Thursday, January 27, 2011

இன்றைய செய்திகள். - ஜனவரி - 27 - 2011.








உலகச் செய்தி மலர் :

* 'போர்க் குற்றம்: ஐ.நா. குழு இலங்கை செல்லாது'  
ஐ.நா.பொது செயலாளர் பான் கி மூனின் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஆலோசனைக் குழு இலங்கைக்கு பயணம் செய்வது அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.நா. செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிடும் 'இன்னர் சிட்டி பிரஸ்' ஊடாக ஐ.நா.செயலாளருக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கும் விதமாகவே ஐ.நா.பேச்சாளர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆலோசனைக் குழு மற்றும் இலங்கைக்கு இடையே தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொறுப்புகளுக்கு ஏற்ப செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்வதற்கு பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவுக்கு தேவைப்பாடு உள்ளது.

எனினும்,இது தொடர்பாக அவர்களுக்கு இலங்கைக்கு பயணம் செய்ய அவசியம் இல்லை என்று ஐ.நா.பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான பயணம் பயனுள்ள விடயமாக மாத்திரமே அமையும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

* அமெரிக்க போர் விமான தொழில்நுட்பத்தை திருடவில்லை: சீனா  

அதிநவீன போர் விமானம் தயாரித்ததில் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை திருடவில்லை என்று சீனா மறுத்துள்ளது.

'ஜெ-20' என்னும் அதிநவீன போர் விமானத்தை சீனா சமீபத்தில் சோதனை செய்தது. இந்நிலையில், அந்த விமானத்தின் தொழில்நுட்பத்தை அமெரி்க்காவிடம் இருந்து சீனா திருடியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக தொழில்நுட்ப ரகசியத்தை அளித்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த நோஷிர் கோவாடியா என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இந்நிலையில், "ஜெ-20" விமானத்தின் தொழில்நுட்பத்தை அமெரிக்காவிடம் இருந்து திருடவில்லை என்று சீன பாதுகாப்பு அதிகாரிகளும், இராணுவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

தங்களது தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் மகுடம்தான் 'ஜெ-20' போர் விமானம் என்றும் சீனா கூறியுள்ளது.

இத்தகவல் சீன அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ளது.

* இந்தியாவுடன் புதிய நட்புறவு: ஒபாமா அறிவிப்பு 

உலகின் அமைதி மற்றும் நன்மைக்காக இந்தியாவுடன் புதிய நட்புறவை அமெரிக்கா செய்துகொள்ள உள்ளதாக அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் பேசியதாவது:

உலகில் அமைதியும் வளமும் ஏற்படும் வகையில் இந்தியா போன்ற நாடுகளுடன் புதிய நட்புறவை உருவாக்கியுள்ளோம்.

ரஷ்யாவுடன் நமது உறவை புதுப்பித்துள்ளோம்.தீவிரவாத எதிர்ப்பு, ஏவுகணை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் நமது கூட்டுறவை மேம்படுத்தியுள்ளோம்.

வரும் மார்ச் மாதம்,பிரேசில்,சிலி,எல் சால்வடார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். விவசாயிகளுக்கு உதவுதல்,ஊழலை ஒழித்தல்,சமூகத்தை சீர்படுத்தி மக்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றில் யார் பொறுப்பை ஏற்று செயல்படுகிறார்களோ,அந்த நாடுகளுக்கு நாம் துணை நிற்கிறோம்.

அனைத்து கண்டங்களிலும் அணுஆயுதத் தளவாடங்கள் முடக்கப்பட வேண்டும். அவை தீவிரவாதிகளின் கைகளுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறோம்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.


* பின்லேடனின் பாதுகாவலருக்கு ஆயுள் தண்டனை

நியுயார்க், ஜன.26: கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது 1998-ம் ஆண்டு குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் சம்பந்தப்பட்ட அல்-காய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் பாதுகாவலரான அகமது கல்ஃபான் கைலானிக்கு ஆயுள் தண்டனை விதித்து
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த தாக்குதல்களில் 224 பேர் கொல்லப்பட்டனர்.

கைலானி 2004-ம் ஆண்டு பாகிஸ்தானில் பிடிபட்டார். 6 ஆண்டுகளாக குவாந்தநாமோ மற்றும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு குவாந்தநாமோவில் இருந்து மன்ஹாட்டனுக்கு மாற்றப்பட்டார்.

சிறைகளில் கடும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதால் குறைவான தண்டனை வழங்குமாறு அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். எனினும் நீதிபதி அதை நிராகரித்து ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

* அமெரிக்காவி்ல் என்ன செய்கிறார் ராஜபட்ச?: ஐக்கிய தேசியக் கட்சி

கொழும்பு, ஜன.26- இலங்கை அதிபர் ராஜபட்ச அமெரிக்காவுக்கு ரகசியப் பயணம் சென்று அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலர் திச அத்தநாயக்க இவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கேட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.,யாகவும் உள்ளார்.

"ராஜபட்ச அமெரிக்காவுக்கு தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு கூறி வருகிறது. ஆனால், அவருடன் அமைச்சர்களும் அரசு உயர் அதிகாரிகளும் கொண்ட 20 பேர் கொண்டு குழு சென்றுள்ளது. தனிப்பட்ட பயணம் என்றால் இந்த குழு எதற்காக உடன் சென்றுள்ளது? கடந்த 19-ம் தேதி அமெரி்க்கா சென்ற ராஜபட்ச இன்னும் நாடு திரும்பாமல் உள்ளார். இவ்வளவு நாட்களாக அவர் அமெரிக்காவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் அமெரிக்கா சென்றதற்கான உண்மையான காரணம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும்." என்று திச அத்தநாயக்க கூறியுள்ளார்

தேசியச் செய்தி மலர் :

* ஸ்ரீநகரில் பிரிவினைவாத தலைவர்கள் கைது

ஸ்ரீநகர், ஜன.26: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பிரிவினைவாத தலைவர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) அமைப்பின் தலைவர் முகமது யாசின் மாலிக் உள்ளிட்ட 10-க்கும் அதிகமானோர் பேரணியாக புறப்பட்டு லால் செüக் பகுதிக்குச் சென்றனர்.

 பிலால் கனி லோனே, ஹுரியத் மாநாட்டுக்கட்சித் தலைவர் ஷைதுல் இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 புதன்கிழமை பிற்பகலில் இவர்கள் பேரணியாக லால் செüக் நோக்கி புறப்பட்டுச் சென்றபோது இவர்களனைவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸôர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 இவர்கள் அனைவரும் கடந்த வாரம் முதல் தலைமறைவாக இருந்தனர். லால் செüக் பேரணியில் இவர்கள் ஈடுபடுவார்கள் என்பதால், முன்னதாகவே போலீஸôரால் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக இவர்கள் தலைமறைவாக இருந்தனர்.

 பாஜகவினருக்குப் போட்டியாக பிரிவினைவாத தலைவர்கள் இத்தகைய பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இரு தரப்பினரின் பேரணியைத் தடுத்து நிறுத்துவதற்காக மாநில அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

* கறுப்புப் பணம்: பெயர் பட்டியலை வெளியிட அத்வானி கோரிக்கை

புதுதில்லி, ஜன.26- வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தில்லியில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல நாடுகள் தங்கள் வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியலை வழங்க முன்வந்தும், அதைப் பெறுவதில் மத்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும் அத்வானி குற்றம்சாட்டியுள்ளார்

* தில்லி ரயில் நிலையத்தில் 1000 தோட்டாக்களுடன் பயணி கைது

புது தில்லி, ஜன. 26: தில்லி ரயில் நிலையத்தில் 1,025 துப்பாக்கி தோட்டாக்களை வைத்திருந்த பயணி புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
 தில்லியிலிருந்து குவாஹாட்டி செல்வதற்காக அவர் வந்தபோது, நுழைவுவாயிலில் போலீஸôர் அவரை சோதனை செய்தனர்.

 அவரது பையை சோதனையிட்டபோது அதில் 1,025 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கொண்டு செல்வதற்கான முறையான ஆவணம் இல்லாததால், போலீஸôர் அவரைக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர், மிசோரம் துப்பாக்கி சுடும் குழுவின் மேலாளர் என்பது தெரியவந்தது. எங்கிருந்து, எதற்காக துப்பாக்கி தோட்டாக்களை கொண்டு சென்றார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. குடியரசுத் தினத்தில் தலைநகர் தில்லியில் ஆயிரம் தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பெட்ரோலியப் பொருள் விலை உயர்வை தள்ளிப்போடுவதால் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

புது தில்லி, ஜன.26: பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வைத் தள்ளிப் போடுவதால் நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசை ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

 பெட்ரோலியப் பொருள்கள், உரத்தின் விலையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். இல்லையெனில் அரசின் மானியம் அதிகரிக்கும். இதனால் நிதிப் பற்றாக்குறை கூடும் என்று ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.

 இதே நிலை நீடித்தால் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்ற அரசின் இலக்கு எட்டமுடியாமலேயே போய்விடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோலியப் பொருள்கள், உரங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன.

 நுகர்வோர், விவசாயிகள் மீது இந்த சுமை விழாமல் தடுக்க அரசு முயற்சித்தால் அதன் பாதிப்பு அரசின் நிதிப்பற்றாக்குறையில் எதிரொலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
 ரிசர்வ் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதிக் கொள்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில், கடந்த ஆண்டு பட்ஜெட்டிலிருந்தே நிதி சீரமைப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

 பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தி வருகிறது. 2008-09-ம் நிதி ஆண்டில் 6.8 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறையை 5.5 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

 ஆனால் வரிச் சலுகைகள் அளித்ததால் பற்றாக்குறையை 6 சதவீத அளவுக்கே குறைக்க முடிந்தது. 13-வது நிதிக்குழு தனது பரிந்துரையில் 2013-14-ம் நிதி ஆண்டில் அரசின் நிதிப் பற்றாக்குறை 3 சதவீத அளவுக்குக் குறைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தது.

 ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இதனால் இம்மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 உயர்த்தப்பட்டது

 2011-12-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புப் பணியில் நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், உரத்தின் விலையை அரசு உயர்த்தாவிடில் நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த முடியாது என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

 நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பணவீக்கம் 7 சதவீத அளவுக்கு இருக்கும் என ஆர்பிஐ மதிப்பிட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

 நடப்பு நிதி ஆண்டில் 3-ஜி அலைக்கற்றை விற்பனை வருமானம் மூலம் அரசுக்கு கணிசமான தொகை வருமானமாக வந்துள்ளது. மேலும் சில அரசு நிறுவனப் பங்கு விற்பனை மூலமும் அரசின் வருவாய் அதிகரித்துள்ளது. இது ஸ்திரமான வருமானம் அல்ல என்றும் ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதைப்போல வருமானம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது

* உ.பி.-ஹரியாணா எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்

துதில்லி, ஜன.26: உத்தரப்பிரதேசம்-ஹரியாணா எல்லையில் புதன்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு ரிக்டர் அளவுமானியில் 3.2 அலகாகப் பதிவானது.

 ஹரியாணா மாநிலத்தின் சோனிபட் மாவட்டம், உத்தரப்பிரதேசம் பகுபத் மாவட்டத்தையொட்டிய எல்லைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் காலை 8.37 மணிக்கு ஏற்பட்டது என இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வு மையம் வெளியட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் பற்றி உடனடி தகவல் இல்லை.
 ஜனவரி 19ம் தேதி 7.4 என்ற அளவில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதன் தொடர் அதிர்வு தில்லி, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டது

* வெங்காயம் மொத்த விலை குறைந்தது

புது தில்லி, ஜன.26: செவ்வாய்க்கிழமை வெங்காயத்தின் மொத்த விலை பலமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
 கடந்த சில மாதங்களாக நாடு முழுதும் உச்சத்தில் இருந்த வெங்காயத்தின் மொத்த விலையானது மகாராஷ்டிரத்தில் உள்ள நாட்டின் மிகப் பெரிய சந்தையிலும், புது தில்லியிலும் கடும் வீழ்ச்சியைக் கண்டது.
 சந்தையில் கிலோவுக்கு ரூ.65 வரை விற்று வந்த வெங்காயத்தின் மொத்த விலை 50 முதல் 80 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து இப்போது கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ.20 வரை குறைந்திருக்கிறது.

 இந்தியாவில் வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் மகாராஷ்டிரத்தில் உள்ள நாசிக் பகுதியைச் சேர்ந்த லாசல்கோன், பிம்பல்கோன் ஆகிய இடங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை ரூ.13 ஆகக் குறைந்துள்ளது. இது முன்பு ரூ. 67 வரை விற்றுவந்தது. ஆயினும், சில்லறை விலை இன்னும் குறைந்தபாடில்லை.

 இது குறித்து தில்லி ஆசாத்பூர் சந்தையின் வெங்காய வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திர சர்மா ""வெங்காயத்தின் விலை ஸ்திரமடைந்து, ஜனவரி இறுதிக்குள் ரூ. 15 ஆகக் குறைந்துவிடும். பிப்ரவரியில் கிலோவுக்குப் பத்து ரூபாய் என்ற அளவில் குறைந்துவிடும்,'' என்று கூறினார். மொத்த விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி முழுவதும் மக்களுக்கு சில்லறை விலையில் தெரியத் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களாகும் என சர்மா கூறினார்.

* வெளிநாட்டு நிதியைக் கண்காணிக்க பிரணாப் முகர்ஜி அறிவுரை

புது தில்லி, ஜன.26: வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி, இங்கிருந்து செல்லும் நிதி ஆகியவற்றைக் கண்காணிக்குமாறு மத்திய நேரடி வரி வாரியத்தை (சிபிடிடி) நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

 வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பண விவகாரம் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 வங்கிகளில் பணம் போட்டுள்ளவர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு அரசு தயங்குவது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் அரசை கடுமையாகக் குறை கூறியது.

 இந்நிலையில் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர 5 யோசனைகளை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இப்போது நேரடி வரி வாரியத்துக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

 மத்திய நேரடி வரி வாரியத்தில் உள்ள வெளிநாட்டு வரி பிரிவும் சர்வதேச வரி இயக்குநரகமும் இணைந்து கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
 கறுப்புப் பணத்துக்கு வரிச் சலுகை அளிக்கும் நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து அதில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளுமாறு பிரணாப் அறிவுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பாக சிடிபிடியின் தலைவர் சுதிர் சந்திராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிடிபிடி-யின் தலைவர் வெறுமனே மும்பை பிராந்திய தலைவராக இருக்க வேண்டியதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது நாட்டிலேயே மிக அதிக அளவு நேரடி வரி வருவாய் செலுத்தும் மண்டலமாக மும்பை திகழ்கிறது.

 இதனாலேயே சிடிபிடி-யின் தலைவர் மும்பை மண்டலத்துக்கும் தலைவராக இருப்பார். இனி இத்தகைய நடைமுறை தேவையில்லை என்று கடிதத்தில் பிரணாப் அறிவுறுத்தியுள்ளதாக சுதிர் சந்திரா தெரிவித்தார்

சிடிபிடி-யின் தலைவர் இனி சர்வதேச வரி தொடர்பான விஷயங்களை மட்டும் கவனிக்க வேண்டும். சர்வதேச வரி தொடர்பான பிரச்னைகளை மட்டும் கவனிக்க வேண்டும். இது தொடர்பான உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

* கூடுதல் ஆட்சியர் எரித்துக்கொலை: சிபிஐ விசாரணை கோருகிறார் உறவினர்

மும்பை, ஜன. 26: கலப்பட டீசல், பெட்ரோல் விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, சோதனையிடச் சென்ற கூடுதல் ஆட்சியர் சோனாவானே எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என சோனாவானேவின் உறவினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 கொல்லப்பட்ட மகாராஷ்டிர மாநில அதிகாரி சோனாவானே நாசிக் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்தார்.

 கலப்பட பெட்ரோல், டீசல் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து அந்த மோசடி கும்பல் பற்றி தகவல் திரட்டவும் அவர்களை கைது செய்யும் நோக்கிலும் சோனாவானே செவ்வாய்க்கிழமை சென்றார். அவருடன் அவரது தனிச் செயலர் மற்றும் டிரைவர் சென்றனர்.

 சோதனைக்காக சென்ற இடத்தில் கலப்பட பெட்ரோல் விற்பனைக் கும்பலுடன் தொடர்புடைய சிலர், யாரும் எதிர்பார்க்காதவகையில் சோனாவானேவை எரித்துக் கொன்றனர். சம்பவம் நடந்தபோது தனி உதவியாளரும், டிரைவரும் உடன் இருந்துள்ளனர். இந்நிலையில் சோனாவானே மட்டும் குறிவைத்து கொல்லப்பட்டது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது என்றார்

சோனாவானேவின் மைத்துனர் ஆனந்த் தானி.
 மொபைல் போனில் சோனாவானேவுடன் யார், யார் தொடர்பு கொண்டு பேசினார்கள், பேசியது என்ன என்பதையெல்லாம் கண்டறிந்தால் குற்றவாளிகள் பிடிபட சாத்தியம் இருக்கிறது என்றும் தானி தெரிவித்தார்.

 இந்நிலையில், சோனாவானே கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உணவுப்பொருள் வினியோகத் துறையையே பொறுப்பாக்கவேண்டும் என மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் ஏக்நாத் கட்சே குற்றம் சாட்டியுள்ளார். சோனாவானே கொலைச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என குடியரசுக்கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.

* டெண்டுல்கருக்கு டாக்டர் பட்டம் : புதுச்சேரி பல்கலைக் கழகம் முடிவு.




புதுச்சேரி : டெண்டுல்கர் உட்பட நான்கு பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, புதுச்சேரி பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழக அகடமி கவுன்சில் கூட்டம், துணைவேந்தர் தரீன் தலைமையில் நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன்படி இந்தாண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த வாங்முக்தா முத்தையா, வேதியியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக அண்மையில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், மருத்துவத் துறையின் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக செயற்குழுவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு அனுப்பப்பட உள்ளது. மார்ச் மாதம் நடைபெற உள்ள பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், டெண்டுல்கர் உட்பட நான்கு பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அனைத்து ஏற்பாடுகளை, புதுச்சேரி பல்கலைக் கழகம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :

* சமூக கட்டமைப்பில் தமிழகம் முன்னோடியாக உள்ளது: ஆளுநர்

சென்னை, ஜன. 26: சமூக கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் எப்போதும் முன்னணியில் இருக்கிறது என்று தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா பாராட்டினார்.

 குடியரசு தினத்தை ஒட்டி அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் புதன்கிழமை ஆற்றிய உரையில் இந்தப் பாராட்டுதலை அவர் தெரிவித்தார். அவருடைய உரை: நமது நாடு எல்லா துறைகளிலும் இப்போது வளர்ச்சி கண்டு வருகிறது. ஒவ்வொரு குடிசைப் பகுதி, கிராமத்தையும் வறுமையற்ற, எழுத்தறிவு பெறாதோர் இல்லை என்ற நிலைக்கு மாற்ற வேண்டும். இந்தப் பொறுப்பு அரசுக்கு மட்டும்தான் உள்ளது என்றில்லை. பொதுமக்களுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

 நமது அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகள் மட்டும் வலியுறுத்தப்படவில்லை. குடிமக்களின் அடிப்படை கடமைகளும்கூட அதில் வலியுறுத்தப்பட்டுள்ளன. குடிமக்கள் என்பது மக்களுக்கும், நாட்டுக்கும் இடையே உள்ள பிணைப்பு ஆகும். சமூக நலத் திட்டங்கள் செயலாக்கத்தில் தமிழகத்தின் வளர்ச்சி அற்புதமாக இருந்து வருகிறது.

 தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், மருந்து தயாரிப்பு தொழில்களில் தமிழகம் தொழில்முனைவோரை ஈர்க்கும் மாநிலமாக உள்ளது. 30-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளன.
 மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் சிறப்பு பெற்றுள்ளது. எல்லா துறைகளிலும் ஏற்றுமதியை அதிகரிக்க உற்சாகம் அளிக்கும் நோக்கத்தில் 57 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.
 அரசு, அரசு உதவி

* பி.இ. படிப்பில் சேர அகில இந்திய நுழைவுத் தேர்வு இல்லை: முதல்வருக்கு அமைச்சர் கபில் சிபல் கடிதம்



சென்னை, ஜன. 26: பொறியியல் (பி.இ.) சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
 இது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதிய கடிதத்தின் விவரம்:

 மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக எனக்கு தாங்கள் எழுதிய கடிதம் கடந்த 3-ம் தேதி கிடைத்தது.

 மருத்துப்படிப்பு நுழைவுத்தேர்வு தொடர்பான விவகாரம், அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் கீழ் வருகிறது. எனவே, தங்களின் கடிதத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் அளித்துள்ளேன். இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க அவரிடம் கோரியுள்ளேன். அதேசமயம், பொறியியல் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று தனது கடிதத்தில் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

2009-2010-ம் ஆண்டில் தமிழகத்தில் தானியங்கள் உற்பத்தி 95.6 லட்சம் டன்னாக உயர்ந்து, முன்எப்போதும் இல்லாத அதிகபட்ச நிலையை எட்டியுள்ளது. வட்டியில்லாமல் பயிர்க்கடன் அளிக்கும் திட்டத்தால் இந்த துறையில் உற்பத்தி இன்னும் அதிகரிக்கும். நல்ல ஆரோக்கிய முறை என்பது சமூகத்திற்கும், தனிப்பட்ட முறையிலும் அவசியமானது. வருமுன் காப்போம், நலமான தமிழகம், இளம் சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்றவை தமிழகத்தில் நற்பெயர் பெற்றுள்ளன. உலகம் இப்போது நம் நாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நமக்கு மிகச் சிறந்த பாரம்பரியமும், வரலாறும் இருக்கிறது. ஒளிமயமான, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் கைகோத்திட வேண்டும்.

 நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதோடு, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் உறுதி ஏற்க வேண்டும் என்று ஆளுநர் பர்னாலா கேட்டுக்
 கொண்டார்.


* 6 பஸ் சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம்

சென்னை, ஜன .26: அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் வழங்க கோரி சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட 6 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை, வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
 அதேநேரத்தில், பொதுமக்களுக்கு பிரச்னை ஏற்படாதவகையில் அனைத்து பஸ்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 1.40 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 அண்மையில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில் சுமார் ரூ.2,500 முதல் ரூ.8,000 வரை அதிகம் கிடைக்கும் என அரசு அறிவித்தது.

 இது குறித்து சி.ஐ.டி.யூ. நிர்வாகி சந்திரன் கூறியது:
 இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. எனவே, அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் வழங்க கோரி பிரதான தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஏ.ஐ.டி.யூ.சி., தே.மு.தி.க. கட்சியின் தொழிற்சங்கம் உள்ளிட்ட 6 சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
 இதன்படி ஜனவரி 26-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி 27-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 6 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்றார் அவர்

இதற்கிடையில் வழக்கம்போல ஜனவரி 27-ம் தேதி பேருந்துகள் ஓடும் என்று அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றப் பேரவை சங்கத்தின் (தொமுச) சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியது:

 சட்ட விரோதமாக இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து பஸ்களும் இயக்கப்படும். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.
 வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களின் தலைவர்களை தவிர, மற்ற தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு வருவதாக கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர்.

 இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வின் படி, ரூ.2,500 முதல் ரூ.8,000 வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கும். சில தொழிலாளர்களுக்கு மின் ஊழியருக்கு இணையான சம்பளம் கிடைக்கும் என்றார் அமைச்சர் நேரு.


வர்த்தகச் செய்தி மலர் :

* வாங்க முடியாத உயரத்தில் மல்லிகை!

சென்னை/மதுரை/வேலூர், ஜன. 26: சாமானிய வீட்டுப் பெண்கள் வாங்க முடியாத அளவுக்கு மல்லிகைப் பூ விலை மதுரைப் பகுதியில் அதிகரித்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் நூறு பூக்கள் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

 தமிழகத்தில் ஒவ்வோர் ஊருக்கும் ஒரு பொருள் சிறப்பாகக் கூறப்படும். அந்த வகையில் மல்லிகைப் பூவுக்கு மதுரை புகழ் பெற்றதாகக் கருதப்படுகிறது. காரியாபட்டி, பெருங்குடி, திருமங்கலம், பாராபத்தி, அரசமரத்துப்பட்டி, மேலக்கால், உசிலம்பட்டி என மதுரையைச் சுற்றிலும் மல்லிகை விளைச்சல் அதிகம் உள்ளது.

 மதுரை மல்லிகை அதிக மணத்துடனும், அளவில் பெரியதாகவும் இருக்கும் என்பதால் அதற்கு பெண்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் வரை மல்லிகைப் பூ விளைச்சல் இருப்பதால், அப்போது வரத்து அதிகமாக இருக்கும். மற்ற மாதங்களில் வரத்து குறைவாக இருக்கும்

4 ஆண்டுகளுக்கு முன் விளைச்சல் மாதங்களில் கிலோ ரூ.50 என விற்கப்பட்ட மல்லிகைப் பூ, இப்போது குறைந்தது கிலோ ரூ.1000-க்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

* வெங்காய விலை இருமடங்கு குறைந்தது:கிலோ ரூ.25-க்கு விற்பனை

சென்னை, ஜன. 26: கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்துவந்த வெங்காயத்தின் விலை கிலோ ரூ.25 ஆக குறைந்துள்ளது.

 வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாதத்துடன் ஒப்பிடும்போது இரு மடங்கு குறைந்திருந்தாலும், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் புதன்கிழமை காய்கறி விற்பனை மிக மந்தமாக இருந்தது.

 இந்தியா முழுவதுமே கடந்த ஒரூ மாதமாக வெங்காய விலை உச்சத்துக்குச் சென்றது. இந்த விலை உயர்வு பிரச்னை நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. இதையடுத்து, பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து விலையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது மத்திய அரசு.

 இந்த நிலையில் ரூ. 70 முதல் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயத்தின் விலை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) ஒரே நாளில் இருமடங்கு குறைந்து ரூ.25-க்கு விற்பனையானது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* 4-வது ஒருநாள் ஆட்டம்: ஆஸ்திரேலியாவை வென்றது இங்கிலாந்து


கிர்க்கெட்:

அடிலெய்டு, ஜன.26: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களே எடுக்க முடிந்தது.
 இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அடிலெய்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஸ்டிராஸýம், பிரையரும் ஆட்டத்தைத் துவக்கினர்.
 ஸ்டிராஸ் 8 ரன்களில் பிரட் லீயின் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதையடுத்து டிராட், பிரையருடன் ஜோடி சேர்ந்தார். பிரையர் அதிரடியாக விளையாட, டிராட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரையர் 39 பந்துகளில் அரைசதமடிக்க இங்கிலாந்து 15 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

 ஆஸ்திரேலியாவின் முன்னணி பந்துவீச்சாளர்களான பிரட் லீ, டக் பொலிங்கர், வாட்சன், ஹேஸ்டிங்ஸ் ஆகியோரின் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் நாலாபுறமும் சிதறடித்தனர்.
 சிறப்பாக ஆடிய பிரையர் 58 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பீட்டர்சன் 12 ரன்களிலும், இயான் பெல் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்தின் ரன் விகிதம் குறைந்தது. சிறப்பாக ஆடிய டிராட் 117 பந்துகளில் சதமடித்தார். அவர் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 பின்னர் வந்த மோர்கன் 24, காலிங்வுட் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் மைக்கேல் யார்டி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. 27 பந்துகளை சந்தித்த மைக்கேல் யார்டி, 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 39 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

300 ரன்கள் இலக்கு: 300 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் பேட்டிங்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா. ஹாடினும், வாட்சனும் களமிறங்கினர். ஹாடின் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மார்ஷ், ஆண்டர்சன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து அடுத்த 3 ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்ற முடியும்.

சுருக்கமான ஸ்கோர்
 இங்கிலாந்து - 299/8
 (டிராட் 102, டேவிட் ஹசி 4வி/21)
 ஆஸ்திரேலியா - 278/7
 (வாட்சன் 64, டிராட் 2வி/31).

* அரைஇறுதியில் பயஸ்-பூபதி

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகஷ் பூபதி ஜோடி அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.
 புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய ஜோடி, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் மைக்கேல் லோட்ரா-செர்பியாவின் நீனாட் ஜிமோன்ஜிக் ஜோடியை எதிர்கொண்டது.

 சுமார் 91 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பயஸ்-பூபதி ஜோடிக்கு எதிராக லோட்ரா-ஜிமோன்ஜிக் ஜோடி கடுமையாகப் போராடியபோதும், தோல்வியையே சந்தித்தது. இந்திய ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் லோட்ரா-ஜிமோன்ஜிக் ஜோடியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது

இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி சில தவறுகளை செய்தபோதும், பின்னர் சுதாரித்து ஆடியது. ஜிமோன்ஜிக் ஜோடியின் சர்வீஸ்கள் அதிவேகமாக இருந்த அளவுக்கு இந்திய ஜோடிகளின் சர்வீஸில் வேகத்தை எதிர்பார்க்கமுடியவில்லை. இருப்பினும் அனுபவம் வாய்ந்த இந்திய ஜோடிகளுக்கு எதிராக ஜிமோன்ஜிக் ஜோடியின் அதிகவேக சர்வீஸ்கள் பலனளிக்கவில்லை. இதனால் அந்த ஜோடி தோல்வியடைந்தது.

 இந்திய ஜோடி அரைஇறுதிச்சுற்றில் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள பெலாரஸின் மேக்ஸ் மிர்ன்யி- கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியை எதிர்கொள்கிறது.

 கருத்து வேறுபாடு காரணமாக 2002-ம் ஆண்டு பிரிந்த பயஸýம், பூபதியும் இப்போதும் மீண்டும் இணைந்துள்ளனர். அவர்களின் சாதனை மைல்கல்லில் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்லாதது மட்டுமே நீண்ட நாள் குறையாக இருந்து வருகிறது.

 தற்போது 36 வயதை எட்டியுள்ள மகேஷும், 37 வயதை எட்டியுள்ள பயஸýம் இந்த முறை ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய ஜோடி அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* பாட்மிண்டன்: சாய்னா வெற்றி



புது தில்லி, ஜன.26: கொரியா ஓபன் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

 தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் சீனதைபேவின் இயிங் தாயை எதிர்கொண்டார் சாய்னா. காயம் காரணமாக சில மாதங்களாக விளையாடாமல் இருந்த சாய்னா, முதல் செட்டை 19-21 என்ற கணக்கில் இயிங்கிடம் இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட சாய்னா, அடுத்த இரு செட்களையும் 21-14, 22-20 என்ற கணக்கில் கைப்பற்றி முதல் சுற்றில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

 இரட்டையர் பிரிவு: இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-ஜூவாலா கட்டா ஜோடி 18-21, 22-20, 22-20 என்ற கணக்கில் ஹாங்காங்கின் காஜன்-ஹோய் வா சௌ ஜோடியை வென்றது.

 கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-திஜூ ஜோடி 21-19, 21-18 என்ற கணக்கில் இங்கிலாந்தின் நாதன் ராபர்ட்ஸன்- ஜெனி வால் ஜோடியை வீழ்த்தியது

ஆன்மீகச் செய்தி மலர் :



* பாடலீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

கடலூர், ஜன. 26: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை விமர்சையாக நடந்தது.

 கடலூரில் ஸ்ரீபிரஹந்நாயகி உடனுறை பாடலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ரூ.1 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19-ம் தேதி முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

 செவ்வாய்க்கிழமை விசேஷ சந்தி, யாக பூஜை, பூர்ணாஹூதி, 6 கால தீபாராதனைகள் மற்றும் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 புதன்கிழமை காலை 5 மணிக்கு மகாபூஜை ஆரம்பமானது. காலை 9.30 மணி அளவில் பாடலீஸ்வரர், பிரஹந்நாயகி மகா கும்பாபிஷேகமும் நடந்தது. பாலமணி சிவாச்சாரியார், நாகராஜ குருக்கள் உள்ளிட்ட 108 சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
 ÷இதில் உயர் நீதிமன்ற நீதிபதி மாலா, மாவட்ட நீதிபதி ராமபத்ரன், கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஸ் தலைமையில் 300 போலீஸôரும், 200 தன்னார்வ அமைப்பினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஈஷா யோகா மையத்தின் மூலம் இசை நிகழ்ச்சி நடந்தது.

* அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : பாடலீசுவரர் (பாடலீசுவரர்,

கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன்,கறையேற்றும்பிரான்)
  -
  அம்மன்/தாயார் : பெரியநாயகி ( பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரஹந்நாயகி)

  தல விருட்சம் :  பாதிரிமரம்

  தீர்த்தம் :  சிவகரை, பிரம்மதீர்த்தம், (கடல்)சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு

   -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்

  புராண பெயர் :  கடைஞாழல், கூடலூர் புதுநகரம்

  ஊர் :  திருப்பாதிரிபுலியூர்

  மாவட்டம் :  கடலூர்

  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்

 முன்னநின்ற முடக்கான் முயற்கு அருள் செய்துநீள்
 புன்னைநின்று கமழ் பாதிரிப் புலியூருளான்
 தன்னைநின்று வணங்கும் தனைத்தவ மில்லிகள்
 மின்னைநின்ற பணி யாக்கைப் பெறுவார்களே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 18வது தலம்

தல சிறப்பு:
 
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
 
சப்தமாதாக்கள் சந்நிதி இங்கு கோயிலை ஒட்டியே இருக்கும்.

சமயக்குரவர்கள் நால்வருள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்கள் காலத்திற்கு முன்பே இவ்வூர் தோன்றாத் துணைநாதரும் அவர் கோயில் கொண்டருளிய திருக்கோயிலும் மிகவும் சிறப்புடையதாக விளங்கி இருக்கிறது.

தலபெருமை:

பள்ளியறை:இறைவி அரூபமாக (உருவமில்லாமல்)இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம்.

பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு.

அண்ணல் ஆயிரங்கலைகளோடு உறையும் இடம் ஆதலால் அவனைப் பூசித்துத் தவமியற்றி மணம் புரிந்து கொண்ட அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.

ஐங்கரன் கரங்களில் ஆயிதமேதுமின்றி பாதிரி மலர்க் கொத்துக்கள் உள்ளது வேறு எங்கும் காணமுடியாது.

திருநாவுக்கரசர் கரையேறிய கதை

திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் "கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே' எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயம் உற்று அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள்.

அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்' என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது

திருநாவுக்கரசை முதன்முதலில் "அப்பர்' என்று ஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில்தான்.

அருணகிரிநாதர் முருகப்பெருமானை வழிபட்டு பாடல் அருளிச் செய்துள்ளார்.

அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம்.

புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம்.இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது.

இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்

தலவிநாயகர் : வலம்புரி விநாயகர். மேற்கு மதில் விநாயகரது மேல் திருக்கரங்கள் இரண்டிலும் பாதிரி மலர்க் கொத்துகளே காணப்பெறும்.

அம்பிகை இறைவனைப் பூசித்தபோது உதவி செய்த திருக்கோலம். அதனால் அவர் கன்னி விநாயகர் எனப் பெயர் பெறுகிறார்.

 தல வரலாறு:

உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வபெருமானுக்கே.ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின.இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள்.அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார்.அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக(உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம்.இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம்.

 திருவிழா:
 
  வைகாசி விசாகம் -10 நாட்கள் - வெள்ளி ரிஷப வாகனம், தங்க கைலாச வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு - 5 ஆம்நாள் தெருவடச்சான் நிகழ்ச்சி (தேர் அகலமாக இருப்பதால் யாரும் தெருவில் நடந்து செல்ல முடியாது. அந்த அளவு தெருவை தேர் அடைத்து செல்லுமாம்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் மிகச் சிறப்பான திருவிழா மகா சிவராத்திரி - மாசி மாதம் ஆடி பூரம், நவராத்திரி, திருவாதிரை உற்சவம், தை அமாவாசை, மாசி மகம் - 2 க்கும் கடல் தீர்த்தவாரி நடக்கும். தேவனாம்பட்டினம் என்ற ஊருக்கு சுவாமி செல்லும். பவுர்ணமி பஞ்சபிரகார வலம் வருதல் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர பிரதோச காலங்களில் கோயிலில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூடுகிறார்கள். அப்பர் சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்


ஆன்மீகச் சிந்தனை மலர் :

* நல்லதை மட்டும் பாருங்கள் - சிவானந்தர் .

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும்
தூய்மையைக் கடைபிடியுங்கள். உங்கள் அந்தரங்க எண்ணத்தை கடவுள் அறிவார். அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை.

* அகிம்சையே ஒப்பற்ற ஆன்மிக சக்தியாகும். இதைப் பின்பற்றத் தொடங்கினால் எல்லா நற்குணங்களும் நம்மை வந்தடையும்.

* அகந்தையை அடியோடு ஒழித்து விடுங்கள். கோப உணர்ச்சி, பேராசை எண்ணங்களை கிள்ளி எறியுங்கள். அப்போது தான் அகிம்சையை முழுமையாக உங்களால் பின்பற்ற முடியும்.


வினாடி வினா :

வினா - தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும்போது இடப்படும் நீதிப்பேராணை எது?

விடை - ஆட்கொணர் நீதிப்பேராணை [ஹேபியஸ் கார்பஸ் - Habeas Corpus ]


இதையும் படிங்க :



"சாவின் விளிம்பிற்கு சென்றுமீண்டு வந்தேன்

சமூக சேவகி உஜ்ஜாலா பேகம்: பத்து வயதில், பெற்றோர் இருவரும் இறந்து விட்டனர்; ஒரு தம்பி, ஒரு தங்கை. கொஞ்ச நாள் பாட்டி வீட்டில் வளர்ந்தோம். எங்களை வைத்துக் கொள்ள பாட்டிக்கு பிடிக்கவில்லை. என் பாட்டி வீட்டுக்கு வருமானம், கையால் பாய் பின்னி விற்பது மூலம் தான் கிடைத்தது. நானும் அதை செய்வேன்.திடீரென ஒரு நாள், எனக்கு பயங்கர காய்ச்சல்; அம்மையும் சேர்ந்து வந்தது. மூன்று மாதம் எழுந்திருக்கவே முடியாமல் படுக்கையில் கிடந் தேன். கை, கால்கள் பலமிழந்து,
தோலெல்லாம் சுருங்கி போய்விட்டது. சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது, எனக்கு தொழுநோய் இருப்பது தெரிந்தது.அதனால், வீட்டில் இருந்து துரத்தப்பட்டேன். போகுமிடம் தெரியாமல், பக்கத்தில் வசித்த ஒரு முஸ்லிம் பெண்ணிடம் சென்று அழுதேன். அவர், என்னை தன் நான்காவது பெண்ணாக சேர்த்துக் கொண் டார். ஆனாலும், நோயின் தன்மை அதிகரித்ததால், தற்கொலை செய்ய முடிவெடுத்தேன்.அப்போது, காந்திய கொள்கையில் ஈடுபாடு கொண்ட சமூக சேவகர், ஆர்.எஸ். மணி என்னிடம், "சாவதற்கு முன், நாலு பேரின் வாழ்க்கையை உயர்த்தி விட்டு சாக லாமே' என்றார். அவரது வார்த்தை, எனக்கு ஊக்கமளித்தது.அதன் பின், அமெரிக்கன் மருத்துவமனையில் சிகிச்சையும், உதவித் தொகையும் பெற்றேன். மகளிர் உதவிக் குழுவிடம் டெய்லரிங் கற்றேன்

தற்போது, "பரோபகார்' என்ற குழுவை ஆரம்பித்து, தையல் பயிற்சி அளிக்கிறேன். அது, இப்போது எட்டு குழுவாக உயர்ந்துள்ளது. பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, டியூஷன், ஏழைகளுக்கு யூனிபார்ம், சுய தொழில் துவங்க கடன் என, பல சேவைகளை செய்து வருகிறோம்.எங்கள் அமைப்பின் மூலம், பலரது வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது. அதை பார்க்கும் போது, ஏன் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேனோ என, வெட்கமாக உள்ளது என்றார்.


நன்றி - தின மணி, தின மலர்.



2 comments:

அப்பாதுரை said...

மீண்டும் தொடங்கியதற்கு நன்றி.

சங்கரியின் செய்திகள்.. said...

தங்கள் ஆதரவுக்கு நன்றி.

Post a Comment