Thursday, June 9, 2011

இன்றைய செய்திகள் - ஜீன் 09 , 2011.

முக்கியச் செய்தி :

கனிமொழி, சரத்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

kani.jpg

புதுதில்லி, ஜூன்.8: திமுக எம்பி கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. குற்றச்செயலில் அவரின் பங்கை ஆராய்ந்து பார்த்து ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக நீதிபதி அஜித் பாரிஹோக் தெரிவித்தார்.

தீர்ப்பு வாசிக்கப்படும்போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நீதிமன்றத்தில் இருந்தனர்.

ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்ததும் ராஜாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுததாக தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும், சரத்குமாரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை விசாரணை நீதிமன்றம் மே 20-ம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. அதை எதிர்த்து இருவரும் தில்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களின் மீதான விசாரணை தில்லி உயர்நீதிமன்றத்தில் மே 30-ம் தேதி முடிவடைந்தது. அதன் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

2ஜி ஊழலில் தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் சேர்ந்து சதி செய்தார் என கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2ஜி ஊழல் பணத்தில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டிவிக்காக ரூ 200 கோடியை பெற்றார் என நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னதாக சினியுக் பிலிம்ஸ் இயக்குநர் கரீம் மொரானியின் ஜாமீன் மனுவை பாட்டியாலா நீதிமன்றம் நிராகரித்தது. அவரது மனுவை நிராகரித்த நீதிபதி ஓ.பி.சைனி அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டார். ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டவுடன் உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

ரூ 214.84 கோடியை கடனாகப் பெற்றதாக கலைஞர் டிவியின் வரவுசெலவு கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. கலைஞர் டிவிக்கு ரூ 214.86 கோடி அளித்ததாக சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-10 ஆண்டு வரவுசெலவு கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சினியுக் நிறுவனம் பால்வா மற்றும் மொரானி சகோதரர்களுக்கு சொந்தமானது. சினியுக் நிறுவனத்தின் வரவுசெலவு கணக்கின்படி, அந்த நிறுவனம் ஆசிப் பால்வாவுக்கு சொந்தமான குஸேகாவோன் நிறுவனத்திடம் இருந்து ரூ 212 கோடியை கடனாகப் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆசிப் பால்வா டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் ஒரு இயக்குநராவார். டிபி ரியாலிட்டி நிறுவனம் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகச் செய்தி மலர் :

* பான் கீ முனுக்கு இந்தியா ஆதரவு

வாஷிங்டன்: ஐ.நா.,சபையின்பொதுசெயலாளராக இருப்பவர் பான்கி மூன். இவர் ஐ.நாவின் பொதுச்செயலாளராக கடந்த 2007-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதா பான்கிமூன் தெரிவித்துள்ளார்.பான்கிமூனை ஆதரிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐநாவுக்கான இந்தியாவின் பிரதிநியாக உள்ள மன்ஜீவ்சிங்பூரி இதனை தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே போல் சீனாவும் பான்கிமூனே மீண்டும் ஐநாவின் பொதுசெயலாளராக வருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

* கூடங்குளம் அணுமின் நிலையம் சுனாமி தாக்குதலை சமாளிக்கும்
 

மாஸ்கோ : "ரஷ்ய உதவியில், தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது' என, அந்நாட்டைச் சேர்ந்த அணுமின் நிலைய கட்டமைப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், சர்வதேச அணுசக்தி மாநாடு நடந்து வருகிறது. இதில், உலக நாடுகளைச் சேர்ந்த முன்னணி அணுமின் சக்தி உற்பத்தியாளர்களும், நுகர்வோர்களும் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது, ரஷ்யாவைச் சேர்ந்த, "ஆட்டம் ஸ்டோரிக் ஸ்போர்ட்' நிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் க்லுகோவ் பேசியதாவது: இந்தியாவில் உள்ள தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் நம்பகமானது. கடந்த 2004ம் ஆண்டில், இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலை கருத்தில் கொண்டு, அதன் கட்டமைப்பு பணிகளில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், எதிர்காலத்தில் மீண்டும் சுனாமி தாக்கினாலும், சேதங்கள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள வெப்பமூட்டும் கருவிகள், குளிர்விப்பான்களில் பிரச்னை ஏற்பட்டாலும், தொடர்ச்சியாக 30 மணி நேரத்திற்கு உருகிவிடாமல், தாக்குப் பிடிக்கக் கூடியவை. இவ்வாறு அலெக்சாண்டர் பேசினார்.

கடந்த மார்ச் மாதம் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலை தொடர்ந்து, அங்குள்ள புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உலக நாடுகள் பலவும் அணுமின் சக்தி பயன்பாடு தொடர்பான தங்கள் கொள்கைகளில், மாற்றம் செய்யத் துவங்கியுள்ளன. ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள், அணுமின் சக்தி தொடர்பான புதிய திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டுள்ளன. எனினும், இந்திய தரப்பில், உரிய பாதுகாப்பு முறைகளுடன் அணுமின் சக்தி பயன்பாட்டை தொடர்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இலங்கை மீது பொருளாதாரத் தடை: மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை
சென்னை, ஜூன் 8- இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:

இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.

இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா சபை பொதுச்செயலரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. எனவே, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐநா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

மேலும், சிங்களர்களுக்கு இணையாக, தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதற்காக, இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டார்.

இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது

* லிபியாவை தொடர்ந்து தாக்க திட்டம்

டிரிபோலி:லிபியாவில் நேட்டோ படைகள், அதிபர் கடாபியின் வீட்டருகே தாக்குதல் நடத்தின. அரசுப் படைகளும் பதிலுக்கு, அதிருப்தியாளர்கள் தங்கியுள்ள நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திவருகின்றன.லிபியாவை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபியை பதவி விலகக் கோரி, அதிருப்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க அரசுப் படைகள் விமான தாக்குதல் நடத்தியதில், நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இதையடுத்து, அதிருப்தியாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நேட்டோ படைகள், கடாபிக்கு எதிராக களமிறங்கின. தலைநகர் டிரிபோலியில் கடாபியின் மாளிகையையொட்டிய பகுதியில் நேட்போ படைகள் தாக்குதல் நடத்தியதில் பயங்கர குண்டு சத்தமும், வானளாவிய புகை மண்டலமும் காணப்பட்டது. கடாபி ராணுவத் தளபதி வீட்டை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், உயிர் பலி குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை. இதற்கிடையே, கடாபி ராணுவப் படைகள், அதிருப்தியாளர்கள் அதிகமுள்ள அஜிதாபியான் நகரின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால், லிபியாவில் முக்கிய நகரங்களில் உணவு, குடிநீர், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அதிபர் பதவியிலிருந்து கடாபி இறங்க மறுப்பதால், அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்க நேட்டோ படைகள் திட்டமிட்டுள்ளன.இதனிடையே, பெங்காசி நகரில் கடாபிக்கு எதிரான அதிருப்தியாளர் தலைவர்களுடன் ரஷ்ய தூதர் பேச்சு நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.

* சிகாகோ கோர்ட்டில் ராணா மீதான விசாரணை முடிந்தது-விரைவில் தீ்ர்ப்பு

08-rana300.jpg

சிகாகோ: பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணா மீதான தீவிரவாத வழக்கின் விசாரணை சிகாகோ கோர்ட்டில் முடிவடைந்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வலுவான ஆதாரம் இருப்பதாக அமெரிக்க அரசின் தரப்பில் இறுதி வாதம் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பை அறிவிக்கவுள்ளனர்.

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளான தஹவூர் ராணா மற்றும் பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி ஆகியோர் சிகாகோவில் வைத்து எப்பிஐ படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இருவர் மீதும் சிகாகோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் மீது பயங்கரவாத செயல்கள், சதிச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களில் ஹெட்லி, ராணாவுக்கு எதிரானவராக, அப்ரூவராக மாறியுள்ளார். மரண தண்டனையிலிருந்து தப்பிக்க அவர் இவ்வாறு மாறியுள்ளார்.

இதில் ராணா மீதான வழக்கு சிகாகோ கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது ராணாவுக்கு எதிராக ஹெட்லி வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும், ராணுவமும் எந்த அளவுக்கு பயங்கரமான சதிச் செயல்களில் ஈடுபட்டன என்பதை புட்டுப் புட்டு வைத்தார். மேலும் மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஐஎஸ்ஐக்கும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளையும் அவர் புட்டுப் புட்டு வைத்தார்.

இந்த வாதங்களை ராணாவின் வக்கீல் முழுமையாக மறுத்து வாதாடினார். இதையடுத்து வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்தது. அரசுத் தரப்பும், ராணா தரப்பும் தங்களது இறுதி வாதங்களை எடுத்து வைத்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் விரைவில் தீர்ப்பை அளிக்கவுள்ளனர்.

50 வயதான ராணா மீது முக்கியக் குற்றவாளி ஹெட்லியைக் காப்பாற்ற தீவிரவாதிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தது, மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்கான பூர்வாங்க பணிகளைச் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் டேணியல் காலின்ஸ் வாதிடுகையில், ஹெட்லியை நம்பி ராணா மோசம் போனதாகவோ, ஹெட்லி ராணாவை பிரெய்ன் வாஷ் செய்து ஏமாற்றியதாகவோ கூற முடியாது. தீவிரவாத செயல்களில் ராணாக தானாக முன்வந்து ஈடுபட்டதற்கான முழுமையான ஆதாரங்கள் உள்ளன.

மும்பையில் இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த பயங்கரவாத செயல்களுக்கு முழுமையான காரணம் ராணாவும், ஹெட்லியும்தான். அப்பாவி மக்களைக் கொல்ல ஹெட்லி துடித்தது இந்த நண்பருக்கு (ராணா) முன்கூட்டியே நன்றாகத் தெரியும்.

மும்பையில் நடந்தது ஒரு வேளை கோபன்ஹேகனில் நடந்திருக்கலாம். தீவிரவாதிகளின் புல்லட் மழைக்கு 164 அப்பாவிகளின் உயிர்கள் மும்பையில் மரித்துப் போயுள்லன. இதுபோன்ற கொடூரமான, கோரமான சம்பவத்தை ஒரு நபர், இருநபர் அல்லாமல் மிகப் பெரிய கட்டமைப்பின் உதவியுடன்தான் நிகழ்த்த முடியும்.

துப்பாக்கியை ஏந்திச் சென்றால்தான் தீவிரவாதி என்று கூற முடியாது. மாறாக, துப்பாக்கியை எடுத்து் செல்பவருக்கு பெரும் உதவிகளைச் செய்வதும் கூட தீவிரவாதம்தான்.

ஹெட்லி தன்னை ஏமாற்றி விட்டதாக ராணா கூறுவது ஏற்கக் கூடியதல்ல. உண்மையில் இவர்கள் இருவரும் சேர்ந்துதான் உலகையே ஏமாற்றியுள்ளனர். ஏன், எப்பிஐயையும் கூட ஏமாற்றியுள்ளனர் என்றார்.

ராணாவுக்காக வாதாடிய வழக்கறிஞர் பாட்ரிக் ப்ளீகன் கூறுகையில், ஹெட்லி அனைவரையும் ஏமாற்றியுள்ளார். உங்களையும் (நீதிபதிகளை) ஏமாற்றப் பார்க்கிறார். அதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள். ராணாவை இந்த வழக்கில் தண்டிக்கக் கூடாது.

ராணா ஒருசாதாரண பிஸினஸ்மேன். தனது பிஸினஸை மும்பை, லாகூர், கராச்சி, டென்மார்க்கில் விரிவுபடுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது.

ஆனால் ராணாவின் திட்டங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஹெட்லி. தனது திட்டங்களுக்கு ராணாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தி தீவிரவாத செயல்களுக்கு அவரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் இன்று ராணாவை தியாகம் செய்து விட்டார் ஹெட்லி. ஹெட்லியின் திட்டங்கள் எதுவும் ராணாவுக்குத் தெரியாது என்பதே உண்மை என்றார் அவர்.

இரு தரப்பு இறுதி வாதங்களையும் கேட்டு முடித்துள்ள 12 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் விரைவில் தீர்ப்பை வெளியிடவுள்ளது.

* முஷாரப் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்? 
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றத்தில் அரசு தரப்பில் கோரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முஷாரப் தவறியதை தொடர்ந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

கடந்த மே 30 ஆம் தேதி வரை முஷாரப்புக்கு அவகாசம் கொடுக்கப்பட்டும் அவர் பதிலளிக்க தவறியதாலேயே அவரை தேடப்படும் குற்றவாளியாக ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் முஷாரப் தொடர்ந்து வெளிநாட்டிலேயே தங்கியிருபதால், பாகிஸ்தானிலுள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான அனுமதியை அரசு தரப்பு வழக்கறிஞர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* மைசூர் நகருக்குள் புகுந்து 2 காட்டு யானைகள் அட்டகாசம்!

elephant.jpg

மைசூர், ஜூன் 8: மைசூர் நகருக்குள் புதன்கிழமை காலை புகுந்த 2 காட்டு யானைகள், வங்கி காவலாளியையும், ரோட்டோரம் கட்டியிருந்த பசு மாட்டையும் குத்திக் கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

 மைசூர் நகரவாசிகளுக்கு புதன்கிழமை காலைப்பொழுது யானைகளின் அட்டகாசத்துடன் விடிந்தது. எச்.டி.கோட்டை காட்டில் இருந்து பன்னூர் வழியாக மைசூர் நகருக்குள் காலை 5 மணிக்கு ஒரு பெண் யானையும், அதன் ஆண் யானைக்குட்டியும் புகுந்தன.

 இவை இரண்டும் பம்பு பஜார், சரஸ்வதிபுரம், மகாராணி கல்லூரி, ஆட்சியர் அலுவகங்கம் ஆகியப் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை மிதித்து துவம்சம் செய்தன.

 தலைதெறிக்க ஓடிய மக்கள்: ஒரு யானை, சயோஜிராவ் சாலையோரம் கட்டியிருந்த பசு மாட்டை தந்தங்களால் குத்திக் கொன்றது. பின்னர், ஆயுர்வேதக் கல்லூரி சந்திப்பு வழியாக சிவராம் பேட்டைக்குள் அந்த யானை நுழைந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், சாலைகளில் தலைத்தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

 வங்கி காவலாளி சாவு: அப்போது, என்.எஸ்.சாலையில் உள்ள பேங்க் ஆப் மகாராஸ்ட்ராவில் காவலாளியாக பணிபுரியும் ரேணுகாபிரசாத் (58) என்பவரை யானை தும்பிக்கையால் வளைத்து பிடித்துக் கொண்டு, தந்தங்களால் குத்திக் கொன்றது.

 பின்னர் எதிரே வந்த வாகனங்களை மிதித்து, நொறுக்கியபடி ஒரு யானை நாராயணபுரா சாலை வழியாக ஜே.எஸ்.எஸ் பெண்கள் கல்லூரிக்குச் சென்றது. மற்றொறு யானை சுபாஷ் நகர், குச்சடஹள்ளி டோபிகாட்டில் உள்ள நாயுடு பண்ணைக்குள் நுழைந்தது.

 யானையைப் பிடிக்க மயக்க மருந்து: ஜே.எஸ்.எஸ்.பெண்கள் கல்லூரிக்கு வந்த வனத்துறையினர் மயக்க மருந்து கொடுத்து யானையைப் பிடித்தனர். பழகிய யானைகளான அர்ஜுன், அபிமன்யூ, கஜேந்திரா, ஸ்ரீராமா மூலம் நாயுடு பண்ணைக்குள் புகுந்த மற்றொரு யானையை வனத்துறையினர் பிடித்தனர்.

 பொதுமக்கள் பீதி: யானைகளின் தொடர் அட்டகாசத்தால் 3 பேர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊருக்குள் யானைகள் புகுந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதால், அனைத்து தெருக்களிலும் கடைகள், அலுவலகங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டன.

 மைசூர் நகரம் முழுவதும் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதுபோல மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இச்சம்பவத்தால் மைசூர் நகர மக்கள் பீதியடைந்தனர்.

 ரூ.5 லட்சம் நிவாரணம்: யானையால் கொல்லப்பட்ட ரேணுகாபிரசாத்தின் கண்களை தானம் செய்வதாக அவருடைய மனைவி வாணி, மகன்கள் தேவராஜ், ராஜு அறிவித்தனர். இதையடுத்து அவரது கண்களை கே.ஆர்.புரம் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். இறந்த ரேணுகாபிரசாத்தின் குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளது.

* உண்ணாவிரதத்தைக் கைவிட ராம்தேவுக்கு மருத்துவர்கள் ஆலோசனை

ramdev.jpg

ஹரித்துவார், ஜூன் 8: யோகா குரு ராம்தேவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் உண்ணாவிரதத்தை கைவிட அவருக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

 வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும், ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாபா ராம்தேவ் புதன்கிழமை 5-வது நாளாக ஹரித்துவார் அருகேயுள்ள தனது பதாஞ்சலி யோகா பீடத்தில் சீடர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவரது உடல்நிலையை டாக்டர் யோகேஷ் சர்மா தலைமையிலான மருத்துவக்குழு பரிசோதித்து வருகிறது.

 ராம்தேவின் உடல்நிலை குறித்து யோகேஷ்சர்மா புதன்கிழமை கூறியதாவது: ராம்தேவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது. எனவே உண்ணாவிரதத்தை கைவிடும்படி அறிவுறுத்தி உள்ளோம். அவ்வாறு கைவிடாவிட்டால் பழச்சாறு, பால் போன்ற திரவ உணவையாவது அருந்தும்படி அறிவுறத்தியுள்ளோம். அவரது உடல் எடை குறைந்து வருகிறது. இதனால் உடல் நிலை சீர்கெட்டு வருகிறது என்றார்.

 ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட ராம்தேவ் மறுத்துவிட்டார். தனது கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும்வரை உண்ணாவிரதம் நீடிக்கும் என அவர் அறிவித்துள்ளார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான எனது சீடர்கள் என்னுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

 நாட்டிலுள்ள 624 மாவட்டங்களிலும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. உண்ணாவிரதம் இருந்துவரும் தங்களது சகோதரர்களுடன் மற்றவர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்தப் போராட்டத்தில் சிறுவர்களும், முதியோரும் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராம்தேவ்.

 * கன்னடப் பள்ளிகளாக மாற்றப்படும் தமிழ்ப் பள்ளிகள்!
பெங்களூர், ஜூன் 8: கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் படிப்படியாக கன்னடப் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

 தமிழ் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

 கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர், கோலார், ஷிமோகா, தாவணகெரே, ஹூப்ளி, சாமராஜ் நகர் உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 60 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

 இந்தியா விடுதலையானபிறகு, கர்நாடகத்தின் பல இடங்களில் தமிழர்களுக்காக தமிழ் பயிற்றுமொழி பள்ளிகள் தொடங்கப்பட்டன.

 1980-ல் நடைபெற்ற கோகக் போராட்டத்தின் விளைவாக கட்டாய கன்னடம் நடைமுறைக்கு வந்தது.

 இதன்பிறகு, தமிழ்ப்பள்ளிகள் கன்னடப் பள்ளிகளாக நிறம்மாறத் தொடங்கின.

 குறிப்பாக 1990-ல் நடந்த காவிரி கலவரத்துக்கு பிறகு, கன்னடம் படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தமிழர்கள் ஆட்பட்டனர். கர்நாடகத்தில் மும்மொழித் திட்டம் அமலில் இருப்பதால், தமிழ், கன்னடம், ஆங்கிலம் படிக்க தமிழ் மக்களை தமிழார்வலர்கள் ஊக்குவிக்கத் தொடங்கினர்.

 ஆனால், தமிழ்ப் பள்ளிகளை படிப்படியாக கன்னடப் பள்ளிகளாக மாற்றும் திட்டத்தை கர்நாடக அரசு இலைமறைவு காயாக செயல்படுத்தி வந்துள்ளது. இதற்கு அரசு தெரிவிக்கும் காரணம், தமிழ் படிக்கும் மாணவர்கள் இல்லை என்பதுதான்.

 இதே காரணத்தை சுட்டிக்காட்டி ஓய்வுபெறும் தமிழாசிரியர்கள் இடத்துக்கு புதிய தமிழாசிரியர்கள் நியமனத்தையும் நிறுத்திவைத்து எழுதப்படாத சட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தி வருகிறது.

 இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து கர்நாடக தமிழாசிரியர் சங்கத் தலைவர் க.சுப்பிரமணியம், தினமணி நிருபரிடம் கூறியது:

 பெங்களூரைத் தவிர கர்நாடகம் முழுவதும் அரசு, அரசு மானியம்பெறும், பெங்களூர் மாநகராட்சி, தனியார் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு முன் சுமார் 3 ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள் பணியாற்றினர். மாணவர்களும் அதிக அளவில் படித்து வந்தனர்.

 மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டி, தமிழாசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவில்லை.

 இப்போது கர்நாடகம் முழுவதும் ஆயிரம் தமிழாசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

 அடுத்த 10 ஆண்டுகளில் இது 200 ஆக குறையும் ஆபத்து உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம், கன்னடத்துடன் தமிழ் பாடத்தையும் அளிக்கத் தவறக்கூடாது என்றார்.

 செயின்ட் அல்போன்சஸ் பள்ளி தமிழாசிரியர் கார்த்தியாயினி கூறியது:

 10 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் 250 அரசு தமிழ் பள்ளிகள் செயல்பட்டன. இப்போது, 101 தமிழ் பள்ளிகள் மட்டுமே உள்ளன. இவற்றிலும் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

 இதை காரணம்காட்டி தமிழ் பள்ளிகள், கன்னடப் பள்ளிகளாக உருமாறி வருகின்றன.

 சில பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படாததால், தமிழ் மாணவர்கள் தமிழ் கல்வியை கைவிடும் நிலை உள்ளது.

 அரசு மானியம் பெறும் பள்ளிகளோ தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி கன்னட வகுப்புகளுக்கு மாற்றிவருகின்றன.

 தமிழர்கள் தாய்மொழி கற்கும் உரிமை மறைமுகமாக பறிக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், நாம் நமது அடையாளத்தை இழக்க நேரிடும்.

 தமிழ்க்கல்வியின் நலிவைத் தடுக்க கர்நாடக தமிழர்கள் ஒன்றுசேர்ந்து குரல் எனழுப்ப வேண்டும் என்றார்.

* கொச்சியில் இலங்கையைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேர் கைது: தொடர் விசாரணை
கொச்சி: கொச்சியில் இருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த இலங்கையைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொச்சியில் உள்ள ஒரு லாட்ஜில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சட்டவிரோதமாக வேறு நாட்டுக்கு செல்ல திட்டமிடலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தி 2 குழந்தைகள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை கடத்தல் கும்பல் ஒன்று சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் கொல்லத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லாட்ஜில் தங்கியிருந்த 39 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்ததில் உள்ளூர் ஏஜெண்ட் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.

* புதுச்சேரியில் 4 அமைச்சர்கள் பதவியேற்பு-இழுபறி முடிந்தது
புதுச்சேரி: புதுச்சேரியில் நீண்ட இழுபறியில் இருந்து வந்த அமைச்சரவை அமைக்கும் பணிகள் இன்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தன. நான்கு அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. என்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வென்றன. ஒரு இடத்தை திமுக ஆதரவு சுயேச்சை வென்றார். மீதமுள்ள 9 இடங்களில் மட்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணி வென்றது.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே அங்கு பெரும் பிரளயம் வெடித்தது. முதல்வராகப் பதவியேற்ற என்.ரங்கசாமி, தனித்து ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்து அதிமுகவை டென்ஷனாக்கினார். இதனால் கூட்டணி அங்கு பிளவுபட்டது.

இருப்பினும் அதிமுகவை சமாதானப்படுத்த கடுமையாக முயன்றார் ரங்கசாமி. ஆனால் அதற்குப் பலன் கிடைத்ததாக தெரியவில்லை. இந்த குளறுபடியால் அமைச்சர்கள் யாரும் நியமனம் செய்யப்படாமல் அரசு நிர்வாகம் பெரும் தேக்கத்தை சந்தித்தது.

இந்த நிலையில் நேற்று அமைச்சர்கள் நியமனத்தை இறுதி செய்தார் ரங்கசாமி. அமைச்சரவைப் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் குண்டூசி வாங்க வேண்டும் என்றால் கூட மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும். மத்திய அரசின் தயவு இல்லாமல் ஒரு புல்லைக் கூட புதுச்சேரி அரசால் பிடுங்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரங்கசாமி அனுப்பிய பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதம் செய்து வந்தது. இன்று காலை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் ஆளுநர் மாளிகையில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மத்திய அரசின் தாமதத்தால் அது நடைபெறாமல் ரத்தானது.

இந்த நிலையில், பிற்பகலில் அனுமதி கொடுத்தது உள்துறை அமைச்சகம். இதையடுத்து மாலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

அப்போது சந்திரகாசு, ராஜவேலு, கல்யாண சுந்தரம், பன்னீர்செல்வம் ஆகியோருக்கு துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

நான்கு பேரின் இலாகாக்களும் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்களில் சந்திரகாசுவும், ராஜவேலுவும் முன்னாள் அமைச்சர்கள் ஆவர். மற்றவர்கள் புதியவர்கள்.

மாநிலச் செய்தி மலர் :

tnsec.jpg

* மெட்ரோ ரயில் திட்டத்தைக் கைவிடவில்லை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 8: மெட்ரோ ரயில் திட்டத்தைக் கைவிடவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பாமக உறுப்பினர் கணேஷ் குமார் பேசுகையில், சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள மோனோ ரயில் திட்டம் என்பது பல நாடுகளில் தோல்வி அடைந்துள்ளது. ஜப்பானில் 108 கிலோ மீட்டர், ஆஸ்திரேலியாவில் 7 கிலோ மீட்டர் என உலக நாடுகளில் மொத்தம் 164 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் 30 கிலோ மீட்டருக்கு அதிகமாக அந்தத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

 எனவே மோனோ ரயில் திட்டம் சரியானது தானா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும் என்றார்.

 இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில்: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதைப் போலவும், அதற்குப் பதிலாக மோனோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் பேசுகிறார்கள். மெட்ரோ ரயில் திட்டத்தைக் கைவிடவில்லை.

 அப்படியே இருக்கிறது. சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க குறைந்த காலத்தில் செயல்படுத்தும் திட்டமாக மோனோ ரயில் திட்டம் உள்ளது.

 மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த அதிக ஆண்டுகள் ஆகும். மோனோ ரயில் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாகக் கூறுவது தவறான கருத்து.

ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் அந்தத் திட்டம் அமலில் உள்ளது.

 மோனோ ரயில் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி முடிக்க வாய்ப்பு இருக்கிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மோனோ ரயில் கொண்டு வரப்படுகிறது என்றார் நத்தம் விஸ்வநாதன்.

* பள்ளிக் கட்டணம் முறைகேடாக வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை, ஜூன் 8: நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பள்ளிக் கட்டணம் முறைகேடாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

 ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் பாமக உறுப்பினர் கணேஷ்குமார் பேசினார்.

 பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்க, மெட்ரிக் பள்ளிகள் லட்சக்கணக்கில் கட்டணம் கேட்கின்றன. பெற்றோர்களிடமிருந்து புகார்களை எதிர்பார்க்காமல் அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவர் பேசிய பின், அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பதில்:

 பள்ளி கட்டணக் கொள்ளை என்பது அதிமுக ஆட்சியில் செய்யப்படுவது போன்று பேசுகிறார்கள். திமுக ஆட்சியில் பள்ளிக் கட்டண நிர்ணய சட்டம் நிறைவேற்றப்பட்டது. பள்ளிக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கட்டண நிர்ணயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், அளவை மீறி வசூலிக்கப்பட்ட கட்டணத்தை வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

 கடும் நடவடிக்கை: பள்ளிக் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக, நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையில் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு முதலில் அறிக்கை கொடுக்கட்டும். இந்தச் சூழ்நிலையில் கட்டண நிர்ணயம் தொடர்பாக முடிவு செய்வதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

 அதேசமயம், இந்தப் பிரச்னையில் தலையிட முடியாது எனவும் அரசு கூறவில்லை. முறைகேடான முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனப் புகார் தெரிவித்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறது என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

* லத்திகா சரணுக்கு எதிரான தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

lathikaran.jpg

சென்னை, ஜூன் 8: தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக லத்திகா சரணை நியமித்தது செல்லாது என்ற மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக லத்திகா சரண் 8.1.2010-ம் தேதி நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற வழிகாட்டு விதிமுறைகள்படி இந்த நியமனம் நடைபெறவில்லை என்று கூறி தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை முன்னாள் இயக்குநர் ஆர். நடராஜ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்தது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பரிந்துரை செய்யும் அதிகாரிகளின் பட்டியலில் இருந்து தகுதியானவரை டி.ஜி.பி.யாக நியமிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், தகுதியான மூத்த காவல் துறை அதிகாரிகளின் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பியது. அதில் இருந்து, பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மூன்று பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து தமிழக அரசுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் பரிந்துரை செய்தது.

 அந்தப் பட்டியலில் ஆர். நடராஜ் முதலாவது இடத்தில் இருந்தார். பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த லத்திகா சரணை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக மறு நியமனம் செய்து 27.11.2010-ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நியமனம், உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் ஆர். நடராஜ் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த தீர்ப்பாயம், லத்திகா சரணை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது. இந்நிலையில், தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லத்திகா சரண் மேல்முறையீடு செய்தார்.

 உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு விதிமுறைகளின் அடிப்படையில்தான் நான் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டேன்.

 எனவே, இந்த மனு மீதான விசாரணையில் தீர்ப்பு வரும் வரை, என்னை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமித்தது செல்லாது என்று தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று லத்திகா சரண் மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.

 மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். அடுத்த விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

* டாப் ஸ்லிப்பில் கனமழை: சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

08-top-slip300.jpg

பொள்ளாச்சி: டாப் ஸ்லிப் வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சுத்தமாக இல்லை. மேலும், யானை சவாரியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

டாப் ஸ்லிப்

பொள்ளாச்சிக்கு அருகேயுள்ளது ஆனைமலை வனப்பகுதி. இங்குள்ள டாப் ஸ்லிப் தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாகும். இங்குள்ள மர வீடுகள், யானைச் சவாரி ஆகியவை சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்ப்பதாகும். இந்த ஆண்டும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருந்தனர்.

கன மழை

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் டாப் ஸ்லிப் வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கன மழையும், யானைச் சவாரி நிறுத்தப்பட்டதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை சுத்தமாக குறைந்துள்ளது.

“யானை மேல் சுற்றுலாப் பயணிகளை அமர வைக்கப்படும் இருக்கை புல் மற்றும் தேங்காய் மஞ்சியால் செய்யப்பட்டது. இருக்கைகள் மழையில் நனைந்தால் அவற்றை உலர வைப்பது கடினம். யானை சவாரி நிரந்தரமாக நிறுத்தப்படவில்லை. மழை நின்றால் அடுத்த நாளே யானை சவாரி தொடரும்” என வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஆரோக்கியச் செய்தி மலர் :
* முதுகுவலி வராமல் இருக்க

தூங்கும்போது...


(அ) மென்மையான, புதையும் தன்மை கொண்ட மெத்தையில் படுக்காதீர்கள். கடினமான ஒரு படுக்கை அல்லது கடினமான பலகை உள்ள கட்டிலின் மேல் விரிப்பு விரித்துப் படுங்கள்.

(ஆ) உங்கள் படுக்கை முதுகிற்கு நல்ல சார்பு தருவதாகவும், முதுகெலும்பை நேர்நிலையில் வைக்க உதவுவதாகவும் அமையவேண்டும்.

(இ) ஒருப‌‌‌க்கமாகப் படுக்கும்போது முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

(ஈ) கவிழ்ந்து படுப்பது சரியல்ல.

8. பொருள்களைத் தூக்கும்போதோ உயர்த்தி எடுக்கும்போதோ...

(அ) முழங்காலை வளையுங்கள். முதுகை அல்ல.

(ஆ) பயணத்துக்குச் சுலபம் என்று ஒரே சூட்கேஸில் அடைக்காதீர்கள். இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட் கேஸில் கொண்டு செல்லுங்கள். இரண்டையும் இருகரங்களால் தூக்கும்போது சம எடைப் பங்கீடு வரும். முதுகுத் தசைகளுக்கும் சம வேலை கிட்டும்.

(இ) முதுகுத் தசைகளை அதிக உபத்திரவம் செய்யாத வகையில் பொருள்களை உயர்த்தி வைக்கும்போது ஏணியில் படிப்படியாக வைத்து ஏற்றுங்கள்.

9. கார் ஓட்டும்போது...

(அ) உங்கள் கீழ் முதுகுக்கு சார்ந்து கொள்ள ஒரு குஷன் உபயோகியுங்கள். இடைவெளி விட்டு விட்டு காரை நிறுத்தி இறங்கி நின்று பின்பு தொடருங்கள்.

10. ஹீல் வைத்த காலணிகளை அணியாதீர்கள். தட்டையாக உள்ள காலணியையே அணியுங்கள்.

11. உங்கள் எடை அதிகமாக இருந்தால் குறைத்துவிடுங்கள்.

12. டைவ் அடித்தல், பல்டி அடித்தல் போன்ற செயல்கள் கூடாது.

13. கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை வாங்கி நீங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.

உடற்பயிற்சி!

தசை இயங்கு நிலைக்கு தேகப்பயிற்சி அவசியம். முதுகெலும்பை நல்ல நிலைக்கு வைக்கவும் உடற்பயிற்சி உதவும்.

உங்கள் மருத்துவரின் அனுமதி பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வேகமாக நடத்தல், நீச்சல், கைகால்களை மென்மையாக நீட்டி மடக்கல் நல்ல பயிற்சிகளாகும்.

எந்தப் பயிற்சியையும் நிதானமாகவும் படிப்படியாகவும் செய்யவேண்டும்


சீரக‌த்‌தி‌ன் மரு‌த்துவ குண‌ங்க‌ள்

சீரக‌ம் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம். அதனை எ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை.

வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.

சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை பழ‌ச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிவு  

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிந்து 18,394 புள்ளிகளில் முடிவடைந்தது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 29 புள்ளிகள் சரிந்து 5,526 புள்ளிகளில் முடிவடைந்தது.

ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ஹீரோ ஹோண்டா, ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்ஸி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஐடிசி, பெல், டிஎல்எப், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது

* கருப்புப் பணத்தை வெளிக்கொணர மேலும் ஒரு குழு 
கருப்புப் பணத்தை வெளிக்கொணர மேலும் ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ள மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம், வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடிக்கவும், அவர்களை பொதுமக்களிடம் வெளிப்படுத்தவும் இக்குழு முனைப்பாக செயல்படும் என்று கூறியுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் ஒரு அங்கமாக செயல்படவுள்ள இக்குழு, தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்துவருவோரை பொதுமக்களிடம் பட்டியலிடும் என்று கூறப்பட்டுள்ளது.

கருப்புப் பணத்தை வெளிக்கொணர அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்று கூறி, யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியதும், அவருக்கு ஆதரவாக இன்று அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதும் மத்திய அரசிற்கு பெரும் அழுத்தத்தைத் தந்துள்ளது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்

விராத் கோஹ்லி அபாரம் : இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

போர்ட் ஆப் ஸ்பெயின்: விராத் கோஹ்லி, பார்த்திவ் படேல் சிறப்பாக விளையாடி ரன் குவித்ததில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள சுரேஷ் ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது.

போலார்டு வாய்ப்பு:நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் இரண்டாவது போட்டி நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோ நீக்கப்பட்டு, போலார்டு வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரெய்னா சற்று வித்தியாசமாக "பீல்டிங் தேர்வு செய்தார்.

சிம்மன்ஸ் அரைசதம்:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு லெண்டில் சிம்மன்ஸ், கிர்க் எட்வர்ட்ஸ் சேர்ந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். முனாப் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார் எட்வர்ட்ஸ். பின் ஹர்பஜன் சுழலில் ஒரு இமாலய சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில், அமித் மிஸ்ரா பந்தில் எட்வர்ட்ஸ்(25) வெளியேறினார். அடுத்து வந்த சர்வான் ஒத்துழைப்பு அளிக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் சிம்மன்ஸ். இவர், மிஸ்ரா, யூசுப் பதான் பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்தார். பின் யூசுப் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட சிம்மன்ஸ், ஒரு நாள் அரங்கில் தனது 7வது அரைசதம் எட்டினார். இவர் 53 ரன்களுக்கு யூசுப் பதான் வலையில் சிக்கினார்.

வெஸ்ட் இண்டீஸ் 240 : இதன் பின்னர் சர்வானும், சாமுவேலும் ஜோடி சேர்ந்து ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். சர்வான் 56 ரன்களிலும், சாமுவேல் 36 ரன்களிலும்ஆட்டமிழந்தனர். போலார்டு ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். சமி 22 ரன்களிலும், ரவி ராம்பால் 14 ரன்களிலும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அமித் மிஸ்ரா 4 விக்கெட்களும், முனாப் படேல் 3 விக்கெட்களையும், யூசுப் பதான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

மழையால் பாதிப்பு : இதன் பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய தவான் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் பார்த்திவ் படேலும் விராத் கோஹ்லியும் ஜோடி சேரந்து ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் இந்திய அணி 22 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் போட்டி துவங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 37 ஓவரில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா வெற்றி : போட்டி துவங்கிய பின்னர் பார்த்திவ் படேல் 56 ரன்கள் எடுத்திருந்த போது மார்ட்டின் பந்தில் விக்கெட் கீ்ப்பர் கார்ல்டன் பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் விராத் கோஹ்லியும் சிறப்பாக விளையாடி 81 ரன்கள் எடுத்திருந்த போது பிஸ்போ பந்தில் போலார்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 33.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்ற மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளிகணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

* சர்வதேச டென்னிஸ்:சானியா தோல்வி

1spt.jpg

பர்மிங்காம், ஜூன் 8: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் ஏஇஜிஓஎன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் சானியா மிர்சா தோல்வியடைந்தார்.

 இந்த ஆட்டத்தில் 3-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் தமிராவிடம் தோல்வியடைந்தார் சானியா.

 சமீபத்தில் முடிவடைந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றோடு வெளியேறினார் சானியா.

 ஆனால் இரட்டையர் பிரிவில் ரஷியாவின் வெஸ்னினாவுடன் இணைந்து இறுதிச்சுற்று வரை சானியா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில்

மூலவர்    :    மருந்தீஸ்வரர்
உற்சவர்    :    தியாகராஜர்
அம்மன்/தாயார்    :    திரிபுரசுந்தரி
தல விருட்சம்    :    வன்னி
தீர்த்தம்    :    பஞ்ச தீர்த்தம்
ஆகமம்/பூஜை     :    காமீகம்
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    திருவான்மீகியூர், திருவான்மியூர்
ஊர்    :    திருவான்மியூர்
மாவட்டம்    :    சென்னை
மாநிலம்    :    தமிழ்நாடு

பாடியவர்கள்:


திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார்

மந்த மாகிய சிந்தை மயக்கறுத்து
அந்த மில்குணத்து ஆனை யடைந்துநின்று
எந்தை ஈசனென் ஏத்திட வல்லீரேல்
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம் .

 தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

இத்தல விநாயகரின் திருநாமம் விக்னேஸ்வரர். ராஜகோபுரம் 5 நிலை உடையது. நைவேத்தியம் பொங்கல் படைக்கப்படுகிறது.

 தலபெருமை:


தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். அப்போது, வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே இத்தலம் விளங்குகிறது.

பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இவ்விடத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜர், அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளன. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.

சுவாமிக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உள்ளது. அகத்தியருக்கு உபதேசம்: அகத்திய முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகளைக்குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் "மருந்தீஸ்வரர்' எனப்படுகிறார்.

மேற்கு திரும்பிய சிவன்: அபயதீட்சிதர் எனும் பக்தர் ஒருவர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண வரமுடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை மட்டும்தான் தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட அவர், "சிவனே! உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ?' என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.

  தல வரலாறு:


வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை அருடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார்.

கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் "பால்வண்ணநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, திருந்திட எண்ணம் கொண்டு இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த லிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது .

பாடல்: தேவாரப்பதிகம் மந்த மாகிய சிந்தை மயக்கறுத்து அந்த மில்குணத்து ஆனை யடைந்துநின்று எந்தை ஈசனென் ஏத்திட வல்லீரேல் வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே. திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம்.

 திருவிழா:

பங்குனி பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, பவுர்ணமி, கிருத்திகை.

திறக்கும் நேரம்:

காலை 6மணி முதல் மணி 12வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

ஆன்மீகச் சிந்தனை மலர் :

உனக்குள்ளேயே விலகி நில் - அன்னை 
சாதாரண உலகைச் சேர்ந்த எல்லாமே நிலையற்றவை, சொற்ப காலத்திற்கே இருப்பவை, ஆகவே கலவரப்படும்படியாக அதில் ஒன்றுமே இல்லை. எது நிலைத்து நிற்பதோ, எது நித்தியமானதோ, எது அமரத்தன்மை கொண்டதோ, எது அனந்தமானதோ அதுவே வென்று பெறுவதற்கு, உடைமையாக்கிக் கொள்வதற்கு, தகுதியுடையதாகும். அதுவே தெய்வ ஒளி, தெய்வ அன்பு, தெய்வ வாழ்வு - அதுவே பரம சாந்திர, பூரண மகிழ்ச்சி, புவி மீது அனைத்தின் மீதும் ஆட்சி செலுத்துதல், அதன் சிகரம் இறைவனின் முழு வெளிப்பாடு.

இதை நீ உணர்ந்துவிட்டால் எது நிகழ்ந்தபோதிலும் நீ விலகி நின்று அதை நோக்க முடியும், நீ அமைதியுடனிருநூது தெய்வ சக்தியை அழைத்து, அதன் பதிலுக்குக் காத்திருக்க முடியும். அப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று உனக்குத் திட்டவட்டமாகத் தெரியும். ஆகவே, இதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீ மிகவும் அமைதியாக இருந்தாலன்றி இறைவனின் பதிலைப் பெறமுடியாது. இந்த உள் அமைதியைப் பழகு, சிறிய அளவிலாவது தொடங்கி, தொடர்ந்து பழகி வா, பிறகு அதுவே உனக்கு வழக்கமாகிவிடும்.

வினாடி வினா :

வினா - வடகிழக்குப் பகுதியின் மிகப் பெரிய மாநிலம் எது ?

விடை - அருணாச்சல் பிரதேசம்.

இதையும் படிங்க :

"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர்

large_253029.jpg

கோவை : கல் மனம் கொண்ட பெற்றோரால் கைவிடப்பட்ட, மனநலம் பாதித்த எட்டு வயது சிறுமியை பராமரிக்க முடியாத பாட்டி, உதவி கேட்டு கோவை கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார். கலெக்டர் உள்பட பலரது விழிகளும் கலங்கின.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மாற்றுத்திறனாளிகள் பலர், நேற்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் கருணாகரனிடம் நலத்திட்ட உதவிகளை பெற காத்திருந்தனர். பீளமேடு, தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த 72 வயது அம்சவல்லி என்ற பாட்டியின் இடுப்பில் தொற்றியவாறு இருந்தாள் பேத்தி முத்துமாரி (8). இக்குழந்தையை கலெக்டரிடம் காண்பித்து பாட்டி கேட்ட உதவி, அருகிலிருந்த பலரது கண்களையும் குளமாக்கியது.

பிறக்கும்போதே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த முத்துமாரியை, அவளின் பெற்றோர் பெரும் சுமையாகவே நினைத்தனர். அதற்கேற்ப, பிறந்த ஓரிரு மாதங்களில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. தங்களை நம்பி மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை இருப்பதையும் பொருட்படுத்தாமல் குழந்தையை விட்டு எங்கோ பிரிந்து சென்று விட்டனர். இப்போது 72 வயதான பாட்டி அம்சவல்லிதான், முத்துமாரியின் அப்பா, அம்மா எல்லாமே. முத்துமாரியின் பரிதாப நிலைமை காரணமாக தனியாக வீட்டில்விட்டு எங்கும் செல்ல முடியாத நிலைமை. இதனால் அக்கம்பக்கத்து வீட்டார் அளிக்கும் சிறு உதவிகள்தான் இருவரின் ஜீவன்களை இன்னும் பிடித்து வைத்திருக்கிறது.

பாட்டி அம்சவல்லி கலெக்டரிடம் கூறியதாவது: மனநலம் பாதித்த பிள்ளையை விட்டுட்டுப் போக அவ அப்பா அம்மாவுக்கு எப்படி மனசு வந்துச்சுன்னே தெரியல. ரெண்டு பேரும் இப்ப எங்க இருக்காங்கன்னும் தெரியல. எந்த வருமானமும் இல்லாம ஒவ்வொரு நாளையும் கடத்துறது கஷ்டமா இருக்கு. புத்தி சரியில்லாத குழந்தைங்க அதிகமாக சாப்பிடுவாங்களாம். இவளுக்கும் எப்பவும் ஏதாவது சாப்பிடக் குடுத்துட்டே இருக்கணும். தொடர்ந்து "அ...அ'ன்னு சொல்லிட்டே இருந்தா டீயோ, காப்பியோ ஸ்பூன்ல ஊத்தணும். சாப்பிடுற நேரம் வந்தா, "ஆ....ஆ' ன்னு வாயைத் திறந்து கத்திட்டே இருப்பா... இப்படி இவளோட ஒவ்வொரு தேவையையும் புரிஞ்சு வேணுங்கறத குடுக்கணும்.
முகத்தை தடவி, தடவி தினமும் இவ குடுக்கற முத்தம்தான் இப்ப என்னோட ஒரே சொத்து. எனக்கு இப்ப 72 வயசாகுது. எனக்குப் பிறகு இந்த "முத்த' யாரு கவனிப்பாங்களோன்னு நினைச்சா ராத்திரியெல்லாம் தூங்கவே முடியறதில்லை. அதுவும் பொம்பளப் பிள்ளையா போயிட்டா. நான் போய் சேர்றதுக்குள்ள இவ அப்பா அம்மா எங்க இருந்தாலும் திருந்தி இனியாவது ஒண்ணு சேரணும்னு கடவுள பாத்து கும்புடுறேன். கலெக்டர் அய்யா மனசு வச்சு, இந்த பிள்ளைய காப்பாத்த உதவணும்.இவ்வாறு கூறி கலெக்டரை பார்த்து கைகூப்பி அழுதார்.

குழந்தைக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜாஸ்மினுக்கு கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முத்துக்குமாரி, 18 பி, 3வது தெரு, தண்ணீர் பந்தல், பீளமேடு, கோவை-1.

நன்றி -தின மலர் , தின மணி, கூகிள் செய்திகள், வெப்துனியா.


--

No comments:

Post a Comment