Monday, November 22, 2010

இன்றைய செய்திகள்.

WR_200112.jpegஉலகச் செய்தி மலர் :

* தாக்குதல்கள் தொடரும்: அமெரிக்காவுக்கு அல்- காய்தா மிரட்டல்

பெர்லின், நவ. 21: அமெரிக்கா மீதான தாக்குதல்கள் தொடரும் என்று அல்-காய்தா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

முன்னதாக கடந்த மாதம் அமெரிக்காவின் 2 சரக்கு விமானங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. இந்நிலையில் இப்போது மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
.
இது தொடர்பாக இணையதளம் ஒன்றில் அல்-காய்தா அமைப்பு கூறியுள்ளது: ஏற்கெனவே ஏமனில் இருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் பார்சல் வெடிகுண்டை அனுப்பி அவற்றைத் தகர்த்தோம். இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும். இதுபோன்ற குண்டுகளுக்கான தயாரிப்புச் செலவும் குறைவு, வெடிக்கச் செய்வது எளிது. அமெரிக்காவை மண்டியிடச் செய்வதற்கு பெரிய அளவிலான தாக்குதல்கள் தேவையில்லை.
சிறு சிறு தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி அவர்களை வீழ்த்துவோம். பொருளாதார ரீதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி அமெரிக்காவை நிலைகுலையச் செய்வோம் என்று அல் - காய்தா மிரட்டியுள்ளது.


* தமிழர் பகுதிகளில் சேவையைக் குறையுங்கள்: செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இலங்கை அரசு கட்டளை

கொழும்பு,நவ.21: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் இப்போது செய்துவரும் சேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இலங்கை அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இதை சங்கத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் சரஸி விஜரத்ன கொழும்பில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்

சேவையை ஏன் குறைக்க வேண்டும், சேவை இனி தேவைப்படவில்லையா, அந்தச் சேவைகளை இலங்கை அரசே செய்ய மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டதா என்ற விளக்கம் ஏதும் இல்லாமல், சேவை செய்தது போதும் என்று மட்டும் அரசு அழுத்தம்திருத்தமாகச்
சொல்லியிருக்கிறது.

தமிழ் ஈழ விடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான சண்டை கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வந்தது. அப்போதெல்லாம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு ஒரே ஆறுதலாக, உற்ற துணையாக களத்தில் நின்றது இந்த செஞ்சிலுவைச் சங்கம்தான்.

வாழைச் சேனையில் சின்னஞ்சிறு குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்த இல்லத்தை, விடுதலைப் புலிகளின் பாசறை என்று கூறி வான்வழித் தாக்குதலை இலங்கை விமானப்படை நடத்தியபோது உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றவும் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்யவும் ஓடோடி வந்தது இந்த செஞ்சிலுவைச் சங்கம்தான். அந்த ஒரு சம்பவம் என்று மட்டும் இல்லை,  தமிழர்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சம்பவத்திலும் உறுதுணையாக இருந்தது இந்தச் சங்கம்தான். இது சர்வதேச அமைப்பு. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் சிங்களர்களும்
அடங்குவர்.

முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள், முகாம்களிலிருந்து ஊர் திரும்பியவர்களுக்கு அவர்களுடைய பழைய வீடுகளே கிடைத்தனவா, அவர்கள் பழையபடி வேலையில் ஈடுபட முடிகிறதா, தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது 
என்பதெல்லாம் விவரமாக எதுவும்
தெரிவிக்கப்படவில்லை.

அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் இலங்கை அரசிடம் தகவல் தெரிவித்து பதிவு செய்து கொண்ட பிறகே சேவையைத் தொடங்க வேண்டும், அது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் பொருந்தும் என்று இந்த மாத முற்பகுதியில் இலங்கை அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. பதிவு செய்யாமல் தவிர்க்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் அரசு கூறியிருக்கிறது. இதைப் பார்க்கும்போது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இனி தொடர்ந்து கண்காணிப்புக்கும் அரசின் கெடுபிடிக்கும் உள்ளாகும் என்பது தெளிவாகிறது.

2009 மே மாதம் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. போராளிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போரில் சுமார் 70,000 பேர் இறந்ததாக அரசின் தகவல் தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.


* பத்திரிக்கையாளருக்கு அவமரியாதை.

நியூயார்க்,நவ.21: இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் டாக்டர் பிரகாஷ் எம். சுவாமியை, இலங்கைத் தமிழச் சங்கம் நடத்திய கூட்டத்தில் செய்தி சேகரிக்கவிடாமல் வெளியேற்றிவிட்டனர்
.
நியூஜெர்சி நகரில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் இலங்கைத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பும் இணைந்து அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்ததுடன் பிரகாஷ் சுவாமிக்கும் அழைப்பு அனுப்பியிருந்தன. இதற்காக அவர் நியூயார்க்கிலிருந்து நியூஜெர்சி சென்றார்.

அரங்கத்தில் நுழைந்த அவரைச் சிலர் தடுத்து நிறுத்தி, ""உங்களை யார் இங்கே அழைத்தது, நீங்கள் இந்திய, இலங்கை அரசுகளின் சார்பில் உளவு பார்க்க வந்த ஏஜென்ட், நீங்கள் இங்கே வர வேண்டாம்'' என்று கூறி திருப்பி அனுப்பினராம்.

அழைப்பின்பேரில்தான் வந்தேன் என்று கூறி, அழைப்பிதழையும் அடையாள அட்டையையும் அவர் காட்டிய பிறகும்கூட அவரை வெளியேறுமாறு கண்டிப்புடன் கூறினராம்.

கூட்டத்திலிருந்து வெளியேறிய அவர் நியூயார்க்கில் பிற நிருபர்களிடம் இதை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகார அட்டை பெற்றுள்ள என்னை, செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்தது தவறு; அழைப்பு அனுப்பிவிட்டு பிறகு வெளியேறுமாறு கூறி அவமானப்படுத்தினார்கள்; என் மீது வீண் குற்றச்சாட்டு சுமத்தினார்கள்.

நியூஜெர்சி மாகாண கவர்னரிடமும் மனித உரிமைகள் அமைப்பிடமும் இது குறித்து நிச்சயம் புகார் செய்வேன் என்றார் சுவாமி.

parliament.jpg

தேசியச் செய்தி மலர் :

* பிரதமரையும் விசாரிக்கும் லோக்பால் மசோதா விரை​வில் தாக்​கல்

புதுதில்லி, நவ. 21: பிரதமர் மீதான ஊழல் புகாரையும் விசாரிக்கும் வகையில் உரிய திருத்தங்களோடு லோக்பால் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க வழி ஏற்படும்.

இதற்கு முன்னர் இந்த மசோதாவில் பிரதமருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. புதிய மசோதாவில் பிரதமரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

புதிய மசோதாவின்படி லோக்பால் அமைப்புக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியோ அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியோ தலைமை வகிக்க வேண்டும். லோக்பால் அமைப்பின் 2 உறுப்பினர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும்
.
புதிய மசோதாப்படி பிரதமர் மீதான  ஊழல் புகாரை விசாரிக்க மக்களவைத் தலைவர் அனுமதி அளிக்க வேண்டும். மக்களவைத் தலைவர் அனுமதி அளித்தால்தான் பிரதமர் மீதான புகாரை லோக்பால் விசாரிக்க முடியும்.
லோக்பால் விசாரணையிலிருந்து பிரதமருக்கு விலக்க அளிக்க வேண்டும். பிரதமர் சர்வ அதிகாரங்களை கொண்டவர் என்பதோடு அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார் என்று அரசியல் சட்ட மறு ஆய்வுக்கான தேசிய ஆணையம் பரிந்துரைத்திருந்தது

நாட்டின் ஸ்திரத்தன்மையின் அடையாளமாக பிரமதர் திகழ்கிறார். எனவே அவரது புகழை கெடுக்கும் வகையில் கொடுக்கப்படும் புகார்களால் இடையூறும் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அந்த ஆணையம் கூறியிருந்தது.

ஆனால் இப்போது பிரதமரையும் சேர்த்து விசாரிக்கும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான புகார்களை இந்த லோக்பால் அமைப்பு விசாரிக்கும். ஊழல் தொடர்பான விசாரணையில் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மட்டுமின்றி மற்றவர்களையும் விசாரிக்கும்.

லோக்பால் அமைப்புக்கு நீதிபதிகளை நியமிக்க ஒரு கமிட்டி உருவாக்கப்பட வேண்டும். அந்த கமிட்டியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், மாநிலங்களவை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் அவை முன்னவர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற விதிகளில் வகை செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளையோ அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியையோ லோக்பால் நீதிபதியாக நியமிக்க வேண்டுமானால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி வேண்டும்.

லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர் பதவிகளின் காலம் மூன்று ஆண்டுகள்  அல்லது 70 வயது வரும் வரை. இவர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்
.
விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை அல்லது பாரபட்சமாக நடந்து கொண்டால் அவரைப் பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

லோக்பால் மசோதா முதன் முதலில் 1969-ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதைத் தொடர்ந்து 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரத்துடன் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

* அருந்ததி ராய்க்கு சங்க பரிவார் எதிர்ப்பு.

புவனேசுவரம், நவ.21: ஒரிசாவின் புவனேசுவரத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் வருகைக்கு சங்க பரிவார், ஏபிவிபி ஆகிய இந்து அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின.
புவனேசுவரத்தில் இடதுசாரி சார்ந்த இதழ் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்பதற்காக அருந்ததி ராய் வந்திருந்தார். இதற்கு சங்க பரிவார், ஏபிவிபி ஆகிய இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

கருத்தரங்கம் நடைபெறவிருந்த இடத்துக்குள் அருந்ததி ராய் நுழைந்ததுமே சங்க பரிவார், ஏபிவிபி அமைப்பினர் அவருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கைகளில் அவருக்கு எதிரான அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். அந்த அட்டைகளில் தேசவிரோதி அருந்ததி ராய் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது
.
அவருக்கு எதிராகக் கோஷமும் எழுப்பினர். காஷ்மீரை இந்திய மாநிலம் இல்லை என்று சொன்ன தேச விரோதி அருந்ததி ராயே கருத்தரங்கைவிட்டு உடனே வெளியேறு என்று முழங்கினர்.

இதுகுறித்து ஒரிசா மாநிலம் ஏபிவிபி மாநில செயல் உறுப்பினர் அஜய் குமார் சாஹு கூறியது: அருந்ததி ராய் மீது எங்களுக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆனால் காஷ்மீர் குறித்த அவரது கருத்து தேச விரோதமானது. அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை எங்களால் மன்னிக்கவும் முடியாது. ஒரிசாவில் அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றார் அவர்.

* காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக் குழு செயலாளர் கைது

புது தில்லி, நவ.21: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல் தொடர்பாக போட்டி அமைப்புக் குழு செயலாளர் எம். ஜெயச்சந்திரனை சிபிஐ போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
காமன்வெல்த் போட்டிக்காக லண்டனில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜோதி தொடர் ஓட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஏராளமான ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது
.
இதுதொடர்பாக சிபிஐ போலீஸார் 2 வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெயச்சந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பல சுற்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இத்தகவலை சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.கே. கெüர் தெரிவித்தார். ஜெயச்சந்திரனின் வீடு, அலுவலகங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஏற்கெனவே போட்டி அமைப்புக் குழு அதிகாரிகள் டி.எஸ். தர்பாரி, சஞ்சய் மகேந்துரு ஆகியோரை சிபிஐ போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார் தொடர்பாக ஜெயச்சந்திரன் ஏற்கெனவே பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
.
omlordshiva.jpg

மாநிலச் செய்தி மலர் :

* மகா தீப உற்சவம்: 2,668 அடி உயர மலையில் தீபம் ஏற்றப்பட்டது

 திருவண்ணாமலை, நவ. 21: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது தீபம் ஏற்றப்பட்டவுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்

நாயன்மார்கள் நால்வரால் பாடல் பெற்றதும், பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் இடமாகவும் இக்கோயில் விளங்குகிறது.
கார்த்திகை தீப விழா நவம்பர் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். 17-ம் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடைபெற்றது

விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், பெண்களே வடம் பிடித்து இழுத்த பராசக்தி அம்மன் தேரோட்டம் 18-ம் தேதி நடைபெற்றது

மகா தீபம்: முக்கிய நிகழ்வான மகா தீபத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது

பின்னர் காலை 9 மணிக்கு அண்ணாமலையின் உச்சிக்கு 1,000 மீ காடா துணி அனுப்பி வைக்கப்பட்டது. தென் பகுதியில் உள்ள பிரம்ம தீர்த்தக்குளத்தில் சுப்பிரமணிய சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது. பிற்பகல் முதல் மாலை 6 மணி வரை கோயில் கலையரங்கில் திருமுறை இசை நிகழ்ச்சிகள், பக்திப்பாடல் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி விமானங்கள் ஐந்தும் தீபதரிசன மண்டபத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டன. 5.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக சுவாமி சன்னதியில் எழுந்தருளினர். அதன் பின் 5.50 மணியில் இருந்து 5.59 மணிக்குள் சுவாமி சன்னதி பின்புறம் இருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடாகி சரியாக 6 மணிக்கு தீபதரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எதிரே காட்சி அளித்தார்.

அப்போது காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி தீப மடக்குகள் ஐந்தையும் மூங்கில் தட்டில் வைத்து தீபமுறை நாட்டார்கள் தலையில் சுமந்து கொண்டு 2-ம் பிராகாரம் வலம் வந்து கொடிமரம் முன்பு நிறுவப்பட்ட அகண்ட தீப குண்டத்தில் சேர்த்தனர்.

 அதே நேரத்தில், வைகுந்த வாசல் வழியாக மலை உச்சிக்கு தீபம் ஏற்றுவதற்கான எலால் தீபம் மூலம் சமிக்ஞை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. சுவாமி சன்னதி எதிரில் அகண்ட தீபம், பஞ்சமூர்த்திகள் தீபாராதனை, அண்ணாமலையின் மீது ஏற்றப்படும் தீபம் உள்ளிட்ட மூன்றும் சரியாக 6 மணிக்கு நடைபெற்றது. அப்போது கோயில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவண்ணாமலை நகரம் முழுவதும் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களும் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டு வழிபட்டனர்.

தீப தரிசன காட்சி முடிவடைந்தவுடன் பஞ்சமூர்த்திகள் தீபதரிசன மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 3-ம் பிரகாரத்தில் வலம் வந்த போது வடமேற்கு மூலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகள் மீண்டும் தீபதரிசன மண்டபத்தில் எழுந்தருளினர்.

தெப்பல் திருவிழா: உற்சவத்தின் தொடர்ச்சியாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாள்கள் தெப்பல் திருவிழா நடைபெறுகிறது. 25-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

* ராசா வெறும் அம்புதான்; எய்தவர் பதவி விரைவில் பறிக்கப்படும்: ஜெயலலிதா

vijayakanth.jpg

* அங்கீகரிக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தை தேர்வு செய்வதற்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பு தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு ஆதரவு அளிப்பது என தே.மு.தி.க. சார்பு தொழிற்சங்கமான தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை அறிவித்துள்ளது.
இது குறித்து தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவைத் தலைவர் கோ. வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை
:
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான தேர்தலில் போட்டியிட தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையும் மனு செய்திருந்தது. ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க.வின் தொழிற்சங்கம் பல்வேறு தில்லுமுல்லுகள், மிரட்டல்கள் மற்றும் பண பலம் மூலம் வெற்றி பெற முயல்கிறது.

இந்நிலையில், பல்வேறு சங்கங்களின் போட்டியால் வாக்குகள் பிரிவதைத் தடுக்கவும், ஆளும் கட்சி சார்பு தொழிற்சங்கத்தின் அராஜகத்தை ஒடுக்கவும், நடைபெறவுள்ள சங்கத் தேர்தலில் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளது.

மேலும், தேர்தலில் போட்டியிடும் அண்ணா தொழிற்சங்க பேரவை ஆதரவு கேட்டுள்ள நிலையில், அந்தப் பேரவைக்கு வாக்களிப்பது எனவும் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை முடிவு செய்துள்ளது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்னை, நவ.21: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் 2-ஜி அலைக்கற்றை முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செபி (செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா) தலைவர் சி.பி. பவே தெரிவித்தார்.

 பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம் சார்பில் சென்னையில் 3 நாள் கருத்தரங்கம் நடந்தது. பங்குச் சந்தையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் புதுமைகள், உத்திகள் தொடர்பான பல்வேறு கருத்துகளை துறை சார்ந்த வல்லுனர்கள் எடுத்துரைத்தனர்.

 பல்வேறு மேலாண்மை கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை
நடந்தது.
 இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்தும் செபி அமைப்பின் தலைவர் சி.பி. பவே, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் கே. மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் சி.பி. பவே செய்தியாளர்களிடம் கூறியது:
 பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மீது 2-ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை. முறைகேடுகள் ஏதேனும் நடந்திருப்பது தெரிய வந்தாலோ அல்லது புகார் வந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பங்கு வாங்கும் போது, அது தொடர்பான பரிவர்த்தனைகள் முடிய 21 நாள்கள் ஆகின்றன. இதனால் முதலீட்டாளர்களின் பணம் தேவையில்லாமல் முடங்கிவிடுகிறது. இதைத் தவிர்க்க பங்கு பரிவர்த்தனைகளை 7 நாள்களில் முடிக்க செபி முயற்சி செய்து வருகிறது

 2008-ம் ஆண்டு உலக பொருளாதாரத்தில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இது உலகின் பணக்கார நாடுகளை பெரிதும் பாதித்தது. இந்த வீழ்ச்சி ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்தன.

 ஆனால் அதற்கு மாறாக, இந்திய பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பியது. இதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும் என்றார் பவே.

விளையாட்டுச் செய்தி மலர் :

* தடகளத்தில் இந்தியா தங்க மழை: பிரிஜா, சுதா சிங் அபாரம்

குவாங்சு: ஆசிய விளையாட்டு, தடகளத்தில் இந்தியா அசத்தியது. பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன் தங்கம் வென்றார். இப்போட்டியின் வெள்ளிப் பதக்கத்தை மற்றொரு இந்திய வீராங்கனை கவிதா ராத் கைப்பற்றினார். பெண்களுக்கான 3000 மீ., "ஸ்டீபிள்சேஸ்' ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
 
சீனாவின் குவாங்சு நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. நேற்று தடகளப் போட்டிகள் ஆரம்பமாகின. பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன், கவிதா ராத் பங்கேற்றனர். பந்தய தூரத்தை 31 நிமிடம், 50.47 வினாடிகளில் கடந்த இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவரை அடுத்து 31 நிமிடம், 51.44 வினாடிகளில் வந்த மற்றொரு இந்திய வீராங்கனை கவிதா ராத், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பக்ரைன் வீராங்கனை வெண்கலம் வென்றார்.

சுதா அபாரம்:
பெண்களுக்கான 3000 மீ., "ஸ்டீபில்சேஸ்' ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங், ஜெய்ஷா ஆர்சத்ரி புதியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பந்தய தூரத்தை 9 நிமிடம், 55.67 வினாடிகளில் கடந்த இந்தியாவின் சுதா சிங், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் இவர் தனது சொந்த சாதனையை முறியடித்தார். டில்லி காமன்வெல்த் போட்டியில் இவர், பந்தயதூரத்தை 9 நிமிடம், 57.63 வினாடிகளில் கடந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை புதியா, 5வது இடம் பிடித்து ஏமாற்றினார். வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே சீனா, ஜப்பான் வீராங்கனைகள் வென்றனர்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.

மூலவர் - அக்னீஸ்வரர்
தாயார் கற்பகாம்பாள்
பழமை - 1000 - 2000 ஆண்டுகளுக்கு முன்
புராண பெயர் - கஞ்சனூர்
மாவட்டம் - தஞ்சாவூர்
மாநிலம் - தமிழ்நாடு. 

பாடியவர்கள் - திருநாவுக்கரசர்.

தேவாரப்பதிகம்:

வானவனை வலிவலமும் மறைக் காடானை மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை ஏனவனை இமவான்தன் பேதை யோடும் இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத் தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத் தீதிலா மறையோனைத் தேவர் போற்றும் கானவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்த் தேனே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 36வது தலம்

தல சிறப்பு - நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலா ரூபமாக) இருப்பது தனிசிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் ஈசன் பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே தான் இங்கு அம்மனை தன் வலப்பாகத்தில் சிவன் கொண்டருள்கிறார். பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் "முக்தி தாண்டவ மூர்த்தி' என அழைக்கப்படுகிறார்.  
   
கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. பழமையான கோயில். தெற்கு வாயில் வழியாக உள்வந்தால் உள்மண்டபம் உள்ளது

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* மனப்புயலை அடக்கிவிடு - பகவத் கீதை.

* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான்.

வினாடி வினா :-

*இந்தியாவில் சுதந்திரமான தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ?

விடை :- இராஜ இராஜ சோழன்.அதன் பெயர் குடவோலை முறை. இதனை அறிய உதவும், கல்வெட்டு உத்திரமேரூர் கல்வெட்டு ஆகும்.

large_131127.jpg

இதையும் படிங்க :

ஆயுளை நீட்டிப்போம், புகைப்பதை தவிர்ப்போம்...: நுரையீரல் காப்போம்

: நீர், உணவு இல்லாமல் சில நாட்கள் வாழலாம். ஆனால் மூச்சுகாற்று இல்லாமல் மனிதன் உயிர்வாழ முடியாது. 3 நிமிடங்களுக்கு மேல் ஆக்சிஜன் செல்வது தடைபட்டால் மூளை செயலிழந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
சுவாசம்: மூச்சுகுழல், நுரையீரல், உதரவிதானம், காற்று நுண்ணறைகள், மூச்சுகிளை சிறுகுழல்கள் இணைந்தது சுவாச மண்டலம்
.
* உதரவிதானம் சுருங்கி விரியும் போது சுவாசம் நிகழ்கிறது. உதாரவிதானம் சுருங்கி ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுகிறது. விரியும்போது கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது.
* ஒரு நுரையீரலில் 30 ஆயிரம் சிறு மூச்சுகுழல்கள் உள்ளன.
* 600 மில்லியன் காற்று நுண்ணறைகள் உள்ளன
.
* வல நுரையீரல் எடை 620 கிராம், இட நுரையீரல் 560 கிராம்.
* நுரையீரல்களில் தசைகள் இல்லை. மார்பில் உள்ள தசைகளே நுரையீரலை இயக்குகிறது.
* சுவாசத்தின் போது காற்று உள்சென்று வெளிவரும் அளவை ஸ்பைரோ மீட்டரால் கணக்கிடலாம்.

 நுரையீரல்களின் மொத்த காற்றின் கொள்ளளவு 4.5 லிட்டர். சுவாசத்தின் போது அரை லிட்டர் காற்று உள்ளே செல்கிறது.
*முழுமையாக காற்றை இழுத்தால் தான் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் செல்லும்.


நுரையீரல் பாதிப்பால் ஆஸ்துமா, சுவாச ஒவ்வாமை, நுரையீரல் உயர் ரத்த அழுத்த நோய், நுரையீரல் அடைப்பு நோய், புற்றுநோய் ஏற்படும். புகை பிடித்தல், வீட்டிற்கு வெளியே, உள்ளே மாசு, நோய் எதிர்ப்பு குறைவு, ஒவ்வாமை ஆகியன இதற்கு காரணம்.

வேண்டாம் சிகரெட்: சிகரெட்டில் உள்ள புகையிலையில் நிக்கோடின் என்ற போதை பொருள் உண்டு. ரத்தத்தில் நேரடியாக கலந்தால் மனிதரை கொல்லத்தக்கது நிகோடின். புகையிலையில் நூற்றுக்கணக்கான வேதிபொருள் உள்ளது. புகைக்கும்போது தோல், நுரையீரலின் உட்பகுதியில் இவை ஒட்டுகிறது. மூச்சுக்குழலில் ஒட்டும் நுண் கிருமிகளையும், தூசிகளையும் அகற்ற முடியாது. இதனால் நாளடைவில் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உருவாகும். துர்நாற்றம் வீசும் தலைமுடி, கறைபடிந்த பற்கள், இதயநோய், துர்நாற்றம் வீசும் வாய், தோல் சுருக்கமும் ஏற்படும்.ஆழ்ந்த சுவாசம்: மனிதன் ஒரு நிமிடத்தில் 14-15 முறை மூச்சை இழுக்கிறான். உணர்ச்சிவசப்படும் போது இவ்வேகம் அதிகரிக்கும். உடல் நலம் கெடும். சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.சரியான பயிற்சியால் மூச்சு இழுப்பதை 6-4 முறை என குறைக்கலாம். நுரையீரல் எனும் இயந்திரத்தை நோயிலிருந்து காக்கலாம். நீண்ட நாள் வாழலாம். 
நன்றி - தின மணி, தின மலர் .

-- 


2 comments:

Ravi kumar Karunanithi said...

padhivu romba peridhaaga ulladhu.. padhiyaaga pottirukkalam..

நித்திலம் - சிப்பிக்குள் முத்து. said...

நன்றிங்க ரவிகுமார்.

Post a Comment