Friday, December 10, 2010

இன்றைய செய்திகள்.- டிசம்பர் - 10 - 2010







உலகச் செய்தி மலர் :

* இலங்கை ராணுவத்தின் போர் குற்றம்: புதிய விடியோ ஆதாரங்கள் கிடைத்தன

கொழும்பு, டிச.9: இலங்கை ராணுவத்தினரின் போர் குற்றங்கள் தொடர்பான மேலும் சில விடியோ ஆதாரங்களை பிரிட்டனின் சேனல் 4 வெளியிட்டுள்ளது.

இதில் ஆடைகள் ஏதும் இன்றி கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் ஏராளமான தமிழர்கள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் கொடூரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் இலங்கை மீது ஐ.நா. போர் குற்றம் தொடர்பான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில், சரணடைந்த விடுதலைப்புலிகள், தமிழர்கள் பலர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். இது தொடர்பான விடியோ ஆதாரங்கள் சிலவும் வெளியிடப்பட்டன.

அதில், விடுதலைப் புலிகளின் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய இசைப்பிரியா என்ற இளம்பெண் கொடூரமாக மானபங்கப்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்படும் காட்சியும் வெளியானது.

இப்போது கிடைத்துள்ள விடியோவில் ஏராளமான தமிழர்கள் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் உடலில் ஆடைகள் ஏதும் இல்லை. அவர்கள் அனைவரும் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதும் தெரிகிறது.

இது குறித்து நியூயார்க்கில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவத்தின் 53-வது படைப்பிரிவு இத்தகையை கொடூரங்களை அரங்கேற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இலங்கை அரசு மறுத்துள்ளது. இவை அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்ட விடியோக்கள் என்று கூறியுள்ளது


* அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய தூதர் மீரா சங்கருக்கு அவமரியாதை






வாஷிங்டன், டிச.9: அமெரிக்கா விமான நிலையத்தில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் மீரா சங்கரை அவமதிக்கும் வகையில் அந்நாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

தான் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் என்று கூறிய பின்னும் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 4-ம் தேதி நடத்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது:

அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில உள்ள மிசிசிபி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக மீரா சங்கர் சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் பால்டிமோர் செல்வதற்காக மிசிசிபியில் உள்ள ஜாக்சன்-எவர்ஸ் விமான நிலையத்துக்கு அவர் வந்தார். அப்போது அவர் சேலை அணிந்து சென்றிருந்தார்.

அங்கு விமானத்துக்காக காத்திருந்தபோது, அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அப்போது அவர் இந்திய தூதர் என்று கூறியதையும் விமான நிலைய அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. கண்டிப்பாக சோதனையிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனையடுத்து மீரா சங்கரை விஐபிக்கள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு  சந்தேகத்துக்கு இடமான பொருள் எதையும் வைத்துள்ளாரா என்று பெண் அதிகாரிகள், கைகளால் தடவி சோதனையிட்டனர். இதன் பின்னரே அவரை விமானத்தில் செல்ல அனுமதித்துள்ளனர்.

இந்தியா கண்டனம்: மீரா சங்கருக்கு நிகழ்ந்த அவமதிப்புக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியது: மீரா சங்கரை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

இது தொடர்பாக அமெரிக்க அரசிடம் புகார் தெரிவிக்கப்படும். கடந்த 3 மாதத்தில் இரண்டாவது முறையாக இந்திய அதிகாரிகளை அவமதிக்கும் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது என்றார் அவர்.

இந்திய அதிகாரிகள் மட்டுமின்றி இந்திய அரசியல் தலைவர்களும் அமெரிக்க அதிகாரிகளால் இதுபோன்ற அவமரியாதையைச் சந்தித்துள்ளனர்.

* காசா மீது இஸ்ரேல் விமான தாக்குதல்

ஜெருசலேம், டிச. 9: காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் விமானப் படை புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.

இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறிகையில், "மத்திய காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் கிடங்கையும் வடக்கு காசாவில் நெகவ் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது' என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலின் எஷ்கோ பகுதி மீது ஹமாஸ் இயக்கம் பீரங்கி தாக்குதல் நடத்தியது ஹமாஸ். இதில் உள்ளூர்வாசி ஒருவர் காயம் அடைந்தார்.  முன்னதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் தலைவர் கபி அஷ்கனேஸி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் "காசாவுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. அண்மையில் எல்லையில் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இது தொடரும். கடந்த காலங்களில் பாதுகாப்பு படை எல்லையில் தீவிரமாக செயல்பட்டதைப் போல இப்போதும் செயல்பட தயாரக இருக்க வேண்டும்' என்றார்.

அவர் இவ்வாறு பேசிய சில மணிநேரங்களில் விமான தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது

* வங்கதேசத்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 14 பேர் சாவு

வங்​க​தே​சத்​தில் இரு ரயில்​கள் நேருக்கு நேர் மோதி புதன்​கி​ழமை விபத்​துக்​குள்​ளா​யின.​ விபத்​தில் சிக்கி நொறுங்​கிக்​கி​டக்​கும் ரயில் பெட்​டி​க​ளுக
டாக்கா, டிச. 9: வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.
 டாக்காவில் இருந்து சிட்டகாங்குக்கு புதன்கிழமை சென்ற ரயில் நரசிங்கடி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நின்றது. சமிக்ஞை கிடைத்ததும் அது சிட்டகாங்கை நோக்கி புறப்பட்டது.

 அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது அதே தடத்தில் டாக்கா நோக்கி எதிரில் ஒரு ரயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இரு ரயில்களின் ஓட்டுநர்களும் ரயிலை நிறுத்த முயன்றனர்.

 ஆனால் இந்த முயற்சி பலனளிக்காமல் இரு
ரயில்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 37 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சையது அப்துல் ஹுசைன் புதன்கிழமை தெரிவித்தார்.

தேசியச் செய்தி மலர் :

* 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2001 முதல் விசாரணை: அரசு அறிவிப்பு

புதுதில்லி, டிச.9: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவராஜ் வி. பாட்டீலை ஒருநபர் குழுவாக மத்திய அரசு நியமித்துள்ளது.

2001-09 காலகட்டத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் அனுமதி வழங்கப்பட்டதில் தொலைத்தொடர்புத் துறையால் பின்பற்றப்பட்ட விதிமுறைகளை இந்த குழு ஆய்வுசெய்யும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொலைத்தொடர்புத் துறையின் எந்தவொரு அதிகாரியையும் விசாரணைக்கு அழைக்க இந்த குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வாய்மொழி ஆதாரங்கள் அடிப்படையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை இருக்கும். ஆனால் முன்னாள் அமைச்சரை விசாரணைக்கு அழைக்க முடியாது.  
தொலைத்தொடர்புத் துறை மற்றும் அரசின் உத்தரவு, கொள்கைகள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றையும், அவைகள் ஒரேமாதிரியாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா இல்லையா என்பதையும் இந்தக் குழு ஆய்வு செய்யும் என கபில் சிபல் தெரிவித்தார்.

* சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது: உயர்நீதிமன்றம்

சென்னை, டிச.9: நாம் தமிழர் கட்சித் தலைவரும், இயக்குநருமான சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் சீமான் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து சீமான் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஒருவரைக் கைது செய்ய மாநகர ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும் சீமானின் வழக்கறிஞர் வாதிட்டார்
.
இதையடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த மாநகர ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தது செல்லாது என உத்தரவிட்டனர்


மாநிலச் செய்தி மலர் :

* உலக மனித உரிமை நாள்: கருணாநிதி வாழ்த்து.

சென்னை, டிச. 9: "மண்ணில் மனிதம் காப்போம்-மனிதநேயம் வளர்ப்போம்' என்று உலக மனித உரிமை நாளில் முதல்வர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
"உலக மனித உரிமை நாள், டிசம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாக சாதி, மத, இன பேதங்கள் கூறி நசுக்கப்பட்டுவரும் நலிந்த பிரிவினர், மலைவாழ் பழங்குடியினர், குழந்தைத் தொழிலாளர்களாக-கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுவோர், மகளிர், மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைவருக்கும் ஆதரவுக்கரம் கொடுத்து அவர்களுக்குத் துணைபுரியும் அமைப்பாக மனித உரிமை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அளிக்கும் வாழும் உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, சுதந்திரம் போன்றவைகளை நிலைநாட்ட அது தொடங்கப்பட்ட 1997-ம் ஆண்டு முதல் இதுவரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 199 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதில், 97 ஆயிரத்து 615 விண்ணப்பங்கள் மீது உத்தரவு பிறப்பித்து நலிந்தவர்களின் நலன்காக்கும் பணிகளை ஆற்றி வருகிறது. மனிதக் கழிவை மனிதனே தலையில் சுமந்த கொடுமையை ஒழித்து, அப்பணியில் ஈடுபட்டு இருந்த அருந்ததியர் சமுதாயம் மற்ற சமுதாயங்களைப்போல முன்னேற வேண்டும் என்பதற்காக 2008-ல் 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி அவர்கள் உயர வழிவகுத்து தமிழகத்தில் மனித உரிமைகள் சிறந்திட தொடர்ந்து பாடுபட்டு வருகிறது தமிழக அரசு.
இத்தகைய சூழலில், மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்ற உணர்வோடு ஒவ்வொருவரும் செயல்படுவோம்' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


*  தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை, டிச.9: சென்னையில் குடிசைவாழ் மக்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குடிசை வாழ் மக்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக சமூக நல அமைப்பு ஒன்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

புகார் விவரம்:
மெட்ரோ ரயில், துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை, கடற்கரை மேம்பால சாலை, சாலை விரிவாக்கம், கூவம் நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் போன்ற திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான குடிசை வாழ் மக்கள் சென்னை மாநகரத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள், பழங்குடியின மக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவர். மாநகரை விட்டு சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் இவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் குடிசைவாழ் மக்களை வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

பொதுத் திட்டங்களுக்காக இவ்வாறு மக்களை வெளியேற்ற வேண்டியிருந்தாலும், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் 3 கி.மீ. தொலைவுக்குள் அவர்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பதிலளிக்கும் வகையில், 4 வாரங்களுக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

* ஈரோடு அருகே சாலை வசதி வேண்டி 3000 வீடுகளில் கறுப்புக் கொடி

ஈரோடு: ஈரோடு அருகே சாலை வசதி வேண்டி 3000 வீடுகளில் கறுப்புக் கொடி ஏந்தி பொது மக்கள் நூதன போராட்டம் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு அருகே உள்ள வாய்க்கால் மேடு, இந்தியன் நகர், பெரிய செட்டி பாளையம், கரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

வாய்க்கால் பகுதி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ சாலை வசதி இல்லை. இந்தப் பகுதியில் உள்ள செம்மண் சாலையும் குண்டும் குழியுமாக உள்ளதால் இப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர் என பலரும் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர்.

இது குறித்து ஊராட்சி தலைவர், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை.

இதனால், அவர்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கறுப்பு கொடியேற்றியுள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகச் செய்தி மலர் :

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: 454 புள்ளிகள் சரிவு

மும்பை, டிச.9: மும்பை பங்குச்சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி காணப்பட்டது. 75 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய இன்றைய வர்த்தகம் பின்னர் சரிவுநிலைக்குச் சென்றது. வர்த்தக இறுதியில் குறியீட்டெண் சென்செக்ஸ் 454 புள்ளிகள் சரிவுடன் 19,242 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தையிலும் இதே நிலைமை காணப்பட்டது. அங்கு குறியீட்டெண் நிஃப்டி 137 புள்ளிகள் சரிவுடன் 5766.50 புள்ளிகளில் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் ஐஆர்பி இன்ஃப்ரா, கன்டெய்னர் கார்ப்பரேஷன், விப்ரோ, ஜிடிஎல் இன்ஃப்ரா, இன்ஃபோசிஸ், ஐடிசி, எஸ்ஜேவின், எம்பஸிஸ், ஓரியன்டல் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ரிலையன்ஸ் கம்யூ, ஹிந்தால்கோ இன்டஸ்ட்ரீஸ், சிப்லா, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, ஜெய்ப்ரகாஷ் அசோ, மஹிந்த்திரா அண்ட் மஹிந்திரா, ஆர்ஐஎல், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி, டிஎல்எஃப், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸுகி ஜிந்தால் ஸ்டீல், டிசிஎஸ், பிஎச்ஈஎல், ஹீரோ ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக சரிவைச் சந்தித்தன.

* தங்கம்: பவுனுக்கு 16 உயர்வு





சென்னை, டிச. 9: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை, பவுனுக்கு 16 அதிகரித்து 15,312-க்கு விற்பனையானது. ஒரு கிராம் விலை 1,914.
 புதன்கிழமை விலை:
 ஒரு பவுன் 15,296
 ஒரு கிராம் 1,912.


விளையாட்டுச் செய்தி மலர் :

* லண்டன் கிளாசிக் செஸ்: முதல் சுற்றில் ஆனந்த் டிரா





லண்டன், டிச.9: இங்கிலாந்தில் வியாழக்கிழமை தொடங்கிய லண்டன் கிளாசிக் செஸ் போட்டியில், முதல் சுற்றில் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் டிரா கண்டார்.

ஆனந்த் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினாலும், அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவை வீழ்த்த முடியவில்லை.
மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் லூக் மெக்ஷேன், நார்வே நாட்டைச் சேர்ந்த உலகின் 2-ம் நிலை வீரரான மாக்னஸ் கார்ல்செனுக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தார்.

ரஷிய வீரர் விளாதிமிர் கிராம்னிக் இங்கிலாந்தின் நைஜெல் ஷார்ட்டையும்; இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் சக நாட்டு வீரர் டேவிட் ஹோவெலையும் வென்றனர்.
மொத்தம் 8 சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டம் ரவுண்டு ராபின் முறையில் விளையாடப்படுகிறது.

* ஹாங்காங் ஓபன்: காலிறுதியில் சாய்னா நெவால்

புது தில்லி, டிச.9: ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நெவால் முன்னேறியுள்ளார்

வான்சாய் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில், தாய்லாந்து வீராங்கனை சலக்ஜித் பொன்சனாவை சாய்னா எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில், சாய்னா 21-10, 21-12 என்ற நேர் செட்களில் பொன்சனாவை வென்றார். 26 நிமிடங்களிலிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் சாய்னா.
 ஏற்கெனவே, 2008 ஹாங்காங் ஓபன்; தாமஸ், உமர் கோப்பை பாட்மிண்டன் போட்டிகளில் பொன்சனாவை சாய்னா வென்றது குறிப்பிடத்தக்கது.


* இறுதி ஆட்டத்தையும் வெல்லும் முனைப்பில் இந்தியா 

சென்னை, டிச.9: இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் கடைசி ஆட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதுவரை நடந்த 4 ஆட்டங்களிலும் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, 5-0 என்ற கணக்கில் தொடர் முழுவதையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேசமயம்,  ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற நிலைக்கு நியூஸிலாந்து அணி தள்ளப்பட்டுள்ளது.

பெங்களூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 315 ரன்கள் குவித்தது. கடந்த ஆட்டங்களைப் போல் அல்லாமல் பெங்களூரில் நியூஸிலாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராங்கிளின் 98* ரன்கள் குவித்தார்.


ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : சுவேதாரண்ய சுவாமி

  உற்சவர் : பிரமவித்யாநாயகி
  -
  தல விருட்சம் :  வடவால், கொன்றை, வில்வம்

  தீர்த்தம் :  முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
 
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
 
  புராண பெயர் :  ஆதிசிதம்பரம், திருவெண்காடு

  ஊர் :  திருவெண்காடு
  மாவட்டம் :  நாகப்பட்டினம்

  மாநிலம் :  தமிழ்நாடு


பாடியவர்கள் :

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்

வாரப்பதிகம் கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம்.

தல சிறப்பு :

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு.
 
ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது.

உள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது.

கரையில் சூரியதீர்த்தலிங்க சந்நிதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது.

இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


 தலபெருமை:

காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.

இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.

51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.

இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.

சுவேதாரண்யர் (திருவெண்காடர்) :திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

நடராஜர் :  இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது.

தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.

அகோர மூர்த்தி : ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.

சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார்.

மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.

அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.

பிரம்ம வித்யாம்பாள் : இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள்.

நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

காளிதேவி : சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது.

உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.

துர்க்கை தேவி : துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.

புதன் பகவான் : வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார்.

இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.

பிள்ளையிடுக்கி அம்மன்:திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார்.

இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது

புதனுக்கு தனி சன்னதி: நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது

ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது.

சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று.

வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது.

பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது.பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.

தல வரலாறு:

பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான்.சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான்.ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும்காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.

திருவிழா:

மாசி மாதம் - இந்திரப் பெருவிழா - 13 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இந்திரனால் நடத்தப்படும் விழா என்ற ஐதீகம் பெற்ற சிறப்புடையது இந்த திருவிழா. காவிரிப்பூம்பட்டினத்தில்இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் இத்திருவிழா மிகவும் சிறப்புற நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்


ஆன்மீகச் சிந்தனை மலர் :


பட்டினத்தார்.

* ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

* ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.

* தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்.


வினாடி வினா :

வினா - உலகிலேயே மிகப்பெரிய பொருட்காட்சி சாலை எது ?

விடை - இயற்கை வரலாற்று அமெரிக்கன் பொருட்காட்சி சாலை - அமெரிக்கா.


இதையும் படிங்க:



*முதியவரை மூட்டையில் கட்டி ரோட்டில் வீசியகொடூரம் : மறந்தது மனித நேயம்

ஈரோடு: உயிருக்கு போராடிய 80 வயது முதியவரை மூட்டையில் கட்டி ரோட்டில் வீசிச் சென்ற கொடூரம் ஈரோட்டில் நடந்தது.ஈரோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கின் பின்புறம் பாவாடை வீதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று காலை 11 மணியளவில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை, சாக்குப் பையில் கட்டி எடுத்து வந்த சிலர், அவரை ரோட்டோரம் போட்டுச் சென்றனர்.அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சாக்கு பைக்குள் முதியவர் உயிருக்கு போராடிய கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியை சேர்ந்த "கனிமொழி' சுய உதவிக் குழுவினர் பூங்கொடி, ஜானகி ஆகியோர், அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த ஒரு போலீஸ்காரர், முதியவரை எடுத்து செல்ல ஆளுக்கு 50 ரூபாய் பணம் தாருங்கள் என்று கேட்டார். பொதுமக்களும் 300 ரூபாய் வசூல் செய்து போலீஸ்காரரிடம் கொடுத்தனர். இரண்டு மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. அதில் முதியவரை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் என்ன?

பா. ராஜவேல்

சென்னை, டிச. 9: "உலக மனித உரிமைகள் தினம்' ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் என்ன என்பது குறித்து மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.
இரண்டாம் உலகப்போரில் (1939-1945) உலகம் முழுவதும் 5.5 கோடி பேர் இறந்த போதுதான் மனித உயிர்கள் மதிப்பிட முடியாதது என்று உலக நாடுகள் உணர்ந்தன.

உலக மனித உரிமைகள் தினம்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்டின் மனைவி எலினார் ரூஸ்வெல்ட் 1945-ம் ஆண்டு மனித உரிமைகள் மீறல் பிரகடனத்தை வெளியிட்டார். அந்த பிரகடனம் 3 ஆண்டுகள் கழித்து 1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை ஆதரித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்ட நாளே ஒவ்வொரு ஆண்டும் உலக மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியாவில்... மனித உரிமைகள் என்பது அரசியலமைப்பு உறுதிப்படுத்தும் அல்லது இந்திய நீதிமன்றங்களின் மூலம் அமலாக்கக் கூடிய வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகிய உரிமைகளை குறிக்கும்.
இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் நாள் அமலுக்கு வந்தது. அப்போது தேசிய அளவில் மனித உரிமைகள் ஆணையம் என்றும் அந்தந்த மாநிலங்கள் அளவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது

அதன்படி 12.10.1993-ல் மத்திய அரசு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை செயல்படுத்தத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 17.04.1997 முதல் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் எங்கு உள்ளது?: சென்னையில் "திருவரங்கம்' எண் 143, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச் சாலை) சென்னை 600 028 என்ற சாலையில் இயங்கி வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக நீதியரசர் ஏ.எஸ். வெங்கடாசல மூர்த்தி செயல்பட்டு வருகிறார். ஆணையத்தின் உறுப்பினர்களாக ஏ.ஆர். செல்வக்குமார், கே. மாரியப்பன், எஸ். பரமசிவன் ஆகியோர் செயல்படுகின்றனர்.

யார் மீதான புகார் விசாரிக்கப்படும்? அரசுப் பணிகளின் போது அரசு அலுவலரால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள், மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறுதல் மேலும் அத்தகைய நிகழ்வுகளுக்கு உடந்தையாக இருத்தல் ஆகியவை பற்றிய புகார்கள் மட்டுமே ஆணையத்தால் விசாரணை செய்ய முடியும். தனி நபர்களால், தனி நபர் மீது மீறப்படும் மனித உரிமை மீறல் குறித்த புகார்கள் குறித்து ஆணையம் விசாரணைக்கு எடுக்காது.

மனித உரிமைகள் மீறல் குறித்த புகார்களை பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ எழுத்து மூலம் அளிக்க வேண்டும். புகார்கள் ஏதும் வராத நிலையில் மனித உரிமை மீறல் குறித்து வெளிவரும் பத்திரிகை செய்திகளை ஆணையமே புகாராக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்
.
புகார்களுக்கு கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் புகார்தாரர்களுக்கு அறிவிப்புகள், அழைப்பாணைகள், விசாரணை உத்தரவுகளுக்கும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.

மறுக்கப்படும் புகார்கள் எவை? ஆணையத்தின் சட்டம், நடைமுறை விதிப்படி, பிற ஆணையங்களின் முன் ஏற்கனவே விசாரணையில் உள்ள புகார்கள். தெளிவற்ற குறிப்புகளைக் கொண்ட புகார்கள், மனித உரிமை மீறல் நிகழ்வு நடைபெற்ற ஓராண்டுக்குப்பின் பெறப்படும் புகார்கள், பெயர், கையொப்பம், முகவரி இல்லாமல் அனுப்பப்படும் புகார்கள். உரிமையியல் மற்றும் சொத்து உரிமைகள், ஒப்பந்தங்கள், தொழிலாளர்கள்-பணியாளர்கள் அலுவல் தொடர்பான புகார்கள், நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் முன் பரிசீலனையில் உள்ள புகார்கள் ஆகியவை ஆணையத்தால் மறுக்கப்படும்
.
விசாரணையில் காவலர்கள்: ஆணையம் சார்பில் பெறப்படும் புகார்களை புலனாய்வு பிரிவில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு விசாரணை செய்து ஆணையம் அறிக்கை பெறுகிறது. இந்தப் புலனாய்வு பிரிவில் ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு போலீஸ் கண்காணிப்பாளர் (எஸ்.பி.), 2 டி.எஸ்.பி.க்கள், 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் விசாரணை அதிகாரிகளாக செயல்படுகின்றனர்.

தேவைப்படும் சில புகார்களை மட்டுமே போலீஸ் அதிகாரிகள் விசாரிப்பார்கள். இவ்வாறு விசாரிக்கப்படும் புகார்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையத்துக்கு தெரியவரும் போது, மேல் நடவடிக்கை தேவை இல்லை என ஆணையம் கருதினால் புகார் முடித்து
வைக்கப்படும்
.
விசாரணையின் முடிவில் புகார்கள் நிரூபணமானால், பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்கிட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மீது வழக்கு தொடர, நடவடிக்கை எடுக்க அரசுக்கு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்
.
இது வரை... தமிழகத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட 1997-ம் ஆண்டுக்கு பிறகு 2010 மார்ச் வரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 199 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 97 ஆயிரத்து 615 மனுக்கள் ஆணையத்தால் முடிக்கப்பெற்றுள்ளன



நன்றி - தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.

2 comments:

அப்பாதுரை said...

மூட்டையில் பெரியவர் - திடுக்கிட வைத்தது. தமிழ்நாட்டிலும் நடக்கத் தொடங்கிவிட்டதே!

மீரா அம்மையாரைச் சோதனை போட்டது சாதாரண விஷயம். பாதுகாப்புச் சோதனையில் என்ன பிழை? நாலு டாலர் சம்பளம் வாங்கும் சாதாரண பிரஜை பத்து நொடிகளில் செய்து முடித்து ஒருவருக்குமே தொல்லையில்லாமல் போயிருக்கக் கூடிய அல்ப விஷயத்தைப் பெரிது படுத்தி கௌரவச் சீர்குலைவு என்கிறோம். சோதனை போட்டால் கௌரவக் குறைவா? இதில் என்ன காழ்ப்போ புரியவில்லை.

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி திரு அப்பாதுரை, எல்.கே.

Post a Comment