Sunday, November 21, 2010

இன்றைய செய்திகள்.



உலகச் செய்தி மலர் :

* உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்திரா காந்தி, அன்னை தெரசா !

வாஷிங்டன்: கடந்த நூற்றாண்டின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டைம் பத்திரிக்கை கடந்த நூற்றாண்டின் சக்தி வாய்ந்த 25 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்ணான ஜேன் ஆடம்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் 6-வது இடத்தில் உள்ளார்.

அன்னை தெரசா 22-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திரா காந்தி, அன்னை தெரசா ஆகியோர் தான் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் ஆவர்.

இந்திரா இந்தியாவின் மகள். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் கண்காணிப்பில் வளர்ந்தவர் என்று டைம் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

1966-ல் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோது, பிரச்சினைக்குரிய 'இந்தியா இப்போது ஒரு பெண்ணின் உறுதியான கையில்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது டைம்.
  

*ஆங் சான் சூச்சி வந்ததால் சிக்கல்: இடத்தைக் காலி செய்ய நோயாளிகளுக்கு ராணுவம் உத்தரவு

யாங்கூன், நவ. 20: ஆங் சான் சூச்சி வந்து சென்றதால் தங்கள் இருப்பிடத்தைக் காலி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு 80 பேர் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின் வீட்டுச் சிறையில் இருந்து விடுதலை பெற்றுள்ள சூச்சி, மியான்மரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்
.
சமீபத்தில் யாங்கூனின் புறநகர் பகுதியில் உள்ள எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்துக்கும் அவர் சென்றார்.

இந்நிலையில் அந்த நோயாளிகள் தங்கியுள்ள வீடுகளை ஒரு வாரத்துக்குள் காலி செய்து விட வேண்டுமென மியான்மர் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.


* இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.

ஜகார்த்தா, நவ. 20: இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் சனிக்கிழமை அதிகாலைநிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

 வடக்கு சுமத்ரா பகுதியில் பதம்சிதெம்புவான் நகருக்கு அருகே உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் இல்லை
.
பசிபிக் நாடுகளின் எரிமலை வளையத்தில் இந்தோனேசியா அமைந்துள்ளது. சென்ற மாதம் மத்திய ஜாவா பகுதியில் எரிமலை நெருப்பை கக்கியதில் 270 பேர் உயிரிழந்தனர். சென்ற மாதம் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மேற்கு சுமத்ரா பகுதியில் சுனாமி ஏற்பட்டு 470 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தேசியச் செய்தி மலர் :

* 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: பிரதமர்

புது தில்லி, நவ.20: 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

நாட்டையே உலுக்கிவரும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறவேயில்லை. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் முதல் முறையாக இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருத்து 
தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"ஹிந்துஸ்தான் டைம்ஸ்' தில்லியில் சனிக்கிழமை நடத்திய மாநாட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து நாடாளுமன்றம் சுமுகமாக இயங்க வழியேற்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம். அரசுக்கு இதில் எவ்வித அச்சமும் கிடையாது. எதைக் கண்டும் அரசு பயப்படவில்லை என்று அவர் கூறினார்.
இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் தேவையில்லை என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து பல்வேறு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இவை அனைத்தும் சரிவர செயல்பட வேண்டுமெனில் முக்கியமான ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. விவாதத்துக்கு அரசு ஒரு போதும் அஞ்சியதில்லை, என்றார்.

* பசுமை எரி சக்தியில் இந்தியா மின்னிலை வகிக்கும் : அல்கோர்.

புது தில்லி, நவ. 20: சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பசுமை எரிசக்தி திட்டங்களில் இந்தியா முன்னிலை பெற முடியும் என அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மாற்று எரிசக்தி துறையில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. சூரிய சக்தி, காற்றாலை போன்றவற்றில் இந்தியா சிறப்பான இடத்தை பிடிக்க முடியும். இதன் மூலம் பசுமை எரிசக்தியில் இந்தியா 
முன்னிலை பெற முடியும் என்றார் அல்கோர்.


தில்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் சனிக்கிழமை கலந்து கொண்டு அவர் பேசினார்.
அவர் மேலும் கூறியது:

"ஒளி மின்னழுத்த செல்களை (ஃபோட்டோ வால்டாயிக்) பயன்படுத்துவது அதிக நன்மை பயக்கும். இந்த செல் தொழில் நுட்பததை பயன்படுபத்துவதன் மூலம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற முடியும்.

இந்த தொழில்நுட்பத்துக்கு உலகெங்கிலும் அதிகமான தேவை உள்ளது.
இந்தியா, ஜெர்மனி, தைவான் போன்ற நாடுகளில் இதற்கான ஆராய்ச்சி வாய்ப்புகள் நன்கு உள்ளன. பசுமை எரிசக்தியில் அமெரிக்கா இன்னமும் பின் தங்கியே உள்ளது.

அமெரிக்காவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கங்கள் பல உள்ளன. அவை மக்கள் மத்தியில் தவறான பிரசாரம் செய்து பருவநிலை மாற்றம் தொடர்பான மசோதா நிறைவேறுவதை தாமதப்படுத்தி வருகின்றன' என்றார்
.
bihar.jpg

* பீகாரில் தேர்தல் முடிந்தது : 24-ம் தேதி முடிவு தெரியும்.

பாட்னா, நவ. 20: பிகார் சட்டப் பேரவைத் தேர்தலின் 6-வது, இறுதிக்கட்டத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 51 சதவீத வாக்குகள் பதிவாகின
.
நக்ஸல்கள் வைத்திருந்த கண்ணி வெடியை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் 2 போலீஸôர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என்று மாவோயிஸ்டுகளின் மிரட்டலுக்கு அஞ்சாது பெருவாரியான மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் 4 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், பிற தொகுதிகளில் 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

24-ம் தேதி முடிவு: தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.


மாநிலச் செய்தி மலர் :

*சென்னை, நவ. 20: நூல் விலை டிசம்பர் 15-ம் தேதிக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று மத்திய ஜவுளித் துறை தயாநிதி மாறன் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின் விரிவாக்கத் திட்டமான பருத்தி நூல் ஏற்றுமதிக்கான "ஆன்-லைன்' பதிவுத் திட்டம் தொடக்க விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.


இதைத் தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசியது:
""மத்திய அரசு 2005-ம் ஆண்டு அனுமதி அளித்த 40 ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களும் செயல்பாட்டுக்கு வரும்போது, முதலீடாக மட்டும் 19 ஆயிரத்து 450 கோடி கிடைக்கும். ஆண்டுக்கு 33 ஆயிரத்து 587 கோடி மதிப்பிலான உற்பத்தி நடைபெறும். 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
.
இந்த 40 ஜவுளி பூங்காக்களில் 8 பூங்காக்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மேலும் 25 ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
.
ஆனால், இந்த பூங்காக்கள் அமைக்க பெரிய நிலப் பரப்பு அவசியம். பூங்காவைத் தொடங்க குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் இருந்தால்தான் அனுமதி அளிக்கப்படும்.

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விஷயங்கள் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும். அப்போதுதான் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க முடியும்.

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டம் எப்போது மீண்டும் ஜவுளி துறையில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்
ஜவுளித் துறைக்கு 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் 8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு விட்டது.

இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம், ஜவுளித் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
.
டிசம்பருக்குள்...தமிழகத்தில் பருத்தி உற்பத்தி சிறப்பாக உள்ளது. பருத்தி நூலை ஏற்றுமதி செய்வதால், விசைத்தறி நெசவாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. உள்நாட்டு பருத்தி தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும். நூல் விலை உயர்வு டிசம்பர் 15-க்குள் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றார்.

waterloged.jpg

* கடலோர மாவட்டங்களில் கனமழை.

சென்னை, நவ. 20: தமிழகம், புதுவையின் கடலோரப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமையும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் சனிக்கிழமை கூறியதாவது:
 ""வங்கக் கடலில் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இப்போது மெதுவாக நகர்ந்து பாக் நீரிணை (ஜலசந்தி) முதல் வட தமிழகம் வரை நீண்டு பரவி மையம் கொண்டுள்ளது. இது மேலும் நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  இதன் எதிரொலியாக தமிழகம், புதுவையில் கடலோரப் பகுதிகளான சென்னை,

காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும். தமிழகத்தின் உள்பகுதிகளிலும், கேரளத்திலும் சில இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என்றார் ரமணன்.

சனிக்கிழமை காலை முதல்: சனிக்கிழமை காலை முதல் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது
.
சென்னையில்...: சென்னை நகரில் வடபழனி, மயிலாப்பூர், தியாகராயநகர், அம்பத்தூர், அடையாறு, பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு மழை தொடங்கியது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவ்வப்போது கனமழை பெய்தது.

  இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்தது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை என நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் வெள்ளம் போல மழை நீர் ஓடியது.

* சீர்காழியில் மின் நிலையம் அமைக்கிறது என் எல் சி.

நெய்வேலி, நவ. 20: சிதம்பரத்தை அடுத்த சீர்காழியில் 200 மெகாவாட் திறன்கொண்ட மின்நிலையம் அமைக்க என்எல்சி நிறுவனம் திட்டமிட்டு வருவதாக நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் ஆர்.கந்தசாமி (படம்) தெரிவித்தார்
.
என்எல்சி நிறுவனம் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு வார விழா லிக்னைட் ஹாலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவை தொடங்கி வைத்து ஆர்.கந்தசாமி பேசியது:
என்எல்சி நிறுவனம் தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையான மின்சக்தியை வழங்கும் சிறப்பான பணியை செய்துவருகிறது
.
 நெய்வேலியில் கூடுதலாக மணிக்கு 100 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் மின்நிலையம் அமைக்க அரசின் அனுமதியை பெறவுள்ளது
.
மேலும் சீர்காழிக்கு அருகில் கடலோரப் பகுதியில் 200 மெகாவாட் திறன்கொண்ட மின்நிலையத்தையும் அமைக்கவுள்ளது. இது மட்டுமன்றி, ஜெயங்கொண்டத்திலும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பிற மாநிலங்களிலும் மின் நிலையம் அமைக்கவுள்ளது.

எனவே என்எல்சி பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, நிறுவனத்தை வளரச் செய்வதன் மூலம் நாட்டை வளம்பெறச் செய்து, தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்றார்.


ஆரோக்கியச் செய்தி மல்ர் :

*முகத்தில் மசாஜ் செய்தால் மன அழுத்தம் குறையும்.

லண்டன் : முகத்தில் மசாஜ் செய்தால், மன அழுத்தம், ஞாபகமறதி, உறக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் தீரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலில் ஏற்படும் வலி உள்ளிட்ட பிரச்னைகளை தீர்ப்பதற்கு, உடலில் மசாஜ் செய்து கொள்கின்றனர். அதேபோன்று, முகத்தில், மசாஜ் செய்தால், மன அழுத்தம், ஞாபகமறதி, உறக்கமின்மை போன்ற பிரச்னைகளை தீர்த்து கொள்ளலாம் என்று பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முறைக்கு "பேஷியல் ரெப்பிளக்சாலஜி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மசாஜ், சீனாவின் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். மசாஜ் செய்வதன் மூலம், உடலின் முக்கிய மையங்கள் தூண்டப்பட்டு, ரத்த சுழற்சி சீராகிறது. அதேபோன்று முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் உடலில் ரத்தம் ஓட்டம் சீராகி, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுகிறது.

முகத்தில், எண்ணற்ற ரத்த நாளங்கள் உள்ளன. உடலில் உள்ள முக்கிய பகுதிகளை கட்டுப்படுத்தக்கூடிய ரத்த நாளங்களும் இதில் அடக்கம். எனவே, முகத்தில் சீராக மசாஜ் செய்யும் போது, அந்த ரத்த நாளங்கள் தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள், ஞாபகமறதி, உறக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. தற்போது, பிரிட்டனில் தற்போது, 35 பேர் "பேஷியல் ரெப்பிளக்சாலஜி' பயிற்சி பெற்று வருகின்றனர்.


வர்த்த்கச் செய்தி மலர் :

தொடர்ந்து 2-வது வாரமாக பங்குச் சந்தை வீழ்ச்சி.

மும்பை, நவ.20: தொடர்ந்து இரண்டு வாரங்களாக மும்பை பங்குச் சந்தையில் சரிவு காணப்படுகிறது. கடந்த வாரத்தில் 571 புள்ளிகள் வரை சரிந்தது
.
ஆசிய பங்குச் சந்தையில் காணப்பட்ட சரிவு, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை ஆகியன பங்குச் சந்தை சரிவுக்குப் பிரதான காரணங்களாக அமைந்தன.

ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது. இது பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நாட்டு வங்கிகள் மத்திய வங்கியில் வைத்திருக்க வேண்டிய கையிருப்பு அளவை 0.5 சதவீதம் உயர்த்தியது.
மேலும் பங்குச் சந்தையில் முதலீடுகளும் குறைந்தது. இதுவும் சரிவுக்கு வழிவகுத்தது. அயர்லாந்து நாட்டின் கடன்சுமை உள்ளிட்ட விவகாரங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தின
.
வார இறுதியில் மும்பை பங்குச் சந்தை 20 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழாகக் குறைந்து 19,585 ஆக இருந்தது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 181 புள்ளிகள் வீழ்ந்ததில் குறியீட்டெண் 5,890 புள்ளிகளானது. பக்ரீத் பண்டிகையா முன்னிட்டு கடந்த வாரம் புதன்கிழமை பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

கடந்த வாரத்தில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்த
நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். இந்நிறுவனப் பங்கு 12.68 சதவீதம் சரிந்து148.40-க்கு விற்பனையானது. 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முறைகேடாக செயல்பட்டதாக தகவல் வெளியானதால் இந்நிறுவனப் பங்குகளின் சரிவு தவிர்க்க முடியாததானது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கோல்ஃப்: இந்திய ஆடவர் அணிக்கு வெள்ளி.

குவாங்ஜெள, நவ.20: ஆசிய விளையாட்டுப் போட்டியின் கோல்ஃப் பிரிவில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது
.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர்கள் ரஷீத் கான், அபிஜித் சிங் சத்தா, அபிநவ் லோஹன், ராகுல் பஜாஜ் ஆகியோர் 874 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தைப் பிடித்தனர்.
இதையடுத்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. முதல் இடத்தை கொரிய அணி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது
.
ஆடவர் தனி நபர் பிரிவில் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்ல முடியவில்லை.
மகளிர் கோல்ஃப் பிரிவில் இந்திய வீராங்கனைகள் 9-வது இடத்தை மட்டுமே பிடித்தனர். தனிநபர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் சோபிக்கவில்லை
.

WR_218872.jpeg


ஆன்மீகச் செய்தி மலர்:

* அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்

முலவர் - சுப்பிரமணியர்
பழமை - 500 - 1000 வருடங்களுக்கு முன்
ஊர் - செங்கம், வில்வாரணி
மாவட்டம் - திருவண்ணாமலை
மாநிலம் - தமிழ்நாடு.

தல பெருமை :- நெருப்பு சிவன். அதிலுள்ள வெப்பம் உமாதேவி, நெருப்பின் நிறம் கணபதி, அதன் ஒளி முருகன். இவையாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்றும், லிங்க வடிவில் முருகன் தோன்றியதால், சிவனே முருகன், முருகனே சிவன் என்றும் இந்த கோயில் மூலம் உணர முடிகிறது. ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும் இங்கு வந்து முருகனை வழிபடுவதாகவும் நம்பிக்கை உள்ளது.

 தல வரலாறு :- பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்த கோயில் குருக்கள் ஒருவர் பல கோயில்களுக்கு பூஜை செய்து வந்தார். வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு குதிரையில் சென்று வருவார். அவர், தன் சக குருக்கள் ஒருவருடன் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையன்று திருத்தணி சென்று முருகனை வழிபடுவார். ஒரு ஆண்டில் சில காரணங்களால் அங்கு செல்ல இருவருக்கும் தடங்கல் ஏற்பட்டது. இதனால் மனம் நொந்த அவர்கள் அன்றிரவு உறங்கும் போது, இருவர் கனவிலும் தோன்றிய முருகன், ""நான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளியுள்ளேன். எனக்கு அந்த இடத்தில் கோயில் கட்டி கிருத்திகை நட்சத்திரங்களில் வழிபாடு செய்யுங்கள்,'' என கூறினார்.

மறுநாள் முருகன் குறிப்பிட்ட மலையில் சுயம்புவைத் தேடினர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது.

குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால், நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது.

 ஆன்மீகச் சிந்தனை மலர் :

* அறிவே உயர்வு தரும் - கிருபானந்த வாரியார்.

* உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக்கெல்லாம் தலையாய பிழை அறிவு நூல்களைக் கற்காமல் இருப்பதே ஆகும். அதனால், நல்ல நூல்களை வாசிப்பதை அன்றாடப்பணியாக்கிக் கொள்ளுங்கள். 
* மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமன் அன்று; உயரம் அன்று; அறிவு ஒன்றுதான் மனிதனை உயர்த்த வல்லது. 

வினாடி வினா :-

* இலக்கியத்திற்கான  நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் யார் ?

விடை :- ரபீந்திரநாத் தாகூர் [ இந்தியா - 1913 ]


reuben.jpg

*இதையும் படிங்க :

“ குழந்தைகளும் கனவு காண்கின்றன. ஆய்வில் கண்டுபிடிப்பு.

வாஷிங்டன் : "புதிதாக பிறந்த குழந்தைகளும் கனவு காணும்' என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில், ஞாபக சக்திக்கென தனிப் பிரிவு உள்ளது. நியூரான்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இப்பகுதியின் உதவியில்தான், நடந்தவற்றையும், எதிர்காலம் பற்றியும் காட்சி வடிவங்களில் நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஞாபக சக்திக்கு மூளைகளில் உள்ள நியூரான்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
"புதிதாக பிறந்த குழந்தைகளில், மூளை வளர்ச்சி இல்லை; குழந்தைகளுக்கு நினைவாற்றல் கிடையாது; கனவு வராது' என விஞ்ஞானிகள் கூறிவந்தனர். இதுபற்றி, லண்டன் இம்பிரியல் காலேஜில் உள்ள எம்.ஆர்.சி., கிளினிகல் சென்டர் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதற்காக, பிறந்து எட்டு மாதம் முதல் 12 மாதங்கள் வரையுள்ள குழந்தைகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன.
ஆய்வுக் குழுவின் தலைவர் டேவிட் எட்வர்ட்ஸ் இதுகுறித்து கூறியதாவது: வயது வந்த மனிதனின் மூளை போன்று, குழந்தைகளின் மூளையும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் கனவு காண்கின்றன. மூளையில் உள்ள நியூரான்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்குவதால், நடந்து முடிந்த சம்பவங்களை காட்சி வடிவில் நினைவில் வைத்துக் கொள்கின்றன. 
குழந்தைகளுக்கும் பகல் கனவு ஏற்படுகிறது. ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்போது, குழந்தைகளின் ஞாபக சக்தி மையம் மெதுவாகவும், தூங்கும் சமயங்களில் அதிக அளவிலும் இயங்குகிறது. இவ்வாறு டேவிட் எட்வர்ட்ஸ் கூறினார்.



நன்றி - தின மணி , தின மலர்.
-- 



1 comment:

எல் கே said...

தொகுப்பிற்கு நன்றி

Post a Comment