Wednesday, January 26, 2011

இன்றைய செய்திகள். - ஜனவரி - 26 - 2011.


குடியரசு தின வாழ்த்துக்கள்




உலகச் செய்தி மலர் :


* 28 நாடுகளுக்கு உதவ 7.4 பில்லியன் டாலர் நிதி திரட்ட ஐ.நா.திட்டம்.

ஐநா. மழை, வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட 28 நாடுகளுக்கு மனிதாபிமான அவசரகால உதவி செய்வதற்காக ரூ. 7.4 பில்லியன் டாலர் நிதி தரும்படி ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளை ஐ.நா.பொதுச்செயலாளர் பான்கீ-மூன் கேட்டுக்கொண்டுள்ளார். ஜெனீவாவில் ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் பான்கீ-மூன் தலைமை வகித்து பேசியதாவது, ‌இயற்கை பேரழிவுகளால் பெருமளவு பாதிக்கப்பட்ட ஹெய்தி, பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழைகளுக்கு அவசரகால உதவி செய்வதற்காக 7.4 பில்லியன் டாலர் அளவு நிதி தருமாறு ஐரோப்பிய கமிஷன், அமெரிக்கா, சுவீடன் போன்ற நாடுகளை கேட்டுக்கொண்டு்ள்ளார். இதற்காக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருகினணப்புக்குழவினை அமைத்து அதன் மூலம் நிதி திரட்டும் திட்டத்தினை ஏற்படுத்தவுள்ளதாகவும், அவ்வாறு பெறப்படும் நிதியானது ஏழகைளின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், தேசிய பட்ஜெட்டிற்கு பயன்படுத்தப்படும் என்றும், இதனால் இயற்கை பேரழிவுகளால் பாதிப்பட்ட 28 நாடுகளைச் சேர்ந்த 50 மில்லியன் மக்கள் பயன்படுவர் என ஏ.பி.செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

* ஐ.எஸ்.ஆர்.ஓ., மீதான தடை நீங்கியது:இனி உயர் தொழில்நுட்பம் கிடைக்கும்

வாஷிங்டன்:இந்திய விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களான ஐ.எஸ்.ஆர்.ஓ., மற்றும் டி.ஆர்.டி.ஓ., சார்ந்த ஒன்பது நிறுவனங்கள் மீதான தடையை அமெரிக்கா நேற்று நீக்கியது. இதன் மூலம் இருதரப்புக்கும் இடையில் இனி உயர் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை அதிகரிக்கும்.கடந்த 1998ல் இந்தியாவின் "பொக்ரான்' அணு குண்டு சோதனைக்குப் பின் அமெரிக்கா, இந்திய பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்த நிறுவனங்கள் பலவற்றுடனான வர்த்தகத் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்குத் தடை விதித்தது.
அமெரிக்காவின் ஏற்றுமதி நிர்வாக வரையறை ஆணையம் விதித்த இந்தத் தடைப் பட்டியலில், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்(ஐ.எஸ்.ஆர்.ஓ.,), பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம்(டி.ஆர்.டி.ஓ.,), பாரத் டைனமிக்ஸ், ராணுவத் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், ஏவுகணை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, திட நிலை இயற்பியல் ஆய்வகம், திரவ எரிபொருள் திட்ட மையம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம், விக்ரம் சாராபாய் விணவெளி மையம், திட உந்துசக்தி பூஸ்டர் உற்பத்தி மையம் ஆகிய நிறுவனங்கள் இருந்தன.இந்நிலையில், இந்த தடையை நீக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக இந்தியா கோரி வந்தது. இதையடுத்து, விரைவில் இந்திய நிறுவனங்கள் மீதான தடை நீக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. தொடர்ந்து நேற்று தடையை நீக்கி உத்தரவிட்டது.

*வெள்ளை மாளிகை முன்தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

வாஷிங்டன்:"இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே மீதான விசாரணையை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா துவக்க வேண்டும்' என்று கோரி, வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு எதிரில் நேற்று தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடந்த வாரம் தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுக்குச் சென்ற இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா விசாரிக்க வேண்டும் என்று, உலக பொது மன்னிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. தற்போதும் ராஜபக்ஷே ஹூஸ்டனில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரிடம் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை அமெரிக்க அதிபர் ஒபாமா துவக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெள்ளை மாளிகை முன்பு பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதிபர் ஒபாமாவுக்கு அவர்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:ராஜபக்ஷே தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கையை இப்போது எடுக்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகள், முப்படைகளுக்கும் அவரே தலைவர் என்ற அடிப்படையில் அமெரிக்க ராணுவ நிபுணர்களாலும்

உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.கடந்தாண்டில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தக்கோரி, 58 செனட் சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்று வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் கொடுக்கப்பட்டது.

போர்க் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்கும்படி, கடந்தாண்டு டிசம்பரில் மேலும் 17 செனட் சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவும் அவரிடம் அளிக்கப்பட்டது. "சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மனித உரிமை மீறல்களை கண்டிக்க வேண்டும். ஆனால், இந்தியா இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்த்து வருகிறது. இதுபற்றி பேசாத நாடுகள் பிற நாடுகளில் மனித உரிமை மீறல் குறித்து தலையிட முடியாது' என்று கடந்தாண்டு இந்திய பார்லிமென்டில் அதிபர் பேசியதையும் இங்கு குறிப்பிடுகிறோம்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுவில் 12க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.

* உளவு போர் விமான தயாரிப்பு திருட்டா?திட்டவட்டமாக சீனா மறுப்பு

பீஜிங்:உளவு போர் விமான தொழில்நுட்பத்தை சீனாவுக்கு விற்றதாக, அமெரிக்க இந்தியர் ஒருவருக்கு, அந்நாட்டு கோர்ட் 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதையடுத்து, தனது உளவு போர் விமான தொழில்நுட்பம் அமெரிக்காவில் இருந்து திருடப்பட்டதல்ல என்று, சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் வடிவமைப்புப் பொறியாளராக பணியாற்றி வந்தவருமான நாஷிர் கொவாடியா(66) என்பவர், அமெரிக்காவின் பி-2 உளவு போர் விமான தொழில்நுட்பத்தை சீனாவுக்கு விற்றதாகவும், ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தனி நபர்கள் சிலருக்கு அமெரிக்க ராணுவ ரகசியங்களை விற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, 2005ல் கைது செய்யப்பட்டார்.அவர் மீது சாட்டப்பட்ட 17 குற்றங்களில் 14 உறுதிப்படுத்தப்பட்டு, நேற்று அவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் சீனா நவீன உயர் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ஜே-20 ரக உளவு விமானம் ஒன்றை வெற்றிகரமாகப் பரிசோதித்து பார்த்தது. இந்நிலையில், கொசாவோ போரில் பங்கேற்ற க்ரோவோஷியா நாட்டின் முன்னாள் தளபதி ஒருவர், 1999ல் நடந்த செர்பியத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க தயாரிப்பான "எப்-117 நைட்வாக்' என்ற உளவு போர் விமானத்தின் தொழில்நுட்பத்தைத் திருடித் தான் சீனா ஜே-20 ரக உளவு போர் விமானத்தை தயாரித்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இந்த இரண்டு சம்பவங்களை அடுத்து, இதுகுறித்து விளக்கமும் மறுப்பும் தெரிவித்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான "க்ளோபல் டைம்ஸ்',"ஜே-20 உளவு போர் விமானம் முழுவதும் உள்நாட்டுத் தயாரிப்பு' என்று தெரிவித்துள்ளது. சீன தேசிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இதேபோன்ற குற்றச்சாட்டுகளை வெளிநாட்டு ஊடகங்கள் ஏற்கனவே கூறியுள்ளன. இது ஒன்றும் புதிதல்ல' என்று கூறினார்.

சீனாவின் பிரபல விமானிகளுள் ஒருவரான ஷூ யாங்லிங் கூறுகையில்,"ஜே-7 மற்றும் ஜே-8 ரக விமானங்கள் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை வாங்கித் தான் தயாரிக்கப்பட்டன. ஆனால் ஜே-20 உளவு போர் விமானம் சீன தொழில்நுட்பத்தில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு' என்று கூறியுள்ளார்

* லாகூரில் குண்டு வெடிப்பு:15 பேர் பலி, 80 பேர் காயம்

லாகூர்:பாகிஸ்தானின் லாகூர்மற்றும் கராச்சி நகரங்களில் நடைபெற்ற மனித வெடிகுண்டு சம்பவத்தில்10க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பாகிஸ்தானி தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட இடம் மக்கள் நெருக்கம் மிகுந்தது. மேலும் தாக்குதல் நடத்தியவனின் வயது 13 முதல் 14 வயதுக்குள்ளாக இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேசியச் செய்தி மலர் :

* காஷ்மீர் எல்லையில் பாஜக தலைவர்கள் கைது



ஜம்மு, ஜன.25: குடியரசு தினத்தன்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் லால்செளக்கில் கொடியேற்றுவதற்காக செல்ல முயன்ற பாஜக தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, அனந்த குமார் உள்ளிட்டோர் பஞ்சாப் - காஷ்மீர் எல்லையில் இன்று கைது செய்யப்பட்டனர்.
பாஜகவினர் மேற்கொண்டு வரும் ஏக்தா யாத்ரா எனப்படும் தேசிய ஒருமைப்பாட்டு யாத்திரை நாளை லால் சௌக் சென்றடையத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக நேற்று ஜம்மு வந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்டோரை காஷ்மீர் போலீஸார் பஞ்சாப் எல்லையில் கொண்டுபோய் விட்டனர். இதையடுத்து இன்று அங்கிருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் ரத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, பாஜக தலைவர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏறி பேரணியாகச் சென்றனர்.

ஜம்மு - பஞ்சாப் எல்லையான் லகான்பூரில் ரவி ஆற்றின் குறுக்கேயுள்ள உள்ள ஒரு கி.மீ. நீள பாலத்தை அவர்கள் கடக்க முயன்றனர். அவர்களைத் தடுப்பதற்காக பாலம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார்
குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களின் தடையையும் மீறி யாத்திரை பாலத்தைக் கடந்து வந்தது. சுஷ்மா, ஜேட்லி ஆகியோரின் ரதம் பாலத்தைக் கடந்ததும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ரதத்தில் இருந்தபடியே அவர்கள் இருவரும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். "ஜம்மு காஷ்மீர் அரசு பீதியடைந்துவிட்டதையே இது காட்டுகிறது என்று தெரிவித்த ஜேட்லி, லால் சௌக்கில் நாளை தேசியக் கொடி பறக்கும் என்றார்.

144 தடை உத்தரவை மீறியதற்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

* தேசிய சமூக நல்லிணக்க விருதுக்கு லோகேஷ் முனி தேர்வு

புதுதில்லி, டிச.25: கடந்த ஆண்டுக்கான தேசிய சமூக நல்லிணக்க விருதுக்கு தில்லியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் சமூக சேவகருமான ஆச்சார்யா லோகேஷ் முனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அஹிம்சை மற்றும் அமைதிக்காகப் பணியாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட்டு வருகிறது. 2010-ஆண்டுக்கான இந்த விருது லோகேஷ் முனிக்கு வழங்கப்படுகிறது.

 2006-07-ம் ஆண்டுகளில் ஜூம்மா மசூதி குண்டு வெடிப்பு நடந்த போது, ஹிந்து -முஸ்லிம் சமூகத்தினரிடையே அமைதி ஏற்பட லோகேஷ் முனி பாடுபட்டார். அதேபோல் தேரா சச்சா சௌதா பிரிவினருக்கும் சீக்கியர்களுக்கும் இடையே மோதல் உருவானபோது, ஹரியாணாவிலிருந்து குஜராத்தை நோக்கி 1500 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டார் என விருதை அறிவித்து அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விருது ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழைக் கொண்டது. குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி தலைமையிலான குழு இந்த விருதுக்கு முனியைத் தேர்வு செய்திருக்கிறது.

49 வயதாகும் முனி, பெண் சிசுக்கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 12 புத்தகங்களை எழுதியிருக்கிறார்

* எஸ்பிபிக்கு பத்ம பூஷண், அவ்வை நடராஜனுக்கு பத்ம ஸ்ரீ



புதுதில்லி, ஜன.25: மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பராசரண் கேசவ அய்யங்கார், அசிம் பிரேம்ஜி, மாண்டேக் அலுவாலியா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படுகின்றன.
திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பத்ம பூஷணும், தமிழ் அறிஞர் அவ்வை நடராஜனுக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.
மொத்தம் 13 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 31 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 84 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2008-ம் ஆண்டில் ஹிந்துஸ்தானி பாடகர் பீம்சென் ஜோஷிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

தற்போது விருது பெற்றிருப்பவர்கள் விவரம்
பத்ம விபூஷண்
பராசரண் கேசவ அய்யங்கார்
பிரஜேஷ் மிஸ்ரா
அசிம் பிரேம்ஜி
மாண்டேக் சிங் அலுவாலியா,
கபிலா வாத்ஸ்யாயன்
ஹோமை வியாரவாலா
விஜய் கேல்கர்
பல்லே ராமா ராவ்
எல்.சி.ஜெயின்
சீதாகாந்த் மஹாபத்ரா

பத்ம பூஷண்
வஹீதா ரஹ்மான்
சி.வி.சந்திரசேகர்
எஸ்.பி.பாலசுப்ரமணியன்
எஸ்.ராமச்சந்திரன்.
ஷ்யாம் சரண்

பத்ம ஸ்ரீ
எம்.கே.சரோஜா
ஜெயராம் சுப்ரமணியம்
எஸ்.ஆர்.ஜானகிராமன்
சிஎன்ஆர் ராகவேந்திரன்
மெக்கா ரபீக் அகமது
கைலாசம் ராகவேந்திர ராவ்
சிவபாதம் விட்டல்
அகமது அலி
அவ்வை நடராஜன்


* ஃபேஸ்புக் மீது ஐபிஎஸ் அதிகாரி புகார்

லக்னெள, ஜன.25: ஆன்லைன் குழு மூலம் மகாத்மா காந்தியின் மதிப்பை இழிவுபடுத்துவதாக சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் மீது ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேச ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த அமிதாப் தாகூர், கோம்தி நகர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்துள்ளார்.
தவறான வகையில் காந்தியின் உருவப்படத்தை வெளியிட்டுள்ளது. அவருக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பிவருகிறது என ஃபேஸ்புக் குழுவுக்கு எதிராக அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.
காந்தி குறித்து ஆபாசமான வார்த்தைகள் அந்த ஆன்லைன் குழுவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையைத் தூண்டும் நோக்கத்தில் இதுபோன்று வெளியிடப்பட்டுள்ளதாக தாகூர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்

* உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை




புதுடில்லி : உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் கவலையளிக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி, அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:அதிகரித்து வரும் பணவீக்கமும், உணவுப் பொருட்களின் விலை உயர்வும் மிகுந்த கவலையளிக்கிறது. இதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை. அடுத்த 20 ஆண்டுகளில் நம்நாட்டின் மக்கள்தொகை 148 கோடியாக இருக்கும். அனைவருக்கும் உணவு பாதுகாப்பு குறித்த நடவடிக்கை தேவை. கிராமப்புற வளர்ச்சி, விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு ஆகியவற்றுக்கு புதுமையான வழியில் அணுகுமுறை தேவை. இதற்கு இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை. முதல் பசுமை புரட்சி, பாசன வசதி பகுதிக்குட்பட்டதாக அமைந்து விட்டது. இரண்டாவது பசுமை புரட்சி, மழை பெய்யும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதற்கு ஏற்ற தொழில்நுட்பத்தையும், வழிமுறைகளையும் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் உருவாக்க வேண்டும்.

ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்து உலக அளவில் குரல் கொடுக்க இது சரியான வாய்ப்பு.பாதுகாப்பும், ஸ்திரதன்மையும் இருந்தால் தான் வளர்ச்சி மற்றும் மேம்பாடு இருக்கும். இதற்கு அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தையும், ஒத்துழைப்பும் அவசியம். உள்நாட்டை பொறுத்தவரை போலீசாரின் பங்கு அவசியமாகிறது.கொலை, கற்பழிப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் சமூக கட்டமைப்பை பாதிக்கின்றன. வன்முறைக்கு ஒருபோதும் இடம் தராதீர்கள், என மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

கல்லூரிகளில் நடக்கும் ராகிங்கும் ஒரு வன்முறை தான். மிகக்கொடிய இந்த போக்கை ஒருகாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. ராகிங் போன்ற நிகழ்வுகள் பெற்றோருக்கும், நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துகின்றன.ஜனநாயகத்தை பேணிக்காக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. மற்ற நாடுகளை போல இந்தியாவுக்கும் நிறைய பிரச்னைகள் உள்ளன. அவற்றை எதிர்கொள்ளத்தான் வேண்டும். இந்த பிரச்னைகளை நாம் ஒன்று பட்டுதான் தீர்க்க வேண்டும்.இவ்வாறு பிரதிபா பாட்டீல் தனது உரையில் தெரிவித்துள்ளார்.


மாநிலச் செய்தி மலர் :

* தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் எழுதிய "உண்மை தெரிந்தது சொல்வேன்' நூல் அறிமுக விழா

மதுரை, ஜன.24: தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பான "உண்மை தெரிந்தது சொல்வேன்' மூன்று தொகுதிகள் அடங்கிய நூல் அறிமுக விழா, மதுரையில் நாளை நடைபெறுகிறது.
   மதுரை, பெரியார் பஸ்நிலையம் அருகேயுள்ள விக்டோரியா எட்வர்டு மன்ற திறந்தவெளி அரங்கில் புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த விழாவுக்கு, கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
   இது தொடர்பாக நற்பணி மன்றத் தலைவர் ரா.சொக்கலிங்கம் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
   மதுரையில் பல ஆண்டுகளாக இலக்கியம், கல்விப்பணி மற்றும் சமூகப் பணிகளைச் செய்து வரும் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில், புதன்கிழமை மாலை எட்வர்டு மன்றத்தில்  தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு நூலான உண்மை தெரிந்தது சொல்வேன் நூல் அறிமுக விழா நடைபெற உள்ளது.

   நிகழ்ச்சிக்கு, நற்பணி மன்றத் தலைவர் ரா. சொக்கலிங்கம் தலைமை வகிக்கிறார். செயலாளர் மலரகம் சந்திரன் வரவேற்புரை ஆற்றுகிறார். எட்வர்டு மன்றச் செயலர் ஐ. இஸ்மாயில் முன்னிலை வகித்துப் பேசுகிறார்.    மதுரை கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா நிகழ்ச்சியில், "உண்மை தெரிந்தது சொல்வேன்' நூலை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றுகிறார். நூலின்  பிரதியை மதுரை கம்பன் கழகப் புரவலர், விஸ்வாஸ் எஸ். சங்கரசீத்தாராமன் பெற்றுக்கொண்டு கருத்துரையாற்றுகிறார். பட்டிமன்றப் பேச்சாளரும் பேராசிரியருமான எம். ராமச்சந்திரனும் நூலைப் பற்றி கருத்துரையாற்றுகிறார்.

 நூலாசிரியரும், தினமணி ஆசிரியருமான கே. வைத்தியநாதன் ஏற்புரையாற்றுகிறார்.
 முடிவில் நற்பணி மன்றச் செயற்குழு உறுப்பினர் தியாகதீபம் அ. பாலு நன்றி கூறுகிறார்

விழாவுக்கான ஏற்பாடுகளை நற்பணி மன்ற துணைத் தலைவர் டி.வி.நடராஜன், துணைச் செயலர் எஸ்.மகேந்திரராஜா உள்ளிட்டோர் செய்துவருகின்றனர் என்றார் ரா.சொக்கலிங்கம்.

* தமிழக மீனவர்களை சுட மாட்டோம்: இலங்கைத் தூதர் உறுதி

சென்னை, ஜன. 25: தமிழக மீனவர்களை சுடுவது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் உறுதி கூறினார்.
சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் திங்கள்கிழமை இரவு திடீரென தாக்குதல் நடத்தினர். அதில், சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசிடம் நேரில் வலியுறுத்த இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தார்.

தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் எஸ்.மாலதியைச் சந்தித்துப் பேசினார்.
சென்னை எழும்பூரில் சுமார் 80 வருடங்களாக இயங்கி வரும் இலங்கை மகாபோதி சங்கத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தமது ஆழ்ந்த கவலையை தலைமைச் செயலாளர் அவரிடம் தெரிவித்தார்.
இலங்கை மகாபோதி சங்கத்தின் சென்னை மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்  கண்டனத்துக்குரியது என்றும் இந்தச் சம்பவம் தொடர்பாக சுமித் பண்டார மதவேலா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தமிழக அரசின் சார்பில் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இலங்கை அரசு தொடர்பான நிறுவனங்கள் அனைத்துக்கும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது

கடந்த இரு வாரங்களுக்குள் தமிழக மீனவர்கள் 2 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு இறந்த சம்பவங்கள் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதையும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இலங்கைத் தூதரிடம் வலியுறுத்தப்பட்டது

விடுதலைச் சிறுத்தைகள் கைது: இதனிடையே, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் எதிரே உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டனர்.


* தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவலா? டி.ஜி.பி. பேட்டி

தேனி, ஜன. 24:  தமிழகத்துக்குள் ஊடுருவ நக்சலைட்டுகள் முயற்சித்து வருவதாகவும், அதைத் தடுப்பதற்கு மலை கிராம மக்கள் காவல் துறைக்கு உதவ வேண்டும் எனறும் திங்கள்கிழமை தமிழக டி.ஜி.பி., லத்திகா சரண் கேட்டுக் கொண்டார்.

     தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள காமராஜபுரத்தில் காவல் துறை சார்பில் மலை கிராமங்களைத் தத்தெடுத்தல் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பூ. முத்துவீரன் தலைமையில் நடைபெற்றது.    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் டி.ஜி.பி, லத்திகா சரண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

     தமிழகத்தில் தற்போது நக்சலைட்டுகள் நடமாட்டம் இல்லை. வெளி மாநிலத்தில் இருந்து நக்சலைட்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர்.

இதைத் தடுப்பதற்கு மலை கிராம மக்கள் காவல் துறையினருக்கு உதவ வேண்டும். பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் கிராமங்களைப் பாதுகாப்பது போல நாட்டையும் பாதுகாக்க வேண்டும். கிராமங்களில் வேற்று நபர்களின் நடமாட்டம் தென்பட்டால் காவல் துறை மற்றும் வருவாய் துறையினருக்குத் தகவல் அளிக்க வேண்டும்.

    மலை கிராமங்களில் நக்சலைட்டுகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கிராம மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த காவல் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 471 கிராமங்களைத் தத்தெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கிராமங்களில் விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மலை கிராமங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மலை கிராம மக்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். கல்வி மற்றும் உடல் தகுதி உள்ள மலை கிராம இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு காவல் துறையில் வேலைவாய்ப்பு வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றார்

* புவி வெப்பமயமாதல் தடுப்பு முகாம்

மானாமதுரை, ஜன. 24:  மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், தெ.புதுக்கோட்டையில் புவி வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

  மானாமதுரை செர்டு தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இம் முகாமில் இந்த நிறுவனம் சார்புடைய மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

  முகாமை செர்டு நிறுவன இயக்குநர் எல்.பாண்டி தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். வாசா நிறுவனத்தின் இயக்குநர் ஜெயராஜ், நவ இந்தியா தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நாகலிங்கம் ஆகியோர் புவி வெப்பமயமாதல் தடுப்பு குறித்து விளக்கிப் பேசினர்.

இதில் செர்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் போதும்பொண்ணு, தெ.புதுக்கோட்டை ஊராட்சித் தலைவர் மஞ்சுளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* தமிழகத்தில் சிறந்த எழுத்தாளர்கள்ஊக்க தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி:தமிழகத்தில் சிறந்த எழுத்தாளர்கள் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.2010-11ம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த எழுத்தாளர்கள் 10 பேருக்கும், ஆதிதிராவிடர் அல்லாத ஒரு நபருக்கும் ஊக்க தொகை 20 ஆயிரம் வழங்கப்படும். 2010-11ம் ஆண்டிற்கு எழுத்தாளர்கள் வரும் 31ம் தேதிக்குள் தங்கள் படைப்புகளை அனுப்பி வைக்க வேண்டும்.இதுகுறித்த விபரங்கள் தீதீதீ.õங.கவö.டங என்ற வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

* ஆழ்வார்குறிச்சிகல்லூரியில்கவிதை பட்டறை

ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் இலக்கிய மன்றம் சார்பில் கவிதைப்பட்டறை நடந்தது.ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி தகவல் தொழில்நுட்பத்துறை வளாகத்தில் நடந்த கவிதை பட்டறைக்கு முதல்வர் சுந்தரம் தலைமை வகித்து பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் ஆண்டார் பிரியதர்ஷினி, கவிஞர் காலப்பிரியன், சட்டநாதன் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பு அமர்வு நடந்தது. கருத்துப்பட்டறையில் விடியல், தேடல், மாறும் விழுமியங்கள், இதுவரை, போலச்செய்தல் ஆகிய தலைப்புகளில் சுற்றுவட்டார கல்லூரி மாணவ, மாணவியர்களின் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்தனர்.ஏற்பாடுகளை ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி இலக்கிய மன்ணத்தினர் செய்திருந்தனர்

* வீட்டிலேயே காய்கறி தோட்டம் அமைக்க பயிற்சி

சென்னை, ஜன. 25: சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூவில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையத்தில்  வீட்டுத் தோட்டம் அமைக்க சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 இதில், வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் காய்கறித் தோட்டம் அமைக்க என்ன செய்ய வேண்டும், அதை பராமரிப்பது எப்படி என்பது குறித்து எளிய முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 மாடியில் தோட்டம், வீட்டைச் சுற்றியுள்ள இடத்தில் தோட்டம், வீட்டினுள் அலங்காரச் செடி, உணவுக் காளான் வளர்ப்பு உள்ளிட்ட 23 வகையான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
 பயிற்சியில் சேர விரும்புவோர் 044-26263484, 42170506 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 182 புள்ளிகள் சரிவு

சென்னை, ஜன.25: இந்திய பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் குறியீட்டெண் சென்செக்ஸ் 181.83 புள்ளிகள் சரிந்து 18,969.45 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்கு வர்த்தகத்தில் குறியீட்டெண் நிஃப்டி 55.85 புள்ளிகள் சரிந்து 5687.40 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் என்டிபிசி, ஹீரோ ஹோண்டா, ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், பிஎச்ஈஎல், எல் அண்டு டி, விப்ரோ, டாடா பவர், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஜிந்தால் ஸ்டீல், ஜெய்ப்ரகாஷ் அசோ, ரிலையன்ஸ் கம்யூ, டிசிஎஸ், சிப்லா, பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், டிஎல்எஃப், ஐடிசி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

* பவுனுக்கு ரூ. 200 குறைவு

சென்னை, ஜன. 25: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 14,824-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 1,853.
திங்கள்கிழமை விலை: ஒரு பவுன்: ரூ. 15,024. ஒரு கிராம்: ரூ. 1,878.


விளையாட்டுச் செய்தி மலர் :

* பயிற்சியாளர் கிர்ஸ்டன் விலகுவது இந்திய அணிக்கு பெரிய இழப்பு: வாசிம் அக்ரம்

புது தில்லி, ஜன.25: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் இருந்து கேரி கிர்ஸ்டன் விலகுவது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியது:
கிர்ஸ்டன் தனது சிறப்பான பயிற்சியால் சமீப காலங்களில் இந்திய அணியை சிறந்த அணியாக உருவாக்கியுள்ளார்.
உலகின் சிறந்த பயிற்சியாளர்களில் கிர்ஸ்டனும் ஒருவர். அவர் பயிற்சியாளராக இருந்த 3 ஆண்டு காலத்தில் இந்திய அணி சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது.

நான் பார்த்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சிறந்த பயிற்சியாளர். எவ்வித பரபரப்பும் இன்றி மிக அமைதியாக தனது பணியை திறம்படச் செய்தவர். என்னுடைய பார்வையில் அவரின் பயிற்சி மிகச்சிறந்ததாக அமைந்துள்ளது.

அவரின் பயிற்சியில் இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் மிகச்சிறப்பாக விளையாடினர்.
தோனி தலைமையிலான இந்திய அணிக்கு அவரின் விலகல் மிகப் பெரிய இழப்புதான். அவருக்குப் பதிலாக சிறந்த பயிற்சியாளரை நியமிப்பது என்பது இந்திய அணி நிர்வாகத்துக்கு மிகக் கடினமானதாகும்.

கிர்ஸ்டனைப் பற்றி கவலைப்படாமல் இந்திய அணி உலகக் கோப்பையில் கவனம் செலுத்த வேண்டும்.
மூத்த வீரர்களைக் கொண்ட இந்திய சிறப்பாக விளையாடும் என்று கருதுகிறேன்

சொந்த நாட்டில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் உணர்வு சற்று வித்தியாசமானதாக இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களிடம் இந்திய அணி மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.
அதேசமயம் யூசுப் பதானை மட்டுமே இந்திய அணி சார்ந்திருக்கக்கூடாது. அது மிகவும் ஆபத்தானது என்று எச்சரித்துள்ள அக்ரம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அவர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் மட்டுமே இப்போது தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மிகச்சிறந்த வீரர்.

இந்திய அணி அவரை நம்பி மட்டுமே களமிறங்காது என்று நம்புகிறேன். அப்படி களம் கண்டால் அது தற்கொலை செய்து கொள்வது போன்றதாகும் என்றார்.

* அகில இந்திய பால் பாட்மிண்டன்: தமிழக அணிகள் சாம்பியன்

சென்னை, ஜன.25: சென்னையில் நடைபெற்ற செயின்ட் ஜோசப் அகில இந்திய பால் பாட்மிண்டன் போட்டியில் தமிழக ஆடவர் மகளிர் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.
இறுதிப்போட்டியில் தமிழக ஆடவர் அணி கேரள அணியை எதிர்கொண்டது.

அபாரமாக ஆடிய தமிழக அணி 29-23, 29-17 என்ற கணக்கில் ஆந்திர அணியை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
மகளிர் இறுதிப் போட்டியில் தமிழக அணி 29-12, 29-19 என்ற கணக்கில் கர்நாடக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு செயின்ட் ஜோசப் கல்லூரியின் இயக்குநர் பாபு மனோகரன் தலைமை வகித்தார்.

தென்னிந்திய விளையாட்டு அதிகாரி வில்சன் செரியன், பால் பாட்மிண்டன் சங்க பொதுச் செயலாளர் நக்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.


ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோவில்

மூலவர் : படிக்காசுநாதர் ( சொர்ணபுரீஸ்வரர்)
  உற்சவர் : சோமாஸ்கந்தர்
  அம்மன்/தாயார் : அழகம்மை
  தல விருட்சம் :  வில்வம்
  தீர்த்தம் :  அமிர்தபுஷ்கரிணி
  ஆகமம்/பூஜை :  சிவாகமம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  அரிசிற்கரைபுத்தூர், சிறுவிலிபுத்தூர்
  ஊர் :  அழகாபுத்தூர்
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
நால்வர்

தேவாரப்பதிகம்

அரிசிலின் கறை மேலனி யார்தரு 
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப் 
பரிசொடும் பரவிப் பணிவார்க் கெலாம் 
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே. கும்பகோணம்.

-திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 66வது தலம்.

 தல சிறப்பு:
 
  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக பெருமாள்தான் சங்கு சக்கரம் வைத்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் உள்ள முருகன் சங்கு, சக்கரம் வைத்தபடி அருள்பாலிக்கிறார். நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர்.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. இத்தலவிநாயகர் சொர்ண விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

முன்மண்டபத்தில் புகழ்த்துணை நாயனார், தன் மனைவி லட்சுமியுடன் காட்சி தருகிறார். அருகில் சுந்தரர், மனைவி பரவை நாச்சியாருடன் இருக்கிறார். சொர்ணவிநாயகர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை வணங்கியபின்பே, சிவனை வழிபட வேண்டுமென்பது ஐதீகம்.

பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். முருகன், தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

தல பெருமை:

நாயனார் அவதார தலம்: நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர். சிவன் மீது பக்தி கொண்டிருந்த இவர், அரசலாற்றில் தீர்த்தம் எடுத்து தினமும் சிவபூஜை செய்வது வழக்கம். இவர் மிகவும் வறுமையில் வாடினாலும், பூஜையை மட்டும் விடாமல் செய்து வந்தார். ஒருசமயம் இப்பகுதியில் கடும் பஞ்சம் உண்டானது. அப்போதும் புகழ்த்துணையார் கலங்கவில்லை. பூஜையை வழக்கம்போல தொர்ந்தார்.

பல நாட்களாக சாப்பிடாததால், உடல் தளர்ந்த புகழ்த்துணையார் தள்ளாடியபடியே சுவாமிக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்தார். சிவன் சன்னதிக்குள் சென்ற அவர், உடல் வலுவின்றி கீழே சரிந்தார். அப்போது தீர்த்த குடம் சிவலிங்கத்தின் மீது விழுந்தது. புகழ்த்துணையாரும் லிங்கத்தின் மீது விழுந்து மயக்கமுற்றார். சிவன் அவரது கனவில் தோன்றி, ""என்ன வேண்டுமென கேள்!' என்றார். புகழ்த்துணையார் கனவிலும், மக்களின் வறுமையை போக்கி, சிவபூஜை தடையின்றி நடக்க அருள் செய்யும்படி வேண்டினார். சிவன் அவரிடம், தினமும் ஒரு படிக்காசு தருவதாகவும், அதை வைத்து மக்களின் பஞ்சத்தை போக்கும்படியும் கூறினார்.
அதன்பின் மயக்கம் தெளிந்த புகழ்த்துணையார் பூஜையை தொடர்ந்தார்.

சிவனும், தினமும் ஒவ்வொரு படிக்காசு கொடுத்தருளினார். பலகாலம் இத்தலத்தில் சிவபூஜை செய்த புகழ்த்துணையார், இங்கேயே முக்தியடைந்தார். சிவன் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

படிக்காசு பூஜை: புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது. தற்போதும் இவரது தலைமுறையினரே இங்கு பூஜை செய்கின்றனர்.

படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொண்டு, ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:


ஒருசமயம் பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், "நீங்கள் யார்?' எனக்கேட்டார். பிரம்மா அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, தானே உலகை படைப்பவன் என்றும் கர்வத்துடன் கூறினார்.

முருகன் அவரிடம் எந்த மந்திரத்தின் அடிப்படையில் படைக்கிறீர்கள்? எனக்கேட்டார். "ஓம்' என்னும் பிரணவ மந்திர அடிப்படையில்தான்! என்றார் பிரம்மா. முருகன், அம்மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவருக்கு தெரியவில்லை. எனவே அவரது தலையில் குட்டி, பதவியை பறித்தார். இதையறிந்த சிவன் முருகனிடம், பிரம்மாவிடம் பதவியை கொடுக்கும்படி கூறினார். முருகன் கேட்கவில்லை.

சிவன், பிரணவத்தின் விளக்கம் சொல்லும்படி முருகனிடம் கேட்கவே, அவரும் விளக்கினார். பின்பு, சிவன் அவரை சமாதானம் செய்யவே, மீண்டும் பிரம்மாவிடம் பதவியை ஒப்படைத்தார். பிரணவத்தின் பொருள் தெரியாவிட்டாலும் வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்கு வருந்தினார் முருகன். எனவே தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.

சிவன், அவருக்கு காட்சி தந்து ""தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம், தவறில்லை. ஆனால், தண்டிக்கத்தான் கூடாது,'' என்று அறிவுரை சொல்லினார். இவரே இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

திருவிழா:
 
  மாசிமகம், மகாசிவராத்திரி, கிருத்திகை, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் நாயனார் குருபூஜை.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

பதட்டம் கூடவே கூடாது - வள்ளலார்.

* நல்லோர் மனதை நடுங்க செய்யும் காரியத்தை கைவிடுங்கள். நம்பியவர்களை நட்டாற்றில் கை கழுவி விடாதீர்கள். ஆசை காட்டி, யாரையும் மோசம் செய்யாதீர்கள். யாரையும் அவமதிக்கும் எண்ணத்தை கைவிடுங்கள்.

* கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவற்றை கனவிலும் நினைக்கக் கூடாது. புகை, கள் போன்ற தீய பழக்கங்களையும் அறவே தவிர்க்கவேண்டும். பதட்டத்தோடு எச்செயலையும்
அணுகுதல் கூடாது. இவற்றை விலக்காவிட்டால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியாது.

வினாடி வினா :

வினா - நிதிக் கமிஷனை நியமிப்பவர் யார்? எப்போது நியமிக்கப் படுகிறது ?

விடை - நிதிக் கமிஷனை நியமிப்பவர் -ஜனாதிபதி.

 ஜனாதிபதி விரும்பும்போது நியமிக்கப் படுகிறது.


  இதையும் படிங்க :

2011-ம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் அறிவிப்பு

சென்னை, ஜன.25: வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெறுபவர்களின் பெயர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு 4 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2009 மார்ச் 4-ம் தேதி ரயில்வேயின் இருவழிப்பாதையில் ரயில் வருவதை அறியாது பாலத்தை கடக்க முயன்ற சிறுவனை உயிரையும் பொருட்படுத்தாது ஓடிச்சென்று தூக்கி அருகில் உள்ள பள்ளத்தில் குதித்துக் காப்பாற்றிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரயில்வேயில் டிராபிக் போர்ட்டராக பணிபுரியும் விவேகானந்தனுக்கும், 2010 மே மாதம் 5-ம் தேதி கோவை வனக்கோட்டம், சேம்புக்கரை பகுதியில் மதம் பிடித்த ஒரு பெண் யானையிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சிறிய காட்டுப்பாதையில் வாகனத்தை பின்னோக்கி செலுத்தி வாகனத்தில் இருந்த அனைவரையும் காப்பாற்றிய ரவிக்கும், கடந்த 20 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களை சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு பிரேத பரிசோதனை செய்து புதைப்பது அல்லது எரிப்பது, விபத்துக்குள்ளான பல நபர்களை காப்பாற்றி மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளைச் செய்துவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகோபாலுக்கும், 2009 செப்டம்பரில் கடலூர் அரசு மருத்துவமனையில் மின்சார கம்பிவடம் தீப்பற்றி எரியும்போது, உயிரையும் பொருட்படுத்தாது  தீ அணைப்பானைக் கொண்டு தீயை முற்றிலும் அணைத்து உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுத்த கடலூரைச் சேர்ந்த ராஜேஷ்குமாருக்கும் 2011-ம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுவதாக அரசு வெளியிட்டுளள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது பெறுவோருக்கு ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள தங்கமுலாம் பூசிய பதக்கமும், ரூ 25 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும்


நன்றி - தின மணி , தின மலர்.


4 comments:

Chitra said...

WELCOME BACK!!!!!!!!!!!!!!!!!

THOPPITHOPPI said...

நன்றி

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி சித்ரா

THOPPITHOPPI said...

//வினா - நிதிக் கமிஷனை நியமிப்பவர் யார்? எப்போது நியமிக்கப் படுகிறது ?//

எதற்க்காக ?

Post a Comment