Wednesday, June 15, 2011

இன்றைய செய்திகள் - ஜூன் , 15, 2011.

முக்கியச் செய்தி :

1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு

sc.jpg

டெல்லி: தமிழகத்தில் இந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்றும் இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சியில் கடந்த கல்வியாண்டில், முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் விரிவாக்கப்படவிருந்தது.

ஆனால், அதிமுக அரசு அமைந்ததும், இந்தத் திட்டம் தரமானதாக இல்லை, எனவே நடப்பு ஆண்டில் இது நிறுத்தி வைக்கப்படுகிறது. நிபுணர் குழு அமைத்து இதை சீரமைத்த பின்னர் பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்தது.

இதுதொடர்பாக சட்டத் திருத்த மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதித்து விட்டது. மேலும், நடப்பு ஆண்டிலும் சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், கடந்த திமுக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. சமச்சீர் கல்வித் திட்டம் என்ற பெயரில் அதிகாரத்தை வரம்பு மீறிப் பயன்படுத்தி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அவரது மகள் கனிமொழி ஆகியோர் எழுதிய பாடல்களை பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.

கருணாநிதியின் புகழ் பாடும் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தங்களது பாடல்களைப் படிக்கும்படியான கட்டாய நிலையை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். எனவேதான் இவற்றை நீக்கி தரமான பாடங்களை குழந்தைகளுக்குக் கொடுக்க அரசு முடிவு செய்தது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிள் பி.எஸ்.செளகான், ஸ்வதேந்திர குமார் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப் படித்துப் பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:

1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்.

இந்தக் குழு தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். அதில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் இடம் பெற வேண்டும். இவர்கள் தவிர பள்ளிக் கல்வி வாரிய அதிகாரிகள் 2 பேர், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 2 பேரும் இக்குழுவில் இடம் பெற வேண்டும்.

2 வாரத்திற்குள் இந்த நிபுணர் குழு தனது அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையின் மீது 1 வாரத்திற்குள் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்.

உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை 2,3,4,5,7,8,9,10ம் வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகச் செய்தி மலர் :

* அமெரிக்காவில் 17ம் தேதி முதல் 10வது தமிழ் இணைய மாநாடு

14-tamil-internet-conference30.jpg

சென்னை: 10வது தமிழ் இணைய மாநாடு, அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. ஜூன் 17ம் தேதி தொடங்கி 19ம் தேதி முடிய 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 10 நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.

சிறுவர் திருக்குறள் போட்டி

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பதிவு பெற்ற தன்னார்வலர் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் சிறுவர் திருக்குறள் போட்டி நடக்கிறது. கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் குறுந்தகடுகளும் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

தமிழ் அறிஞர்கள் பங்கேற்பு

இந்த மாநாட்டில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, செர்மனி, சுவிசர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அறிஞர்கள் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரை படிக்கின்றனர். இணையத்தில் தமிழ் வளர்ச்சி அடைந்துள்ள விதம், தமிழ் மென்பொருள்கள் பற்றி விவாதிக்கின்றனர்.

மேலும் மு.அனந்தகிருட்டினன், பொன்னவைக்கோ, பென்சில்வேனியா பல்கலை தெற்கு ஆசிய துறைத்தலைவர் தாவூத் அலி, பேராசிரியர் ஹெரால்டு ஷிப்மன், பேராசிரியர் அண்ணாமலை, பிரான்சு பேராசிரியர் ஏ.முருகையன், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ்பாபு, கனடா பேராசிரியர் செல்வகுமார், ஈழத்தின் சிவா அனுராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த தகவலை அமெரிக்கா பன்னாட்டுக்குழு தமிழ் இணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் மு.இளங்கோவனும் பங்கேற்பு:

இந்த மாநாட்டில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியரும் தமிழ் இணையத்துறையில் முன்னோடியுமான முனைவர் மு.இளங்கோவனும் பங்கேற்று ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கவுள்ளார்.

இணையவழித் தமிழ்ப் பாடங்கள் என்ற தலைப்பில் அவர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறார்.

இன்றைக்கு வகுப்பறையில் நடக்கும் தமிழ்ப்பாடங்கள் எதிர்காலத்தில் இணையத்தில் நடைபெற உள்ளன. இன்றும் நூற்றுக்கணக்கான இணைய தளங்களில் தமிழ்ப்பாடங்கள் உள்ளன. இலவசமாகவும், கட்டணம் கட்டியும் இந்தப் பாடங்களைப் படிக்கலாம். வெளிநாட்டு மாணவர்களும் தமிழ்மாணவர்களும் தமிழ் படிக்க உதவும் வகையில் உள்ள இந்தப் பாடங்களில் தமிழ் அகரவரிசை, பேச்சுத்தமிழ், உரையாடல், தமிழர் பண்பாட்டுக்கூறுகள் உள்ளன.

திரைப்படங்களில் இடம்பெறும் இலக்கியப்பாடல்கள் கொண்டு இணையதளங்களில் தமிழ்ப்பாடங்கள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடங்களில் உள்ள நிறை குறைகளை எடுத்துக்காட்டி முழுமையான தமிழ்ப்பாடங்களை எப்படி வடிவமைப்பது என்று இளங்கோவன் தம் ஆய்வுக்கட்டுரையில் விளக்கவுள்ளார்.

இளங்கோவனின் தமிழ் இணையப் பணிகளைப் பாராட்டும் வகையில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா அமைப்பு இந்த ஆண்டு நடத்தும் மூன்று நாள் ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக இவரை அழைத்துப் பாராட்டவுள்ளது.

தெற்குக் கரோலினா மாநிலத்தில் உள்ள சார்ள்ஸ்டன் நகரில் இந்த ஆண்டு நடைபெறும் பெட்னா விழாவில் இளங்கோவன் சிறப்பிக்கப்பட உள்ளார். மேலும் நியூயார்க், வாஷிங்டன், பாஸ்டன், நியூசெர்சி, வடக்குக் கரோலினாவில் நடைபெறும் தமிழ் விழாக்களிலும் அவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றுச் சிறப்புரையாற்ற உள்ளார்.

* வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை

14-obama300-1.jpg

வாஷிங்டன்: இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் மாணவர்கள் வேலைவாய்ப்புகளை கைப்பற்றுவதில் முன்னணி பெற்றுவருகிறார்கள். எனவே இனி அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அமெரிக்கர்களை அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் களத்தில் பணிக்கு பொருத்தமானவர்களை கண்டறிவது அமெரிக்க நிறுவனங்களுக்கு சிரமமாக உள்ளது. இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்ல அடையாளம் அல்ல என ஒபாமா வட கரோலினா, டர்ஹாமில் பேசும்போது தெரிவித்தார்.

இப்போது அமெரிக்காவில் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் 4-க்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் உள்ளனர். ஆனால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதற்கு மாறாக உள்ளது. இந்த வேலைகளுக்கு ஆசியர்கள்தான் வரவேண்டியுள்ளது.

திறன்வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு பணியிடத்தை நிரப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாக தொழில்துறை பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல," என்று ஒபாமா குறிப்பிட்டார்.

* தவறான இந்திய வரைபடத்தை ஆஸ்திரேலியா வாபஸ்: இந்தியர்கள் மகிழ்ச்சி
மெல்போர்ன்: தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட ஆஸ்திரேலிய அரசு இந்தியர்களின் எதிர்ப்பால் அதை வாபஸ் பெற்றுள்ளது.

அன்மையில் ஆஸ்திரேலிய அரசு இந்திய வரைபடத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டது. அதில் ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேச மாநிலங்கள் இல்லை. இதற்கு இந்தியா கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது. மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களும் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தவறான வரைபடத்தை இணையதளத்தில் இருந்து எடுத்தது.

இது குறித்து ஆஸ்திரேலிய அரசு அளித்துள்ள விளக்கம்,

இந்திய வரைபடத்தை ஐ.நா. விடம் இருந்து பெற்றோம். அதை சரியாகத் தெரியாமல் இணையதளத்தில் வெளியிட்டுவிட்டோம். இந்த செயலுக்காக நாங்கள் வருந்துகிறோம் என்று கூறியுள்ளது.

இந்திய வரைபடத்தை வாபஸ் பெற்றதற்காக சிட்னியில் உள்ள இந்தியர்கள், இந்திய ஆஸ்திரேலிய கவுன்சில் ஆகியவை மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

* நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-கட்டடங்கள் இடிந்தன
கிறிஸ்ட் சர்ச்: நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சில கட்டடங்கள் சேதமடைந்தன. மீட்பபுப் படையினர் விரைந்து சென்று அதில் சிக்கியவர்களை மீட்டனர்.

ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 5.2 ரிக்டராக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கட்டடங்கள் அதிர்ந்தன. சில கட்டடங்களில் சேதம் ஏற்பட்டு இடிந்தன. இதையடுத்து அங்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். கிறிஸ்ட்சர்ச் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, யாரும் காயமடைந்ததாகவோ தகவல் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் கிறிஸ்ட்சர்ச் நகரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 181 பேர் அதற்குப் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.

* சீனா உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரிப்பு
வாசிங்டன், ஜூன். 14-

சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக அமெரிக்காவின் செனட்டர் ஜிம்வெப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக வாசிங்டனில் நடைபெற்ற வெளியுறவுத்துறை குறித்த கருத்தரங்கில் அமெரிக்காவின் செனட்டர் ஜிம்வெப் தெரிவித்துள்ளார். சீனா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் நீண்ட கால நட்புறவே இதற்கு உதாரணமாகும் என தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிகாரி ஜான் கெர்ரி பேசுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவிற்கு சென்றிருந்த பாகிஸ்தான் அதிபர் சீனா தலைசிறந்த நட்பு நாடு என்று பாராட்டியுள்ளதையும் குறிப்பிட்டார்.

* இலங்கையின் கொலைக்களம்" - பிரிட்டன் பத்திரிகைகளில் விளம்பரம்

four.jpg

கொழும்பு, ஜூன் 14- "இலங்கையின் கொலைக்களம்" என்னும் தலைப்பில் இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடியோவின் முழுத் தொகுப்பை பிரிட்டனின் "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது. இதுகுறித்த விளம்பரங்கள் அந்த தொலைக்காட்சி சார்பில் பிரிட்டனின் முக்கியப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.

த சண்டே டைம்ஸ், த இன்டிபென்டன்ட், மெயில் ஒன் சண்டே உள்ளிட்ட பிரிட்டன் பத்திரிகைகளில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும், தமிழர் அல்லாதவர்களும் இந்த விடியோ காட்சியை பார்க்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெரும் பணத்தை செலவழித்து இவ்வாறு பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஜூன் 14-ம் தேதி சேனல் 4-ல் ஒளிபரப்பாகவுள்ள இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விடியோ குறித்து பிரிட்டன் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

* ஷீலா தீட்சித் குறித்து கேலி: நியுஸிலாந்து டிவிக்கு அபராதம்

மெல்போர்ன், ஜூன்.14: கடந்த அக்டோபர் மாதம் ஒரு நிகழ்ச்சியின்போது தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் குறித்து கேலியாக கருத்து வெளியிட்டதற்காக நியுஸிலாந்து டிவிக்கு 2444 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டி தொடர்பான ஒரு நிகழ்ச்சியின்போது நியுஸிலாந்து டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பால் ஹென்றி தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் பெயரை வெவ்வேறு பொருள்படி கேலியாகக் குறிப்பிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஒளிபரப்பு தர ஆணையம், கண்ணியத்தை மீறியதற்காக 2444 நியுஸிலாந்து டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

பால் ஹென்றியின் கருத்து ஷீலா தீட்சித்துக்கும், இந்திய மக்களுக்கும் தீங்கிழைப்பதாகும் என ஒளிபரப்பு தர ஆணையம் தெரிவித்தது.

முன்னதாக கடந்த ஆண்டு ஷீலா தீட்சித்தை கேலி செய்ததற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த டிவி மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

* குஜராத் கலவரத்தால் பயங்கரவாதி ஆனேன்: ஹெட்லி
வாஷிங்டன், ஜூன் 14: குஜராத் கலவர விடியோ காட்சிகளால் பயங்கரவாதி ஆனதாக லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட அந்த விடியோ காட்சிகளை எனக்கு அடிக்கடி காண்பித்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மும்பை தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் அவர் ஏற்கெனவே வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந் நிலையில், லஷ்கர்-இ-தொய்பா தங்களது இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது குறித்து நீதிமன்றத்தில் அண்மையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

"லஷ்கர் அமைப்பின் தலைமையிடமான பாகிஸ்தானின் முஸôபராபாத் நகரில் நடைபெற்ற பயங்கரவாத முகாமில் கலந்து கொண்டேன். அப்போது, 2002-ல் நடைபெற்ற குஜராத் கலவர விடியோ காட்சிகளை காண்பித்து என்னைப் போன்றோரை இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தூண்டினார்கள்.

குஜராத்தில் மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதையும், வீடுகள் தீக்கிரையாக்கப்படும் காட்சிகளும் எனது மனதைப் பாதித்தது.

 விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பாபா பஜ்ரங்கி என்பவரின் பேச்சை ரகசியமாக படம் பிடித்த விடியோ காட்சிகளையும் காண்பித்தார்கள். அதில், ஏராளமான முஸ்லிம் பெண்களைக் கொன்றதாகவும், வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் பாபா பஜ்ரங்கி கூறுகிறார்.

பாபர் மசூதி இடிப்பு விடியோ காட்சிகளையும் காண்பித்தார்கள். பல வாரங்களாக அந்த விடியோ காட்சிகளை மட்டுமே ஒளிபரப்பினார்கள்.

ஒவ்வொரு விடியோவும் முடிந்த பின்னரும் அது குறித்து விவாதித்து இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தூண்டினார்கள்' என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ள டேவிட் ஹெட்லி, மும்பையின் முக்கிய பகுதிகளை வேவு பார்த்து நகரின் வரைபடங்கள், விடியோ, புகைப்படங்களை லஷ்கர் இயக்கத்துக்கு அனுப்பினார்.

அதன் அடிப்படையிலேயே மும்பை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.


தேசியச் செய்தி மலர் :

*கங்கையை காக்க 115 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சாது மரணம்

14-swami-nigamananda300.jpg

டேராடூன்: கங்கை நதி மாசுபடுவதை தடுத்து அதைக் காக்கக் கோரி கடந்த 115 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சாது இன்று மரணடைந்தார்.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த சுவாமி நிகாமனானந்த் கங்கை நதி மாசுபடுவதை தடுக்கக் கோரியும் ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறும் பகுதிகளை சுற்றிலும் அமைந்துள்ள கல் குவாரிகளை அகற்றக் கோரியும் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் நான்கு மாதங்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போல இவர் குறித்த தகவல்களை வட இந்திய மீடியாக்கள் பெரிதாக வெளியிடவில்லை.

இந் நிலையில் இவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து டேராடூனில் உள்ள இமாலயன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ஆனால், கடந்த மே மாதம் 2ம் தேதிஅவர் கோமாநிலைக்கு சென்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்தார்.

உண்ணாவிரதம் இருந்து உடல் நிலை பாதிக்கப்பட்ட பாபா ராம்தேவும் இதே மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இரவில் நடந்ததை நாடு மறக்காது-ராம்தேவ்:

இந் நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து ஆசிரமம் திரும்பிய ராம்தேவ் நிருபர்களிடம் கூறுகையில், ஊழலுக்கு எதிராக இந்தியா விழித்துக் கொண்டுவிட்டது. எனினும் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராக நான் தொடர்ந்து போராட உள்ளேன்.

எனது உண்ணாவிரதப் போராட்டத்தை போலீஸை விட்டு தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். அந்த இரவில் நடந்ததை இந்தியா ஒருபோதும் மறக்காது. அது ஒரு கறுப்பு இரவு. அமைதியாக போராடியதைத் தவிர நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை என்றார்.

* ஸ்பெக்ட்ரம் ஊழல் அறிக்கை: ஜோஷியின் அறிக்கையை நிராகரித்த சபாநாயர் மீரா

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் அலுவலகமே பொறுப்பு என்று குற்றம் சாட்டி நாடாளுமன்ற பொதுக் குழுவின் தலைவராக இருந்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி அனுப்பிய 270 பக்க அறிக்கையை மக்களவை சபாநாயகர் மீரா குமார் நிராகரித்து ஜோஷிக்கே திருப்பி அனுப்பி விட்டார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இருந்த நாடாளுமன்றப் பொது கணக்கு குழு விசாரித்தது. பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பதவிக் காலம் முடிவதற்கு 1 நாள் முன்பதாக, இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சியினருடன் ஆலோசனை நடத்தாமல் தானே ஒரு அறி்க்கையை தயார் செய்தார் ஜோஷி.

அதில் மத்திய அரசையும் பிரதமர் அலுவலகத்தையும் கடுமையாக குறை கூறியிருந்தார் ஜோஷி. பிரதமர் அலுவலகமே 2ஜி ஊழலுக்குப் பொறுப்பு என குற்றம் சாட்டியிருந்தார். தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராசா இந்த ஊழலை செய்யாமல் தடுக்க பிரதமர் அலுவலகமும் மத்திய அமைச்சரவை செயலாளரும் தவறிவிட்டனர் என்று அதில் ஜோஷி கூறியிருந்தார்.

இதை மிகக் கடுமையாக எதிர்த்த குழுவின் இருந்த காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள், ஜோஷியின் அறிக்கையை ஏற்க மறுத்து கலாட்டா செய்தனர். இதையடுத்து அவர் வெளிநடப்பு செய்யவே, அவரை பதவியை விட்டு நீக்க தீர்மானம் போட்டனர்.

ஆனாலும் தனது குழுவினரால் நிராகரிக்கப்பட்ட அந்த அறிக்கையை ஜோஷி சபாநாயகர் மீரா குமாருக்கு அனுப்பி வைத்தார்.

அந்த அறிக்கையை தற்போது சபாநாயகர் மீராகுமார் நிராகரித்து ஜோஷிக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

* பிரம்மபுத்ரா குறுக்கே சீனா அணை : பாதிப்பு வராது என்கிறார் கிருஷ்ணா

large_257781.jpg
 

புதுடில்லி : ""பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டியிருப்பதால், இந்தியாவுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இமயமலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, சீனா வழியாக இந்தியாவுக்குள் பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே சீனா அணை கட்டி நீரை மடை மாற்றம் செய்வதால், இந்தியாவுக்குள் வரும் பிரம்மபுத்ரா நதி நீரின் அளவு குறைந்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குறிப்பிடுகையில், "திபெத்தில் உள்ள சாங்மு என்ற இடத்தில், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, நீர்மின் திட்டத்துக்காக சீனா அணை கட்டியுள்ளது. சீன அரசின் இந்த நடவடிக்கையால், நம் பகுதிக்கு வரும் தண்ணீர் அளவில், உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. பிரம்மபுத்ரா நதியின் பெரும்பாலான நீர்பிடிப்பு பகுதிகள், இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் உள்ளது. எனவே, இந்த விஷயம் முக்கியமானதாகும். பிரம்மபுத்ரா நதி நீரை சீனாவின் வடக்கு பகுதிக்கு மடை மாற்றம் செய்வது அந்நாட்டின் நீண்ட நாள் திட்டம். எனவே, இது புதிய தகவல் அல்ல. இருப்பினும் இந்த விஷயம் குறித்து அந்நாட்டிடம் தூதரக மட்டத்தில் விவாதிக்கப்படும். பிரம்மபுத்ரா நதி விவகாரத்தால் கார்கில் போன்ற சம்பவம் ஏதும் ஏற்பட்டு விடாது. ஏனென்றால், நம் எல்லைபுறம் மிகுந்த கண்காணிப்பில் உள்ளது. ராணுவ மட்டுமல்ல, மற்ற ஏஜன்சிகளும் எல்லைபுறத்தை கண்காணிக்கின்றன' என்றார். கசகஸ்தானில் நடக்கும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க கிருஷ்ணா சென்றுள்ளார். அங்கு சீனாவிடம் இது குறித்து விவாதிக்கப்படுமா என்பதற்கு அவர் பதில் ஏதும் கூறவில்லை.

* கர்நாடகம்: இரும்புத் தொழிற்சாலைக்கு பறிபோகும் மூலிகை மலை?

hill.jpg

ஹூப்ளி, ஜூன் 14- கர்நாடக மாநிலம், கடாக் மாவட்டத்தில் உள்ள கப்பட்டா மலைப் பகுதி மருத்துவ மூலிகைகளுக்கான சரணாலயப் பகுதியாக சமீபத்தில் மாநில அரசால் அறிவிக்கப்படது. இந்நிலையில், புதியதாக தொடங்கவுள்ள தனியார் இரும்புத் தொழிற்சாலைக்காக திடீரென அப்பகுதியை அரசு கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடாக் மாவட்டத்தில், முந்தர்கி தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தின் சார்பில் சுமார் 350 விவசாயிகளுக்கு இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முந்தர்கி தாலுகாவில், சுமார் 7000 ஏக்கர் நிலத்தை இரும்புத் தொழிற்சாலைக்காக கையப்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், மூலிகை விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தென் இந்தியாவில், மருத்துவ மூலிகைகளுக்கான சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்ட முதல் இடம் கப்பட்டா மலைப் பகுதி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதை இரும்புத் தொழிற்சாலைக்காக திடீரென அரசு கையகப்படுத்த முயல்வது அங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இயற்கை நல அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :

* தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியம் தேவை: முதல்வர் ஜெயலலிதா

jaypm.jpg

சென்னை, ஜூன் 14: பல்வேறு துறைகளிலும் தமிழகம் ஒட்டுமொத்த வளர்ச்சி பெறுவதற்கான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் மானிய நிதி உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

30 பக்க மனு: தில்லியில் பிரதமரைச் சந்தித்தபோது 30 பக்க கோரிக்கை மனு ஒன்றை ஜெயலலிதா அளித்தார். அதில் இந்த கோரிக்கையை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழர்: இலங்கையில் மனித உரிமை மீறல், போர்க் குற்றச் செயல்களுக்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தில் தமிழ் மக்கள் முழுதாக பங்கேற்க இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். அரசியல்சட்ட சீரமைப்பு செய்து, பொதுப் பட்டியலில் உள்ள சில அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க வேண்டும். இது இலங்கைத் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

பிற நாடுகளுடன் சேர்ந்து இலங்கை மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும்.

 தமிழகத்தின் மற்ற மக்களுக்கு உரிய அனைத்து சமூக நலத்திட்டங்களும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்பட உள்ளது. அதற்குக் கூடுதலாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14.1 கோடி செலவாகும். அதை மத்திய அரசு வழங்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி உரிமையை மீட்டுத் தர வேண்டும்.

மீன்பிடித் தொழில்: பூம்புகார், முகையூரில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைத்து ராமேஸ்வரத்தில் மீன்பிடிப் படகுகள் அதிகம் சேராமல் தவிர்க்க வேண்டும்.

நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது அதை பதப்படுத்திட "நடுக்கடலில் மீன் பதப்படுத்தல் வசதி' என்ற முன்னோடி திட்டத்தைத் தொடங்க ரூ.80 கோடி தர வேண்டும்.

விசைப் படகுகளுக்கு டீசலுக்கான மத்திய கலால் வரி விலக்கு தருவதற்கான விதிகள் நடைமுறைக்குப் பொருந்தாமல் உள்ளன. எனவே அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

மொத்தத்தில் மீன்பிடி துறைக்கு ஒட்டுமொத்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ.245 கோடியும், ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.10 கோடி தொடர் செலவு நிதியும் அளிக்க வேண்டும்.

கடலோர பாதுகாப்புப் படைக்கு ரூ.107 கோடியில் புதிய வாகன வசதிகள் செய்து தர வேண்டும்.

மின்துறை: தமிழ்நாடு மின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை கடனில் இருந்து மீட்கவும், குவிந்த நட்டத்தைக் குறைக்கவும் ரூ.40 ஆயிரம் கோடி உதவியை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 10 இடங்களில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமங்களில் சூரியசக்தி தெருவிளக்குகள் அமைக்கவும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு வீடுகளுக்கு இலவச சூரிய மின்சக்தி வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே 3,000 மெகாவாட் திறனுக்கு 10 சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க, தெருவிளக்குகள் அமைக்க ரூ.45 ஆயிரம் கோடி தேவை.

கூடங்குளம் அணுமின் திட்டம், நெய்வேலி அனல்மின் திட்டம்-2, கல்பாக்கம் அணுமின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்யூரில் 4,000 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

2011 ஜூன் முதல் 2012 மே வரையில் தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக வழங்க வேண்டும். ஏற்கெனவே இதுகுறித்துப் பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மோனோ ரயில் திட்டம்: மோனோ ரயில் திட்டத்துக்கு ரூ.16,650 கோடி செலவாகும். இதற்கு தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் கீழ் நிதியுதவி செய்ய வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 68 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்க ரூ.10,200 கோடி செலவாகும். இந்தத் தொகையை சிறப்பு மானியமாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழக நதிகள் இணைப்பு: தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காவிரியை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு நதிகளுடன் இணைத்து வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கவும், உபரி நீரை பாசனத்துக்குப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது நீர்வழித் தொகுப்பை உருவாக்கி வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கும் உதவியாக இருக்கும் இதற்கு ரூ.4,000 கோடி செலவாகும்.

இந்திய அரசு அறிவிக்கை செய்துள்ள ஐந்து உள்நாடு நீர்வழித் தடங்களில் பழவேற்காடு ஏரியில் இருந்து புதுவை வரையிலான 132 கி.மீ. நீளமான பாதை தமிழகத்தில் வருகிறது. இது சரக்கு, பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாவுக்கு உதவியாக இருக்கும். இதற்கு ரூ.650 கோடி செலவாகும். இந்த தொகைகளை மத்திய அரசு வழங்க பரிசீலிக்க வேண்டும்.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பாயம் 5.2.2007-ல் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (கெஜட்) வெளியிடுவதுடன், அதை முழுமையாக அமல் செய்ய காவிரி நீர் நிர்வாக வாரியத்தை செயல்படுத்த வேண்டும்.

கடன் சுமையைக் குறைக்க: தமிழக அரசு கடன் சுமையைக் குறைக்க ஒரு லட்சம் கோடி ரூபாயை உதவியாக மத்திய அரசு வழங்க வேண்டும். இதுதவிர மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவியை வழங்க வேண்டும்.

முதியோர், விதவை உள்ளிட்ட 8 திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது. இவற்றில் 3 திட்டங்களுக்கு மட்டும் தலா ரூ.200 என்ற அளவில் மத்திய அரசு வழங்குகிறது. மீதியை மாநில அரசு வழங்குகிறது. எனவே மாநிலத்துக்கு சுமார் ரூ.2,556 கோடி நிதிச்சுமை ஏற்படுகிறது.

எனவே மத்திய அரசின் பங்களிப்பை தலா ரூ.1,000 ஆக உயர்த்தவும், எல்லா திட்டங்களுக்கும் நிதி உதவி வழங்கவும், பயனாளிகள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பை நீக்கவும் வேண்டும். இதற்காகக் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.2556.82 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

சிறப்பு பொது விநியோக திட்டம்: சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு வகைகள், எண்ணெய், மசாலாப் பொருள்கள் வழங்குவது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,036 கோடி செலவாகிறது. இதில் பாதியை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தரமான மருத்துவ சேவைக்கு: மூன்றாம் நிலை மருத்துவமனைகளை மேம்படுத்தி கிராம மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைப்பதற்காக அடுத்த இரு ஆண்டுகளில் மத்திய அரசு சிறப்பு மானியமாக ரூ.1800 கோடி வழங்க வேண்டும்.

மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்த அடுத்த இரு ஆண்டுகளில் ரூ.500 கோடி தேவைப்படும்.

நகர்ப்புற அடிப்படை வசதிகளுக்கு: வளரும் நகர்ப்புறங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் கோடி தேவைப்படும்.

நகர்ப்புறங்களின் குடிநீர் சப்ளையை மேம்படுத்த ரூ.9,500 கோடி தேவைப்படும்.

சாலை வசதியை மேம்படுத்த ரூ.5,700 கோடி, பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்ற ரூ.1,100 கோடி தேவை.

நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்க, ஏற்கெனவே உள்ளவற்றை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி தேவை. இவற்றுக்காக ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் இரண்டாம் பகுதியைத் தொடங்க வேண்டும்.

சூரிய சக்தி பசுமை வீடுகள்: சூரியசக்தி மின் வசதியுள்ள பசுமை வீடுகள் கட்ட ஆண்டுக்கு ரூ.1,125 கோடி தர வேண்டும். இதுதவிர ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகளுக்கு சூரியசக்தி மின்சார வசதி செய்ய ரூ.300 கோடி சிறப்பு மானியம் வழங்க வேண்டும்.

இவை உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

* உள்ளாட்சித் தேர்தல்: மாநில ஆணையம் ஆலோசனை

சென்னை, ஜூன் 14- உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநிலத் தேர்தல் ஆணையர் சோ. அய்யர் தலைமை தாங்கினார். இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

* பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்களை மையப்படுத்திய புதிய பயிற்றுவித்தல் முறை அறிமுகம்

school.jpg

சென்னை, ஜூன் 14: தமிழகம் முழுவதும் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 பாடப்புத்தகத்தை மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தி செயல்முறை விளக்கங்களைக் கொண்டு பயிற்றுவிக்கும் முறை எல்லா வகுப்புகளிலும் இந்தக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் தரம் குறைவாக இருப்பதால், மாணவர்களின் கல்வி நலன் கருதி இந்தத் தரத்தை ஆராய்வதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்துள்ளதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் வல்லுநர் குழு அமைத்து சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் தரத்தை ஆராய உத்தரவிட்டுள்ளது.

 இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி புதன்கிழமை எல்லாப் பள்ளிகளும் திறக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 2005-ம் ஆண்டு தேசிய கலைத் திட்ட வடிவமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆகியவற்றில் குழந்தைகளை மையப்படுத்தி, அவர்கள் எளிமையான முறையில் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கவும், அதன் மூலம் அவர்கள் மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாறுபட்டு சொந்தமாக சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் வேண்டும்.

அதன்படி, "குழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள்' என்ற முறை எல்லா வகுப்புகளிலும் இந்தக் கல்வியாண்டில் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 புதன்கிழமை பள்ளிகளைத் திறக்கும்போது இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்படி, பாடப்புத்தகத்தை மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தி செயல்முறை விளக்கங்களைக் கொண்டு வகுப்பறை நடத்தப்படும். இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வகுப்புகள் முடியும் தருவாயில் அனைத்து வகுப்புகளுக்கும் தேவையான இலவசப் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

 ஆகவே, கல்வி நிறுவனங்கள் எந்தக் குழப்பத்துக்கும் இடம் கொடுக்காமல் நல்ல முறையில் இந்தக் கல்வியாண்டில், அரசால் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டத்தை கடைப்பிடித்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.

 மாணவர்கள் நலனில் அக்கறைக் கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு, நல்ல முறையில் கல்வி கற்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில் பெற்றொர்களும், மாணவர்களும் எந்தவித குழப்பத்துக்கும் இடம்தர வேண்டாம். மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயில வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

கல்லூரிகள் திறப்பு:தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை திறக்கப்பட உள்ளன.


மூலிகை வளம் நிறைந்த குற்றால அருவிகள்

14-courtallam-falls-19.jpg

பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். அகத்தியர் கால் பதித்த திருத்தலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை அன்னையின் சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

குற்றால சீசன் காலம்

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

மூலிகைகளும், பழவகைகளும்

இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

ஒன்பது அருவிகள்

குற்றாலத்தில் மொத்தம் சிறிதும் பெரிதுமாக 9 அருவிகள் உள்ளன. பழைய அருவி, மெயின் பால்ஸ் என்று இனிய தமிழில் அழைக்கப் படும் பேரருவி, புலி யருவி, ஐந்தருவி, சிற்றருவி, புது அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி என்று ஏழு அருவிகள் மலையைச் சுற்றி மலையடிவாரங்களிலும், தேனருவி, செண்பகதேவி என்று இரு அருவிகள் என்று மலையின் மேலேயும் அமைந்துள்ளன.

பேரருவியும், குற்றாலநாதரும்

மெயின் ஃபால்ஸ் எனப்படும் பேரருவி குற்றாலம் நகருக்குள் இருக்கிறது இந்த அருவி 91 அடி உயரத்தில் இருந்து மலையில் பாய்ந்து முதலில் பொங்குமாங்கடல் என்ற பள்ளத்தில் விழுந்து அதை நிரப்பி வழிந்து கீழே இறங்குகிறது. வெகு தூரத்தில் இருந்தே கண்களைக் கவரும் பேரருவி இது. தூரத்தில் இருந்து பார்க்க கண்களை அகலவெட்டாமல் லயிக்கச் செய்யும் எழில் மிகு அருவி இது. தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில் அந்த அருவி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காட்சியளிக்கும். பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருவிக்கரையில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயம் சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையாக திகழ்கிறது. இங்கு அகத்திய முனிவர் நிறுவிய பராசக்தி பீடமும் அமைந்துள்ளது.

சிற்றருவி- இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

செண்பகாதேவி அருவி

பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தேனருவி

செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஐந்தருவி

குற்றாலம் நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ஐந்தருவி. அழகிய மலைச்சாரல், சிறு சிறு ஆறுகள், பழத்தோட்டங்கள், தங்குமிடங்கள், ஒரு சிறிய ஏரி எல்லாம் தாண்டி வருகிறது ஐந்தருவி. இங்கு அருவி ஐந்து பிரிவாக வந்து விழுவதால் ஐந்தருவி என்று பெயர். திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது. அடர்ந்த கானகங்கள் நிறைந்த மலைத்தொடர். மலையின் மேலே, உயரத்தில் எங்கேயோ, எங்கிருந்தோ பல நூறடிகளுக்கு வெள்ளிக் கம்பியாக ஒரு அருவி விழுந்து மீண்டும் கானகத்திற்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)

ஐந்தருவிக்கு போகும் முன்பாக ஒரு கிளைப் பாதை பிரிந்து மலையின் மேல் செல்கிறது. கொஞ்ச தூரம் சென்றதும் அரசாங்கத்தின் பழத்தோட்டத் துறை நடத்தும் ஒரு பழப்பண்ணை வருகிறது. அந்த பண்ணையின் உள்ளே நுழைந்தால் அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இரு அருவிகள் அங்கே உள்ளன. அதற்குப் பழத்தோட்ட அருவி என்று பெயர். ஆனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்க முடியாது. வி ஐ பிக்கள் மட்டுமே குளிக்க முடியும்.

புலியருவி

குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.

பழைய குற்றாலம் அருவி

குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.

பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

சுற்றுலா மையங்கள்

குற்றாலத்தை சுற்றிலும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பல பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. தென்காசி கோவில் அதில் முக்கியமானது. திருமலைக் குமரன் கோவில் என்று ஒரு அழகிய குன்றத்துக் குமரன் கோவில் தவற விடக் கூடாத இடமாகும். குன்றின் மேல் உள்ள கோவிலில் நின்று பார்த்தால் சுற்றி பச்சை பசலேன வயற்பரப்பும் சுற்றிலும் மேகம் கவிந்த குற்றால மலைத்தொடருமாக இயற்கை அன்னையின் எழில் நமது கண்களையும் மனதையும் ஒருங்கே கொள்ளை கொள்ளும். அருகில் உள்ள இலஞ்சி என்ற கிராமத்தில் ஒரு அழகிய முருகன் கோவில் உள்ளது.

கேரளா எல்லை அருவிகள்

குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையைத் தாண்டினால் ஆரியங்காவுக் கணவாயும், கேரளாவும், அச்சன் கோவிலும் வந்து விடும். கேரள எல்லையிலும் சில அருவிகள் உள்ளன. ஆளரவமில்லாத அற்புதமான அருவிகள் அவை. இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால் குற்றாலத்தின் நெரிசலைத் தவிர்த்தப் பச்சைப் பசேல் என்று போர்த்திக் கொண்ட அற்புதமான பாலருவி இருக்கிறது. தமிழ்நாட்டுப் பகுதிகளில் பாபநாசம் அகத்தியர் அருவியும், பாபநாசம் அணையும், பரிசலில் சென்றால் வரும் பாண தீர்த்தத்தையும் கண்டு குளித்து அனுபவிக்கலாம். ஒரு வாரம் தங்கி, கண்டு, ரசித்து அனுவவிக்க எண்ணற்ற இடங்கள் குற்றாலத்தைச் சுற்றி அமைந்துள்ளன.

அமைவிடம்

தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது. தென்காசி ரயில் நிலையம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து குற்றாலத்திற்கு பேருந்து வசதி உண்டு. மதுரையிலிருந்து நிறைய பேருந்துகள் குற்றாலம் வரை செல்கிறது.

ஆரோக்கியச் செய்தி மலர் :

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்
பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம்.

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

இ‌னி‌ப்பு ப‌ண்ட‌ங்க‌ள் செ‌ய்யு‌ம் போது வாசனை‌க்காக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் ‌நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், ஏல‌க்கா‌யி‌ல் ப‌ல்வேறு அ‌ரிய குண‌ங்க‌ள் உ‌ள்ளன.

புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு‌ச்ச‌த்து போன்ற முக்கிய தாது உப்புக்களும் ஏல‌க்கா‌யி‌ல் கலந்துள்ளன.

அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக் கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்கா‌ய் பெ‌ரிது‌ம் உதவு‌ம். ஏல‌க்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

பாலில் ஏ‌ல‌க்கா‌ய் சே‌ர்‌த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அரு‌ந்‌தி வ‌ந்தா‌ல் குழ‌ந்தை‌ப் பே‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் குறைபாடுக‌ள் ‌நீ‌ங்கு‌ம். இதனை இருபாலரும் அரு‌ந்தலா‌ம். இருவரு‌க்குமே பல‌ன் தரு‌ம்.

அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூ‌ள் ம‌ட்டுமே பயன்படுத்த வே‌ண்டு‌ம்.

வர்த்தகச் செய்தி மலர் :

சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்வு

மும்பை, ஜூன் 14- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்து 18,308 புள்ளிகளில் முடிவடைந்தது.

ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, டாடா பவர், எல் அன் டி, டிஎல்எப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

டாடா மோட்டார்ஸ், சிப்லா, டாடா ஸ்டீல், மாருதி சுஸுகி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில், குறியீட்டெண் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 5,500 புள்ளிகளில் முடிவடைந்தது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* 4-வது ஒருதினப் போட்டி: 103 ரன்களில் இந்தியா தோல்வி
ஆன்டிகுவா, ஜூன் 13: 4-வது ஓருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது.

முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய இந்திய அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் 5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

ஆன்டிகுவாவில் நேற்று மாலை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்யத் தீர்மானித்தது. மேற்கிந்தியத்தீவுகளின் சிம்மன்ஸ், ஹெயத் ஆகியோர் தொடக்கவீரர்களாகக் களம் இறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட் விழுந்தது. 1 ரன் எடுத்திருந்த ஹெயத், இஷாந்த் சர்மா பந்தில் திவாரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த சர்வானும் நீடிக்கவில்லை, அவரும் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து பிராவா, சிம்மன்ஸýடன் ஜோடி சேர்ந்தார். இந்தஜோடியும் நிலைக்கவில்லை, பிராவோ 15 ரன்களில் மிஸ்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது மேற்கிந்தியத்தீவுகள் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 65 ரன்களை எடுத்திருந்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியில் சிம்மன்ஸின் ஆட்டம் ஆறுதல் அளிப்பதாக இருந்தது. அவர் 78 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அவர் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளையும் விளாசினார். முன்னதாக சாமுவேல்ஸ் 8 ரன்களில் வெளியேறினார்.

பொல்லார்டு, பாக் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக பேட் செய்த பொல்லார்டு 72 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பக் தனது பங்குக்கு 39 ரன்களும், ரஸல் 25 ரன்கள் எடுத்து ஸ்கோர் உயர உதவினர். 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் பிரவீண் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தியா 146/39

அடுத்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக பார்தீவ் படேல், மனோஜ் திவாரி ஆகியோர் களம் இறங்கினர். 39 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஜெகநாதன் திருக்கோவில்
மூலவர்    :    ஜெகநாதன், விண்ணகரப்பெருமாள், நாதநாதன்.
உற்சவர்    :    ஜெகநாதன்.
அம்மன்/தாயார்    :    செண்பகவல்லி
தல விருட்சம்    :    செண்பக மரம்
தீர்த்தம்    :    நந்தி புஷ்கரிணி
ஆகமம்/பூஜை     :    -
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    நந்திபுர விண்ணகரம்
ஊர்    :    நாதன்கோயில்
மாவட்டம்    :    தஞ்சாவூர்
மாநிலம்    :    தமிழ்நாடு

பாடியவர்கள்:


மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

உம்பருலகேழும் கடலேழும் மலையேழும் ஒழியாமைமுனநாள்
தம்பொன் வயிறாரளவுமுண்டு அவையுமிழ்ந்த தடமார்வர் தகைசேர்
 வம்புமலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பிமணி கங்குல் வயல்சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே.

-திருமங்கையாழ்வார்

 தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.

இத்தல இறைவன் மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சிதருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் மந்தார விமானம் எனப்படுகிறது. நந்தி, சிபிசக்கரவர்த்தி ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.

 தலபெருமை:

பெயர்க்காரணம்: கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால், இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். செண்பகாரண்ய தலத்தில் லட்சுமி தவம் செய்ததால் இத்தல தாயாரின் திருநாமம் "செண்பகவல்லி' ஆனது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். இவர் திருநாமத்திலேயே இவ்வூர் "நாதன் கோயில்' என்று ஆனது.

நந்தி சாபம் விலகிய தலம்: நந்திதேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச் சென்றார். அப்போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு,""எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தினால் எரியும்,''என சாபமிட்டனர். நடந்த விஷயத்தை சிவனிடம் கூறினார் நந்தி. அதற்கு அவர்,""பூமியில் திருமகள் தவம் செய்துகொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசனம் பெறுவாய்,''என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார். தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால், "நந்திபுர விண்ணகரம்' என தனது தலம் வழங்கப்படும்,''என்று அருள்பாலித்தார்.

தலச்சிறப்பு: சந்திர தோஷ பரிகார ஸ்தலம். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது.சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினார். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார்.

  தல வரலாறு:

திருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார். அவருக்கு திடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற இத்தலத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.

 திருவிழா:

வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

வாழ்க்கை ஒரு மாயப்பேழை - வள்ளலார்.

* உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது. யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள். அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள்.

* எல்லாம் தெரிந்தவர் போல் பிறர்க்கு உரைப்பது மனித இயல்பு. குறைவற்ற அறிவு நாம் பெற்றிருக்கிறோமா, குறைவற்ற மனத்தை நாம் கொண்டிருக்கிறோமோ என்றவர்கள் சுயமதிப்பீடு செய்து கொள்வதில்லை.

* நான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை.

வினாடி வினா :

வினா - அரபிக் கடலின் ராணி எனப்படுவது எது ?

விடை - கேரளம்.

இதையும் படிங்க :

2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேகரிப்பிற்கு வித்திட்ட சமணர்கள்

மதுரை:மதுரை தானம் அறக்கட்டளை, தேசிய கலை, கலாச்சார, பாரம்பரிய அறக்கட்டளை சார்பில், நேற்று செக்கானூரணி அருகேயுள்ள கொங்கர் புளியங்குளம் மலைக்குன்றுக்கு பாரம்பரிய நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.அதில் தொல்லியல் அறிஞர் வேதாசலம் பேசியதாவது :"சமவயங்க சுத்த' எனும் சமண நூலில், "தமிழி' என்று தமிழ்மொழி குறித்து முதன்முதலாய் பதிவு செய்துள்ளது. பிராமி எழுத்து வடிவத்தில்தான் தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன.
கொங்கர் புளியங்குளம் மலையில் உள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகளில், இங்குள்ள படுக்கைகளை திருப்பணியாய் செய்து கொடுத்த "உபாசன் உப்பறுவன்', "சிறு ஆதன்', "பேராதன் பிட்டன்' போன்றோரின் பெயர்களும், தற்போதைய சோழவந்தான், 2000 ஆண்டுகளுக்கு முன் "பாகனூர்' என்ற பெயரால் அழைக்கப்பட்டது என்ற செய்தியை தெரிவிக்கிறது. வெள்ளை உடை மட்டும் அணிந்த சமண முனிவர்கள் இம்மலைக்குன்றுகளில் தங்கி வாழ்ந்தனர்.

தேவையான தண்ணீரை மழை மூலமாக சேகரித்து, பருகி வாழ்ந்தனர். மழைநீர் சேகரிப்பு இவர்கள் முன்னுதாரணமாய் இருந்தனர், என்றார்.இங்குள்ள அரிய கல்வெட்டுகளில் பல, சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதில் புதிய கல்வெட்டுகளை வைக்கவும், அதை முறையாக பராமரிக்கவும் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேராசிரியர் வெங்கட்ராமன், ஊராட்சித் தலைவர் பாண்டியராஜன், தானம் அறக்கட்டளை மேம்பாட்டிற்கான சுற்றுலா அணி திட்டத் தலைவர் பாரதி, மனிதநேய அறக்கட்டளை திட்ட அலுவலர் முனிராம்சிங் பங்கேற்றனர்.

* ஆர்வமுள்ள பெண்களுக்கு ஏற்ற தொழில்!

large_257695.jpg

வீணாகும் பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யும் மீனாட்சி சர்மா: உத்திரபிரதேச மாநிலம், அலிகர் நகர் தான் என் சொந்த ஊர்; இப்போது, டில்லியில் வசிக்கிறேன். சிறுவயதிலிருந்தே எனக்கு, கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். பள்ளிப்படிப்பை முடித்ததும், ஒரு வருடம் அதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டேன். வித்தியாசமாக ஏதாவது செய்தால் தான், மார்க்கெட்டில் இடம் கிடைக்கும் என்று புரிந்தது. அப்போது தான் வீணாகும் பொருட்களில் இருந்து பல கைவினைப் பொருட்களை செய்ய ஆரம்பித்தேன். அன்றிலிருந்து, "ஆர்ட், ப்ரேம் வேஸ்ட்' என்பது என் அடையாளம் ஆனது. என் கைவினைத் திறமைகளுக்கு, பழைய பேப்பர்கள், அட்டைகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள், வளையல்கள், தகடுகள், மரச்சட்டங்கள் இவற்றை தான் பயன்படுத்துவேன். இவற்றைப் பயன்படுத்தி, வளையல் பெட்டி, சாமி சிலைகள், பேனா ஸ்டாண்ட், ப்ளவர் வாஸ் என, பலவித பொருட்களை செய்கிறேன். தேவையான அளவில் பிளைவுட் வாங்கி, வீட்டில் வீணாகி உள்ள பேப்பர்களை, மிக்சியில் அரைத்து, அதன் மீது பூசி, அதில் பிடித்தமான வண்ணம் பூசி, உடைந்த கண்ணாடி வளையல்களை ரசனைக்கேற்ப ஒட்டினால், வளையல் பெட்டி தயார். இயற்கையிலேயே பெண்களுக்கு, கைவினைத் தொழிலில் திறமை அதிகம். ஆர்வத்துடன் செய்தால், நல்ல வருமானம் ஈட்டலாம். வீணான பொருட்களில் கைவினைப் பொருட்கள் செய்வது குறித்து, பல பெண்களுக்கு நான் பயிற்சி அளிக்கிறேன். என் கைவினைப் பொருட்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், விரைவில், டில்லியில், "÷ஷா ரூம்' திறக்க உள்ளேன். ஆர்வமும், கற்பனை திறனும் உள்ள பெண்களுக்கு, கைவினைப் பொருட்கள் செய்து விற்பது ஏற்ற தொழில் தான்.


நன்றி - தின மணி, வெப்துனியா, கூகிள் செய்திகள்.

1 comment:

அப்பாதுரை said...

வழக்கம் போல், சுவாரசியமான தொகுப்பு.

மாணவரை மையப்படுத்தும் கல்விமுறை - நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. இதைப் பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறது.

குற்றாலம் 1974-75 வாக்கில் போனது. ம்ம்ம்ம்.. உங்கள் பதிவிலாவது படிக்க முடிந்ததே! நன்றி.

கங்கையை புனிதப் படுத்த உண்ணாவிரதமா? இதே தொழிலாகப் போய்விட்டதே இந்தியாவில்?! அது சரி, இறந்தவர் உடலை எங்கே எறிந்தார்கள்? :)

ஜெயலலிதாவின் மானியக்கணக்கில் அவருக்கு ஏதாவது பங்கிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரா?

Post a Comment