Thursday, December 16, 2010

இன்றைய செய்திகள். - டிசம்பர் - 16 - 2010.







உலகச் செய்தி மலர் :

* இந்தியா - சீனா வளர்ச்சிக்கு உலகில் போதுமான இடம் உள்ளது: வென்ஜியாபோ  

இந்தியா, சீனாவின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்கு உலகில் போதுமான இடம் உள்ளதாக சீன பிரதமர் வென்ஜியாபோ கூறியுள்ளார்.

மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்த ஜியாபோ, டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருநாட்டு தொழில்துறை தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், இந்தியாவும் சீனாவும் ஒத்துழைப்புக்கான கூட்டாளிகளாக உள்ளதாகவும், போட்டியில் எதிரிகளாக இல்லை என்றும், இருநாடுகளும் வளர்ச்சியடைய உலகில் போதுமான இடம் உள்ளதாகவும் கூறினார்.

"பொருளாதார போட்டியில் சீனா ட்ராகனாகவும், இந்தியா யானையாகவும் உள்ளதாக சிலர் குறிப்பிடுகிறார்கள். அந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேப்போன்று தொழிலதிபர்கள் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் கருதவில்லை" என்று ஜியாபோ மேலும் தெரிவித்தார்

* 2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனரை தேர்வு செய்தது "டைம்"

நியூயார்க், டிச.15- உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை (26) "டைம்" பத்திரிகை தேர்வு செய்துள்ளது.
செய்தி மற்றும் கலாசாரத்தில் ஓர் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை இவ்வாறு "டைம்" பத்திரிகை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. இதன் அடிப்படையில் மார்க் ஜுக்கர்பெர்க் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* பணியாளர்கள் வேலைநிறுத்தம்: மூடப்பட்டது ஈஃபில் டவர்

பாரீஸ், டிச.15- பணியாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக புகழ்பெற்ற ஈஃபில் டவர் மூடப்பட்டுள்ளது.

ஈஃபில் டவர் பராமரிப்பு பணியில் உள்ள ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துப் பணியாளர்களும் திடீரென இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, ஈஃபில் டவர் மூடப்படுவதாக அதை நிர்வகிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். நாள்தோறும் சுமார் 15 ஆயிரம் பார்வையாளர்கள் ஈஃபில் டவருக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கான உந்துதல் குறைந்துவிட்டது: ஓஇசிடி

இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி) 9 விழுக்காடு வளரும் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கான உந்துதல் குறைந்து வருவதாக ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) கூறியுள்ளது.

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து இயங்கிவரும் ஓஇசிடி (Organization for Economic Cooperation and Development), “முதலீட்டை பலப்படுத்தியதாலும், சில்லரை விற்பனை அதிகரிப்பினாலும் சீனா வளர்ச்சிக்கான உந்துதலைப் பெற்றுள்ளது. ஆனால், இந்தியா பொருளாதார மீட்சிக்காண உந்துதலை இழந்து வருகிறது” என்று ஆசிய நாடுகள் தொடர்பான தனது பொருளாதார மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.

ஆசிய வர்த்தக சுழல் குறியீடு (Asian Business Cycle Indicator - ABCI) என்றழைக்கப்படும் குறுகிய கால பொருளாதார நிலைகளை கணக்கில் கொண்டும், சிஎல்ஐ (Composite Leading Indicators) என்றழைக்கப்படும் குறியீட்டின் அடிப்படையிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துவருவதை குறிப்பிடுகிறது.

சிஎல்ஐ குறியீட்டின் படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 100.9 ஆக இருந்த அந்தக் குறியீடு, செப்டம்பரில் 100.8 ஆகவும், அக்டோபரில் 100.6 ஆகவும் குறைந்துள்ளதென ஓஇசிடி கூறியுள்ளது.

பொருளாதார சரிவின் அடையாளம் கனடா, இத்தாலி, இந்தியா ஆகிய நாடுகளில் நன்கு தெரிகிறது எனவும், பிரேசில் நாட்டில் அது தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.75 முதல் 9 விழுக்காடாக இருக்கும் என்று கூறினாலும், அது உலக நாடுகளின், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையை பொறுத்தே உள்ளது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். காரணம், இந்தியாவின் ஏற்றுமதியில் 36 விழுக்காடு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே செல்கிறது.

இந்த நிலையில், கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளை ஆக்கிரமித்த நிலையில், இப்போது அயர்லாந்திலும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவைப் பாதிக்கலாம் என்கிற அச்சம் பல மாதங்களாக நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* அயல் நாடுகளில் இயற்கை சொத்துக்கள் வாங்கல் தொடர்பாக புதிய கொள்கை: பிரதமர் அறிவிப்பு  

அயல் நாடுகளில் கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தித் தேவைகளுக்கான இதர கனிம வள சொத்துக்களை இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக புதிய கொள்கை ஒன்றை அரசு விரைவில் உருவாக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நமது நாட்டின் எரிசக்தி தேவையை நிறைவு செய்ய நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றை பெருமளவிற்கு அயல் நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் பெருமளவிற்கு அந்நிய செலாவணி வெளியேறுவது மட்டுமின்றி, பன்னாட்டு சந்தையில் ஏற்படும் விலையேற்ற, இறக்கங்கள் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க அயல் நாடுகளில் நிலக்கரி சுரங்கங்கள், கச்சா எண்ணெய் கிணறுகள், அணு மின் உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளைப் பெற யுரேனியச் சுரங்கங்கள் ஆகியவற்றை அந்தந்த நாடுகளிடமிருந்து சொத்தாக வாங்கி, அவற்றை நிர்வகித்து இந்தியாவின் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான கொள்கை வகுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சி்ங், தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் மாநாட்டில் பேசியுள்ளார்.

“நமது நாட்டின் தேவைகளை நிறைவு செய்ய இப்படிப்பட்ட இயற்கை வளங்களை உலக அளவில் சென்று சொத்தாக வாங்கிப் பயன்படுத்தும் வாய்ப்பை பொதுத் துறை நிறுவனங்களுக்கும் ஏற்படுத்தித் தரவேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, கச்சா பொருட்களை பெறுவதற்கு இது முக்கியமாகும். பொதுத் துறை நிறுவனங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட உதவும் வகையில் தனித்த கொள்கை உருவாக்கப்படும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு வாரத்தில் இதற்கான கொள்கை உருவாக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலிற்கு வைக்கப்படும் என்று மத்திய அரசு பொதுத் துறை அமைச்சகத்தின் செயலர் பாஸ்கர் சாட்டர்ஜி கூறியுள்ளார்.
அயல் நாடுகளில் இப்படிப்பட்ட கனிம சொத்துக்களை நமது நாட்டின் தனியார் நிறுவனங்கள் வாங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

* ராசா, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை

2ஜி அலைக்கற்றையை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற முறைகேட்டால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்தார். இதையடுத்து இந்த ஊழல் புகார் தொடர்பான விசாரணையை முடுக்கிவிடுமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பதவி விலகிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள், நண்பர்களின் இல்லங்களில் சிபிஐ குழுவினர் கடந்த வாரம் திடீர் சோதனை நடத்தினர்.

கடந்த 8-ம் தேதி பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில் அவருடைய வீட்டிலும், பெரம்பலூர், சென்னை ஆகிய இடங்களில் அவருடைய உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடந்தன. அதே நாளில் தில்லியிலும் ராசாவின் வீடு உள்பட பல இடங்களில் சோதனைகள் நடந்தன.

தில்லியில் ராசாவின் வீட்டில் இருந்து 3 டைரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலும், ஏற்கெனவே கிடைத்த வேறு சில தகவல்களின் அடிப்படையிலும் இரண்டாவது கட்டமாக புதன்கிழமை நாடு முழுவதும் 34 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில் ராசாவின் வீட்டில் புதன்கிழமையும் சோதனை நடந்தது. பெரம்பலூரில் ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் பங்குதாரர் சுப்பிரமணி வீட்டிலும் சோதனைகள் நடந்தன. இரு வீடுகளிலும் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது

தமிழ் மையம் அமைப்பின் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி இந்த அமைப்பின் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் சங்கமம் என்ற கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சோதனைக்குப் பிறகு ஜெகத் கஸ்பரை அதிகாரிகள் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
சென்னை அடையாறு பகுதியில் பத்திரிகையாளர் வீட்டில் சோதனை முடிந்தபிறகு, அவருக்கும், அவரது மனைவிக்கும் உள்ள வங்கிக் கணக்குகள் பற்றி அதிகாரிகள் விசாரித்தனர்.

* நீரா ராடியா அலுவலகங்களில் சோதனை




அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்பு நிறுவனங்களும், தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கும் இடையே தரகராகச் செயல்பட்டதாக கூறப்படும் வைஷ்ணவி கம்யூனிகேஷன் நிறுவனத் தலைவர் நீரா ராடியாவின் அலுவலகங்கள், பண்ணை வீடு, அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதுபோல் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், ஹவாலா தரகர்கள் என்று கூறப்படும் மகேஷ் ஜெயின், அலோக் ஜெயின் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதோடு அவர்களிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

தில்லியில் சிபிஐ அதிகாரிகள் மட்டுமன்றி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்

ஹவாலா தரகர்கள் மகேஷ் ஜெயின், அலோக் ஜெயின் இருவரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இவர்களுக்கும் முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர்

தில்லியில் செüரி பஜார் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெகுரா, தொலைத்தொடர்பு ஆணைய உறுப்பினர் கே.ஸ்ரீதர், தொலைத்தொடர்புத் துறை துணை இயக்குநர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா ஆகியோரது வீடுகளிலும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்

* பெட்ரோல் விலையை ரூ.2.96 உயர்த்தியது ஐஓசி


புது தில்லி, டிச.15: பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96-க்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) புதன்கிழமை உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 90 அமெரிக்க டாலர்களாக விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலையை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவே பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 உயர்த்தியது பாரத் பெட்ரோலியம் நிறுவனம்.
இந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 உயர்த்தியது ஐஓசி. இதுகுறித்து ஐஓசி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐஓசி விநியோகிக்கும் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.55.87 ஆக இருக்கும்.

இதில் தில்லி நகரில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலின் விலையாகும் என்றார் அவர்.

* ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணை குறித்து சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் நலன் கோரும் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ., மற்றும் அமலாக்க பிரிவின் கருத்துக்கள் மற்றும் ஆவணங்களை, சுப்ரீம் கோர்ட் கோரியிருந்தது. அதன்படி அவைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் விசாரித்தனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையை கண்காணிப்பது பற்றிய தீர்ப்பை, நீதிபதிகள் இன்று வெளியிட உள்ளனர்.

* மன்மோகன், கருணாநிதி, சிதம்பரம் மீது தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்



சென்னை, டிச. 15: பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய உளவுத் துறையிடம் இருந்து இதுதொடர்பான எச்சரிக்கை வந்துள்ளதை தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. ஆனால், அவர்கள் இந்தியாவில் ஒருங்கிணைய முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதி ஆகியோர் தமிழகத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.

மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கை குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் புதன்கிழமை கூறியதாவது:

பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத் துறையிடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் உண்மை உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக உளவுத் துறையினரும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

பிரதமர் உள்ளிட்ட அனைத்து மிக முக்கியப் பிரமுகர்களும் தமிழகத்துக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் உரிய பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் லத்திகா சரண்.

இந்திய அறிவியல் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரது வருகையையொட்டி உச்சபட்ச பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிகிறது

மாநிலச் செய்தி மலர் :

* மழை பாதிப்பு: மத்தியக் குழு இன்று சென்னை வருகை

சென்னை, டிச. 15: தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக் குழு வியாழக்கிழமை சென்னை வருகிறது. 7 மாவட்டங்களில் 3 நாள்கள் அந்தக் குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.
வடகிழக்கு பருவ மழையால் மாநிலத்தில் 11-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழுகியுள்ளன.

இந்த மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மாநிலத்தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் இரண்டு கட்டங்களாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நேரில் ஆய்வு நடத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் ககன்தீப் சிங் பேடி, தஞ்சாவூரில் வி.கே.சுப்புராஜ், திருவாரூரில் கோ.சந்தானம், கன்னியாகுமரியில் சுனில் பாலிவால், திருநெல்வேலியில் சுர்ஜித் கே.சௌத்ரி, தூத்துக்குடியில் ஸ்வரண் சிங், விழுப்புரத்தில் ஜவஹர், புதுக்கோட்டையில் டேவிதார், ராமநாதபுரத்தில் ஹன்ஸ்ராஜ் வர்மா, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிவதாஸ் மீனா ஆகியோர் ஆய்வு செய்தனர். அனைவரும் தங்களது அறிக்கைகளை அரசுக்கு அளித்துள்ளனர்.

அவர்களது அறிக்கையின் அடிப்படையில் நிவாரணப் பணிகளுக்கென |500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது

* கழிவுநீர் கலப்பதால் கூவமாக மாறிவரும் சுகநதி



வந்தவாசி : கழிவுநீர் கலப்பதால் வந்தவாசி சுகநதி கூவமாக மாறிவருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

  வந்தவாசி நகரை ஒட்டிச் செல்லும் சுகநதி சுமார் 67 கி.மீ. நீளம் கொண்டதாகும். மேல்பாதி கிராம ஏரியின் முடிவிலிருந்து தொடங்குவதாக கூறப்படும் இந்த ஆறு மதுராந்தகம் ஏரியில் சென்று முடிவடைகிறது. இந்த ஆறு பழங்காலத்தில் சூக்க ஆறு என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆற்றின் மூலம் சுமார் 10 ஆயிரம் ஹெக்டர் நிலம் பயன்பெற்று வருகிறது.

 இதுதவிர÷குளிப்பது, சலவை செய்வது உள்பட வந்தவாசி மக்களுக்கு இந்த ஆறு பல்வேறு வழிகளில் மிகவும் பயன்பட்டு வந்தது.

கழிவுநீர் ஆற்றில் கலப்பது தொடர்கதையாகியது. இதனால் ஆற்று நீர் மேலும் மாசடைந்து தற்போது ஆற்று நீரில் கால் வைக்கவே அஞ்சும் அளவுக்கு உள்ளது. எனவே கலைமகள் சபா திருமண மண்டபம் அருகிலிருந்து யாதவர் தெரு வரை உள்ள சுமார் 200 அடி தூரத்துக்கு கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டுவிடும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

  சுகநதியில் ரூ.50 லட்சம் செலவில் படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் கூறிக் கொள்கிறது. ஆனால் அந்த சுகநதி கூவமாக மாறிவருவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்

தொழில் நுட்பச் செய்தி மலர் :

* நாற்றங்காலை முறையாக பராமரித்தால் கூடுதல் மகசூல்

சிதம்பரம்: தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மழை வளம் குறைந்த நிலத்திலும், நீர்ப்பாசனம் இல்லாத மானாவாரி நிலங்களிலும் அதிகளவில் பயிரிடப்பட்டு மணிலா ஒரு தனிப்பயிராகவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய நடைமுறைச் சூழலில் கர்நாடக மாநில விவசாயிகள் புதிய வேளாண் ஊடுபயிர் முயற்சியாக மணிலாவுடன் கேழ்வரகு சாகுபடி செய்து அதிகளவு லாபம், கால்நடைத் தீவனம், மண்ணின் வளம் பெருக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான பயன்களைப் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:

கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டம் குறைந்தளவு மழை வளம் மற்றும் நீர்பாசனம் கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மணிலாவே சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இத்தகைய நடைமுறையில் சில வேளாண் தன்னார்வ தொண்டு நிறுவங்களின் ஆலோசனை மற்றும் விரிவாக்க முயற்சிகள் காரணமாக மணிலா சாகுபடியுடன் சிறு மற்றும் குறு விவசாயிகள் பட்டை ஊடு பயிராக கேழ்வரகு சாகுபடியை இணைத்து சாகுபடி செய்தனர்.

இப்புதிய வேளாண் சாகுபடி முறையில் விவசாயிகள் மணிலா பயிரை 9 வரிசையாகவும், கேழ்வரகை 6 வரிசையாகவும் தொடர்ந்து பயிர் செய்தனர். விதையின் அளவு, நிலத்தின் தன்மைக்கேற்ப ஆழத்தில் கேழ்வரகை நடவு செய்ய வேண்டும்.

புதிய பட்டை ஊடுபயிர் சாகுபடி வாயிலாக சாறு உறிஞ்சும் பூச்சிகளின் செயல்பாடுகள் தடுக்கப்படுகின்றன. கேழ்வரகு ஒரு இயற்கை அரணாக இருந்து பூச்சி மற்றும் வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மணிலா பயிரை பாதுகாக்கிறது. மேலும் மண்ணில் உள்ள நோய் காரணிகளும் ஊடுபயிர் வளர்ப்பு காரணமாக குறைந்தே காணப்படுகிறது. இவ்வாறு சாகுபடிப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் அதிக லாபத்தை பெற்றுள்ளனர்.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிவு

மும்பை, டிச.15- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிந்து 19,647 புள்ளிகளில் முடிவடைந்தது.
ஹீரோ ஹோண்டா, டிஎல்எப், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்ஸி வங்கி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஜின்டால் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

டிசிஎஸ், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.
தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 51 புள்ளிகள் சரிந்து 5,892 புள்ளிகளில் முடிவடைந்தது

விளையாட்டுச் செய்தி மலர் :

* முரளிதரனின் 800 விக்கெட்டுகளும் ரன் அவுட்களே: பிஷன் சிங் பேடி

புதுதில்லி, டிச.15- இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் 800 விக்கெட்டுகளும் ரன் அவுட் போன்றவையே என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.

"முரளிதரன் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், அவரை பந்து எறியும் வீரர் (ஷாட் புட்டர்) என்றுதான் நான் அழைப்பேன். அவர் வீழ்த்தியதாக கூறும் விக்கெட்டுகள் அனைத்தும் ரன் அவுட் போன்றவையே என்பது எனது கருத்து. இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும் முரளிதரன் வரிசையில்தான் உள்ளார்." என்று பேடி விமர்சித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை முரளிதரனுக்கு உண்டு. இந்நிலையில், முரளிதரன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்து பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்: சாதிக்குமா இந்தியா?

செஞ்சுரியன், டிச.15: இந்திய- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியும்,இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை மழையின் குறுக்கீடு இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. கடந்த சில நாள்களாக மழை இல்லை என்றாலும் வியாழக்கிழமை மழைபெய்யக்கூடும் என்று தெரிகிறது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை 3 அல்லது 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சை பால் ஹாரிஸ் மட்டுமே கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளத்தில் உள்ள புற்கள் பௌலர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் வான்ஸில் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இதுவரை 4 முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தான் விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி பெரிய அளவில் சாதித்ததில்லை என்ற குறை நீண்ட நாளாக இருந்து வருகிறது.

சமீப காலமாக இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வருகிறது. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது

இந்திய அணி:

மகேந்திரசிங் தோனி (கேப்டன்), கௌதம் கம்பீர், வீரேந்திர சேவாக், ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், முரளி விஜய், சேதேஸ்வர் புஜாரா, ரித்திமான் சாஹா, உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட், பிரக்யான் ஓஜா

தென்னாப்பிரிக்க அணி:

கிரீம் ஸ்மித் (கேப்டன்), அல்விரோ பீட்டர்சன், ஹசிம் ஆம்லா, ஜேக்ஸ் காலிஸ், ஏபி டிவில்லியர்ஸ், ஆஸ்வெல் பிரின்ஸ், மார்க் பவுச்சர், ரியான் மெக்லேரன், டேல் ஸ்டெயின், பால் ஹாரிஸ், மோர்னே மோர்கல், லான்வாபோ சோட்சோபி.
போட்டி நேரம்: பிற்பகல் 2 மணி.
ஒளிபரப்பு: நியோ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
  -
  அம்மன்/தாயார் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்

  தல விருட்சம் : தர்ப்பை

  தீர்த்தம் :  நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன.
 -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்

  புராண பெயர் :  திருநள்ளாறு

  ஊர் :  திருநள்ளாறு

  மாவட்டம் :  புதுச்சேரி

  மாநிலம் :  புதுசேரி

பாடியவர்கள்:
 
 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

தேவாரபதிகம்

போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
 பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
 நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

-திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 52வது தலம்.


 தல சிறப்பு:
 
  இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி) சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது. இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.
 
இது சிவத்தலமாயினும் சனிபகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது.
இத்தல விநாயகர் சொர்ணவிநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

திருமால், பிரமன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன்,நளன் முதலியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம்.

கோயிலின் தென்புறம் இடையனார் கோயில் உள்ளது. இங்கு இடையன், அவன் மனைவி, கணக்கன் ஆகியோர் உருவங்கள் உள்ளன.

தலபெருமை:
சோமாஸ்கந்தமூர்த்தி வடிவத்தின் பிறப்பிடம்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமாலுக்கு குழந்தையில்லாமல் இருந்த வேளையில் அவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவை உருவாக்கினார்.

இந்த வடிவத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான்.

ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது, முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் அவனை வென்றான் இந்திரன். இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியைப் பெற்று வந்தான். அதை திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான்.

அதே போல மேலும் ஆறு மூர்த்திகளைப் படைத்தான். அதில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான். அதுவே தற்போது "தியாகவிடங்கர்' என வழங்கப்படுகிறது. தியாகவிடங்கருக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது. தியாகவிடங்கரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

வாசல்படிக்கு மரியாதை கொடுங்கள் : திருநள்ளாறு செல்பவர்கள் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்ததும், முதல் படியை தொட்டு வணங்க வேண்டும். ஏனெனில், இந்த வாசல்படி மாடத்தில் சனீஸ்வரன் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை. நளன் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்ததுமே, நியாயத்துக்கு புறம்பாக செயல்பட்டதற்காக இறைவனிடம் தண்டனை அடைய வேண்டி வருமோ என்று பயந்த சனீஸ்வரன் வாசல்படியோடு நின்று, அவனை விட்டு நீங்கி விட்டதாக சொல்வர். ஆனால், இறைவன் சனீஸ்வரனின் நிலையைப் பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி, தன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார்

சனி- அறிவியல் தகவல் : இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.

தல வரலாறு:
நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர்.

சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை.

ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன்' என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.

ஒதுங்கிய நந்தி : இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்துவந்தான்.

கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார்.

திருவிழா:
 
  மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* திருப்தி விலைக்கு கிடைக்காது - குரு நானக்

* அறம் என்னும் நீரில் நீராடி, வாய்மை என்ற வாசனைத் திரவியத்தை பூசிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முகம் பேரொளியால் பிரகாசம் பெற்று விளங்கும்.

* இறைவன் நம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாதவன். முடிவில்லாத பெருமையைக் கொண்டவன். மனம்,வாக்கு,காயத்தால் அறிய இயலாதவன். அவனே நமக்கு அருள் செய்வதற்காக தன்னைக் குறைத்துக் கொள்கிறான்.


வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் இலக்கண நூலாசிரியர் யார் ?

விடை - பாணினி - கி.மு.6 ஆம் நூற்றாண்டு.  

இதையும் படிங்க :

இணைய தளத்தின் விஸ்வரூபம்!

உலகின் ஒரே மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனமாக ஆகிவிட்ட 'இண்டர்நெட்' டின் சக்தி என்ன என்பதையும், அதன் வீச்சு எந்த அளவுக்கு பிரமாண்டமானது என்பதையும் தெரிந்துகொள்வதற்கான சமீபத்திய மிகச்சிறந்த உதாரணம் "விக்கிலீக்ஸ்" !

உலக போலீஸாகவும், உளவு பார்ப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போலவும் ஏக திமிராக நடந்துகொண்ட அமெரிக்காவின் பிடறியை பிடித்து உலுக்குவது போல, அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு தலைமைக்கு அனுப்பிவைத்த ரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்" இணைய தளம் வெளியிட்டதை பார்த்தபோது, இணைய தளம் என ஒன்று இல்லாது போயிருந்தால் இந்த அளவுக்கு அந்த தகவல் உலகம் முழுவதும் முழு முற்றிலுமாக பரவியிருக்குமா என்பது சந்தேகத்திற்குரியதுதான்!

என்னதான் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இருந்தாலும், அந்தந்த ஊடக நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்பத்தான் மேற்கூறிய தகவல்கள் வெளியாகி இருக்கும்.

கூடவே லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இவற்றை அச்சில் ஏற்றியோ அல்லது தொலைக்காட்சியில் காட்டி வாசித்தோ மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது என்பது நடைமுறையில் அத்தனை எளிதில் சாத்தியமான விடயம் அல்ல.

மாறாக இப்படி வேண்டியவர்கள், வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது போன்று சர்வர்கள் இழுக்க இழுக்க, ஆவணங்களையும், ஆதாரங்களையும் கொட்டி வைத்து அமெரிக்காவின் முகத்திரையை கிழிக்கும் தகவல்களை அள்ளிக்கொள்ள வைத்துள்ளது "விக்கிலீக்ஸ்" !

இதன் மூலம் உலகையே புரட்டி போட வைத்துள்ள 'இண்டர்நெட்'டின் சக்தி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ரகசிய தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு மட்டுமல்லாது, தெரிந்த மற்றும் தெரியாத விடயங்கள் குறித்த தகவல்களை அறிவதற்கும் உலகின் ஒரே மிகப்பெரிய ஆதாரமாக 'இண்டர்நெட்' விளங்குகிறது.



நன்றி - சமாச்சார், தின மலர், தின மணி.

2 comments:

Post a Comment