Thursday, November 25, 2010

இன்றைய செய்திகள்.thumb_133091.jpgஉலகச் செய்தி மலர் :

* நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய 29 தொழிலாளர்களும் பலி

கிரேமெளத்: நியூசிலாந்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 29 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிரேமெளத் பகுதியில் உள்ள பைக் ரிவர் நிலக்கரிச் சுரங்கத்திற்குள் இந்த 29 பேரும் சிக்கியிருந்தனர். கடந்த ஐந்து நாட்களாக இவர்கள் உள்ளேயே தவித்து வந்தனர். வெடிவிபத்து ஏற்பட்டதில் சுரங்கம் மூடிக் கொள்ளவே இவர்கள் அனைவரும் உள்ளே மாட்ட நேரிட்டது.

இந்தநிலையில் இன்று பிற்பகல் இன்னொரு வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கம் முற்றிலுமாக மூடி விட்டது. இதையடுத்து உள்ளே சிக்கியிருந்த 29 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸ் கண்காணிப்பாளர் கேரி நோல்ஸ் கூறியுள்ளார்.

முதலில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து மிகவும் அபாயகரமான மீத்தேன் வாயு சுரங்கத்திற்குள் பரவியிருந்தது. இதனால் 29 பேரையும் மீட்க முடியாமல் மீட்புக் குழுவினர் பரிதவித்தனர்.

இந்த நிலையில் இன்று மிகப் பெரிய அளவிலான வெடிவிபத்து நடந்துள்ளதால் உள்ளே இருந்த அனைவருமே உயிரிழந்திருக்க வேண்டும் என்று போலீஸார் கூறுகின்றனர். யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கண்காணிப்பாளர் நோல்ஸ் தெரிவித்தார்.

தற்போது 29 பேரின் உடல்களையும் மீட்கும் பணியில் போலீஸார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.


* ஈரான் பெண்களின் திருமண வயது 16 ஆக குறைப்பு: அதிபர் அறிவிப்பு

டெஹ்ரான்: ஈரான் பெண்களை 16 வயதில் திருமணம் செய்து கொள்ளும்படி அந்நாட்டு அதிபர் மஹமூத் அகமதுனிஜாத் வலியுறுத்தியுள்ளார். 

ஈரான் அதிபர் அந்நாட்டுப் பெண்களை 16 முதல் 17 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். கடந்த 1979-ம் ஆண்டு நடந்த இஸ்மிய புரட்சியைத் தொடர்ந்து ஈரானில் மக்கள் தொகை அதிவேகமாக அதிகரித்தது. இதையடுத்து மக்கள் தொகையை குறைக்கும் பொருட்டு 1990-களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகப்படு்த்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து ஈரானின் மக்கள் தொகை பெரிதும் குறைந்தது. இந்த நிலையில் தற்போது திருமண வயதை அதிபர் அகமதிநிஜாத் குறைத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், 

ஆண்களின் திருமண வயதை 20 ஆகவும், பெண்களின் திருமண வயதை 16, 17 ஆகவும் ஆக்குகிறோம். ஆண்கள் 26 வயதிலும், பெண்கள் 24 வயதிலும் திருமணம் செய்து கொள்வது நியாயமில்லை.

மேலும், இந்த குடும்பக்கட்டுப்பாட்டு திட்டம் மேலை நாடுகளின் தாக்கத்தால் வந்தது. இது கடவுளுக்கு எதிரான செயல் என்று கூறினார் அவர்.

* வட கொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

வாஷிங்டன், நவ.24: தென் கொரியா மீது வட கொரியா பீரங்கித் தாக்குதலை நடத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்ட திட்டங்களை மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் கொரியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் நீங்கள் (வட கொரியா) எதையும் சாதித்துவிட முடியாது; மாறாக உலக நாடுகளில் இருந்து மேலும் தனிமைப்படுத்தவே படுவீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வட கொரியாவின் அத்துமீறிய தாக்குதலால் பாதித்துள்ள தென் கொரியாவுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் அமெரிக்க மக்களின் சார்பில் ஒபாமா தெரிவித்துக்கொண்டார்.

இரு கொரிய நாடுகளுக்கு இடையே சண்டை மூண்டதுமே ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட தமது கூட்டணி நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து விவாதித்தார்

பதிலடி கொடுப்பது அவசியம்: வட கொரியாவின் அடாவடித்தனத்தை இனிமேலும் சகித்துக் கொண்டு இருக்கக்கூடாது. அவர்களுக்கு தக்கப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தென் கொரிய நாளிதழ்கள் அனைத்தும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதுதான் ஒட்டுமொத்த தென் கொரிய மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பு என்றும் அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன. இதனிடையே, வட கொரியாவுக்கு செய்து வந்த  வெள்ள நிவாரண உதவியை தென் கொரியா நிறுத்தியுள்ளது.

24-lic-housing-200.jpgதேசியச் செய்தி மலர் :

* வீட்டுக் கடன் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு: எல்ஐசி, வங்கி உயரதிகாரிகள் கைது

புது தில்லி, நவ. 24: வீட்டுக் கடன் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எல்ஐசி வீட்டுவசதி கடன் நிறுவன மும்பை பிரிவுத் தலைவர் ராமச்சந்திர நாயர் சிபிஐ போலீஸôரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

÷இவர் தவிர, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின்  உயரதிகாரிகள் உள்பட 7 பேரும் கைதாகியுள்ளனர்.

÷தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு போலியாக ஆவணங்கள் தயாரித்து அவர்களுக்கு கடன் வழங்கியதாகவும், நிலத்தின் மதிப்பை அதிகரித்துக் காட்டி கடன் வழங்கியதாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

÷எல்ஐசி செயலாளர் (முதலீடு) நரேஷ் கே. சோப்ரா, பாங்க் ஆஃப் இந்தியா (தில்லி) பொது மேலாளர் ஆர்.என். தயாள், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா இயக்குநர் (ஆடிட்டர்) மணீந்தர் சிங் ஜோஹர், பஞ்சாப் நேஷனல் வங்கி (தில்லி) துணைப் பொது மேலாளர் வெங்கோபா குஜ்ஜால், மும்பையைச் சேர்ந்த மணி மேட்டர்ஸ் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் சர்மா, அதன் பணியாளர்கள் இருவர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

÷இதில் பல உயரதிகாரிகள் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு இடைத்தரகர்கள் போல செயல்பட்டுள்ளனர். இந்த ஊழலில் மேலும் சில சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த வீட்டுக் கடன் மோசடியில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கக் கூடும் என்று தெரிகிறது.

24-nira-radia-200.jpg

* ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பாக மக்கள் தொடர்பு நிறுவன உரிமையாளரான நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவுஅதிகாரிகள் இன்று அதிரடி விசாரணை நடத்தினர்.

பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் நீரா உரையாடிய ஆடியோ தகவல்கள் அமலாக்கப் பிரிவிடம் சிக்கியுள்ளது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி உள்ளிட்டோருடன் நீரா பேசியதன் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நீராவிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைக்கு வராமல் அவர் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்தார்.

இன்று காலை அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு வந்தார் நீரா. அவரிடம் அவருடைய நிறுவனத்திற்கும், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பெற்ற நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

ராடியாவுக்கும், ராஜாவுக்கும் இடையிலான பேச்சு குறித்தும் விசாரிக்கப்படட்டது.


* பிகார் தேர்தல் : நிதீஷ் கூட்டணி அமோக வெற்றி.

பாட்னா, நவ. 24: லாலு பிரசாதின் ஜாதி அரசியலை முறியடித்து பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நான்கில் மூன்று பங்குக்கும் மேல் இடங்களைப் பிடித்துள்ளது.

முடிவு அறிவிக்கப்பட்ட 243 தொகுதிகளில் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (115)- பாரதிய ஜனதா கட்சி (91) கூட்டணி 206 இடங்களையும், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 22 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான லோக ஜனசக்தி 3 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், சுயேச்சைகள் 6 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜேஎம்எம் ஆகியவை ஓரிடத்தையும் கைப்பற்றின.

பிகாரில் மொத்தமுள்ள 243 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை 6 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது

20 அமைச்சர்கள் வெற்றி: இத் தேர்தலில் போட்டியிட்ட 25 அமைச்சர்களில் 20 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் 13 பேர் ஐக்கிய ஜனதா தளத்தையும், 7 பேர் பாரதிய ஜனதாவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை பதவியேற்பு: தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, புதிய அரசு வெள்ளிக்கிழமை பதவியேற்கும் என முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்தார். தங்கள் தலைவரைத் தேர்வு செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் வியாழக்கிழமை சந்திக்க உள்ளனர் என கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.


* தோல்வியை ஏற்கிறேன் : லாலு பிரசாத்.

பாட்னா, நவ.24: சட்டப் பேரவைத் தேர்தலில் எனது கட்சிக்கு கிடைத்துள்ள தோல்வி என்னை திகைக்க வைத்துள்ளது. எனினும் அத்தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.

தேல்தல் முடிவு வெளியான பின்னர் பாட்னாவில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போது லாலு பிரசாத் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் முடிவு என்பது மக்களின் தீர்ப்பு. ஆகையால் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எனினும் எனது கட்சிக்கு இத்தகைய அதிர்ச்சித் தோல்வியை ஏன் மக்கள் அளித்தார்கள் என்பதை விரைவில் ஆய்வு செய்வேன் என்று லாலு பிரசாத் குறிப்பிட்டார்.

மாநிலச் செய்தி மலர் :

தமிழ்ப் பல்கலை.யில் ஜனவரி14-ல் வளர் தமிழ் வானொலி நிலையம் தொடக்கம்: துணைவேந்தர் தகவல்

தஞ்சாவூர், நவ. 24: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வளர் தமிழ் வானொலி நிலையம் 2011 ஜனவரி 14-ல் தொடங்கப்படுகிறது என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராசேந்திரன்
.
தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத் துறை, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், "தமிழ்க் காப்பிய, நீதி இலக்கிய மொழிபெயர்ப்புகள்- சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கிய தேசியக் கருத்தரங்குக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியதாவது:

மொழிபெயர்ப்பு என்பது கூடுவிட்டு கூடுபாய்வது போன்றது. மொழிபெயர்ப்பில் கருத்தை மட்டும் மொழிபெயர்க்காமல் சமூக நிகழ்வு, மனதில் ஏற்பட்ட பாதிப்பையும், பிறமொழிச் சொல்கள் துணையுடன் மொழிபெயர்க்க வேண்டும்.

இந்தியாவில் சாணக்கியருடைய அர்த்தசாஸ்திரம் கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கிறோம். அதை தாமா சாஸ்திரிகள் மொழிபெயர்த்து உலகறியச் செய்தார். அதற்கான மூல ஓலை கிரந்த எழுத்தில் இருந்தது, அதை தஞ்சையிலிருந்து ஒரு பண்டிதர் கொடுத்தார் என்று கூறுகின்றனர். இதன்மூலம் இந்திய வரலாற்றில் மொழிபெயர்ப்புக்கு தமிழர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளனர் என்பது தெரிகிறது.தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வளர் தமிழ் வானொலி நிலையம் 2011, ஜனவரி 14-ம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த வானொலி சேவை 30 கி.மீ. தொலைவு கிடைக்கும். இதில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். மாணவர்கள் பயன்பெறும் வகையில் மொழிபெயர்ப்பு, மொழி உச்சரிப்பு, பிற மொழியில் வரும் புதிய சொல்களுக்கு தமிழ்ச் சொற்கள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான சரியான தமிழ்ச் சொல்கள் இதில் ஒலிபரப்பப்படும் என்றார் ராசேந்திரன்.

கருத்தரங்கை சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் இலக்கியத் துறைத் தலைவர் அ.அ. மணவாளன் தொடக்கி வைத்தார். கருத்தரங்கம் நவம்பர் 26-ல் நிறைவடைகிறது.


* பாரதியார் பயின்ற பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

சென்னை, நவ. 24: மகாகவி பாரதியார் பயின்ற எட்டயபுரம் பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் முதல்வர் கருணாநிதிக்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி நீண்ட வரலாறு கொண்ட, பாரம்பரியம் மிக்க அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளியாகும். இந்தப் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்பட பல அறிஞர்கள் பயின்றுள்ளனர்.

2 -வது நாளாக வானொலி, தூர்தர்ஷன் சேவை பாதிப்பு.

சென்னை, நவ. 24: பிரசார் பாரதி சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வானொலி, தூர்தர்ஷன் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 2-வது நாளாக புதன்கிழமையும் வானொலி, தூர்தர்ஷன் சேவைகள் 
பாதிக்கப்பட்டன.

பிரசார் பாரதி சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஊழியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கினர்.
இதனால் தூர்தர்ஷனின் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
அகில இந்திய வானொலியின் வரலாற்றில் முதல்முறையாக அதன் பிராந்திய செய்தி ஒலிபரப்பு இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டது.

இன்று முதல் ஒலி, ஒளிபரப்பு தொடங்கும்: 48 மணி நேர வேலை நிறுத்தம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நிறைவடைந்த பின்னர், வழக்கம் போல அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து சேவைகளும் தொடங்கப்பட்டுவிடும்.

இந்தப் போராட்டத்துக்குப் பிறகும் அரசு தரப்பில் உகந்த முடிவு வராவிட்டால், டிசம்பர் மாதம் 72 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என ஆகாசவாணி, தூர்தர்ஷன் ஊழியர்களின் அகில இந்திய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 231 புள்ளிகள் சரிவு

மும்பை, நவ.24- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 231 புள்ளிகள் சரிந்து 19,459 புள்ளிகளில் முடிவடைந்தது.

பாரத ஸ்டேட் வங்கி, டிஎல்எப், பெல், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

மஹேந்திரா அன்ட் மஹேந்திரா, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஐடிசி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 69 புள்ளிகள் சரிந்து 5,865 புள்ளிகளில் முடிவடைந்தது.

godl.jpg

* தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 அதிகரிப்பு.

புதுதில்லி, நவ.24- இந்தியாவில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளது.
இதுபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 100 உயர்ந்துள்ளது.

இதையடுத்து, 10 கிராம் கொண்ட சுத்தத் தங்கம் ரூ. 20,800-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 42,500-க்கு விற்பனையானது.

தற்போது திருமணக் காலம் என்பதால் தங்கம், வெள்ளி விலை இவ்வாறு கடுமையாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.


* ஷார்ஜாவில் இந்திய வர்த்தக மையம்.

துபை,நவ.24: ஷார்ஜாவில் இந்திய வர்த்தக, பொருள்காட்சி மையம் வியாழக்கிழமை (நவ.25) திறக்கப்படவுள்ளது. இதை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், திறந்து வைக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதிபா பாட்டீல், ஷார்ஜாவில் வர்த்தக, கண்காட்சி மையத்துடன் தன்னார்வ நிறுவனம் ஒன்றையும் திறந்து வைக்கிறார்.


விளையாட்டுச் செய்தி மலர் :

* தென் ஆப்ரிக்கா-பாகிஸ்தான் டெஸ்ட் டிரா

துபை,  நவ.24: பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் யாருக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

அபுதாபியில் இந்த டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று வந்தது
.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 584 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 434 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து 2-வது இன்னிங்ûஸ ஆடிய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்ûஸ விளையாடியது. கடைசி நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

2 ஆட்டங்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து, தொடரும் யாருக்கும் வெற்றித் தோல்வியின்றி  0-0 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 278 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு பெற்றார்.  ஜாக்கஸ் காலிஸýக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது

* 10 வது இடத்தில் இந்தியா.

இந்தியா பதக்கப் பட்டியலில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் இந்தியா 7 தங்கம், 13 வெள்ளி, 26 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று 10-வது இடத்தைப் பிடித்தது. சீனா 173 தங்கம், 93 வெள்ளி, 86 வெண்கலத்துடன் மொத்தம் 352 பதக்கங்களைக் குவித்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்.

மூலவர் - பட்டினத்தார்.
பழமை - 500 ஆண்டுகள் முன்பு
ஊர் - திருவொற்றியூர்
மாவட்டம் - சென்னை
மாநிலம் - தமிழ்நாடு

தல பெருமை :- பட்டினத்தார் முக்தி தலம்.

பட்டினத்தாருக்கு சிவபூஜை: வங்காளவிரிகுடா கடலின் கரையில் அமைந்த கோயில் இது. ராஜகோபுரம், விமானம் கிடையாது. இங்கு பட்டினத்தார் தனிச்சன்னதியில் கடலை பார்த்தபடி காட்சி தருகிறார்.

இவர் லிங்க வடிவில், சதுரபீடத்துடன் காட்சி தருகிறார். நாகாபரணமும் சார்த்தப்பட்டுள்ளது. இவரை சிவனாகவே கருதி பூஜை செய்யப்படுவது சிறப்பம்சம். இவருக்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஐப்பசியில் அன்னாபிஷேகமும் செய்யப்படுகிறது. சன்னதி எதிரில் நந்தியும், முன்மண்டபத்தில் விநாயகர், முருகன் இருக்கின்றனர். பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் இருக்கிறார்.

பட்டினத்தாரின் பிறந்த நட்சத்திரம் உத்திராடம். எனவே ஒவ்வொரு மாத உத்திராடத்தின் போதும், வியாழக்கிழமையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. அப்போது பழங்களை நைவேத்யமாக படைத்து பூஜை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன் இங்கில்லை!: பட்டினத்தார், சிவனருள் வேண்டி குடும்பத்தைப் பிரிந்து துறவியாக வந்தவர். எனவே இவரிடம் வேண்டிக்கொள்பவர்கள் நேர்த்திக்கடனாக இந்த பொருளை செலுத்துகிறேன் என்று வேண்டுவதில்லை. பக்தர்கள் இவரிடம் கோரிக்கையை மட்டும் சொல்லி வணங்கிச்செல்கிறார்கள்.

பிரார்த்தனை நிறைவேறினால் தாங்கள் விரும்பியதை நேர்த்திக்கடனாக செலுத்துகிறார்கள். ஏதேனும் உபகாரமாக நேர்த்திக்கடன் செலுத்துவதாக சொல்லி வேண்டினால், அந்த செயல் நிறைவேறாது என்ற நம்பிக்கையும் உள்ளது.

பட்டினத்தார் சன்னதி நுழைவுவாயில் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபடுபவர்கள் பணிவாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

இவரது சன்னதி முகப்பில் 27 நட்சத்திர தீபம் உள்ளது. இதில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம். இவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியையே, பிரசாதமாக தருகிறார்கள். இதனை உட்கொண்டால் பிணி நீங்குவதாக நம்பிக்கை.

குபேரனே, பூலோகத்தில் சிவதரிசனம் செய்வதற்காக பட்டினத்தாராக பிறந்ததாக சொல்வர். ஆகவே இவரிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

 ஆன்மீகச் சிந்தனை மலர் : பட்டினத்தார்.

* * ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
* ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள். 

வினாடி வினா :-

* இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் தொடங்கப்பட்ட முதல் மாநிலம் எது ?

விடை : இராஜஸ்தான் - 1959.

இதையும் படிங்க :

தாத்தா காரை ரூ. 3. 22 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ராஜ குடும்பத்துப் பேரன்!

ராஜ்காட்: ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் 76 ஆண்டுகளுக்கு முன் தனது தாத்தா வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை ரூ.3.22 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார். 

குஜராத் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் மன்தத்தா சிங் ஜடேஜா. அவரது தாத்தாவின் காரில் மகாத்மா காந்தியும், இங்கிலாந்து ராணியும் பயணம் செய்துள்ளனர்.

மேலும், அது பல சரித்திர சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. ராஜ குடும்பத்தால் பின்னர் அந்தக் கார் விற்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அந் கார் கனடாவில் ஏலத்தில் விடப்பட்டது. அதை ஜடேஜா தனது தாத்தா நினைவாக ரூ. 3.22 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நான் ரூ.3. 22 கோடி கொடுத்து அந்த வின்டேஜ் காரை வாங்கிவிட்டேன். ஆன்டாரியோவில் அன்மையில் நடந்த கண்காட்சியின்போது டொரண்டோ ஆர்ட் கேலரியில் அது வைக்கப்பட்டிருந்தது.

எனது தாத்தா தர்மேந்திரசிங்ஜியின் காரை திரும்பக் கொண்டுவந்ததில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் நட்சத்திரம் (ஸ்டார் ஆப் இந்தியா) என்று அழைக்கப்படும் சரித்திர தொடர்புடைய அதை மீண்டும் அதன் இடத்திலேயே வைக்கப் போகிறேன்.

ராஜ்கோட்டின் மன்னராக இருந்த தர்மேந்திரசிங் ஜடேஜா வளர்ச்சி மற்றும் ஏழைகளுக்கு உதவியதால் புகழ் பெற்றவர். மகாத்மா காந்தியின் தந்தை கரம்சந்த் காந்தி ராஜ்கோட் மாநிலத்தின் திவானாக இருந்தார். 

எனது தாத்தா கடந்த 1934-ம் ஆண்டு இந்த காரை வாங்கினார். அது கடந்த 1968-ம் ஆண்டு வரை ராஜ குடும்பத்தில் தான் இருந்தது. அதற்கு பிறகே விற்கப்பட்டது என்று அவர் கூறினார்.நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.


-- 


1 comment:

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க.

Post a Comment