Saturday, January 29, 2011

இன்றைய செய்திகள். -ஜனவரி - 29 - 2011.


முக்கியச் செய்தி :



திருப்பூரில் உள்ள சாயப் பட்டறைகளை மூட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.28: திருப்பூர் பகுதியில் உள்ள அனைத்து சாயப்பட்டறைகளையும் உடனடியாக மூட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம், வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

 திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நொய்யல் ஆறு மாசடைந்தது.

 சாயப்பட்டறைகளிலிருந்து கழிவுகள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், கழிவுகளை வெளியேற்றும் பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, நொய்யல் ஆறு ஆயக்கட்டுதாரர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 பொது சுத்திகரிப்பு நிலையங்கள், தனி சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை அமைத்து கழிவுகளைச் சுத்திகரிப்பதாகவும், அவற்றை அமைப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சாயப்பட்டறைகளின் உரிமையாளர்கள் தரப்பில் கோரப்பட்டது.

 இதையடுத்து சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் வரை வெளியேற்றப்படும் கழிவுகளுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டது

இந்தத் தடை காலாவதியான பிறகும், உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

 மொத்தமுள்ள 713 சாயப்பட்டறைகளில் 413 சாயப்பட்டறைகள் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்கவில்லை என்றும், இவற்றை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து, நொய்யல் ஆற்றின் மூன்று வெவ்வேறு இடங்களில் நீரை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
 பரிசோதனையின் முடிவில், நொய்யல் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் தொடர்ந்து கலப்பதால், ஆற்று நீர் மேலும் மாசடைந்துள்ளது தெரியவந்தது.

 தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

 நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பதற்காக, சாயக் கழிவுகள் முழுமையாக சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. ஆனால், சாயப்பட்டறைகள் தொடர்ந்து சுத்திகரிக்காத கழிவுகளை வெளியேற்றி வந்துள்ளன. இந்த சாயப்பட்டறைகளை மூடுவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது.

 இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற பிறகே, சில பட்டறைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசுத் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை மட்டும் நம்ப முடியாது

சாயப்பட்டறைகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே நொய்யல் ஆற்றை நச்சுக் கழிவுகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம்.

 திருப்பூர் பகுதியில் உள்ள அனைத்து சாயப்பட்டறைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக மூட வேண்டும். இந்தப் பட்டறைகளுக்கு மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட வேண்டும்.

 இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், முழுவதும் சுத்திகரிக்கப்படுவதை உறுதிசெய்யாத வரை அவை மீண்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படக் கூடாது.

 அனைத்து சாயப்பட்டறைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகள், கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழு தனித்தனியே ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பட்டறைக்கும் முழுமையான அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும்.

 அந்தப் பட்டறைகள் மீண்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கலாமா என்ற அடிப்படையில் இந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். கழிவுகளை முழுவதுமா சுத்திகரிக்கும் அமைப்புகள் இல்லாத சாயப்பட்டறைகளுக்கு, அந்தக் குறையை சரிசெய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். அந்தப் பட்டறைகளை குழுவினர் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.

 கழிவுகளை முழுவதுமாக சுத்திகரிக்கும் அமைப்பு உள்ள சாயப்பட்டறைகளை மீண்டும் திறக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிடலாம். எனினும், இந்தப் பட்டறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

 சுத்திகரிப்புக் கருவிகளை சோதனையிடுவதற்காக தாற்காலிகமாக மின் இணைப்பு வழங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்யலாம். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற வேண்டும்.

சோதனையின் போது சாயப்பட்டறைகளில் கூடுதலாக கருவிகளோ, பைப் இணைப்புகளோ இருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாமல் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றி சாயப்பட்டறைகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும்.

 அதேபோல், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நோட்டீஸýக்கு பிறகும் கழிவுகளைச் சுத்திகரிக்கும் இயந்திரங்களைப் பொருத்தாமல் இருந்த பட்டறைகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 சாயப்பட்டறைகள் உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத காலக்கட்டத்தில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிந்தவர்களின் பெயர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

 வழக்கு விசாரணை மார்ச் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 உலகச் செய்தி மலர் :

* இலங்கை போலீஸாரின் ஆள்கடத்தல்: வெள்ளை வேன் ரகசியம் அம்பலம்

கொழும்பு, ஜன.28- இலங்கையில் சமீபகாலமாக வெள்ளை நிற வேனில் வந்து முக்கியமான ஆள்களை கடத்தியது போலீஸாரின் ஒரு பிரிவினரே என்பதாக இலங்கை இணையதளங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

எதிர்க்கட்சிகளின் முக்கிய நபர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் ஆகியோரை திடீரென வரும் வெள்ளை வேன் கும்பல் கடத்திச் சென்று சித்ரவதை செய்வதாக புகார் கூறப்பட்டு வந்தது.

இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலரும் அதிபர் ராஜபட்சயின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச உத்தரவின் பேரில், காவல்துறையின் ரகசியப் பிரிவினர் தான் இத்தகைய ஆள்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பெரேரா என்னும் காவல்துறை ஆய்வாளர்தான் வெள்ளை நிற வேனில் வரும் கும்பலுக்குத் தலைவராக செயல்பட்டுள்ளார். அவரது குழுவில் 3 காவலர்களும் ஒரு அதிகாரியும் இயங்கி வந்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் ஆவணங்கள் இல்லாத அதிநவீன துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரகசிய பிரிவினருக்கு ராணுவத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கட்டளை அதிகாரியாக செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் வெள்ளை வேனில் வந்த கும்பல் அதிபரின் முன்னாள் ஊடக அதிகாரி அஷ்ரப் அலியையும் அவரது குடும்பத்தினரையும் கடத்த முயன்றனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், வெள்ளை வேன் ரகசியத்தை அந்த அதிகாரிதான் தற்போது அம்பலப்படுத்தியதாகவும் இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.

அச்சுறுத்தல் காரணமாக அஷ்ரப் அலி இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது

* வீடு திரும்புகிறார் நெல்சன் மண்டேலா

கேப் டவுன், ஜன.28- மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (92) விரைவில் வீடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை, உடல்நலக்குறைவு காரணமாக ஜோகன்ஸ்பெர்க் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மண்டேலா அனுமதிக்கப்பட்டார்

எனினும், அவருக்கு சில விசேஷ பரிசோதனைகள் செய்யப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மருத்துவமனையில் மண்டேலாவின் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் சந்தித்துப் பேசினர்.

இதனிடையே, அவர் குணமடைந்துவிட்டதால் இன்று அல்லது நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது

* ஒபாமா நிர்வாகத்தில் 2 இந்தியர்களுக்கு பதவி

வாஷிங்டன், ஜன.28: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது நிர்வாகத் துறையில் பணியாற்ற 2 அமெரிக்க வாழ் இந்தியர்களைத் தேர்வு செய்துள்ளார். விவேக் மூர்த்தி, இஸ்லாம் சித்திக் ஆகிய இருவரும் நிர்வாகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நோய் தடுப்பு, சுகாதாரம், ஒருங்கிணைந்த பொது சுகாதாரம்-மேம்பாடு குறித்த குழுவின் உறுப்பினராக விவேக் மூர்த்தி
நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் பராக் ஒபாமாவின் வேளாண் துறையின் பிரதான பேச்சாளராக இஸ்லாம் சித்திக் செயல்படுவார்.

திறமைபடைத்தவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க அரசு ஒருபோதும் தயங்கியது இல்லை. இத்தகைய திறமை படைத்தவர்கள் நாட்டுக்காக தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அந்தவரிசையில் இவர்களிருவரும் சிறப்பாக செயல்படுவர் என்று எதிர்பார்ப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய பொறுப்புகளை ஏற்க இவர்களிருவரும் முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர மேலும் 13 பேரை வெவ்வேறு பணிகளுக்கு நியமித்துள்ளார் ஒபாமா

பர்மிங்காம் மகளிர் மருத்துவமனையில் பொது மருத்துவராகவும், ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் உள்ளார் விவேக் மூர்த்தி. அமெரிக்க மருத்துவ சங்க நிறுவனரும் அதன் தலைவராகவும் இவர் உள்ளார். இந்த அமைப்பில் 15 ஆயிரம் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் உள்ளனர்.

அமெரிக்கர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். எபர்னிகஸ் எல்எல்சி என்ற சமூக அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.

 இஸ்லாம் சித்திக்கை தலைமை வேளாண் துறை பிரதான பேச்சாளராக நியமித்துள்ளதாக செனட் சபைக்கு அனுப்பிய கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார். தூதரக அந்தஸ்திலானது இப்பதவி. அமெரிக்க அரசின் வர்த்தக பிரதிநிதியாக இவர் பேச்சுக்களில் பங்கேற்பார். இதற்கு முன்னர் அவர் கடந்த செப்டம்பரில் இதே பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். அமெரிக்க வேளாண்துறையின் அறிவியல், கட்டுப்பாட்டு விவகாரத்துறை துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.

 அங்கு விவசாயத் துறையில் சர்வதேச வர்த்தக விவகாரம் உள்ளிட்ட விஷயங்களை இவர் கவனித்து வந்தார். பயிர்களைக் காக்கும் ரசாயன மருந்துகளுக்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் பிரிவும் இவரது தலைமையின்கீழ் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

* ஆங் சான் சூச்சி கட்சி அங்கீகாரம் ரத்தை எதிர்த்த மனு மீண்டும் நிராகரிப்பு

யாங்கூன்,ஜன.28: மியான்மர் விடுதலைப் போராட்ட வீரர் ஆங் சான் சூச்சி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 புதிதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 இருப்பினும் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நேரடியாக முறையிட திட்டமிட்டுள்ளதாக ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வழக்கறிஞர் கியாவ் ஹோய் தெரிவித்தார்.

 இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

* எகிப்தில் அதிபருக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது: வீட்டுக் காவலில் முகமது எல்பரதே

கெய்ரோ, ஜன. 28: எகிப்தில் அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது.

தலைநகர் கெய்ரோவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீஸôருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளும் தொடர்ந்து வீசப்பட்டன. பலரை போலீஸôர் தடியால் அடித்து விரட்டினர்.

மசூதியில் இருந்து தொழுகை முடிந்து வந்த பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் மசூதியின் வெளிப்பகுதி போர்க்களமாக மாறியது. கெய்ரோவின் மையப் பகுதியை நோக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர். அப்போதும் வன்முறை ஏற்பட்டது.
நான்காவது நாளை எட்டியுள்ள போராட்டத்தால் அங்கு உள்நாட்டுக் குழப்பம் அதிகரித்துள்ளது. வன்முறைகளில் போலீஸôர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீட்டுக் காவலில் எல்பரதே: ஆஸ்திரியாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ள சர்வதேச அணுசக்தி முகமை முன்னாள் தலைவர் முகமது எல்பரதேவும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது மக்களிடையே வேகத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து முகமது எல்பரதே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்

போராட்டம் வலுத்துவரும் நிலையில் கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா, சூயஸ் நகரங்களில் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக உள்ள ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டுமென்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.


* ஐ.நா. சீர்திருத்தத்துக்குப் பாடுபடுவோம்: அமெரிக்கா

வாஷிங்டன்,ஜன.28: இப்போதைய காலசூழலுக்கு தகுந்தவாறு ஐ.நா. சபையில் சீர்திருத்தத்தைக் கொண்டுவர அமெரிக்கா பாடுபட்டுவருகிறது. வரும் காலங்களிலும் இது தொடரும் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் மைக் ஹேமர் தெரிவித்தார்.
 வாஷிங்டனில் வியாழக்கிழமை வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது மைக் ஹேமர் இதைத் தெரிவித்தார்.
 அவர் மேலும் கூறியது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று உலக அளவில் குரல் ஒலிக்கிறது. ஆனால் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் அவசியம் என்ற கோரிக்கையில் நியாயம் உள்ளதாகவே அமெரிக்கா கருதுகிறது. பல தடைகளை தாண்டி சீர்திருத்தம் செய்ய அமெரிக்கா பாடுபடுகிறது.
 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்து வளரும் நாடுகளுக்கு நிரந்தர அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

 குறிப்பாக உலக அளவில் அனைத்து விதத்திலும் போற்றத்தக்கப் பங்களிப்பை நல்கும் இந்தியாவுக்கு நிரந்தர அந்தஸ்து அளிப்பதற்கு அமெரிக்கா முழு அளவில் ஆதரவு அளிக்கிறது. அதிபர் ஒபாமா இந்தியா சென்றிருந்தபோது தனது ஆதரவை தெரிவித்தார்.

 ஐ.நா.வில் சீர்திருத்தம் கொண்டுவரும் விஷயத்தில் ஏராளமான எதிர்ப்புகளும், தடைகளும் உள்ளன. அதையெல்லாம் சவாலாக எடுத்து உலக நாடுகளிடம் ஒருமித்தக் கருத்தை ஏற்படுத்த வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் முயற்சித்து வருகிறார் என்றார் மைக் ஹேமர்.

* எச்-1பி விசா கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

வாஷிங்டன் : இந்தியர்கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள், அரசு நிர்ணயித்த இலக்கை எட்டி விட்டதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை தற்காலிகமாக வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்காக, அரசு சார்பில் "எச்-1பி' விசாக்கள் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு 65 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், இந்த விசாக்களை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த 2008 பொறுத்தவரை, ஏப்., 8ல், 65 ஆயிரம் என்ற இலக்கை விண்ணப்பங்கள் எட்டின. 2009ல் டிச., 21ல் இந்த இலக்கு எட்டப்பட்டது. இந்நிலையில், 2011ம் நிதியாண்டுக்கான "எச்-1பி'விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக பெறப்பட்டு வந்தன. கடந்த நான்கு வாரங்களுக்குள்ளேயே, ஏராளமான விண்ணப்பங்கள் வந்து குவிந்து விட்டன. தற்போது, விசா கோரி வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை எட்டி விட்டது.இவ்வாறு அமெரிக்க குடியேற்ற துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


தேசியச் செய்தி மலர் :



* தேசிய மாணவர் படை எண்ணிக்கை 15 லட்சமாக உயர்த்தப்படும்: பிரதமர் அறிவிப்பு

புது தில்லி, ஜன.28: தேசிய மாணவர் படை (என்சிசி) எண்ணிக்கை 15 லட்சமாக உயர்த்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். கூடுதலாக 2 லட்சம் மாணவர்களைச் சேர்க்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

 தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மாணவர் படையினரின் பேரணியில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

 தேசிய மாணவர் படையினரின் சிறப்பான பணிகளைப் பாராட்டி கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி இப்போது 13 லட்சமாக உள்ள மாணவர் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்த்தப்படும்.
 நாடு முழுவதும் தேசிய மாணவர் படைக்கு மாணவர்கள் உயர் நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். கூடுதலாக மாணவர்கள் சேர்க்க அனுமதிக்கப்பட்டதன் மூலம் 5 புதிய பிரிவுகள் உருவாக்கப்படும்

தேசிய மாணவர் படை ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதோடு நாட்டின் ஒருமைப்பாட்டின் சின்னமாக திகழ்கிறது. தேசபக்தி, குழுவாக பணியாற்றும் செயலும் இதன் மூலம் மாணவர்களிடையே அதிகரிக்கும். பாடத் திட்ட கல்வியோடு என்சிசி போன்ற கூடுதல் செயல்பாடுகள் மாணவர்களை மேலும் சிறந்தவர்களாக உருவாக்கும். உள்ளூர் மக்களுடன் இணைந்து செயல்படும் பழக்கத்தை தேசிய மாணவர் படையினர் மேலும் அதிகரிக்க வேண்டும். மே லும் மாணவர்கள் விவேகானந்தரின் போதனைகளைப் படித்து அதைப் பின்பற்ற வேண்டும். எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறந்தவர்களாக சாதனை புரிய வேண்டும் என்ற உத்வேகத்தோடு செயலாற்ற வேண்டும்.
 தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்கள் வெவ்வேறு மொழி பேசுபவர்களாகவும், வெவ்வேறு மத நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருந்தாலும் அவர்களது செயல்பாடு ஒன்றாகவே உள்ளது.

பன்முக தன்மை கொண்ட நமது சமூக கலாசார அமைப்பில் ஒற்றுமையோடு செயல்படுவது நமது நாட்டின் மிகப் பெரிய பலமாகும். பல்வேறு திறன் படைத்த மாணவர்கள், அவர்களது அனுபவம் ஆகியன நாட்டுக்கு மிகச் சிறந்த வளமாகும் என்றார் மன்மோகன் சிங்.

* தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை செல்கிறார் நிருபமா ராவ்



புது தில்லி, ஜன. 28: தமிழக மீனவர்கள் படுகொலை தொடர்பாக இலங்கை அரசுடன் விவாதிக்க வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்.
 கடந்த இரண்டு வார காலத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களில் இரண்டு பேர் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் உயிரிழந்துள்ளனர்.

 புதுக்கோட்டை ஜகதாபட்டினத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் ஜனவரி 12-ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் உயிரிழந்தார்.

 கோடியக்கரைப் பகுதியில் ஜனவரி 22-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவரை கழுத்தில் சுருக்குக் கயிறு போன்று மாட்டி கடலில் தள்ளியதில் அவர் உயிரிழந்தார்.

 இந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
 இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல்கள் எந்தவிதத்திலும் நியாயம் அல்ல என்று இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.

 இப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஓரிரு நாள்களாக பல்வேறு மீனவர் அமைப்பினரும், கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவை இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளதாக அந்தத் துறை அதிகாரி ஒருவர் புது தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்

* ஹஜ் மானியம் அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானதல்ல: உச்ச நீதிமன்றம்

புது தில்லி, ஜன. 28: ஹஜ் புனிதப் பயணத்துக்கு அளிக்கப்படும் மானியம் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 ஹஜ் பயணத்துக்கு அளிக்கப்படும் மானியம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஃபுல் கொராடியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

 ஹஜ் மானியம் அளிப்பது என்பது, சமத்துவத்தை வலியுறுத்தும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 14, பாரபட்சமற்ற தன்மையை வலியுறுத்தும் பிரிவு 15-பி, ஒரு குறிப்பிட்ட மதத்தின் வளர்ச்சிக்கு பொது வரிப் பணத்தை பயன்படுத்தாமல் இருப்பதை வலியுறுத்தும் பிரிவு 27 ஆகியவற்றுக்கு எதிரானது என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

 பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் வரியில் ஒரு சிறிய பகுதியை மதம் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்துவது என்பது பிரிவு 27-க்கு விரோதமானதல்ல. ஒருவேளை, வசூலிக்கும் வரியில் 25 சதவீதம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுமானால் அது பிரிவு 27-க்கு விரோதமானது.

 இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன. கும்ப மேளாவுக்கும், சீனாவில் உள்ள மானசரோவருக்கு ஹிந்துக்கள் யாத்திரை மேற்கொள்வதற்கும் இதுபோன்ற செலவுகள் செய்யப்படுகின்றன என பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

 எனவே, மற்ற மதங்களுக்கும் அரசு உதவிகள் செய்யப்படுவதால் பிரிவு 14, 15-பி ஆகியவையும் மீறப்படவில்லை.

1947-ல் நாடு பிரிக்கப்பட்டபோது, பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடு என்று அறிவித்துக் கொண்டது. இந்தியாவை ஹிந்து நாடு என்று அறிவிக்க கடும் நெருக்குதல் அப்போதிருந்த தலைமைக்கு அளிக்கப்பட்டது.

 எனினும், பண்டித ஜவாஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் அந்த நெருக்குதல்களுக்குப் பணியாமல் இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக அறிவித்தனர் என்று குறிப்பிட்டு பிரஃபுல் கொராடியாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்

* * குஜராத் என்கவுன்டர் வழக்கில் திருப்பம்

ஆமதாபாத்,ஜன.28: குஜராத்தில் இஷ்ரத் ஜெஹான் உள்பட 4 பேர் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறப்பு விசாரணைக்குழு புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் வழக்கு விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 இது குறித்த விவரம்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் திட்டத்துடன் வந்த இஷ்ரத் உள்பட 4 பேர், ஆமதாபாத் போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 2004 ஜூன் 15-ல் நடைபெற்றது. ÷இது தொடர்பாக விசாரணை நடத்த கர்னைல் சிங் தலைமையில் மூன்றுபேர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு, ஆமதாபாத் உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.÷அப்போது சிறப்பு விசாரணைக் குழு உறுப்பினர்களில் ஒருவரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான சதீஷ் வர்மா, இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக சில சந்தேகங்களை நீதிமன்றத்தில் எழுப்பினார். ÷இரண்டு விதமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, குஜராத் முதல்வரைக் கொலை செய்ய வந்தவர்களை போலீஸôர் என்கவுன்ட்டர் செய்திருக்கலாம். மற்றொன்று, அந்த 4 பேரையும் போலீஸôர் வேண்டுமென்றே கூட சுட்டுக் கொன்று இருக்கலாம்.

 இதில் இரண்டாவது கூறப்பட்டுள்ள விஷயம் நடந்திருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக புதிதாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் சதீஷ் வர்மா கூறியுள்ளார்

மாநிலச் செய்தி மலர் :


* சா. கந்தசாமி, நாஞ்சில் நாடன், ராஜேஷ் குமாருக்கு கலைமாமணி



சென்னை, ஜன. 28: தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், ராஜேஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் விருது பெறுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

 இதேபோன்று, திரைத்துறையில் நடிகர் ஆர்யா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, மாளவிகா ஆகியோரும் விருது பெறுகின்றனர்.

 கலைத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் ஆண்டு தோறும் கலைமாமணி எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது.

 விருதுபெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது. 2008, 2009, 2010 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களைத் தேர்வு செய்து, தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

 அப்பரிந்துரைகளையேற்று முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்: பொன். செல்வ கணபதி (இயற்றமிழ்), பேராசிரியர் தே. ஞான சேகரன் (இயற்றமிழ்), டாக்டர் சு. நரேந்திரன் (இயற்றமிழ்), டாக்டர் தமிழண்ணல் (இயற்றமிழ்), திண்டுக்கல் ஐ. லியோனி (இலக்கியச் சொற்பொழிவாளர்), சொ. சத்தியசீலன் (சமயச் சொற்பொழிவாளர்), தேச. மங்கையர்க்கரசி (சமயச் சொற்பொழிவாளர்), டி.வி. கோபாலகிருஷ்ணன் (இசை ஆசிரியர்), கே. என். சசிகிரண் (குரலிசைக் கலைஞர்), குடந்தை ஜெ. தேவிபிரசாத் (வயலின் கலைஞர்), ஐ. சிவக்குமார் (மிருதங்க ஆசிரியர்), என்.எஸ். ராஜம் (மிருதங்க கலைஞர்), ஸ்ரீனிவாசன் (வீணை கலைஞர்), ராஜேஷ் வைத்யா (வீணைக் கலைஞர்), திருவாரூர் எஸ். சாமிநாதன் (புல்லாங்குழல்), கே.வி. இராமானுஜம் (புல்லாங்குழல்), டாக்டர் தி. சுரேஷ் சிவன் (தேவார இசைக் கலைஞர்), கல்யாணி மேனன் (மெல்லிசைப் பாடகி), திருக்கடையூர் முரளிதரன் (நாதஸ்வரக் கலைஞர்), ரெட்டியூர் செல்வம் (தவில் கலைஞர்), ஏ.ஹேம்நாத் (பரத நாட்டியம்), பிரசன்னா ராமசாமி (நாடகக் கலைஞர்), எப். சூசை மாணிக்கம் (நாடக நடிகர்), ஆர்யா (திரைப்பட நடிகர்), அனுஷ்கா (திரைப்பட நடிகை), தமன்னா (திரைப்பட நடிகை).

* வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க உத்திகள்: தேர்தல் அதிகாரி

தஞ்சாவூர், ஜன. 28: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க பல்வேறு உத்திகள் கையாளப்படும் என்றார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்.

 தஞ்சையில் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்ட பிறகு அவர் அளித்த பேட்டி:

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் புகைப்பட வாக்காளர்கள் பட்டியல் தொடர்பாக ஆய்வு செய்ய வந்தேன்.
 தமிழகத்துக்கு குஜராத் மற்றும் பிகாரிலிருந்து 1.50 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

 வாக்குச் சாவடிகளின் தேவைக்கேற்ப வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்படும். பழுதாகும் இயந்திரங்களுக்குப் பதிலாக புதிதாகக் கூடுதல் இயந்திரங்கள் வழங்கப்படுவதற்காக தயார் நிலையில் உள்ளன. ஒரே நபரின் பெயர்கள் இரு இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட வகையில், 50,000 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

 தேர்தல் பாதுகாப்புக்கு மாநில காவல் துறை முழு அளவில் பயன்படுத்தப்படும். தேவைப்பட்டால் துணை நிலை ராணுவம் வரவழைக்கப்படும்.
 வாக்காளர் அடையாள அட்டை காணாமல் போயிருந்தாலும், பட்டியலில் பெயர் இருந்தால் போதும். ரூ. 15 செலுத்தி புதிதாக புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

 எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் 49(ஓ) விண்ணப்பம் கடந்த தேர்தலில் பயன்படுத்தியதுபோல, இந்த முறையும் பின்பற்றப்படும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. கள்ள ஓட்டுப் போடுவது தடுக்கப்படும்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க பல உத்திகள் கையாளப்பட்டதைப் போல தமிழகத்திலும் கையாளப்படும்.

 பணம் கொடுப்பது தொடர்பாக மாநில தேர்தல் அலுவலகத்துக்கு கேமரா மற்றும் இணையதளம் மூலம் புகார் தெரிவிக்கலாம். இதற்காக, இலவச தொலைபேசி எண், இணையதள முகவரி பின்னர் தரப்படும்.

 இதுகுறித்து தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரவீண்குமார்.

* பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் விதத்தை அரசு விளக்க வேண்டும்: பெண் ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

 சென்னை, ஜன. 28: உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு எந்த வரையறை அடிப்படையில் அமல்படுத்தப்படுகிறது என்பதை அரசு விளக்க வேண்டும் என்று பெண் ஊராட்சித் தலைவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

 இது குறித்து தமிழக ஊராட்சிமன்ற பெண் தலைவர்கள் கூட்டமைப்பின் கெüரவத் தலைவர் பொன்னி கைலாசம் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
 "உள்ளாட்சிகளில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு எந்தெந்த இடங்களில் எந்த வரையறைப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை மாநில அரசு வெளியிட வேண்டும். பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள ஊராட்சிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் 6309 பெண் ஊராட்சிமன்றத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 இவர்களில் உள் ஒதுக்கீடாக 2315 தலித், பழங்குடியின பெண் தலைவர்களும் பதவியேற்பாளர்கள். தமிழ்நாட்டின் சட்ட மேலவை உறுப்பினர்களாக ஊராட்சித் தலைவர்கள் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, 29 துறைகளுக்கான அதிகாரங்கள் உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சிகள் உருவாகி 14 ஆண்டுகள் ஆன பின்பும், அதிகாரங்கள் மாநில அரசால் பரவலாக்கப்படவில்லை.

உள்ளாட்சிகள் சுயாட்சி அமைப்புகளாக இயங்க முடியாமல் அரசியல் கட்சிகளின் தலையீட்டினால், செயல்படாத அமைப்புகளாக மாறியுள்ளன.

கடந்த 14 ஆண்டுகளில் ஊராட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு 8 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை வெறும் 9 சதவீதமாகவே இருந்து வருகிறது. அந்த நிதியும் மின் கட்டணம், ஊராட்சிப் பணியாளருக்கான ஊதியம் செலுத்தக் கூட போதுமானதாக இல்லை. இந்த நிலையில் ஊராட்சிப் பணிகளை நிறைவேற்ற நிதி இல்லாத நிலையே நீடித்து வருகிறது.

 ஊராட்சிகளுக்கு சட்டப்பூர்வமாக வர வேண்டிய 9 சதவீத நிதியை மாநில அரசின் திட்டங்களுக்காக செலவிடுவது சட்ட விரோதமான செயலாகும். இதனால் ஊராட்சிகளில் கிராம சபை மூலம் மக்கள் தீர்மானிக்கும் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

 மாநில அரசின் திட்டங்களிலும், ஊராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை. அனைத்தும், அரசு அதிகாரிகளின் மூலமே செயல்படுத்தப்படுகின்றன. தமிழில் பெயர் வைக்கும் சினிமாக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரி விலக்கு ஊராட்சிகளின் நிதியாயாதாரத்தில் இருந்தே அளிக்கப்படுகிறது.
 உள்ளாட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் வீடுகள் வழங்கப்படவில்லை. பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை. பயணப்படியாக மாதம் ரூ. 500 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சில பஞ்சாயத்துகளில் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களின் கணவன்மார்கள்தான் பணிகளை கவனிப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

 நியாமான சம்பளம் கொடுத்தால், அலுவலக பணிபோன்று காலை முதல் மாலை வரை நாங்களும் பஞ்சாயத்து அலுவகத்தில் பணியாற்றத் தயாராக உள்ளோம்' என்று அவர் கூறினார்.

* நாளை மாரத்தான் போட்டி அனைவரும் பங்கேற்கலாம்

மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாரத்தான் போட்டி, நாளை காலை 7 மணிக்கு, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து துவங்குகிறது. மாணவர்கள், ஆண் களுக்கான திறந்தநிலை மாரத்தான் போட்டியில் வயது வரம்பின்றி பங்கேற்கலாம். 21 கி.மீ., தூரம் ஓடவேண்டும். திறந்தநிலை, பெண்களுக்கான போட்டியில் 10 கி.மீ., தூரம் ஓடவேண்டும். 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 10 கி.மீ., தூரமும், மாணவிகள் ஐந்து கி.மீ., தூரமும் ஓடவேண்டும். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். பரிசுத்தொகை மொத்தம் 55ஆயிரம் ரூபாய், என மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்தார்.


 வர்த்த்கச் செய்தி மலர் :

* பங்குச் சந்தை விழுங்கிய ரூ. 11 லட்சம் கோடி: 289 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை, ஜன. 28: மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து புள்ளிகள் சரிந்து வருகின்றன.

தீபாவளியிலிருந்து இப்போதுவரை ரூ. 11 லட்சம் கோடி நஷ்டம் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 3 லட்சம் கோடியாகும். மூன்று நாள்களில் 755 புள்ளிகள் சரிந்துள்ளது.

 வாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று பங்குச் சந்தையில் 289 புள்ளிகள் சரிந்தது. இதனால் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக பங்குச் சந்தை குறியீட்டெண் 18,395 புள்ளிகளாகக் குறைந்தது. இதற்கு முன்பு இந்த அளவுக்கு பங்குகள் சரிந்தது கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதிதான்.

 அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு நிறுவனங்களின் லாபத்தை பாதிக்கும் என முதலீட்டாளர்கள் கருதியதும் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 92 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,512 புள்ளிகளாகக் குறைந்தது.
 ரிசர்வ் வங்கி கடந்த 25-ம் தேதி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் தொடர்ந்து கட்டுமானம், ஆட்டோமொபைல், நுகர்வோர் தயாரிப்பு உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலைகள் சரிந்து வருகின்றன. அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெறுவதும் பங்குச்சந்தை சரிவுக்குப் பிரதான காரணமாகும். அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் நடப்பு மாதத்தில் இதுவரை ரூ. 4,220 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மொத்தம் 2,386 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 506 நிறுவனப் பங்குகள் கணிசமானலாபம் ஈட்டின. மொத்தம் ரூ. 3,904.41 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை ரூ. 3,313.90 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

 ஆசிய பிராந்தியத்தில் ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. சீனா, சிங்கப்பூர் பங்குச் சந்தைகள் மட்டும் சிறிதளவு லாபம் ஈட்டின. ஜப்பானின் நிகே பங்குச் சந்தை 1.13 சதவீதம் சரிந்தது

** தங்கம் விலை குறைய காரணமென்ன?


தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 36 ரூபாய் குறைந்தது.

ஆன்-லைன் வர்த்தகத்தால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. கடந்தாண்டு துவக்கத்தில், ஒரு கிராம் 1,600 ரூபாய் என்றிருந்தது. பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்ததாலும், தேவை அதிகரித்ததாலும் எப்போதும் இல்லாத அளவிற்கு, கடந்தாண்டு இறுதியில், ஒரு கிராம் 1,900 ரூபாயை தாண்டி, "சாதனை' படைத்தது. இந்தாண்டு துவக்கம் முதலே தங்கத்தின் விலை இறங்குமுகமாக உள்ளது. கடந்த 24ல் 1,895 ரூபாயாக இருந்த ஒரு கிராம், 25ம் தேதி 20 ரூபாய் குறைத்து விற்கப்பட்டது. 26ல் ஐந்து ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில், 36 ரூபாய் குறைந்து 1,853 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தங்கம் விலை தொடர்ந்து குறையுமா என்பது குறித்து, தமிழ்நாடு நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, "ஆன்-லைன் வர்த்தகத்தில் தங்கம் இருப்பதால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. தங்கம் வாங்கும் ஆர்வம் குறைந்ததே, விலை குறைவுக்கு காரணம். ஆன்-லைனில் தங்கம் வாங்க அதிகம் பேர், "புக்' செய்யும்போது, மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது' என்றார்.சென்னையில் நேற்று, ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1,833 ரூபாயாக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை 1,971 ரூபாயாக இருந்தது. கடந்த 30 நாட்களை கணக்கெடுக்கும் போது இது மிகவும் குறைந்த விலையாகும். அதே சமயம், கடந்த மாதம் 30ம் தேதி, ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை, 1,930 ரூபாயாகவும், 24 காரட் தங்கத்தின் 2,075 ரூபாயாகவும் இருந்தது.

இதே போல் வெள்ளியின் விலையும் நேற்று மிகவும் குறைந்து காணப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 44 ரூபாய் 55 பைசாவாகவும், ஒரு கிலோவின் விலை 41 ஆயிரத்து 650 ரூபாயாகவும் இருந்தது. வெள்ளியும் கடந்த ஒரு மாதத்தில், கிராம் ஒன்றுக்கு ஐந்து ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ஒப்பிடும் போது, கடந்த 25ம் தேதி வெள்ளியின் விலை ஒரு கிராம் 44 ரூபாய் 20 பைசாவாக இருந்தது. இவை சென்னை நிலவரம்.

தற்போது தை மாதம் திருமண சீசன். அதனால், தங்கம், வெள்ளி விற்பனை அதிகரித்து காணப்படும். இப்போது சற்று விலையை குறைத்தால், அவற்றின் விற்பனையை எதிர்பார்த்ததை விட அதிகரிக்கச் செய்ய முடியும். அந்த யுக்தியை பின்பற்றியே தங்கம், வெள்ளியின் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது என, விவரம் அறிந்த தங்கம் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.


விளையாட்டுச் செய்தி மலர் :

* இந்தியாவுக்கு உலக சாம்பியன் வாய்ப்பு *கபில் தேவ் நம்பிக்கை

துபாய்: "" இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையாக உள்ளது. இம்முறை வீரர்கள் தங்களது திறமைக்கு ஏற்ப விளையாடினால், உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம், ''என, கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை வென்று சாதித்தது. தற்போது இந்திய துணை கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை தொடர்(பிப். 19-ஏப். 2) நடக்க உள்ளது. இது குறித்து "கிரிக்கெட் ஜாம்பவான்' கபில் தேவ் கூறியது:

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி, உலக கிரிக்கெட்டில் இதற்கு முன் எப்போதும் பார்க்காத வகையில், வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. பவுலிங்கில் மட்டும் சற்று பலவீனமாக இருந்தாலும், பார்ப்பதற்கு சமபலமாக தோன்றுகிறது. இந்திய வீரர்கள் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தினால், புதிய உலக சாம்பியனாக உருவெடுக்கலாம்.

இந்திய அணியைப் பொறுத்தவரை உள்ளூரில் விளையாடுவது தான் மிகப்பெரிய பலம். அதுவே பெரிய பலவீனமும் கூட. அணியின் கேப்டன் தோனி, என்னைவிட சிறப்பானவர். மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராகவும், கேப்டனாகவும் ஜொலிக்கிறார். இந்தியர்கள் அனைவரும் விரும்பும் உலக கோப்பையை, தோனி இம்முறை கைப்பற்றி சாதிப்பார் என்று நம்புகிறேன்.
யாரும் இல்லை:
கடந்த 1983ல் "கறுப்பு குதிரைகளாக' செயல்பட்ட நாங்கள், யாரும் எதிர்பாராத வகையில் கோப்பை வென்றோம். ஆனால் இம்முறை எந்த அணியும் "கறுப்பு குதிரையாக' செயல்படும் என நினைக்கவில்லை. ஏனெனில் 3 அல்லது 4 அணிகள் ஒன்றைவிட ஒன்று விஞ்சும் வகையில் <உள்ளன. இங்கிலாந்து சிறப்பான அணியாக மீண்டு வந்துள்ளது. தவிர, இலங்கை அணி மீது எப்போதுமே நம்பிக்கை உண்டு. இதே போன்று தான் ஆஸ்திரேலியாவும் உள்ளது.
கணிக்க முடியாது:
வலிமையான பவுலர்களை கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியும், யாரையும் வீழ்த்த வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அதிகம் நம்பமுடியாத அணியாக <உள்ளது. இவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று கணிக்கவே முடியாது. குறிப்பிட்ட நாளில் சிறப்பாக செயல்பட்டு, திடீரென எந்த அணியையும் சாய்த்து விடுவார்கள்.

மகிழ்ச்சியான தேர்வு:

உலக கோப்பை தொடரின் விளம்பர தூதராக சினிமா நட்சத்திரம், பாடகர் அல்லது அரசியல்வாதி என யாரையும் தேர்வு செய்யாமல், சச்சினை தேர்வு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஐ.சி.சி.,க்கு நன்றி சொல்ல வேண்டும். சக வீரர் ஒருவர், இப்படி தூதராக இருப்பது பெருமிதம் கொள்ளச்செய்கிறது. கிரிக்கெட்டை, கிரிக்கெட் விளையாடும் நபரால் மட்டுமே சிறப்பாக விளம்பரம் செய்ய முடியும். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக, சிறப்பான விளையாட்டு வீரராக திகழும் சச்சினைத் தவிர, இதற்கு வேறு பொறுத்தமான நபர் யாருமில்லை.
இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்



* ஈடன் விவகாரம்: பி.சி.சி.ஐ., "அப்பீல்'

கோல்கட்டா: ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருந்த உலக கோப்பை போட்டியை ஐ.சி.சி., ரத்து செய்தது. இதனை எதிர்த்து அப்பீல் செய்ய பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.

வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் (பிப்., 19 - ஏப்., 2), கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி உட்பட, மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடக்க இருந்தன. ஆனால் மைதானத்தில் புதுப்பித்தல் பணி, நிறைவு பெறவில்லை என்பதால், பிப்., 27ல் நடக்க இருந்த இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டியை, வேறு மைதானத்தில் நடத்த ஐ.சி.சி., முடிவெடுத்தது.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) பேசி, கூடுதல் கால அவகாசத்தை பெற்றுத் தர வேண்டும் என, சி.ஏ.பி., தலைவர் டால்மியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கூடுதல் அவகாசம்:இதுகுறித்து அவர் அனுப்பிய கடிதத்தில்,"" ஐ.சி.சி., தெரிவித்துள்ள கவலைகள் அனைத்தும் சரியானவை தான் என்பது தெரியும். இருப்பினும், இன்னும் ஒரு பத்துநாள் அவகாசம் கொடுத்தால் (வரும் பிப்., 7) அனைத்து வித வேலைகளையும் முடித்து விடுகிறோம்,'' என, தெரிவித்துள்ளார்.

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""ஐ.சி.சி., முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளோம். இதற்கான கடிதத்தை ஐ.சி.சி.,க்கு அனுப்ப இருக்கிறோம். ஈடன் கார்டனில் திட்டமிட்டபடி போட்டிகள் நடக்கும் என நம்புகிறோம்,''என்றார்.

வீரர்கள் ஏமாற்றம்:இந்நிலையில், புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் இருந்து, போட்டி மாற்றப்பட்டதால், இங்கிலாந்து வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில்,"" ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட, ஈடன் கார்டன் மைதானம், உலக கோப்பை போட்டிக்கு முன் தயாராகாதது வெட்கக்கேடானது. இது மிகவும் ஏமாற்றம் தருகிறது,'' என தெரிவித்துள்ளார்.

செயல்திட்டம் இல்லை:மற்றொரு இங்கிலாந்து வீரர் டிரம்லெட் கூறுகையில்,"" இந்தியா, இங்கிலாந்து போட்டியை காண, நிறைய ரசிகர்கள் ஏற்கனவே விமான டிக்கெட் பதிவு செய்து வைத்திருப்பார்கள். இங்கு செல்வதற்காக ஏகப்பட்ட பணத்தை செலவிட்டு இருப்பார்கள். இந்நிலையில் கடைசி நேரத்தில் போட்டி அங்கிருந்து மாற்றப்பட்டது நிறைய இழப்பு தான். மிகப்பெரிய தொடரை நடத்தவுள்ள நிலையில், சரியான செயல்திட்டம் இல்லாமல் இருப்பது அவமானம்,'' என்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்


மூலவர் : வரசித்தி விநாயகர்
  :  -
  பழமை :  500 வருடங்களுக்கு முன்
   -
  ஊர் :  காணிப்பாக்கம்
  மாவட்டம் :  சித்தூர்
  மாநிலம் :  ஆந்தர பிரதேஷம்


தல சிறப்பு:
 
  விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் ஒன்று வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது

பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் கட்டணம் செலுத்தி ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள் நிறைவேற்றி வருகின்றனர். தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எங்கு நோக்கினும், இந்த சக்தி வாய்ந்த காணிப்பாக்கம் விநாயகர் படங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.

பிரார்த்தனை
 
  இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:
 
  கணவன் மனைவி பிரச்னை, கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்ட காலம் நோய் உள்ளவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம், கணபதி ஹோமம் செய்து தங்களது குறைகளைக் கூறுகிறார்கள். பூஜை செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

தலபெருமை:

சத்தியப் பிரமாணம்: தினமும் மாலை "சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்தக்குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் இங்கு நடைபெறும் "சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன் சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு விநாயகர் கடுமையாக தண்டனை கொடுத்து விடுவார். ஆந்திர பக்தர்கள் காணிப்பாக்கம் விநாயகரை தங்கள் தலைமை நீதிபதியாக கருதுகிறார்கள்.

 தல வரலாறு:

 முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.


ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது.

பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது.

திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

கடவுள் நமக்கு உறவினர் - சாரதாதேவியார்.

* ஏதோ ஒரு நினைவுடன் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்வதைவிட, இறைவனின் நினைவில் ஊறி ஒருமுறை நாம ஜபம்
செய்வது கோடிக்கணக்கில் செய்ததற்கு
சமமாகும்.

* இறை வழிபாட்டுக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். கடமையின் சுமை
எவ்வளவு அழுத்தினாலும் இறைவழிபாட்டைத்
தவறாமல் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

* இறைவனின் செயல்படி அனைத்தும் நடந்தாலும்,
நம்முடைய வேலையை நாம் தான் செய்தாக வேண்டும். காரணம், இறைவனின் திருவுளம் மனிதனின் செயல் மூலமே வெளிப்படுகிறது.

வினாடி வினா :

வினா - மேதினம் முதன் முதலில் எங்கே எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

விடை - மேதினம் 1886ஆம் ஆண்டு சிகாகோவில்,தொழிலாளர்களின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க:

பாலிஷ் போடுவதாக ஏமாற்றி 24 சவரன் நகைகள் அபேஸ்

திண்டிவனம்:திண்டிவனத்தில் பாலிஷ் போடுவதாக கூறி 24 சவரன் தங்க நகைகளை அபேஸ் செய்த இரு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டிவனம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர்

அனந்தபத்மநாபன் (55). வானூர் ஒன்றிய தி.மு.க., அவைத்தலைவராக பதவி வகிக்கிறார். இவரது வீட்டிற்கு நேற்று பகல் 12 மணிக்கு வந்த வடமாநில வாலிபர்கள் இருவர் நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறினர்.இதனை நம்பிய அனந்தபத்மநாபன் மனைவி மஞ்சுளா, மருமகள் சரளா இருவரும் 24 சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளனர். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாலிஷ் பவுடரை கலக்கி நகைகளை போட்டுள்ளனர்.அப்போது அங்கு நின்றிருந்த சரளாவிடம் நகைககளை சூடு செய்ய விளக்கு கொண்டு வருமாறு கூறினர். அவர் திரும்ப வருவதற்குள் இரண்டு வாலிபர்களும் தப்பியோடிவிட்டனர்.இது குறித்து புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


நன்றி - தின மணி, தின மலர்.

3 comments:

அப்பாதுரை said...

அருமையான தொகுப்பு நன்றி.
சாயப்பட்டறைகள் சுத்திகரிப்பு மிக அவசியம். சமூக நோக்கோடு கூடியத் தீர்மானம். செயலாக்கப் படுகிறதா என்று பார்க்க வேண்டும். சிறு வயதில் நான் வளர்ந்த் குரோம்பேட்டையைச் சுற்றி இருந்தத் தோல்பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வந்த கழிவு நீர் அந்த வட்டாரத்தையே கெடுத்து விட்டது.

ஒபாமா தேர்ந்தெடுக்க அரசியலே காரணம். சென்ற தேர்தலில் அவருக்கு மிகவும் உதவி செய்த இந்தியர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை; அடுத்த வருடம் தேர்தல் வருகிறதே? இந்தியர்களின் உதவி வேண்டுமே? ஒபாமாவின் யானைக்காது சும்மா ஆடுமா?

மீனவர் படுகொலை போன்ற பிரச்சினைகள் இனி வராது நிரந்தரத் தீர்வு காண்பாரா நிருபமா?

tamilan said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.

.....

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி திரு அப்பாதுரை, தமிழன்.

Post a Comment