Tuesday, June 21, 2011

இன்றைய செய்திகள் - ஜூன் , 21 , 2011

முக்கியச் செய்தி :

கனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

20-kanimozhi1-300.jpg

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பியும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமீன் மனுவை இன்று உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது. இதனால் கனிமொழியால் சிறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்ததால் பரபரப்பும், பதைபதைப்பும் திமுக வட்டாரத்தில் நிலவியது.

ஆரம்பத்தில் கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென நீதிபதிகள் இருவரும் விலகிக் கொள்ளவே, சிங்வி தலைமையிலான பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது.

கனிமொழியின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் குற்றவாளிகள். செல்வாக்கு உடையவர்கள். சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவி வாங்கிய ரூ. 214 கோடி கடன் அல்ல, லஞ்சப் பணமே. இந்த நிலையில் இவர்களை விடுவித்தால் அவர்கள் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள், ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்று ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், கலைஞர் டிவி நிர்வாகத்திற்கும் கனிமொழிக்கும் தொடர்பே இல்லை. கலைஞர் டிவியின் அன்றாட செயல்பாடுகளில் அவர் எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. எனவே அவரை இந்த வழக்கில் சேர்த்தது தவறு.

மேலும் கனிமொழி அவரது சிறு வயது மகனை விட்டுப் பிரித்து வைத்திருப்பது நியாயமில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதத்திற்குப் பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவைப் பிறப்பித்தனர். அதில் கனிமொழி மற்றும்ச ரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் அந்த நீதிமன்றத்தையே ஜாமீன் கோரி அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது ஜூலை 2வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. அதில் கனிமொழி மீது ஆகஸ்டு முதல் வாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம். எனவே கனிமொழி இன்னும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.

இதனால் கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் இப்போதைக்கு சிறையிலிருந்து வெளி வரும் வாய்ப்பு மங்கிப் போய் விட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை ஆரம்பத்திலிருந்தே விசாரித்து வருபவர் நீதிபதி சிங்வி. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் சிபிஐ விசாரணையையும் அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எனவே கனிமொழி மீதான வழக்கின் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநரான சரத் குமார் ரெட்டியும் கூட்டுச் சதியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

உலகச் செய்தி மலர் :

* ஒரு ஆப்பிளும் டைனோசரும்...!

31-apple-200.jpg

ஏ.கே.கான்

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம்.

என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு.

ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம் பூமியில் உண்டானது. அப்போது எழும்பிய தூசு மண்டலம், சூரிய ஒளியை பல்லாண்டுகள் மறைத்ததால் உலகின் பெரும்பாலான தாவரங்கள் அழிந்து, அதை நம்பி வாழ்ந்த மிருகங்களையும் அழித்தது, குறிப்பாக டைனோசர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டியது என்பது தியரி) டைனோசர்களை அழிந்தன.

ஆனால், அதில் தப்பிப் பிழைத்த ஒரு சில தாவர வகைகளில் ஒன்று ஆப்பிள் என்பது சமீபத்திய 'ஜீனோம்' ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் சுமார் 600 மில்லியன் அடிப்படை டிஎன்ஏக்களை சமீபத்தில் அக்குவேறு ஆணிவேறாக வகைப்படுத்தி (genome profiling) முடித்துள்ளனர் நியூசிலாந்து விஞ்ஞானிகள்.

ஆப்பிளின் நிறம், சுவை, அதன் ஜூஸ் தரும் தன்மைக்கான காரணங்களை ஆராய்வதற்காகவும், இந்த குணங்களை அதிகரித்து மிகச் சுவையான ஆப்பிள்களை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சி தான் இது. ஆனால், இந்த ஆராய்ச்சி நம்மை டைனோசர்களின் கதையை நோக்கி கொண்டு போயுள்ளது.

ஆப்பிள்களுக்கு மிக நெருக்கமான இனத்தைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட தாவர வகைகளில் 7 அல்லது 8 குரோமோசோம்கள் தான் உள்ளன. (நமது ஜீன்களை ஏந்திய டிஎன்ஏக்களைக் கொண்ட செல் உறுப்பு தான் குரோமோசோம்). ஆனால், ஆப்பிள்களில் 17 குரோமோசோம்கள் உள்ளது சமீபத்திய 'ஜீனோம்' ஆராய்ச்சியில் (டிஎன்ஏக்களை வரிசைப்படுத்தல்) தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த குரோமோசோம்கள் இரண்டு முறை உருவாகியுள்ளன. அதாவது 'டூப்ளிகேட்' ஆகியுள்ளன. இதனால் தான் ஆப்பிள் குடும்பத்தைச் சேர்ந்த பிற தாவரங்களில் 8 குரோமோசாம்கள் இருக்க, ஆப்பிளில் மட்டும் 17 குரோமோசாம்கள் உள்ளன.

இந்த டூப்ளிகேசன் நடந்தது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அந்த சமயததில் தான் பூமியில் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்தது. அந்த காலகட்டத்தில் தான் டைனோசர்கள் கூண்டோடு காலியாயின.

இந்த இரு தனித்தனி சம்பவங்களுக்கும் ஒரே காரணம் இருந்திருக்கலாம் என்பது தான் விஞ்ஞானிகள் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்.

எரிகல் தாக்கி தாவர இனங்கள் அழிந்தபோது, தாக்குப் பிடித்த ஓரிரு இனங்களில் ஆப்பிளும் ஒன்று என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். அந்த காலகட்டத்தில் தப்பிப் பிழைக்க, ஆப்பிள் இனத்தில் நடந்த 'சம்பவம்' தான் குரோமோசாம் டூப்ளிகேஷன் என்கிறார்கள்.

* அமெரிக்க நீதிமன்றம் சம்மன்: நிராகரித்தார் ராஜபக்சே!

கொழும்பு: தமிழரைக் கொன்றதற்காக 30 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதை ராஜபக்சே நிராகரித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ராகியர் மனோகரன் என்பவர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு தலைவர் என்ற முறையில் ராஜபக்சே நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரி அமெரிக்காவைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இலங்கை விதிகளின்படி அதிபர் விதிவிலக்கு பெற்றவர் என நீதித்துறை அமைச்சகச் செயலர் சுகதா காம்லத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்மன்களுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம். எங்களது சட்ட நிலைப்பாடு குறித்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்துக்கு கடந்த வாரமே தெரிவித்துவிட்டேன் என காம்லத் குறிப்பிட்டார்.

ஐநா சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராஜபக்சே செப்டம்பரில் நியுயார்க் வரவிருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ராஜபக்சே அமெரி்க்கா செல்வதை தடுக்க முடியாது:

இந் நிலையில் ராஜபக்சே அமெரிக்கா செல்வதை யாரும் தடுக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டாலும் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தின்படி அரசு பதவியில் உள்ள தலைவர்களுக்கு விதிவிலக்கு உள்ளதாகவும், இதனால் அவரது பயணத்தைத் தடுக்க முடியாது என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

 இனி எந்தப் பெயரிலும் இணையத்தளம்!

20-internet4-300.jpg

சிங்கப்பூர்: .காம் (டாட் காம்) என்பதக்குப் பதில் .கோக், .இன்டியா, .மாருதி என இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இன்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் இணையத்தில் அடுத்தகட்டமாக பெயர் புரட்சி ஏற்படவுள்ளது.

இன்டர்நெட் உருவாகி 26 ஆண்டுகளில் அமலாக்கப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும்.

இப்போது உலகின் பெரும்பாலான இணையத்தளங்கள் .com, .net, .org ஆகிய துணை வார்த்தைகளுடன் தான் முடிகின்றன. இனிமேல் எந்த வார்த்தையையும் துணைப் பெயராக வைத்துக் கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, போர்ட் கார் நிறுவனம் தனது பியஸ்டா கார் குறித்த இணையத்தளத்தின் பெயரை டாட் போர்ட் (.ford) என்ற துணைப் பெயருடன் வைத்துக் கொள்ளலாம்.

இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஏற்படும் என்றாலும், குழப்பத்துக்கும் பஞ்சமிருக்காது. .காம் என்ற சிம்பிளான பெயரில் தங்களது இணையத்தளம், துணைத் தளங்களை எல்லாம் எளிதாக பதிவு செய்த நிறுவனங்கள் இனிமேல் தங்களது நிறுவனத்தின் பெயரில் ஏராளமான டொமைன்களை பதிவு செய்ய வேண்டிய நிலை வரலாம். இதற்கான செலவும் அதிகமாகும்.

அதே போல நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து, டொமைனை பிளாக் செய்து வைத்துக் கொண்டு, அதை மூச்சு முட்டும் விலைக்கு விற்க முயலும் ஆசாமிகளிடம் நிறுவனங்கள் சிக்கித் தவிப்பதும் அதிகரிக்கும்.

* தரையையும் தரவில்லை தண்ணீரையும் விடவில்லை: சீனா அட்டூழியம்

large_260561.jpg

இமயமலையில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான தண்ணீரை கொண்டு வரும், பிரம்மபுத்திரா நதியை கபளீகரம் செய்யும் முயற்சியில், தற்போது சீனா ஈடுபட்டு வருகிறது. இதனால் அசாம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.

பிரம்மபுத்திரா நதி, திபெத் பகுதியில் இருக்கும் இமயமலையில் தோன்றி, இந்தியாவுக்குள் அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக ஓடி, வங்கதேசத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது. 2,800 கி.மீ., ஓடும் இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்று. 1,700 கி.மீ., தூரம் வரை திபெத் மலைப்பகுதிகளிலே இந்த ஆறு பாய்கிறது. பல கிளை ஆறுகளைக் கொண்ட பிரம்மபுத்திரா, சில இடத்தில் 10 கி.மீ., வரை அகலம் கொண்டது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களின் விவசாயம், பிரம்மபுத்திரா நதியை நம்பியே இருக்கிறது.சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் இருப்பதால் பிரம்மபுத்திரா பாயும் பகுதியில் முன்பு சீனா அணையை கட்டியது. இது நீர் மின் திட்டத்துக்காக கட்டப்பட்டது என சீனா தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, அணையிலிருந்து புதிய பாதை அமைத்து நீர் ஆதாரத்தை சீனாவுக்கு திருப்பும் முயற்சியும் மெல்ல நடந்து வருகிறது. 5,400 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருவதே இதற்கு சாட்சி. இதே நிலை நீடிக்குமானால் இந்தியாவுக்கு வரும் மொத்த நீரும் திருடப்பட்டு விடும்.

சீனாவின் இந்த திட்டத்தை தடுத்த நிறுத்த, அசாம் முதல்வர் தருண் கோகோய், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை என சீனா தெரிவித்ததாக கிருஷ்ணா கூறியுள்ளார். அணைப்பகுதியில் சில வேலைகள் நடப்பது, செயற்கோள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த பேச்சை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. இந்தியாவில் இருமாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் நதிப்பிரச்னைகளைக் கூட தீர்க்க முடிவதில்லை. இந்நிலையில் சீனாவுடனான இந்த பிரச்னை, இருநாடுகளுக்கிடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஏற்கனவே அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவதன் மூலம், தரையில் கை வைத்த சீனா, தற்போது தண்ணீரையும் விடவில்லை.

* இந்தியாவுடனான பிரச்னைக்கு போரால் தீர்வு காண முடியாது: சொல்கிறார் பாக்., கிலானி

large_261281.jpg

இஸ்லாமாபாத்: ""இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என, நாங்கள் விரும்புகிறோம். எந்த ஒரு பிரச்னைக்கும் போரால் தீர்வு காண முடியாது,'' என, பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறினார்.

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானி மேலும் பேசியதாவது: இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும், நட்புடன் இருக்க வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதில், காஷ்மீர் பிரச்னையும் அடக்கம். பிரதமர் மன்மோகன் சிங்கை, பல முறை சந்தித்துள்ளேன். அனைத்து பிரச்னைகளையும், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என, அவரிடம் வலியுறுத்தியுள்ளேன். காஷ்மீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும். இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், இன்னும் சில நாட்களில் பாகிஸ்தான் வரவுள்ளார். பாக்., வெளியுறவுச் செயலர் சல்மான் பசீருடன், முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் பேச்சு நடத்துவார். காஷ்மீர் பிரச்னைக்கு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தீர்வு காண வேண்டும் என, சர்வதேச சமுதாயத்திடம், பாகிஸ்தான் வலியுறுத்தும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்கும். இதன் மூலம், சர்வதேச சமுதாயத்தின் நன் மதிப்பு, பாகிஸ்தானுக்கு கிடைக்கும். இவ்வாறு கிலானி கூறினார்.

* பிரிட்டன் பல்கலை வேந்தர் பதவிக்கு மளிகை கடை நடத்தும் இந்தியர் போட்டி
கேம்பிரிட்ஜ் : பிரிட்டனில் உள்ள புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலையின் வேந்தர் பதவிக்கு நடக்கும் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், மளிகை வர்த்தகம் செய்து வருபவருமான அப்துல் அராய்ன் என்பவர் போட்டியிடுகிறார்.

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் நகரில், உலக புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலை உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்தது. இதன் வேந்தராக, பிரிட்டன் இளவரசர் பிலிப், 1976ல் இருந்து பதவி வகித்து வருகிறார். இம்மாத இறுதியில், இந்த பதவியில் இருந்து, அவர் ஓய்வு பெறவுள்ளதால், புதிய வேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கவுள்ளது.

மிகவும் கவுரவம் வாய்ந்த இந்த பதவிக்கான தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்துல் அராய்ன் என்பவர் போட்டியிடுகிறார். இவர், பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். கேம்பிரிட்ஜ் பல்கலையில் எம்.பி.ஏ., பட்டம் பெற்ற அப்துல் அராய்ன், ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். இதன்பின், பெரியளவிலான மளிகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இந்திய உணவு மற்றும் சமையல் பொருட்கள், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. வேந்தர் பதவிக்கான தேர்தலில், அப்துல் அராய்னை தவிர, சய்ன்ஸ்புரி, பிரயன், மைக்கேல் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இது குறித்து அப்துல் அராய்ன் கூறுகையில், "பிரிட்டனில் உள்ள எங்கள் கடையில், நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், அடிக்கடி வந்து பொருட்களை வாங்குவார். அவர் எங்களின் வாடிக்கையாளர். கேம்பிரிட்ஜில் படிக்கும் இந்திய மாணவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்' என்றார்.

* அணுமின் நிலைய பாதுகாப்பு துவங்கியது ஐ.ஏ.இ.ஏ., கூட

large_261534.jpg

டெஹரான் : அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு குறித்து பேச, உலகளவில் 150 நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்ட சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் (ஐ.ஏ.இ.ஏ.,), ஐந்து நாள் கூட்டம் நேற்று ஈரான் தலைநகர் டெஹரானில் துவங்கியது.

ஜப்பானில், மார்ச் 11ம் தேதி சுனாமி தாக்கியதில், அந்நாட்டின் புக்குஷிமா அணுமின் உலை வெடித்து, அதில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டு ஆபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, உலக நாடுகள் அனைத்தும் அணுமின் உற்பத்தியின் அவசியம் குறித்து பரிசீலிக்க துவங்கியுள்ளன.

ஜெர்மனியில் உள்ள அனைத்து அணுமின் உற்பத்தி நிலையங்களையும் 2022ல், இழுத்து மூட, அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இத்தாலியில், அணுமின் நிலையங்களை புதுப்பிக்க, அந்நாட்டு பார்லிமென்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களின் போது, அணுமின் நிலையங்களை பாதுகாப்பது தொடர்பாக, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

இந்நிலையில், ஜப்பானில் சுனாமியால் ஏற்பட்ட அணுமின் உலை வெடிப்பு குறித்தும், எதிர் காலத்தில் உலகளவில் உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து பேசவும், சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் ஐந்து நாள் கூட்டம், நேற்று ஈரான் தலைநகர் டெஹரானில் துவங்கியது. இக்கூட்டத்தில், 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில், குறிப்பாக ஜப்பானில், புக்குஷிமா அணுமின் உலை வெடிப்பு மற்றும் கதிர்வீச்சு குறித்து பேசப்பட்டது. இந்த அணு உலை வெடிப்பு தொடர்பான அறிக்கையும், ஐந்து நாட்கள் நடைபெறும் தொடர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* அமைதி பேச்சுக்கு திரும்பும்படி சிரியா மக்களுக்கு அதிபர் அழைப்பு


large_261519.jpg

டமாஸ்காஸ் : "சிரியாவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்களின் செயல். எனவே, பொதுமக்கள் அமைதி பேச்சுக்கு திரும்ப வேண்டும்' என, அந்நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் தெரிவித்துள்ளார்.

சிரியா அரசுக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மூன்றாவது முறையாக, நாட்டு மக்களுக்கு அதிபர் பஷர் அல் அசாத், தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: சிரியா மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்கள் இதை நிறைவேற்ற விடாமல், சதிவேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய அளவிலான பேச்சுவார்த்தை சிரியா நாட்டின் எதிர்காலத்தை சீரமைக்கும். வன்முறையைத் தொடர்ந்து, துருக்கி நாட்டில் அடைக்கலமானவர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும். வன்முறையில் பலியானவர்களுக்காக வருந்துகிறேன். இவர்களது பலி நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசவேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஸ்திரத்தன்மை இல்லாமல் வளர்ச்சி இல்லை. வன்முறையால் சீர்திருத்தம் ஏற்படாது.

சீர்திருத்த திட்டங்களைக் கொண்டு வர தேசிய அளவில் ஆணையம் அமைக்கப்படும். சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மற்றொரு குழு ஏற்படுத்தப்படும். ஊழலை ஒழிப்பதில் மூத்த குடிமக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சமீபத்தில் குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நீதித்துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளேன். குறிப்பாக, ஜிசிர் அல் சுகுர் பகுதி மக்கள் நாடு திரும்ப வேண்டும். அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மக்கள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

சிரியாவில் அரசுக்கு எதிரான வன்முறையால், இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை அரசு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரில், ஆயிரத்து 300க்கும் அதிகமான சிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்ய அதிபர் எதிர்ப்பு: லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷ்யா ஓட்டளித்தது. இதேபோல், சிரியா மீது ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தால், அதை ஆதரித்து ரஷ்யா ஓட்டளிக்காது என, அந்நாட்டு அதிபர் டிமித்ரி மேத்வெதேவ் தெரிவித்தார்.

* துனீசிய மாஜி அதிபருக்கு 35 ஆண்டு சிறை
துனீஸ்: வருமானத்திற்கு அதிகமாக அதிகாரத்தை பயன்படுத்தி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் துனீ்ஸ் நாட்டின் மாஜி அதிபருக்கும், அவரது மனைவிக்கும் துனீஸ் கோர்ட் 35 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. துனீஸியாவில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி காரணமாக அந்நாட்டு அதிபராக 23 ஆண்டுகள் பதவியில் இருந்த ஜி‌னி-அல்-அபிதின் பென்அலி கடந்த ஜனவரி மாதம் பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளர். ‌எனினும் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், வரும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் சொத்து சேர்த்து என கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கு நேற்று துனீஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் அதிபர் பென்அலி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இவருக்கும் 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், 90 மில்லியன் துனீசியன் தினார் (65.5 மில்லியன் டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டது. வரும் 30-ம் தேதியன்று இந்த தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* லோக்பால் ஆலோசனையில் நீடிக்கிறது முட்டுக்கட்டை

large_261231.jpg

லோக்பால் மசோதா தொடர்பாக நடைபெற்ற மிக முக்கிய கூட்டம் குறித்து, அரசு ஒரு கருத்தையும், அன்னா ஹசாரே தரப்பு வேறொரு கருத்தையும் கூறியுள்ளது. மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாக அரசு கூறியுள்ள அதே வேளையில், முக்கிய பிரச்னைகள் அனைத்தும் அப்படியே உள்ளதாக ஹசாரே தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பிரதமரை லோக்பால் சட்டத்திற்குள் கொண்டு வருவதா, வேண்டாமா என்ற பிரச்னையை தவிர, புதிதாக வேறு இரு பிரச்னைகளும், இரு தரப்புக்கும் முளைத்துள்ளதால் முட்டுக்கட்டை நீடிக்கிறது. லோக்பால் சட்டத்தை விரைவாக தயாரித்திட அன்னா ஹசாரே தரப்பு தீவிரம் காட்டுகிறது. ஆனால், ஹசாரே தரப்பு வைக்கும் முக்கிய ஷரத்துக்களை, அரசு தரப்பினர் ஏற்க மறுக்கின்றனர். அதில், மிக முக்கியமான ஒன்று, லோக்பால் சட்ட வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வரலாமா, வேண்டாமா என்பதே. பிரதமரை கொண்டு வந்தாக வேண்டுமென ஹசாரே தரப்பு வலியுறுத்துகிறது. ஆனால், பதவியில் இருந்து இறங்கிய பின், முன்னாள் பிரதமர் என்ற நிலையில் வேண்டுமானால், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரலாம் என, அரசு தரப்பு சொல்கிறது.

இந்நிலையில், மத்திய அரசுக்கும், ஹசாரே குழுவுக்கும் இடையேயான மிக முக்கிய ஆலோசனை நேற்று நிதியமைச்சரும், லோக்பால் வரைவு மசோதா கூட்டுக்குழு தலைவரான பிரணாப் முகர்ஜியின் நார்த் பிளாக் அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டம், மதியம் 2 மணி வரை நடைபெற்றது. சமூக பிரதிநிதிகள் தரப்பில், நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தவிர ஹசாரே, சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்றனர். அரசு தரப்பில் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், கபில் சிபல், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.

"சிக்கல் தீருவதற்கு வாய்ப்பு இல்லை': "நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய திருப்பு முனை' என, அரசு தரப்பில் அமைச்சர் கபில் சிபல் கூறிவிட்டு சென்ற சில நிமிடங்களில், "பிரச்னைகள் எதுவும் தீரவில்லை. அப்படியே உள்ளன ' என ஹசாரே தரப்பில், பிரசாந்த் பூஷன் அதிரடியாக தெரிவித்தார். மிக முக்கிய பிரச்னையாக இருக்கும் பிரதமரை, லோக்பாலுக்குள் கொண்டு வருவதா, வேண்டாமா என்பது குறித்து, இக்கூட்டத்தில் பேசப்படவே இல்லை. இந்த விஷயம் தான் இரு தரப்புக்கும் உள்ள பிரச்னையின் ஆணிவேராக கருதப்படுகிறது. இந்நிலையில், லோக்பால் உறுப்பினர் நியமனம் மற்றும் நீக்கம் குறித்த நடைமுறைகளிலும் புதிதாக முட்டல், மோதல் எழுந்துள்ளது. இன்றைய கூட்டத்திலும் கூட சுமூக முடிவு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. அனைத்து கட்சி கூட்டமோ அல்லது பார்லிமென்டில் லோக்பால் குறித்து அனைத்து கட்சிகளும் நடத்த போகும் விவாதத்தை தான் இப்போதைக்கு அரசு பெரிதும் நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

* மகளிர் மசோதா: 22-ல் அனைத்து கட்சி கூட்டம்

புது தில்லி, ஜூன் 20: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை மக்களவைத் தலைவர் மீரா குமார் 22-ம் தேதி கூட்டியுள்ளார்.

 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக அனைத்து கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கும் விதமாக இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சி தலைவர்களுக்கு மீரா குமார் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்த மசோதா, கடந்த 2010 மார்ச் மாதம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* தில்லியில் இன்று மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு
 புது தில்லி, ஜூன் 21: மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியில் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கிறார்.

 இந்த மாநாட்டில் மாநில நிதி அமைச்சர்கள், மத்திய நிதித்துறை செயலாளர்கள், மாநில நிதித்துறை செயலாளர்கள், முக்கியத் துறைகளின் நிதி ஆலோசகர்கள், மாநில அக்கவுன்டன்ட் ஜெனரல்கள் பங்கு கொள்கிறார்கள். ஒரு நாள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி துவக்கிவைத்து உரையாற்றுகிறார்.

 இந்தியா தற்போது ரொக்கம் அடிப்படையிலான கணக்கு முறையை கடைப்பிடித்து வருகிறது. இதைத் தவிர்த்து தொகை ஏற்றல் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று 12-வது மற்றும் 13-வது நிதிக்குழு பரிந்துரை அளித்திருந்தது. இது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

* ரூபாயின் மதிப்பு சரிவு

மும்பை, ஜூன் 20: டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு திங்கள்கிழமை சரிவைச் சந்தித்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 45 தரவேண்டியிருந்தது.

 பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவும் டாலரின் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

 மோரீஷஸ் நாட்டுடனான இரட்டை வரிவிதிப்பு குறித்து அரசு பேச்சு நடத்துவதாக தகவல் வெளியானது. மோரீஷஸிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம் ஈட்டப்படும் லாபத்துக்கு வரி விதிக்கப் போவதாக தகவல் வெளியானது. இதனால் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இந்திய பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்படும் அன்னிய முதலீடுகளில் பெரும்பகுதி மோரீஷஸிலிருந்துதான் வருகிறது. கடந்த 10-ம் தேதியிலிருந்து அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 41 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன.

 வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் ஒரு டாலருக்கு ரூ. 44.87 என்ற நிலையில் இருந்த ரூபாயின் மதிப்பு திங்களன்று வர்த்தகம் முடிவில் 13 காசுகள் சரிந்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 45 தரவேண்டியதாயிற்று.

 டாலருக்கு நிகரான யூரோவின் மாற்று மதிப்பும் சரிவைச் சந்தித்தது. கிரேக்க நிதி நெருக்கடிக்கு நிதி உதவி அளிப்பதில் ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டபோதிலும், நிதி அளிப்பது தாமதமாகும் என்பதால் மதிப்பு சரிந்தது.

 வங்கிகளில் எண்ணெய் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் அதிக அளவில் டாலர்களை வாங்கினர். இதுவும் சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

 செவ்வாய்க்கிழமை ஒரு டாலருக்கு ரூ. 45.30 வரை தரவேண்டியிருக்கும் என்று இறக்குமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 இதனிடையே நியூயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 92 டாலராக சரிந்தது.

 பங்குச் சந்தையில் ஜிடிஎல் நிறுவன பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இந்நிறுவன மேம்பாட்டாளர்கள் தங்கள் வசம் இருந்த 50 சதவீத பங்குகளை விற்பனை செய்துவிட்டதாக வெளியான தகவலால் இந்நிறுவன பங்கு விலைகள் சரிந்தன.

 வர்த்தகம் முடிவில் யூரோவின் மாற்று மதிப்பு ரூ. 64.01 ஆக இருந்தது.

 பவுன்ட் ஸ்டெர்லிங்குக்கு ரூ. 72.73-ம், ஜப்பானிய யென்னுக்கு ரூ. 56.05-ம் தர வேண்டியிருந்தது.

* வடகிழக்கு மாநிலங்கள் மின் தேவை: உலக வங்கியிடம் 2.5 பில்லியன் டாலர் கடன் கோரிக்கை 

வட கிழக்கு மாநிலங்களின் மின் தேவையை நிவர்த்தி செய்ய அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள நீர்வளத்தை ஆதாரமாகக் கொண்டு நீர் மின் நிலையங்கள் அமைத்து 63 ஆயிரம் மெகா வாட் மின்சார உற்பத்தி செய்ய உலக வங்கியிடம் மத்திய எரிசக்தித் துறை 2.5 பில்லியன் டாலர் (ரூ.11,348.5 கோடி) கடன் கோரியுள்ளது.
இத்தகவல் வட கிழக்கு பேரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

“வட கிழக்கு மாநிங்களில், குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் 5=63,257 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் அளவி்ற்கு நீர் வளம் உள்ளது. தற்போது 2,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட சுபான்சிறீ நீர் மின் திட்டம் வரும் 2013-15ஆம் ஆண்டிற்குள் நிறைவேறிவிடும்” என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து, அஸ்ஸாம், மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்ற வடகிழக்கு பேரவைக் கூட்டம், இவ்வமைப்பின் தலைவரும், வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சருமான பி.கே.ஹண்டிக் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உலக வங்கியிடம் கடன் கேட்கும் முடிவு எடுக்கப்பட்டது.

* அமர்நாத் யாத்திரைக்கு 2 லட்சம் பேர் பதிவு 
அமர்நாத் குகைக் கோயில் புனித யாத்திரை செல்வதற்காக இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பதிவு மையங்கள் மூலமாக, இதுவரை 2,19,190 பேர் பதிவு செய்துள்ளனர்.

பல்டல் பாதை வழியாக புனிதப் பயணம் செல்ல 1,09,018 பேரும், பஹல்கம் பாதை வழியாக செல்ல 1,10,172 பேரும் பதிவு செய்துள்ளதாக அமர்நாத் பயணத்துக்கான பதிவு அதிகாரி அப்துல் ஹமீத் தெரிவித்தார்.

வருகிற 29 ஆம் தேதியன்று தொடங்கும் அமர்நாத் புனிதப் பயணம், ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* போஸ்கோ பிரச்சனை: நிலம் கையகப்படுத்துவது நிறுத்தம்
ஒரிஸ்ஸாவில் போஸ்கோ இரும்புத் தொழிற்சாலை அமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவர் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரிஸ்ஸா மாநிலம் ஜகத்சிங்பூரில் தென் கொரிய நிறுவனமான போஸ்கோ மிகப்பெரிய இரும்புத் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் இத்திட்டத்துக்கு பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போஸ்கோ தொழிற்சாலைக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணி ஒப்பந்தம் வெளியூர் நபர்களிடம் வழங்கப்படும் என்ற தகவலால், கூட்டுக் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கூட்டுக் நடவடிக்கைக் குழு தலைவர் அனடி ரெளட் தனது மகன் மூலம் வெளியூர் ஒப்பந்ததாரரை ஏற்பாடு செய்ததாக கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, அதன் தலைவராக இருந்து வந்த அனடி ரெளட், திடீரென தனது பதவியில் இருந்து விலகிக்கொண்டார்.

* சென்னையில் சுழற்சி முறை மின் தடை அறிவிப்பு ரத்து
 சென்னை, ஜூன் 20: வடசென்னையில் புதிய மின்நிலையங்கள் அமைக்கும் பணிக்கு, சென்னைக்கு வரும் மின்சாரம் பயன்படுத்தவிருப்பதால் சுழற்சி முறையில் மின்தடை ஏற்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

 ÷வடசென்னையில் உள்ள வல்லூரில் 500 மெகாவாட் மின்திறன் கொண்ட 3 யூனிட்டுகள் அமைய உள்ளன. இந்தப் பணிகளுக்காக நெல்லூரில் இருந்து அலமாதிக்கு செல்லும் பாதையில் செல்லும் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டிய காரணத்தினால் சென்னையில் பற்றாக்குறை ஏற்படும்.

 இதனால் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 4 மணி நேரத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

 இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து வட சென்னை வல்லூருக்கு அருகில் புதிதாக அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்துக்கான 400 கிலோ வாட் மின் தொடர் இணைப்பு பணிகள் தொழில்நுட்ப காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

 மேலூர், மணலி, சிப்காட் 1 மற்றும் 2, திருத்தணி, பாலசீவரம், திருவள்ளூர், மோசூர், பல்லூர் ஓரிக்கை, ஓரகடம், பெருங்குடி, ஈ.டி.எல்., கடப்பேரி, கோடம்பாக்கம், திருமங்கலம், போரூர், புழல், மாத்தூர், திருமுல்லைவாயல், துரைநல்லூர், ராஜ்பவன், திருவான்மியூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், பாடி, முகப்பேர், பெரியார் நகர், மேனாம்பேடு, சிட்கோ, அண்ணா நகர், ஆவடி, அலமாதி, பஞ்செட்டி, பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், திருமுடிவாக்கம், கடப்பேரி, அரும்பாக்கம், மதுரவாயல், எஸ்.ஏ.எப். கேம்ஸ், வள்ளுவர் கோட்டம், உஸ்மான் சாலை, டைடல் பார்க், டி.சி.எஸ்., நொளம்பூர், செம்பரம்பாக்கம், கே.கே. நகர், ராமாபுரம், எஸ்.ஆர்.எம்.சி., ஆலந்தூர், நங்கநல்லூர், மேற்கு மாம்பலம், தில்லை கங்கா நகர், கிண்டி, பல்லாவரம், மாம்பலம், ஆர்.ஏ. புரம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய இடங்களில் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுகிறது.

 மேலும் புதிய மின்நிலையப் பணிகள் தொடங்குவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :
* மனநலம் பாதித்தோருக்கு சிகிச்சை: களமிறங்கும் திருப்பூர் போலீசார் :

திருப்பூர் : மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் திருப்பூர் மாவட்ட போலீசார் களமிறங்கியுள்ளனர். அவர்களை பற்றிய தகவலை பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குதெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:கவனிக்க ஆளில்லாமல், ஆதரவற்ற நிலையில் ரோடுகளில் சுற்றித்திரிபவர்கள்; மற்றவர்களை கண்டால் அடிப்பது, துரத்துவது, கற்களால் அடிப்பது என பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் என இரு வகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன், மூலனூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கல்லால் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக மாவட்ட அளவில் ஒரு கமிட்டி உருவாக்கப்படும். போலீசுடன், பொதுநல அமைப்புகளும் இணைந்து பணியாற்றும். தங்கள் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு திரியும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது "மென்டல் ஹெல்த் ஆக்ட்' சட்டத்தின் படி ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்படும்; இது, அவர்கள் குற்றவாளி என்ற நோக்கத்தில் அல்ல; அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு வழக்குப்பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினால், அவர் மனநல நிபுணரிடம் அழைத்துச் செல்ல உத்தரவிடுவார்; அவர் கொடுக்கும் சான்றிதழுடன், மீண்டும் அந்நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினால், மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, கீழ்பாக்கம் மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சேர்த்து சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். மூலனூரில் கொலை செய்த மனநலம் குன்றிய பெண், இச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்து, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட உள்ளார். பொதுமக்களுக்கு தொல்லை தரும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு துவக்க நிலையிலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம், சமுதாயத்துக்கு ஏற்படும் பாதிப்பை துவக்கத்திலேயே தடுக்க முடியும்; மற்றவர்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படும், என்றார். லாட்ஜ், ஓட்டல்களில் சோதனை நடத்த முடிவு ""திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் குறித்த விவரங்களை, "பார்ம் சி' மூலம் தெரிவிக்க, ஓட்டல் மற்றும் லாட்ஜ் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது; இதுவரை யாரும் "பார்ம் சி' தரவில்லை. லாட்ஜ் மற்றும் ஓட்டல்களில் சோதனை நடத்தப்படும். அப்போது, வெளிநாட்டினர் தங்கியிருப்பது தெரியவரும் பட்சத்தில், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எஸ்.பி., தெரிவித்தார்.

* அதிகாரிகளின் தொடரும் அலட்சியத்தால் பராமரிப்பின்றி முத்துக்குமாரசுவாமி கோவில்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசுவாமி கோவிலுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தும் அதிகாரிகள் அலட்சியத்தால் உடைந்துள்ள கோவில் பிரகார சிமென்ட் தரை சீரமைக்கப்படாமல் உள்ளது. பரங்கிப்பேட்டையில் பழமை வாய்ந்த முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் சத்ரு சம்ஹாரா திருசதி பூஜைகள், பிரதோஷம், கிருத்திகை, தை மாதம் பூசம் உற்சவம் என நடப்பதால் உள்ளூர் பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமாக சந்தைதோப்பு, கடைகள், கோவில் இடத்தில் வீடுகட்டியுள்ளவர்கள் வாடகை மற்றும் நிலத்திற்கான குத்தகை என ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் இக்கோவிலுக்கு வருவாய் கிடைக்கிறது. கோவில் முழுவதும் பிரகார பகுதிகளில் பல இடங்களில் குப்பைகொட்டி கிடப்பதால் சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது. சிமென்ட் தரை சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் பிரகாரத்தை சுற்றிவர சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் கோவில் பிரகார பகுதியில் மின்விளக்கு எரிவதில்லை. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். கோவில் செயல் அலுவலர் வாரத்திற்கு ஒரு முறை வருவதே அரிதாக இருப்பதால் பக்தர்கள் யாரிடம் புகார் தெரிவிப்பது என்ற நிலை உள்ளது. கோவிலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க அறநிலைத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

பித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எ‌ளிய வ‌ழிக‌ள்

விரு‌‌ப்பமான உணவுக‌ள், மசாலா உணவுக‌ள் போ‌ன்றவ‌ற்றை‌ப் பா‌ர்‌த்தா‌ல் சா‌ப்‌பிடலாமா, வே‌ண்டாமா எ‌ன்ற அ‌ச்ச‌ம். அ‌திக‌ம் சா‌ப்‌பிடலமா? சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌ஜீரணமாகுமா? நெ‌ஞ்சு க‌றி‌க்குமா? எது‌க்‌கி‌க்கொ‌ண்டே இரு‌க்குமா? இதுபோ‌ன்ற கே‌ள்‌விகளு‌க்கெ‌ல்லா‌ம் மு‌க்‌கிய காரணமாக ‌விள‌ங்குவது ‌பி‌த்த‌ம்.

இ‌ந்த ‌பி‌த்த‌‌ம் தொட‌ர்பான ‌பிர‌ச்சனைகளையு‌ம், அதனை போ‌க்கு‌ம் எ‌ளிய இய‌ற்கை மரு‌த்துவ முறைகளையு‌ம் இ‌ப்போது பா‌ர்‌‌‌ப்போ‌ம்.

இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

வர்த்தகச் செய்தி மலர் :
* சென்செக்ஸ் 364 புள்ளிகள் சரிவு  

மும்பைப் பங்குச் சந்தையில் இன்றும் சரிவு நிலையே காணப்பட்டது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 363.90 புள்ளிகள் சரிந்து 17,506.63 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு அதிகபட்சமாக 108.50 புள்ளிகள் சரிவடைந்து முடிவில் 5,257.90 ஆக உள்ளது.

ஆக்சிஸ் பேங்க், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் பங்கு விலைகள் சற்றே ஏற்றம் கண்டன.

ஆர்.காம், ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்திலிருந்து நிறுத்தப்படவுள்ளதால் அதன் விலைகள் சரிவு கண்டன.

பெரும்பாலான துறைகளின் பங்குகள் இன்று சரிவைச் சந்தித்தன.

* பவுன்: ரூ. 56 உயர்வு

சென்னை, ஜூன் 20: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது.

 சனிக்கிழமை ஒரு பவுன் ரூ. 16,920-ஆக இருந்தது. திங்கள்கிழமை பவுன் ரூ. 16, 976-க்கு விற்பனையானது.

 திங்கள்கிழமை விலை:

 ஒரு பவுன்: ரூ. 16,976.

 ஒரு கிராம்: ரூ. 2,122.


விளையாட்டுச் செய்தி மலர் :

* கிங்ஸ்டன் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 34/1

கிங்ஸ்டன்:இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் 34 ரன்னிற்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. இந்தியா‌வை விட 212 ரன்கள் பின்தங்கி உள்ளது. முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், கிங்ஸ்டன் ஜமைக்கா, சபினா பார்க் மைதானத்தில் நேற்று துவங்கியது. சீனியர் வீரர்கள் டிராவிட், லட்சுமண் மீண்டும் அணிக்கு திரும்பினர். தமிழக வீரர்கள் அபினவ் முகுந்த், முரளி விஜய் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் ஆகிய மூவரும், அறிமுக வீரர்களாக களமிறங்கினர். "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரெய்னா 82, ஹர்பஜன் 70, டிராவிட் 40 ரன் சேர்த்தனர்.வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் எட்வர்டு 4 விக்கெட்டுகளையும் ராம்பால் மற்றும் பிஷூ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஆட்டம் முடிவின்போது 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன் எடுத்திருந்தது.

* விம்பிள்டன் டென்னிஸ்: நடால் வெற்றி

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், உலகின் "நம்பர்-1' வீரர் ஸ்பெயினின் நடால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில், 125வது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று துவங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடால், அமெரிக்காவின் மைக்கேல் ரசலை சந்தித்தார். இதன் முதல் செட்டை 6-4 என நடால் வென்றார். தொடர்ந்து அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், அடுத்த இரு செட் களையும் 6-2, 6-2 என கைப்பற்றினார். முடிவில் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற நடால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆன்மீகச் செய்தி மலர் :
* அருள்மிகு விஜயாஸனர் திருக்கோவில்

மூலவர்    :    விஜயாஸனர் ( பரமபத நாதன்)
உற்சவர்    :    எம்மடர் கடிவான்
அம்மன்/தாயார்    :    வரகுண வல்லி, வரகுணமங்க‌ை
தல விருட்சம்    :    -
தீர்த்தம்    :    அக்னி தீர்த்தம், ‌தேவபுஷ்கரணி
ஆகமம்/பூஜை     :    -
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    வரகுணமங்கை
ஊர்    :    நத்தம்
மாவட்டம்    :    தூத்துக்குடி
மாநிலம்    :    தமிழ்நாடு

பாடியவர்கள்:

மங்களாசாஸனம்

நம்மாழ்வார்

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய் எனக்கருளி
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.

-நம்மாழ்வார்

 தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதியில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.

இங்கு பெருமாள் விஜயகோடி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்

 தலபெருமை:

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி

1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்

2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)

3. செவ்வாய் : திருக்கோளுர்

4. புதன் : திருப்புளியங்குடி

5. குரு : ஆழ்வார்திருநகரி

6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை

7. சனி : பெருங்குளம்

8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்களம்)

9. கேது : 2. இரட்டைத் திருப்பதி

சோழநாட்டில் அ‌மைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல் படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நதி அமைக்கப்படுவதில்லை.அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அதைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். ‌சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம்.

  தல வரலாறு:

நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கும் புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி விஜயõஸனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.

 திருவிழா:

வைகுண்ட ஏகாதசி
 
திறக்கும் நேரம்

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

சலனத்தை வெல்லும் வழி - ரமணர்

வெளி விஷயங்களையெல்லாம் நிலையற்று நசிப்பதை உணர்ந்தால் அதனால் விஷய விரக்தி உண்டாகும். அதுவே (ஆன்ம) விசாரணையே மிக முக்கியமான முதற்படி. அவ்விசாரணையால் உலக இன்பங்கள், செல்வம், பெயர், புகழ் முதலியவற்றில் துச்ச புத்தி உண்டாகும். இவ்விதம் விரக்தியுற்ற புத்திக்கு 'நான் யார்' என்னும் விசாரணை வழி தெளிவாய் விளங்கும்.

'அஹம்' விருத்தியின் உற்பத்தி ஸ்தானம் இதயமே. அதுவே அடைவதற்குரிய இடம். சாதகனது அமைப்பு விசாரத்திற்கு இடங்கொடாவிடில் பக்தி மார்க்கத்தை அனுசரிக்கலாம். ஈசனிடமோ, குருவினிடமோ அல்லது தர்மம், பரோபகாரம், அன்பு, அழகு என்னும் லட்சியங்களிலோ முழு மனமும் ஈடுபட்டால் பிற பற்றுதல்கள் குன்றி ஏகாக்கிரதை உண்டாகும்.

வினாடி வினா :

வினா - 100 சதவிகித மின் வசதி பெற்ற வட கிழக்கு எல்லைபுற இந்திய மாநிலம் எது ?

விடை - நாகலாந்து

இதையும் படிங்க :

* சிறுவனை பாடாய்படுத்தும் தோல் எரிச்சல் : மேல்சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

large_261358.jpg

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே, உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் கொண்டே வாழும் வினோத நோயால் தாக்கப்பட்ட சிறுவன் கீர்த்திவாசன், மேல்சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கிறார். முத்துப்பேட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவரது மகன்கள் பாரதி, 8, கீர்த்திவாசன், 7. கீர்த்திவாசன் முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவரது உடல் தோலில் இருக்க வேண்டிய ஆறு அடுக்கில், நான்கு அடுக்குகள் குறைவாக உள்ளன. இதனால், இவருக்கு வியர்ப்பதில்லை. வெப்பம் அதிகமாகும் போது, உடலில் கொப்புளத்துடன் எரிச்சல் ஏற்படுகிறது. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை உடலில் தண்ணீர் ஊற்றும் நிலை உள்ளது. மழை, குளிர் காலங்களில் கூட மாற்றமில்லை.

தந்தை குமார் கூறியதாவது: பிறந்ததிலிருந்து இந்த நோய் இருந்தது. அடிக்கடி காய்ச்சல் வரும். பல டாக்டர்களிடம் காண்பித்தோம். இறுதியில் திண்டுக்கல் மருத்துவமனையில் காண்பித்த போது, அங்கிருந்த கனடா டாக்டர் ஒருவர், "தோல் பிரச்னை' என கண்டுபிடித்தார். ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் உள்ள டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார். குளிர் பிரதேசத்திற்கு செல்ல அறிவுறுத்துகிறார். பண பற்றாக்குறையால் எங்கும் செல்லவில்லை. யாராவது எனது மகனுக்காக உதவ வேண்டும். இதற்காக, கலெக்டர் அருண்ராயிடம் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு குமார் கூறினார். இவருக்கு உதவ விரும்புவோர் 97889 91417ல் தொடர்பு கொள்ளலாம்.

* இசைய வைக்கும் இசை: இன்று சர்வதேச இசை தினம்

large_261238.jpg

இசை ஒரு கலை. உலகில் இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. இசை, நமது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கிறது. இசை, அமைதி மற்றும் அழகான விஷயம்.

அனைவரிடத்திலும் இசையை பரப்பும் நோக்கிலும், இசைத்துறையில் சாதனையை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி, சர்வதேச இசை தினம் கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக 1982ல் தொடங்கப்பட்ட இது, தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் இசைக்கலைஞர்கள் இலவசமாக கலையரங்கம், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவர். இதன் மூலம், இசையின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறைக்கு உணர்த்துவர்.

தோன்றிய விதம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது, மனிதன் மற்றும் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. கைதட்டுதல் உள்ளிட்ட நமது அசைவுகளின் மூலமே இசையின் பயணம் துவங்கியது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து, தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் செல்ல தொடங்கிவிட்டது.

இசைகள் பலவிதம்: பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என இசையின் பரிமாணம் உருவாகியது. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இசைகளை உருவாக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள், உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் பின்பற்றப்படுகிறது. ஒன்று, வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடக இசை.

இசை என்பது பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டு சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாசாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சமாகவும் அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் ஏற்ற வகையிலும் இசைக்கும் பொறுப்பு கலைஞர்களுக்கு உள்ளது. இசை மேலும் வளர்ச்சிப்பாதையில் செல்ல இசைக்கலைஞர்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

அறிஞர்களின் பார்வையில்...

* இசை ஒரு அன்பின் உணவு; விளையாடுங்கள் - ஷேக்ஸ்பியர்
* இசை எனது மதம் - ஜிமி ஹென்றிக்ஸ்
* இசை, உன் மனதை வெளிக்கொண்டு வரவேண்டும் - மிஸி எலியாட்
* இசை, உணர்ச்சியின் சுருக்கம் - லியோ டால்ஸ்டாய்
* கல்வி, ஒழுக்கத்தின் உயிரோட்டமாக இசை இருக்க வேண்டும் - பிளாட்டோ
* இசை, உலகை மாற்றும். ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது - போனோ.

இசையில் வசமாகா இதயம் உண்டோ? எல்லோருக்கும் கிடைக்காத பெரும் செல்வம் இசை. இசையில் வசமாகாத ஜீவராசிகள் உண்டோ. நம்மை மகிழ்விப்பதும், மயங்க வைப்பதும் இசை. பல வடிவங்களில் உலகம் முழுவதும் வியாபித்துள்ள இசைக் கலையில் சாதித்தவர்கள் பலர்.

இசைப்பெருங்கடலில் மூழ்கி முத்தெடுத்த இசைவித்தகர்கள் பலர். உலக இசை தினமான இன்று, இசையை மூச்சாக சுவாசித்து, சாதித்துக்கொண்டிருக்கும் சிறுவனை பற்றி அறிந்து கொள்வோம். மதுரை திருப்பரங்குன்றத்தில், தவில் வாசிப்பதில் திறமையை காட்டி வருகிறார் 11 வயது சிறுவன் சிவராம கணேசன். இவரது தந்தை தவில் வித்வான் ஆலடி அருணா. தாய் கிருஷ்ணவேணி நாதஸ்வர கலைஞர். மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தரவேண்டுமா என்பது போன்று, சிவராம கணேசன் மூன்றரை வயதில் தவில் வாசிக்க துவங்கினார். ஆலடி அருணா, கச்சேரி இல்லாத நாட்களில் வீட்டில் தினம் மாலையில் தவில் வாசிப்பதை வழக்கமாக கொண்டவர். அவர் வாசிப்பதை அருகில் அமர்ந்து கூர்மையாக கவனித்த மூன்றரை வயது சிவராம கணேசன், ஒருநாள் தந்தையின் தவிலில் வாசித்தார். தாளம் தப்பாமல் வாசிப்பதை கவனித்த தந்தை, ஆச்சரியம் அடைந்தார். சில நாட்கள் மகனுக்கு தவில் வாசிக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். ஒரே மாதத்தில் தேர்ந்த கலைஞன் போன்று வாசித்த சிவராம கணேசனின் தவில் கச்சேரி அரங்கேற்றம், மதுரையில் 2003ல் நடந்தது. கும்பாபிஷேகங்கள் உட்பட இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டிலும் 10க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றார். 2006ல் கன்னியாகுமரியில் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிவராம கணேசனின் வாசிப்பை ரசித்த, அப்துல்கலாம் அவரை பாராட்டினார்.

சிவராம கணேசன் கூறுகையில், ""தவில் இசையில் புதுமைகள் செய்ய வேண்டும். தவில் இசையில் ஆராய்ச்சிகள் செய்து, அதன் பெருமையை உலககெங்கும் பரப்ப வேண்டும். சென்னை இசை விழாக்களில் பங்கேற்க வேண்டும். இசைப்பள்ளி துவங்கி, இசையில் ஆர்வமுள்ள ஏழை, எளிய, நடுத்தர வகுப்பினருக்கு இலவசமாக இசையை கற்பிக்க வேண்டும். வலையபட்டி சுப்பிரமணியன், ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், தஞ்சாவூர் கோவிந்தராஜ், திருவாவழத்தூர் சூரியமூர்த்தி ஆகியோர்களைப் போன்று தவிலில் மிகப்பெரும் சக்கரவர்த்தியாக வர வேண்டும். படிப்பில் கம்ப்யூட்டர் பொறியாளராக வேண்டும்,'' என்றார். 20க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களும், பல கேடயங்களும் பரிசாக பெற்றுள்ள சிவராம கணேசனின் இசைப் பயணம் தொடர் சாதனைப் பயணமாக அமையட்டும்.

நன்றி - சமாச்சார், வெப்துனியா, தின மலர், தின மணி.No comments:

Post a Comment