Saturday, December 11, 2010

இன்றைய செய்திகள். - டிசம்பர் - 11 - 2010.







உலகச் செய்தி மலர் :



* இளவரசர் சார்லஸ் கார் மீது தாக்குதல்: போலீஸார் தீவிர விசாரணை

லண்டன், டிச.10- இளவரசர் சார்லஸ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து லண்டன் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் இன்று கூறியுள்ளார்.

"அந்த சம்பவம் மூலம் போலீஸார் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர். ஆனால், தாக்குதல் சம்பவத்துக்கு அவர்கள்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்." என்றும் பிரிட்டன் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சார்லஸ் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முழுமையான அளவில் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று லண்டன் காவல்துறையின் தலைவர் பால் ஸ்டீபன்ஸன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்றிரவு, லண்டனின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான வெஸ்ட் என்ட் என்னுமிடத்தில் தனது பிரத்யேக ரோல்ஸ் ராய்ஸ் காரில் மனைவி கமீலாவுடன் சார்லஸ் வந்து
கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரது காரின் பின்பக்க கண்ணாடியை சேதப்படுத்தியது. மேலும், அவரது கார் மீது வெள்ளைநிற பெயிண்ட் வீசப்பட்டது. இச்சம்பவத்தால் பிரிட்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவான அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.


* ஐரோப்பிய யூனியனுடன் பொருளாதார ஒத்துழைப்பு: மன்மோகன் சிங்



பிரஸ்ஸல்ஸ், டிச. 10: ஐரோப்பிய யூனியனுக்கும், இந்தியாவுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பும் திறந்த, தாராளமய சந்தை கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய- ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் பங்கேற்ற அவர் இந்த யோசனையைத் தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளும் உள்நாட்டு வர்த்தகத்தைக் காக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பொருளாதார, ராஜீய ரீதியிலான உறவில் இரு தரப்பும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவின் உள் கட்டமைப்பு, உயர் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்தி ஆகிய துறையில் ஐரோப்பிய யூனியன் முதலீடு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.

மனிதவள மேம்பாடு, தொழில் பயிற்சி, சிறிய- நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவற்றில் ஐரோப்பிய யூனியனின் அனுபவத்தை அறிந்து பயனடைய இந்தியா ஆர்வமாக உள்ளது.
இரு தரப்பு வர்த்தக- முதலீடு ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தீவிரவாதத்துக்கு எல்லை வரையறை கிடையாது. உலகின் எந்தப் பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றாலும் அதனை எதிர்ப்போம் என்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஹெர்மன் கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும். உலகின் நன்மைக்காக ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

* நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் பங்கேற்பு


ஆஸ்லோ, டிச.10: நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வெள்ளிக்கிழமை (டிச.10) இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

 விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்ற சீனாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. இதில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்பட 46 நாடுகள் கலந்து கொண்டன. விருது வழங்கும் விழாவில் நார்வேக்கான இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர். விருது விழாவை சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்பட 15 நாடுகள் புறக்கணித்தன.

010-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி விருதுக்கு சீனாவின் ஜனநாயகப் போராட்டத் தலைவர் லியூ ஜியாபோ தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சிறையில் உள்ளதால் விருது விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

 அவரது மனைவி அல்லது சீனாவைச் சேர்ந்த ஜனநாயகப் போராட்டத் தலைவர்கள் யாராவது விழாவில் கலந்து கொண்டு விருதை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லியூ ஜியாபோ சார்பில் யாருமே விழாவில் கலந்து கொள்ளவில்லை.

 விழாவில் லியூ ஜியாபோவுக்கு விருதை அளித்து கெüரவிப்பதாக நோபல் கமிட்டியின் தலைவர் தோர்ப்ஜோன் ஜக்லேண்ட் அறிவித்தார். அப்போது விழா அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

 நோபல் பரிசைப் பெற லியூ ஜியாபோவை சீனா அனுமதிக்காதது பெரும்பாலான உலக நாடுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக போலந்து நாட்டு முன்னாள் அதிபர் லெஜ் வலேசா, மியான்மர் ஜனநாயகப் போராட்டத் தலைவர் ஆங் சான் சூச்சி ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது அவர்கள் சிறையில் இருந்ததால் விருதை நேரடியாகப் பெற முடியவில்லை.

* பருவ நிலை மாறுபாடு விதிமுறைகள்: இந்தியா பிடிவாதம் காட்டாது: ஜெய்ராம் ரமேஷ்

கான்குன் (மெக்ஸிகோ), டிச.10: பருவ நிலை மாறுபாடு தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் இந்தியா நீக்குப் போக்குடன் நடந்து கொள்ளும் என்று மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

சட்ட ரீதியான ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடாது என்று தெரிவித்ததால், இந்தியா மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. இதனாலேயே புவி வெப்பமடைவதைத் தடுப்பதில் இந்தியா தனது நிலையிலிருந்து விலகிவிட்டதாகக் கருத வேண்டியதில்லை.

இப்போதைய சூழலில் சர்வதேச நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இந்தியா உள்ளது. இதற்கு முக்கியக் காரணமே அந்த நிபந்தனைகளில் எவையெல்லாம் உள்ளன என்பது தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து நாடுகளுமே புவி வெப்பமடைவதைத் தடுப்பதில் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இத்தகைய சூழலில் இந்தியா தனித்து விடப்பட்டதாக கருத வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் நீக்குப் போக்குடன் இருக்கவே இந்தியா விரும்புகிறது என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் ஒப்புக் கொள்ளப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமை இதில் ஈடுபடும் நாடுகளுக்கு ஏற்படும். இதையே சட்ட ரீதியில் அமல்படுத்தினால் அது நிர்பந்தமாக அமைந்துவிடும்.

எனவேதான் சட்ட ரீதியிலான நிர்பந்தத்தை இந்தியா ஏற்காது என தெரிவிக்கப்பட்டது. இதற்காக இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிவிட்டதாக அர்த்தம் செய்து கொள்ளக்கூடாது என்றார் ஜெய்ராம் ரமேஷ்

தேசியச் செய்தி மலர் :

* நாடாளுமன்றத்தில் 21-வது நாளாக அமளி

புது தில்லி, டிச.10: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 21-வது நாளாக முடங்கின.

மாநிலங்களவையில் பாஜக எம்.பி. ருத்ர நாராயணன், கோஷமிடுவதில் இருந்து ஒருபடி மேலே சென்று அவைத் தலைவர் மேஜையில் இருந்த நிகழ்ச்சிகள் அறிக்கையை எடுத்துச் சென்றார்.

வெள்ளிக்கிழமை மக்களவை கூடியதும், அவைத் தலைவர் மீரா குமார் முன்பு கூடிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று தொடர்ந்து கோஷமிட்டனர். இதையடுத்து மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய பின்னரும் கோஷம் நீடித்ததால் அவை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது.


* பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்க வேண்டும்: பிரதிபா பாட்டீல்

ராஞ்சி, டிச.10: சர்வதேச தரத்திலான மாணவர்களை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பல்கலைக் கழகத்தின் 25-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் பேசியது:

சர்வதேச அளவில் போட்டிகள் அதிகமாகிவிட்டது. இதில் திறமையானவர்களுக்குத்தான் வேலை வாய்ப்பு சாத்தியமாகிறது. இத்தகைய திறமை படைத்தவர்களை உருவாக்க வேண்டியது மிகவும் கட்டாயம். இதைக் கருத்தில் கொண்டு திறமையான மாணவ சமுதாயத்தை உருவாக்க கல்வி நிறுவனங்கள் பாடுபட வேண்டும். இந்தியாவில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, அதன் தரமும் உயர்ந்துள்ளது. திறமையான மனிதவளம் மூலம்தான் நமது பொருளாதாரமும் வளர்ச்சியடையும். உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது. இதை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் நாட்டில் கல்வி அறிவு பெறாதவர்களே இல்லாத சூழலை உருவாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய முயற்சியை எட்டுவதில் பல்கலைக் கழகங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது.  சர்வ சிக்ஷா அபியான்,  அனைவருக்கும் கல்வி திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்துவதில் பல்கலைக் கழகங்களும் சிறப்பாக செயலாற்ற முடியும்.

மாநிலச் செய்தி மலர் :

* இருளில் தவிக்கும் நோயாளிகளின் ஒளிவிளக்காக செவிலியர்கள் திகழவேண்டும்: சுப்புராஜ்



சென்னை,டிச.10: நோயால் வாடித் தவிக்கும் நோயாளிகளின் ஒளி விளக்காக செவிலியர்கள் திகழ வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ் கூறினார்.
செவிலியர் துறையில் ஆராய்ச்சிகள் குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வி.கு.சுப்புராஜ் பேசியது:

இந்தியாவில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. அதிக அளவில் மருத்துவமனைகள் இருந்தாலும், அனைத்திலும் தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்று கூற முடியாது.

அனைத்து மருத்துவமனைகளிலும் தரமான கல்வியைப் பயின்ற செவிலியர்கள் நியமிக்கப்படுவதில்லை. குறிப்பாக, முறையாக பயிற்சி பெறாத செவிலியர்கள் தனியார் மருத்துவமனைகளில் நியமிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரை, சுமார் 150 செவிலியர் பயிற்சி பள்ளிகளும், 150 செவிலியர் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. கல்லூரிகள் அதிகமாக இருந்தாலும், படிப்பதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு சில புகழ்பெற்ற கல்லூரிகளிலேயே மாணவர்கள் சேர்க்கை அதிகமாக காணப்படுகிறது. சிறிய அல்லது புதிய நிறுவனங்கள் மாணவர்கள் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன.

குழந்தைகள் நலத்தில் செவிலியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் 2.5 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 50 சதவீத குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு மட்டுமே முறையான மருத்துவப் பராமரிப்பு கிடைக்கிறது

மருத்துவத் துறையில் ஆய்வுகள் என்பது மட்டும் கடைசியாகத் தள்ளப்படுகிறது. அதிலும் இந்தியாவில் சிறிய சிறிய அளவில் மட்டுமே ஆய்வுகள் நடைபெறுகிறது. செவிலியர்கள் தினமும் நோயாளிகளை அலசி, ஆராய்வதன் மூலம் நிறைய அனுபவங்களை பெற முடியும். இது ஆய்வுகளுக்கு மிகவும் பயன்படும். எனவே இத்துறையில் அதிக அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்


* தமிழகத்தில் கனமழை எதிரொலி: 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு



சென்னை, டிச. 10: தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துள்ளதையடுத்து, சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நவம்பர் முதல் வாரத்தில் தான் தீவிரம் அடைந்தது. இதுவரை 26 மாவட்டங்களில் இயல்பான அளவை விட கூடுதலாக அடைமழை கொட்டித் தீர்த்தது. இதில் சென்னை முதல் கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களிலும் புதன்கிழமை வரை தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய இரு பருவ மழை காலத்திலும் அதிக அளவு மழை பொழிந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக நிலத்தடி நீர்மட்டம் குறித்து பொதுப்பணித்துறை நிலத்தடி நீர்மட்ட ஆய்வகம் மாதந்தோறும் விவரங்களை சேகரித்து வருகின்றது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் 1,774 திறந்தவெளிக் கிணறுகளை அமைத்துள்ளது. இதில் 81 கிணறுகளில் அதிநவீன தானியங்கி சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதுதவிர சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக 38 இடங்களில்
திறந்தவெளிக் கிணறுகளை அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது

* "மறு கருவுறுதல் அறுவைச் சிகிச்சை செய்தவர்களில் 79% தோல்வி'

சென்னை, டிச. 10: சுனாமியில் குழந்தைகளை இழந்து, மறு கருவுறுதலுக்கான அறுவைச் சிகிச்சை செய்த பெண்களில் 79 சதவீதம் பேருக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
 நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்நேகா (சமூக தேவைக்கான கல்வி, மானுட விழிப்புணர்வு) அமைப்பு கடற்கரை கிராமமான நாகப்பட்டினத்தில் நடத்திய ஆய்வில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் சுனாமியில் குழந்தைகளை இழந்த 67 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் குடும்ப வற்புறுத்தல் காரணமாக மறு கருவுறுதலுக்கான அறுவைச் சிகிச்சையை செய்து கொண்டுள்ளனர். ஆனால், இவர்களில் 13 பேருக்கு மட்டுமே மீண்டும் குழந்தை பிறந்துள்ளது. மற்றவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை

மறு கருவுறுதல் அறுவைச் சிகிச்சை செய்யும் பெண்களுக்கு, சிகிச்சை பலனளிக்காமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
பெண்களின் வயது, கருத்தடை செய்து கொண்டதற்கும், மறு கருவுறுதலுக்கான அறுவைச் சிகிச்சை செய்வதற்குமான கால இடைவெளி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

கருத்தடை செய்து கொண்ட பெண்கள், அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் மறு கருவுறுதலுக்கான அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தை பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

தொழில்நுட்பச் செய்தி மலர் :

* சென்​னை​யில் அடுத்த 3 ஆண்​டு​க​ளில் பெட்​ரோ​லுக்​குப் பதில் சிஎன்ஜி வாக​னங்​கள்

சென்னை,​​ டிச.10:​ சென்​னை​யில் அடுத்த 3 ஆண்​டு​க​ளில் பெட்​ரோ​லுக்​குப் பதி​லாக இயற்கை எரி​வாயு ​(சிஎன்ஜி)​ மூலம் வாக​னங்​கள் இயக்​கப்​ப​டும் என்று இந்​திய எரி​வாயு ஆணை​யத்​தின் ​(கெயில்)​பொது மேலா​ளர் ஆர்.திவாரி கூறி​னார்.​
இந்​திய தொழில் வர்த்​தக சபை ​(பிக்கி)​ சார்​பில் "வருங்​கா​லத்​தில் மின்​து​றை​யில் தன்​னி​றைவு' என்ற தலைப்​பில் கருத்​த​ரங்கு சென்​னை​யில் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​
இ​தில் கெயில் பொது மேலா​ளர் திவாரி பேசி​யது:​
இயற்கை எரி​வா​யுவை பயன்​ப​டுத்​து​வ​தன் மூலம் இப்​போ​தைய வாகன எரி​பொ​ரு​ளான பெட்​ரோலை 50 முதல் 60 சத​வீ​தம் வரை சேமிக்க முடி​யும்.​ ​
எனவே,​​ அடுத்த 3 ஆண்​டு​க​ளில் சென்னை நக​ரில் உள்ள வாக​னங்​க​ளுக்கு நகர எரி​வாயு விநி​யோக அமைப்பு ​(சி.சி.டி.)​ மூலம் சிஎன்ஜி விநி​யோ​கம் செய்​யப்​ப​டும்.​

கா​கி​நாடா முதல் சென்னை வரை​யி​லும்,​​ சென்னை முதல் தூத்​துக்​குடி வரை​யில் சிஎன்ஜி குழாய்​கள் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.​
நகர எரி​வாயு விநி​யோக அமைப்​பின் மூலம் இயற்கை எரி​வாயு வீட்டு உப​யோ​கம்,​​ வணிக சேவை,​​ தொழில் நிறு​வ​னங்​க​ளுக்​கும் வழங்​கப்​ப​டும்.​

உலக நாடு​க​ளு​டன் ஒப்​பி​டும்​போது எரி​வா​யுவை பயன்​ப​டுத்​து​வ​தில் நாம் மிக​வும் பின்​தங்​கி​யுள்​ளோம்.​ தென் மாநி​லங்​க​ளைப் பொறுத்​த​வரை கேர​ளம்,​​ கர்​நா​ட​கம் ஆகிய மாநி​லங்​க​ளில் எரி​வாயு குழாய் உள்​கட்​ட​மைப்​புக்கு போதிய அள​வில் இல்லை


* "அக்னி-2 பிளஸ்' சோதனை தோல்வி

பாலசூர் (ஒரிசா), டிச.10: "அக்னி-2 பிளஸ்' ஏவுகணை சோதனை  தோல்வியடைந்தது. அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று இலக்குகளைத் தாக்கும் வகையிலும் அதிக தூரம் செல்லும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணைக்கு அக்னி-2 பிளஸ் அல்லது பிரீமியர் என பெயரிடப்பட்டது.

அக்னி-2 ஏவுகணை 2,000 கி.மீ. தூரம் சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. அக்னி-3 ஏவுகணை 3,500 கி.மீ. தூரம் செல்லக் கூடியது. இப்போது சோதித்து பார்க்கப்பட்ட அக்னி-2 பிளஸ் ஏவுகணை இடைப்பட்ட தூரத்துக்காக வடிவமைக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில், ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவிலிருந்து  இது ஏவப்பட்டது. தரையிலிருந்து சென்று தரை இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நடமாடும் (மொபைல்) தளத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த ஏவுகணை  புறப்பட்ட சில விநாடிகளிலேயே பாதையை விட்டு விலகிச் சென்றதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏவுகணை சோதனை தோல்வியடைந்தது குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாக தில்லியில் உள்ள ஆராய்ச்சி, அபிவிருத்தி மைய (டிஆர்டிஓ) அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை முயற்சி தோல்வியடைந்தது குறித்து துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் ஏவுகணை ஏவப்படுவதை நேரில் பார்த்தவர்கள், ஏவப்பட்ட 30 விநாடிகளிலேயே அது கடலில் விழுந்ததாகத் தெரிவித்தனர். வானிலை மிக மோசமாக இருந்ததாகவும், குளிர் காற்று வீசிய போதிலும் ஏவுகணை திட்டமிட்டபடி ஏவப்பட்டது. மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை மிகவும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் வகையில் மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென சில சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன

ஆரோக்கியச் செய்தி மலர் :

இதயத்துக்கு இதமானது கஞ்சி

லண்டன், டிச.10: அன்றாடம் கஞ்சி குடிப்பது இதயத்துக்கு நல்லது என்பது மருத்துவரீதியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

டாக்டர் பிரங்க் தைஸ் என்பவர் தலைமையில் 40 முதல் 65 வயதுக்குள்பட்ட 260 பேரிடம் அபர்தீன் பல்கலைக்கழகம் 3 மாதங்களுக்கு இந்த ஆய்வை நடத்தியது.
 ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைவருக்கும் வழக்கமான உணவு கொடுக்கப்பட்டது. அதில் 3-ல் 1 மடங்குமட்டும் ரொட்டிமட்டுமோ அல்லது கோதுமை கஞ்சி மற்றும் கோதுமை- ஓட்ஸ் கஞ்சி கொடுக்கப்பட்டது.

இதில்  வழக்கமான உணவுடன் கஞ்சிகுடித்தவர்களுக்குமட்டும் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்திருந்தது. இதய நோய் 25 சதமும், பக்கவாதம் வருவது 25 சதமும் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது என டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அன்றாட உணவில்  சிறிதளவு கோதுமை கஞ்சி அல்லது ஓட்ஸ் கஞ்சி குடித்தால் அது பெரிய அளவில் இதயத்திற்கு நன்மை செய்கிறது. மாரடைப்போ அல்லது பக்கவாதமோ வரும் அபாயத்தை இது தடுக்கிறது என அமெரிக்க கிளினிகல் நியூட்ரீசன் என்ற சஞ்சிகையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தகச் செய்தி மலர் :

செய்திகள்சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்வு

மும்பை, டிச.10- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்ந்து 19,508 புள்ளிகளில் முடிவடைந்தது.

ஐசிஐசிஐ வங்கி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஜிண்டால் ஸ்டீல், விப்ரோ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.
ஹெச்டிஎப்ஸி வங்கி, பார்தி ஏர்டெல், டிஎல்எப், சிப்லா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 5,857 புள்ளிகளில் முடிவடைந்தது

விளையாட்டுச் செய்தி மலர் :

* 5-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி

சென்னை, டிச.10: இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் கடைசி ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. குப்டில், பி.மெக்கல்லம் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினனர். முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காத நிலையில், குப்டில் ஆட்டமிழந்தார். பிரவீண் குமார் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலிடம் பிடிகொடுத்து அவர் வெளியேறினார்.
சிறிது நேரத்தில் மெக்கல்லமும் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் நெஹ்ரா வீழ்த்தினார். ராஸ் டெய்லரும் 9 ரன்களில் வெளியேறிதால் நியூஸிலாந்து அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பிறகு ஹௌ, ஸ்டைரிஸ் ஆகியோர் சற்று நிதானமாக ஆடினர். எனினும் ஹௌ 23 ரன்களுக்கும் ஸ்டைரிஸ் 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்ததும் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. அடுத்து வந்த யாரும் நிலைத்து நிற்கவில்லை. 27 ஓவரில் நியூசிலாந்து அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பிராங்க்ளின் 17 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியத் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், நெஹ்ரா, யுவராஜ், யூசுப் பதான் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் பிரவீண் குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடத்தொடங்கிய இந்திய அணி 10 ரன் எடுப்பதற்குள்ளாகவே கம்பீர், விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. எனினும் யுவராஜ் படேல் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி வெற்றி இலக்கான 104 ரன்களை எட்ட உதவினர். 21.1 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை எடுத்தது. யுவராஜ் சிங் 42 ரன்களும் பார்த்திவ் படேல் 56 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்


ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு கனகதுர்க்கை அம்மன் திருக்கோவில்

மூலவர் : கனகதுர்கேஸ்வரி

 
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்

  புராண பெயர் :  பெஜ்ஜவாடா, பிஜபுரி

  ஊர் :  கனகபுரி, இந்திரகிலபர்வதம்

  மாவட்டம் :  விஜயவாடா

  மாநிலம் :  ஆந்தர பிரதேசம்

தல சிறப்பு :

இது ஒரு சக்தி பீடம். இறைவனின் பெயர் மல்லேஸ்வரர்.

இந்த கோயிலை பத்தாம் நூற்றாண்டில் திரிபுவன மன்னன் என்ற சாளுக்கிய மன்னன் கட்டினான். புராணங்களில் தர்மர் இந்த கோயிலை கட்டியதாக கூறப்பட்டுள்ளது.

அகத்திய முனிவர் இங்கு சிவலிங்கத்தை மல்லேஸ்வரர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுவதுண்டு.

இந்த கோயிலில் மூலவர்கள் ஆலயத்தின் உள்ளும் உற்சவமூர்த்திகள் கண்ணாடி மாளிகையிலும் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயவாடாவில் உள்ள இந்திரகில பர்வதத்தில் அருள்பாலிக்கும் இந்த அன்னையின் பெயர் கனகதுர்க்கேஸ்வரி. இறைவன் மல்லேஸ்வரர். இது ஒரு சக்தி பீடமாகும்.

சும்பன், நிசும்பன், சரபாசுரன், மகிஷாசுரன் மற்றும் துர்க்காசுரனை துர்க்கை, உக்கிரசண்டி மற்றும் பத்திரகாளி ஆகிய அவதாரங்கள் எடுத்து அழித்த ஜெகன்மாதாவின் இருப்பிடமே இந்த தலமாகும்.

விஜயவாடாவுக்கு விஜயபுரி என்ற பெயர்தான் இருந்தது. பல வெற்றிவீரர்கள் வாழ்ந்த பூமி என்பதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டது.

 தல வரலாறு :

விஜயவாடா ஒரு காலத்தில் கற்களும் மலைகளும் நிறைந்த பகுதியாக இருந்தது. இவை கிருஷ்ணா நதியின் போக்கை தடுத்துக் கொண்டிருந்தன. மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். கண்ட கண்ட இடங்களில் வெள்ளம் புகுந்தது. அவர்கள் இந்த பகுதியில் வசிக்கும் மல்லேஸ்வர சுவாமியிடமும் கனகேஸ்வரியிடமும் முறையிட்டனர். இறைவன் அந்த மலையை கிருஷ்ணா நதிக்கு வழிவிடும்படி உத்தரவிட்டார். அதன்படி நதி சீராக ஓட ஆரம்பித்தது.

""பெஜ்ஜம்'' என்ற தெலுங்கு வார்த்தையின் பொருள் குகை. இறைவன் மலையைக் குடைந்து நதிக்கு வழிவிட்டதால் இந்த பகுதி "பெஜ்ஜவாடா' என அழைக்கப்பட்டது. பின்பு விஜயவாடா ஆனது. இந்த நதியில் மருத்துவ குணமுடைய மூலிகை செடிகள் வளர்ந்ததால் பிஜபுரி எனப்பட்டது.

இறைவனை அர்ச்சுனன் வென்றதால் பால்குண ÷க்ஷத்ரம் என்றும், மகிஷாசுரனை வதம் செய்தபின் துர்க்கையின் அருளால் தங்க மழை பொழிந்ததால் கனகபுரி என்றும், இங்குள்ள அன்னை கனகேஸ்வரி என்றும் அழைக்கப்பட்டனர்.

தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால் பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால் சக்தி கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள். அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது கிருஷ்ணன் சிவனின் கோபத்தை தணிக்க சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றே விஜயவாடா ஆகும். இங்கே கனகதுர்க்காதேவி மகிஷாசுர மர்த்தினியாக காட்சியளிக்கிறாள்.

அன்னையின் எட்டு கைகளில் எட்டு ஆயுதங்கள் உள்ளன. நவராத்திரி இங்கு கோலாகலமாக கொண்டாடப்படும். பாலதிரிபுர சுந்தரி, காயத்ரி, அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி, லலிதா திரிபுரசுந்தரி, துர்க்கா தேவி, மகிஷாசுர மர்த்தினி, ராஜராஜேஸ்வரி ஆகிய அலங்காரங்களில் அன்னை காட்சி தருவாள்.

விஜயதசமி அன்று அன்னையை அன்னப்படகில் கிருஷ்ணா நதியில் பவனி வரச்செய்வார்கள். இந்த விழாவிற்கு "நௌக விஹாரம்' என்று பெயர். அன்னை கனகதுர்க்காவை வணங்கினால் அவளது ஆசியால் பொன்மழையே பொழியும் என்பது நம்பிக்கை.


ஆன்மீகச் சிந்தனை மலர் :

நியாயத்தை துணிந்து செய் - பாரதியார்.

* உண்மையான பக்தி இருந்தால் தான் மனோதைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான பக்தி ஏற்படும்
.
* ஆயுள், ஆரோக்கியம், அறிவு, செல்வம் ஆகிய நான்கையும் தெய்வத்திடம் வேண்டி பெற வேண்டும்
.
* அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் தெய்வஒளியைக் காணலாம். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையான மோட்சம் கிடைக்கும்.

* வாழ்க்கையில் ஒருவன் வெற்றி பெற, அவன் சம்பாதிக்கும் குணங்களில் மேலான குணம் பொறுமை
.
* தன்னை மற, தெய்வத்தை நம்பு, உண்மை பேசு,  நியாயமான செயல்களைத் துணிந்து செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.

வினாடி வினா :

வினா - பாரத ரத்னா விருது பெற்ற முதல் வெளிநாட்டவர் யார் ?

விடை - கான் அப்துல் கபார்கான் [ பாகிஸ்தான் - 1987 ]

இதையும் படிங்க :

112 வயதிலும் ஓய்வறியாமல் உழைக்கும் "இளைஞர்




சிதம்பரம் : யார் தயவுமின்றி, ஓய்வறியாமல் 112 வயது "இளைஞர்' ஒருவர் உழைத்து வருவது சிதம்பரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மணலூர் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (112). இவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு, மனைவியுடன் வசித்து வந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்து விட்டார். ஆனால், தனது மகள்கள் வீட்டில் தங்காமல் தள்ளாத வயதிலும், யார் தயவும் இன்றி தனியாக வசித்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் ஆடுகள் மேய்த்தும், தனக்கு தெரிந்த கயிறு திரிக்கும் தொழிலைக் கொண்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் காலத்தை ஓட்டி வருகிறார். ஆடு மேய்த்த நேரம் போக, கிழிந்த நைலான் சாக்குகளைக் கொண்டு கயிறு செய்து விற்பனை செய்து அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.
என்னால் முடியாதது ஒன்றும் இல்லை என வெறு மனே வாயால் கயிறு திரித்து உழைக்க விரும்பாமல், அடுத்தவர்களை நம்பியே காலத்தை ஓட்டும் இந்தக்கால இளைஞர்கள் மத்தியில், தள்ளாத வயதிலும், யாருடைய தயவையும் எதிர்பாராமல் உழைத்து சாப்பிடும் முதியவரை, இல்லை, இல்லை இந்த 112 வயது"இளைஞரை' நினைத்தால் பெருமைப்படாமல் இருக்க முடியாது.


நன்றி - தின மணி, தின மல்ர்.

1 comment:

அப்பாதுரை said...

விஜயவாடா புராணக்கதை சுவையானது. நன்றி.
112 வயதுக்காரர் விவரம் திகைக்க வைத்த சுவாரசியம்.

Post a Comment