன், வீரபத்திரருக்கென பிரதானமாக அமைந்த பெரிய கோயில் இது. மூலஸ்தானத்தில் வீரபத்திரர் அருகில் தட்சன் வணங்கியபடி அமர்ந்திருக்கிறான். வீரபத்திரருக்கு வலப்புறத்தில் மாண்டவ்யர் பூஜித்த சிவலிங்கம் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு பூஜை செய்த பிறகே, வீரபத்திரருக்கு பூஜை செய்கின்றனர். வீரபத்திரர் காலையில் பால ரூபமாகவும், மாலையில் மீசையுடன் வீர கோலமாகவும் காட்சி தருகிறார். பெருமாள் தலங்களைப் போல, இங்கும் வீரபத்திரரின் பாதம் பொறித்த சடாரியால் ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. வெற்றிலையை பிரதான பிரசாதமாகத் தருகின்றனர்.

அம்பாள் அருகில் நந்தி: ராஜகோபுரத்திற்கு வெளியில் விமானத்துடன் கூடிய தனி மண்டபத்தில் நந்தீஸ்வரர் இருக்கிறார். வீரபத்திரர் சன்னதி எதிரில் சிவன், வீரபத்திரர் இருவருக்குமாக வீர நந்தி, சிவ நந்தி என இரண்டு நந்திகள் உள்ளன. இந்த இரண்டு நந்திகளும் சன்னதியிலிருந்து விலகியிருப்பது வித்தியாசமான அமைப்பு. பத்ரகாளி சன்னதி அருகிலும் ஒரு நந்தி இருக்கிறது.

சாதத்தை சிதறடிக்கும் நிகழ்ச்சி: சிவராத்திரியை ஒட்டி 11 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. எட்டாம் நாளில் தட்சன் வதம் வைபவம் நடத்தப்படுகிறது. அப்போது வீரபத்திரர் சன்னதி எதிரில் 365 படி சாதம், பூசணிக்காய், அதிரசம், கிழங்கு ஆகியவற்றை மலை போல குவித்து, வீரபத்திரரிடம் உள்ள கத்தியால், அன்னத்தை (சாதம்) கிளறி சன்னதி முழுவதும் சிதறடிக்கின்றனர்.வீரபத்திரர், தட்ச யாகத்தை துவம்சம் செய்ததன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்படுகிறது. இந்த அன்னமே பிரசாதமாக தரப்படும். இந்நிகழ்ச் சியின்போது மட்டும் வீரபத்திரருக்கு நெற்றிக்கண் வைக்கப்படுகிறது.

தல வரலாறு :

தன்னை அழைக்காமல் தட்சன் யாகம் நடத்தியதால் சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழிக்க உத்தரவிட்டார். யாகத்தை அழித்தபின்பும் வீரபத்திரரின் உக்கிரம் தணியவில்லை. இந்நேரத்தில், மாண்டவ்ய மகரிஷி என்பவர், வீரபத்திரரின் தரிசனம் வேண்டி சிவலிங்கம் அமைத்து தவமிருந்தார். வீரபத்திரர் அவருக்கு உக்கிரமாக காட்சி கொடுத்தார்.இதைக்கண்ட மகரிஷி அம்பிகையிடம் அவரைச் சாந்தப்படுத்தும்படி வேண்டினார். அதன்படி அம்பாள் பத்ரகாளியாக இங்கு வந்தாள். வீரபத்திரர் சாந்தமானார். இருவரும் தான் தவமிருந்த இடத்தில் எழுந்தருளும்படி வேண்டினார் மாண்டவ்யர். அத்தலமே தற்போதைய ராயசோட்டி. பிற்காலத்தில் மன்னன் ஒருவன், இங்கு கோயில் எழுப்பினான்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* ஆசையினால் வரும் துன்பம் - ஆதி சங்கரர்.

* நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. இதையும் படிங்க :

கூகையைக் குளிர்வித்த தோழி !

சங்க இலக்கியங்களுள் தலைவன், தலைவி, தோழி, தாய், செவிலித்தாய் முதலிய பாத்திரங்கள் தனித்தனிச் சிறப்புப் பெற்று விளங்குவதைக் காண்கிறோம். ஆனால், தோழி மட்டுமே தலைவிக்குத் தாயாகவும், செவிலித் தாயாகவும் சிறப்புத் தகுதி பெற்று பரிணமிக்கிறாள்.

தலைவனைக் காணாதபோது தலைவிக்கு ஏற்படும் துன்பத்திலிருந்து தலைவி மீண்டுவர, பல வழிமுறைகளைக் கையாண்டு தலைவிக்கு உற்ற துணையாயிருப்பவள் தோழி. அவ்வாறு தலைவனைக் காணாதபோது தலைவியின் உடல் நோய் (பசலை) கண்டு வருத்தப்படுமே என்ற தாய்மையின் உள்ளத்தோடு தலைவனின் வருகைக்காக கூகையின் தடையைத் தகர்க்கிறாள். மேலும், கூகையின் அலறலால் வீட்டில் உள்ள அனைவரும் விழித்து எழுந்து விட்டால், தலைவிக்குக் கேடு சூழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு செவிலித்தாயின் அக்கறையோடு தலைவியைக் காப்பாற்றுகிறாள்.

இவ்வாறாகத் தோழியின் பண்பும், பங்கும், தலைவிமேல் கொண்ட அன்பும், சமயோஜித புத்தியும், அறிவுத் திறனும், வீரமும் அகப்பாடல்களுள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், பெருந்தேவனார் என்ற புலவர் இயற்றிய, நற்றிணை - குறிஞ்சித் திணைப் பாடல் ஒன்று தோழியின் பண்பை மிகவும் சிறப்பாக விளங்குகிறது.
தலைவியைக் காண தலைவன் இரவுக்குறியிடத்துவரும்போது, கூகையானது

(கோட்டான்) தனது கடூர குரலை எழுப்பி, வீட்டில் உள்ள அனைவரையும் துயில் களையச் செய்கிறது. இதனால், தலைவனின் வருகை தடைபடுகிறது. தலைவியைக் காண முடியாமல் தலைவன் வந்தவழியே திரும்புகிறான். தலைவனைக் காண இயலாமல், அத்துன்பத்தைத் தாங்கமாட்டாது தலைவி வருத்தமுற்று முகம் வாடுவதைக் கண்ட தோழி, கூகையிடம், "" ஏ! கூகையே! எங்கள் ஊரின் முகப்பிலுள்ள பொய்கையின் அருகில் கடவுள் வீற்றிருக்கும் முதிய மரத்தின் மீதிருந்து வளைந்த வாயையும், தெளிந்த கண்களையும், கூரிய நகத்தையும் வைத்துக்கொண்டு பறையோசை போன்ற உன் குரல் ஒலியால் பிறரை வருத்துகிறாய். நாங்கள் ஆட்டிறைச்சியோடு நெய்ச்சோற்றினையும், வெள்ளெலியின் சூடான இறைச்சியையும் உனக்கு நிறையக் கொடுப்போம். எம்மிடம் அன்பு நிறைந்த எம் காதலர் வருவதை விரும்பி, இரவில் கூட துயில்கொள்ளாமல் உள்ளம் சுழன்று வருந்துகிறோம். அவ்வேளையில், யாவரும் அஞ்சி விழித்துக் கொள்ளும்படியாக உன் கடுமையான குரலை எடுத்துக் குழறி எங்களை வருத்துகிறாய். அவ்வாறு எங்களை வருத்தாதே'' என்று கூறுகிறாள்.

கூகையின் ஒலியால் தலைவனைக் காணமுடியாமல் வருத்தமடையும் தலைவியின் வருத்தம் கண்டு பொறுக்காத தோழி, கூகையிடம் இவ்வாறு தாழ்மையுடன் கெஞ்சி, கூகையைக் குளிர்விக்கிறாள். கூகையிடம் தோழி கெஞ்சிக் குளிர்விக்கும் பாடல் வருமாறு:

""எம்மூர் வாயில் ஒண்துறைத் தடைஇய
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கண் கூர்உகிர்
வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாங் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே''
(நற்றிணை - பா 83]
நன்றி - தின மலர் , தின மணி.                                                          
                                                                       

2 comments:

சாமக்கோடங்கி said...

அடேங்கப்பா.. எவ்வளவு பெரிய தொகுப்பு..
மெதுவா படிக்கறேன்..

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றிங்க சாமக்கோடங்கி.

Post a Comment