Sunday, December 12, 2010

இன்றைய செய்திகள்.- டிசம்பர் - 12 - 2010







உலகச் செய்தி மலர் :



* கனடாவில் திருக்குறள் பெயரால் பதவி ஏற்ற தமிழ்ப் பெண்!

டொரன்டோ: கனடா நாட்டின் உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக ஒரு தமிழ்ப் பெண் வெற்றி பெற்றுள்ளார். அதைவிட சிறப்பு, திருக்குறளின் பெயரில் அவர் பதவி ஏற்றுக் கொண்டதுதான்!

கனடாவின் மர்கம் (Markham area 4) பகுதியில் பொது பள்ளி வாரியத்துக்கான 2010 தேர்தலில் போட்டியிட்டார் ஜுனிதா நாதன். இவர் கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்.

இந்தத் தேர்தலில் 60 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்ற அவர் கடந்த டிசம்பர் 6-ம் தேதி உறுப்பினர் பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் தமிழரின் பொதுமறை எனப் புகழப்படும் திருக்குறள் மீது உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

அவருடன் பதவிஏற்ற மற்றவர்கள் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றனர்.

"பல நூற்றாண்டுகளுக்கு முன் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் வாழ்வின் நெறிகளை சிறப்பாக சொல்கிறது. கல்வியின் பெருமைகளையும், நீதியையும் இத்தனை சிறப்பாக வேறு எந்த நூலும் சொன்னதில்லை" என்றார் ஜுனிதா நாதன்.

* பாகிஸ்தானில் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத முகாம்கள்: விக்கிலீக்ஸ்

லண்டன்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் மீ்ண்டும் தீவிரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் தொடங்கி விட்டதாக அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இந்திய ராணுவத் தளபதி தீபக் கபூர் தந்த ரகசிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி வந்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி மற்றும் ராணுவத் தளபதி தீபக் கபூர் ஆகியோரை சந்தித்தபோது நடந்த உரையாடல் விவரத்தை வி்க்கிலீக்ஸ் இப்போது வெளியிட்டுள்ளது.

ஜேம்சிடம் தீபக் கபூர் கூறுகையில், பாகிஸ்தானில் 43 தீவிரவாத முகாம்கள் உள்ளன. இதில் 22 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளன.

மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலையடுத்து சில முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தது. ஆனால், அவற்றில் பல முகாம்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துவிட்டன.

இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை எங்கள் ராணுவத்தினரால் பிடிக்க முடியும்போது பாகிஸ்தான் ராணுவத்தால் ஏன் அவர்களை தடுக்கவோ, பிடிக்கவோ முடியவில்லை என்பதை அமெரிக்கா யோசி்த்துப் பார்க்க வேண்டும் என்று கபூர் கூறியதாக டெல்லியி்ல் உள்ள அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு ரகசிய தகவலை அனுப்பியுள்ளது. இந்த உரையாடல் விவரம் தான் இப்போது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த யாரோ விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை ஹேக் செய்து அதன் டேட்டாவை திருத்தி, இந்தியா குறித்து விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது போல விஷமச் செயலில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்தியா குறித்து தவறாக செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் மன்னிப்புக் கேட்டுள்ளன. அந்த நாளிதழ்களின் முதல் பக்கத்திலேயே மன்னிப்புச் செய்தி வெளியாகியுள்ளது.

* பான் கீ மூனுக்கு மீண்டும் ஆதரவு தர இந்தியா முடிவு

வாஷிங்டன், டிச.11- ஐநா பொதுச்செயலர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு தர இந்தியா முடிவு செய்துள்ளது.

இத்தகவலை ஐநாவுக்கான இந்திய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
"ஐநாவின் முன்னாள் இணைச் செயலரும் இந்திய எம்.பி.,யுமான சசி தரூர் மீண்டும் ஐநா பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவாரா?" என்று இந்திய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

கடந்த தேர்தலில், தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூனிடம்தான் சசி தரூர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 டிசம்பரில் பான் கீ மூனின் பதவிக் காலம் முடிவடைகிறது

தேசியச் செய்தி மலர் :




* தமிழ் இனிய மொழி : தில்லி முதல்வர்

புதுதில்லி, டிச.11- தமிழ் மிகவும் இனிய மொழி என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் "தமிழ் 2010" கருத்தரங்கம் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"நான் தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு வருவது இது 5-வது முறை. இதற்கு முன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு வந்தேன். அப்போது தமிழக முதல்வர் கருணாநிதியும் வந்திருந்தார்.
எனக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது மருமகள் சென்னையைச் சேர்ந்தவர். மேலும், எனக்கும் எனது கணவருக்கும் ஏராளமான தமிழ் நண்பர்கள் உள்ளனர்.

இந்தியாவிலேயே சமூகப் புரட்சியை ஆரம்பத்திலேயே கொண்டு வந்தவர் பெரியார் என்பதை நான் நன்கு அறிவேன். அத்தகைய சமூக சீர்திருத்தவாதிகள் எண்ணற்றோரைத் தந்தது தமிழகம்.

தமிழ் மிகவும் இனிய மொழி. ஆனால், கற்பதற்கு சற்று கடினமான மொழியாக உள்ளது.

தில்லி தமிழ்ச் சங்கத்தின் கருத்தரங்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பேசினார்.

* நாடாளுமன்ற முடக்கம் கவலை தருகிறது - பிரதமர்.

பெர்லின், டிச. 11: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் முற்றிலுமாக முடக்கப்பட்டிருப்பது கவலை தருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

வருங்காலத்தில் நாடாளுமன்றம் எவ்வாறு செயல்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு சனிக்கிழமை சென்ற அவரிடம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தால் இந்திய நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

"2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் என்ன செய்ய முடியுமோ, அதே அடிப்படையில்தான் இப்போது நடைமுறையில் உள்ள குழுக்களும் விசாரணை நடத்தி வருகின்றன. இதில் எந்த வேறுபாடும் இல்லை.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவும், ஜெர்மனியும் 2011 முதல் இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடிக்கும். அப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
சர்வதேச தீவிரவாதம், பருவநிலை மாறுபாடு, ஆப்கானிஸ்தான் நிலவரம் ஆகியவை குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனியுடனான வர்த்தகம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. 2008-ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் | 802 கோடியை எட்டியது.

அதைத் தொடர்ந்து சிறிது சரிவு ஏற்பட்டாலும் இப்போது இரு தரப்பு வர்த்தகம் ஏறுமுகத்தில் செல்வதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

* வெளிநாடுகளுக்கு சேவையாற்றவா உயர்கல்வி?

கோட்டயம், டிச.11: இந்தியாவுக்குள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் இங்குள்ள இளைய தலைமுறையினரை வெளிநாடுகளில் பணியாற்ற தயார்படுத்தும் நிலை உருவாகும் என்று கேரள மாநில உயர் கல்வித்துறை உறுப்பினர் செயலர் தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் இங்குள்ள மாணவர்களுக்கு சர்வதேச தரத்திலான கல்வி கிடைக்கும் என்று அரசு தரப்பில் இதுவரை கூறப்பட்டு வந்த விஷயத்தை அரசு அதிகாரியே மறுத்து, அதன் பாதக அம்சத்தை வெட்ட வெளிச்சமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலையில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். உயர் கல்வியில் உலகமயமாக்கல் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது: இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் கிளைகளை அமைத்து இங்கு செயல்பட உள்ளன. வணிக நோக்கில் இங்கு கிளைகளை அமைக்கும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள், வர்த்தக நோக்கிலான மாணவர்களைத் தயார்ப்படுத்துமே தவிர, அடிப்படை அறிவியல் உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தராது. இதனால் ஆராய்ச்சியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையும்.

 இதனால் ஸ்திரமான வளர்ச்சியை எட்ட முடியாது. வெளிநாட்டு பல்கைலைக் கழகங்களுடன் போட்டி போட வேண்டும் என்ற நோக்கத்தில் அவை அடிப்படை அறிவியல் சார்ந்த பாடங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு வெளிநாட்டு பல்கலைக் கழங்கள் கற்றுத் தரும் பாட முறையை பின்பற்றும். இதனால் அடிப்படை அறிவியல் மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையும். வெளிநாட்டு பல்கலைக் கழகத்தை சார்ந்துள்ள கல்வி நிறுவனங்கள் தங்களது கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இங்குள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் மாறுவதால் நமது சுயசார்புத் தன்மையை இழந்து எப்போதும் வெளிநாட்டை சார்ந்து இருக்கும் சூழல் உருவாகும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களையும், தொழில்துறை நிபுணர்களையும் நாம் உருவாக்குவதாக அமையும் என்று தாமஸ் கூறினார்.

மாநிலச் செய்தி மலர் :

* சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைப்பேன் : ஆ. ராசா.

சென்னை, டிச. 11: 2ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பதவியை சமீபத்தில் ராஜிநாமா செய்த ஆ. ராசா தெரிவித்தார்.
சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியைச் சனிக்கிழமை அவர் சந்தித்துப் பேசினார்.
"2ஜி' அலைக்கற்றை விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை தொடர்ந்து கிளப்பி அலைக்கற்றை பிரச்னை குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இரு அவைகளையும் தொடர்ந்து முடக்கி வருகின்றன.

இந்த நிலையில், ஆ.ராசாவின் தில்லி, சென்னை, பெரம்பலூரில் உள்ள வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீர் சோதனை நடத்தினர். ராசாவின்டைரி உட்பட அவரிடம் இருந்து சில ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராசாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்தார் ஆ.ராசா

தமிழக அரசியலில் குறிப்பாக ஆளுங்கட்சியில், பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில் முதல்வர் கருணாநிதியை அவரது சி.ஐ.டி., காலனி இல்லத்தில் ஆ.ராசா சனிக்கிழமை காலையிலும், பிற்பகலிலும் சந்தித்துப்பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராசா சென்னையில் இருக்கும்போது, முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், தாம்பரத்தில் கருணாநிதி சனிக்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சியில் ராசா கலந்து கொள்ளவில்லை. அந்த நேரத்தில் அவர், சேப்பாக்கத்திலுள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார்.

"ராசா மீதான விசாரணையின்போது அவருக்குத் துணை நிற்போம்' என முதல்வர்கருணாநிதி ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனாலும், தனிப்பட்ட முறையில் ராசா மீது கருணாநிதி கோபத்தில் இருப்பதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன.

* பாரதியாருக்கு தமிழ் எழுத்தாளர்கள் கவியஞ்சலி



தூத்துக்குடி, டிச. 11: பாரதியாரின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு, சனிக்கிழமை தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எட்டையபுரத்தில் திரண்டு மறைந்த மகாகவிக்கு பாமாலைகள் பாடி கவியஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாரதியாரின் 129-வது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சென்னை, மதுரை, கோவை, திருவண்ணாமலை, அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், பெங்களூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 100 தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் அங்கு திரண்டனர்.
இவர்கள் அனைவரும் காலையில் பாரதியார் பிறந்த இல்லத்தில் கூடி, அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு, அங்கிருந்து தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்ற ஊர்வலம் தொடங்கியது.

புதிய பார்வை ஆசிரியரும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் புரவலருமான ம. நடராசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், சங்கத்தின் செயலர் சுடர் முருகையா மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக சாமிதோப்பு அய்யா வைகுண்ட பதியின் மகா குரு பாலபிரஜாதிபதி அடிகள் பங்கேற்றார். எட்டையபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஊர்வலத்தின் போது பாரதியாரின் பாடல்களையும், அவரின் புகழையும் பாடியபடியே கவிஞர்கள், எழுத்தாளர்கள் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், பாரதி மணிமண்டபத்தில் நிறைவடைந்தது

அங்குள்ள பாரதியாரின் முழு உருவச் சிலைக்கு ம. நடராசன், சுடர் முருகையா, பாலபிரஜாதிபதி அடிகள் மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எழுத்தாளர்களும், கவிஞர்களும் பாரதியார் சிலை முன் அமர்ந்து புகழஞ்சலியைத் தொடங்கினர்.

சென்னையைச் சேர்ந்த கவிஞர் சமாரியாவின் பாரதியார் பாடலுடன் கவியஞ்சலி தொடங்கியது. 40 கவிஞர்கள் தங்கள் கவிதைகளால் பாரதியின் புகழ்பாடினர். இதுவரை அரங்கேறாத கவிதையாக இருக்க வேண்டும். 24 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது. மறுமுறை திரும்பிப் படிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுக்கு உள்பட்டு கவிஞர்கள் பாரதியாருக்கு பாமாலை சூட்டினர்.

20 பேருக்கு விருதுகள்: பாரதியாரின் புகழ் வளர உறுதுணையாக இருப்போரை தேர்வு செய்து ஆண்டுதோறும் பாரதி இலக்கியப் புரவலர், பாரதி பணிச்செல்வர் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் 20 பேருக்கு அவ் விருதுகளை ம. நடராசன் வழங்கினார்.


வர்த்தகச் செய்தி மலர் :



* பங்குச் சந்தையை பாதித்த ஊழல் புகார்கள்.

மும்பை, டிச.11: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடு காரணமாக கடந்த வாரத்தில் பங்குச் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டது. அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை பெருமளவில் திரும்பப் பெற்றதால் பங்குச் சந்தையில் 458 புள்ளிகள் வரை சரிந்தது.

நவம்பர் பிற்பாதியிலிருந்தே பல்வேறு ஊழல் புகார்கள் கிளம்பின. முதலில் வெளியானது 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு.
அடுத்து எல்ஐசி ஹவுசிங் நிறுவனம், வங்கி அதிகாரிகள் சிலரும் வீடு கட்ட கடன் அளிப்பதில் லஞ்சம் பெற்ற குற்றச் சாட்டும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. எல்ஐசி ஹவுசிங் நிறுவன தலைவர், சில வங்கியின் உயரதிகாரிகளை சிபிஐ கைது செய்ததால் வங்கித்துறை பங்குகள், கட்டுமான நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.

அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 10.8 சதவீதமாக உயர்ந்தது. முந்தைய மாதத்தில் 4.4 சதவீதமாக இருந்த தொழில்துறை உற்பத்தி அதிக அளவு உயர்ந்தபோதிலும் அது முதலீட்டாளர்களைக் கவர போதுமானதாக இருக்கவில்லை.
வங்கிகள், கட்டுமான நிறுவனங்கள், நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ஆட்டோமொபைல், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 19,508 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் 135 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,857 புள்ளிகளானது.

கடந்த வாரம் முழுவதும் கரடியின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. பங்குச் சந்தை முதலீடும், பங்கு விற்பனை அளவையும் கணக்கிடும்போது, அடுத்த 6 மாதங்களுக்கு மிகப் பெருமளவில் மாற்றம் ஏற்படும் என்று கூற முடியாது என்று பங்குச் சந்தை விமர்சகர் மார்க் ஃபேபர் குறிப்பிட்டார்.

கடந்த வாரத்தில் மொத்தம் 1961 பங்குகள் ஏற்றம் பெற்றன. 1020 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 478 நிறுவனப் பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை.

மொத்தம் 1,46,420 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 1,24,931 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.


விளையாட்டுச் செய்தி மலர் :

* லண்டன் செஸ்: ஆனந்துக்கு முதல் வெற்றி

லண்டன், டிச.11: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.
முந்தைய இரண்டு சுற்றுகளிலும் ஆனந்த் டிரா கண்டார். மூன்றாவது சுற்றில் பெற்ற வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் ஆனந்த் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.

சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது சுற்றில் உலக செஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்செனை, உலகச் சாம்பியன் ஆனந்த் எதிர்கொண்டார்.

நேர்த்தியான காய் நகர்த்தல்களின் மூலம் கார்ல்செனை ஆனந்த் வீழ்த்தினார். சனிக்கிழமை (டிச.11) தனது 41-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஆனந்துக்கு இந்த வெற்றி மேலும் மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்தது.

இங்கிலாந்து வீரர் லூக் மெக்ஷேன், ரஷிய வீரர் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோருக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
மூன்று சுற்றுகள் முடிவில் மெக்ஷேன் 7 புள்ளிகளுடன் முதலிடத்திலும்; ஆனந்த், கிராம்னிக், அமெரிக்க வீரர் நகுமுரா, இங்கிலாந்து வீரர் ஆடம்ஸ் ஆகியோர் தலா ஐந்து புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும் உள்ளனர்.

* ஹாங்காங் ஓபன்: இறுதிச் சுற்றில் சாய்னா

புது தில்லி, டிச.11: இந்திய வீராங்கனை சாய்னா நெவால் ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் சனிக்கிழமை நடந்த அரையிறுதிச் சுற்றில் சாய்னா 21-19, 17-21, 21-12 என்ற நேர் செட்களில் ஜெர்மன் வீராங்கனை ஜூலியன் ஷேங்கை வென்றார்.

மற்றொரு அரையிறுதியில் சீன வீராங்கனை ஷிக்ஷியான் வாங் 21-12, 21-14 என்ற நேர் செட்களில் சக நாட்டு வீராங்கனை ஷின் வாங்-ஐ வென்றார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் ஷிக்ஷியான் வாங்-ஐ சாய்னா எதிர்கொள்கிறார்.
முன்னதாக சாய்னா இந்த ஆண்டு நடந்த இந்திய ஓபன், சிங்கப்பூர் ஓபன், இந்தோனேசிய ஓபனில் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்றார். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக தில்லி காமன்வெல்த் போட்டியில் தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

சீனாவில் கடந்த மாதம் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர்
 
  அம்மன்/தாயார் : மங்கையர்க்கரசி

  தல விருட்சம் :  வில்வம்

  தீர்த்தம் :  வைத தீர்த்தம்
   -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்

  புராண பெயர் :  திருவேதிகுடி

  ஊர் :  திருவேதிகுடி

  மாவட்டம் :  தஞ்சாவூர்

  மாநிலம் :  தமிழ்நாடு


பாடியவர்கள்:
 
 
அப்பர், சம்பந்தர்


தேவாரப்பதிகம்

வருத்தனை வாளரக்கன்முடி தோளொடு பத்திறுத்த
 பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப்படையுடைய 
திருத்தனைத் தேவர்பிரான் திருவேதி குடியுடைய 
அருத்தனை ஆரா அழுதினை நாமடைந் தாடுதுமே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 14வது தலம்.

தல சிறப்பு:
 
  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.
 
கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம். ஒரு பிரகாரம். உள்பிரகாரத்தில் செவி சாய்த்த விநாயகர், 108 லிங்கங்கள், சுப்பிரமணியர், தெட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, முருகன், மகாலட்சுமி, நடராஜர், சப்தஸ்தான லிங்கங்கள் உள்ளன.

ராஜசேகரிவர்மன், கோப்பரகேசரிவர்மன் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் இறைவனின் பெயர் திருவேதிகுடி மகாதேவர் என்றும், பரகேசரி சதுர்வேதிமங்கலத்து மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

வாழைமடுவில் இறைவன் தோன்றிய காரணத்தினால் வாழைமடுநாதர் என்ற பெயரும் உண்டு. பல்லவ மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர்.

 தலபெருமை:

பொதுவாக சம்பந்தர் கோயில் இறைவனைப்பற்றி பாடுவார். ஆனால் இத்தலத்தில் திருமணத்தடை நீக்கும் பாடலை பாடியுள்ளது சிறப்பு. திருஞானசம்பந்தர் இக்கோயிலைப்பற்றி தான் பாடிய பதிகத்தின் ஏழாவது பாட்டில், ""உன்னி இருபோதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்க அருளி துன்னிஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடமாம் கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலமிக மின் இயலும் நுண்இடை நன்மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே'' என்று பாடியுள்ளார்.

பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவனின் வலது புறம் அம்மன் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் இங்கு வித்தியாசமாக உள்ளது.

விசேஷ விமானம்: சப்தஸ்தான தலங்களில் நான்காம் கோயில் இது. முழுவதும் கல்லால் அமைக்கப்பட்ட விமானத்தின் கீழ், வேதபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். விமானத்தின் நான்கு திசைகளிலும் வேதங்களை உணர்த்தும் நந்திகள் உள்ளன. வடதிசையில் சிவனுடன் எப்போதும் இருக்கும் மனோன்மணி அம்பிகை சிலை உள்ளது. சிவன் சன்னதிக்குப் பின்புள்ள (கோஷ்டம்) அர்த்தநாரீஸ்வரர், விசேஷமானவர். வழக்கமான சிவனுக்கு இடப்புறம்தான், அம்பாள் இருக்கும்படி அர்த்தநாரீஸ்வரர் சிலை இருக்கும். இங்கு, அம்பிகை வலப்புறம் இருக்கிறாள். இத்தகைய அமைப்பைக் காண்பது மிக அபூர்வம். தற்போது இந்த சிலை சேதமடைந்த நிலையில் உள்ளது.

 தல வரலாறு:

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை, பெருமாள் மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வழிபடவே, அவர் வேதங்களை புனிதப்படுத்தினார். பின், வேதங்களின் வேண்டுதலுக்காக வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். தலத்திற்கும் திருவேதிகுடி என்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு, இங்கு சிவனை வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு "வேதி' என்ற பெயர் உண்டு. இதனாலும் சிவனுக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர்.
சோழமன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார். ஒரு முறை அவன் இக்கோயில் வந்து மங்கையர்க்கரசி அம்மனை தரிசனம் செய்து, தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வரம் வேண்டினான்.

அம்மனின் கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்று செல்லப்பெயர் சூட்டி தன் நன்றியை தெரிவித்தான். அதன்பின் கோயிலுக்கு பல திருப்பணிகளும் செய்தான்.

திருவிழா:
 
  திருவையாறு ஐயாரப்பர் சித்திரை மாதத்தில் எழுந்தருளும் ஏழு சிவத்தலங்களுள் இத்தலம் நான்காவதாகும். ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சிவராத்திரி
 
திறக்கும் நேரம்:
 
  காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

எண்ணம் தூய்மை ஆகட்டும் - ஸ்ரீ அரவிந்தர்.

 ஆன்மிகப் பொருளுடைய கனவு ஒன்றைக் கண்டால் அது அனுபவம். அதன் பொருளை உணர்ந்தால் ஞானம்.

* ஆண்டவனின் அருளாட்சியில் தீமை
என்பது இல்லை. நலத்தையோ அல்லது நலத்தை உண்டாகுகின்ற முயற்சியையோ நாம் செயகிறோம்.

* அனைத்து காலங்களிலும் மனிதன் ஓர் அறிவிலியாகத் தோன்றுகின்றான். இதுதான் தெய்வத்துக்கும்

மனிதனுக்கும் உள்ள வேறுபாடாகும்.

* கடவுளை நாம் அறிய வேண்டுமானால் அகந்தையையும், அஞ்ஞானத்தையும் அறவே ஒழித்துவிட வேண்டும்.

வினாடி வினா :


வினா - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சிற்பி என்று வருணிக்கப்படுபவர் யார் ?

விடை - ஜவஹர்லால் நேரு.


இதையும் படிங்க :

பண இரட்டிப்பு மோசடி: தம்பதியை கைது செய்யக் கோரி திருத்தங்கல் டி.எஸ்.பி அலுவலகம் முற்றுகை

சிவகாசி, டிச.11: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் நூதன முறையில் பண இரட்டிப்பு மோசடி செய்த கணவன், மனைவியைக் கைது செய்யக் கோரி டி.எஸ்.பி. அலுவலகத்தை 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருத்தங்கல் பகுதியில் ராஜா, அவரது மனைவி சத்யபாமா ஆகிய இருவரும் தங்களை தனியார் நிறுவன இன்சூரன்ஸ் ஏஜென்ட் என அறிமுகம் செய்து பலரை வாடிக்கையாளர்களாகச் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. பணம் செலுத்தியவர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ததற்கான பத்திரங்களையும் கொடுத்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் அவர்கள் இருவரும் "ரியல் லைப் அசோஷியேஷன்" என்கிற பெயர் நிதி நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கின்றனர். ரூ.1 லட்சம் செலுத்தினால் 6 மாதங்களில் 2 லட்சம் தருவதாகவும் இது தவிர ரூ.1 லட்சம் செலுத்தியவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.3200 வீதம் தருவதாகவும் வாக்களித்திருக்கிறார்கள்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களுக்கு பணம் கட்டிய அனைவருக்கும் மாதச் சம்பளமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தொகை வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அந்தத் தொகையும் வரவில்லை; 6 மாதங்கள் கழித்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்ட இரட்டிப்பு பணமும் கிடைக்கவில்லை.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கணவன்-மனைவி இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் கடந்த மாதம் 23-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட 60 பேர் இன்று திருத்தங்கல்டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு தம்பதியைக் கைது செய்ய வேண்டும் எனப் போராட்டம் நடத்தினர். திருத்தங்கல் டிஎஸ்பி விடுப்பில் இருப்பதால், அந்தப் பொறுப்பை தற்காலிகமாக கவனித்து வரும் ராஜபாளையம் டிஎஸ்பியிடம் மனு அளிக்குமாறு போலீஸார் அவர்களிடம் கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் திருத்தங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



நன்றி - தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.

2 comments:

அப்பாதுரை said...

நன்றி..
கேனடா தமிழ்ப்பெண் எல்லோருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றிங்க அப்பாதுரை சார்.

Post a Comment