Saturday, December 4, 2010

இன்றைய செய்திகள். - டிசம்பர் - 04 - 2010.





உலகச் செய்தி மலர் :

* இலங்கை மனித உரிமை மீறல்கள்: விசாரணைக்கு பிரிட்டன் வலியுறுத்தல்

கொழும்பு, டிச.3- இலங்கையில் போர்க்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்கெனவே நேரில் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபட்சவும் அவரது சகோதரர்களும் போர்க்குற்றவாளிகள் என்று "விக்கிலீக்ஸ்" இணையதளம் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு பிரிட்டன் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

*ராஜபட்ச உரை ரத்து; அரசுக்கு தொடர்பில்லை: பிரிட்டன் தூதரகம்

கொழும்பு, டிச.3- லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இலங்கை அதிபர் ராஜபட்ச உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதில் பிரிட்டன் அரசுக்கு தொடர்பில்லை என்று அந்நாட்டு தூதரகம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபட்ச நிகழ்ச்சியை பிரிட்டன் அரசு ஏற்பாடு செய்யவில்லை என்றும், அதை ஆக்ஸ்போர்டு யூனியனும் இலங்கைத் தூதரகமும்தான் கூட்டாக ஏற்பாடு செய்தன என்றும் கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

முன்னதாக ராஜபட்சவும் அவரது சகோதரர்களும் போர்க்குற்றவாளிகள் என்று "விக்கிலீக்ஸ்" இணையதளம் அம்பலப்படுத்திய நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ராஜபட்ச உரையாற்ற இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

* புதிய இணையதள முகவரிக்கு மாறியது விக்கிலீக்ஸ்

பாரீஸ், டிச.3- உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் அரசுக்கு அனுப்பிய தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய நிலையில், அதன் wikileaks.org என்ற இணையதள முகவரி முடக்கப்பட்டது.

இந்நிலையில், 6 மணி நேரத்திற்குப் பின்னர் wikileaks.ch என்னும் புதிய இணையதள முகவரியில் விக்கிலீக்ஸ் இயங்கத் தொடங்கியுள்ளது.

இத்தகவலை டிவிட்டர் இணையதளத்தில் அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது, விக்கிலீக்ஸ் இணையதளம் சுவிட்சர்லாந்தில் இருந்து செயல்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

*இணையதள சேவையை முடக்கியது அமெரிக்கா: புதிய பெயரில் மீண்டும் முளைத்தது "விக்கி லீக்ஸ்'

ஸ்டாக்ஹோம், டிச. 3: விக்கிலீக்ஸ் இணையதள சேவை அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டது. ஆனால், புதிய பெயரில் அந்த இணையதளம் மீண்டும் முளைத்தது.

  அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு எதிராக அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த நாட்டு அரசின் நெருக்குதல் காரணமாக வீக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு "டொமைன்' சேவை அளித்து வந்த எவரிடிஎன்எஸ் (உஸ்ங்ழ்ஹ்ஈசந) அமைப்பு தனது சேவையை திடீரென நிறுத்திக் கொண்டது.

  இதனால், ஜ்ண்ந்ண்ப்ங்ஹந்ள்.ர்ழ்ஞ்  என்ற விக்கிலீக்ஸின் இணையதளம் முடங்கியது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவன சேவையுடன் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் உலா வந்தது. ஜ்ண்ந்ண்ப்ங்ஹந்ள்.ஸ்ரீட், ஜ்ண்ந்ண்ப்ங்ஹந்ள்.க்க்19.க்ங், ஜ்ண்ந்ண்ப்ங்ஹந்ள்.ர்ழ்ஞ்.ன்ந் உள்ளிட்ட இணையதள முகவரிகளில் விக்கிலீக்ஸ் புதிதாக முளைத்தது.

  எந்தப் பிரச்னையிலும் நடுநிலை வகிக்கும் சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவன சேவையுடன் விக்கிலீக்ஸ் மீண்டும் புதிதாக முளைத்திருப்பது அமெரிக்காவுக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. நாடு நாடாக விக்கிலீக்ûஸ தடை செய்தாலும் புதிய புதிய பெயர்களில் விக்கிலீக்ஸ் முளைத்துக் கொண்டே இருக்கக்கூடும் என்று கணினி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தேசியச் செய்தி மலர் :

* ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி: அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- அமெரிக்க தூதர் திட்டவட்டம்

சென்னை, டிச. 3: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோதி ஜே. ரோமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
  அமெரிக்க அதிபரின் இந்தியப் பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அவர் பாகிஸ்தானுக்குச் செல்லாமல், இந்தியாவில் 4 நாள்கள் தங்கி சுற்றுப்பயணம் செய்தார்.

 முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் தங்களின் இந்திய வருகையின்போது பாகிஸ்தானுக்கும் சுற்றுப்பயணம் செய்தனர். ஆனால் அதிபர் ஒபாமாவோ, பாகிஸ்தானுக்குச் செல்லாமல், இந்திய பயணத்தை முடித்துவிட்டு, இந்தோனேஷியா புறப்பட்டு சென்றார்.

 ஒபாமாவின் பயணத்தின்போது பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

  தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் அமெரிக்காவுக்கு உற்ற தோழனாக இந்தியா விளங்குகிறது. இரு பெரும் ஜனநாயக நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராக கைகோத்துச் செயல்பட முடிவு செய்துள்ளது.  இரு நாடுகளும் உளவுத்தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் தீர்மானித்துள்ளன.

  ஐக்கிய நாடுகள் சபை மறு சீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் குறித்தும், அதில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து தர வேண்டும் என்பது பற்றியும் அதிபர் ஒபாமா பகிரங்கமாகத் தெரிவித்துவிட்டார். எனவே, விக்கிலீக்ஸ் இணையதள செய்தி குறித்து எதுவும் நம்ப வேண்டாம்.


*16-ம் நாளாக நாடாளுமன்றம் முடக்கம்: விவாதமின்றி துணை செலவு மசோதா நிறைவேற்றம்

புது தில்லி, டிச.3: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 16-வது நாளாக வெள்ளிக்கிழமையும் முடங்கிப் போனது. இருப்பினும் துணை செலவு மசோதா எவ்வித விவாதமும் இன்றி நிறைவேறியது. | 46,000 கோடி செலவு அனுமதி கோரிக்கை விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வெள்ளிக்கிழமையும் எதிர்க்கட்சிகள் தங்களது பிடிவாதத்திலிருந்து விலகவில்லை. இந்நிலையில் மாநிலங்களவையில் | 1,024 கோடிக்கு கூடுதல் செலவு செய்ய ரயில்வே துறைக்கு அனுமதி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கூச்சல் அதிகமாக இருந்ததால் பிற்பகல் 2.30 வரை அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்தால் மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி. பின்னர் பிற்பகலில் அவை கூடிய பிறகும் எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டம் அடங்காததால் திங்கள்கிழமை வரை அவையை ஒத்திவைத்தார் அப்போது அவைக்கு தலைமையேற்றிருந்த பி.ஜே. குரியன்.

இதேபோல மக்களவையிலும் எதிர்க்கட்சிகளின் பிடிவாதம் நீடித்த நிலையில் அவை நடவடிக்கைகள் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலச் செய்தி மலர் :

* விடுமுறைக் கால குடும்ப நீதிமன்றங்களை புறக்கணிக்க பெண் வழக்கறிஞர்கள் முடிவு

சென்னை, டிச. 3: சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் விடுமுறைக்கால குடும்ப நீதிமன்றங்களைப் புறக்கணிக்கப்போவதாக பெண் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

 இது தொடர்பாக பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் டி. பிரசன்னா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலுக்கு வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.

 அதில் கூறியிருப்பது:
 சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், விடுமுறைக் கால (சனி, ஞாயிறு) குடும்ப நீதிமன்றங்களை இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 வாரம் முழுவதும் குடும்ப நீதிமன்றங்கள் செயல்படுவதால் பெண் வழக்கறிஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பெண் வழக்கறிஞர்களால் தங்களது குடும்பங்களைக் கவனிக்க முடியவில்லை.

 எனவே, விடுமுறைக்கால குடும்ப நீதிமன்றங்கள் தொடர்பான பதிவாளர் ஜெனரலின் அறிவிப்பாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

**சட்ட மேலவை வாக்காளர் பட்டியல்: பெயர் சேர்க்க டிசம்பர் 7 கடைசி

சென்னை, டிச. 3:  தமிழ்நாடு சட்ட மேலவையின் பட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதிகளின் பட்டியல்களின் பெயர் சேர்க்கவும், நீக்கவும் செவ்வாய்கிழமை (டிச.7) கடைசி தேதியாகும்.

இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
வாக்காளர்கள் தங்கள் மனுக்களை அளிக்க வசதியாக அந்தந்த தொகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.5) அனைத்து நிர்ணயிக்கப்பட்ட இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இந்த முகாம்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். எனவே முகாம்களிலேயே படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுள்ள நபர்கள், முறையே படிவம் 18 மற்றும் 19 ஆகியவற்றில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

* தமிழன் என்ற உணர்வை ஊட்டிய சிலப்பதிகாரம்: சிலம்பொலி 
செல்லப்பன் பெருமிதம்





ஓமலூர், டிச. 3:   தமிழன் என்ற உணர்வை ஊட்டியதால்தான் சிலப்பதிகாரம் தேசிய காப்பியம் என்று அழைக்கப்படுகிறது என்று முனைவர் சிலம்பொலி செல்லப்பன் கூறினார்.

பெரியார் பல்கலைக்கழக கலைஞர் ஆய்வு மையம் சார்பில் நடந்த முப்பெரும் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி துணைவேந்தர் கே. முத்துச்செழியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முனைவர் சிலம்பொலி செல்லப்பன் பேசியது

  மரியாதைக்கு ஓர் இலக்கணமாக பெரியார் திகழ்ந்தார். சமூகத்தில் மூடநம்பிக்கையை விதைப்பவர்கள் மீதுதான் அவர் கோபம் கொண்டார்.

எதிர் கருத்து உடையவராக இருப்பினும் அவர்களுக்குரிய மரியாதையை அவர் கொடுத்தார். பெரியார் போன்ற தலைவர்கள் தோன்றாவிடில் கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையிலேயே நாம் இன்

னும் இருந்திருப்போம். மேடைப் பேச்சின்போது கூடியிருந்த கூட்டத்தினரை கேள்வி கேட்கச் சொல்லி அதற்கானப் பதிலை எவ்வித தயக்கமுமின்றி பெரியார் கூறி வந்தார்.

திமுக ஆட்சியில்தான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த தமிழ்நாடு என்ற வார்த்தை சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனை பாராட்டி அறிமுகப் பாடல் இயற்றும்போது இந்த சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

தமிழன் என்ற உணர்வை ஊட்டியதால்தான் சிலப்பதிகாரம் தேசிய காப்பியம் என்று அழைக்கப்படுகிறது என்றார் சிலம்பொலி செல்லப்பன்.

முன்னதாக நடந்த கலைஞர் விழாவுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. ராசேந்திரன் தலைமை வகித்துப் பேசினார்.

*காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

மதுராந்தகம், டிச. 3:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரிக்கு அதிகப்படியான நீர்வரத்தால் வியாழக்கிழமை இரவு ஷெட்டர்கள் திறக்கப்பட்டு 2400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் 20 கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி. இந்த ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஏரியின் மொத்த கொள்ளளவு 23.3 அடியை நிரம்பி உபரிநீர் வெளியேறி வந்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செய்யாறிலிருந்து அதிகப்படியான வரும் நீர் வரத்தாலும், உத்தரமேரூர் மடுவுலிருந்து வரும் நீர்வரத்தும் அதிகமானதால் ஏரியின் கொள்ளளவு 24.5 அடியை எட்டியது.

ஏரியில் அதிகப்படியான நீர் வந்து கொண்டே இருப்பதாலும், ஏரியை காக்கும் பொருட்டு நீரை வெளியேற்றுவதற்காக மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜியின் உத்தரவு பெற்று பொதுப்பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் ஜெகராஜ், வருவாய் கோட்டாட்சியர் எஸ்.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை ஏரியின் 2 ஷெட்டர்களும் திறக்கப்பட்டன.

ஏரியிலிருந்து கலங்கள் வழியாக வெளியேறும் உபரிநீர் மற்றும் ஷெட்டர்கள் மூலம் வெளியேறும் நீரின் 2400 கனஅடி நீர் தற்போது வெளியேறுகிறது. வெளியேற்றப்படும் நீரால் பாதிப்பு ஏற்படுவதால் 20 கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையும், கரையோர கிராமமக்கள் மேடானப் பகுதிக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* ஆந்திராவில் ஏரி உடைந்ததால் தமிழக கிராமத்தில் வெள்ளம்

திருவள்ளூர் : ஆந்திர மாநிலத்தில் கோசலம் ஏரி உடைந்ததால் ஆந்திர எல்லையில் உள்ள தமிழக கிராமத்தை தண்ணீர் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவிளாங்காடு அருகே உள்ளது பனப்பாக்கம் ஊராட்சி.இதற்க்குட்பட்ட பனப்பாக்கம் காலனியில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதனிடையே பலத்த மழை பெய்து வருவதால் ஆந்திராவில் உள்ள கோசலம் ஏரியில் தண்ணீர் நிரைந்ததில் ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இந்த நீர் கோசலம் வழியாக பனப்பாக்கம் ஏரியை வந்தடைந்தது. இந்த ஏரி நிரம்பி யதில் தண்ணீர் அங்கிருந்து வெளியேறி பனப்பாக்கம் காலனியை சூழ்ந்தது. இரவில் தண்ணீர் சூழ்ந்ததால் தெருக்கள் மற்றும் குடிசை வீடுகளை சூழ்ந்ததால் அங்கு வசித்த மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறி அருகில் உள்ள மாடி வீடுகளில் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். தகவல் அறிந்த தாசில்தார், துணை தாசில்தார், மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீட்டு பணியில் ஈடுபட்டனர்.

தொழில் நுட்பச் செய்தி மலர் :

* 10 ஆண்டுகளில் நிலவில் இருந்து பூமிக்கு ஹீலியம்: மாதவன் நாயர்

பெங்களூர், டிச.3: அடுத்த 10 ஆண்டுகளில் புவியின் மிக முக்கிய அணு எரிபொருளாக மாறப் போகும் ஹீலியம்-3 தாதுப்பொருளை நிலவில் இருந்து பூமிக்குக் கொண்டு வர வாய்ப்புள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.

பெங்களூரில் நடந்து வரும் சர்வதேச வானியல் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:

நிலவில் காணப்படும் தாதுப் பொருள்களை அகழ்ந்தெடுக்கும் ரோபோ தொழில்நுட்பம் அடுத்த 10 ஆண்டுகளில் சாத்தியமாகும். அப்போது பூமிக்குத் தேவைப்படும் எரி சக்தியைப் போதுமான அளவில் கொடுக்கவல்ல ஹீலியம்-3 ஐ நிலவில் இருந்து கொண்டு வர முடியும்.

நிலவில் அபரிதமாக இருக்கும் இந்தத் தாது பூமியில் கிடைப்பது அரிது. டைடானைட் தாதுப்பொருளில் இருந்து பெறப்படும் ஹீலியம் -3 நிலவில் அபரிமிதமாக இருப்பதை சந்திரயான்-1 ல் பொருத்தப்பட்டிருந்த நிலவு தாதுப் பொருள் வரைபடக்கருவி (மூன் மினராலஜி மேப்பர்), ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜர் ஆகியவை உறுதி செய்தன.

ஒரு டன் ஹீலியம்-3 தாது, நம் நாட்டின் ஓராண்டுக்கான எரிசக்தித் தேவையை நிறைவு செய்யப் போதுமானதாகும். நிலவின் பரப்பில் டைடானைட் இருப்பதை உறுதியாகக் கண்டுபிடித்து விட்டோம். ஆனால், எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை மதிப்பிடுவது கடினம்

2013-ம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ள சந்திரயான்- 2 விண்கலம் டைடானைட், ஹீலியம்-3 ஆகியவற்றின் இருப்பை மேலும் ஆழமாக ஆராயும்.
சந்திரயான்-2 விண்கலத்தில் லேண்டர், ரோவர் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

இவை நிலவின் மீது ஊர்ந்து சென்று, மேற்பரப்பில் காணப்படும் தாதுப்பொருள்களைச் சேகரித்து ஆய்வு செய்யும் என்று கூறினார்.


வர்த்தகச் செய்தி மலர் :

*சென்செக்ஸ் 25 புள்ளிகள் சரிவு

மும்பை, டிச.3- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 25 புள்ளிகள் சரிந்து 19,966 புள்ளிகளில் முடிவடைந்தது.

டிஎல்எப், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

ஹீரோ ஹோண்டா, சிப்லா, ஜின்டால் ஸ்டீல், மஹேந்திரா அன் மஹேந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 5,992 புள்ளிகளில் முடிவடைந்தது

* குழப்பமான வங்கி விதிகள் மாற்றப்படும்: டி.சுப்பாராவ்

மும்பை, டிச.3: வங்கி விதிகளில் குழப்பமான விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் தெரிவித்தார். வங்கியின் சிறப்பான செயல்பாட்டுக்காக அவை உதவினாலும், குழப்பமான விதிகள் மாற்றப்பட்டு எளிமைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
வங்கித்துறையின் ஸ்திரமான வளர்ச்சிக்கு மிக எளிதான குழப்பமில்லாத விதிகள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தான் உறுதியாக நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு நிதி சீர்திருத்தங்களைக் கொண்டு வர உள்ளது. இத்தகைய நிதி சீர்திருத்தங்கள் வங்கித்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். நிதித் துறையில் மேற்கொள்ள உள்ள சீர்திருத்தங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் இதற்கான குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

நிதித்துறையில் நிலவும் குழப்பமான சூழலைப் போக்குவதற்காகவே நிதி சீர்திருத்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு உரிய நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு உருவாக்கும் சட்ட விதிமுறைகள், மாற்றங்கள் உரிய வகையில் விவாதிக்கப்பட்டு பரிந்துரைக்கப்படும்

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட் : தொடரை கைப்பற்றுமா இந்தியா- இன்று நியூசிலாந்துடன் 3 வது மோதல்.

வதோதரா; இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் அசத்திய இந்திய அணி, இன்று "ஹாட்ரிக் ' வெற்றி பெற்று, தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க, நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, தொடரில் 2-0 என்ற முன்னிலையில் உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று நடக்கிறது.

இத்தொடரில் "சீனியர்கள்' சச்சின், தோனி, ஹர்பஜன், சேவக் ஆகியோர் இல்லாத நிலையிலும் இந்திய இளம் வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சதம் (105), அரைசதம் (64) அடித்துள்ள விராத் கோஹ்லி, கடந்த போட்டியில் சதம் (138*) அடித்த கேப்டன் காம்பிர், தொடர்ந்து மிரட்டுவது உறுதி.

மெக்கலம் களமிறங்க வாய்ப்பு

 நியூசிலாந்து அணியின் கேப்டன் வெட்டோரி கூறுகையில்,"" பிரண்டன் மெக்கலம் தேறி வருகிறார். பயிற்சியில் நன்கு செயல்பட்ட இவர், விக்கெட் கீப்பிங் பயிற்சியும் செய்தார். இன்று எப்படியும் பங்கேற்பார் என்ற நம்பிக்கை <உள்ளது. ஆனால் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வாரா என்பது பற்றி முடிவெடுக்கவில்லை. ஒருவேளை கீப்பிங் செய்தால், பேட்டிங்கில் பின்வரிசையில் களமிறங்குவார். ஒவ்வொரு போட்டியிலும் நன்கு விளையாடினாலும், இந்திய வீரர்கள் அதைவிட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். முதல் போட்டியில் பின் வரிசை வீரர்களை விரைவாக அவுட்டாக்கினாலும், "டாப் ஆர்டர்' அசத்தலாக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் இது தான் முக்கியம். தற்போது உலகில் சிறந்த பார்மில் உள்ள அணிகளில் இந்தியாவும் ஒன்று,'' என்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :


* அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில்

மூலவர் - தான்தோன்றீஸ்வரர்

அம்மன்/தாயார் : சவுந்தர்யநாயகி
  தல விருட்சம் :  வில்வம்
  தீர்த்தம் :  பைரவர் தெப்பம்
  ஆகமம்/பூஜை :  சிவாகமம்
  பழமை :  500 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  இலுப்பை வனம்
  ஊர் :  இலுப்பைக்குடி
  மாவட்டம் :  சிவகங்கை
  மாநிலம் :  தமிழ்நாடு


தல சிறப்பு :-

சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள "குட்டி விநாயகர்' சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது

தல பெருமை :-

இத்தலத்து பைரவர், "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்' என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.

வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது.
பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.

நாய்க்கடி பலகை: தான்தோன்றீஸ்வரர், சிறிய அளவிலேயே இருக்கிறார். அம்பாள் சவுந்தர்ய நாயகி சிலை திருவாசியுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கிறது.

பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட "நாய்க்கடி பலகை' இருக்கிறது. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது கொங்கணர் புறப்பாடாகிறார். இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால், "இலுப்பைக்குடி' என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

 தல வரலாறு :-

சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது.

பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, "சுயம்பிரகாசேஸ்வரர்' என்றும், "தான்தோன்றீஸ்வரர்' என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

அதிசயத்தின் அடிப்படையில்: சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள "குட்டி விநாயகர்' சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.

திருவிழா :-

சித்திரையில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.
திறக்கும் நேரம் :-

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* எங்கும் எதிலும் ஆனந்தம் - தாயுமானவர்.

இறைவனே! ஆனந்தத்தின் மொத்தவடிவம். ஆனந்தம் பெறவே உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உழைப்பதும், உண்பதும், ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு வாழ்வதும் எல்லாம் ஆனந்தத்தின் பொருட்டே. நம்மால் என்றுமே ஆனந்ததை விடுத்து வாழவே முடியாது.எங்கும் ஆனந்தமே. எதிலும் ஆனந்தமே! இதற்காகவே, இறைவனும்
சிற்சபையில் ஆனந்த நடமிடுபவனாக இருக்கிறான்.இறைவன் எல்லா திசைகளிலும் நிறைந்திருக்கிறான். நம் இதயத்தாமரையாகிய மனத்தில் தேனாக இருந்து தித்திக்கும் இனிமை உடையவன் இறைவன். அவனையே எப்போதும் சிந்திப்போமாக.பொருளின் மீது நாட்டம் கொண்டவனுக்கு அருட்செல்வம் என்றும்எட்டாக்கனியாகும். திருவோட்டையும், செல்வமாகிய நிதியையும் ஒன்று போல காணும் உத்தமர்களின் நெஞ்சத்தை தன் இருப்பிடமாக கொண்டிருப்பவன் இறைவன். குழந்தையின் மனதில் தான் என்னும் அகங்காரம் இல்லை. இவர் நல்லவர், கெட்டவர், வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதங்கள் தெரிவதில்லை. மனிதனும் குழந்தை போல வெள்ளை உள்ளம் கொண்டால் அவனே ஞானியாவான்.வாழ்வில் எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் மனம் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது கடவுளின் கழலடிகளையே வழிபட வேண்டும்

வினாடி வினா :-

வினா - இந்தியாவின் முதல் பெண் மத்திய மந்திரி யார் ?

விடை - ராஜ்குமாரி அமிர்த்கௌர்.


இதையும் படிங்க :

 சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிக்கு தேசிய விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்.

புது தில்லி, டிச. 3: பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாற்றுத் திறனாளிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் விருதுகளை வழங்கினார்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி அவர்களில் சாதனை புரிந்தவர்களைப் பாராட்டும் வகையிலும், மற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் தில்லியில் வெள்ளிக்கிழமை விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் 53 பேருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். விருதில் பதக்கம், சான்றிதழ், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கும்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதிபா பாட்டீல், தங்களின் உடல்குறைபாடுகளையும் மீறி, பல்வேறு துறைகளில் தங்கள் லட்சியத்தை எட்டிய சாதனையாளர்களுக்கு இங்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைக் காப்பதில் முன்னிலையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மாற்றுத்திறனாளிகள் பொதுஇடங்களுக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் அந்த இடங்களில் அவர்களுக்கு வசதிகளைச் செய்துதருவதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

விருது பெற்றவர்களில் ஒருவரான ஆசிஷ் கோயல் கூறுகையில், எனக்கு இதுபோன்ற ஒரு அங்கீகாரத்தை நாடு அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களைப் போன்ற மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்றார்.ஆசிஷ் கோயல் தனது 9-வது வயதில் விபத்தில் கண் பார்வையை இழந்தார். ஆனாலும் தனது விடாமுயற்சியால் கல்வியில் சாதனை படைத்தார். அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்த கோயல், இப்போது சர்வதேச வங்கி ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். சர்வதேச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பார்வையற்ற முதல் நபர் கோயல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, வானொலி நிலையத்தில் ஆப்பரேட்டராக பணியாற்றும் பர்வைத் திறன் இல்லாத நேஹா பவாஸ்கர் என்பவருக்கும் விருது வழங்கப்பட்டது. மலையேற்றம், நீச்சல் ஆகியவற்றிலும் இவர் திறமை பெற்றவர்.

சைகை மொழிக்கு சட்ட அங்கீகாரம்: தேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளின் சைகை மொழிக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மையத்தின் இயக்குநர் ஜாவித் அபிதி இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சைகை மொழிக்கும் மற்ற மொழிகளைப் போல அங்கீகாரம் வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதனை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார் என்று ஜாவித் கூறினார்.

பேசும், கேட்கும் திறன் இல்லாத பலர் சைகை மொழியையே பயன்படுத்தி வருகின்றனர்.

 

நன்றி - தின மலர். தின மணி.

4 comments:

எல் கே said...

பற்பல செய்திகளில் தொகுத்து தரும் உங்கள் பணி தொடரட்டும்

பவள சங்கரி said...

நன்றி எல்.கே.

Chitra said...

variety news! Thank you.

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றிங்க சித்ரா.

Post a Comment