Friday, November 26, 2010

இன்றைய செய்திகள்- நவம்பர் - 26 - 2010..









உலகச் செய்தி மலர் :

* “அக்னி-1 “ ஏவுகனை சோதனை வெற்றி

பாலசூர் (ஒரிசா), நவ.25: அணு குண்டுகளை ஏந்திச் சென்று தாக்கக்கூடிய அக்னி-1 ஏவுகணை
வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒரிசா மாநிலம் பாலசூரில் உள்ள வீலர் தீவிலிருந்து
அக்னி-1 ஏவுகணை, வியாழக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
அக்னி-1 ஏவுகணை தரையிலிருந்து 700 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
இந்த சோதனை எவ்வித இடையூறின்றி, வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்று ஒருங்கிணைந்த
சோதனைப் பிரிவு (ஐடிஆர்) இயக்குநர் எஸ்.பி. தாஸ் தெரிவித்தார்.
இந்த ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே, இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. திட
எரிபொருள் மூலம் இயங்கும் இந்த ஏவுகணை வியாழக்கிழமை காலை 10.10 மணி அளவில் ஏவி
சோதித்துப் பார்க்கப்பட்டது. சோதனையின்போது அனைத்து நிகழ்வுகளும் கன கச்சிதமாக இருந்ததாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரலாகிறார் தமிழ் வம்சாவளிப் பெண்

வாஷிங்டன், நவ. 25: அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண அட்டார்னி ஜெனரலாக (அரசு தலைமை
வழக்கறிஞர்) தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர்.
சியாமளா, அமெரிக்காவில் குடியேறி அங்கு வசிக்கும் ஆப்பிரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார்.
இந்த, தம்பதிகளின் கமலா ஹாரிஸ் இப்போது கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரலாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அந்த மாகாணத்தில் இப்பதவிக்கு வரும் முதல் பெண் என்ற பெருமையையும் முதல்
வெள்ளையர் அல்லாதவர் என்ற பெருமையையும் கமலா பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் இந்து,


* காந்திய கொள்கைகளை மீறி மியான்மருடன் இந்தியா உறவு: ஆங் சான் சூகி குற்றச்சாட்டு

யாங்கூன்: மியான்மரின் ராணுவ அரசுடன் உறவு வைத்திருப்பதால் காந்தியக் கொள்கைகளை இந்தியா மீறிவிட்டதாக மியான்மர் ஜனநாயகத் தலைவி சூகி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா மியான்மர் ராணுவ அரசுடன் உறவு கொண்டாடுகிறது. குறிப்பாக வர்த்தக உறவில் இரு நாடுகளும் அதிக நெருக்கமாக உள்ளன. இது எனக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது. இதன் மூலம் இந்தியா காந்தி, நேருவின் கொள்கைகளை மீறிவிட்டதாகவே எண்ணுகிறேன். இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மியான்மரில் ஜனநாயகம் மலர இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும். அதற்கு இதுவே நல்ல தருணம். இந்தியாவுடன் இணைந்து செயல்படக் காத்திருக்கிறேன் என்று அவர் கூறினார்.

சூகி ஹீமாச்சல பிரசே மாநிலத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸில் இரண்டு வருடம் கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மர் விவகாரத்தில் இந்தியா மெளனமாக இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார், அதுவும் இந்திய நாடாளுமன்றத்திலேயே அதுகுறித்து அவர் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.

**அதிகாரப்பகிர்வே இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் : எஸ்.எம். கிருஷ்ணா

*  இலங்கைத் தமிழர் மறுவாழ்வுப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா

தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க இந்தியா ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது.
இப்போது ஆயிரம் வீடுகளின் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இந்தப் பணிகளையும்
பார்வையிட இருக்கிறேன்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்
என்பதே இலங்கைக்கு இந்தியா விடுக்கும் கோரிக்கை

இலங்கையில் வளர்ச்சிப் பணிகளுக்காக அடுத்த 3 ஆண்டுகளில் இலங்கைக்கு இந்தியா ரூ. 7990
கோடி அளவுக்கு நிதி வழங்க இருக்கிறது. கடன் மற்றும் நிதியுதவி என்ற இரு வழிகளில் இந்த
தொகை வழங்கப்படும் என்று அவருடன் சென்ற இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசியச் செய்தி மலர் :

* மும்பை தாக்குதல் சம்பவ நினைவு தினத்தையொட்டி உஷார் நிலை: டில்லியிலும் பாதுகாப்பு

புதுடில்லி : மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்குமாறு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது . தவிர, பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து டில்லி, மும்பை ஆகிய நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் 2008ம் ஆண்டு இதே நாளில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இத்தாக்குதல் சம்பவத்தின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மும்பைத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக வெளிநாட்டு உளவு அமைப்புகள், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன. தவிர, காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், டில்லியில் ஊடுருவி முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் புலனாய்வுத் தகவல் கிடைத்தது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. கடற்கரையோர பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பையை ஒட்டிய கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



* பல்வேறு நிபந்தனைகள் விதித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்

புது தில்லி, நவ. 25: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி நடத்த நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய பிராணிகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்திருந்தது.
 இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி. ரவிச்சந்திரன், டத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இதில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
 அதன் படி ஜல்லிக்கட்டு நடத்த ரூ. 2 லட்சத்துக்கு குறையாமல் டெபாசிட் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவோர் பிராணிகள் நல வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற வேண்டும்.
 மேலும் தமிழக அரசு தேர்வு செய்யும் 129 இடங்களில் மட்டுமே போட்டி நடத்த வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
 இந்த தீர்ப்புக்கு ஜல்லிக்கட்டு பேரவை வரவேற்புத் தெரிவித்துள்ளது.

* பிரதமர் அலுவலக அதிகாரிகளை சந்தித்தார் எல் ஐ சி தலைவர்.

புது தில்லி, நவ. 25: எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் டி.எஸ். விஜயன், பிரதமர் அலுவலக அதிகாரிகள் வியாழக்கிழமை சந்தித்தார்.
 பல கோடி ரூபாய் முறைகேடு புகாரில் எல்ஐசி வீட்டு வசதிப் பிரிவுத் தலைவர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
 பிரதமர் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்த காரணத்தைத் தெரிவிக்க விஜயன் மறுத்து விட்டார்.


* ஆ.ராசாவை ஏன் இன்னும் விசாரிக்கவில்லை? சி.பி.ஐ.யிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி



புதுதில்லி,நவ.25: 2ஜி அலைக்கற்றை விற்பனையில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக அந்தத் துறையின் அமைச்சராகப் பதவி வகித்த ஆ.ராசாவிடம் இதுவரை விசாரணையே நடத்தாதது ஏன் என்று மத்தியப் புலனாய்வு அமைப்பை (சி.பி.ஐ.) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகக் கேட்டனர்.

வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. தனக்கென்று தனி விசாரணை பாணியை வைத்திருக்கிறது என்று
குறிப்பிட்டு விசாரணையில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று விளக்கினார் சிபிஐ சார்பில் ஆஜரான
வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால்.


மாநிலச் செய்தி மலர் :

* 2011 பிப்ரவரி 9-ல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

சென்னை, நவ. 25: தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி பிப்ரவரி 9-ல் தொடங்கி 28 வரை
நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட
விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்படவுள்ள கணக்கெடுப்பில்
குடும்பத்தில் உள்ள தனிநபர்களின் அனைத்து விவரங்களும் எடுக்கப்பட உள்ளன. ஆனால், அதில்
ஜாதி குறித்த தகவல் கேட்கப்பட மாட்டாது.
தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் ஜாதி வாரியான கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும்
என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரியில் நடத்தப்படும் மக்கள்தொகை
கணக்கெடுப்பின்போதே ஜாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து கேட்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


* இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

திருவள்ளூர், நவ 25: இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும் என திருவள்ளூரில்
நடைபெற்ற நீர்வள ஆதாரங்கள் குறித்த பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
÷திருவள்ளூரில் நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு மற்றும் சமூக செயல்பாடுகளின் இயக்கம் சார்பில்
நீர்வள ஆதாரங்கள் குறித்த பாதுகாப்பு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்
கருத்தரங்கிற்கு நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநிலக் குழு உறுப்பினர் மூர்த்தி தலைமை வகித்தார்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழக அரசு இயற்றியுள்ள குளங்கள், ஏரிகள் பாதுகாப்பு
சட்டத்தை உண்மையான பொருளில் அமல்படுத்த வேண்டும். வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ்
ஏரிகளை தூர்வாரும் பணி மற்றும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சென்னை
பெருநகர வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஏரிகளை மீட்டெடுக்கவும், புனரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை
அகற்றுவதோடு, கழிவுகளை ஏரிகளில் கொட்டுவதைத் தடுக்க வேண்டும்.
÷விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நச்சுப்பொருள்கள் பெரும் அபாயமாக மாறியுள்ளன. எனவே

வேதிப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்திற்கு மாறாக இயற்கை விவசாயத்தை
அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தொழில்நுட்பச் செய்தி மலர் :

* கலங்கரை விளக்கங்களின் உச்சியில் ரேடார்: கடலோர காவல்படை திட்டம்

புது தில்லி, நவ.25: கலங்கரை விளக்கங்களின் உச்சியில் ரேடார் கருவிகளை அமைக்க கடலோர காவல்படை திட்டமிட்டுள்ளது. ரூ.76 கோடி செலவில் 90 கலங்கரை விளக்கங்களின் உச்சியில் அமைக்கப்படவுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த எஸ்ஏஏபி நிறுவனம் இதை அமைக்கவுள்ளது. இவ்வாறு ரேடார்களை அமைப்பதன் மூலம் சுமார் 7,516 கிலோமீட்டர் நீள கடலோரப் பகுதிகளை எளிதில் கண்காணிக்க முடியும்.
 இத்திட்டத்தை கலங்கரை விளக்கங்களின் இயக்குநரகம் தயாரித்துள்ளது

.

* இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் நோக்கியா எக்ஸ் 5.

டெல்லி: இந்திய செல்போன் சந்தைக்கு புதிய வரவாக வரவுள்ளது நோக்கியாவின் எக்ஸ்5 ஸ்மார்ட் போன்.

இந்த அதி நவீன போனில், 5 எம்.பி கேமரா, எல்இடி பிளாஷ், ஒருங்கிணைந்த ஸ்பீக்கர்கள், மியூசிக் கீஸ், ஒரு வருடத்திற்கான ஓவி மியூசிக்கின் அன்லிமிட்டெட்இசை ஆகியவை இடம் பெறும்.

இந்த ஸ்மார்ட் போனில் 2.36 இன்ச் க்யூவிஜிஏ டிஸ்பிளே, ஸ்லைட் மாடலில் ஆன கீபேட் ஆகியவையும் இடம் பெறுகிறது.

நோக்கியா இ சீரிஸ் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் அதே ஆபரேட்டிங் சிஸ்டம்தான் இதிலும் பயன்படுத்தப்படும்.

200 எம்பி இன்டர்னல் மெமமரி மற்றும் 2 ஜிபி மைக்ரோஎஸ்டி மெமரி கார்டு ஆகியவையும் இந்த போனின் பிற சிறப்பம்சங்கள்.

இது போக ப்ளூடூத் 2.0, வைபி 802.11, யுஎஸ்பி 2.0 ஆகியவையும் உண்டு.

இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 10,499 மட்டுமே என்பதும் விசேஷமானது.

வர்த்தகச் செய்தி மலர் :


* சென்செக்ஸ் 142 புள்ளிகள் சரிவு.

மும்பை, நவ.25: மும்பை பங்குச்சந்தையில் இன்று சரிவு காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக சரிவில் இருந்த குறியீட்டெண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் முதல் 5 நிமிடங்களில் 122 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 30 புள்ளிகள் வரை உயர்ந்தது.

எனினும் பின்னர் இரு சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 141.69 புள்ளிகள் சரிந்து 19,318.16 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 66 புள்ளிகள் குறைந்து 5799.75 புள்ளிகளாக இருந்தது.



விளையாட்டுச் செய்தி மலர் :

* குவாங்ஜெü, நவ.25: ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை நடந்த தட, களப்
போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 1 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் ஜோசப் ஆப்ரஹாம் (29), வீராங்கனை அஸ்வினி
சிதானந்தா (23) ஆகியோர் தங்கம் வென்றனர்.
800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் டின்டு லூகா வெண்கலப் பதக்கம் வென்றார்.
வியாழக்கிழமை நடந்த ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதிச் சுற்றில், ஜோசப் 49.96
வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.


* குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு முதல் தங்கம்.

குவாங்ஜெü, நவ.25: ஆசிய விளையாட்டுப் போட்டி குத்துச்சண்டையில் விகாஷ் கிருஷ்ணன் (18)
இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார். மற்றொரு இந்திய வீரர் தினேஷ்குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார்.  இந்த ஆசியப் போட்டியில் இந்தியா பெறும் 10-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.



ஆன்மீகச் செய்தி மலர் :

*அருள்மிகு பரசுராமர் திருக்கோயில்:

மூலவர் - பரசுராமர்
பழமை - 500- 1000 வருடங்களுக்கு முன்.
ஊர் - திருவல்லம்
மாவட்டம் - திருவனந்தபுரம்
மாநிலம் - கேரளா.

தல பெருமை :- வல்லம் என்றால் "தலை' என்று பொருள். முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமியின் தலைப்பகுதி இத்தலம் வரை நீண்டிருந்ததால் இத்தலம் "திருவல்லம்' எனப்பட்டது. திருவனந்தபுரம் பத்மநாபரை பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியாரின் வழிபாட்டால் பெருமாளின் உருவம் திருவனந்தபுரம் கோயில் மூலஸ்தானம் அளவிற்கு சுருங்கிவிட் டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பெருமாளின் உடல் பகுதியாகவும், திருவல்லம் பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும், திருவனந் தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமாளின் கால் பகுதியாகவும் விளங்குவதால் ஒரே நாளில் இம் மூன்று தலங்களையும் தரிப்பது மிகவும் நல்லது.

பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவம் செய்து தோஷம் நீங்க பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார்.  பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பூஜை செய்துள்ளனர்.


ஆன்மீகச் சிந்தனை மலர் :

பகவத் கீதை.

* * வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார். "எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் யுகந்தோறும் நான் அவதரிப்பேன்' என்று கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது பகவத்கீதையில் வாக்களித்திருக்கிறார்.
* அறியப்படாத உன்னத கடவுளாகவும், எஜமானராகவும், நண்பனாகவும், சிறுகுழந்தையாகவும், காதலனாகவும், தாயாகவும், தந்தையாகவும் நமக்கு விருப்பமான முறையில் எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.

வினாடி வினா :

* முதல் வெளிநாட்டுத் தொலைத் தொடர்பு [ISD] வசதி ஆரம்பிக்கப்பட்ட இடங்கள் எவை ?

விடை : மும்பை மற்றும் லண்டன்.



இதையும் படிங்க:

இன்னும் 10 ஆண்டுகளில் மலேரியாவே இருக்காது:விஞ்ஞானிகள் கணிப்பு.

புளோரிடா: இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் கொடிய வகை மலேரியாவை உலகில் இருந்தே அழித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவத்துள்ளனர். மலேரியா ஒட்டுண்ணி பற்றி சேகரிக்கப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் இது கணிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் பாதி மலேரியாவால் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவுக்கு 1. 2 மில்லியன் மக்கள் பலியாவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான இறப்புக்கு காரணம் கொசுவால் பரப்பப்படும் உயிரினம் பிளாஸ்மோடியம் பால்சிபரம். இது ஆப்பிரிக்காவை கடுமையாகத் தாக்குகிறது. மலேரியாவால் உயிர் இழப்பவர்களில் 90 சதவிகதம் பேர் ஆப்பிரிக்கர்கள் தான்.

விஞ்ஞானிகள் பிளாஸ்மோடியம் பால்சிபரம் பற்றிய தகவல்களை கடந்த 5 வருடமாக சேகரித்தனர். அதன் அடிப்படையில் தான் இதை எப்பொழுது முழுமையாக அழிக்க முடியும் என்று ஊகித்துள்ளனர்.

இந்த ஒட்டுண்ணி பரவும் வேகத்தை 90 சதவிகிதத்திற்கு மேல் குறைத்துவிட்டால் இதை இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் உலகில் இருந்து அழித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள அதிநவீனக் கருவிகளின் மூலம் இதை அமெரிக்காவில் இருந்து அழிப்பது சாத்தியம். ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கால்சிபரத்தை அழிப்பது சிறிது கடினம் என்று புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆன்ட்ரூ டாடெம் தெரிவித்துள்ளார்.

மலேரியா உள்ள 99 நாடுகளில் 32 நாடுகள் இந்நோயை தங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றத் தொடங்கிவிட்டன. மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட மலேரியா அதிகமாகப் பரவுவது தான் பிரச்சனையாக இருந்தது. குறிப்பாக மியான்மர், கம்போடியா மற்றும் வியட்நாமில் தான் இந்தப் பிரச்சனை அதிகம் இருந்தது.

3 comments:

Asiya Omar said...

செய்தி தெரிந்து கொள்ள உங்கள் ப்ளாக் வந்தால் போதும் போல.பகிர்வுக்கு நன்றி.

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி ஆசியா.தொடர்ந்து வாருங்கள்.

KANA VARO said...

நல்ல தகவல்கள்

Post a Comment