Monday, June 20, 2011

இன்றைய செய்திகள் - ஜூன் 20, 2011

முக்கியச் செய்தி :

* லோக்பால் மசோதா குறித்து அடுத்த மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டம்
டெல்லி: லோக்பால் மசோதா குறித்து முடிவெடுக்க அடுத்த மாதத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு நடத்தும் எனத் தெரிகிறது.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இக்கூட்டம் நடைபெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் லோக்பால் சட்டத்தில் பிரதமர் பதவியையும் சேர்க்கலாமா என்பது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்கள் கோரப்படவுள்ளன.

ஜூன் 30ம் தேதிக்குள் லோக்பால் மசோதா கூட்டு வரைவுக் கமிட்டி தனது மசோதாவை உருவாக்கும் வேலையை முடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வரைவு மசோதா வைக்கப்பட்டு விவாதிக்க்படும்.

இதற்கிடையே, கூட்டுக் குழுவின் இறுதிக் கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது.

உலகச் செய்தி மலர் :

* இணையவழித் தமிழ்ப்பாடங்கள்

19-dr-mu.elangovan300.jpg

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணையமாநாட்டில் முனைவர் மு.இளங்கோவன் வழங்கிய ஆய்வுரை:

தமிழ்மொழி செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் சொத்தாக இம்மொழி உள்ளது. தமிழ்மொழியைக் கற்கவும், தமிழ் இலக்கியங்களை - இலக்கணங்களைக் கற்கவும் அரசு, பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிநபர்களின் பங்களிப்பால் இணையத்தில் செய்திகள் பலவகையில் உள்ளிடப்பட்டுள்ளன. இவை இன்னும் சில தளங்களில் மேம்படுத்தப்படவேண்டிய நிலையில் உள்ளன.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழம்.நெட் தளங்களிலும், பிற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் தளங்களிலும் தமிழ் எழுத்துகளை அறியவும், படிக்கவும், எழுத்துகளைக் கூட்டிச் சொற்களைப் படிக்கவும் , சொல்வளம் பெருக்கவும் வசதிகள் உள்ளன. தமிழ் வழியில் தமிழ் படிக்கவும், ஆங்கில வழியில் தமிழ் படிக்கவும் வசதிகள் உள்ளன.

பல்கலைக்கழகங்களைப் போன்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றித் தனி மாந்தர்களும் தமிழ்க்கல்வியைக் கணினி, இணையத்தில் கற்க இத்துறையில் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிலரின் முயற்சி இணையத்தில் இருப்பதால் உலக அளவில் பலராலும் பயன்படுத்த முடிகின்றது. சிலரின் முயற்சி குறுவட்டுகளில் மட்டும் இருப்பதால் உலக அளவில் அவர்களின் துணையில்லாமல் பயன்படுத்த முடியவில்லை. எனவே குறுவட்டில் தமிழ்க்கல்வியைத் தயாரித்து வைத்துள்ளவர்கள் இணையத்தில் ஏற்ற வேண்டும்.

மேலும் வாசிக்க:

* உலக தண்டுவட ஆராய்ச்சிக் கழக புதிய தலைவராக டாக்டர் எஸ்.ராஜசேகரன் தேர்வு

19-dr-rajasekharan300.jpg

கோவை: உலக தண்டுவட ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக கோவையைச் சேர்ந்த டாக்டர் எஸ். ராஜசேகரன் பொறுப்பேற்றார்.

கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குநராக இருப்பவர் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணரான எஸ். ராஜசேகரன்.

இவர் உலக தண்டுவட ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

கனடாவை தாயகமாகக் கொண்டு துவக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி கழகம், உலகில் நடக்கும் தண்டு வட ஆய்வு, ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.

முதுகுத் தண்டுவட ஜவ்வு தேய்மானத்தை சரி செய்வது குறித்து எஸ். ராஜ சேகரன் மேற்கொண்ட ஆய்வில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து இந்த அமைப்பில் உறுப்பினரானார்.

அவரது அயராத ஆராய்ச்சியின் வெற்றியின் காரணமாக தற்போது அந்த அமைப்பின் தலைவர் பொறுப்புக்கு உயர்ந்துள்ளார். ஸ்வீடனில் நடநந்த நிகழ்ச்சியில், உலக தண்டுவட ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக நேற்று பொறுப்பேற்றார்.

இதற்கு முன்பாக, அமெரிக்காவின் ருஷ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹவார்ட் இப் பொறுப்பை வகித்து வந்தார்.

உலக அளவில் மருத்துவத்துறையின் மிக முக்கியமான இப் பதவிக்கு ஒரு தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.

ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு உலக தண்டு வட ஆராய்ச்சிக் கழகத்தின் விருதையும் டாக்டர் ராஜசேகரன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

* அனுபவங்களை புத்தகமாக எழுத, வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஹெட்லி ஆசை!

19-headley300.jpg

சிகாகோ: தனது அனுபவங்களை புத்தகமாக எழுதவும், வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவும் பாகிஸ்தானிய அமெரிக்க லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி விருப்பம் தெரிவித்துள்ளானாம்.

மும்பை பயங்கரவாத சம்பவத்தில் நேரடித் தொடர்புடையவன் ஹெட்லி. இவனை சிகாகோவில் வைத்து அமெரிக்க எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவனுடன் பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணாவும் கைது செய்யப்பட்டான்.இதில் ராணா வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ராணாவுக்கு எதிராக, அரசுத் தரப்பு சாட்சியமாக மாறியுள்ளான் ஹெட்லி.

ராணாவுக்கு எதிராக அவன் அளித்த சாட்சியத்தின்போது இந்தியாவைக் குறி வைத்து பாகிஸ்தானும்,அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு எப்படி செயல்பட்டு வருகின்றன என்பதை புட்டுப் புட்டு வைத்தார்.

இந்த நிலையில் தனது அனுபவங்களை புத்தகமாக வெளியிட விரும்புகிறானாம் ஹெட்லி. அதேபோல தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவும் அவன் விரும்புகிறானாம்.

மேலும் இஸ்லாம் குறித்த உலக மக்களுக்குப் போதிக்கவும் விரும்புகிறான். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் இதைச் செய்யும் திட்டத்தில் உள்ளானாம் ஹெட்லி. தனக்குப் பின்னர் தனது குழந்தைகளும் இதைப் பின்பற்ற வேண்டும் என்றும் விரும்புகிறான் ஹெட்லி.

இதுகுறித்து ராணாவுக்கு எதிரான வழக்கின் விசாரணையின்போது சமீபத்தில் ஆஜரான ஹெட்லி கூறுகையில், இஸ்லாம் குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. இதை துடைக்க நான் விரும்புகிறேன். இதனால் இஸ்லாம் குறித்து உலகுக்கு போதிக்க நான் விரும்புகிறேன். இதை வருங்காலத்தில் எனது பிள்ளைகளும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

எனது மனைவி சாஷியாவை, தினசரி பைபிள் மற்றும் திருக்குரானைப் படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

எதிர்காலத்தில் எனது அனுபவங்களை வைத்து ஒரு புத்தகம் எழுதும் திட்டமும் உள்ளது. அதேபோல எனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கவும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளான் ஹெட்லி.

* ராஜபட்சவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன
கொழும்பு, ஜூன் 19:இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவை ஆஜராகும்படி அமெரிக்க நீதிமன்றமொன்று சம்மன் அனுப்பியுள்ளது.

"சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான அமெரிக்கப் பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர்கள் இலங்கை அதிபரிடம் 3 கோடி டாலர் (ரூ. 134 கோடி) நஷ்டஈடு கோரியுள்ளதாகத் தெரிகிறது.

ஹேக் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கை அதிபருக்கான, சம்மன் இலங்கை நீதியமைச்சகத்தின் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற சட்டவிரோதச் செயல்களால் இறந்த 3 மாணவர்களின் பெற்றோர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது பதுங்கு குழியில் பதுங்கியிருந்த தங்களது உறவினர்கள் எறிகணைத் தாக்குதலில் பலியானதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்க மறுப்பு

இதனிடையே இந்த சம்மனை ஏற்கமுடியாது என்றும் அமெரிக்க நீதிமன்றம் முன் தான் ஆஜராக முடியாதென்றும் ராஜபட்ச அறிவித்துள்ளார். அதிபர் என்ற முறையில் தனக்கு விலக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது நிலையை தெரிவித்து ராஜபட்ச, கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக இலங்கை நீதித்துறை செயலாளர் சுஹதா கமலத் தெரிவித்தார்.

* ஆங் சானுக்கு அகவை 66

anng.jpg

இளைய மகன் கிம் ஆரிஸýடன் மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சான் சூச்சி.
யாங்கூன், ஜூன் 19: ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் உலக மக்களுக்கெல்லாம் இன்னமும் முன் மாதிரியாகத் திகழும் மியான்மர் நாட்டுத் தன்னிகரில்லாத் தலைவி ஆங் சான் சூச்சி தன்னுடைய 66-வது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்.

ஆம் இந்த முறை உண்மையிலேயே அவருக்கு இது கொண்டாட்டம்தான். மியான்மர் ராணுவ அரசால் எப்போது பார்த்தாலும் சிறையிலும் வீட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டு வந்த இந்தச் சிறைப் பறவை இந்த ஆண்டுதான் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அதைவிட முக்கியம் இந்தத் தலைவி தன்னுடைய இளைய மகனை பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சந்தித்து உச்சி முகர்ந்து மகிழ்ந்தார்.

அதற்காகவே யாங்கூன் விமான நிலையத்துக்கு காலையிலேயே சென்றுவிட்டார். அவருடைய மகன் கிம் ஆரிஸ் இப்போது பிரிட்டனில் வசிக்கிறார்.

ராணுவ ஆட்சியாளர்களால் எப்போதும் சிறை வைக்கப்பட்டிருந்த தன்னுடைய தாயை விமான நிலையத்திலேயே பார்த்தும் கிம் ஆரிஸின் கண்கள் பனித்தன. ஆங் சானுக்கும்தான். ஆயிரக்கணக்கான மியான்மர் மக்களையே தன்னுடைய குழந்தையாக பாவித்து அவர்களுடைய ஜனநாயக உரிமைகளுக்காக இடைவிடாமல் போராடிவரும் இந்தத் தாய் தன்னுடைய மகன் விமான நிலையத்தில் தந்த முத்தத்தையே விலைமதிக்க முடியாத பரிசாக எண்ணி மகிழ்ந்தார்.

இந்த ஆண்டு சுதந்திரமாக இருப்பதால் பிறந்த நாள் கொண்டாட்டத்தைப் பயனுற திட்டமிட்டிருக்கிறார். பெüத்த பிட்சுகளுக்கு வீட்டிலேயே விருந்து படைக்கிறார். பிறகு கட்சித் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்களின் வாழ்த்துகளை நேரில் பெறுகிறார். பிறகு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு தோட்டத்தில் எளிமையான விருந்து அளித்து மகிழ்கிறார்.

உலக வரலாற்றில் நெல்சன் மன்டேலாவுக்கு அடுத்தபடியாக அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் ஒரே தலைவி ஆங்சான் சூச்சி என்றால் மிகையாகாது.

கடந்த 22 ஆண்டுகளாக சிறையிலேயே அதிக நாள்களைக் கழித்திருக்கிறார். 15 பிறந்த நாள்களின்போது சிறையிலேயே இருந்திருக்கிறார்.

ஆங் சான் சூச்சி 1945-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அப்போதைய ரங்கூனில் பிறந்தார். அந்த ஊர்தான் இப்போது யாங்கூன் என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் பெயரும் பர்மா என்பது மியான்மர் என்று மாற்றப்பட்டுவிட்டது.

1962-ம் ஆண்டு முதல் மியான்மரில் ராணுவ ஆட்சிதான் நடக்கிறது. இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாது. உலகில் எந்தப் பகுதியிலும் ஜனநாயகம் நசுக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று பேசும் வல்லரசு நாடுகள்கூட இந்த ராணுவ ஆட்சியாளர்களை ஒன்றும் செய்வதில்லை.

இந்த முறை நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆங்சான் சூ கியியின் கட்சி போட்டியிடவில்லை. அதனால் ஆட்சியாளர்கள் தேர்தல் முடிவுக்குப் பிறகு அவரை விடுதலை செய்துவிட்டனர். இப்போது நாட்டை அவர்களுடைய கைப்பாவைதான் ஆட்சி செய்கிறது. இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு அந்த தலையாட்டி பொம்மைகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாட்டின் தûûமை ராணுவத் தளபதியே நேரடியாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்.

ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்ற ஆசை மக்களிடம் இருந்தாலும் என்ன காரணத்தாலோ ராணுவத்தை எதிர்த்து நிற்க துணிச்சல் இல்லாமல் இருக்கிறார்கள். ராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு அஞ்சி பணிந்துவிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. எனவே இந்த முறை நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய கோரிக்கைகளுக்கு மக்களிடம் ஆதரவைத் திரட்ட ஆங் சான் சூ கியி தீர்மானித்திருக்கிறார். ஆனால் ராணுவ ஆட்சியாளர்கள் அவரை அப்படி வெளியே போக விடுவார்களா அல்லது மீண்டும் கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்துவிடுவார்களா என்பது போகப்போகத்தான் தெரியும்.

ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைக்கூட அகிம்சா முறையில் நடத்துவதால் 1991-ம் ஆண்டு, சமாதானத்துக்கான நோபல் பரிசு ஆங்சான் சூ கியிக்குத் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டார் என்பதற்காகவே அவரை இப்போது விடுதலை செய்திருக்கிறார்கள் என்று தலைநகர் வட்டாரங்கள் கூறுகின்றன. இது உண்மையாகவும் இருக்கலாம்.


தேசியச் செய்தி மலர் :

* எஸ் பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரிக்க புதிய குழு: பிரதமர் உத்தரவு
புது தில்லி, ஜூன் 18: ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் மல்டி மீடியா நிறுவனங்களுக்கு இடையேயான எஸ் பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு ஒப்பந்தத்துக்கு காரணமான தனிநபர்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த, மத்திய ஊழல் கண்காணிப்பு முன்னாள் ஆணையர் பிரதியுஷ் சின்ஹா தலைமையிலான குழு ஒன்றையும் அவர் நியமித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் மல்டி மீடியா நிறுவனங்களுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட தொழில்நுட்ப, வர்த்தக மற்றும் நிதி ஒப்பந்தங்கள் குறித்து பி.கே.சதுர்வேதி தலைமையிலான குழு, ஏற்கெனவே விசாரித்து கடந்த மார்ச் 12 ஆம் தேதி பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

பிரதியுஷ் சின்ஹா தலைமையிலான விசாரணைக் குழு, இந்த விசாரணையை தொடர்ந்து நடத்தும். வரும் ஜூலை இறுதிக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் பிரதமர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் ஏவப்பட உள்ள ஜி சாட்-6 மற்றும் ஜி சாட் -6ஏ ஆகிய விண்கலங்கள் மூலம் பெறப்படும் 70 மெகா ஹெர்ட்ஸ் திறனுள்ள எஸ் பாண்ட் அலைக்கற்றைகளை தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்வதெனவும், இதற்காக, அந்த நிறுவனம் 1,350 கோடி ரூபாயை 12 ஆண்டுகளில் திருப்பி செலுத்துவதெனவும் கடந்த 2005-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

இதுபற்றி ஆய்வு செய்த மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தகவலையடுத்து, நாட்டில் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் சொந்தக்காரர், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அறிவியல் செயலாளர் எம்.ஜி.சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

* பாஜக தலைவர் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது


டேராடூன்,ஜூன் 19: பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. அதில் விமானியும், என்ஜினீயரும் படுகாயமடைந்தனர்.

இமாலயத்தில் உள்ள சார்டம் புண்ணிய தலத்துக்கு நிதின் கட்கரி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 ஹெலிகாப்டரில் பத்ரிநாத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் உத்தரகாண்ட் மாநிலம் ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் பிற்பகல் 1 மணிக்குத் தரையிறங்கியது. கட்கரியும் அவரது குடும்பத்தினரும் இறங்கி புண்ணிய யாத்திரை சென்றனர். அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து அந்த 3 ஹெலிகாப்டர்களும் ஜாலி கிராண்ட் விமான நிலையத்திலிருந்து சகஸ்திரதாரா ஹெலிகாப்டர் தளத்துக்குப் புறப்பட்டுச் சென்றது. இதில் இரு ஹெலிகாப்டர்கள் சகஸ்திரதாரா ஹெலிகாப்டர் தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

மற்றொரு ஹெலிகாப்டர் லாத்பூர் வனப்பகுதியில் சென்றபோது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானி நவீன்விட், என்ஜினீயர் நவ்நீல்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அரசு காரனேசன் மருத்துவமனையிலும், பிறகு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் எனத் தெரிகிறது.

கட்கரியும் அவரது குடும்பத்தினரும் செல்ல இந்த 3 ஹெலிகாப்டர்களையும் உத்தரகாண்ட் அரசு வாடகைக்கு அமர்த்தி இருந்தது. விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்வாஜாஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர்களை சார் ஏவியேசன் நிறுவனம் இயக்கிவந்தது.

* சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் பணம் சேமிப்பு குறைந்தது
புது தில்லி, ஜூன் 19: சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்கள் சேமித்து வைத்துள்ள பணம் கடந்த ஆண்டில் குறைந்துள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிச் சட்டங்களின் ரகசியத் தன்மையினால் உலகெங்கும் உள்ள பணக்காரர்கள் அந்நாட்டு வங்கிகளில் பணத்தை சேமித்து வைக்கின்றனர். இதில் பெரும்பாலும் அவரவர் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து திரட்டிய கறுப்பு பணம் என்பது குறிப்பிடத் தக்கது.

பல நாடுகள் இந்தக் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதற்காக சுவிஸ் வங்கிகளிடம் வற்புறுத்தி வந்தாலும் ரகசியத் தன்மைவாய்ந்த சட்டங்களைத் திருத்த வங்கிகளும் அந்நாட்டு அரசும் ஆர்வம் காட்டாமல் மறுத்து வந்தன.

இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக அமெரிக்கா, ஜெர்மனி உள்பட பல மேற்கத்திய நாடுகள் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு இந்தப் பிரச்னை குறித்து நெருக்குதல் கொடுத்து வருகின்றன.

இந்தியாவிலும் இந்தப் பிரச்னை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்றமும் இப்பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த நிதியாண்டுக்கான சுவிஸ் வங்கிக் கணக்குகள் இப்போது வெளியாகியிருக்கின்றன. இதில், வெளிநாட்டவர் சேமித்து வைத்துள்ள பணத்தின் அளவு குறைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த தொகை குறைந்துள்ளது என்று தெரிகிறது. 2009-ம் ஆண்டில் ரூ. 1 கோடி 30 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டவர் சேமிப்பு இருந்தது. ஆனால் 2010-ம் ஆண்டுக்கான கணக்கின்படி, வெளிநாட்டவர் சேமிப்பு ரூ.1 கோடி 25 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் கறுப்புப் பணம் பதுக்குவதைத் தடுக்கும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வர சர்வதேச அளவில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வங்கிகளில் பணத்தை சேமிப்பது குறைந்து வருகிறது என்ற கருத்து நிலவுகிறது.

அதே வேளையில், உலகப் பொருளாதாரம் சரிவுற்ற நிலையில் டாலர், யூரோ முதலான கரன்சிகளின் மதிப்பு குறைந்ததால் வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தின் மதிப்பு குறைவாகத் தெரிகிறது என்று சுவிஸ் வங்கி அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.

இங்கு சேமிப்புத் தொகை குறைந்துள்ளதற்குக் காரணம், பணத்தை வங்கியிலிருந்தது எடுப்பது மட்டுமல்ல. பங்கு முதலீடுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களும் வங்கியின் மொத்தத் தொகையில் குறைவு வந்ததாகக் காட்டும் என்று அவர் தெரிவித்தார்.

* பிஎச்இஎல் நிறுவனத்தில் 5 ஆண்டுகளில் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு
புது தில்லி, ஜூன் 19: அரசு நிறுவனமான பி.எச்.இ.எல் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி.பி.ராவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மின் உற்பத்திப்பொருள் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனம் (பி.எச்.இ.எல்) அடுத்து வரும் ஆண்டுகளில் 25 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தும். ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் எனும் விகிதத்தில் ஐந்தாண்டுகளில் 25 ஆயிரம் பேரைப் புதிதாகப் பணியிலமர்த்தும் என்றும் பி.பி.ராவ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது:

பி.எச்.இ.எல் நிறுவனத்தில் தற்போது 46 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். இப்போது எங்கள் நிறுவனம் 15 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மின்பொருள்களை உற்பத்தி செய்ய ஆர்டர்கள் உள்ளன. அடுத்த நிதியாண்டில் பி.எச்.இ.எல் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட உள்ளது. அதற்கேற்ப 20 மெகாவாட் திறன்கொண்ட மின்பொருள்களை உருவாக்குவதற்கான ஆர்டர்களையும் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இதற்காகப் புதிய பணியாட்களை நியமிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் என்கிற விகிதத்தில் பணியாள்களை நியமிக்க முடிவெடுத்துள்ளோம். இதில் ஆயிரம் என்ஜினியர்கள், ஆயிரம் பட்டயப் படிப்பு படித்தவர்கள், 2 ஆயிரம் ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் உள்ளிட்டோர் பணியில் அமர்த்தப்படுவர்.

பி.எச்.இ.எல். நிறுவனத்தின் மொத்த ஆர்டர்களின் மதிப்பு ரூ. 1.64 லட்சம் கோடி என்று அவர் தெரிவித்தார்.

இந்நிறுவனத்திலிருந்து ஆண்டுக்கு சுமார் 2,500 பேர் ஓய்வு பெற்று வருகின்றனர். இதை ஈடுகட்டுவதுடன் புதிய உற்பத்தி திட்டங்களை நிறைவேற்றவும் ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் தேவை ஏற்பட்டுள்ளது.

* கனிமொழி ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
புது தில்லி, ஜூன் 19: 2ஜி வழக்கில் திகார் சிறையில் உள்ள திமுக எம்.பி. கனிமொழியின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை விசாரித்து வந்த நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை கண்காணித்து வந்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சௌகான் அடங்கிய அமர்வு, கனிமொழியின் ஜாமீன் மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடத்த உள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றதாகக் கூறப்படும் டி.பி.ரியாலிட்டி நிறுவனம், அதற்குப் பிரதிபலனாக தனது துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி வழங்கியதாக சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களது மனுக்களை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து இருவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், தில்லி உயர் நீதிமன்றமும் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ தரப்பில் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்கள். அவர்களை விடுவித்தால் சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள், எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் டி.வி.க்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.214 கோடி ஊழல் பணம்தான், இருவரும் கூறுவதுபோல் கடன்தொகை அல்ல என்றும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. சிறப்பு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஜாமீன் மனுக்களை தீவிரமாகப் பரிசீலித்து தள்ளுபடி செய்து விட்டன. 2ஜி வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்குவது முறையாக இருக்காது என்று சிபிஐ தனது மனுவில் மேலும் கூறியுள்ளது. இந்தப் பின்னணியில் கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது

* தெலங்கானா பிரச்னை: வீதியில் சமையல் செய்து போராட்டம்

lunch.jpg

ஹைதராபாத், ஜூன் 19:தனித் தெலங்கானா கோரி போராடி வரும் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாதின் முக்கியச் சாலைகளில் சமையல் செய்து நூதன முறையில் போராட்டம் செய்தனர்.

தனித் தெலங்கானா கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரும் (டிஆர்எஸ்), தெலங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் "ஹைதராபாதின் வீதிகளில் சமைத்தல் ' என்ற போராட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எம்.கோதண்டராம் இதுபற்றி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

தெலங்கானா பகுதியில் மழைக்காலங்களில் திறந்தவெளியில் சமையல் செய்து சமூக உணவுக்கூடம் நடத்தப்படும். எங்களின் கோரிக்கையை வலியுறுத்த அந்தப் பழக்கத்தை இங்கு போராட்டமாக மாற்றிக்கொண்டோம். நாங்கள் ஏற்கெனவே ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் தெலங்குதேச சட்டப்பேரவை உறுப்பினர்களை தனித்தெலங்கானா பிரச்னைக்காக தங்களது உறுப்பினர் பதவியை ஜூன் 25-ற்குள் ராஜினாமா செய்யும்படி கோரியுள்ளோம். அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால், ஹைதராபாதிலுள்ள அவர்களது வீடுகளின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். இந்தப் போராட்டங்கள் கூடிய விரைவில் சாலை மறியல் போராட்டங்களாகவும் மாறும் என்று அவர் தெரிவித்தார்.

டிஆர்எஸ் கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் பாஞ்சரா ஹில்ஸில் உள்ள தனது வீட்டுக்கு அருகே நடந்த இந்த சமையல் போராட்டத்தில் பங்கேற்றார். அவருடைய மகனும் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.டி.ராமராவ் அமர்பேட்டில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.

தனி தெலங்கானா கோரும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் உள்ள டிஆர்எஸ், பிஜேபி, உள்ளிட்ட மற்றக் கட்சிகள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

* நிருபமா ராவ் பாகிஸ்தான் பயணம்
புது தில்லி,ஜூன், 19: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் ஜூன் 23-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார்.

அங்கு அவர் அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலாளர் சல்மான் பஷீரைச் சந்தித்துப் பேசுகிறார். இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்தில் இதற்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்காக நிருபமாராவ் ஜூன் 23-ம் தேதி இஸ்லாமாபாத் புறப்பட்டுச்செல்கிறார். 25-ம் தேதிவரை அங்கு தங்கியிருக்கும் அவர், சல்மான் பஷீருடன் முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்துகிறார்.

* வருமான வரி ஏய்ப்பில் அறக்கட்டளைகள்: கண்காணிக்க வருமான வரித்துறை தீவிரம்
புது தில்லி, ஜூன் 19: இந்தியாவில் உள்ள அறக்கட்டளைகளில் வருமான வரி ஏய்ப்பு நடைபெறுகிறதா என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, வருமான வரித்துறை அதன் அனைத்து தலைமை ஆணையர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

பொதுவான அறக்கட்டளைகள், மத ரீதியாக அமைக்கப்பட்டுள்ள அறைக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து பல வகை சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அன்பளிப்பாகக் கிடைக்கும் பெரும் தொகை மற்றும் அசையா சொத்துகளை நிர்வகிப்பதில் இவற்றுக்குப் பல சிறப்பு சலுகைகள் உள்ளன.

அறக்கட்டளைகள் தொண்டு நிறுவனங்களாக செயல்படுவதால் வருமான வரித்துறை இச்சலுகைகளை வழங்கி வருகிறது. அறக்கட்டளைகளின் வரிவிலக்கு விவகாரங்களைக் கவனிக்க வருமான வரித்துறையில் தனிப் பிரிவு உள்ளது. ஆனால், வரிச் சலுகை பெறும் சில அறக்கட்டளைகள் தாங்கள் பெறும் நிதியைப் பல விதமான தொழில்களில் ஈடுபடுத்துகின்றன என்றும் இதன்மூலம் லாபம் ஈட்டி வருகின்றன என்றும் அரசுக்குத் தெரிய வந்துள்ளது. எனவே இதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்குக் கிடைக்கும் நிதியுதவிக்காக வரிச் சலுகை பெற்று அதனைத் தவறாகப் பயன்படுத்தி வரும் அறக்கட்டளைகள் குறித்து வருமான வரித்துறை தகவல் சேகரித்து வருகிறது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ரகசிய அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அனைத்துத் தலைமை வருமான வரி ஆணையர்களுக்கும் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரி ஏய்ப்பு செய்து, நிதியைத் தவறாகப் பயன்படுத்தும் அறக்கட்டளைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் அறக்கட்டளைகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவற்றுக்கு மேற்கொண்டு வரி விலக்குச் சலுகை தரப்பட மாட்டாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் இவ்வாறு வரி ஏய்ப்பு செய்து வரும் அறக்கட்டளைகளின் எண்ணிக்கை எவ்வளவு, அவற்றின் பெயர்கள் ஆகிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

* ஒரிசா: 6 கிராமங்களில் கடல் அரிப்பு
பெர்ஹாம்பூர்,ஜூன் 19: ஒரிசா மாநிலத்தில் 6 கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரிசா மாநிலத்தில் இந்த ஆண்டு முன்னதாகவே தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டது. இதனால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. பெரிய அலைகள் தோன்றுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சனா அர்ஜீப்பள்ளி, படா அர்ஜீப்பள்ளி, கட்டுரு, கண்ட்ரா அர்ஜீப்பள்ளி, கோகாரகுடா, போடம்பேட்டா ஆகிய 6 கடற்கரை கிராமங்களில் பாய்ந்து வரும் பெரிய கடல் அலைகளால் கரைகள் பெருமளவு அரிக்கப்பட்டு வீடுகள் இருக்கும் இடம் வரை வந்து செல்கின்றன. இதனால் இந்த கடற்கரைக் கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

இதுபற்றி சனா அர்ஜீப்பள்ளி கிராமப் பஞ்சாயத்து தலைவர் கே.அல்லையா கூறும்போது, இப்போது கடல் அலைகள் எங்கள் வீடு அருகே வந்துவிட்டன.

நாங்கள் தினசரி அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்கள் கிராமம் அருகில் கோபால்பூர் துறைமுகம் கட்டுவதால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் பாதுகாப்புக்கு அரசு இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

மாநிலச் செய்தி மலர் :
* ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு ரூ.1 கோடியில் தங்கக் கொடிமரம்

omlordandal.jpg

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 19: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருகோயிலுக்கு புதிய கொடி மரம் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீஆண்டாள் சன்னிதி த்வஜ ஸ்தம்பம் (கொடி மரம்) மற்றும் பலிபீடத்துக்கு ரூ. 1 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேக்கு மரத்திலான கொடி மரம் அமைக்கப்பட்டு, அதில் தங்கத் தகடு பொருத்தப்பட்டது.

இதன் பிரதிஷ்டை விழா சனிக்கிழமை மாலை யஜமான வரணம், ஆசார்ய வரணம் உள்பட சாத்து முறையுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலை புண்யாக வாசனம், அக்னி ஆராதனம், உக்த ஹோமம், அந்த ஹோமம், மஹா பூர்ணாஹூதி, தஸதானம், யாத்ராதானம், தக்ஷிணாதானம், கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னர், கொடிமரம் பிரதிஷ்டை, திருவாராதனம், சாத்து முறை, ஆசீர்வாதம், தீர்த்த கோஷ்டி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ. பொன்னுப்பாண்டியன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவரும், ஸ்ரீநாச்சியார் பொதுநல டிரஸ்டின் செயலாளருமான கே.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* பி.இ. கவுன்சலிங்: சென்னையில் மட்டும் நடத்த முடிவு
சென்னை, ஜூன் 19: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வழக்கம்போல் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழான பி.இ. இடங்கள் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு சென்னையில் மட்டும் கலந்தாய்வு நடத்துவதால், நீண்ட தொலைவில் இருந்து வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் அதிக பொருள் செலவும் ஏற்படுவதாக பெற்றோர் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.

மேலும் கடந்த 2004-05 ஆண்டுகளில் நடத்தப்பட்டது போல் மாநிலத்தின் 4 பகுதிகளில் கலந்தாய்வை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வை பல இடங்களில் நடத்துவது என்பது, தேவையற்ற கால விரையத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். எனவே, கலந்தாய்வை ஒரே இடத்தில் நடத்துவதுதான் சிறந்தது என்று கூறி, பெற்றோரின் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, பி.இ. கலந்தாய்வை சென்னையில் மட்டும் அல்லாமல் மேலும் சில இடங்களில் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இதுதொடர்பாக செய்தியும் வெளியானது.

இதனால், 2004-05-ம் ஆண்டைப் போல் கலந்தாய்வு 4 இடங்களில் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோரிடையே ஏற்பட்டது.

* அரசுக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள்: உடனடியாக நிரப்ப உத்தரவு

சென்னை, ஜூன் 19: தமிழகம் முழுவதும் 69 அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் 62 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளும், 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் 48 அரசுக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் 2010-ம் ஆண்டு ஜூன் முதல் நிரப்பப்படாமல் இருந்தன.

இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, 68 அரசுக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரசுக் கல்லூரிகளில் இவ்வாறு அதிகக் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க ஆணையிட்டார்.

அதன்பிறகு, உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உயர்கல்வித் துறைச் செயலாளர் கண்ணன் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இதில், முதல்வர் பணியிடத்துக்கு அடுத்தப்படியாக உள்ள தேர்வு நிலை விரிவுரையாளர் , இணைப் பேராசிரியர் பதவியில் பணி மூப்பினை உடனடியாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றமும் இந்த பணி மூப்புப் பட்டியலை நிர்ணயிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி, தேர்வுநிலை விரிவுரையாளர், இணைப் பேராசிரியர் பதவியில் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த பணி மூப்பின் அடிப்படையில் 68 அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா

* ஆசிரியர்களின் மிரட்டலால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை

plustwo.jpg

சேலம், ஜூன் 19: புரியும்படி பாடம் நடத்துங்கள் என்று கேட்டதற்காகவும் பாடம் புரியவில்லை என்று தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதியதற்காகவும் ஆசிரியர்களால் மிரட்டப்பட்டதால் பனைமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட பிளஸ் 2 மாணவர் சீனிவாசன் (18) தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவர் எழுதியுள்ள 7 பக்க கடிதம் அரசுப் பள்ளிகளின் அவலத்தை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது.

சேலம் தாசநாயக்கன்பட்டி காலனி சேகர் - அமலா தம்பதியின் கடைசி மகன் சீனிவாசன் (18). பனைமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்த இவர், சனிக்கிழமை (ஜூன் 18) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாத்திரங்களில் ஓட்டைகளை அடைக்கும் வேலையை செய்து வரும் சேகரும், காய்கறி வியாபாரம் செய்து வரும் அமலாவும் வீடு திரும்பியதும் மகன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகனின் சாவுக்கான காரணம் தெரியாமலேயே மாலையில் உடலை தகனம் செய்து விட்டனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) சீனிவாசனின் அண்ணனும் மெக்கானிக் வேலை செய்து வருபவருமான சத்தியமூர்த்தி (22) தனது தம்பியின் புத்தகப் பையை சோதனையிட்டுள்ளார். அப்போது சீனிவாசன் எழுதி வைத்திருந்த 7 பக்க கடிதத்தைப் படித்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து மல்லூர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர்.

சீனிவாசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: என் வாழ்வின் முடிவை எழுதியது நான் படிக்கும் பனைமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிலரே. மரணத்துக்கு காரணம் எனது பள்ளி தமிழ் ஆசிரியர், கணித ஆசிரியர், இயற்பியல்,வேதியியல் ஆசிரியர்கள்தான். (அவர்களுடைய பெயர்களை மாணவர் குறிப்பிட்டிருக்கிறார்).

"நான் தாசநாயக்கன்பட்டி அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். தேர்வு முடிவுக்குப் பிறகு, அப்பா விபத்தில் சிக்கியதால் ஓராண்டு படிப்பைத் தொடர முடியாமல் போனது. அதன் பிறகு இப்பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்தேன்.

இப்போது பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கி 3 நாள்கள் ஆகின்றன. எனது வகுப்புக்கு பிளஸ் 1-ல் கணித பாடம் நடத்தியவரே பிளஸ் 2-வுக்கும் பாடம் நடத்துகிறார்.

இவர் நடத்தும் பாடம் பிளஸ் 1 முதலே புரியவில்லை என்று கூறி வந்திருக்கிறோம். இது பிளஸ் 2 என்பதால் புரியும்படி மெதுவாக பாடம் நடத்தும்படி கூறினோம். ஆனால் அவரோ தினமும் வகுப்புக்கு வந்து கரும்பலகை முழுவதும் கணக்கை எழுதிப்போட்டுவிட்டு, பார்த்து எழுதிக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்று விடுகிறார்.

மிரட்டல்: இதனால் கணித பாடத்தை மெதுவாக, புரியும்படி நடத்த உத்தரவிடும்படி தலைமை ஆசிரியருக்கு எங்கள் வகுப்பு மாணவ-மாணவிகளின் கையெழுத்தைப் பெற்று ஒரு கடிதம் எழுதினேன்.

இதையறிந்த வேதியியல், தமிழ், இயற்பியல் ஆசிரியர்கள் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன், செய்முறைத் தேர்வில் மதிப்பெண் போடமாட்டோம் என்று கூறி மிரட்டினர். மாற்றுச் சான்றிதழில், "மோசம்' என்று எழுதி என்னை பள்ளியில் இருந்தே வெளியேற்றி விடுவதாகவும் கூறினார்கள்.

தலைமை ஆசிரியருக்கு நான் கடிதம் எழுதியது தெரியாமல் செய்த தவறு. இதைத் தவறு என்பதா எனது உரிமை என்பதா என்று தெரியவில்லை. ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி முடித்ததும் புரிந்ததா, இல்லையா என்று கேட்டால் மாணவர் தன் கருத்தைக் கூறுவார். ஆனால் கணித ஆசிரியரோ புரிந்தால் என்ன புரியாவிட்டால் என்ன என்று எழுதிப்போட்டுவிட்டுச் செல்கிறார்.

எனது பெற்றோர் என்னை நினைத்து அழாமல் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அடுத்த பிறவி இருந்தால் அதில் மனிதனாக பிறக்கக் கூடாது என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். அரசுப் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் மேம்படுத்த வேண்டும் என்று கல்வி அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை: எனது மரணத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் சிறு மாற்றமாவது நிகழ வேண்டும். திறமையான ஆசிரியர்கள் அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளுக்கு தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். முதலமைச்சர் இதற்கு விரைவில் நிரந்தரத் தீர்வை எடுக்க வேண்டும்.

எனது வகுப்பில் உள்ள குறைகளை தலைமை ஆசிரியருக்குத் தெரிவிக்க எழுதிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். இதை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். என் மரணத்துக்கு பிறகாவது சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்' என்று மாணவர் சீனிவாசன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மாணவர் சீனிவாசன் அரசுப் பள்ளியில் படித்து எஸ்எஸ்எல்சி-யில் 409 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் சிறந்த மாணவர் என்றும் இவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் சக மாணவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - எஸ்.பி.: மாணவன் சீனிவாசனின் கடிதம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தவறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன்.

கல்வித்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

* எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு

சென்னை, ஜூன் 19: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். சேர விண்ணப்பித்துள்ள 20,765 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) வெளியிடப்படுகிறது.

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார். மருத்துவப் படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 எடுத்துள்ள 65 பேரில், எத்தனை பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்புகின்றனர் என்பது தரவரிசைப் பட்டியல் மூலம் தெரிந்து விடும்.

தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெளியிட்டவுடன், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் மாணவர்களின் பெயர்களை உள்ளடக்கிய தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை ஒட்டப்படும். சுகாதாரத் துறையின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ்-
லும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஆகவும் இருக்கும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.

ஆரோக்கியச் செய்தி மலர் :

* ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சை

18-lemon3-300.jpg

வீடானாலும், கோவில் என்றாலும் அங்கே எலுமிச்சையின் பயன்பாடு அதிகம் இருக்கும். இதற்கு காரணம் அந்த பழத்தில் உள்ள அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களே. வீட்டில் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எலுமிச்சை உடல் நலத்தை பாதுகாக்கிறது. கோவில்களில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சப்பழ மாலையும், எலுமிச்சை விளக்கும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் எலுமிச்சம் பழத்தை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளனர். எலுமிச்சை கனிகள் மருத்துவ குணம் கொண்டவை கனிகளின் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் முக்கிய பொருளாகும். வைட்டமின் சி குறைவினால் வரும் ஸ்கர்வி நோய்க்கு எதிரானது.

செயல் திறன் மிக்க வேதிப்பொருட்கள்

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள், உள்ளன. அஸ்காரிக் அமிலம், அலனைன், நியாசின், வைட்டமின் சி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்க்மோட்டின், நாரிங்கின், சிட்ரால், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிங் அமிலம்

சர்வரோக நிவாரணி

நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து எலுமிச்சையில் அதிகம் காணப்படுகிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

எலுமிச்சம் பழத்தை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன.

நுரையீரல் நோய்களை தடுக்கும்

எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும். எலுமிச்சை சாறு தாகத்தினை தீர்த்து எரிச்சலைப் போக்கும். நோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. நுரையீரல் நோய்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்தின் மூலம் பெற இயலும். ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. பசி தூண்டுவி. தசை இறுக்கி, சீரண ஊக்குவி, வயிற்று வலி தீர்க்கும். வாந்தி நிறுத்தும்.

சீரண மண்டலம்

கல்லீரல் தொல்லைகளைப் போக்க வல்லது. கணையப் பெருக்கம் தொடர்பான நோய்களுக்கு எலுமிச்சை ஊறுகாய் பயன்படுகிறது. எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். எலுமிச்சை சாற்றின் பானம் நீரிழிவு நோயாளியின் தாகம் போக்கும். கொசுக்கடியினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் குடைச்சல் போக்க கடித்த இடத்தில் எலுமிச்சை சாறினைப் பூச வேண்டும். இரவில் தூங்குவதற்கு முன் சாறினைப் பூசினால் கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கும்.

வயிற்றுப் போக்கு

எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை இறுக்கும் குணம் உண்டு. அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக வயிற்றுப் போக்கு நின்றுவிடும். தேன் சேர்த்து சாப்பிட்டால் மலக்கட்டு நீங்கி விடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் சிரமப்படுபவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

ஸ்கர்வி நோயை குணமாக்கும்

குழந்தைகளுக்கு 35 மில்லிகிராமும், பெரியவர்களுக்கு 50 மில்லிகிராமும், பாலு}ட்டும் தாய்மார்களுக்கு 80 மில்லிகிராம் வைட்டமின் சி யும் தினம் தேவையாகும். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். நகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது. முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யை தர எளிதில் குணமாக்கலாம்.

மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகச் செய்தி மலர் :

* வரும் 2015ம் ஆண்டுக்குள் உலகளவில் விளம்பர வருவாய் வளர்ச்சியில் இந்தியா முன்னிலை பெறும்

1875117.jpg

ஜூன் 20,2011,01:19

புதுடில்லி:இந்தியாவின் விளம்பர வருவாய், வரும் 2015ம் ஆண்டிற்குள், 13 சதவீதம் வளர்ச்சி கண்டு, 79 ஆயிரத்து 133 கோடி ரூபாயில் இருந்து 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்.

இது, சர்வதேச அளவிலான விளம்பர வருவாய்வளர்ச்சி மதிப்பீட்டை விட இரு மடங்கு அதிகமாகும்.உலகளவில் பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், வானொலி, திரைப்படம் உள்ளிட்ட 13 பிரிவுகளில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து, பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில், உலகளவிலான விளம்பர வருவாயில், வரும் 2015ம் ஆண்டிற்குள் இந்தியா, மிகப் பெரிய அளவில் வளர்ச்சி காணும் என்று தெரிய வந்துள்ளது.

இந்தியாவில், பத்திரிகை விளம்பரங்களின் ஆண்டு வருவாய்தற்போது 10 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இது, வரும் 2015ம் ஆண்டு, 18 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நான்காண்டுகளில், இப்பிரிவின் ஒட்டு மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 12 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.

இப்பிரிவின் வருவாய்வளர்ச்சியில், இந்தோனேஷியாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அதே சமயம், ஆசிய பசிபிக் பிராந்திய சந்தையில் முன்னணியில் உள்ள ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் விளம்பர வருவாய்வளர்ச்சி தேக்க நிலையை அடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவி
ல் விளம்பரத் துறையின் வேகமான வளர்ச்சிக்கு ஈடாக, பத்திரிகைகளின் விற்பனை வளர்ச்சி இருக்காது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகைகளின் விற்பனையை பொருத்தவரை, வரும் 2015ம் ஆண்டில், ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும். அதே சமயம், சீனா, இந்தோனேஷியா, ஹாங்காங் மற்றும் மலேசியாவில் இந்த வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டில், கடந்த 2010ம் ஆண்டு பத்திரிகைகளின் விற்பனை வருவாய்5,825 கோடி ரூபாயாக இருந்தது.

இது, வரும் 2015ம் ஆண்டில் 7,272 கோடி ரூபாயாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பத்திரிகைத் துறையின் விற்பனை மற்றும் விளம்பர வருவாய், சென்ற 2010ம் ஆண்டு 15 ஆயிரத்து 894 கோடி ரூபாயாக இருந்தது. இது, வரும் 2015ம் ஆண்டு 9.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பத்திரிகைகளை விட, தொலைக்காட்சிகளின் விளம்பர வருவாய்அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொலைக்காட்சி விளம்பர வருவாய்9,000 கோடி ரூபாயில் இருந்து, வரும் 2015ம் ஆண்டு 19 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.உலகளவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொலைக்காட்சித் துறையின் விளம்பர வருவாய்6.5 சதவீத வளர்ச்சி கண்டு, 10.60 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.

அதே சமயம், பத்திரிகைத் துறையின் விளம்பர வருவாய்1.9 சதவீதம் (8.06 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவிற்கே வளர்ச்சி காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சி விளம்பர வருவாயில் இந்தியா, வரும் 2015ம் ஆண்டில், 14 சதவீத ஒட்டு மொத்த வளர்ச்சி கண்டு, உலக நாடுகளில் நான்காவது இடத்தைப் பிடிக்கும். மேலும், இணையதளம் சார்ந்த விளம்பர வருவாயின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் இரு மடங்காக, அதாவது 20.9 சதவீதம் அதிகரித்து, 702 கோடி ரூபாயில் இருந்து 1,800 கோடி ரூபாயாக உயரும்.

இதே காலத்தில், வானொலி விளம்பர வருவாயும் 1,000 கோடி ரூபாயில் இருந்து 1,800 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.சர்வதேச அளவில், பொழுதுபோக்கு மற்றும் ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரச் செலவினம் கடந்த ஆண்டு 14 லட்சம் கோடி டாலராக இருந்தது. இது, வரும் 2015ம் ஆண்டில் 19 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்தி மலர் :

இலங்கை நடத்தும் போட்டி ஐபிஎல் போட்டிகளில் ஆட இந்திய வீரர்களுக்குத் தடை

19-shashank-manohar300.jpg

மும்பை: இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ள போட்டி ஐபிஎல் போட்டியான இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் ஆடக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் பிரபலமாக திகழ்கின்றன. இப்போட்டிகளில் பங்கேற்க சர்வதேச அளவில் புகழ் பெற்ற வீரர்கள் முட்டி மோதுகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் திடீரென உத்தரவு போட்டதால் இலங்கை வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். ஐபிஎல் போட்டிகளி்ல ஆடினால் நல்ல துட்டு கிடைக்கும் என்பதால் அதிலிரு்நது விலகி வர அவர்களுக்கு மனமில்லை. இருப்பினும் கிரிக்கெட் வாரியத்தின் முரண்டால் அவர்கள் கிளம்பிச் செல்ல நேரிட்டது.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த நிலையில் இலங்கை திரும்பிய வீரர்கள் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்திடம் சரியான அடி வாங்கி வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகளிலிருந்து இலங்கை வீரர்களை விடுவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்ததால் கடுப்பான இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐபிஎல்லுக்குப் போட்டியாக இலங்கை பிரீமியர் லீக் என்ற தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் இணைந்துள்ளனர். இந்திய வீரர்கள் பலரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டு விட்டது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில், இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தவில்லை. மாறாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தனி நபர் இதை நடத்தவுள்ளார். எனவே அதிகாரப்பூர்வமற்ற இந்தப் போட்டியில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.தனியார்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் நமது வீரர்களை அனுப்புவதில்லை என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கை முடிவாகும்.

எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால் மட்டுமே இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க முடியும். இல்லாவிட்டால் பங்கேற்க முடியாது. எங்களது முடிவை ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்குத் தெரியப்படுத்தி விட்டோம் என்றார் அவர்.

இலங்கை பிரீமியர்லீக் போட்டிகள் ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய வீரர்கள் பிரவீன் குமார், முனாப் படேல், அஸ்வின் ஆகியோர் இத்தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர். தற்போது அவர்களுக்கு கிரிக்கெட் வாரியம் தடை போட்டு விட்டது.

ஆன்மீகச் செய்தி மலர் :
* அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்

மூலவர்    :    தண்டாயுதபாணி
உற்சவர்    :    சண்முகர்
அம்மன்/தாயார்    :    -
தல விருட்சம்    :    பொன்அரளி
தீர்த்தம்    :    குமரதீர்த்தம்
ஆகமம்/பூஜை     :    காரண ஆகமம், காமீக ஆகமம்
பழமை    :    500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    -
ஊர்    :    குமரகிரி
மாவட்டம்    :    சேலம்
மாநிலம்    :    தமிழ்நாடு

 தல சிறப்பு:

இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார்.


இங்கு முருகனுக்கு நைவேத்யமாக சுத்தான்னம், மாம்பழம் படைத்து வழிபடுகின்றனர். இத்தலம், தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான தலமாக திகழ்கிறது. பிரகாரத்தில் துர்க்கை, நவக்கிரகம், ஐயப்பன் சன்னதிகள் உள்ளது.

 தலபெருமை:


விபத்திற்கு பூஜை: இங்கு ஒரு வினோதமான அர்ச்சனை முறை உள்ளது. விபத்தில் காயம்பட்டவர் மற்றும் அவசரசிகிச்சை பெறுபவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் தண்டபாணிக்கு "திரிசதை அர்ச்சனை' செய்து பூஜை செய்கின்றனர். இக்கோயிலில் கிடைக்கும் விரிச்சி பூவில் பன்னீர், சந்தனம் கலந்து இந்த அர்ச்சனை செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதாகவும், இவரை வணங்கிச்சென்றால் விபத்துக்களில் சிக்காமல் தப்பிக்கலாம் என்றும் நம்புகின்றனர். எனவே, இங்கு வாகனம் வைத்திருப்போர் அதிகளவில் இந்த அர்ச்சனை செய்கின்றனர்.

சிறப்பம்சம்: குமரன் குடியிருந்த கிரி என்பதால், "குமரகிரி' எனப்படும் இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார். எனவே, இவரை வணங்கிட செல்வம் செழிக்கும். படிபூஜை செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை.

  தல வரலாறு:


நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்குத் தரவேண்டுமென கேட்டு, பெற்றோரிடம் கோபித்த முருகன் மயில் வாகனத்தில் பழநி சென்றார்.

தண்டாயுதபாணியாக சென்ற அவர் வழியில் இக்குன்றில் சிறிதுநேரம் தங்கிவிட்டு சென்றார்.  பிற்காலத்தில், பழநிக்கு சென்ற பக்தர் ஒருவர் இந்த குன்றில் சற்றுநேரம் களைப்பாறினார். அப்போது, "தண்டாயுதபாணியான நான் இவ்விடத்தில் குடியிருக்கிறேன்' என அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட பக்தர் ஒன்றும் புரியாமல் பழநிக்கு சென்றார்.

பழநியில் அடியார் வேடத்தில் வந்த முருகன், பக்தரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து, அசரீரி ஒலித்த இடத்தில் கோயில் கட்டும்படி கூறினார். அத்திருவோட்டில் கிடைத்த பணத்தின் மூலம் அப்பக்தர், இவ்விடத்தில் கோயில் கட்டினார். மாம்பழத்திற்காக கோபம் கொண்டு சென்ற தண்டபாணி தங்கிய இடமென்பதால் இங்குபிரதானமாக மாம்பழ நைவேத்யம் படைத்து வணங்கப்படுகிறது. இவ்வாறு, வணங்குவதால் முருகன் நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை.  இவரது, அருளால்தான் சேலம் பகுதி மாம்பழ உற்பத்தியில் சிறந்து விளங்குவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எனவே பக்தர்கள் இவரை, "மாம்பழ முருகன்' என்றும் அழைக்கிறார்கள்.

 திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* தலைசிறந்தது அன்பு மட்டுமே! - பைபிள்

* நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்குங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்.

* உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி அனைவருக்கும், எப்பொழுதும், நன்மை செய்யவே நாடுங்கள்.

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் பெண் மத்திய மந்திரி யார் ?

விடை - ராஜ்குமாரி அமிர்த்கௌர்

இதையும் படிங்க :

திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை
புதுடில்லி:திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு தண்டனைக் கைதிகள், கேம்பஸ் இன்டர்வியூ மூலம், தேர்வு செய்யப்பட்டு கவுரவமான வேலைக்குச் செல்கின்றனர்.

திகார் சிறையில், தண்டனைக்காலம் முடிந்து விடுதலையாகும் கைதிகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதன்முறையாக, திகார் சிறையில், கடந்த பிப்ரவரி 25ல், சில தனியார் நிறுவனங்கள், கேம்பஸ் இன்டர்வியூ நடத்தின. இதில், வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தீப், 40, மற்றும் ஜார்ஜ், 23, ஆகிய இருவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. ஜார்ஜ் ஆய்வக உதவியாளராகவும், சந்தீப் விற்பனை பிரதிநிதியாகவும் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு எதிர்காலம் குறித்த பயம் அதிகமாக இருந்தது. சிறைக்குச் சென்று வந்தவர்களுக்கு வேலை கிடைப்பது அரிது. அதிலும், அவர்களை யாரும் மதிக்கக் கூட மாட்டார்கள். ஆனால், சிறையில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ மூலம் எங்களுக்கு கவுரவமான வேலை கிடைத்துள்ளது. சமூகத்தில் இப்போது, நாங்கள் கவுரவமாக வேலைக்குச் சென்று வருகிறோம். எங்கள் சக ஊழியர்களும் எங்களை கவுரவமாக நடத்துகின்றனர். இந்த கவுரவத்திற்கு, எங்கள் சிறை அதிகாரி நீரஜ்குமார் தான் காரணமாக இருந்தார். கைதிகளில் நலனில் எதிர்கால நலனில் அக்கறை கொண்டிருக்கும் அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, சிறை அதிகாரி நீரஜ்குமார் கூறியதாவது:சிறையில் இருந்து விடுதலையான இரண்டு கைதிகளுக்கு சிறப்பான எதிர்காலம் அமைந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் திருந்தி, சமூகத்தில் கவுரவமான நிலைக்கு உயர வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். எவ்வித தயக்கமும் இன்றி, இரண்டு முன்னாள் கைதிகளுக்கு வேலை அளித்த நிறுவனம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்த நிலை அதிகரிக்க வேண்டும். இதே போன்று, திகாரில் உள்ள மற்ற சிறைகளில் இத்தகைய கேம்பஸ் இன்டர்வியூக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு நீரஜ் குமார் கூறினார்.
நன்றி - சமாசார், தின மணி, தின மலர், வெப்துனியா.


--

No comments:

Post a Comment